Athai petha poonguyilae Episode 21

swetha97

Writers Team
Tamil Novel Writer
#1
அத்தியாயம் 21வாசலில் நின்றிருந்த சந்திரிகாவைக் கண்டு ஸ்ரீ உறைந்து போய் நிற்க,


போனவள் இன்னும் திரும்பாமல் அங்கேயே கம் தடவியது போல் சிலை மாதிரி நின்றிருக்க, குழப்பம் அடைந்த கலைவாணி ," என்னாச்சு குட்டிமா அப்படி யாரு வந்திருக்காங்க" என கேட்டுக்கொண்டே அவளருகில் வந்தவர், வாசலில் நின்றிருந்த சந்திரிகாவைக் கண்டு தன் கண்களையே நம்ப முடியாமல் ஆனந்தமாக அதிர்ந்தவர் , கலங்கிய கண்களோடு "சந்து மாஆஆஆஆஆ" என கேவலோடு அவளைப் போய் தாவி அணைத்துக் கொண்டார்.


சந்து என்ற சொல்லிலேயே அங்கிருந்த அனைவரும் வாசலுக்கு வந்து விட, ஹரி தான் அனைவரையும் உள்ளே இருக்குமாறு பணித்தவன் தன் அன்னையிடம் சென்று, "அம்மா அதான் அவ வந்துட்டால்ல..உள்ள வந்த பின்னாடி பேசிக்கலாம் வாங்க" என அவரை அவளிடம் இருந்து பிரிக்க,


"நீ போடா இத்தனை வருஷம் கழிச்சு என் பொண்ணை என்கிட்ட வந்திருக்கா, அவளை மறுபடியும் என்கிட்ட இருந்து பிரிக்க நினைக்காத" என உணர்ச்சிவசப்பட்டு கலை வார்த்தைகளை சிதறவிட,


"கலை" என கணவனிடமும், மாமியாரிடமும் ஒருங்கே எழுந்த கண்டிப்புக் குரலில் சுயநினைவு அடைந்த கலைவாணி, தன் தவறை உணர்ந்து அங்கே இறுகிப் போய் நின்றிருந்த தன் மகன் ஹரியிடம்,"சாரி கண்ணா..ஏதோ அம்மா தெரியாம பேசிட்டேன்..மன்னிச்சிரு" எனக் கூற,


"நானா இத்தனை வருஷமா உங்க மகளை உங்ககிட்ட இருந்து பிரிச்சேன் நல்லா யோசிச்சிட்டு பேசுங்க மா" என்று அழுத்தமாக கேட்டவன், அவர் அதிர்ந்து நிற்பதை பொருட்படுத்தாது சந்துவை கையைப் பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு போனான்.


அதுவரையில் சந்திரிகா மீண்டும் தங்களிடமே வந்துவிட்ட சந்தோஷத்தில் மற்றவர்களை கவனிக்காமல் இருந்தவர்கள், அப்போதுதான் சந்திரிகா ஒரு ஆடவனின் கையை இறுகப் பற்றிக் கொண்டிருப்பது தெரிந்து யாரென்று அவனை பார்க்க, அவன் முகம் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகமாக தோன்றியது. ஆனால் யார் என்று தான் அவர்களால் சட்டென்று அடையாளம் காணமுடியவில்லை.


வர்ஷூ அப்போது தான் ஒரு போன் கால் பேசிவிட்டு பால்கனியில் இருந்து ஹாலுக்கு வர, அங்கு நின்றிருந்த சந்திரிகாவைக் கண்டு ஆனந்தமாக அதிர்ந்தவள், அவள் அருகில் அவள் கையை இறுகப் பற்றிக்கொண்டு நின்றிருந்த தன் தமையனைக் கண்டு உறைந்து நின்றாள்.


"சித்து!!! நீ எப்படி இங்க?? நீ லண்டன்ல இருந்து எப்போ வந்த??என்ன நடக்குது இங்க??உ..உனக்கு ச்..சந்துவை முன்னாடியே தெரியுமா??" என வர்ஷூ தன் அண்ணனை பார்த்து அடுக்கடுக்காக கேள்விகளை தொடுக்க,


இவை அனைத்தையும் முன்னமே எதிர்பார்த்து வந்திருந்த சித்து என்கிற சித்தார்த்தும் மௌனமாக 'ஆம்' என்பது போல் தலையசைத்தான்.


அதன் பின்பு தான் சித்தார்த் யார் என்பது ஹரியின் குடும்பத்திற்கு விளங்க, அவன் ஏன் சந்துவுடன் வந்திருக்கிறான் என மேலும் குழப்பம் அடைந்தனர்.


வந்ததிலிருந்து சந்துவையே பார்த்துக் கொண்டிருந்த பத்மினி, அவளின் நடவடிக்கைகளில் வித்தியாசத்தை உணர்ந்து, ஹரியிடம், "ஹரி ஏன் சந்து இப்படி இருக்கா?? அவளுக்கு என்னாச்சு?? நம்மளை பார்த்தா ஏன் ஏதோ அந்நியர்களை பார்க்குற மாதிரி இப்படி மிரண்டு போய் நிக்கிறா? எனக்கு எதுவுமே சரியா படலை..கார்த்திக்கோட மச்சானுக்கும் சந்துவுக்கும் எப்படி பழக்கம்??? தலையே வெடிச்சிரும் போல இருக்கு என்னாச்சுன்னு சொல்லு" என கேட்க,


அங்கு கூடியிருந்த அனைவருக்குமே அப்போது தான் சந்துவின் இந்த வித்தியாசமான நடவடிக்கை கண்ணில் பட்டது, அனைவரும் ஹரியின் பதிலை எதிர்நோக்கி அவனை பார்த்திருக்க, அவனோ அங்கு வாசலில் குற்றவுணர்ச்சி மேலோங்க தலையை குனிந்து கண்ணீரை உகுத்துக் கொண்டு இருக்கும் தன் மனையாளின் அருகில் சென்றவன்,


அவள் தலையை நிமிர்த்தி, அவளை நோக்கி ஒரு உணர்ச்சியற்ற பார்வையை சிந்தியவன் அவள் கரம் பற்றி இழுத்து வந்து அனைவரையும் ஒரு முறை தன் பார்வையால் வலம் வந்தவன், இறுதியாக தன் அன்னை தந்தையை நோக்கி அமைதியாக அதே சமயம் அழுத்தமாக ," உங்களுக்கு தான் நீங்க பெத்த பொண்ணை விட, உங்க மருமகள் மேல தான பாசம் அதிகம்.. அதுனால இப்போ நான் சொல்ல போற விசயம் உங்களுக்கு அதிர்ச்சியாலாம் இருக்காது. " என இத்தனை வருடங்களாக தன் பெற்றோர்கள் மீதிருந்த கோபத்தை முதன்முறையாக வார்த்தைகளால் வெளிப்படுத்தியவன்


அவன் கேட்ட கேள்வியில் மதியும் கலையும் விக்கித்துப் போய் நிற்க, அதைக் கண்டு ஹரியின் பாரம் மேலும் கூடியது. அவனின் நிலையறிந்து கார்த்திக் அவன் அருகில் வந்து அவன் தோளை ஆதரவாக பற்ற, அவனை பார்த்து ஓர் ஜீவனற்ற புன்னகையை சிந்தியவன் பின்,


அனைவரையும் பார்த்து,"சந்து இப்போ மனநலம் பாதிக்க பட்டிருக்கா" என தன் வருத்தங்களை உள்ளுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு இறுகிய குரலில் ஹரி கூற,


அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் விலுக்கென்று நிமிர்ந்த ஸ்ரீயை நோக்கியவனின் கண்களில் தெரிந்த வலி, ஸ்ரீயை உயிரோடு கொன்று புதைத்தது.


அங்கிருந்த அனைவருக்குமே அது பேரிடியாக இருக்க, என்ன பேசுவது என தெரியாமல் ஸ்தம்பித்து போய் நின்றிருந்தனர்.


அவர்களின் மௌனத்தை மீண்டும் கலைத்த ஹரியே சந்துவிற்கு என்னவானது ,சந்துவிற்கும் சித்துவிற்கும் என்ன தொடர்பு என மெதுவாக கூற ஆரம்பித்தான்.


அவர்களோடு சேர்ந்து நாமும் சந்துவைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
 

swetha97

Writers Team
Tamil Novel Writer
#4
நாராயணசாமி-தெய்வநாயகி தம்பதியர் தாமரைக்குளத்தில் உள்ள அனைவருக்குமே கடவுள் போன்றவர்கள்.


பரம்பரை பணக்காரர்களாகிய அவர்கள் குடும்பத்திற்கு ஊருக்குள் என்றுமே தனி மதிப்பு உள்ளது.எவ்வளவு தான் பணம் கொட்டிக் கிடந்தாலும், அன்பு , பண்பு, பாசம் ,மரியாதை என அனைத்து நற்குணங்களையும் கொண்ட அந்த பெரிய வீட்டு மனிதர்கள் மீது மக்களுக்கு தனி பிரியம் என்றே சொல்லலாம்.


இந்த அழகான தம்பதியருக்கு மூன்று வருடம் கழித்து கடவுள் தந்த அழகிய பொக்கிஷம் தான் மதிவாணன்.


அவரை அந்த ஊர் மக்களே தங்கத்தட்டில் வைத்து தாங்க,அவருக்கு ஒரு வருடம் கழித்து இந்த பூவுலகிற்கு வந்து சேர்ந்தார் மதியழகன்.


முதல் இரண்டும் சிங்கக்குட்டிகளாய் போய்விட, தன் இராஜ்ஜியத்தை ஆள ஒரு இளவரசி வேண்டும் என ஆசை கொண்ட நாராயணசாமி, பல வருடக் காத்திருப்பிற்கு பின் சாருமதியை இந்த தன் இராஜ்ஜியத்திற்கு மகுடம் சூட்ட அழைத்து வந்தார்.


மதிவாணனுக்கும் சாருமதிக்கும் கிட்டத் தட்ட பத்து வருட இடைவெளி இருக்க, இரு அண்ணன்களுக்கும் மகளாகிப் போனார் சாருமதி.


வருடங்கள் உருண்டோட, மதிவாணனுக்கு 25 வயதானவுடன் , தெய்வநாயகி அவருக்கு திருமண பேச்செடுக்க, நாராயணசாமியோ சகல வசதிகளோடு இவர்கள் குடும்பத்தில் மருமகள்களாக காத்துக் கொண்டிருக்கும் சொந்த பந்தங்களை விட்டுவிட்டு, ஓர் அனாதைப் பெண்ணிற்கு வாழ்க்கை அளிப்பது தான் மிகவும் புண்ணியம் என்றுணர்ந்து கலைவாணியை மதிவாணனுக்கு திருமணம் செய்து வைத்தார்.


சிறுவயதிலிருந்தே நாராயணசாமியின் பேச்சிற்கு அங்கு யாரும் எதிர்பேச்சு பேசி பழகியிராதலால் அவர்களும் முழுமனதுடனே இந்த திருமணத்தை நடத்தினர்.


ஆனால் இவ்வளவு சொத்துக்களுக்கு மூத்த வாரிசாக மட்டும் இல்லாமல் ஆணழகனாகவும் திகழ்ந்த மதிவாணனை இழந்து விட்டதில், வயிற்றெரிச்சல் கொண்ட சில சொந்த பந்தங்கள் திருமணத்தன்றே இருவருக்கும் சாபமளித்துவிட்டு கிளம்பி விட்டனர்.


ஏற்கனவே அனாதையான தனக்கு இவ்வளவு பெரிய வாழ்க்கை கிடைத்ததில் ஒரு புறம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு புறம் நம்பமுடியாமலும் கலைவாணி தவித்துக் கொண்டிருக்க, இவர்களின் சாபம் அவரை மேலும் நடுங்க வைத்தது.


அவரின் பயமறிந்து அவர் கைகளோடு தன் கைகளை இறுக பிணைத்துக் கொண்ட மதிவாணன் அவரின் கண்களை பார்த்து, "இப்போ பிடிச்ச கையை நான் சாகுற வரைக்கும் விட மாட்டேன்..உன்னை என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு..அவங்க சொல்லிட்டு போறதை நினைச்சு பயப்படாத கலை ..நான் இருக்கேன் சரியா" என ஒரு புன்னகையோடு அவர் கேட்க, கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவருக்கு தலையசைத்த கலைவாணி அன்று அவரின் கண்களுக்குள் விழுந்தவர் தான், இன்னும் மீளவில்லை, காதலுடனே அவர் காதலில் தன்னை மூழ்கடித்துக் கொண்டார்.


அதற்கடுத்து வந்த நாட்களில் கணவனின் காதலிலும், மாமனார் மாமியாரின் அக்கறையிலும், நாத்தனார் கொழுந்தனாரின் பாசத்திலும் கலைவாணி திக்குமுக்காடிப் போனார்.


பிறந்ததிலிருந்து தனிமையில் வாடிய அவருக்கு,இங்கே ஒரு குடும்பமே அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியதில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார்.


சிறிது நாட்களில் மதியழகனுக்கு பெண் பார்க்கும் படலம் துவங்க, இந்த முறையாவது சொந்தத்தில் பெண்ணெடுத்து முன்பு உண்டான பூசலை சரி செய்யலாம் என கூறிய தெய்வநாயகியின் கருத்திற்கு மதிப்பளித்து நாராயணசாமியும் சொந்தத்தில் பெண் தேட,


முதன்முறையாக தன் தந்தையின் கருத்துற்கு ஆட்சேபனை தெரிவித்த மதியழகன், சொந்தத்தில் இருந்து பெண்ணெடுத்தால் இரு மருமகள்களுக்கும் இடையில் ஒற்றுமை குறைய வாய்ப்பிருக்கிறது என்றும் , கலைவாணியை அவர் கஷ்டப்படுத்தக்கூடும் என்று கருதி அவரும் ஓர் ஆதரவற்ற பெண்ணையே மணம்முடிப்பேன் என தீர்மானமாக கூறிவிட, நாராயணசாமிக்கு மதியழகனின் மேல் தனி மரியாதை உண்டானது.


அவர் விருப்பத்திற்கேற்ப, சில வருடங்களுக்கு முன் பெற்றோரை இழந்து தனி மரமாக வாழ்ந்து கொண்டிருந்த பத்மினியை கண்டுபிடித்து இருவருக்கும் கோலகலமாக திருமணத்தை நடத்தி வைத்தார் அந்த பாசமான தந்தை.


அப்போது கலைவாணியும் கருவுற்றிருக்க, மொத்த குடும்பமுமே அவரை தலைமேல் தூக்கி வைத்து ஆடியது.


சாருமதி எந்தவொரு வேறுபாடுமில்லாமல் இரு அண்ணிகளுடன் அன்பாக பழக, அவளே அவர்களிருவருக்கும் மூத்த மகளாகிப் போனார்.


அதன் பின் கொஞ்ச நாளிலே பத்மினியும் கருவுற்றுவிட, அந்த வீடே திருவிழா கோலம் போல் ஆனது.


ஒன்பதாவது மாதத்தின் இறுதியில் கலைவாணிக்கு பிரசவ வலியெடுக்க, வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்தனர்.


அழகான ஆண் மகவை இந்த உலகிற்கு ஈன்றெடுத்தார் கலைவாணி.


வீட்டின் மூத்த வாரிசை குடும்பத்தோடு சேர்த்து அந்த ஊரே கொண்டாட, சாருமதி தான் தன் அருமை மருமகனுக்கு ,"ஹரிஷ் கிருஷ்ணன்" என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தாள்.


அனைவரிடமும் மகளாய் வலைய வந்து வீட்டில் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்கும் சாருமதி ஹரியிடம் மட்டும் பொருப்புள்ள அன்னை போல் திகழ்ந்தாள்.


எந்நேரமும் அவனை தன் கையணப்பிலே வைத்திருப்பவள், பசிக்காக அவன் அழும் போது மட்டுமே கலையிடம் குழந்தையை தருவாள்.


கலைக்கு இதை நினைத்து மற்ற மருமகள்கள் போல் உரிமைப் போராட்டம் நடத்தாமல், இருவரின் அன்பையும் தூரம் நின்றே ரசிப்பார்.


ஹரிஷ் பிறந்த எட்டாம் மாதம் பத்மினிக்கு கார்த்திக் பிறக்க, வீட்டில் இருந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.


ஹரி, கார்த்திக் என இருவரையும் சாருமதியே வளர்த்தாலும் அவளுக்கு ஹரியின் மீது அலாதி பிரியம்.


இவர்களுக்கு இரண்டு வயதாகும் போது, நாராயணசாமி தன் வீட்டின் இளவரசிக்கேற்ற இளவரசனை கண்டுபிடித்திருந்தார்.


நல்லசிவம் கோயம்புத்தூரில் உள்ள, "சிவம் ஜவுளி கடையின் " ஒரே வாரிசு, இவனின் தந்தை பாலசுப்ரமணியும்
நாராயணசாமியும் பால்ய சிநேகிதர்கள் ,ஒரு வகையில் தூரத்து சொந்தமும் கூட, ஒரு நாள் கோவிலில் சாருமதியைக் கண்டு நல்லசிவத்திற்கு பிடித்து போய் விட, முறையாக தன் தந்தையிடம் விஷயத்தைக் கூறி மேற்கொண்டு பேசச் சொல்லினார்.


நாராயணசாமிக்கும் நல்லசிவத்தின் குணநலன்களைப் பற்றியும், தொழிலில் உள்ள அவரது திறமை பற்றியும் தெரியுமாதலால் அவரும் சந்தோஷமாக ஒப்புக்கொள்ள,


சாருமதிக்குத் தான் ஹரியைப் பிரிவது உயிரில் பாதியைப் பிரிவது போல் வருத்தமளிக்க, அவள் மிகவும் ஓய்ந்து போய் காணப்பட்டாள்.


தங்கை அழுவதை பொறுக்காத மதியும், என்ன செய்வது என குழம்பி நிற்க, நாராயணசாமியே மதிவாணனை அழைத்து, கோயம்புத்தூரில் நல்லசிவத்தின் வீட்டருகே உள்ள வீட்டை விலைக்கு வாங்கி அங்கே அவர்கள் குடும்பத்தை போய் தங்க சொல்ல, மதி திகைத்தார்.


அவரின் தொழிற்சாலை கோயம்புத்தூரில் இருந்தாலும் அவர் தன் குடும்பத்தை விட்டு பிரியக்கூடாது என தினமும் அங்கு போய் வந்து உடல் அலுப்பையும் பொருட்படுத்தாமல் தன் வேலையை கவனித்துக் கொண்டிருந்தார்.


அப்படி பட்டவர், குடும்பத்தை விட்டு போக சொன்னதும் அதிர, அதே சமயம் தங்கையின் அழுகையும் கண்முன் தோன்றி மறைய, அவர் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தார்.


இறுதியில் தந்தையின் பிடிவாதத்தின் பேரில், சாருமதி நல்லசிவம் திருமணம் முடிந்த கையோடு மதிவாணன் குடும்பமும் அவர்களுக்கு அருகில் உள்ள வீட்டில் குடியேறினர்.


வார இறுதி மட்டுமல்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஊருக்கு சென்று வந்து தங்கள் மனக்குறையை தீர்த்துக் கொண்டனர்.


நாட்கள் அதன்போக்கில் வேகமாக செல்ல, திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் முடிந்தும், சாருமதிக்கு பிள்ளை வரம் கிடைக்காமல் இருந்தது, அந்த குடும்பத்தில் உள்ள அனைவரையும் வாட்டியது.


அப்போது மீண்டும் கலைவாணி உண்டாக, அவருக்கு மிகவும் தர்மசங்கடமாகிப் போனது.


ஆனால் சாருவோ இன்முகமாக அந்த செய்தியைக் கேட்டு துள்ளி மகிழ்ந்தவள், அவரை தானே கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.


இப்படி ஒரு நாத்தனார் கிடைக்க தான் எந்த ஜென்மத்தில் என்ன பாக்கியம் செய்தேனோ என நினைத்து புலங்காகிதம் அடைந்த கலை, சாருக்காக கோவில் கோவிலாக சென்று வேண்ட ஆரம்பித்தார்.


சரியாக கலைக்கு எட்டாவது மாத தொடக்கத்தில் , சாருமதியும் உண்டாகிவிட, அவர்களை கையில் பிடிக்க முடியவில்லை.


முதலில் ஆதிராவும் அதன் பின் எட்டு மாதங்கள் கழித்து ஸ்ரீயும் இந்த மண்ணுலகில் ஜனித்தனர்.
 

swetha97

Writers Team
Tamil Novel Writer
#5
ஹரிக்கும் கார்த்திக்கிற்கும் குட்டி குட்டி கைகளும் ரோஜா மலரைப் போன்ற கால்களையும் கொண்டு முக்கால்வாசி நேரம் தூங்கி வழியும் இரு தேவதைகளை கொஞ்சவே அவர்கள் நேரம் சரியாக இருந்தது.


பத்மினிக்கு கார்த்திக் பிறந்த போதே அதிக இரத்தப்போக்கு காரணமாக அவர் துடித்த துடிப்பைக் கண்டு பயந்து போன மதியழகன், யாருக்கும் சொல்லாமல் போல் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்கொண்டு வந்துவிட்டதால் அவர்களுக்கு கார்த்திக் ஒரே பிள்ளையாகிப் போனான்.


கார்த்திக் தன் தங்கைக்கு ,"ஆதிரா" என பெயரிட, ஹரி தன் உயிரின் பாதியாகப் போகும் தன்னவளுக்கு ,"தன்ய ஸ்ரீ" என்று பெயரிட்டு மகிழ்ந்தான்.


ஸ்ரீ பிறந்த பின்னும் சாருமதி- ஹரிக்கு இடையில் இருந்த பாசத்தில் துளி கூட மாற்றம் இல்லாததைக் கண்டு கலை-மதி தம்பதியர் பூரித்துப் போயினர்.


பத்மினிக்கு பெண் குழந்தைகள் மீது பாசம் அதிகம் என அறிந்து வைத்திருந்த கலை, சரியாக அவள் தாய்ப்பாலை மறக்கும் தருவாயில் ஆதிராவை பத்மினியின் கைகளிலே ஒப்படைத்து விட்டார்.


அவரின் இந்த செயலைக் கண்டு , பத்மினிக்கு வார்த்தைகளே வரவில்லை.கண்களில் கண்ணீர் மின்ன அவளை தன் கைகளில் ஏந்தியவர் அன்று முதல் ஆதிராவை கண்ணுக்குள் பொத்தி வைத்து பார்த்துக் கொண்டார்.


கார்த்திக்கிற்கும் ஒரு விளையாட்டு தோழி கிடைத்து விட, அவளிடமே எந்நேரமும் சுற்றித் திரிந்தான்.


இங்கு ஸ்ரீயை கலைவாணி தூக்கி வளர்க்க, அந்த குடும்பத்தில் அன்பே எங்கெங்கும் பரவியிருந்தது.


ஸ்ரீ அப்போதிருந்தே ஹரி ஒருவன் கைகளில் மட்டும் தான் அடங்குவாள், எவ்வளவு கத்தி அழுதாலும் அவனின் ஒரு தொடுகையில் அவள் சமாதானமாகி உறங்கிவிடும் விந்தையைக் கண்டு பெரியவர்கள் அதிசயித்து போயினர்.


அவனும் அவளை விட்டு இம்மியளவு நகர மாட்டான், பள்ளிக்கு கிளம்பு வரையில் கூட அவளை தன் கைகளில் தூக்கி வைத்து உலாத்திக் கொண்டே இருப்பவன், அவள் உண்டுவிட்டு உறங்கிய பின்பே பள்ளிக்கு கிளம்புவான்.


மாலையும் அதுபோல் பள்ளியிலிருந்து வந்ததும் அவளை கைகளில் அள்ளி அணைத்துக் கொஞ்சவில்லை என்றால் அந்த நாளே நிறைவுராது.


பிறந்ததிலிருந்தே அவன் தொடுகைக்கு பழகியிருந்தவள், அவனைத் தவிர அவளை யார் உறங்க வைக்க முயன்றாலும் சமாதானமாகமல் அழுது கொண்டே இருப்பாள், ஹரி வந்து அவள் கைகளில் லேசாக தட்டிக் கொடுத்தால் கூட அதை உணர்ந்து கொண்டவள் போல் அடுத்த நிமிடமே அழுகையை மறந்துவிட்டு அப்படியே உறங்கிப் போகும் அதிசயம் தான் யாருக்கும் புரியவில்லை.


இப்படியே நாட்கள் அழகாக செல்ல, கலைவாணி மூன்றாம் முறையாக மீண்டும் கருத்தரித்தார்.


அப்போது பார்த்து மதிவாணனின் தொழிலில் மிகப்பெரிய சரிவு ஏற்பட, அதை சரிசெய்து மீண்டும் பழைய நிலைக்கு வருவது அவருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது.


சுற்றி இருந்த அந்த பொறாமை பிடித்த சொந்தங்கள் யாவும் வயிற்றில் வளரும் குழந்தையின் தரித்திரமே இதற்கு காரணம் அதை அழித்து விடு என்று போதனை செய்ய,


அவரோ ,"என் கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுக்கு, பிள்ளையின் மீது பழி சுமத்த வேண்டாம்" என கண்டிப்பான குரலில் அவர்களிடம் கூறிவிட,


அவர்களும் விடாமல் ,"இந்தக் குழந்தையால இனி உனக்கு என்னைக்கும் கஷ்டம் தான்..நாங்க சொல்லுறதை நீ கேட்டிருக்கலாமோன்னு வருந்துற நாளும் வரும்" என தூபம் போட்டு விட்டு செல்ல,


அவரோ அதை கண்டுகொள்ளாமல் தொழிலை சரிசெய்வதில் முழுமூச்சாக இறங்கினார்.


ஸ்ரீக்கு அப்போது ஒன்றரை வயது, ஏழு மாத நிறைவயிரோடு இருந்த கலை அன்று ஏனோ மனம் சஞ்சலமாக இருக்க கோவில் செல்ல வேண்டும் என்று கிளம்பினார்.


சாருமதி வீட்டிற்கு தூரமாகியிருந்ததால் அவரை தனியே விட விரும்பாமல் அவளின் மாமனார் மாமியாரை அவளுக்கு துணைக்கு அனுப்பி வைத்தாள்.


கோவிலுக்கு வந்த சாமி கும்பிட்ட பின்னும் கூட அவரின் அந்த பதட்டம் குறையாமலிருக்க அதே மனநிலையோடு வீட்டிற்கு கிளம்பினார்.


அப்போது திடீரென்று எதிரில் வந்து கொண்டிருந்த கார் ப்ரேக் பிடிக்காமல் இவர்களின் காரில் வந்து மோத, நொடி நேரத்தில் அங்கே விபத்து நிகழ்ந்தேறியது.


முன்னால் அமர்ந்திருந்த நல்லசிவத்தின் தாய் தந்தையர் சம்பவ இடத்திலே பலியாகிவிட,


பின்னால் அமர்ந்திருந்த கலை மிகுந்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


விஷயம் கேள்விப்பட்டு மொத்த குடும்பமும் அங்கு அரக்க பறக்க ஓடி வந்து விட, கலையின் நிலமை மிகவும் மோசமாகத் தான் இருந்தது.


தன் காதல் மனைவியின் நிலையைக் கண்டு மதிவாணன் இடிந்து போய் அமர்ந்து விட, கலையின் நிலையை கருத்தில் கொண்டு குழந்தை உள்ளிருப்பது ஆபத்து என நினைத்த மருத்துவர்கள், ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுத்தனர்.


அவர்கள் அனைவரும் இருந்த நிலமையில் , கலையின் நிலையே அவர்களுக்கு முதன்மையாக விளங்க, பிறந்த குழந்தையை கவனிக்க தவறிவிட்டனர்.


ஏழு மாத குழந்தையாதலால் அவளை இன்குபேட்டரில் வைத்திருக்க,


ஹரி மட்டும் ஏதோ உந்துதலில் டாக்டரிடம் கேட்டு தன் தங்கையை காண சென்றான்.


பிறந்த போதே பல துயரங்களை வரமாக வாங்கி வந்த இளம் தளிர் தன் மொட்டு கைகால்களை ஆட்டிக் கொண்டு படுத்திருந்தது.


உள்ளே சென்று ஹரி தன் உடன்மிறப்பை பார்க்க, சரியாக அதே சமயம் அவளும் அவளின் அண்ணனின் வருகையை உணர்ந்தாளோ என்னவோ, அவளின் குட்டி விழிகளை பாதியாக திறந்து ஹரியைக் கண்டு மென்னகை பூத்தாள் அவள் - சந்திரிகா!!!!!!


-குயில் கூவும்.


fact_nani1.jpg niveda-thomas-childhood.jpg Atharvaa-Childhood-still.jpg
 

swetha97

Writers Team
Tamil Novel Writer
#7
ஹாய் டியர்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?? சுகமா?

என் கதையை தொடர்ந்து படிச்சு எனக்கு ஆதரவு அளித்து என்னை எழுத ஊக்கப்படுத்தும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் முதல்ல ரொம்ப நன்றி..

சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால என்னால தொடர்ந்து பதிவு போட முடியலை அதுனால என்னை மன்னிச்சிருங்க..ரொம்ப சாரி..

எனக்குமே இப்படி தள்ளி தள்ளி பதிவு போட பிடிக்கலை..அதுனால நான் மொத்தமா கதையை முடிச்சுட்டு வந்து தினமும் யூடி கொடுக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறேன்..

இதில் உங்களுக்கு சம்மதமா இல்லையா என்பதை தயவு செய்து உங்கள் கருத்துக்களில் தெரிவித்துவிட்டு செல்லுங்கள் செல்லம்ஸ்

ப்ளீஸ்..ரொம்ப நன்றி..
 

Advertisement

New Episodes