வந்தேன் உனக்காக EP-10

#1
சனாயாவின் அறிவுரைப்படி, ஆதி நல்ல மாணவனாக மாற ஒரு வருடம் ஆனது.

மற்ற மாணவ, மாணவியரோடு சகஜமாக பேசினான். ஆசிரியர்களையும், பெண்களையும் மதித்தான். சனாயா, மற்றும் ஆதியின் நட்பு நாளுக்கு நாள் வலுவானது.

இறுதி வருடமானதால், தனது கல்வியில் மிகுந்த கவனம் செலுத்திக் கொண்டு இருந்தனர், பிரதாப் மற்றும் கார்த்திக்.

பிரதாப், ஆதி, சனாயா, மூவரும் நல்ல நட்போடு மகிழ்ச்சியாக இருந்து வந்தனர்.

எதற்கும் ஒரு முடிவு உண்டு என்பது போல், கார்த்திக் மற்றும் பிரதாப்பின் நான்கு வருட பட்டப் படிப்பு முடிந்தது.

பிரபா சனாயாவை கட்டிக்கொண்டு, அழ தொடங்கிவிட்டாள் "என்னால் அவரை பிரிந்து இருக்கவே இயலாது சனா", என்று தேம்பி தேம்பி அழுதாள்.

"பிரபா ப்ளீஸ் அழாதே, இன்னும் இரண்டே வருடத்தில், நமது படிப்பும் முடிந்து விடும். அதற்குப் பிறகு, நீ உன் மாமா கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டு, அவரோடு தானே இருக்கப் போகிறாய்", என்று அவளை தேற்ற முயற்சித்தாள் சனாயா.

எதுவும் இயலாமல் போக, பிரபாவை சமாதானம் செய்ய கார்த்திக் தான் வந்தான். அவனுடன் பிரதாப்பும் வந்திருந்தான்.

கார்த்திக் பிரபாவை சமாதானம் செய்ய, பிரதாப் சனாயாவிடம் "எங்காவது வெளியே செல்வோமா" என்று வினவினான்.

அந்த ஒரு வருட காலத்தில் இருவரின் நட்பும், நம்பிக்கையும், மிகவும் அதிகரித்திருக்க, "கண்டிப்பாக", எனக்கூறி கிளம்பினாள்.

அவனுடன் பல மாதங்கள் கலித்து தனியே வெளியில் செல்கிறாள். அதில் உற்சாகம் இருந்தபோதும், மனதில் ஒரு மூலையில், அவனை பிரியும் வேதனை, அவளை வாட்டிக் கொண்டிருந்தது.

"சனா… நீ பைக்கில் சென்றுள்ளாயா", என்று பிரதாப் ஆவலுடன் வினவ,

"இல்லை பிரதாப், சிறுவயதிலிருந்தே ஆசைதான், ஆனால் எவரும் அழைத்துச் சென்றதில்லை", என்று கூறினாள்.

பின் இருவரும் பைக்கில் ஒன்றாக சென்றனர். பட்டும்படாமல் வெகுதூரம் சென்றனர்.

'இவளை பிரிந்து எப்படி வாழப்போகிறோமோ', என்ற எண்ணத்தில் அமைதியாய் வண்டியை ஓட்டினான் பிரதாப்.

தினமும் அவளை சந்திக்காமல் அவன் இருந்ததே இல்லை. ஞாயிற்றுக்கிழமை கூட, அவளை சந்திக்க ஏதேனும் ஒரு வழி செய்து விடுவான்.

அப்படி இருக்க, 'இனி அவளை காண இயலாது', என்ற எண்ணம் மனதை வாட்டி எடுத்தது.

சனாயாவிற்கும் அதே ஏக்கம்தான்...

"சரி சனா... நாம் இன்னும் ஒரே மாதத்தில் சந்திக்கலாம். பிரபா மற்றும் கார்த்திக்கின் நிச்சயதார்த்த விழாவில்", என்று பிரதாப் கூற.

"சரிங்க பிரதாப், நான் உங்கள் விருப்பம் போல, பொறுப்பான பெண்ணாய் நடந்து கொள்வேன். என்னை பற்றி கவலை படாதீர்கள், அடுத்தது பிசினஸ் செய்யப்போவதாக கூறினீர்களே, அதில் கவனம் செலுத்துங்கள்", என்றாள், கவலையை உள்ளடக்கிய குரலில்.

"உன் மீது எனக்கு எப்போதோ நம்பிக்கை வந்துவிட்டது சனா, நான்காம் வகுப்பு சனா இப்போது இருபது வயது பெண்ணாக மாறிவிட்டாள். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே", என்றான், கவலையை இயன்றவரை மறைத்து.

அவள் கண்கள் கலங்க பேசத் துவங்கினாள், "இரண்டு வருடம், இரண்டு நொடி போல் சென்றுவிட்டது. உங்களை பிரிய மனமில்லை", என்றால் தயங்கித், தயங்கி.

"நீ என்னை காண வேண்டும் என்று நினைத்தால், மறுகணம் உன் முன் வந்து நிற்பேன் சனா", என்றான் ஆறுதலாக.

அவள் கலங்கிய கண்களுடன், லேசாக புன்னகைக்க,

"ஆனால் நீ இப்படி கலங்கினால், என்னால் மகிழ்ச்சியாக இருக்க இயலாது. என்னை வழியனுப்பும் போது, சிரித்த முகத்துடன் இருக்க வேண்டாமா. இந்த சிரிப்பு நான், உன்னை அடுத்த முறை பார்க்கும் வரை, எனக்கு தெம்பூட்டும்", என்றான்.

சரி என்பது போல், அவள் புன்னகையுடன் தலையசைக்க.

"தட்ஸ் குட்", என அவனும் புன்னகைத்தான்.

மறுநாள் மலர, கார்த்திக் மற்றும் பிரதாப்பை வழியனுப்ப, பிரபா, சனாயா, ஆதி, என மூவரும் வந்தனர்.

பிரபா அழுகையுடனும், சனாயா சோகத்தை உள்ளடக்கிய சிரிப்புடனும், அவர்களுக்கு விடை அளித்தனர்.

அவர்கள் சென்றபின், அந்த இடத்தை பார்த்தபடியே அசையாமல் நின்ற சனாயாவின் கண்களிலிருந்து, கண்ணீர் எட்டிப்பார்த்தது.

அதை ஒருவழியாக சமாளித்துக்கொண்டு, பிரபாவை சமாதானம் செய்தாள் சனாயா.

ஆதியும் பிரபாவை சிரிக்கவைக்க, பல முயற்சிகளை செய்து கொண்டிருந்தான். அதிலே வெற்றி பெற்றவுடன், பிரபாவை ஹாஸ்டலில் விட்டுவிட்டு, ஆதியும், சனாயாவும், வழக்கம்போல பூங்காவிற்கு சென்றனர்

அன்று சனாயாவின் முகமும், மனமும், வாடி இருந்தது. எவ்வளவுதான் வருத்தமாக இருந்தாலும், குழந்தைகளின் விளையாட்டை பார்த்தால், அவள் மனம் மகிழும். ஆனால் அன்று அதுவும் பயன் தரவில்லை.

இதை கவனித்த ஆதி, "என்ன சனா, இப்படி குரங்கு மாதிரி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருக்கிறாய்", என்று அவளைக் கேலி செய்வதுபோல, வினவிய போதும், மனதில் ஏதோ ஒன்று பிசைய தொடங்கியது.

"என்னால் முடியவில்லை அதி, பிரதாப்பை பிரிந்து எப்படி இருக்க போகிறேனோ தெரியவில்லை" என்றாள்.

"அதான் நான் இருக்கிறேனே", என்று அவன், அவளை பார்க்கவும்.

ஒரு கண் போனால், இன்னொரு கண் உள்ளது, என்று சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் இதயம் ஒன்று தானே, அந்த இதயம் போனபின் கண்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது.

'பிரபாவும், ஆதியும் எனது இரு கண்கள் போல. ஆனால் பிரதாப் என் இதயம் அல்லவா', என்று மனதுக்குள் நினைத்தாள் சனாயா.

இதை ஆதியிடம், கூறிவிடலாம் என்று வாயை திறந்த சனாயாவிற்கு, வார்த்தை வரும்முன் தாங்கமுடியாத அழுகைதான் வந்தது. சமாளித்துக் கொண்டு வீடு திரும்பினாள்.

பிரபா.. கார்த்திக்கின் நினைவிலேயே இருக்க, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றோ, அல்லது கோவில், ஹோட்டல், என வெளியே அழைத்துச் சென்றோ, அவளுடன் நேரத்தை செலவழிக்க தொடங்கினாள் சனாயா.

"என்ன சனா, இப்போதெல்லாம் நீ என்னுடன் நேரம் செலவிடுவதே இல்லை. உன்னிடம் பேச பல விஷயங்கள் உள்ளன, அதையெல்லாம் எப்போது பேசுவது", என்று அலைபேசியில் கூறினான் ஆதி.

"நீ மட்டும் இல்லை, நானும் தான் உன்னிடம் நிறைய பேச வேண்டும். ஆனால் இந்த பிரபா தான், கார்த்திக் அண்ணா சென்றதையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளைவிட்டு நான் எங்கே நகர்வது", என்று சலித்துக்கொண்டாள் பிரபா.

'இதெல்லாம் ரொம்ப ஓவர் சனா",....

"என்னடா ஓவர்"...

"ஒரே மாதத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம், அதற்குள் இந்த வருத்தம் எல்லாம் ரொம்ப தான். என்னமோ இவர்கள் தான் ரோமியோ, ஜூலியட், என்ற நினைப்பு அவளுக்கு", என அவன் கடுப்பாக பேச,

சிரித்துக்கொண்டே, "போதும், போதும்… என்ன செய்வது... அவளது வாழ்க்கை இலட்சியம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி, என எல்லாமே கார்த்திக் அண்ணா தானே", என்றாள்.

"அதெல்லாம் எனக்கு தெரியாது… நான் உன்னுடன் எங்காவது வெளியே சென்று பேச வேண்டும்", என்றான் முடிவாக.

"இன்னும் நாலே நாட்களில் செமஸ்டர் விடுமுறை வந்து விடும், அதன் பின் அவளது மாமா கார்த்திக்கை பார்க்க சென்றுவிடுவாள். அப்போது நிறைய பேசலாம், அதுவரை பொறுத்திரு" என்றாள் கெஞ்சலாய்.

"சரி சனா, பிரபாவை மகிழ்ச்சியாக வைத்துக் கொள். முடிந்தால் நாளை நான் உங்களோடு வெளியே வருகிறேன்", என்று மொபைலில் பேசிவிட்டு, இணைப்பை துண்டித்தான் ஆதி.

'ஏன் இந்த சனாயா, பிரதாப் அண்ணன் சென்ற அன்று, மிகவும் வருத்தமாக இருந்தாள்'...

'அவர் சென்றால் என்ன... நான் இருக்கிறேன், என்று நான் கூறியதற்கும் கூட அவள் பதில் சொல்லாமல் திடீரென்று எழுந்து சென்றுவிட்டாளே'.....

'ஒருவேளை சனா, பிரதாப் அண்ணனை விரும்புகிறாளோ!!!....ஆனால் அப்படி அவள் எளிதில் காதல் வலையில் விழுபவள் இல்லையே'... என எண்ணினான் ஆதி.

'நான் பிரதாப் அவர்களை நேசிப்பது உண்மைதான், ஆம் நூறு சதவீதம் உண்மை. ஆனால்… இதை ஆதியிடம் கூறினால், அவன் எப்படி எடுத்துக் கொள்வான். அவன் என் நண்பன் தான் என்றாலும், என்மீது அதிகப்படியான அன்பை வைத்துள்ளானே'...

'நான் வேறொருவரை விரும்புகிறேன், என்று தெரிந்தால் நிச்சயம் வருந்துவான். அதற்காக இதை அவனிடமிருந்து மறைப்பது மிகவும் தவறு'....

'இதை கூடிய சீக்கிரமே, அவனிடம் சொல்ல வேண்டும். அவனிடம் சொல்லும் முன், இந்த நிச்சயதார்த்த விழாவில் பிரதாப் அவர்களிடம் என் மனதை சொல்லியே தீர வேண்டும்' என்று எண்ணினாள் சனாயா.

'சொல்லாமலேயே காதல் செய்வது தனி சுகம் தான், இந்த சுகத்தை... நான் கடந்த இரண்டு வருடமாக அனுபவித்தது போதும்'....

'இதற்குமேல் எதற்காக கனவு உலகத்திலேயே இருக்க வேண்டும், அவர் மனதில் இருப்பதையும் அறிய வேண்டும் தானே' என்று எண்ணினாள்.

இப்படி சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு, இன்னொன்றும் தோன்றியது, 'இதை ஏன் நாம் நமது பிரபாவிடம் சொல்லக்கூடாது', என்று.

'பின் வேண்டாம், முதலில் அவர்களிடம் சொல்லிவிடுவோம்' என்று முடிவு செய்தாள்.

இப்படி மாறி மாறி சிந்தித்துக் கொண்டிருந்த சனாயா, மன அமைதிக்காக கோவிலுக்கு செல்லலாம் என்று தனது காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

இந்த முறை பிரபாவை அழைத்துச் செல்ல வேண்டாம். கொஞ்ச நேரம் அமைதியாய் தனிமையில் இருக்கலாம், என்று முடிவு செய்தாள்.

பிரபா, ஆதி, பிரதாப், இவர்கள் மூவரை பற்றிய எண்ணமே அவள் மனதில் ஓடிக்கொண்டிருக்க, சில மணி நேரங்கள் சென்னை டிராபிக்கில் கஷ்டப்பட்டு வாகனத்தை ஓட்டியவள், பின்னர் சென்னை அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றாள்…

சாலை காலியாக காணப்பட்டது….

குயிலின் கானமும், மர இலைகளின் சலசலப்பு ஓசையும் தவிர வேறு எந்த விதமான சத்தங்களும் எழவில்லை.

ஆள் நடமாட்டமும் அதிகம் இல்லை…..

காரிலிருந்து வெளியே இறங்கி, அந்த அமைதியை ரசித்துக் கொண்டிருந்தாள். இயற்கையில் மனம் அமைதிப்பட, அதை தகர்க்க வேகமாக வந்தது, ஒரு பென்ஸ் கார்.

அந்த கார் தன்னருகே வந்து நிற்கவும், யாராக இருக்குமென பார்த்தாள் சனாயா

தொடரும்…..
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes