வண்ணங்களின் வசந்தம் -9

Advertisement

சுதிஷா

Well-Known Member
IMG-20201016-WA0017.jpg

அத்தியாயம் -9

ஐவரும், கல்லூரியின் வளாகத்திற்குள் நுழையும் சமயம் ப்ரீத்தி “ ஹேய் வண்டிய நிறுத்துங்கடி” என்று கத்தவும், மற்ற மூவரும் தங்கள் வண்டியை நிறுத்தினர், பின் அவளை பார்த்து “இப்போ எதுக்குடி வாசலிலேயே வண்டிய நிறுத்த சொல்ற” என்று அபி கேட்க அதற்கு ப்ரீத்தியோ “முதல் முதல்ல காலேஜ்குள்ள போறோம் வலது கால் எடுத்து வச்சு போலாம் , அப்பதானே வருஷமெல்லாம் நல்லது நடக்கும்” என சொன்னாள். “ஒகே” என்ற ஐவரும் தங்கள் ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்தினர்.பின் “அப்போ சரி வாங்க எல்லாரும் அட் அ டைம் ல ஒன்னா உள்ள போலாம்” என்று சொல்ல மற்றவர்களும் “ஓகே” என்று விட்டு, ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டு வலது காலை தூக்கவும் ,”அப்படியே அஞ்சு பேரும் இங்கே வாங்க” என்று அங்கு ரேகிங் செய்து கொண்டு இருந்த சீனியர்ஸ் கூப்பிடவும் சரியாக இருந்தது.அங்கு நின்றிருந்த சீனியர்களில் நின்றிருந்த ஒருவனை பார்த்து தோழிகள் அனைவரும் அதிர்ந்து பூஜாவை பார்க்க அவளோ திரு திருவென்று விழித்து கொண்டு இருந்தாள்.

“அடியே இதுதான் காலைல நீ சீக்கிரம் கிளம்பி இருந்ததுக்கு காரணமா” என்ற சூர்யா கேட்க, அபியும், மதுவும் ஒரே நேரத்தில் ‘இதுக்குதான் காலைலயே எலி எட்டு மொழம் வேட்டி கட்டுச்சா’ என்று நினைத்து கொண்டு பூஜாவை பார்க்க,ப்ரீத்தியும் அதே கேள்வியை கண்களில் தேக்கி பூஜாவை பார்த்தனர்.அவளோ ஈஈஈ……… என்று இளித்தாள்.

ஆம், அங்கு சீனியர்கள் கும்பலில் ஆறடி உயரமும், உடலுக்கு ஏற்ற ஜிம் பாடியுமாக கண்ணில் குறுப்புடனும் இதழில் வசீகர சிரிப்புடன் நடுநாயகமாக நின்றிருந்தான். அக்கல்லுரி மாணவிகள் அனைவரின் கனவு நாயகன் பூஜாவின் சைட் அர்ஜுன்.

“அவளை மொறைக்கறதெல்லாம் அப்புறம் வச்சுக்கலாம்.இப்போ ராகிங் பண்ண சீனியர்ஸ் கூப்படறாங்க அவங்ககிட்ட இருந்து எப்புடி எஸ்கேப் ஆகரதுனு வழிய மொதல்ல பாப்போம்” என்றாள் மது.அப்போது அந்த கூட்டத்தில் இருந்த சீனியர் மாணவர்களில் ஒருவன் உங்கள கூப்பிட்டு எவ்ளோ நேரம் ஆச்சு அங்க என்ன உங்களுக்குள்ள பேசிட்டு இருக்கீங்க கொஞ்சம் கூட சீனியர்னு மரியாதை வேணாம் என்று மிரட்டலாக கேட்டான்.

அப்போது பூஜா “வாங்கடி என்னதான் பண்றாங்கனு பாப்போம்” என்று சொல்லி வீராவேசமாக முன்னே சென்றவள்தன் தோழிகள் தன்னை தொடர்ந்து வராததை கவனித்து திரும்பி பார்க்க அவளை முறைத்த மற்ற நால்வரும் “அடியே உன்னோட ஆர்வம் எதுக்குன்னு எங்களுக்கு தெரியாதா, உன் போதைக்கு நாங்க ஊறுகாயா” என்று புலம்பிக்கொண்டே அவள் பின்னோடு சென்றனர்.

பூஜா, மது, ப்ரீத்தி மூவரும் முன் சென்று நிற்க, சூர்யாவும், அபியும் அவர்களின் பின் பக்கம் தனியாக ஒதுங்கி நின்றிருந்தனர்.

ஐவரையும் பார்த்த அர்ஜுன் அவர்களை தெரியாதது போல் முகத்தை திருப்பி கொள்ள, அவர்களில் ஒருவன் முதலில் ப்ரீத்தியை கூப்பிட்டு “சீனியர்ஸ் எது குடுத்தாலும் சாப்பிடணும் சாப்புடுவியா” என்றனர் கிண்டலாக, அவளும் சாப்பிடறதுதானே என்று வேகமாக “ம்ம்ம்ம்ம். .” என்று தலையாட்டினாள். உடனே சீனியர்கள் சிரித்து கொண்டு அவளிடம் “நாங்கள் சொல்வதை நீ சாப்பிடனும் ” என கூற, ப்ரீத்தியும் முகத்தை சிரிப்புடன் வைத்து கொண்டு “அவ்வளவு தானா இத நானும் மதுவும் நல்லா பண்ணுவோமே” என சொன்னாள்.

ப்ரீத்தி சொல்வதை “அப்படியா” என்று ஆச்சர்யம் போல் காட்டி கொண்ட சீனியர்களில் ஒருவன் மற்ற நால்வரிடம் திரும்பி “யாரு அந்த மது வா இங்க, நீயும் உன் பிரண்ட் கூட சேர்ந்து சாப்பிடு” என சொல்ல, மதுவோ “அவ மட்டும் தனியா சாப்ட்ருவாளோனு நெனைச்சேன், நல்ல வேலை என்னையும் கூப்பிட்டுட்டா ‘நண்பிடா’” என்று தனக்குள் சொல்லி கொண்டு ப்ரீத்தியின் அருகில் சிரிப்புடன் போய் நின்றாள். இருவரும் சாப்பிடும் ஆர்வத்தை கண்ணில் தேக்கி அவர்களை பார்த்துக்கொண்டு நின்றனர்.

சீனியர் மாணவர்களில் ஒருவன் “என்ன சாப்பிட பிடிக்கும்” என்றான். இருவரும் ஒரே நேரத்தில் “நான் சொல்றேன்,இல்ல இல்ல நான் சொல்றேன் இல்ல, இல்ல நான்தான் சொல்வேன்” என்று அடித்து கொண்டு இருக்க சீனியர்கள் “நம்ம இவங்கள கலாய்க்கறோமா இல்ல இவங்க நம்ம கலாய்க்கரங்களா” என்று குழம்பி போயினர்.

ஒரு வழியாக இருவரும் தங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்தவர்களாக சேர்ந்து சொல்ல ஆரம்பித்தனர். “மட்டன் பிரியாணி சீனியர் அதுவும் மேல இருக்கறது வேண்டாம், ஓவர் மசாலா இருக்கும். கீழ இருக்கறதும் வேண்டாம், சுத்தமா மசாலா இல்லாம, அடி பிடிச்ச மாதிரி இருந்தாலும் இருக்கும், ‘சோ’ அதுவும் வேண்டாம். இடைல இருக்க லேயர்ல இருக்கும் பாருங்க அதுதான் டேஸ்ட். நடுவுல இருக்க லேயர்தான் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் அதனால நாங்க சொல்ற மாதிரி வாங்கிட்டு வாங்க.அது மட்டும் இல்லாம சூடா இருந்தாதான் இவளுக்கு புடிக்கும் என்று மதுவை காட்ட அவளும் வேகமாக ‘ஆமாம் ஆமாம்’ என்று தலையாட்டினாள். எனக்கு ரொம்ப சூடா வேண்டாம் ரொம்ப ஆறி போனதும் வேண்டாம் நார்மல் சூடு போதும் அப்புறம் கூட சிக்கன் 65, அப்புறம் முட்டை, அவ்ளோதான்” என்று ப்ரீத்தி சொல்ல “அடியே தயிர் மறந்துட்ட” என்று எடுத்து கொடுத்தாள் மது. “ஷ்…. சாரிடி மறந்துட்டேன்” என்றவள் “கூட தயிரும் சீனியர் ப்ளீஸ் இல்லனா டேஸ்ட் தெரியாது” என்று சொன்னாள்.

இருவரின் பிரியாணி ஆர்டரை கேட்ட அர்ஜுனின் அருகில் நின்றவன் “டேய், நீ சொன்னன்னுதானே இந்த அஞ்சு பேரையும் கூப்பிட்டோம். இவங்க பண்றத பார்த்தா நம்மல இவங்க ராகிங் பண்ற மாதிரி இருக்கு” என்று சொல்ல அர்ஜுனோ “வாய மூடிட்டு, அந்த பொண்ணுங்ககிட்ட சொல்ல நெனச்சத சொல்லி முடிடா” என்று அவர்களுக்கு கேட்காதவாறு முணுமுணுத்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். “ஆமாடா ரொம்ப முக்கியம் அங்க பாரு உண்மையாவே பிரியாணி வாங்கி குடுக்க போற மாதிரி வெயிட் பண்ணுதுங்க.இதுங்க வீட்ல சாப்பாடு போட்டு இருக்க மாட்டங்களோ, என்னவோ போ” என்று புலம்பிவிட்டு அவர்களை பார்த்து திரும்பினான்.
“ஓகே ஆர்டர் முடிஞ்சுதுல, ம்…. சாப்பிட ஆரம்பிங்க” என்று சொன்னான். ப்ரீத்தியும், மதுவும் புரியாமல் “இங்க எதுவுமே இல்ல எத சாப்பிட சீனியர்” என்று கேட்க, அவனோ “இங்க இலையில இருக்கு பாருங்க அத தான் சாப்பிடனும்” என்றான்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு “இலை எங்க இருக்கு சீனியர் காணுமே” என்றனர் குழப்பமாக. உடனே அவன் “இருப்பதாக நெனச்சுட்டு சாப்பிட்டு காமிங்க” என நமட்டு சிரிப்புடன் கூறினான். அதில் இருவரும் உள்ளுக்குள் காண்டானாலும் வெளியில் “ஈஈஈஈஈஈ” என்று சிரித்துவிட்டு “ஒகே சீனியர்” என்றவர்கள் அங்கேயே சாப்பிட ஏதுவாக சம்மணமிட்டு அமர்ந்து தங்களுக்குள் கண்ணடித்து கொண்டு “நீ சாப்பிடுடி,நீ சாப்பிடுடி என இருவரும் மாறி மாறி சொல்லிக்கொண்டு இருந்தனர்.

அவர்களின் சேட்டையை பார்த்த அர்ஜுன் “இந்த படம் எல்லாம் நாங்க ஏற்கனவே பாத்துட்டோம் இப்ப நாங்க சொல்றத செய்ங்க”என்றான் கடுப்பாக.

அர்ஜுன் கூறியதை கேட்ட பூஜா “இல்ல சீனியர்” என்று ஏதோ கூற ஆரம்பிக்க அவள் பேச்சை தடுத்த மற்றொருவன் “அவங்களுக்கு நீ என்ன எடுப்பா” என்று கடுப்பாக மொழிந்துவிட்டு “முதலில் நீ இங்க வா” என்றான் .

பூஜாவோ அர்ஜுனிற்கு நேராக போய் நின்றவள் அவனையே விழி எடுக்காது பார்த்து கொண்டு இருந்தாள். அவளை பார்த்த மது, ப்ரீத்தியிடம் “அங்க பாருடி, நம்ம மண் சோறு சாப்பிட வச்சுட்டு இவ கண்ணுலையே அவ ஆளை சாப்பிடறா” என்று சொல்ல, ப்ரீத்தியோ “அடியே, பேசாம இரு நானே பிரியாணின்னு சொல்லி ஏமாத்திட்டாங்களேன்னு கடுப்புல இருக்கேன்” என்று பொறுப்பாக கீழே குனிந்து சாப்பிடுவது போல் பாவலா செய்து கொண்டு இருந்தாள். மதுவோ பிரியாணியை நினைத்து பெரு மூச்சு விட்டவள் பூஜாவை பார்த்து கொண்டே சாப்பிடுவது போல் பாவலா செய்து கொண்டு இருந்தாள்.

சூர்யாவும் அபியிடம் மது கேட்ட கேள்வியையே வேறு மாதிரி கேட்டாள். “என்னடி ராகிங் பண்ண அவனுங்க கூப்பிட்டா, இவ என்னமோ அவனுங்க அவார்ட் குடுக்க போற மாதிரி ‘ஈஈஈஈனு’ பல்ல காட்டிட்டு நிக்கறா” என்று சொல்ல, அபியோ “அவ ஆளை பாக்கறத விட வேற அவார்ட் அவளுக்கு எதுக்குடி வேடிக்கை மட்டும் பாரு” என்று சொல்ல சூர்யாவோ “ஆனாலும் இந்த கும்பல்ல அர்ஜுனை தவற வேற எவனும் பாக்கற மாதிரி இல்லை” என்று சொல்ல அபியும் “ஆமாம்டி, இந்த காலேஜ்ல எல்லாரும் இவங்க மாதிரியே இருந்துட்டா நம்ம நிலைமை என்ன ஆகறது” என்று புலம்ப ஆரம்பித்தாள்.

அர்ஜுன் அருகில் நின்ற கோகுல் “ஹேய் நான் கூப்பிட்டா, நீ அவன்கிட்ட போய் நிக்குற” என்று அதட்டினான்.அவன் அதட்டலில் பயந்த பூஜா பாவமாக முகத்தை வைத்து கொண்டு அவன் அருகில் போய் நின்றாள். “அது” என்பது போல் அவளை ஒரு பார்வை பார்த்தவன்.அர்ஜுனின் மறு பக்கம் நின்றிருந்தவனை கை காட்டி “அவன் பேரு ரகு. நீ இப்போ என்ன பண்ற அவன்கிட்ட போய் ‘ஐ லவ் யூ’ சொல்ற” என்று சொனான். அதை கேட்ட பூஜா அதிர்ந்து அர்ஜுனை பார்த்து “இவர்களிடம் இருந்து காப்பத்தேன்” என்பது போல் விழிகளால் கெஞ்ச அவனோ அவளை கண்டு கொள்ளாமல் நின்றிருந்தான். அவனின் செயலில் கடுப்பான பூஜா தன் தோழிகளை திரும்பி பார்த்தாள்.இவள் பார்ப்பதை உணர்ந்த மது ப்ரீத்தி தோளில் தட்டி “பிரியாணி நான் சொன்ன பதத்துல இருக்குடி, ரொம்ப டேஸ்டா இருக்கு, ஆனா சூடா இருக்கு” என்று பூஜாவை பார்த்து கண்ணடித்து கொண்டே சொல்ல பூஜா புரிந்து கொண்டாள் தோழிகள் அவர்கள் சேட்டையை ஆரம்பித்தவிட்டார்கள் என்று.

உடனே இவளும் ரகுவின் அருகில் போய் நின்றாள். பூஜா ரகுவிடம் போய் நிற்கவுமே உடல் விரைத்து நின்றிருந்தான் அர்ஜுன்.அவள் சொல்ல மாட்டாள் என்று அசால்டான முகபாவத்துடன் நின்றிருந்தவன் “சொல்லிடுவாளோ” என்று மனதினுள் ஜெர்க் ஆனான்.

ரகுவிடம் போய் நின்ற பூஜா அர்ஜுனை ஓர கண்ணால் பார்த்து கொண்டே “‘ஐ லவ் யூ…………….”என்று இழுத்து “ரகு அண்ணா’” என்று கத்திவிட்டு ஓட ஆரம்பித்தாள்.அவள் ஓடுவதை பார்த்த மற்றவர்கள் “டேய் அந்த பொண்ணு ஓடிடுச்சுடா” என்று சொல்ல இங்கு அர்ஜுனோ “நல்ல வேல அண்ணா சொன்னா” என்று சந்தோஷப்பட்டு கொண்டான்.அந்த பொண்ணு போனா போகட்டும் அங்க பாரு ரெண்டு பேரு நிக்கறத என்று மற்றொருவன் சொன்னான்.

அடுத்து அபியையும், சூர்யாவையும் பார்த்து “நீங்க ரெண்டு பேரும் இங்க வாங்க” என்று சொல்ல அவர்களோ “சாரி சீனியர் நாங்க உங்க ஜூனியர் இல்லை. நாங்க ‘மெடிக்கல் லைன்’ சோ உங்க ராகிங் எல்லாம் உங்க ஜூனியர்ங்ககிட்ட வச்சுக்கோங்க என்று அபி சொல்லி கொண்டு இருக்கும்போதே சூர்யா அபியின் கையை பிடித்து கொண்டு ஓட ஆரம்பித்தாள்.

சூர்யாவும் அபியை இழுத்து கொண்டு ஓட அவர்கள் ஓடுவதை அப்போதுதான் கவனித்த ப்ரீத்தி.என்ன இவளுங்கபாட்டுக்கு ஓடிட்டாளுங்க ரொம்ப உண்மையா நடந்துக்கிட்டமோ என்று யோசித்தவள் தானும் எழுந்து ஓட முயற்சிக்க அதற்குள் அவள் தோளில் கை வைத்து அழுத்தி தான் முதலில் எழுந்த மது அவள் ஒரு பக்கம் ஓட ஆரம்பித்தாள்.

மது ஓடவும் சுதாரித்த கோகுல் ப்ரீத்தி முன் வந்து தன் கால்களை அகட்டி வைத்து நின்று கொண்டு ஓட முடியாமல் தடுக்க முயற்சித்தான், மது தோளில் அழுத்தி எழவும் எழுந்தவள் மீண்டும் பழைய மாதிரியே அமர்ந்த ப்ரீத்தி திரு திருவென்று விழித்து கொண்டிருந்தாள்.

ஓடி கொண்டிருந்த மது ப்ரீத்தியை திரும்பி பார்த்து “டேய் செவ்வாழை தாவுடா தாவு” என்று கத்த அவளின் குரலில் தன்னை சுதாரித்து கொண்ட ப்ரீத்தி கோகுலின் கால் இடைவெளியில் புகுந்து ஓடிவிட்டாள். அங்கு நின்றிருந்தவர்கள் யாரை பிடிப்பது யாரை விடுவது என்று தெரியாமல் விழித்து கொண்டு இருக்க, இவர்களின் சேட்டை தெரிந்தே அவர்களை அழைத்திருந்த அர்ஜுனிற்கோ இதழோரம் புன்னகை மலர்ந்தது.

கோகுல் அர்ஜுனிடம் “என்னடா அவங்க எல்லாரும் நம்மல ஏமாத்திட்டு ஓடிட்டாங்க, நீ என்னனா சிரிச்சுட்டு இருக்க” என்று கடுப்பாக கேட்க.
அர்ஜுன் ”விடுடா எங்க போக போறாங்க நாளைக்கு இல்லை அதுக்கு அடுத்த நாள் எப்புடியும் ஒரு நாள் நம்மக்கிட்ட மாட்டத்தான் போறாங்க அப்போ பாத்துக்கலாம். இப்போ வாங்க கிளாஸ்க்கு போகலாம்” என்று மற்றவர்களை இழுத்து சென்றான். ஓர பார்வையில் கேட் அருகே இருக்கும் புதர் போன்ற செடியை மர்ம சிரிப்புடன் பார்த்து கொண்டே.

அர்ஜுன் கும்பல் அந்த இடத்தில் இருந்து நகர்ந்த பின் அந்த புதர் செடியின் பின் புறம் இருந்து முதலில் வெளி வந்த பூஜா “ஹப்பாடா வாங்கடி போய் வண்டிய எடுத்துட்டு உள்ள வரலாம் அவங்க எல்லோரும் போய்ட்டாங்க” என்று சொல்ல, அடுத்து வெளி வந்த சூர்யா ப்ரீத்தியை பார்த்து “இதுக்கு பேருதான் நல்லதா” என்று கேட்க, அவளை அசட்டு சிரிப்புடன் பார்த்த ப்ரீத்தி “அது இல்லடி வலது கால் எடுத்து வச்சி வந்தா நல்ல சகுனம்னு சொன்னாங்க, அதை நம்பி நான் ஏமாந்துட்டேன்” என்று அப்பாவியாக சொல்ல, அவளை முறைத்த அபி “ஆமாண்டி காலைலயே ஓட்ட பந்தயத்துல ஓடற மாதிரி ஓடுனோமே, இதுதான் நல்ல சகுனமா” என்றாள். அதற்கு ப்ரீத்தியோ “விடுடா விடுடா வாழ்க்கைனா சில அடிகள் விழதான் செய்யும்” என்று சொல்ல தோழிகள் அனைவரும் அவளை முறைத்தனர். பின் மதுதான் “இவளை அப்புறம் பார்த்துக்கலாம், இப்போ வாங்க வண்டி எடுத்துட்டு கிளாஸ்க்கு போற வழிய பார்க்கலாம்” என்று சொல்ல மற்றவர்களும் வகுப்பிற்கு நேரம் ஆவதை உணர்ந்து கிளம்பினர்

தோழிகள் ஐவரும் ஒருவழியாக பார்க்கிங் ஏரியாவில் வண்டியை விட்டவர்கள் கல்லூரி முடிந்த பின் மீண்டும் இங்கயே சந்திக்கலாம் என்று பேசி முடிவெடுத்தவர்கள் அவரவர் பில்டிங் நோக்கி சென்றனர்.
அபி மற்றும் சூர்யா மெடிக்கல் காலேஜ் அருகில் வந்த பின்.அபி ‘நல்ல வேல அவங்ககிட்ட தப்பிசுட்டோம்’ என்றாள், சூர்யாவும் “ஆமா ஆமா” என்று கூறியவள் “வா வா சீக்கிரம் கிளாஸ்க்கு போலாம். நமக்கும் டைம் ஆயிடுச்சு” என்று கூற இருவரும் வேகமாக தங்களது வகுப்பறையை நோக்கி சென்றனர்.
பேருந்து நிறுத்தி இருக்கும் இடத்தை அவர்கள் கடந்து செல்லும்போது இரண்டு பேருந்துக்கும் இடையில் இருவர் மறைவாக நின்று பேசி கொண்டு இருந்தனர்.

பேச்சு சத்தம் கேட்ட சூர்யா ‘இதுக்குள்ள என்ன பன்றாங்க’ என்று யோசித்த படி அங்கு சென்று எட்டி பார்த்தாள். அவள் பின்னோடு பார்த்த அபிக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்து போக தலையில் அடித்துக்கொண்டவள் சூர்யாவின் சுடிதார் காலரை பிடித்து இழுத்துக்கொண்டே “இதை எல்லாம் நீ பாக்க கூடாது வா கிளாஸ்க்கு போலாம்” என்று இழுத்து சென்றாள்.

அபியின் இழுப்பிற்கு சென்றாலும் அவங்க ரெண்டு பேரும் அங்க என்னடி பன்றாங்க என்று கேட்க கடுப்பில் இருந்த அபியோ ம்………….நாட்டு நடப்பை அலசி ஆராயராங்க போதுமா வாடி என்றவள் தோழியை வகுப்பறையை நோக்கி இழுத்து சென்றாள்.

வகுப்பறையை தேடி வந்தவர்கள் ஒரு இடத்தை பிடித்து அமரும் நேரம் கல்லூரி பியூன் வகுப்பிற்குள் வந்தார். “எல்லோருக்கும் வரவேற்பு கூட்டம் வச்சிருக்காங்க செமினார் ஹாலுக்கு வாங்க” என்று சொல்லி செல்ல அனைவரும் செமினார் ஹால் நோக்கி சென்றனர். அங்கு அவர்களுடைய காலேஜ் டீன் மாணவர்களுக்கு அறிவுரைகள் அள்ளி வழங்கி கொண்டிருந்தார், அவர் பேசி முடித்த பின் விரிவுரையாளர் பேச ஆரம்பிக்க, இங்கு அபிக்கோ அவர்களது பேச்சை கேட்டு தூக்கம் தூக்கமாக வர அப்படியே அவள் தூங்கி போனாள்.

சூர்யா முதலில் ஆர்வமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாலும், போக போக அவளுக்கும் தூக்கம் வர ஆரம்பித்தது, தூங்கினால் மாட்டிக்கொள்வோமோ என்று பயந்தவள் அருகிலிருந்த அபியின் தோளை தட்டி “ஏய் அபி” என்று எழுப்பினாள். அபியோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவள், மீட்டிங் முடிந்ததால் சூர்யா தன்னை எழுப்புகிறாள் என்று நினைத்துக்கொண்டு வேகமாக எழுந்து “சரி வா கிளம்பலாம்” என்றாள்.

சூர்யா தலையில் கை வைத்து குனிந்து கொண்டிருப்பதை பார்த்தவள் அப்போதுதான் கவனித்தாள், அந்த இடமே நிசப்தமாக இருப்பதை, உடனே தனது பார்வையை சுழல விட அனைவருமே அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். அதுவரை பேசிக்கொண்டிருந்த அந்த விரிவுரையாளரும் அவள் தூங்குவதை பார்த்து கொண்டுதான் இருந்தார், அது ஏற்கனவே அவருக்கு கோபத்தைக் கிளப்பி இருக்க இப்பொழுது எழுந்து நின்றது வேறு அவரது கோபத்திற்கு மேலும் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்தது.

உடனே அவர் அபியை பார்த்து “ வாட்” என்று கோபமாக கேட்க.அபியோ முதலில் திருதிருவென விழித்தவள் பின் “உங்கள மாதிரி பெரிய டாக்டர் ஆகணும்னா என்ன சார் பண்ணனும்” என்று கேட்க, அதற்கு அவரோ “முதல்ல காலேஜில் படிக்கனும் அதுவும் தூங்காம” என்று கூற, அவளும் “அப்படியா சார் ஓகே ஓகே” என்று பவ்யமாக கூறி விட்டு அமர்ந்து கொண்டாள். பின் மேலும் இரண்டு மூன்று பேராசிரியர்கள் பேசி பேசியே மொத்த மாணவர்களையும் டயர்ட் ஆக்கி, அந்த மீட்டிங்கை முடித்தனர்.

மீட்டிங் முடிந்து வெளியில் வந்த சூர்யா “ஏய் லூசு மாதிரி ஏன்டி எழுந்திருச்ச” என்று கேட்க அவளோ “உன்னை யாரு தூக்கத்துல இருக்கறவள எழுப்ப சொன்னது, நான் கூட மீட்டிங் முடிஞ்சிருச்சுனு நினைச்சுதான் எழுந்துட்டேன்”என்றாள்.

சூர்யாவோ அபியை பார்த்து, “ஆனாலும் கொஞ்சம் இல்ல ரொம்ப மொக்கையா தான் இருந்துச்சு, முடியலடா சாமி” என்று கூற, அபியோ “ஆமா வந்த அன்னைக்கே ஏசி போட்டு தாலாட்டு பாடினா தூக்கம் வராமல் என்ன வரும்” என்றவள் பின் சிறு சிரிப்புடன் “ஆனாலும் முதல் நாளே நல்ல சகுனம் செம தூக்கம்” என்று கூறி சிரிக்க சூர்யாவும் அவளோடு hi-fi கொடுத்து கொண்டாள்.

இவர்கள் பேசுவது அனைத்தையும் இவர்கள் பின்னால் கேட்டுக்கொண்டே வந்த இளைஞர்கள் இருவர் சற்று சத்தமாகவே சிரித்துவிட, அவர்களின் சிரிப்பு சத்தத்தில் இருவரும் “எவன் அவன்” என்பது போல் திரும்பி பார்த்தனர். அவர்கள் தங்களை திரும்பிப் பார்ப்பதை உணர்ந்த அந்த சீனியரில் ஒருவன் “வந்த அன்னைக்கே காலேஜ் பேமஸ் ஆயிட்டீங்க போல” என்று கண்களில் ரசனையுடன் அபியை பார்த்து கேட்டான், என்றால் மற்றவனின் பார்வையோ மிக ஆர்வமாக சூர்யாவின் மீது பதிந்தது. தோழிகள் இருவரும் ‘இது யார்’ என்பது போல் பார்த்தனர். அவர்களோ நாங்க உங்களோட சீரியர்ஸ்தான் என்று கூறினர்.வாவ் இவ்ளோ சார்மிங்கான சீனியர்ஸா என்று ஜொள்ளு விட்டாலும் யோசனையாக நின்று இருந்தனர்.

அபி இருவரின் முகங்களையும் ஆராய்ச்சியாக பார்த்தாள். அவர்கள் ராகிங் செய்வதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்பதை புரிந்து கொண்டவர்கள், அப்போதுதான் ஓரளவு பயம் தெளிந்த தோழிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் “ஹாய் சீனியர்” என்று ஒரு சேர கூறினர். அவர்களோ “உங்க பேர் என்ன?” என்று கேட்க “நான் சூர்யா இவ அபி” என்று கூறினாள்.

அவர்களை பார்த்து சிரித்த இருவரில் ஒருவன் “நான் சந்தோஷ் இது என் பிரண்ட் ஆகாஷ்” என்று கூறி,அறிமுகமானவர்கள் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, “சரி அப்புறம் மீட் பண்ணலாம் எங்களுக்கு டைம் ஆச்சு” என்று கூறியபடி அங்கிருந்து சென்றனர்.தோழிகளும் அவர்கள் வகுப்பறை நோக்கி சென்றனர்.

இவர்கள் பேசி கொண்டு இருப்பதை தூரத்தில் இருந்து பார்த்த ஒரு ஜோடி கண்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி செல்லும் இருவரையும் பார்த்து கொண்டு இருந்தது.இருவரில் ஒருவளின் மேல் பதிந்த அவன் பார்வை விலகவே இல்லை.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top