வண்ணங்களின் வசந்தம் - 7

Advertisement

PAPPU PAPPU

Well-Known Member
eiCP9DY31579.jpg


வண்ணங்கள் -7


அன்று இரவு குன்னூரிலேயே அவர்கள் தங்கிவிட அடுத்த நாள் காலையில் பிளாக் தண்டர் செல்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்ததால் விரைவில் தூங்க சென்றனர். மறுநாள் காலை 9 மணிக்கு பிளாக் தண்டர் வாயிலில் சென்று அனைவரும் நிற்க அவர்களது ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் அதன் பாசை கையில் கொடுத்து உள்ளே அனுப்பி வைக்க.பாசை கையில் வாங்கியவர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டு உள்ளே சென்றனர். முதலில் டிரை கேம்ஸ் விளையாட ஆரம்பித்தனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளையாட்டிற்கு செல்ல நமது ஐவர் குழு முதலில் எந்த விளையாட்டிற்கு செல்லலாம் என்று குழம்பி கொண்டு இருக்க அபிதான் கொலம்பஸ் செல்லலாம் என்று கூறினாள். மற்றவர்களும் “சரி” என்று முன்னே செல்ல பூஜா மட்டும் பின் தங்கினாள். அனைவரும் தங்களது பாசை காமித்து விட்டு உள்ளே செல்ல முனையும் பொழுதுதான் பூஜா தங்களுடன் வராததை உணர்ந்தாள் சூர்யா.உடனே தன் அருகில் இருந்த அபியிடம் “எங்கடி பூஜாவ காணோம்”என்று கேட்க அனைவரும் அதன் பிறகுதான் பின்னால் திரும்பிப் பார்த்தனர்.

பூஜாவோ அவர்கள் எங்கு நின்று கொலம்பஸ் போகலாம் என்று முடிவெடுத்தார்களோ அங்கேயே கையை பிசைந்தபடி நின்றிருந்தாள். அவள் அருகே சென்ற மது “என்ன ஆச்சுடி ஏன் இங்கயே நிக்கற” என்று கேட்க, அவளோ “அது………..இல்லடி அது வந்து……வந்து. …………” என்று அவள் தயங்கிய படியே நின்றாள்.அவளின் தயக்கத்தை பார்த்த மது “எதுக்கு இப்புடி தயங்கறா” என்ற யோசனையோடு பார்க்க மற்றவர்களும் பூஜாவிடம் “அடியே என்னடி ஆச்சு சொன்னாதானே எங்களுக்கு தெரியும்” என்று கேட்க, ‘இவங்ககிட்ட சொல்லாமையும் இருக்கமுடியாது சொன்னாலும் இமேஜ டேமேஜ் பண்ணிடுவாங்க எப்புடி போனாலும் அடி கன்பார்ம் பேசாம சொல்லிடலாம்’ என்ற முடிவிற்கு வந்தவள் அவர்களை பார்த்து இப்போதும் தயக்கத்துடனே “இல்லடி எனக்கு கொலம்பஸ் ரைடிங்னா பயம் அது சீசா மாதிரி போயிட்டு வரும்போது வயிறு என்னமோ பண்ணும், நீங்க வேற கரெக்டா அதையே செலக்ட் பண்ணி விளையாட போனீங்களா எனக்குதான் பயமாச்சே அதான்……………” என்று கூற மற்றவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பின் ‘கொல்’ என்று சிரித்தனர்.


தோழிகள் சிரிப்பதை கண்ட பூஜா “இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க” என்று கோபமாக கேட்டாள். “இல்ல இவ்வளவு பெரிய ஆளாகிட்ட இதுக்கு கூட பயமா” என்று ப்ரீத்தி கேலி பேச அவளை முறைத்த பூஜா “எனக்கெல்லாம் பயம் எதுவும் இல்லை வாங்க போகலாம்” என்று முறுக்கிக்கொண்டு முன்னே சென்றாள். அனைவரும் அவளை நக்கலாக பார்த்துக்கொண்டே சென்று அந்த கொலம்பசில் அமர அது மெதுவாக தனது இயக்கத்தை ஆரம்பித்தது.

முதலில் ஏனோ தானோ என்று அமர்ந்திருந்த பூஜா அதன் இயக்கம் அதிகம் ஆக ஆக அவளின் பயமும் அதிகமாகிக்கொண்டே இருந்தது ஒரு கட்டத்தில் அந்த கொலம்பஸ் முற்றிலும் தனது அசைவுகளை அதிகமாக்க பயந்தவள் “அபி …. அபி ” என கத்தினாள்.அபி அவளை கண்டுகொள்ளாமல் இருக்க பின்பு “சூர்யா......சூர்யா” என கத்தினாள். அருகில் இருந்த ப்ரீத்தி “என்னடி பயம் இல்லைனு சொல்லிட்டு இப்ப இந்த கத்து கத்துற காது வலிக்குதுடி அந்த பக்கம் திரும்பி கத்து என்று கிண்டல் செயதாள்.
பூஜாவோ “அடியே ஓவரா ஆடாதடி எனக்கும் ஒரு நேரம் வரும் அப்போ பத்துக்கறேன்டி உன்னை. அவஅவனுக்கு வந்தாதான் தெரியும் வயிற்று வலியும், தலை வலியும், என்ன கடுப்பு ஏத்தாம கம்முனு இருடி நானே என்னை பேலன்ஸ் பண்ணிக்க கத்தி கத்தி பயத்தை தள்ளி வைக்கிறேன் நீ வேற ஏன் நடுவுல வந்து டார்ச்சர் பண்ற”.

ப்ரீதியோ “என்னது பயத்தை கம்மி பண்ண கத்துரியா” என்று கூறியவள் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து “சரி சரி நீ கத்து” என்றுவிட்டு ரைடிங்கை ரசிக்க ஆரம்பித்தாள். பூஜா அனைவர் பெயரையும் ஏலம் விட்டுக் கொண்டே அந்த கொலம்பஸ் சவாரியை முடித்தாள் இறங்கிய பின் ஆசுவாசமாக கீழே வந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி நின்றவளை கண்ட மற்றவர்கள் “ஏண்டி இப்படி கத்துன” என்று கேட்க அவளோ தலையைத் தாங்கியபடி “கொஞ்ச நேரம் கம்முனு இருங்க எனக்கு தலையே சுத்துது” என்க, அருகில் இருந்த மது “ஏ அங்க பாரு உன்னோட ஆளு” என்றாள். உடனே பூஜா வேக வேகமாக திரும்பி “எங்க எங்க” என்று கேட்டாள்.

அவளை முறைத்துப் பார்த்த மது “இப்போ உன்னோட தலைசுத்தல் எல்லாம் எங்க போச்சு மரியாதையா வா” என்று அவளை இழுத்துக்கொண்டு ரோலர் கோஸ்டர் செல்ல அங்கு தேங்கி நிற்பது சூர்யா முறையானது. ஆனாலும் பூஜாவை சொன்னது போல் தான் தன்னையும் கேலி செய்வார்கள் என்று புரிந்து கொண்டவள் தனது பயத்தை மறைத்துக் கொண்டு ரோலர்கோஸ்டரில் ஏறி அமர அதுவும் படி படியாக வேகமெடுத்தது. அப்போதிலிருந்து அவள் கத்திய கத்து அனைவர் காதுகளையும் செவிடாக்கும் அளவு இருந்தது முக்கியமாக அவள் அருகில் அமர்ந்திருந்த ப்ரீத்தியின் காது அடைத்து விட்டது.
ரோலர் கோஸ்டர் நின்றவுடன் அனைவரும் கீழே வந்து அவளை முறைக்க ப்ரீத்தியோ பூஜாவை சுட்டி காட்டி அங்கதான் இவ கத்தி கத்தி ஒரு பக்க காதை பஞ்சர் ஆக்குனானு பாத்தா நீயும் ஏன்டி கத்தி என்னோட இன்னொரு பக்க காதையும் டேமேஜ் பண்ற . அய்யோ இங்க இருந்து போகற வரைக்கும் என்னோட காதிரெண்டையும் காப்பாத்திருடா புருஷோத்தமா என்று மேல் நோக்கி கும்பிட, சூர்யாவோ ப்ரீத்தி வேறு யாரையோ சொல்வது போல் வேறு பக்கம் திரும்பி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
ரோலர்கோஸ்டர் பயணத்திற்காக காத்திருந்தவர்கள் அனைவருமே அவளை ஒரு மார்க்கமாக பார்த்தனர். இதை கவனித்த அவளின் தோழிகள் அனைவரும் ஒரே நேரத்தில் அவளை “தூ” என்று துப்பினார்கள்.

“அடுத்து எந்த ரெய்டுக்கு போகலாம்” என்று அபி கேட்க தனக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று பயந்த ப்ரீத்தி “நம்ம ஏன் அந்த 5டி தியேட்டருக்கு போக கூடாது” என்று கேட்க மற்றவர்களும் சரி அங்கேயே போலாம் என்று கூறினார்.

அனைவரும் அங்கே சென்று அமர அங்கு ரோலர் கோஸ்டர் பயணம் போல் காட்சி அமைப்பு இருந்தது. அதைக் கண்டு அனைவரும் சூர்யாவை பார்க்க அவளோ “இங்கே நான் கத்த மாட்டேன்” என்று வீம்பாக கூற மற்றவர்களோ அவளை கேலியாக பார்த்துவிட்டு பார்க்கத்தானே போகிறோம் என்று கூறிவிட்டு தங்களது சீட்டில் அமர்ந்தனர். பின் படம் ஓட ஆரம்பிக்க அந்த படத்திற்கு ஏற்றார் போல் இவர்களது சீட்டுகளும் அசைய ஆரம்பித்தது. மும்முரமாக அந்த காட்சியமைப்பு ஓடிக்கொண்டு இருக்க அனைவரும் அந்த காட்சியோடு ஒன்றி போய் பார்த்து கொண்டு இருந்தனர்.

திடிரென்று அவர்கள் அருகில் “ஐயோ அம்மா” என்று ஒரு சத்தம் கேட்டது. அபியோ கிண்டலான குரலில் “இந்த மது மறுபடியும் ஏதோ பண்ணி இருக்கா” என்று கூற சூர்யாவோ “அடியே நான் நல்லா தான் இருக்கேன் வேற யாரோ விழுந்து இருக்காங்க” என்று கோபமாகக் கூறினாள்.”நீ இல்லனா வேறு யாரு” என்று அவர்கள் திரும்புவதற்கும், மின் விளக்குகள் அனைத்தும் எரிய விடவும் சரியாக இருந்தது..

யார் சத்தம் போட்டது என்று அவர்கள் அனைவரும் திரும்பி பார்க்க அங்கே கீழே விழுந்து கிடந்தாள் மது. அவள் விழுந்து கிடந்ததை கண்ட உடன் அனைவரும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தனர். தோழிகள் சிரிப்பதை கண்டு கடுப்பான மது மெதுவாக எழுந்து அவர்களை முறைத்து கொண்டே “இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க” என்று கீழே விழுந்த வலியோடு கேட்க அவர்களும் அவளின் முக சுருக்கத்திலேயே வலியை உணர்ந்தவர்களாக தங்களது சிரிப்பை நிறுத்தி கொண்டு “ஆமா நீ எப்படி விழுந்த” என்று கேட்டனர்.

மதுவும் அதே குழப்பத்துடன் “தெரியலடி நானும் நன்றாகதான் பார்த்துட்டு இருந்தேன் ஆனா எப்படி விழுந்தேன் என்றே தெரியல” என்று கூறினாள் வலி நிறைந்த குரலில். அவளின் பேச்சை கவனித்த பிரீத்தி “ஆமா நீ பெல்ட் போட்டியா இல்லையா” என்று கேட்டாள். மதுவோ அவளின் கேள்வியில் திருதிருவென விழித்துவிட்டு பின் “பெல்டா அது எங்க இருக்கு” என்று கேட்க, தலையில் அடித்துக் கொண்டவர்கள் அருகிலிருந்த பெல்ட்டை எடுத்து காமிக்க அவளோ “எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு இருக்கும்போதே ஆரம்பிச்சிருச்சு முன்னாடி இருந்த கம்பியைப் புடிச்சுக்கிட்டு பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.பெல்டு இருக்குன்னு யாராவது சொல்லி இருக்க வேண்டியதுதானே” என்று கேட்க தலையில் அடித்துக் கொண்டவர்கள் இன்னும் ரெண்டு பேர் தான் இருக்கோம்.டேமேஜ் ஆகாம நமக்கு என்ன வருதுன்னு பார்ப்போம் என்று கூறியபடி வெளியே வந்தாள் அபி.

அடுத்து அவர்கள் வேறு பக்கம் சுற்றி கொண்டு இருக்க அப்போது அவர்கள் கண்ணில்பட்டது ‘பப்பலோ டான்ஸ்’ கேம்.அதை பார்த்த ப்ரீத்தி “எனக்கு அதுல சுத்தணும்” என்று கூறினாள். மற்றவர்கள் அதன் அமைப்பிலேயே பயந்து “வேண்டாம்டி அது பார்க்கும் போதே பயமா இருக்கு வேண்டாம் சொன்னா கேளு” என்று அவர்கள் மறுத்தும் கேட்காமல் “இல்ல நான் ஒரே ஒரு தடவை சுற்றி பார்க்கறேன் முடிவு பண்ணிட்டேன் ப்ளீஸ்” என்று கெஞ்ச மற்றவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அடுத்து இவ டர்ன் தான் என்று நினைத்துக்கொண்டு சரி போ என்றனர். அவர்களின் நினைப்பை பொய்யாக்காமல் அந்த மாடு சுத்த ஆரம்பித்த பத்தாவது நொடியில் தூக்கி கீழே வீசப்பட்டு மல்லாக்க விழுந்து கிடந்தாள் ப்ரீத்தி.அதைப் பார்த்து அனைவரும் சிரிக்க, மெதுவாக எழுந்து வந்தவள் “இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க? இந்த கேம்ல எத்தனை பேர் விழுந்து இருக்காங்க நான் மட்டுமா விழுந்தேன்? சும்மா சிரிக்காம வாங்க” என்று வீம்பாக சொல்லிக்கொண்டு முன்னே செல்ல மற்றவர்களும் அவளை கேலியாக பார்த்தபடி பின்னே சென்றனர்.

அடுத்ததாக அவர்கள் சென்ற இடம் “கோஸ்ட் ஹவுஸ்”. உள்ளே செல்லும் முன்பே சூர்யா அனைவரின் கையை பிடித்து “அடியே வேண்டாண்டி எனக்கு பயமா இருக்கு நம்ம வேணா அந்த பக்கம் கண்ணாடி வீடு இருக்கு அங்க போகலாம்” என்று சொல்ல அவளை மேலும் கீழும் பார்த்தவர்கள்.பின் கிண்டலாக சிரித்து கொண்டு “நீதிடா.. நேர்மட….. நியாயம்டானு ….. எத்தன தடவ கருத்து சொல்லியே எங்க கழுத்தறுத்து சைட் அடிக்க விடாம பண்ணிருப்ப ஒழுங்கா உள்ள வா” என்று பூஜா இழுத்து செல்லும் போதுதான் அபி கவனித்தாள் தங்களின் பின்னால் யமுனாவின் குழு வருவதை. தோழிகளுக்கு அவர்கள் வருவதை கண்ணை காட்டி புருவம் ஏற்றி இறக்கி மௌனபாஷை பேச, அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்ட தோழிகளும் கட்டை விரலை உயர்த்தி சரி என்றவர்கள் வேகமாக பக்கத்தில் இருக்கும் கேன்டீன் உள்ளே சென்று சிலபல பொருட்களை வாங்கி கொண்டு பேய் வீட்டிற்குள் நுழைந்தனர்.

யமுனா பேய் வீட்டிற்குள் நுழைய போக அவளது தோழிகள் “உள்ளே போக வேண்டாம்” என்று தடுத்தனர். அவளோ “ஹேய் பேசாம இருங்கடி அந்த பஞ்ச பாண்டவிகள் இங்க போனதை பார்த்தேன் உள்ளே அவர்கள் பயப்படுவதை பார்த்து நான் கிண்டல் செய்ய வேண்டும். நான் ஓட்டுகிற ஓட்டில் அவர்கள் இந்த பள்ளியில் இருந்தே ஓட வேண்டும் அதற்கு நான் உள்ளே நடப்பதை தெரிந்து கொள்ள வேண்டும்” என்றவள் உள்ளே நுழைந்தாள். என்ன நடக்க போகிறதோ என்ற பயத்துடனே அவளது தோழிகளும் உள்ளே சென்றனர்.

முதலில் சென்ற ஐவர் குழு சில வேலைகளை செய்து விட்டு யமுனாவின் குழுவிற்காக காத்திருந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்த மறுநிமிடம் அங்கு முன்பக்கம் எரிந்து கொண்டிருந்த லைட்டை அணைத்தாள் சூர்யா.

திரும்பும் திசை எங்கும் இருள் சூழ்ந்திருக்க தன் பக்கத்தில் இருப்பவர்களின் முகம் கூட தெரியாத நிலை. யமுனாவிற்கு பயம் ஆரம்பித்தாலும் தோழிகளுக்கு காட்டாமல் மறைத்தவள் கெத்தாக உள்ளே செல்ல பூஜா மற்றும் மது இருவரும் தாங்கள் அணிந்திருந்த “ஷாலை” கோர்த்து இருவரும் இரு முனைகளை பிடித்து மறைவான இடத்தில் நின்று கொள்ள மேலே பார்த்து கொண்டு வந்த யமுனா குழு ஷாலில் தடுக்கி கீழே விழுந்தனர்.

கேன்டீனில் அவர்கள் வாங்கிய “டொமட்டோ ஷார்ஸை” அபி சரியாக அவர்கள் விழும் இடம் பார்த்து கொட்டி வைக்க அதிலேயே அனைவரும் விழுந்தார்கள் . முகம் முழுவதும் டொமெட்டோ சார்ஸ் ஒட்டி கொள்ள பிசுபிசுப்பாக இருப்பதை உணர்ந்தவர்கள் என்ன என்று தெரியாமலே ஓரளவு கைகளாலேயே துடைத்து கொண்டு மேலும் நடந்தனர்.

யமுனாவின் தோழி ரம்யா “அடியே இப்போக்கூட ஒன்னும் இல்ல வா அப்புடியே ஓடிடலாம்” என்க, பிடிவாதமாக அவர்களை உள்ளே இழுத்து சென்றாள் யமுனா.

அடுத்ததாக முடி அதிகம் வைத்திருக்கும் மதுவை ஒரு பக்கமாக திருப்பி நிற்க வைத்தவர்கள் அவள் முடியை பிரித்து இரு பக்கமும்விட்டு முகம் தெரியாத அளவுக்கு வைத்துவிட்டு மறைந்திருந்து நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர் . யமுனா மது நிற்கும் இடத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்க அவர்கள் அருகில் வருவதை உணர்ந்த மது சத்தமாக சிரித்து தலையை அசைத்து ரா…. ரா…..ரா….என்று பாட அவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.அதை பார்த்த ஐவர் குழு அவர்களுக்கு முன் வேறு வேறு திசைகளில் நின்று கொண்டு சிரிக்க ஆரம்பித்தனர் அவர்களின் சிரிப்பு “எக்கோ” போல் அங்கிருந்த சுவர்களில் எதிரொலிக்க யமுனா நடுங்கி போனாள்.

அடுத்ததாக அபி தன் கையில் இருக்கும் பவுடரை அவர்கள் இருக்கும் பக்கமாக ஊதிவிட்டாள். பயத்தில் இருந்தவர்கள் நல்ல வாசம் வருவதை உணர்ந்து மேலும் நடுங்கினர். அவளது தோழிகளில் ஒருத்தி “யமு ரஜினி சந்திரமுகி படத்துல பேய் வர்றதுக்கு முன் காத்துல மல்லிப்பூ வாசம் வரும்னு சொல்லிருக்காருடி அது மாதிரியே வாசம் வருதுடி “ என்று சொல்ல, ஏற்கனவே பயத்தில் இருந்த யமுனா “இப்போ நீ வாய மூடிட்டு வரல உன்னை இங்கயே விட்டுட்டு போயிடுவோம்” என்று கத்த அதற்கு மேல் அவள் வாயை திறக்கவில்லை.

யமுனாவின் பயந்த முகத்தை பார்த்த பூஜா “பாவம்டி போதும்” என்று சொல்ல மற்றவர்கள் அவளை முறைத்து “என்னடி உன் நாத்தனார காப்பாத்துறிய” என்றனர். உடனே பேச்சை மாற்றும் விதமாக “இங்க போதும்னு சொன்னேன். அடுத்து வேற இடத்தில் பார்த்து கொள்வோம்” என்று சொல்லி தப்பித்துக்கொள்ள மற்றவர்களும் ‘சரி’ என்று விட்டுவிட்டு வெளியே சென்று யமுனா குழு வர காத்திருந்தனர்.

ஒருவழியாக தட்டுத்தடுமாறி வெளியில் வந்தவர்களை பார்த்து ப்ரீத்தி வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க, மற்றவர்களும் சிரிக்க ஆரம்பித்தனர். யமுனாவோ எதற்கு சிரிக்கிறார்கள் என்று புரியாமல் தன் தோழிகளை பார்க்க அப்போதுதான் புரிந்தது அவர்களின் சிரிப்பிற்கான காரணம்.

ஆம், அவர்கள் கீழே விழும்போது ஒட்டிய “டொமட்டோ ஷார்ஸ் “ முகத்தில் அங்கங்கு ஒட்டி இருக்க அபி ஊதிய பவுடர் முகத்தில் அலங்கோலமாக அப்பி இருந்தது.ஒருவரை ஒருவரை அப்போதுதான் பார்த்தவர்கள் ஆ.. .என்று கத்தி கொண்டு முகம் கழுவ ஓடினர்.

யமுனா ஓடுவதை பார்த்த அபி சூர்யாவிடம் “பார் உன்னை அழ வைத்த ஓணான் முழு பேயாக மாறி இருப்பதை பார்” என்று சொல்லி அனைவரும் சிரிக்க அந்த சிரிப்பில் தோழியை அழ வைத்தவர்களை தண்டித்து விட்டோம் என்ற நிம்மதி இருந்தது.”சரி வாங்க அடுத்த விளையாட்டுக்கு போவோம்” என்று இழுத்து சென்றாள் சூர்யா.

அடுத்து வாட்டர் கேம்தானே என்று ஆர்வமாக அபி கேட்க, அனைவரும் “ஆமாம்” என்று தலையாட்டி குதித்து கொண்டு ஓடினர்.

அங்கிருந்து சுவிம்மிங் பூல் அமைப்பு கொண்ட தொட்டியில் ஒருவர் மேல் ஒருவர் தண்ணிர் அடித்துக் கொண்டும் கத்திக் கொண்டும் விளையாடிக் கொண்டிருந்தனர்.வெகுநேரம் தண்ணீர் விளையாட்டுகளில் தங்கள் நேரத்தை இவர்கள் செலவழித்து கொண்டிருக்க பிரீத்தி ரெஸ்ட் ரூம் சென்று வருவதாக சொல்லி எழுந்து சென்றாள்.

மற்றவர்கள் நீரில் விளையாண்டு கொண்டிருக்க ரெஸ்ட் ரூமுக்கு சென்றவள் பதற்றத்தோடு இவர்கள் அருகே ஓடி வந்தாள்.அவள் வேகமாக வருவதை கண்டவர்கள் “என்னடி ஆச்சு ஏன் இப்படி ஓடி வர” என்று கேட்க அவளோ “இல்லடி நான் ரெஸ்ட் ரூம் போனப்ப ரெண்டு பேர் பேசிட்டு இருந்தாங்க.அதை கேட்டு உங்ககிட்ட சொல்லலாம்னுதான் வேகமா வந்தேன்” என்றாள்.

“அப்புடி எந்த ரகசியத்தை நீ கேட்ட சொல்லு கேட்போம்” என்றாள் பூஜா. “அது……………” என்று இழுத்து பின் முகத்தை ஒரு மாதிரி வைத்து கொண்டு “நிறைய பேர் இந்த தண்ணீரிலேயே சூ சூ போயிடுவாங்களாம்.அப்புறம் எப்புடி அதுல இறங்கி விளையாடுறது” அப்புடினு அந்த பொண்ணு அவ பிரண்டுக்கிட்ட பேசிட்டிருந்தாள்.

ப்ரீத்தி சொன்ன அடுத்த நிமிடம் சூர்யா வேகமாக தண்ணீரைவிட்டு எழுந்து வெளியேறவும், அவர்கள் பின்னால் இருந்து “உவ்வாக்” என்ற சத்தம் கேட்டது. மற்றவர்களுக்கு திரும்பாமலே புரிந்துவிட்டது அது அபி தான் என்று.ஏனென்றால் விளையாடும்போது அவள் வாயினுள் நீர் போய்விட்டது என்று சொன்னதும் நினைவில் வந்தது.அதனால் அவள்தான் அருவருப்பில் வாமிட் செய்து கொண்டு இருக்கிறாள் என்று முடிவு செய்து கொண்டனர்.

வேகமாக அபியிடம் சென்ற மது “சரி சரி ஒன்னும் இல்லை வா” என்று சொல்லி மேலே அழைத்து சென்றனர்.தண்ணீர் குடிக்க கொடுத்தும் “உவாக் ….உவாக் என்று அருவெறுப்பில் வாந்தி வருவது போல் செய்து கொண்டே இருக்க அவளின் செயலில் கடுப்பான சூர்யா ப்ரீத்தியை பார்த்து “அவ காதுல விழற மாதிரியாடி சொல்லுவ”.ப்ரீத்தியோ “இல்லடி நான் அவசரத்துல பொதுவா சொல்லிட்டேன். அவளுக்கு வாமிட் வரும்னு மறந்துட்டேன் என்று பாவமாக கூறினாள்.

மதுவோ “சரி சரி விடு அஞ்சாவது ஆளுக்கும் சம்பவம் நடந்துருச்சு வாங்க கிளம்பலாம் என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.

அடுத்து எந்த கேம்க்கு போகலாம் என்று பூஜா கேட்க, டிராகன் வாயிலிருந்து சறுக்கி கொண்டு நீரில் விழுவது போல் இருக்கும் இடத்திற்கு சென்றனர். அதை பார்த்த ப்ரீத்தி “ஹேய் அதுல விளையாடலாம்” என்று சொல்ல சூர்யாவோ “ஏன்டி இப்போதான் தண்ணில எல்லாரும் என்ன பண்ணுறாங்கனு சொன்ன மறுபடியும் அங்கேயே குளிக்கலாம்னு சொல்ற? நோ நேர போய் டிரஸ் மாத்திட்டு வேற டிரை கேம் விளையாடலாம்” என்று சொல்ல அவளை மேலிருந்து கீழே பார்த்த அபி “அதுதான் முழுசா நெனஞ்சாச்சுல அப்புறம் முக்காடு எதுக்கு அது எல்லாம் முடியாது வா அதுல போய் விளையாடலாம் என்று கூப்பிட்டாள்.

“அடியே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வாமிட் வர மாதிரிதான் இருந்துச்சு இப்போ நிஜமா வந்துரும் என்று நக்கலாக சொல்ல கேட்க, அபியோ விடுறா… விடுறா…. அரசியல்ல இது எல்லாம் சகஜமப்பா என்று சொல்லி வரிசையில் நிற்க சென்றாள்.

சூர்யா மட்டும் போகாமல் அங்கேயே நிற்க மற்ற நால்வரும் அவளை கேள்வியாக பார்த்தனர். அவளோ “ச்சி…. ச்சி நான் வரலப்பா” என்று சொல்லிவிட மற்றவர்கள் தலையில் அடித்து கொண்டு சென்றனர்.

நால்வரும் அங்கு சென்று பார்க்க இவர்களுக்கு முன் யமுனா குழு நின்றிருந்தது இவர்களை பார்த்ததும் அவள் முகத்தை திருப்பி கொண்டு நின்றிருந்தாள். இவர்களும் எதுவும் பேசாமல் போய் வரிசையில் நின்று கொண்டனர். யமுனாவின் பின் மது அவளின் பின் பூஜா என்று நின்றிருந்தனர்.

ஒவ்வொருவராக இடைவெளி விட்டு சறுக்கலில் இறங்கினர். யமுனா முறை வந்து அவள் இறங்கும் போது அடுத்ததாக இருந்த மதுவை தள்ளிவிட்டாள் அபி . மது வேகமாக சறுக்கி கொண்டு சென்றவள் யமுனாவையும் தள்ளி கொண்டு விழ கீழ் இருக்கும் நீர் குளத்தில் “தொப்” என்று விழுந்தனர் இருவரும். மேல் இருந்து ஆர்வமாக எட்டி பார்த்து கொண்டு இருந்த மற்ற மூவரும் என்ன நடக்கிறது என்று பார்த்தனர். அங்கே யமுனா கீழ் இருக்க அவள் மேல் அமர்ந்திருந்தாள் மது.

“ஹய்யோ அம்மா ஏய் மது எந்திரி என்னமோ சோபால உட்க்கார்ந்து இருக்க மாதிரி உட்காந்து இருக்க” என்று என்று இருமி கொண்டே சொன்னாள். எதிர்பாராமல் மது வரவும் அவள் தண்ணீர் அடியில் சென்று மூக்கு, வாய் என்று நீர் சென்றிருந்தது அவளுக்கு அதனால் இருமி கொண்டு இருக்க மதுவோ பொறுமையாக “இருமா நான் என்னமோ ஆசைபட்டு உட்காந்து இருக்க மாதிரி சொல்ற பேலன்ஸ் பண்ணி எந்திரிக்கணும்ல” என்று சொல்லி வேண்டுமென்றே நன்றாக அவள் மேல் தன் பாரத்தை கொடுத்து எழுந்து “சாரி” என்று அப்பாவியாக சொல்லி விட்டு அந்த பக்கம் சென்றுவிட்டாள்.

யமுனாவோ “லூசு லூசு நமக்குன்னு எங்க இருந்துதான் வருதுங்களோ ச்சை”………….. என்று திட்டி கொண்டு நிற்க “தொப்” என்று அபி அடுத்து குதித்ததில் யமுனா முகத்தில் மீண்டும் நீராபிஷேகம் நடந்தது.யமுனாவோ “ச்ச…. குளோரின் வாட்டர் என் வாய்க்குள்ள போய்டுச்சு” என்று சொல்ல அபியோ “ஹேய் அது குளோரின் வாட்டர் இல்லை யூரின் வாட்டர்” என்று சொல்லி மதுவுடன் ஹைபை அடித்து கொண்டாள்.

யமுனாவோ “ச்சை…. . கருமம் த்து…… த்து… என்று துப்பிவிட்டு அபியை பார்த்து முறைக்க, அபியோ அவளை நக்கலாக பார்த்து சிரித்தவள் “நீ அந்த பக்கம் நகர்ந்திருக்கணும்ல, என் மேல் தப்பு இல்லை சீக்கிரம் அந்த பக்கம் போ அங்கு பார் அடுத்து ப்ரீத்தி வரா” என்று சொல்ல,மேலே நிமிர்ந்து பார்த்த யமுனா “ஹய்யயோ ஏற்கனவே மது என் மேல விழுந்து முதுகெலும்பு உடையர மாதிரி இருக்கு அடுத்து இவ விழுந்தா கன்பார்ம் நாம நெக்ஸ்ட் புத்தூர்தான் போகணும்” என்று மனதில் அலறியவள் வேகமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள். அவள் ஓடுவதை பார்த்த மற்றவர்கள் அனைவரும் வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தனர்.

அடுத்து “ரெயின் டான்ஸ்” செல்ல அங்கும் வர மாட்டேன் என்று அடம்பிடித்த சூர்யாவை இழுத்து கொண்டு சென்று மழை போல் வரும் இடத்தில் நின்று கொண்டு டான்ஸ் ஆடி ஒருவழியா டயர்ட் ஆகி நல்ல நீரில் குளித்து தங்களை சுத்தம் செய்து கொண்டு வேறு உடை அணிந்து கொண்டு பஸ் அருகில் வந்தனர். அதன் பின் அனைவரும் இரவு உணவை உண்டுவிட்டு சென்னையை நோக்கி தங்கள் பயணத்தை துவங்கினர்.

யமுனாவின் குழுவில் இருந்தவர்கள் “கோஸ்ட் ஹவுஸில்” ஏற்பட்ட அனுபவத்தால் இருட்டை பார்த்தாலே அலறி பஸ்சில் லைட்டை அணைக்க விடாமல் கொட்ட கொட்ட விழித்து கொண்டு வந்தனர். அவர்களை பார்த்து தங்களுக்குள் சிரித்து கொண்ட ஐவரும் ஆடிய களைப்பில் நிம்மதியாக உறங்கி போயினர்.


அடுத்த நாள் சென்னை வந்து சேர்ந்தவர்கள் பின் தங்களது இயல்பு வாழ்க்கையில் பொருந்தி விட்டனர்.

வாழ்க்கை அதுவும் சின்ன பிள்ளை வாழ்க்கை வரமானது அதனால்தான் இன்றளவும் நாம் அனைவரும் யோசிப்பது சின்ன பிள்ளையாகவே நாம் இருந்து இருக்கலாம் என்று. சிறு வயது எந்த பிரச்னையையும் சந்தித்துவிட்டு ஆற்று நீர் போல் அடுத்ததை நோக்கி ஓட ஆரம்பிக்கும். ஆனால் பெரியவர்கள் நடந்த நிகழ்வையே யோசித்து மனதில் அந்த கசப்பான நிகழ்வுகளை தேக்கிவைத்து மனதையே சாக்கடையாக மாற்றி வைத்திருப்பார்கள். இதே நிகழ்வுதான் இங்கும் நடந்தது கசப்பான சம்பவங்களை அவர்கள் மறந்து அடுத்து என்ன என்ற வாழ்க்கையின் ஓட்டத்தை பார்க்க ஐவரும் தயாராகிவிட்டனர்.

இப்படியே நாட்கள் நகர ஒருவாறு இவர்களது பள்ளிப்படிப்பு முடியும் நேரம் வந்தது. படிப்போடு சேர்ந்து கலையிலும் ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு வருடா வருடம் தங்களது திறமைகளை காட்டினர். இவர்கள் சுட்டியாக இருந்தாலும் இவர்களது திறமையை அங்கிருந்த ஆசிரியர்கள் தட்டிக் கொடுக்க மறக்கவில்லை இதோ இவர்களது பள்ளி நாட்களும் இனிதாக நிறைவு பெற்றது


- வசந்தம் வீசும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top