வண்ணங்களின் வசந்தம் -21

Advertisement

சுதிஷா

Well-Known Member
received_3448744661922006.jpeg
அத்தியாயம் -21

காரில் ஏறிய ஆதிக்கு மீண்டும் ஒரு முறை தன்னை தேடி அலைப்புறும் அபியின் விழிகளை பார்க்க ஆசை வர, என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தான். அப்போது கோவிலின் உள்ளே இருந்தே மகனின் செயலை கவனித்து கொண்டிருந்த அவன் தந்தை கிண்டலான குரலில் “என்னப்பா வண்டி ஸ்டார்ட் ஆகலையா”என்று கேட்க, அவரின் கேள்வியில் கண்கள் மின்ன பார்த்தவன் “ஆமாம்” என்று சொல்லவந்துவிட்டு தந்தையின் முகத்தில் இருந்த கிண்டலை புரிந்து அசடு வழிய சிரித்தான்.மகனை மென் புன்னகையுடன் பார்த்தவர் வண்டியில் இருந்து இறங்கியவர் தன் மற்றொரு காரை எடுத்து வர சொல்லி டிரைவருக்கு அழைத்து சொன்னார்.

தந்தையின் செயலில் மகிழ்ந்தவன் “உங்க தெளிவுக்கு, மகன் மேல இருக்க அக்கறைக்கு, மருமகளை சீக்கிரம் பார்க்கணும்னு நினைக்கற அந்த மனசுக்கு டேக் அ பவ்” என்று சொல்லி கைகளை சுழற்றி தலையை குனிந்தவனை சிரிப்புடன் பார்த்த அவனது தந்தை நீ எப்பவும் சிரிச்சுட்டே இருந்தாலே போதும் என்றுவிட்டு மற்றொரு காருக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

தந்தை கூறியதை கேட்டு சிரித்தவன் காரில் இருந்து இறங்க நினைத்த நேரம் அபி வேகமாக கோவிலில் இருந்து வெளியில் வருவதை பார்த்து அப்படியே அமர்ந்தான். வெளியில் வந்தவள் ஒரு ஆட்டோவை பிடித்து மதுவின் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

ஆட்டோவில் இருந்தவாறே தனது மற்ற தோழிகளுக்கு கான்பிரன்ஸ் கால் போட்டவள், எடுத்த எடுப்பிலேயே “ஹலோ நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க, எல்லாரும் என்ன வேலை பார்த்துகிட்டு இருந்தாலும் அப்படியே விட்டுட்டு உடனே மது வீட்டுக்கு வாங்க. அவ ஏதோ எமர்ஜென்சினு போன் பண்ணி சொன்னா,என்னனு தெரியல” என்றாள்.
அப்பொழுதுதான் ஆசையாக ஒரு லட்டை எடுத்து வாயில் வைக்க போன ப்ரீத்தி எடுத்ததை கீழே வைக்கிறதா இல்லை வாய்க்குள்ள வைக்கிறதா என்று யோசித்தவள் அதை அபியிடமே கேட்க எண்ணி “அப்போ என் கையில இருக்க லட்டை அப்படியே வச்சா உதிர்ந்து போய்டுமே என்ன பண்ணலாம்” என்க,


அபியோ கோபமுற்றவள் “வந்தேன் வச்சுக்கோ சாப்பிட வாய் இல்லாம பண்ணிடுவேன் பாத்துக்கோ, நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் நீ விளையாண்டுட்டு இருக்கியா” என்று திட்டினாள்.

பூஜா, “அடே சும்மாவே அவங்க வீட்ல நம்மள சேர்க்க மாட்டாங்க, இன்னைக்கு ஏதோ எமர்ஜென்சினு வேற சொல்ற, அவங்க நம்மள உள்ள விடாலனா என்ன பண்றது” என்று குழம்பியபடியே கேட்க.சற்று நேரம் அமைதியாக இருந்த அபி “அதெல்லாம் பாத்தா முடியுமா முதல்ல போவோம், அங்க போய் நிலமை என்னன்னு பார்த்துக்கலாம்” என்றாள்.
சூர்யா “சரிடி நான் இங்க பக்கத்துல ஒரு புக் ஷாப் வந்து இருக்கேன் அப்படியே வந்துடறேன்” என்றாள்.


அபி “எங்க இருக்க புக் ஷாப்” என்று கேட்டு தெரிந்து கொண்டவள் “சரிடி , நான் ஆட்டோல அந்த வழியாத்தான் வருவேன் கரெக்ட்டா அந்த ஷாப்கிட்ட இறங்கிக்கறேன்.நீ அங்கேயே நில்லு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்” என்று கூற சூர்யாவும் “சரி” என்றவள் அபியின் வரவுக்காக காத்திருந்தாள்.
அபி வந்தவுடன் இருவரும் சூர்யாவின் ஸ்கூடியிலேயே மது வீட்டிற்கு வேகமாக சென்றனர்.அபி ஆட்டோவில் ஏறியதில் இருந்து பின் தொடர்ந்து வந்த ஆதியும் அவர்கள் வண்டியை பாலோ பண்ண ஆரம்பித்தான்.


அபி, சூர்யா இருவரும் மதுவிற்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என்ற யோசனையுடன் சென்று கொண்டிருக்கும்போது, இவர்கள் வாகனத்தின் அருகில் வந்த மற்றொரு வாகனத்தில் இருந்த இரு நபர்கள் இவர்களைக் கேலி செய்யும் விதமாகவும் அவர்கள் வாகனத்தை நடுவில் விட்டு பயமுறுத்தி கொண்டும், அவர்கள் அருகில் சென்று கத்தி கொண்டும் வந்தனர். இதில் ஏற்கனவே கடுப்பில் இருந்த அபிக்கு மேலும் கடுப்பை கிளப்ப, தற்போதைக்கு மதுவை காண்பதே முக்கியமானதாக நினைத்தவள் அவர்களை கண்டுகொள்ளாமல் வேகமாக கடந்து சென்று கொண்டிருந்தாள்.

இவர்கள் செல்லும் நேரம் அந்த சாலையில் சிக்னல் போட்டு விட வேறு வழி இல்லாமல் எரிச்சலோடு நின்று கொண்டிருந்தாள் அபி.

அப்போது இவர்கள் அருகில் வந்த அந்த பைக் நபர்களில் ஒருவன் பின்னால் அமர்ந்திருந்த சூரியாவின் காலை மிதித்து விட அவளோ வலியில் முகத்தை சுருக்கினாள்.இது ஏற்கனவே கடுப்பில் இருந்த அபிக்கு பெரும் கோபத்தை கிளப்ப “டேய் அறிவு இருக்கா உங்களுக்கு இப்படித்தான் வண்டி ஓட்டிவீங்களா, கொஞ்சம் கூட மேனர்ஸ்ங்கறது கிடையாது” என்று திட்ட அவனோ “பார்ரா மேடம் தாவணி கட்டின ஜான்சி ராணி சண்டைக்கு எல்லாம் வருது” என்று நக்கல் பேசினான்.

அதில் கோபம் கொண்ட அபி சூர்யாவிடம் வண்டியை பிடிக்க சொல்லிவிட்டு இறங்கியவள் வேகமாக முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியபடி “என்னடா ஓவரா பேசிக்கிட்டு இருக்க, அப்படியே வாய்லயே குத்துவிட்டேன் வச்சுக்கோ, பல் எல்லாம் செதரிடும்” என்று கத்த ஆரம்பித்தாள்.

ஆதி ஆரம்பத்தில் இருந்தே அந்த இருவரின் செயலை கண்டு கோபத்தில் இருந்தவன்.அபி வண்டியை விட்டு இறங்குவதையும் அந்த இருவரும் அவளை கிண்டலாக பார்ப்பதையும் கண்டு கோபம் அதிகமாக தனது காரில் இருந்து இறங்கி வேகமாக அவர்கள் இருக்கும் இடம் நோக்கி சென்றான்.

அபி திட்டவும் கோபம் கொண்ட அந்த இருவரில் ஒருவன் வண்டியில் இருந்து இறங்கி அபியை பார்த்தவாறு வர, அவளும் அவனை எதிர் கொள்ள தைரியமாக நின்றாள்.ஆனால் வம்பிழுத்தவனின் பார்வை அபியின் பின்னால் உயரத்திற்கேற்ற உடல் கட்டுடன் ஒருவன் கோபமாக ஷர்ட்டின் கையை மடித்து விட்டபடியே வருவதை கண்டு அரண்டவன் அவன் தங்களை அடித்தால் அவ்வளவுதான் என்று எண்ணி அபி கத்திக் கொண்டிருப்பதை சற்றும் கவனிக்காமல் அங்கிருந்த வண்டியில் வேகமாக ஓடி ஏறி சிக்னல் விழுவதற்கு முன்னே கிளம்பிவிட்டான்.

ஆதி அவன் ஓடுவதை கண்டு இளக்காரமாக சிரிக்க, அபியோ “என்ன இவன் சும்மா பேசினதுக்கே பயந்து ஓடுறான்” என்று மனதிற்குள் எண்ணியவள், சூர்யாவை பார்த்து “எப்படி பயந்து ஓடுறாங்க பாத்தியா, நானும் இந்த ஏரியாவில ரவுடியா பார்ம் ஆகிட்டேன் போல” என்றாள்.

இதை கேட்ட ஆதி “எது உன்னை பார்த்து பயந்து ஓடுனாங்களா சரிதான் போ” என்று எண்ணி கொண்டிருக்கும்போதே, சூர்யா “அடியே அங்கு ஏதோ எமர்ஜென்சினு கால் பண்ணி சொல்லிட்டு இப்போ நீ இங்க ரவுடி ஆகிட்டேன்னு செலிபிரேட் பண்ணிட்டு இருக்கியா வா வா போகலாம்” என்க.

அப்பொழுதுதான் மதுவின் ஞாபகம் வர பெற்ற அபியும் அசடு வழிய சிரித்துவிட்டு வேகமாக ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அபி செல்வதை பார்த்த ஆதித்யா “ஹம் நம்ம ஆளுக்கு கையும் வாயும் நீளம்தான் போலயே”என்று பெருமூச்சு விட்டவன் பின் சிறு சிரிப்புடன் “பரவால்லை பரவால்லை சமாளிச்சுக்கலாம்” என்று முணுமுணுத்தபடியே அங்கிருந்து சென்றான்.


நால்வரும் சரியான நேரத்திற்கு மதுவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அங்கு வீட்டில் இருந்த அலங்காரங்களைக் கண்டு அனைவரும் திகைத்துப் போய் நின்றிருந்தனர்.

சூர்யா, “என்னடா இது வீட்டை இப்படி டெக்கரேட் பண்ணியிருக்காங்க என்ன விசேஷமா இருக்கும்” என்ற யோசனையோடு கேட்க,

ப்ரீத்தியோ,”ஒருவேளை அங்க இருந்த பழைய கிழவி செத்து போயிருச்சோ,அய்யய்யோ பாட்டி…” என்று கத்தியபடி உள்ளே செல்ல முனைய அவளை பிடித்து இழுத்த அபி அவள் தலையில் கொட்டி “யாராவது இறந்துட்டா உங்க ஊர்ல இப்படித்தான் டெக்கரேட் பண்ணுவாங்களா லூசு வேற ஏதோ பங்க்ஷன் போல அதுதான் இப்படி டெக்கரேட் பண்ணியிருக்காங்க” என்று யோசனையாக கூறி, “சரி வாங்க உள்ளே போகலாம்” என்று செல்ல முனையும் பொழுது நடுவில் வந்து குதித்தான் மதுவின் கடைசி அண்ணன் ஆதர்ஷ்.

நால்வரும் அவனை கோபமாக பார்க்க அவனோ “என்ன எல்லாரும் எங்க வந்து.இருக்கீங்க” என்று கேட்டான்.

அபி, “அண்ணா மதுவை பாக்கலாம்னு வந்தோம்” என்று கூற, அவளை கிண்டலாக பார்த்தவனோ “அதெல்லாம் பார்க்கமுடியாது கெளம்புங்க கெளம்புங்க”என்று திமிராக கூறினான்.

உடனே கோபம் கொண்ட நால்வரும் ஒரே குரலில் “ஏன் ஏன் பார்க்க கூடாது” என்று கேட்டனர்.
அபி, “ இங்க எதுக்கு இவ்வளவு டெக்கரேஷன், ஏதாவது பங்க்ஷனா”என்று கேட்டாள்.
ஆதர்ஷோ “அதை உங்ககிட்ட சொல்ல முடியாது.ஐ சே வெளியே ஜாவ் அவுட்” என்று எகத்தாளமாக கூற அவனை முறைத்துப் பார்த்த அபி “ஏன் சூர்யா அன்னைக்கு ஏதோ ஒரு மாலுக்கு போனோமே அது எந்த மால்” என்று கேட்க சூர்யாவும் ஏதோ யோசிப்பது போல் பாவனை செய்தாள்.


ஆதர்ஷ் அதுவரை திமிராக நின்று கொண்டு இருந்தவன், சூர்யா யோசித்து “ஹம்…. ஞாபகம் வந்திருச்சு பீனிக்ஸ் மால்” என்று சொன்ன அடுத்த நிமிடம் திகைத்துப் போய் நின்றான்.அத்தோடு நிறுத்தாமல் மேலும் “அதுவும் கார்னர் டேபிள்” என்று சூர்யா சொல்ல ஆதர்ஷ் கலவரமாக அவர்களை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

பூஜா, “ஆமா அந்த மால்ல யாரோ ஒரு பிங்க் கலர் டிரஸ் போட்டு உட்கார்ந்து இருந்தாங்களே”என்று கூறி நிறுத்த நடுவில் வந்த ப்ரீத்தி “ஆமாடி நான் கூட பார்த்தேன் ரெண்டு பேரும் ரெண்டு ஜூஸ் வாங்கி குடிக்க மாட்டாங்க கஞ்ச பிசினாரி. ஜூஸ் வாங்க கூட துப்பில்லாம ஒரு ஜூஸ் வச்சி குடிச்சிட்டு இருந்துச்சுங்க ரெண்டும்” என்க,

ஆதர்ஷ் திருதிருவென விழிக்க ஆரம்பித்தான் பின் திணரியவாறே “அது அது வந்து” என்று இழுத்து கொண்டிருக்கும்போதே, அபி “அதான் வந்தாச்சே அப்புறம் சொல்லுங்க என்ன ஆச்சு” என்று கேட்டாள்.

பின் “இங்க பாருங்க அண்ணா என்ன இருந்தாலும் நீங்க மதுவுக்கு அண்ணனாகிட்டிங்க, மதுக்கு மட்டுமா நீங்க அண்ணன் எங்க எல்லாருக்கும் நீங்கதான் அண்ணன் அதனால எதையும் மறைக்காம எங்ககிட்ட சொல்லுங்க பார்க்கலாம்” என்று சூர்யா கிண்டலாக சொல்ல,

பூஜாவோ நக்கலான குரலில்“என்ன லவ்வா” என்றாள். அவனும் “ஆமாம்” என்று சிறு வெட்கத்தோடு கூற சூர்யாவோ தோழிகளுக்கு கண் காட்டியவாறே ஒன்றும் தெரியாதது போல், “அண்ணா அந்த பொண்ணு பெயரென்ன எத்தனை வருஷம் லவ்” என்று கேட்டாள்.

ஆதர்ஷும் அதுதான் எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு போலயே என்று அனைத்தையும் உளற ஆரம்பித்தான். “அவ பேரு ரோஷினி ரெண்டு வருஷமா லவ் பண்றோம்” என்று கூற,

“ஹேய்” என்று குதித்த அபி சூர்யாவை பார்த்து “நான் தான் சொன்னேன்ல அது பிங்க் கலர் சுடிதார்தான், ஷர்ட் இல்லைனு நீ நம்புனியா இப்ப பாரு அண்ணா வாயாலேயே ஒத்துக்கிட்டாரு” என்று சொன்னாள்.

அதில் அதிர்ந்தவன் “அப்போ நீங்க கண்டு பிடிக்கலையா நானாதான் ஒலரிட்டணா என்று கேட்க “எஸுஉ…… “ என்று கோரஸாக சொன்னவர்கள், இப்போது மிதப்பாக ஆதர்ஷை பார்த்து “இப்ப நாங்க உள்ளே போகலாமா” என்றனர்.

ஆதர்ஷ் சிறிது நேரம் விழித்தவன் பின் ஒரு முடிவிற்கு வந்தவனாக “முடியாது வெளியில போங்க” என்றான்.

அதில் கடுப்பான பூஜா தன் கையில் இருந்த மொபைலில் ரெகார்ட் செய்ததை பிளே செய்ய அதில் ஆதர்ஷ் பேசிய அனைத்தும் ரெகார்ட் ஆகி இருந்தது.”இப்போ சொல்லுங்க” என்று எகத்தாளமாக கேட்க தலையில் கை வைத்தவன் “ஏன்மா இப்படி பண்றீங்க.உங்களை உள்ள விட்டா, அவங்க என்ன வெளியில் தள்ளிடுவாங்க” என்று சோகமாக சொல்ல.

அதை கண்டுகொள்ளாத அபி “எங்கள உள்ள விட்டா கொஞ்ச நேரம் தான் நீங்க வெளிய நிப்பீங்க, உள்ள விடலனா லைஃப் புல்லா வெளியில் தான் இருப்பீங்க யோசிச்சு சொல்லுங்க”என்று கூற அவனோ சற்று யோசித்தவன் “சரி நீங்க இங்கேயே நில்லுங்க.நான் உள்ள போயிட்டு வந்துடறேன்” என்றான்.

அதை மறுத்த தோழிகள் “அதெல்லாம் முடியாது, நீ உள்ள போனா அப்படியே ஓடிப்போயிடுவ உன்னை எல்லாம் நம்ப முடியாது.அதனால உன் கூட நாங்களும் வருவோம்” என்று கூற அவனும் வேறு வழி இல்லாமல் நால்வரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.

ஆதர்ஷ் பயத்துடனேயே நால்வரையும் அழைத்துக்கொண்டு உள்ளே வர அவர்களை கண்ட அவனது பெற்றோர்கள் அதிர்ந்து போயினர்.முதலில் சுதாரித்த அவனது தந்தை “டேய் இங்க வாடா” என்று அவனை தனியாக இழுத்துச் சென்று “இவங்கள எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த” என்று கேட்க.

அவனோ “இல்லப்பா அது படிப்பு சம்பந்தமாக ஏதோ பேசணும்னு சொன்னாங்க அதனாலதான்” என்று நிறுத்தினான். அவரோ “லூசு லூசு எங்கிருந்து தான் உன்ன உங்க அம்மா பெத்தாளோ தெரில, ஒன்னுக்கும் துப்பில்ல, இவங்க வந்தா பங்க்ஷனையே கெடுத்துடுவாங்கன்னுதானே மறைச்சு மறைச்சு பண்றோம்.இப்ப அவங்களையே வெத்தல பாக்கு வச்சு அழைக்காத குறையா,உள்ள கூட்டிட்டு வந்திருக்க” என்று திட்டியவர் மனைவியிடம் திரும்பி “எப்படி பையன பெத்து வச்சிருக்கா பாரு” என்று சாட, அவனது அம்மாவோ அவனை முறைத்து “என்னடா இது” என்று கேட்டார்.

ஆதர்ஷோ மனத்தினுள்ளேயே “ஹ்ம்ம்….. நானா இதுங்கள வர சொன்னேன் அம்புட்டும் வால் இல்லா வானரங்கள், பாக்கெட்ல எவிடென்ஸ் வச்சுட்டு சுத்துதுங்க இதுல வெத்தலை பாக்கு ஒன்னுதான் குறை”என்றுவிட்டு மேலும் “என்னை பெத்ததுல இவருக்கு ஏதோ சம்மந்தமே இல்லாத மாதிரி பேசுறாரு” என்று சொல்லிக்கொண்டே தாயிடம் திரும்பியவன் “இல்லமா படிப்பு விஷயம் அதனாலதான்” என்று கூறியவன் மேலும் உடனடியாக யோசித்து “அது ஒன்னும் இல்லம்மா நம்ம மது பார்க்க சோகமா இருக்கா இல்லையா, அதான் இவங்க எல்லாம் வந்தா, கலகலப்பா இருப்பா அதான் கூட்டிட்டு வந்தேன்” என்று அப்பாவி போல் கூற அவரும் “ஆமாங்க ஆண்டாளும் நேத்துல இருந்து முகம் வாடி இருந்துச்சு.இப்போ இந்த புள்ளைங்கள பார்த்தா நம்ம புள்ள சந்தோசமா இருக்குங்க. நம்ம பையன் நல்லதுக்காகத்தான் பண்ணி இருக்கான் சும்மா அவனை திட்டிட்டே இருக்காதிங்க என்றார்.

உடனே அவர்கள் இருவரையும் முறைத்த மதுவின் தந்தை “உங்களுக்கு என்ன அறிவு கெட்டுப் போச்சா அதுங்க வந்தா விசேஷத்தை நடக்க விடாதுங்கனு சொல்றேன், நீங்க என்னனா உளறிட்டு இருக்கீங்க.முதல்ல போய் ஏதாவது சொல்லி அவங்கள அனுப்பற வழிய பாருங்க” என்று திட்ட,ஆதர்ஷ் விழிபிதுங்கி போய் நின்றான்.

அப்போது அங்கு வந்த மது “என்னப்பா இது வீட்டுக்கு வந்த என்னோட பிரண்ட்ஸ்ங்ககிட்ட இப்படிதான் பேசுவீங்களா.உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி நான் பங்ஷனுக்கு ஒத்துக்கிட்டு ரெடி ஆகிட்டன்ல அது மாதிரி என்னோட ஃபங்ஷன்க்கு,என்னோட ஃப்ரெண்ட்ஸ்ங்க வந்திருக்காங்க” என்று சொல்லி விட்டு நால்வரையும் அவளது அறைக்கு அழைத்து சென்றாள்.

செல்ல மகள் சொல்லிய பிறகு மறு பேச்சு எடுக்காத மதுவின் தந்தை அமைதியாக ஹாலில் நின்றவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றனர்.

அறைக்குள் சென்ற தோழிகள் மதுவை பார்த்து கண்கள் தெறித்து விழும் அளவிற்கு விழித்தனர். ஏனென்றால் கோவிலில் இருக்கும் அம்மன் சிலையை போல் பட்டு புடவையும், நகைகளையும் அணிந்திருந்தாள்.

அவளை பார்த்து ஆச்சரியமான சூர்யா “என்னடி இது அலங்கார பொம்மையாட்டம்” என்று கேட்டாள்.

அபியும் யோசனையான முகத்துடன் “என்னடி இது இங்க என்ன நடக்குது.உங்க அப்பா ஏதோ பங்ஷன்னு சொல்லறாரு, நீ என்னடானா நகை கடை விளம்பரத்துக்கு நடிக்கற மாதிரி இவ்ளோ நகை போட்டுட்டு இருக்க” என்க.

பூஜா, “ஆமாடி என்ன ஆச்சு எதுக்காக எங்களை உடனே வரச்சொன்ன” என்று கேட்க,முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த மது “எங்கள் வீட்டில் எனக்கு தெரியாமல் கல்யாணம் நிச்சயம் பேசியிருக்கிறாங்க.பொண்ணு பாக்குற பங்ஷன் கூட இல்ல, நேரடியா இன்னைக்கு நிச்சயம் பண்ண வராங்க” என்று சொல்ல தோழிகள் அனைவரும் அதிர்ந்து போயினர்.

முதலில் அதிர்ச்சியில் இருந்து விலகிய ப்ரீத்தி “என்னடி இது அநியாயமா இருக்கு முதல்ல பொண்ணு பார்க்க வருவாங்க அப்ப டீ, கேசரி, பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தருவாங்க அதை சாப்பிட்டு அதுக்கப்புறம்தான் நிச்சயம் பண்ணுவாங்க.நீங்க என்னனா டைரக்ட்டா நிச்சியம்னு சொல்லறீங்க, அப்போ பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் எனக்கு தர மாட்டீங்களா” என்று கேட்டாள்.

உடனே அவள் தலையில் கொட்டிய பூஜா “அடியே அவ எவ்ளோ சீரியஸா சொல்லிட்டு இருக்கா, நீ என்னடானா எப்ப பார்த்தாலும் விளையாண்டுட்டு பேசாம இரு” என்று அதட்டிவிட்டு மதுவிடம் திரும்பி “நிஜமா உனக்கு இன்னைக்கு நிச்சயன்ற விஷயம் தெரியாதா” என்று கேட்டாள்.

மதுவின் கண்கள் கலங்கி இருக்க ‘இல்லை’ என்று மறுப்பாக தலையசைத்தவள் “காலைல தான் இந்த சேலைய கொண்டு வந்து கொடுத்து இன்னைக்கு உனக்கு நிச்சயம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க கிளம்பி ரெடியா இருன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.திடிர்னு சொல்லவும் எனக்கு என்ன பண்றதுனே தெரில, யாராவது ஒருத்தர் கூட இருந்துட்டே இருந்தாங்க பாத்ரூம்ல இருந்துதான் உனக்கே கால் பண்ணுனேன்” என்று சோகமாக கூற தோழிகள் அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகி போனது.

மேலும் மது கண்ணீர் குரலில் அபியின் கையை பிடித்து கொண்டு “எனக்கு இப்பவே கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லடி, ஏற்கனவே இங்க தங்க கூண்டுல இருக்க கிளி மாதிரி வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்கறாங்க.

ஒரு சின்ன விஷயம் கூட போராடி வாங்க வேண்டியதா இருக்கு காலேஜ்ல மட்டும்தான் உங்க கூட ப்ரீயா என்ஜாய் பண்றேன்.

இந்த வீட்ல எனக்கு பாசம்ங்கற விலங்கை மாட்டி, சுயமா எதையும் செய்ய விடாம பண்ணிட்டாங்க எதிர்த்து பேசவும் முடியல, இப்ப கல்யாணம் பண்ணி அனுப்பிவிட்டாங்கனா அந்த வீட்ல இருக்கவங்க எப்படி இருப்பாங்கனு எனக்கு தெரியல.பிறந்து வளர்ந்த வீட்லயே என்னை யாரும் புரிஞ்சுக்கல அவங்க எப்படி இருப்பாங்கன்னு தெரியல,எனக்கு ரொம்ப பயமா இருக்குடி” என்று வருந்த அபிக்கு கோபமாக வந்தது உடனே வேகமாக மதுவின் தந்தையிடம் சென்றவள். “இது உங்களுக்கே நல்லா இருக்கா படிக்கிற பிள்ளைக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க” என்று கேட்க அவரோ “என் பொண்ணுக்கு என்ன பண்ணனும் எனக்கு தெரியும் தேவையில்லாம இந்த விஷயத்தில் நீ தலையிடாதமா” என்றார்.

அபி மேலும் கோபமாக ஏதோ பேச போக அவள் கையை பிடித்து பேச வேண்டாம் என்று சைகை செய்த சூர்யா அவரிடம் “இல்லப்பா இவ்ளோ சின்ன வயசுலயே…..” என்று இழுத்தவள் பின் “அவளுக்கு கொஞ்சம் பொறுப்பு வரட்டுமேப்பா. அதுக்குள்ள என்ன அவசரம்” என்று பொறுமையாக கேட்க,

அவரோ “இல்லம்மா நீ சொன்னா புரிஞ்சுப்ப, எங்களுக்கு இருக்கறதே ஒரே பொண்ணு, அவ படிச்சு வேலைக்கு போய் எங்களுக்கு சம்பாதிச்சு கொடுக்கணும்னு என்ன அவசியம் இருக்கு.இப்போ வர்றவங்க ரொம்ப நல்ல குடும்பம் மாப்பிள்ளையும் தங்கமானவரு அது எல்லாம் விசாரிச்சுதான் நாங்க முடிவு பண்ணியிருக்கோம். அதுமட்டும் இல்லாம எங்க குடும்பத்தை பத்தி தெரிஞ்சு தானா வந்த சம்பந்தம் இது. இவங்க மதுவ ராணி மாதிரி பாத்துப்பாங்க” என்றார்.

பூஜா, “அப்பா அதுக்காக உடனே மேரேஜ் வேண்டாமே, இன்னும் ரெண்டு வருஷத்துல படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம்….” என்று இழுக்க, அவளை அழுத்தமாக பார்த்தவர் “முடியாது” என்றுவிட்டார்.

தோழிகள் நால்வரும் மாறி மாறி பேசியும் கேட்காதவர் தனது கருத்தில் பிடிவாதமாக இருந்தார். முடிஞ்சா இங்க இருங்க இல்லை கிளம்பிட்டே இருங்க” என்று சொல்லியவரிடம் வேறு ஒன்றும் சொல்ல முடியாமல் தோழிகள் நால்வரும் வாடிய முகத்துடன் மதுவின் அறைக்கு வந்தனர்.

அறைக்குள் வந்த தோழிகளின் முகத்தை மது ஆவலாக பார்த்து “என்னடி அப்பா இந்த கல்யாணத்தை நிறுத்த ஒத்துக்கிட்டாரா” என்று கேட்க அவர்களோ வாடிய முகத்துடன் “இல்லை” என்று தலையாட்டி விட்டு உட்கார்ந்து விட்டனர்.மது கண்கள் கலங்கிய நிலையில் அமைதியாக அமர்ந்துவிட்டாள்..

அனைவரும் வெகுநேரம் வரை அமைதியாக அமர்ந்திருக்க அவர்களின் முகத்தையே மாற்றி மாற்றி பார்த்த ப்ரீத்தி “இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருக்க போறீங்க” என்று கேட்க, அதில் முதலில் தன்னை சமாளித்துக் கொண்ட பூஜா “ஆமா ஆமா எப்படியும் இன்னைக்கு நிச்சயம் நடக்க போறது கன்பார்ம். இவ மட்டும் புடிக்கல புடிக்கலனு சொல்லிட்டு ஃபுல் மேக்கப்புல இருக்கா.நம்ம மட்டும் எப்படி இருக்கோம் பாரு” என்று சொல்ல.

பூஜாவின் பேச்சை ஆமோதிப்பது போல தலையை ஆட்டிய சூர்யா “ஆமா ஆமா பிசிகல் அப்பியரன்ஸ் ரொம்ப முக்கியம் அமைச்சரே” என்றாள்.

அபியோ அவளை முறைத்து “இவளுங்க கூட சேர்ந்து நீயும் கெட்டு போயிட்டடி.இவதான் கல்யாணம் பிடிக்கலன்னு சொல்லிட்டு இருக்கா நீங்க என்னடானா மேக் அப் பண்ணலாம்னு சொல்றீங்க” என்று கேட்க.

சூர்யாவோ “எது அவளுக்கு விருப்பம் இல்லையா” என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவள் பேச்சை தடுத்த பூஜா “அடியே அவ தலையில இருந்து கீழே பாதம் வரைக்கும் நல்லா பாரு டி ஃபுல் மேக்கப்பில் இருக்கிறா இப்போ இவ பேசுன டயலாக் எல்லாம் யோசிச்சு பாரு படிக்க முடியலன்னு மேடம் பீல் பண்ணல ஜாலியா இருக்க முடியலைன்னுதான் பீல் பண்றா அதுக்கு நாம எல்லாரும் சேர்ந்து மாப்பிள்ளைக்கிட்ட பேசி ஒரு சமாதான உடன்படிக்கை செஞ்சுட்டா முடிஞ்சுது. ஒரு மண பொண்ணோட பிரண்டுங்க எப்படி இருக்கோம் பாரு, பிக்காளி மாதிரி வந்திருக்கிறோம்” என்றாள்.

பின் “நீ ஏன் சொல்லமாட்ட உங்க அம்மா அப்பா வெட்டிங் டே செலிப்ரேஷன்னு பக்காவா இருக்க. ஆனா நாங்க அப்படியா இருக்கோம். அதெல்லாம் முடியாது” என்று விட்டு மதுவிடம் திரும்பியவள் “ஏய் எங்கடி உன்னோட கபோர்ட் எனக்கு புடிச்ச டிரஸ் செலக்ட் பண்ணி எடுக்கறேன்” என்றவள் செல்ல அவளை தொடர்ந்து சூர்யாவும், ப்ரீத்தியும் சென்றனர்.

செல்லும் தோழிகளை பார்த்த மது “இவளுங்க மேக் அப் பண்ண போறதை பார்த்தா நமக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டுதான் போவாளுங்க போலயே” என்று அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள். மனதிலோ “வட்ட கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவாம் காலைலதான் நிச்சயமுன்னு சொன்னாங்க” என்று பாட ஆரம்பித்தாள்.
மூவரும் தங்களுக்கு பிடித்த உடையை அணிந்துகொண்டு வர அவர்களைப் பார்த்த அபிக்கு ஆச்சரியமாக இருந்தது.


பூஜாவின் அருகில் சென்றவள் மேல இருந்து கீழ வரைக்கும் கவர் பண்ணியே குமாரு மூட வேண்டியதை மூடுனியா” என்று அவள் அணிந்திருந்த லாங் பிராக்கில் கழுத்தடியில் இருந்த சிறிய ஹோலை காட்டி கேட்டாள்.

சூர்யாவும் சிறு சிரிப்புடனே “ஏன்டி டிரஸ் பின்னாடி தொங்கறதை முன்னாடி ஷால் மாதிரி போட்டா என்னடி” என்று கிண்டல் செய்ய அவளை முறைத்த பூஜா “அடியே இந்த ட்ரெஸ் மாடலே பின்னாடி அதை தொங்க விடறதுதான் அது மட்டும் இல்லாம இந்த டிரஸ் என்னோடது இல்ல எடுத்தவள கேளு” என்றாள்.

சூர்யாவும் தான் அணிந்திருந்த பாவாடை தாவணியை முன்னும் பின்னும் திருப்பி காட்டியவள் “எனக்கு எப்படி இருக்கு” என்று கேட்க அனைவரும் ஒரே குரலில் கேவலமா இருக்கு”என்று சொல்ல அதை தூசி போல் தட்டிவிட்டவள் தன் இரு கைகளில் பாவாடையை விரித்து பிடித்து குனிந்து “தான்குஉஉ” என்றாள்.

பின் மூவரும் போட்டிருந்த மேக்அப்பை பார்த்த அபி “அடியே உங்க மேக்அப் அதிகமா இருக்கு. உங்களோட நான் நின்னா டல்லா தெரிவேன்.நானும் கொஞ்சம் டச் அப் பண்றேன் நகருங்கடி” என்று செல்ல, இங்கு மதுவோ கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.

அப்போது சூர்யா “நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க நான் போய் அண்ணாவை வெல்கம் பண்ணிட்டு வரேன்”என்று சொல்லி அறையை விட்டு வெளியே செல்ல முனைந்த நேரம் அபியின் குரல் ஆச்சர்யமாக ஒலித்தது “எது அண்ணனா” என்று. அவளை பார்த்த சூர்யா “ஆமாண்டி மதுவை கட்டிக்க போறவரு அண்ணன்தானே அதான்” என்று சொல்ல, ப்ரீத்தியோ “அவரு அண்ணாதானு முடிவே பண்ணிட்டியா” என்று கேட்க,

அவளோ “எஸ்ஸு” என்றுவிட்டு வெளியில் குதித்து கொண்டு திரும்ப இப்போது பூஜா அவளை தடுத்தாள்.”அப்புறம் ஏன்டி என்னோட அஜூ பேபிய மட்டும் அண்ணானு சொல்ல மாட்டிக்கிற” என்று கேட்டாள்.

அவளை முறைத்த சூர்யா “அந்த மங்கூஸ் மண்டையன எல்லாம் அண்ணானு சொல்ல முடியாது போடி” என்றுவிட்டு சென்றாள்.
சூர்யா சென்ற பிறகு இவர்கள் நால்வரும் பேசிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் மதுவின் வீட்டு வாயிலில் நாலைந்து கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.அதை கேட்ட உடனே மதுவின் இதய துடிப்பு அதிகமாக பதட்டமானாள்.


மாப்பிள்ளையை வரவேற்க வரவேற்பறையில் நின்றிருந்த சூர்யா வீட்டிற்குள் வந்த மாப்பிள்ளை பார்த்து அதிர்ந்து வேகமாக மதுவின் அறையை நோக்கி ஓடினாள்.

சூர்யாவின் அதிர்ச்சிக்கான காரணத்தை அடுத்த எபில பார்க்கலாம்….
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top