ராதையின் கண்ணன் இவன்-27

Advertisement

E.Ruthra

Well-Known Member
அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள், எல்லா வளமும், மகிழ்ச்சியும் வாழ்க்கையில் ஒளி வீசட்டும் மக்களே!!!!!!!!!

ஞாயிறு அன்று ஸ்வேதாவை பொண்ணு பார்க்க, மாப்பிள்ளை வீட்டார் வந்து இருந்தனர். தெய்வாவும், சண்முகமும், வீட்டிற்கு பெரியவர்கள் என்ற முறையில் தில்லை, சிவகாமியை அழைத்து இருக்க, அவர்களோ வெறும் பெண் பார்க்கும் படலம் தானே, முடிவு ஆனால் தாங்கள் வருவதாக தங்கள் முதுமையை காரணமாக காட்டி சொல்லிவிட, இவர்கள் பக்கம் ஸ்வேதாவையும் சேர்த்து மூவர் மட்டுமே, அந்த பக்கமோ மாப்பிள்ளை, அவரின் அப்பா, அம்மா,பெரியம்மா என நால்வர் மட்டுமே வந்தனர். மாப்பிள்ளை சஞ்சீவ் கிருஷ்ணா கண்ணாலே காதல் மொழி பேச, அவனின் அம்மா, அப்பா ஏகத்துக்கும் மிடுக்காக இருக்க, அவனின் பெரியம்மாவோ எல்லோரையும் அளவெடுத்தப்படி ஒரு மகாராணியின் தோரணையில் அமர்ந்து இருந்தாரே தவிர ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஏற்கனவே பெண் பிடித்து தான் வந்தார்கள் என்பதால் கையோடு, இரண்டு, மூன்று தேதியும் குறித்து எடுத்து வந்து இருக்க, அந்த தேதிகளில் பெண்ணிடமும், பெண்ணை பெற்றவர்களிடமும் கேட்டு அவர்களுக்கும் தோதானதை முடிவு செய்து, அன்றே பூ வைத்து உறுதி செய்துவிட்டு, கல்லூரி முடிந்து இரண்டாவது வாரம் கல்யாணம், அதற்கு முதல் நாளே நிச்சயம் என ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது.

சண்முகமும்,மாப்பிளை உறுதியான அன்றைக்கே தன் மாமனாருக்கு அழைத்தார்,

"ஹலோ மாமா எப்படி இருக்கீங்க, அத்தை எப்படி இருக்காங்க"

"நாங்க நல்ல இருக்கோம், அங்க வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க,"

"எல்லாரும் நலம் தான் மாமா, சந்தோஷமான விஷயம் சொல்ல தான் போன் பண்ணேன், மாப்பிள்ளை வீட்டுல எல்லாருக்கும் பாப்பாவை ரொம்ப பிடிச்சிபோச்சி, பார்த்தா நல்ல குடும்பமா தான் தெரியுராங்க, தேதி கூட அவங்களே பார்த்து எடுத்துட்டு வந்து இருந்தாங்க மாமா, அதான் உங்க கிட்ட கூட கேட்காம கல்யாண தேதி குறிக்க வேண்டியதா போச்சி, மன்னிச்சிடுங்க மாமா " என சொல்ல, அவரோ இவர்கள் மீது இருந்த கோவத்தில் அலட்டிக்காமல்,

"பெண்ணுக்கு பெற்றவர்கள் நீங்க ரெண்டு பேரும் இருந்தீங்க இல்ல, அப்புறம் என்ன, நீங்களே எல்லாம் பார்த்து பண்ணுங்க,எங்க பங்குக்கு ஸ்வேதாக்கு பண்ண வேண்டியதை எல்லாம் நாங்க சரியா பண்ணிடுவோம்" என இவர்களை போல மூன்றாம் மனிதர் போலவே பேச, என்ன பதில் அளிக்க என்று தெரியாமல் அழைப்பை துண்டித்தார் சண்முகம்.

தில்லையின் கோவத்தின் காரணம் புரிந்தாலும், இத்தனை நாள் தள்ளிவைத்துவிட்டு, இப்போது போய் உரிமையாக ராதிகாவின் விஷயத்தில் தலையிடவோ, ஏதும் செய்யவோ பெரும் தயக்கம் ஆட்கொள்ள, சண்முகம் தான் தன்னை வாட்டும் குற்றஉணர்ச்சியில் இருந்து விடுபட முடியாமல் தவித்தார்.

சண்முகம் தொழிலில் ஏற்பட்ட நட்டத்தை சரி செய்யவென, தொழில் மீளும் என்ற நம்பிக்கையில் அப்போ,அப்போ அதிக வட்டிக்கு வெளியில் வாங்கிய கடன் எல்லாம், தொழில் நட்டத்தால் திரும்பி கட்டமுடியாமல் போக, வட்டியோடு சேர்த்து அது ஒரு பக்கம் கழுத்தை நெறிக்க, இத்தனை வருடங்களுக்கு பிறகு மாமனாரிடம் உதவி கேட்க தன்மானம் இடம் தராமல் போக, மகளின் கல்யாணத்தை மாப்பிள்ளை வீட்டாரின் வசதிக்கு ஏற்ப வெகு விமர்சையாக நடத்த, என பண தேவை அதிகமாக இருக்க, கடைகளை விற்றால் கணிசமான ஒரு தொகை கைக்கு வரும், அதில் கடன்களை அடைத்துவிட்டு மகளின் திருமணத்தையும் நடத்திமுடித்த கையோடு புதுவையில் மனைவியோடு குடியேற திட்டம் தீட்டி இருந்தார். பேரோடும்,புகழோடும் வாழ்ந்த ஊரில் ஒன்றும் இல்லாமல் இருக்க மனம் இடம் தராமல் தான் இந்த முடிவு, இன்னும் மனைவிக்கும், மகளுக்கும் சொல்ல வில்லை, எப்படி சொல்ல வென்றும் தெரியவில்லை. ஒரு பக்கம் கடைகளை விற்க எல்லா ஏற்பாடும் நடந்து கொண்டு இருக்க, இவர் ஒரு பக்கம் மகளின் கல்யாண வேலைகள் என பெரிய மண்டபம் பார்ப்பது, உணவுக்கு நல்ல சமையல்காரர்களை தேடுவது, மகளுக்கு தேவையான உடை,நகைகள் வாங்குவதற்கான ஏற்பாடு என அலைந்துக்கொண்டு இருந்தார்.

பொன்னிற மேனியனும், அவனின் கார்மேகமும் கல்லூரியின் கடைசி நாட்களில் ப்ரொஜெக்ட் என நிற்க நேரமில்லாமல் அலைந்து கொண்டு இருந்தனர். இடையில் ஒரு நாள் பொன்னிற மேனியனின் கார்மேகத்தை புதுவை வர செய்து, ராஜமாதாவும், பொன்னிற மேனியனும் புதுவை சென்று முறையாக தில்லை, சிவகாமி அம்மையாரை சந்தித்து பெண் பார்க்கும் வைபவத்தை அரங்கேற்ற, கிறிஸ் அமெரிக்காவில் இருந்தபடியே மடிக்கணினி வழியே எல்லாவற்றையும் பார்க்க, திருமண நாளும் குறித்துவிட்டே வந்தனர். கிறிஸ் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னரே வருவதற்கான எல்லா ஏற்பாடுகளும் இப்போதே செய்தாகிவிட்டது.

இன்னமும், ராதிகாவின் கல்யாணம் பற்றி, தெய்வா, சண்முகம் தம்பதியருக்கு தெரியாது, ராதிகா அவர்களுக்கு சொல்ல வேண்டாம் என கண்டிப்புடன் சொல்லி இருக்க, தில்லையும் அவர்களின் செயல்களில் மனது வெறுத்து, அவர்கள் இனியும் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை அற்று, இது தான் தாயின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு, அது பேத்தியின் ஆசைப்படியே நடக்கட்டும் என இவர்களுக்கு சொல்லவே இல்லை. அதேபோல எந்த வேலைக்கும் அவர்களின் உதவியை நாடவும் இல்லை. அந்த வயதிலும் எல்லா ஏற்பாடுகளையும் தானே பார்த்து கொண்டார்.

இதற்கு இடையில் ஒரு ஞாயிற்று கிழமையை நல்லநாளாக பார்த்து, முகூர்த்த புடவை எடுக்க என தில்லை, சிவகாமி அம்மையாரை, ராஜமாதா அழைத்து இருக்க, அவர்கள் சனி அன்று இரவு தான் சென்னை வந்து இருந்தனர்.

"வாங்க, அப்பா, வாம்மா, நீங்க இங்க வந்து எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா, வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்", வருந்தி அழைத்தாலும் வராதவர்கள் வருகை தந்து இருக்க, தெய்வாவுக்கு மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க, காரணம் என்னவாக இருக்கும் என்ற யோசனை ஒரு புறம் நீளவே, உபசரிப்பாகவே பேசினார் அவர்களிடம்,

"சாப்பிட்டு தான் கிளம்பினோம் தெய்வா, இவ்ளோ தூரம் வந்தது உடம்பு அசதியாக இருக்கு, நாங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறோம், காலையில் பேசலாம்" என்றவாறே, தெய்வா அவர்களை தனி அறையில் தங்க சொன்னதை தவிர்த்து தங்கள் பேத்தியுடனே தங்கி கொண்டனர்.

காலையில் பேசி கொள்ளலாம் என தெய்வா நினைக்க, அவர்களோ பத்து மணி அளவில் கிளம்பி தான் கிழே வந்தனர், வந்த உடனே ராதிகாவையும் அழைத்து கொண்டு வெளியே சென்றுவிட்டனர். அவர்கள் வரும் வரை காத்திருப்பதை தவிர அவருக்கும் வேற வழி இல்லாமல் தான் போனது.

அங்கே நகரின் மிக பிரபலமான, பணக்காரர்கள் மட்டுமே விஜயம் செய்யும் துணிகடையில், பொன்னிற மேனியனும், ராஜமாதவும் இவர்களுக்காக காத்திருந்தனர்.அவனின் கார்மேகம், தன் தாத்தா, பாட்டி சகிதம் வரவும் புடவை எடுக்க அந்த கடையில் முகூர்த்த புடவை பிரிவிற்கு சென்றனர். அலசி, ஆராய்ந்து, தன் மருமகளுக்கும், மகனுக்கும் பிடித்த வகையில் தக்காளி சிவப்பில், பச்சை நிற பாடர் வைத்த முகூர்த்த புடவையே எடுத்தார் ராஜமாதா. பொன்னிற மேனியன் வரவேற்புக்காக உடை எடுக்க என அவனின் கார்மேகத்தை தனி பிரிவிற்கு அழைத்துச்செல்ல, பெரியவர்கள் அவர்களுக்கான உடைகள் எடுக்க சென்றனர்.

பொன்னிற மேனியனும், அவனின் கார்மேகமும் உடைகளை பார்த்தவாறு இருக்க, "ராதா உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணுமே" என தயங்கியவாறே பொன்னிற மேனியன் இழுக்க,

"உனக்கு என்கிட்ட என்ன தயக்கம், சொல்லு ராகி", உடைகளை பார்வையிட்டவாரே கேட்க,

"இல்ல, அம்மா நம்ப கல்யாணம் நம்ப குலதெய்வ கோவில்ல நடக்கணும், அது தான் முறை அப்படினு சொல்லிடாங்க, உனக்கு இதுல ஒன்னும் வருத்தம் இல்லை இல்ல" ஏனோ அவனுக்கு, கல்யாணத்தை பற்றிய கனவுகள் அவனின் கார்மேகத்திற்கும் இருக்கும் அல்லவா, ஒருவேளை ஆடம்பரமாக நடைபெற வேண்டும் என இக்கால பெண்கள் போல ஆசை இருந்தால், என நினைத்து கேட்க, அவனின் கார்மேகமோ,

"எனக்கு கல்யாணம் நடக்க போறது உன்கூட, அது மட்டும் போதும் ராகி, எனக்கு ஆடம்பரமா கல்யாணம் பண்ணிக்கணும்னு பெருசா ஆசை எல்லாம் இல்லை" என அவன் மனம் அறிந்தவளாக பதில் சொல்ல,

"ஹே கல்யாணம் மட்டும் தான் கோவில்ல சிம்பிள்லா நடக்கும், ரிசப்ஷன் எவ்ளோ கிராண்ட் அஹ நடக்கணுமோ அவ்ளோ கிராண்ட் அஹ நடக்கும் ராதா" என மையலுடன் அவளை பார்த்தவாறே தொடர்ந்து,

"ரிசப்ஷன் இன்விடேஷன் பிரின்ட்ஸ்கு கொடுக்க நீ செலக்ட் பண்ண கார்ட் எல்லாம் வந்துடுச்சிடா, யாரை எல்லாம் இன்வைட் பண்ணமோ பண்ணிடு, பிசினஸ் சர்கல்ல எல்லாருக்கும் தனி தனியே இன்வைட் போயாச்சு, மேரேஜ்க்கு நீ, நான்,அம்மா, கிறிஸ், தாத்தா, பாட்டி,சித்தி, சித்தப்பா, அவங்க பையன், முக்கியமானவங்க மட்டும் தான், உனக்கு வேற யாரையாவது கூப்பிடனுமாடா" என அவளின் பெற்றோரை நினைத்து கேட்க அவளோ,

"ஸ்கூல் அண்ட் யூஜி பிரின்ட்ஸ் எல்லாம்
ரிசப்ஷன்க்கு இன்வைட் பண்ணிக்கலாம் ராகி, மேரேஜ்க்கு இன்வைட் பண்ற அளவுக்கு முக்கியமானவங்க வேற யாரும் இல்ல" என்று சொல்லியவாறே நிமிர, அங்கு இவர்களுக்கு சற்று தள்ளி ஒரு அழகான பெண் இவளின் ராகியை முழுங்கும் பார்வை பார்த்து வைக்க, இயல்பு போல இவள் அவளவனின் கைகளோடு,கைகளை கோர்த்து கொண்டு, "இவன் என்னவன்" என தன் செய்கையால் அவளுக்கு உணர்த்த, இவளின் செய்கையில் நிமிர்ந்து இவளை பார்த்த பொன்னிற மேனியன், அவளின் பார்வை எங்கோ நிலைக்க தன் பார்வையும் அங்கு திருப்பினான். பொன்னிற மேனியன் அந்த பெண்ணை பார்க்க, அவ்ளோ அவனின் கார்மேகத்தை சுத்தமாக அலட்சியப்படுத்தி, ஒரு அழகான மோனலிஸா புன்னகையை சிந்தி அவனை கவர முயற்சி செய்ய, பொன்னிற மேனியனோ நெற்றி கண்ணை திறக்கும் உக்கிர நிலையில் ஒரு கோவ பார்வை பார்த்து வைக்க, அவனின் பார்வையிலே அரண்டு அலறியடித்து கொண்டு அப்பெண் அவ்விடம் விட்டு அகன்றாள்.

எந்த உடையுமே பொன்னற மேனியனுக்கு திருப்தி தராமல் போக, இருவருக்கான உடைகளை தனித்துவமாக வடிவமைக்க, ஆடை வடிவமைப்பாளர்களை அழைக்க முடிவு செய்தான். சிவகாமி அம்மையாரும், ராஜமாதாவும் போட்டிபோட்டு கொண்டு ராதிகாவுக்கென நிறைய பட்டு புடவைகள் வாங்கி குவிக்க, பொன்னிற மேனியனோ அவன் பங்குக்கு கை வேலைப்பாடுகள் நிறைந்த டிசைனர் புடவைகளை வாங்க, கை கொள்ளா பைகளை பார்த்து ராதிகா எல்லாரையும் முறைக்க, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி, பின் அவர்களே ஒரு வழியாக சமாதானம் ஆகி, அருகிலே இருந்த பெரிய உணவகத்தில் உணவு உண்டு, வீடு திரும்பினர்.

வரும் வழி எல்லாம் கார்மேகத்திற்கு பொன்னிற மேனியன் நினைவு தான். அந்த பெண் இவனை பார்க்கவும், உரிமை உணர்வில் இவள் கை கோர்க்க, இவளின் உணர்வை தனக்கு சாதகமாக
பயன்படுத்தி இவளிடம் இன்னும் நெருக்கம் கொள்ளாமல், ஒரு பார்வையிலே அப்பெண்ணை அந்த இடத்தை விட்டு ஓட வைத்து, அதோடு இவளின் சஞ்சலத்தையும் விரட்டிய தன்னவனை நினைத்து,நினைத்து பூரித்து தான் போய்விட்டாள் பேதையிவள்.

மகிழ்ச்சியாகவே இவர்கள் வீடு திரும்பவும், நிறைய பைகள் இருக்க, ராதிகா தன்னால் முடிந்தவரை தன் கைகளில் அள்ளிக்கொண்டு தன் அறைக்கு செல்ல, மீதி இருந்த பைகள் சகிதம் மூத்தவர்கள் இருவரும் ஓய்வாக அமரவும், தெய்வா வந்து, அந்த பைகளை பார்வை இட்டவாரே,

"என்னமா ஷாப்பிங் போய்ட்டு வரிங்கலா, என்னையும் கூப்பிடு இருந்தா, நானும் வந்து இருப்பேன் இல்ல, ஆமா என்ன இவ்ளோ வாங்கி இருக்கீங்க" என கேட்க,

"பின்ன கல்யாணம்னா சும்மாவா, ராதிகாக்கு எல்லாமே வாங்கணும் இல்ல" என்று பேச்சு வாக்கில் சிவகாமி அம்மையார் சொல்லிவிட, அவர் சொன்னதில் கல்யாணத்தை மட்டுமே காதில் வாங்கிய தெய்வா,

"என்னமா ஸ்வேதாக்கு வாங்கனா அவளை கூட்டிகிட்டு போய் இருக்கலாம் இல்ல, அவளே பரர்த்து அவளுக்கு பிடிச்ச மாதிரி எடுத்து இருப்பா" என மீண்டும் மீண்டும் ஸ்வேதாவை மனதில் வைத்து மட்டுமே பேச, அதுவரை அமைதியாக இருந்த தில்லை,

"உனக்கு ஸ்வேதா மட்டும் பொண்ணு கிடையாது தெய்வா அதை நியாபகம் வச்சிக்கோ, இது எல்லாம் ராதிகாக்கு, அவளோட கல்யாணத்துக்கு" என அழுத்தம், திருத்தமாக சொல்ல,

"அது கல்யாணம் முடிவு ஆனதுக்கு" என ஆரம்பித்தவர், இருவரின் பார்வையில் அப்படியே நிறுத்தி,

"அப்போ கல்யாணம் முடிவு பண்ணிட்டிங்களா, பெத்தவ என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லணும்னு உங்களுக்கு தோணவே இல்லையா, பெத்தவங்க எங்ககிட்ட கேட்காம நீங்களே எப்படி முடிவு பண்ணுவீங்க" என கோவமாக பேச, அதை கேட்டுக்கொண்டே கிழே இறங்கி வந்த ராதிகா, தெய்வாவின் முன்சென்று, கூறிய பார்வையுடன்,

"உங்க கிட்ட எதுக்கு சொல்லணும்" என உறைய வைக்கும் குரலில் கேட்க, தெய்வாவோ அந்த குரலில் சில்லிட்ட தன் கைகளை தேய்த்தவாறே,

"ஏன் னா நாங்க உன்னை பெத்தவங்க" என தடுமாறியபடியே சொல்ல,

"அதை தான் நானும் சொல்றேன், பெத்ததை தவிர என்ன பண்ணீங்க நீங்க எனக்கு, ஒரு வாய் சோறு ஊட்டி இருக்கீங்களே, கை பிடிச்சி நடக்க சொல்லி கொடுத்தீங்களா, பேச சொல்லி கொடுத்தீங்களா, ஸ்கூல்கு கூட்டிட்டு போனீங்கலா, நான் பெரிய பொண்ணா ஆனப்போ அம்மாவா இருந்தது எனக்கு எல்லாம் சொல்லி கொடுத்தீங்கலா, இல்லை என்ன பார்த்து தான் சந்தோஷம் தான் பட்டிங்களா, எது சரி, எது தப்புன்னு தடுமாறுற பருவத்தில் ஒரு அம்மாவா என்னை வழி நடத்துனிங்களா, நான் காயம்பட்டு அழும் போது என் கூட இருந்தீங்களா, இல்ல நான் ஜெயிக்கும் போது சந்தோஷப்பட கூட இருந்தீங்களா, இப்படி என் வாழ்க்கையில் நீங்க எங்கேயுமே ஒரு அம்மாவா என்கூட நீங்க இல்ல, நான் அம்மானு கூப்பிட்டதே சிவாவை பார்த்து தான், உங்களுக்கு உங்க புருஷன், வாழ்க்கை தான் முக்கியமா இருந்தது, என்னை வேண்டாம்ணு விட்டுட்டு தானே போனீங்க, இப்போ என்ன புதுசா பாசம் எல்லாம் வருது உங்களுக்கு, ஒரு வேளை தில்லை, சிவா இல்லைனா நான் நடுரோட்டில் அநாதையா தான் நின்னு இருக்கணும், என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க, நான் எதுமே கேட்காம, பேசாமா நீங்க பரிமாறி சாப்பிட்டதும் இவ எதுமே கேட்க மாட்டான்னு நினைச்சிட்டீங்களா, நான் இந்த வீட்டுல தங்க பணம் கொடுத்து இருக்கேன், இந்த வீட்டு ஆளா வாங்குன காசுக்கு நீங்க எனக்கு சாப்பாடு கொடுத்தீங்க, நான் சாப்பிட்டேன் அவ்ளோ தான், என்ன பொறுத்தவரைக்கும் கோவ பட கூட உரிமை இருக்கணும், உங்க கிட்ட எனக்கு எந்த உரிமையும் இல்ல உறவும் இல்ல அதான் நா எதுமே பேசல உங்க கிட்ட, இப்போ கூட மூத்தவ நான் இருக்கும் போது, உங்க ரெண்டாவது பொண்ணுக்கு வரன் வரும் போது நீங்க என்ன பத்தி யோசிக்கல தானே, அப்புறம் எந்த உரிமையில் உங்க கிட்ட கேட்டு தான் என்னோட கல்யாணத்தை முடிவு பண்ணி இருக்கணும்னு சொல்றிங்க, அவங்களை கேள்விகேட்க என்ன தகுதி இருக்கு உங்களுக்கு, நான் தான் உங்ககிட்ட என்னோட கல்யாணத்தை பற்றி சொல்ல வேண்டாம்னு சொன்னேன், அதுக்கு இப்போ என்ன பண்ணனும்னு சொல்றிங்க, அப்போ என்ன வேண்டாம்ணு நீங்க விட்டுட்டு போனீங்க, இப்போ நீங்க எனக்கு தேவையில்லை, என்னோட வாழ்க்கையில் இது வரைக்கும் நீங்க இல்லை, இனியும் நீங்க இல்லை அவ்ளோ தான்" என சொல்ல அவளின் குரலில் ஆதங்கம் கூட இல்லை, வெறும் அழுத்தம் மட்டுமே. பேசி முடித்ததும், மீதி இருந்த பைகளை அள்ளி கொண்டு மேலே தன் அறைக்கு செல்ல, தெய்வா தன் கால்கள் மடக்கி அங்கேயே அமர்ந்தார்.

சிலருக்கு செவிட்டில் அறைந்து, நீ பண்ணது எல்லாம் தப்புன்னு சொல்ற வரைக்கும் புரியுறது இல்லை, தெய்வாவும் அந்த வகை தான். இத்தனை நாள் தன்னை ராதிகா புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்த்து, தான் கணக்கிலே கொள்ளாத அவளின் பக்கங்கள் கண் முன் படம் போட்டு காட்டப்பட, ராதிகா எதை எல்லாம் இவர் செய்யவில்லை என பட்டியிலிட்டாலோ அது எல்லாமே ராதிகாவின் வாழ்க்கையில் தான் இழந்தவை என்று மூளைக்கு புரிய, அந்த இழப்பு எல்லாமே ஈடு செய்ய முடியாத அளவுக்கு பூதாகரமாக தெரிய, தன் வாழ்க்கை, தன் கணவன் என சுயநலமாக இருந்தது அப்பட்டமாய் புரிய, அவளுக்கு தான் எந்த இடத்திலும் ஒரு தாயாக நடக்கவில்லை என்பதும், அவளை கேள்வி கேட்ட தகுதியும் இல்லை என்பது புரிய, தன் பாவங்களை எல்லாம் கண்ணீரிலே கரைப்பவர் போல வாய்விட்டு கதறி அழுதார் தெய்வா.

இவன் ராதையின் கண்ணன்……………………….
 

banumathi jayaraman

Well-Known Member
அப்போ ஸ்வேதாவை பொண்ணு பார்த்து மேரேஜ் பிக்ஸ் பண்ணியாச்சு
காலேஜ் முடிஞ்சு செகண்ட் வீக் இவளின் மேரேஜ் நிச்சயமா நடக்குமா?
ராஜமாதா ராஜேஸ்வரி செல்லம் மகாராணிதானே
அந்த கம்பீரம் எங்கே போகும்?
அக்காவின் சொத்தில் மஞ்சள் குளிக்கும் சஞ்சீவ்வின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வெத்து கெத்துல ஒண்ணும் குறைச்சல்
இல்லே
ராதிகாவின் திருமணம் எப்போன்னு
நீங்க சொல்லலையே, ருத்ரா டியர்
பொன்னிற மேனியன்தான் கிருஷ்ணா
குடும்ப வாரிசு சஞ்சீவ் வெத்து டம்மி பீஸுன்னு உண்மையெல்லாம் தெரிய வரும் பொழுது ஸ்வேதாவின் ரியாக்க்ஷன் எப்படியிருக்கும்?
அச்சோ பத்து ஜவுளிக்கடையும் போயிடுச்சா, சண்முகம் மொய்லாளி
இப்போ மாமனார்கிட்டே பணம் கேட்க கஷ்டப்படும் நீங்க எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு புதுவைக்கு போய் யாரு கூட இருப்பீங்க, சம்மு மாமா?
அப்போ மட்டும் தில்லையைப் பார்க்க சண்முகத்துக்கு கஷ்டமா இருக்காதா?

ராதிகா தெய்வானைக்கு நல்ல ஒரு
ரூ.999.95-வாலே செமத்தியா கொடுத்த நெத்தியடி கேள்விகள் எனக்கு ரொம்ப
ரொம்ப பிடிச்சது
நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி தெய்வானையை ராது கேட்டாள்
ஹா ஹா ஹா
நல்ல ஒரு அருமையான ஸ்வீட் செஞ்சு சாப்பிடணும் போல இருக்குப்பா
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

தெய்வாவுக்காக...

என் சேய் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி கிளியே..
என் வாயும் வயிறையும்
போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே..
என் சேய் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி கிளியே..
என் வாயும் வயிறையும்
போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே..
என்னை தொட்டாலும் பார்த்தாலும்
தோஷமடி கிளியே..
எனக்கு ஏழேழு ஜென்மத்திலும்
மோட்சமில்லை கிளியே..
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
தெய்வா நீ அழுவதை பார்க்க கொஞ்சம் கூட பரிதாபம் வரலேயே... கோபம் தான் வருது. இத்தனையும் அவள் சொல்லும் வரை உன் மர மண்டையில் ஏறவே இல்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top