ராதையின் கண்ணன் இவன்-24

Advertisement

E.Ruthra

Well-Known Member
விடுமுறை தினத்தன்று பொன்னிற மேனியன் புதுவை சென்று வந்ததாலும், முதிய தம்பதியரிடம் சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டதாலும் அந்த நிகழ்வு அவனின் கார்மேகத்தின் காதுக்களுக்கு செல்லவே இல்லை. எதுமே நடக்காத மாதிரி இவன் வெகு இயல்பாக இருக்க ஒரு வாரமும் காற்றாய் மறைய, பொன்னிற மேனியன் எதிர் பார்த்த தகவல் கைக்கு கிடைத்ததும், சண்முகத்தை பார்க்க அவர் எந்த கடையில் இருப்பார் என அறிந்து அவரின் கடைக்கே கிளம்பினான்.

அனுமதி வாங்கி உள்ளே வந்த பொன்னிற மேனியனை பார்த்ததும், சண்முகத்தின் முகம் அப்பட்டமாய் நீ இங்கே வந்தது நான் விரும்பவில்லை என்ற பாவத்தை காட்ட, எதையுமே கண்டுகொள்ளாமல், அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில், கால் மேல் கால் போட்ட ஒரு ராஜ தோரணையில் அமர, விருந்தினரை உபசரிக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல்,
அவனின் தோரணையில் வந்த எரிச்சலை அடக்கி,

"சொல்லுங்க என்ன விசயமா என்ன பார்க்க வந்து இருக்கீங்க" என்று கேட்க, அவனோ

"அப்புறம் வியாபாரம் எல்லாம் எப்படி நடக்குது, ஆமா உங்க பத்து கடை எப்படி இருக்கு" என இளக்காரமான குரலில் கேட்க, சண்முகத்திற்கு தான் ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் அதிகமானது, இவர் இவனிடம் தன் கடைகளை பற்றி பேசியது அவர்களின் கல்லூரி தொடக்கத்தில், இப்போது இவர்கள் படிப்பு முடிய இன்னும் ஆறு மாதங்கள் எனும் நிலைமை, இந்த ஒன்றரை வருடத்தில், கொஞ்சம் கூட அவசரம் இல்லாமல் திட்டம் போட்டு காய் நகர்த்துவதை போல, இவரின் ஆறு கடைகளுக்கும் அருகில் போட்டி கடைகள் குறிப்பிட்ட நாள்கணக்கில் திறக்கப்பட, இவருக்கு தொழிலே நட்டத்தில் போய் கொண்டு இருக்க, அது பத்தாது என கடந்த வாரத்தில் இருந்து மீதி இருக்கும் கடைகளிலும் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை என அதை சமாளிக்கவே நேரம் இல்லாமல் இவர் தவித்து கொண்டு இருக்க, பொன்னிற மேனியன் இப்படி கேட்டதும், தெரிந்து கேட்கிறானா இல்லை தெரியாமல் கேட்கிறானா என அவன் முகத்தை ஆராய அங்கு ஒன்றும் கண்டுபிடிக்க வழி இல்லாமல் அந்த கோவதையும் அவன் மீதே காட்டி,

"தேவை இல்லாததை பற்றி எல்லாம் பேசாதிங்க, நீங்க வந்த விஷயத்தை பத்தி மட்டும் பேசுங்க" என, பொன்னிற மேனியனும்,

"அது சரி, எனக்கு எதுக்கு தேவை இல்லாத விஷயம் எல்லாம், நம்ப வீட்டில் எல்லாம் பொதுவா சொல்லுவாங்க, வீட்டுல யாராவது மாசமா இருந்தா, அவங்க கண்ணுல படர மாதிரி அழகான குழந்தை, இல்ல குட்டி கண்ணன் போட்டோ எல்லாம் மாட்டி வைக்க சொல்லுவாங்க, அப்போ குழந்தை அதே மாதிரி அழகா பொறக்கும் அப்படினு ஒரு நம்பிக்கை, இதை எல்லாம் கேள்விப்பட்டு இருக்கீங்களா" என தெரியாதை ஒரு குழந்தைக்கு விளக்கும் பாவத்தில் விளக்கிவிட்டு கேள்விகேட்க, வேலை நேரத்தில் வந்து ஏன் இப்படி சம்பந்தம் இல்லாமல் பேசுறான் என யோசித்தாலும், அவனின் கேள்விக்கு பதிலாக,

"தெரியும்" என பதில் அளிக்க,

"ரைட், உங்க மனைவி ராதிகா வயிற்றில் இருக்கும் போது தங்கி இருந்த அறை இந்திராணி அம்மையாரோடது, அங்க அவங்களோட பெரிய ஓவியம் ஒன்னு இருக்கு, உங்க மனைவி முழு ஓய்வுல இருந்ததால அந்த அறையை விட்டு வெளியே போகமலே இருந்து இருக்காங்க, அவங்க அதிகமா பார்த்தது அந்த ஓவியத்தை தான், பொதுவா குழந்தைகள் அவங்க தாத்தா, பாட்டி மாதிரி இருக்குறது இயல்பு, ஆன ராதிகா அப்படியே அவளோட கொள்ளுப்பாட்டி மாதிரி இருக்கா காரணம் அந்த ஓவியத்தின் தாக்கம் தான்", என்றதோடு இந்திராணி அம்மையாரின் ஓவியத்தை இவன் எடுத்த புகைபடத்தையும், ராதிகாவின் புகைப்படம் ஒன்றையும் அவரின் மேசையில் வைத்தவன் தொடர்ந்து,

"பெத்த பொண்ணையே நியாபகம் இருக்க மாட்டுது, முப்பது வருஷத்துக்கு முன்னாடி உங்களை வளர்த்தவங்களை மட்டும் எப்படி நியாபகம் இருக்கும், அதான் போட்டோ பார்த்துகோங்க" என ஏகத்தாளமாய் பேச, இப்போது தான் அவன் பேச வருவதன் தாத்பரியம் அவருக்கு புரிய, சண்முகம் எதுமே பேசாமல் அவன் சொன்ன தகவல்களை கிரகிக்க முயன்றவாறே, தன் மேசையில் மேல் இருந்த இரு புகைப்படங்களையும் வெறிக்க, பொன்னிற மேனியனே தொடர்ந்து,

"இது ராதிகா உங்க பொண்ணு தான் அப்படின்னு நிருபிக்கிற மரபணு சோதனை முடிவு, உங்களுக்கு நான் கொடுக்கிற இந்த ரிப்போர்ட்ல நம்பிக்கை இல்லைனா , நீங்களே கூட ஒரு தடவை தனியா உங்களுக்கு தெரிஞ்ச ஹாஸ்பிடல்ல டெஸ்ட் பண்ணிகோங்க," என பொன்னிற மேனியன் பேச பேச அதிர்ச்சியில் உறைந்து போய் சண்முகம் அமர்ந்து இருக்க,

"வெல், நீங்க யோசிக்கலாம், இதை எல்லாம் நான் ஏன் இப்ப வந்து உங்களுக்கு விளக்கிக்கிட்டு இருக்கேன்னு, ஒருத்தர் கிட்ட அடி வாங்கும் போது, நாம பண்ண எந்த தப்புகாக அடி வாங்குறோம்னு தெரியுறது நல்லது இல்லையா அதான்" என ஒரு வன்மான புன்னகையுடன் சொன்னவன், அதே புன்னகை மாறாமல்,

"வரேன் மாமா" என விடைபெற சண்முகம் இன்னும் அதிர்ச்சியில் இருந்து விடுபடவே இல்லை. அவர் இந்நாள் வரை ஆணித்தரமாக நம்பும் விஷயம் "ராதிகா அவர்கள் மகள் இல்லை" என்பது, குழந்தையாய் பார்த்த பிறகு அவர் மீண்டும் ராதிகாவை பார்த்ததே அவள் இங்கு படிக்க வந்த போது தான், இப்போது பொன்னிற மேனியன் சொல்லும் போது தான், இத்தனை நாள் தான் கவனிக்காமல் விட்ட, உருவ ஒற்றுமை அப்பட்டமாய் தெரிய, அவள் இந்த குடும்ப பெண் தான் என பறைசாற்ற, பரிசோதனை முடிவு இவரின் மகள் என உண்மையை செவிட்டில் அறைந்து சொல்ல, "ஒரு பாவமும் அறியாத ஒரு குழந்தையை என்னோட இயலாமைக்கு பலியாக்கிட்டனா "என வாய்விட்டே யோசிக்க, நெஞ்சின் இடது பக்கம் சுருக்கென ஒரு வலி வர அப்படியே அமர்ந்து விட்டார் சண்முகம்.

அன்று வீட்டிற்கு வந்த சண்முகம் ராதிகாவை அதிகம் கவனித்தார் தன் சாயல் எங்கேனும் இருக்கிறதா என, இப்போது அவரின் மனம் பொன்னிற மேனியன் சொன்னது எல்லாம் பொய்யாக இருக்கு கூடாதா என்று தான் ஆவல் கொண்டது, இத்தனை வருடம் ஒரு குழந்தைக்கு செய்த பாவத்தை சகிக்க முடியாமல், அவன் சொன்னது பொய் என்றால் தன் மீது தவறு இல்லை என்று நிம்மதியாகவே இருக்க பேராசை கொள்ள, அதற்கான எல்லா வேலைகளையும் பார்த்தார் சண்முகம். மீண்டும் ஒரு முறை சோதனைக்கு இருவரின் சோதனை மாதிரிகளையும் சேகரித்து அனுப்ப, முடிவு அதே தான் என தெரிய இன்னும் சோர்ந்து போனார். அவரின் மனசாட்சியே அவரை குத்திக்கிழிக்க தினம் தினம் குற்ற உணர்ச்சியில் தவித்தார் சண்முகம். இதோடு சேர்ந்து கடை பிரச்சனைகளும் சேர்ந்து கொள்ள மனிதர் மிகவும் உடைந்து தான் போனார்.

பொன்னிற மேனியனும், அவனின் கார்மேகமும், அவர்கள் படிப்பின் கடைசி ஆறுமாதத்தில் இருந்தனர். ப்ரொஜெக்ட் இருப்பதால் அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடைபெற மீதி நேரம் இருவரும் வழக்கம் போல அவர்களின் ஆஸ்தான மரத்தடியில் அமர்ந்து தான் தம்தம் வேளைகளில் மூழ்குவர், அந்த மாதிரியான ஒரு மாலை வேளையில்,

"ராதா"

"சொல்லு ராகி" இப்போதும் பார்வை கணினியிலே இருக்க, கடுப்பான பொன்னிற மேனியன்,

"ராதா" என அழுத்தமாக கூப்பிட அவனின் குரலில் இருந்த கடுப்பை உணர்ந்து, ஒரு புன்னகையுடன்

"சொல்லு ராகி"

"ஒன்னும் இல்ல, நம்ப படிப்பு முடிய போகுது, அடுத்து என்ன பிளான்" ஒரு ஆர்வமுடன் கேட்க,

"ஹ்ம்ம் கல்யாணம் தான், கேட்குற கேள்வியும் ஆளையும் பாரு, வேற என்ன பிளான் இருக்க போகுது, பிசினஸ் தான், தில்லைக்கு வயசு ஆகிடுச்சி இல்ல," என, அவள் கல்யாணம் என்றதும், தான் பேச அவசியமே இல்லாமல் அவளே சொன்னதும் மகிழ்ந்தவன், அடுத்த நொடியே அவளின் பின்பாதி பதிலில் முகம் வாட, இவனின் முக மாற்றத்தை கவனித்த அவனின் கார்மேகம்,

" என்ன ராகி" என கேட்க,

"ஹ்ம்ம்" என பெரு மூச்சு விட்டவாறே பொன்னிற மேனியன் "ஒன்றும் இல்லை" எனும் விதமாக தலை அசைக்க,

"நீ என்ன சொல்லணுமோ அதை டிரைக்ட்டா சொல்லு, எதுக்கு இப்படி தயங்குற ராகி" என

"நீ முதல சொன்ன மாதிரி நாம கல்யாணம் பண்ணிக்கிலாம் ராதா" என பட்டென சொல்ல, அவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க, அதில் இருந்த தீவிரம் ஏதோ செய்ய,

"என்ன ராகி, ஏதும் பிரச்சனை இல்ல, இல்ல", அவளின் கேள்வியில் தான் தன் எண்ணவோட்டத்தில் இருந்து வெளி வந்தவன் அவனின் கார்மேகத்தின் முகத்தை பார்க்க, அதில் இருந்த கேள்வி அவனை அசைக்க,

"ஹே அது எல்லாம் ஒன்னும் இல்ல, நீ கூடவே இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது, நாம ஊருக்கு போய் எல்லாத்துக்கும் சரியான ஆள பார்த்து வச்சிட்டு வருவோம், அப்போ அப்போ போய் பார்த்துக்கலாம், தாத்தாக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம், உனக்கு வேற ஏதாவது பிரச்சனை இருக்கா என்ன"

"பிரச்னை எல்லாம் ஏதும் இல்லை, ஆனாலும் நீ எதையோ மறைக்குற மாதிரி இருக்கே ராகி"

"நான் சொல்லி இருக்கேன் இல்ல என்னோட சித்தி, அவங்களுக்கு ஒரு பையன் இருக்கான், என்ன விட சின்ன பையன், அவனுக்கு அவங்க மேரேஜ் பண்ற ஐடியல இருக்காங்க போல, அதான் அம்மா என்னோட கல்யாணம் முன்னாடியே நடந்துட்டா நல்லதுன்னு நினைக்குறாங்க ராதா, அதோட அவங்களுக்கும் அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகுது, அதான் கொஞ்சம் பயப்படுறாங்கடா" என உண்மை பாதி, பொய் பாதியாக சொல்லவிட்டு, அவனின் கார்மேகம் தான் சொல்லியதை நம்பியதா என அவளை பார்க்க, அவளோ துளி கூட சந்தேகம் கொள்ளாமல்,

"ஹ்ம்ம், புரியுது ராகி, எனக்கு தெரிஞ்சி கிறிஸ் இந்நேரம் கண்டுபிடிச்சி இருப்பான், நானே சொல்லணும்னு வெய்ட் பண்ணிக்கிட்டு இருப்பான்,இந்நேரம் உன்னை பற்றி எல்லா டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி செக் பண்ணி இருப்பான், அவனுக்கு திருப்தியா இருந்து இருக்கும், அதான் அமைதியா இருக்கான், சரியான பிராடு, தில்லை, சிவா கிட்ட நேரில போய் தான் சொல்லணும், எங்க வீட்டுல ஒன்னும் பிரச்சனை ஆகாது, நான் பேசிக்குவேன்,
அங்க எப்படி" என அவனின் கார்மேகம் சொல்ல, "இப்படி பச்ச மண்ணா இருக்கியேமா" என அவளை நினைத்து உள்ளுக்குள் சிரிப்பு ஊற்றெடுத்தாலும், முகத்தில் எதுமே காட்டிகொள்ளாமல், அவளின் கேள்விக்கு மட்டும் பதிலாக,

"அம்மாக்கு ஏற்கனவே தெரியும்"

"என்னது தெரியுமா, எப்போ சொன்ன" கொஞ்சம் அதிர்ச்சியோடே கேட்க,

"எனக்கே அவங்க தான் சொன்னாங்க" மயக்கும் புன்னகையுடன் சொல்ல,

"என்ன ராகி குழப்புற" மண்டையை பிய்த்துக்கொள்ளதா குறையாக கேட்க,

"நான் உன்னை விரும்புறத, நான் கண்டுபிடிக்கும் முன்னாடி அம்மா கண்டுபிடிச்சிட்டாங்க" என ஒரு சிரிப்புடன் சொல்ல,

"ஒன்னும் சொல்லயலையா", அவங்க பதில் என்னவாக இருக்கும் என தெரிந்து கொள்ள துளிர்த்த துளி ஆர்வத்துடன் கேட்க,

"என் மருமக உனக்கு எப்படிடா ஓக்கே சொன்னானு கேட்டாங்க" என முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொல்ல, பக்கென அவனின் கார்மேகம் சில மின்னல்களை சிதற விட, இவனோ சில நிமிடங்கள் அவளை மெய்மறந்து பார்த்தவன்,

"அம்மாவை பார்க்க எப்போ போகலாம்" என கேட்க,

"எப்போ போகலாம்",பொன்னிற மேனியனின் அம்மாவை காண போகும் பதட்டம் சிறிது வர, விளையாட்டு போலவே அவளும், அவனின் கேள்வியை அவனுக்கே திருப்ப,

"இந்த வாரம் சன் டே பார்க்கலாமா, உனக்கு ஏதாவது பிளான் இருக்கா"

"எனக்கு எந்த பிளானும் இல்ல, அப்படியே இருந்தாலும், அம்மாவை பார்க்குறத விட முக்கியமானது எதும் இல்ல, ஆனா அம்மா கிட்ட கேட்க வேண்டாமா, அவங்களுக்கு ஏதும் வேலை இருக்கா இல்லையான்னு"

"நான் ஏற்கனவே அம்மா கிட்ட சொல்லிட்டேன், கோவிலுக்கு வர சொல்லி இருக்கேன், போய் பார்த்துட்டு வரலாம், என்ன சொல்ற", இப்போதும் அவளை தன் வீட்டிற்கு அழைத்தால், அவள் வீட்டில் சொல்லாமல் வர தயங்குவாள் என இப்போதும் அவளுக்காக யோசித்து ஒரு பொது இடத்தில் தங்களின் சந்திப்பை நடத்த நினைக்கும் அவன் மீது காதல் இன்னும் இன்னும் அதிகமாக, வெளியே,

"அப்போ எல்லாமே ஏற்கனவே பிளான் பண்ணிட்டு தான், சும்மா என்கிட்ட கேட்டியா, ஒரு வேளை கல்யாணம் இப்போ வேண்டாம், கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்ப"

"வேற வழி, சரின்னு சொல்லிட்டு, அம்மாவை மட்டும் பார்க்க கூட்டிட்டு போய் இருப்பேன்" என சொல்ல,

"ஹ்ம்ம்" என மட்டும் சொல்ல,

"நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும், கேட்கட்டுமா ராதா"

"என்ன ராகி, இன்னைக்கு ஒரே கேள்வி மழையா இருக்கே, கேளும் கேட்டு தொலையும்" என சலிப்பு போலவே சொல்ல, அவளின் கிண்டலை எல்லாம் கண்டுகொள்ளாமல்,

"நான் யாரு, என்ன பண்றேன், என்னோடு பேமிலி, எதை பற்றியுமே கேட்காம என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்ட, உனக்கு எதுமே என்கிட்ட கேட்க கேள்வி இல்லையா"

"எனக்கு தெரிஞ்சி உனக்கு அம்மா மட்டும் தான், கௌரவமான ஒரு வேலை இருக்கு, என்ன வச்சி காப்பாத்த அது போதாதா என்ன?, நானும் வேலைக்கு போவேன், நமக்கு பண தேவை இருக்காது, பட் நீ எதை பத்தி மீன் பண்றன்னு எனக்கு புரிது ராகி, உன்னோட பேமிலி பேக் கிரவுண்ட், ஸ்டேட்டஸ், இதை பத்தி நா எதுமே கேட்கலன்னு சொல்றியா, அது எல்லாம் எதுக்கு ராகி, உன் கண்ணுல இருக்க எனக்கான தேடல், உன்கிட்ட நான் உணர்ந்த அந்த பாதுகாப்புணர்வு, உன்கூட நான் வாழ போற வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு நீ கொடுத்து இருக்க நம்பிக்கை, அதோட நம்ப காதல், இதை தவிர வேற எது முக்கியம் ராகி" என அவனின் கார்மேகம் பேச, இவனுக்கு தான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை, அவள் ஒரு பேச்சுக்காக கூட, தில்லை சொத்து இருக்கு, இல்ல கிறிஸ் சொன்ன ஷார் இருக்குன்னு சொல்லல, நம்மை நாமே பரர்த்துக்கொள்ளலாம் என அவனை முன்னிறுத்தியே சொல்ல அவளின் பேச்சில் மனம் நிறைவாக உணர, சந்தோஷ மிகுதியில் இருக்கும் இடம் மறந்து மின்னல் வேகத்தில் அவளின் கன்னத்தில் தன் முதல் முத்திரையை பதிக்க, என்ன நடந்தது என புரியவே அவளுக்கு முழுதாக ஒரு நிமிடம் எடுக்க, புரிந்ததும், அவனை அடிக்க துரத்த, அவளின் கைகளில் சிக்காமல் அவன் ஓட அக்மார்க் காதலர்களாக பொன்னிற மேனியனும், கார்மேகமும்.

இவன் ராதையின் கண்ணன்…………………………

பி.கு:
இதில் அந்த ஓவியத்தின் தாக்கம் பற்றி பொன்னிற மேனியன் பேசி இருப்பது, உண்மையாகவே ஒரு வெள்ளைக்கார பெற்றோருக்கு, கருப்பு நிறத்தில் குழந்தை பிறக்க, எப்படி என ஆராயும் போது, அந்த வெள்ளைக்கார தம்பதியின் படுக்கை அறையில் ஒரு கருப்பினத்தவரின் ஓவியம் இருந்ததாகவும், காலையும், மாலையும் அந்த தாய் அந்த ஓவியத்தை விரும்பி பார்த்ததாவும்,அதன் எதிரொலி தான் குழந்தையின் நிறத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால் எல்லாருக்கும் இதே மாதிரி தாக்கம் இருக்கும் என இன்னும் ஆதாரப்பூர்வமாகா ஏதும் நிருபிக்க படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது மக்களே.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
அச்சச்சோ நம்ம சம்முவம் மாமா ரொம்பவே டவுனாயிட்டாரே
ஒன்றரை வருஷத்தில் ஆறு கடை க்கிளோஸ்ஸா?
மீதி நாலு கடையிலும் பிரச்சனையா?
அடேய் ஆர் கே
கண்ணாலத்துக்கு முன்னாடியே உன் மாமனாரை இந்த பாடுபடுத்துறியே
மரபணு டெஸ்ட் வேற எடுத்து சண்முகம் மாம்ஸ்ஸுக்கு நெஞ்சு வலி வர வைச்சுட்டியே, ராகவ்
குற்ற உணர்ச்சி குத்திக் கிழிக்குதா? பரவாயில்லை தைச்சுக்கலாம்,
சம்முவம் மாமா
மனிதர் மிகவும் உடைந்து விட்டாரா,
ருத்ரா டியர்?
ஐயோ பாவம்
பரவாயில்லை சம்மு ஒட்ட வைச்சுக்கலாம்
ஹா ஹா ஹா
ஆனால் சம்முவுக்கு இந்த கும்மாங்குத்து போதாதே
இன்னும் கொஞ்சம் சண்முகம் கஷ்டப்பட வேண்டும்
பட்டு திருந்த வேண்டும், ருத்ரா டியர்

So ராஜமாதாவை கார்மேகம் சந்திக்கப் போறாளா?
ராஜமாதா ராஜேஸ்வரி பராக் பராக்
அப்போ சனிக்கிழமைதோறும் சந்திக்கும்
உன் கோயில் ப்ரெண்ட் சர்க்கரைப் பொங்கல் வாங்கி உண்பதை மட்டும் ராகவ்விடம் போட்டு கொடுத்து விடாதே, ராதிகா

போட்டோ மட்டுமில்லை
கர்ப்பிணிப் பெண்கள் யாரை அதிகமா நினைக்கிறாங்களோ அவரைப் போலவே குழந்தை பிறக்கும் வாய்ப்பும் இருக்கு,
ருத்ரா டியர்

அப்புறம் ஒரு முக்கியமான மேட்டரு
இஸ்டோரி நொம்ப நொம்ப இஞ்சி இடுப்பழகியாட்டம் இண்டிகா கார் மாதிரி டயானா இன்டியானா இண்டிரஸ்ட்டாப் போவுது
அத்தொட்டு நீங்க நாளைக்கு மக்கா நாள் சனிக்கிழமை லீவு கீவு எடுக்காம இதே நேரத்தோட வந்திடுங்க, ருத்ரா டியர்
நாயித்துக்கிழமை வோணா லீவு எடுத்துக்கோங்கோ
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
Nice. கர்ப்பிணிகள் காலையில் எழுந்தவுடன் யாரை அதிகம் பார்க்கிறர்களோ அவரை போலவே குழந்தை இருக்கும் என்பது இன்னும் நெறைய கிராமங்களில் நம்பிக்கை தான் மா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top