ராதையின் கண்ணன் இவன்-20

E.Ruthra

Well-Known Member
#1
புதுவையை பூர்வீகமாக கொண்டு அப்பகுதி மக்களின் மரியாதைக்குறிய செல்வாக்கான குடும்பத்தில் தலைவராக மருத நாயகம் ஐயா, அவருக்கு உறுதுணையாக அவரின் துணைவி இந்திராணி அம்மையார், அவர்களின் ஏக புதல்வன் தான் தில்லை நாயகம். தில்லையின் பத்து வயதில் அவரின் தந்தை ஒரு மர்ம காய்ச்சலால் இறைவனடி சேர்ந்தார். கணவனை இழந்த சோகம் மலை அளவு இருந்த போதும், தங்களை நம்பி இருக்கும் குடும்பங்கள், தன் மகனுக்காக என தன் வருத்தம், வலிகளை ஒதுக்கி, தனி ஒரு ஆளாக நின்று அத்தனை சொத்துக்களையும் கட்டிக்காத்து, தன் ஒரே மகனான தில்லையையும் வளர்த்த இரும்பு பெண்மணி தான் இந்திராணி அம்மையார். நிறத்தில், உருவத்தில், குணத்தில், கம்பீரத்தில், ஆளுமையில், அழுத்ததில் என ராதிகா அப்படியே இவரின் வார்ப்பு. அதன் பொருட்டு தான் ராதிகாவிற்கான தில்லையின் "தாயி" என்ற அழைப்பு.

தன் மகனை சீராட்டி வளர்த்தவர், உரிய வயது வந்ததும், தொழில்களில் உள்ள நெளிவு சுழிவுகளை கற்றுக்கொடுத்து, குடும்ப தொழில்களை அவர் வசம் கொடுத்துவிட்டு வெறும் மேற்பார்வை மட்டும் பார்த்துக்கொண்டார், இந்திராணி அம்மையார். தன் மகன் தொழிலில் நிலையானதும் தேடி, சலித்து தன் மகனுக்கு பொருத்தமாக அவர் நினைத்த சிவகாமி அம்மையாரை தேர்ந்தெடுத்து மணம் செய்துவைத்தார்.

சிவகாமி அம்மையாரும், மாமியார் மெச்சும் மருமகளாக பொறுப்பாக இருக்க, தில்லை நாயகம், சிவகாமி அம்மையாரின் காதலுக்கு சாட்சியாக தங்க விக்கிரகம் மாதிரி தன்னை போல அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார் சிவாகாமி அம்மையார். கடந்த மூன்று தலைமுறையாக பெண் குழந்தை இல்லாத குடும்பத்தில், பிறந்த தன் பேத்திக்கு தெய்வானை என பெயர் சூட்டி கொண்டாடி தீர்த்தார் இந்திராணி அம்மையார்.

தில்லை தொழிலை கையில் எடுத்த பிறகு தொழில் நல்ல முன்னேற்றம் காண, உதவிக்கு என கொஞ்சம் தூரத்து உறவில் பிழைக்க வழி தேடி வந்த தங்கை முறையான செல்லம்மாவின் குடும்பத்திற்கு பிழைப்புக்கு ஒரு வழியை கொடுத்து தன்னுடன் வைத்து கொண்டார் தில்லை, இந்திராணி அம்மையாரின் ஆலோசனை படி. செல்லமாவின் கணவன் சுப்ரமணியன், தன் திறமையாலும், நேர்மையாலும் தில்லைக்கு நம்பிக்கையானவராகவும், உற்ற நண்பராகவும் மாறினார். அவரின் மகன் சண்முகம், தெய்வாவின் விளையாட்டு தோழன் ஆனார். இந்திராணி அம்மையார், செல்லமாவின் குடும்பத்தையும் தன் குடும்பத்தோடு அரவணைக்க, தெய்வா அவரின் செல்ல பேத்தியாக, சண்முகம் அந்த வீட்டின் பிள்ளையாக வளர்த்தனர்.

சண்முகமும் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்தார். கலையான முகம், திருத்தமான உடை, படிப்பில் கெட்டியென ஆசிரியர்களின் பிரியமான மாணவனாகவும், தில்லையின் மருமகன் என்ற பெயரோடும், மதிப்போடும் வலம் வந்தார். "மருமகனே" என வாய்நிறைய சண்முகத்தை அழைக்கும் தில்லை, அவருக்கு படித்துமுடித்த உடனே தன்னுடனே வைத்துக்கொண்டு தொழில்களை கற்று தந்தார். அந்த நிலையில் தன் இறுதி காலம் நெருங்குவதை உணர்ந்தாரோ என்னவோ இந்திராணி அம்மையார் தன் ஆசை பேத்தியின் திருமணத்தை காண விழைந்து அதை பற்றி பேச்சை வீட்டில் ஆரம்பித்தார். பெரியவர்கள் எல்லாரும் ஏற்கனவே தெய்வாவுக்கு, சண்முகம் தான் முடிவு செய்துவைத்து இருக்க, ஒரு நல்ல மங்கல நாளில் தெய்வாவுக்கும், சண்முகத்துக்கும் ஊர் மெச்ச திருமணம் செய்து வைத்தனர்.

ஆசை பேத்தியின் திருமண கோலத்தை பார்த்த மகிழ்ச்சியிலே இந்திராணி அம்மையார் பூவுலகை விட்டு பிரிய, குடும்பமே நிலை குலைய, தெய்வா தான் அதிகம் உடைந்தார். எல்லாரும் இழப்பில் இருந்தே மீளவே சற்று அதிக நாட்களை தான் எடுத்து கொண்டனர். சண்முகம் அழகான தன் காதல் மனைவியை தினமும் தன் காதலில் குளிப்பாட்டினார். சண்முகத்தின் அன்பு தான் தெய்வாவை, தன் பாட்டியின் இழப்பில் இருந்து மீள வகை செய்தது. கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்ற குறையை தவிர இருவரின் வாழ்க்கையும் தெளிந்த நீரோடையாகவே சென்றது. தெய்வாவின் மாமியார், மாமனாரும் அவரை ஒரு வார்த்தை கூட குத்திகாட்டாமல், தங்கள் மருமகளை தாங்க தெய்வா தான் மனதிற்குள் மறுகி ஏங்கினார் குழந்தைக்காக.

திடீரென ஒரு விபத்தில் சண்முகத்தின் பெற்றோர் மரணம் அடைய, ஏற்கனவே குழந்தை இல்லதா ஏக்கத்தில் இருந்த தெய்வாவுக்கு, பிரியமான அத்தை, மாமாவின் எதிர்பாராத மரணம் இன்னும் தன் கூட்டுக்குள் சுருக்க வைத்தது. இது நாள் வரை, இன்னும் வயது இருக்கிறது, நல்ல விசயம் தானாக நடக்கும் என பொறுமை காத்த தில்லை, இனியும் இப்படியே விட்டால் இந்த சோகத்திலே தங்கள் மகளை இழந்து விடுமோமோ என பயந்து, இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு சென்று வர சொன்னார். எப்படியும் தனக்கு குறை இருக்காது என நினைத்தாரோ என்னவோ சண்முகமும், உடன் பட இருவரும் மருத்துவரை பார்க்க முடிவு செய்தனர்.

தில்லைக்கு நிறைய தொழில்கள் இருந்தாலும் ஏனோ சண்முகத்திற்கு துணி வியாபாரத்தில் தான் ஈடுபாடு இருந்தது. அதில் தன் முழு கவனத்தையும் செலுத்தி, புதிய மாற்றங்களை செய்து, துணிகடையை இன்னும் பெரிதாக மாற்றினார். இதோடு நிற்காமல் மற்ற ஊரிலும் தங்கள் கடையை திறக்க வேண்டும் என ஆசை கொண்டு, முதல் கட்டமாக சென்னையில் தங்கள் கடையை திறக்க தீவிரமாக உழைத்துக்கொண்டு இருந்த நேரம் அது. மாமனார் சொன்ன சொல்லை தட்டாத மருமகனாய் தன் மனைவியை தங்கள் குடும்ப மருத்துவரிடம் அழைத்து சென்றார் பரிசோதனைக்காக, அங்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்.

இருவருக்கும் எல்லா பரிசோதனைகளும் எடுத்து முடிந்தவுடன், முடிவுகளுடன் மருத்துவரை காண சென்றனர் தம்பதியர்.

"வாங்க சண்முகம், வாம்மா தெய்வா, வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க" என, முடிவுகளை தன் கண்ணாடி அணிந்த கண்களால் ஆராய்ந்தவாறே மருத்துவர் கேட்க,

"நல்லா இருக்காங்க டாக்டர்" ஏனோ பரிசோதனைகள் முடிவை பார்த்து என்ன சொல்லுவரோ என முழு பயத்துடனே தெய்வா அவரின் கேள்விக்கு பதில் அளித்தார். இருவரின் கோப்புகளையும் அலசி ஆராய்ந்தவர், அதை மூடி வைத்தவாறே இருவரையும் நிமிர்ந்து பார்த்து, பேச ஆரம்பித்தார்.

"தெய்வா, உன்னோட ரிபோட்ஸ் கிளியரா இருக்கு, ஒரு குழந்தைக்கு அம்மாவாகுறதுல உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனா" அவர் பேச பேச அகம் மகிழ்ந்து போன தெய்வா, அவரின் கடைசி "ஆனா"வில் சிறு பயத்துடன் அவரை ஏறிட்டு பார்க்க,

"சண்முகம் ரிப்போர்ட்ல தான் ஒரு சிறிய பிரச்சனை, பட் மெடிஸின்ல சரி பண்ண கூடிய பிரச்சனை தான், என்ன அவர் ஒரு மூணு மாசமாவது மெடிஸின் எடுக்குற மாதிரி இருக்கும்" என "சண்முகத்திற்கு தான் குறை" என உடைத்து சொல்லாமல், தெரிந்த குடும்பம் என்பதால் நாசுக்காக சொல்ல, தெய்வா நிமிர்ந்து தன் கணவனை பார்க்க அவரின் முகம் இறுகி போய் இருந்தது. சில நிமிடங்களில் ஒரு முடிவுக்கு வந்த தெய்வா தயங்கி, தயங்கி,

"இந்த விசயம் வெளில யாருக்கும் தெரிய வேண்டாம் டாக்டர், எங்க வீட்டுல இருக்கவங்க கிட்ட கூட சொல்ல வேண்டாம், அப்பா கேட்டா, கொஞ்சம் வீக் அஹ இருக்காங்க, மெடிஸின் கொடுத்து இருக்கேன், வேற ஏதும் இல்லைனு சொல்லுங்க டாக்டர் பிலீஸ்" என கேட்க, தெய்வாவை புரிந்துகொண்டு அவரும் சரியென,
எதும் பேசாமல் மருந்துகளுடன் இருவரும் வீட்டிற்கு சென்றனர்.

ஒரு முழு ஆண் மகனுக்கு இது தன் தன்மானத்தில் விழுந்த எவ்ளோ பெரிய அடி என சொல்ல வேண்டியது இல்லை. மருந்துகளில் சரி பண்ண கூடிய பிரச்சனையே என்றாலும், தனக்கு ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆகும் தகுதி இல்லை என்பது அவரின் முகத்தில் அறைய, தன்னிறக்கத்திலும், அவமானத்திலும் சுருண்டார் சண்முகம். இந்த தன்னிறக்கம் தன் போல ஒரு தாழ்வு மனப்பான்மையை அவர் மனதில் ஆழமாய் விதைத்தது.

தெய்வா தான், அவரிடம் பேசி, பேசி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வர போராடி கொண்டு இருந்தார். குழந்தை இல்லை என்பதை தவிர எல்லா விதத்திலும் நிறைவான வாழ்க்கை தான் தங்களுடையது என அவருக்கு தன்னால் முடிந்த வரை தன் செயல்கள் மூலமாக உரைத்துக்கொண்டே ஒரு நல்ல துணைவியாக அவருக்கு ஆதரவாக நடந்து கொண்டார் தெய்வா. தெய்வாவின் முன் ஏதும் வெளிகாட்டி கொள்ளாமல் இருக்கும் சண்முகத்தை தனிமையில் அந்த எண்ணங்கள் அரித்து கொண்டு இருந்தனர்.

மருத்துவர் சொன்னபடி மூன்று மாதங்கள் கழித்து, தெய்வா கருவுற்றார். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி என்பதால் வீடே மகிழ்ச்சியாக சண்முகமும் தெய்வாவை கொண்டாடி தீர்த்தார். மருத்துவரின் ஆலோசனை படி, மாடியில் இருந்த தெய்வா, சண்முகத்தின் அறை கிழே இருந்த இந்திராணி அம்மையாரின் அறைக்கு மாற்றப்பட்டது. முன்னரே சென்னையில் கடை ஆரம்பிக்க செய்த முயற்சிகளின் பலனாக அடுத்தக்கட்ட வேலைகளை பார்க்க கட்டாயம் சண்முகம் சென்னை செல்ல வேண்டிய சூழல். அவரும் மனமே இல்லாமல் தெய்வாவிற்கு, ஆயிரம் பத்திரங்களை சொல்லி, வீட்டில் உள்ள பெண்ணை பெற்றவர்களிடமே அவரை கவனமாக பார்த்து கொள்ள ஓராயிரம் முறை சொல்லிவிட்டு சென்னை சென்றார் சண்முகம்.

எந்நேரமும் வேலை நெட்டிதள்ள நேரம் கிடைக்கும் போது எல்லாம் தன் மனைவியை காண புதுவை வந்தார் சண்முகம். கடை ஆரம்பிக்க என ஆரம்ப கட்ட வேலைகள், பிறகு கடை திறந்ததும் அதை நிலைநிறுத்த என வேலைகள் அணிவகுக்க ஊருக்கு செல்வதும் குறைய ஆரம்பித்தது. எல்லா நேரமும் வேளை ஆக்கிரமித்து கொள்ள, இரவின் தனிமை அவரின் குறையை பூதாகரமாக காட்ட, தன்னை நினைத்தே அவமானப்படும் சண்முகம், இப்போது தான் குழந்தை வந்துவிட்டதே என தன்னை தானே தேற்றியும் கொள்வார்.தெய்வா குழந்தை உண்டான பிறகும் அவரால் மருத்துவர் சுட்டிக்காட்டிய தன் குறையை மறக்க முடியவில்லை, ஏனோ அடிக்கடி அதை நினைவு கூர்ந்து தன்னை தானே வதைத்து கொள்வதையும் அவரால் தவிர்க்க முடியவில்லை.

காலையில் எழுந்ததும் தன் பாட்டியின் புகைப்படத்தில் தான் தன் பார்வையை நிலைக்க விடுவார் தெய்வா, மானசீகமாக அவரிடம் ஓரிரு நிமிடம் உரையாடும் தெய்வாவிற்கு முழு நேரமும் அந்த அறையிலே தான். ரொம்ப நாள் கழித்து கருவுற்றிருப்பதால் மருத்துவர் கவனமாக இருக்க சொல்ல உணவு முதற்கொண்டு அறைக்கே கொண்டு வந்து நிஜமாகவே தரையில் கால்படாமல் பார்த்து கொண்டார் சிவகாமி. கணவனின் அருகாமையை மனம் தேடினாலும், அவரின் வேலை பளுவை புரிந்து கொண்டு, அப்போதும் நல்ல மனைவியாகவே நடந்து கொண்டார் தெய்வா. தெய்வா எப்போதுமே ஒரு நல்ல மனைவி மட்டும் தான் போல.

தெய்வாவிற்கு மருத்துவர் கொடுத்த நாளிற்கு இரண்டு வாரம் முன்னவே பிரசவலி எடுக்க, அவரை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கும் தகவல் வந்து சேர உடனே புதுவை கிளம்பினார் சண்முகம். வழியில் தன் கார் ரிப்பேர் ஆகிவிட, என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்க, அவரின் டிரைவர் அந்த வழியே வந்த ஒரு காரை நிறுத்தி, சண்முகத்தின் அவசர நிலையை சொல்ல, அந்த வண்டியில் இருந்தவரும் தானும் புதுவை தான் செல்வதாகவும், தானே அழைத்து செல்வதாகவும் சொல்ல, அந்த காரில் யார் இருக்கிறார்கள் என கூட பார்க்காமல் பதட்டத்தில் ஏறி அமர்ந்தார் சண்முகம்.

"நீ சண்முகம் தானே" என பழக்கப்பட்ட குரல் கேட்க, திரும்பி பார்க்க அவரின் கல்லூரி தோழன் முத்துவேல் அமர்ந்து இருந்தார் டிரைவர் சீட்டில்.

"வேலா நீயா, எப்படி இருக்க, பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு", என நிறைய நாள் கழித்து தன் நண்பனை பார்த்த மகிழ்ச்சியில் பேச,

"நா நல்லா இருக்கேன், நா பிசினஸ்காக வடநாட்டு பக்கம் போய்ட்டேன்பா,ரொம்ப வருஷம் கழிச்சி இப்போ தான் ஊருக்கு வரேன், நீ சொல்லு எப்படி இருக்க"

"எனக்கு என்னப்பா நா நல்லா இருக்கேன், அப்புறம் உனக்கு கல்யானம் ஆகிடுச்சா, எத்தனை பசங்க" என சற்று இலகுவாக பேச ஆரம்பித்தார்.

"ஆச்சு பா, ரெண்டு பசங்க, அப்புறம் நீ என்ன உன்னோட மாமா பொண்ண தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட, உன்னோட மனைவிக்கு பிரசவலி வந்து ஹாஸ்பிடல இருக்குறதா உன்னோட டிரைவர் சொன்னா, இது எத்தனையாவது குழந்தை" என விசாரிக்க,

"ஆமா, என்னோட மாமா பொண்ணு தான், நீ கூட பார்த்து இருப்பியே தெய்வா, கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் கழிச்சி இப்போ தான் குழந்தை உண்டாகி இருக்கா" என மீண்டும் பதற்றம் வந்து ஒட்டிக்கொண்டது தன் மனைவியின் நினைவில்.

"உனக்கு கல்யாணம் ஆகி ஒரு ஆறு இல்ல ஏழு வருஷம் இருக்குமா, உனக்கு பெரிய மனசு தான்பா, அவன் அவன் ஒரு வருஷத்துலயே பொண்டாட்டி உண்டாகலனா வேற கல்யாணம் பண்றான், நீ இவ்ளோ நாள் பொறுமையா இருந்து இருக்கியே" என புகழ்வது போல, சண்முகத்தை ஆழம் பார்க்க, அவரின் எண்ணத்தை அறியாத சண்முகமோ,தனக்கு தான் குறை என தெரிந்து நாள் முதல் யாரிடமும் சொல்லாமல், சொல்ல முடியாமல் தன்னுள்ளே பூட்டி வைத்த இருந்த இறுக்கம், இப்போது தெய்வாவின் நிலையால் வந்த பதட்டம், ரொம்ப நாள் கழித்து தன் நண்பனை சந்தித்த மகிழ்ச்சி, இப்போது தான் குறை இல்லையே என்ற ஒரு எண்ணம் எல்லாம் சேர, தன் நண்பன் என நினைக்கும் அவனிடம்,

"இல்ல வேலா, எனக்கு தான் பிரச்சினை, தெய்வா இது தெரிஞ்ச அப்ப கூட ஒரு வார்த்தை தப்பா பேசல தெரியுமா, எனக்கு சப்போர்ட்டிவா தான் இருந்தா, கொஞ்ச நாள் மெடிஸின் சாப்பிட்டேன், இப்போ எங்களுக்கு குழந்தை பிறக்க போகுது" என தெய்வா தன் பெற்றோரிடம் கூட சொல்லாத விசயத்தை தன் நண்பனிடம் சொன்னார் சண்முகம். அது எல்லோர் வாழ்விலும் ஏற்படுத்த போகும் கொடூரமான விளைவுகளை பற்றி அறியாமல்.

இவன் ராதையின் கண்ணன்…………………………

பி.கு:
இன்றைக்கு இன்னொரு எபி கொடுத்து FB முடிக்கிற ஐடியால தான் இருக்கேன், ஆனா எப்போ போஸ்ட் பண்ணுவேன்னு தான் தெரில மக்களே, முடிந்த வரைக்கும் சீக்கிரமா கொடுக்க டிரை பண்றேன்...
 
#6
அட கூமுட்டை சண்முகம்
உன் பொண்ணு ஸ்வேதா மாதிரியே இவ்வளவு முட்டாளா இருந்திருக்கியே
நீயெல்லாம் படிச்சு என்ன பிரயோஜனம்?
நல்லவன்னு நம்பி அந்த கேடுகெட்ட முத்துவேலிடம் போய் எல்லாத்தையும் சொல்லியிருக்கியே
அந்த வீணாப் போனவன் என்ன சொல்லி உன் நிம்மதியைக் கெடுத்தான்னு தெரியலையே
அடுத்து என்ன நடந்ததுன்னு சீக்கிரமா வந்து சொல்லுங்க, ருத்ரா டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes