ராதையின் கண்ணன் இவன்-10

Advertisement

E.Ruthra

Well-Known Member
வெள்ளிக்கிழமை இரவு கிறிஸ் ராதிகாவிற்கு அழைத்தான்.

"ஹலோ டாலி"

"சொல்லு கிறிஸ்"

"இன்னைக்கு காலேஜ் எப்படிடா போச்சி, பிரேஷர்ஸ் டே சொன்னியே"

"நல்ல போச்சு, கிறிஸ்"

"சரி டா, நாளைக்கு ஐந்து மணிக்கு ராகவ் கிட்ட பேசலாமா"

"ஹ்ம்ம் சரி கிறிஸ்"

"எங்க மீட் பண்ணுவிங்க நீங்க ரெண்டு பேரும்"

"ஏதாவது காபி ஷாப்ல தான்" சாதாரணமாக கூற,

"இல்லை வேண்டாம், அது சரி வராது", வெளியே எங்கும் ராதிகா தனியே ராகவுடன் செல்வதில் கிறிஸ்கு விருப்பம் இல்லை அது பொது இடமே என்றாலும். அவனை பொறுத்தவரை அவனின் டாலி இன்னும் சிறு பெண், நல்லவர், கெட்டவர் யாரென தெரியாமல் எப்படி அனுப்ப முடியும், அதும் ராகவை ஒரு வாரமாக தான் தெரியும் எனும் போது. தானும், தில்லையும் அங்கு இல்லாத போது, வீட்டின் நிலவரம் இவன் அறிந்ததே என்பதாலும் இன்னும் இரண்டு வருடம் அந்த ராகவன் ஆகப்பட்டவன் தான் நண்பனாக உடன் இருப்பான் எனும்போது அவனை சந்திக்கவே கிறிஸ் பெரிதும் விரும்பினான்.ராகவை பற்றி ராதிகா சொன்னதை வைத்து எந்த முடிவுக்கும் வர அவன் தயாராக இல்லை, இது வேலை சம்பந்தமான பேச்சுவார்த்தை தான் என்றாலும், ஒரே வாரத்தில் தன் டாலியிடம் நெருங்கியவனை இவன் நேரடியாக பேசி அவனை அறிய வேண்டும் என்பதே கிறிஸ்கு பிரதானம்.ஒரு வேளை இந்த வேலை பற்றிய பேச்சு வரவில்லை என்றாலும் ராதிகாவிடம் கண்டிப்பாக ராகவை தன்னிடம் அறிமுகப்படுத்த சொல்லி இருப்பான் என்பது தான் உண்மை. ராதிகாவின் மீதான கிறிஸ்ன் பாசம் தன் சிறகுக்குள் வைத்து தான் குஞ்சை பாதுகாக்க நினைக்கும் தாய் பறவையின் பாசத்திற்கு ஒப்பானது.

"அப்போ, எங்க மீட் பண்றது கிறிஸ்"

"பேசாம, வீட்டுக்கே வர சொல்லு டாலி",அவனின் மனவோட்டத்தை புரிந்தது கொண்ட ராதிகாவும், ராகவினால் தனக்கு தீங்கு இழைக்க முடியாது என்பது சொல்ல விழைந்தாலும், தானே பேசி தெளியும் வரை கிறிஸ் நம்பமாட்டான் என தெரிந்து, இந்த வீடா என தயங்கினாலும், கிறிஸ்காக சம்மதித்தாள்.

"ஹ்ம்ம் சரி கிறிஸ்", அதே சமயம் ராகவின் வருகையை தில்லையிடம் சொல்லவும் தவறவில்லை. ராதிகாவை பொறுத்தவரைக்கும், தன் செய்கைக்கு அவள் விளக்கம் அளிக்க வேண்டியதும், சம்பந்தம் பெற வேண்டியதும் இந்த இருவர் தானே.

ராதிகா, நேரத்தையும், சந்திக்கும் இடத்தையும் சொல்ல சனி கிழமை காலை எட்டு மணிக்கு ராகவனுக்கு அழைத்தாள்.

"ஹலோ"

"ஹ்ம்ம்", தூக்கத்திலே பேசுவது புரிய,

"ஹே ராகி" இவளின் ராகி என்ற அழைப்பில் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான். காலையிலே அவனின் கார்மேகத்தின் குரலில் திருப்பள்ளி எழுச்சி, மனசு எல்லாம் மத்தாப்பாக,

"சொல்லு ராதா", உற்சாகம் மறைக்கப்பட்ட சாதாரண குரல்,

"என்ன இன்னும் விடியலையா உனக்கு"

"இல்ல நேத்து தூங்க கொஞ்சம் லேட் ஆகிடுச்சு அதான்" (நீ தான் மோகினி மாதிரி பார்க்குற இடத்துல எல்லாம் தெரிஞ்சா எங்க தூங்குறது, இதை சொன்னாலும் அப்படியே உனக்கு புரிஞ்சிடும்)

"ஹ்ம்ம் சரி, சரி, கிறிஸ் பேசுனாங்க, ஐந்து மணிக்கு மீட்டிங் வச்சிக்கலாம்னு சொன்னாங்க, உனக்கு ஓகே தானே"

"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை, எங்க மீட்டிங்", விடுமுறை தினத்திலும், தன் கார்மேகத்தை சந்திக்க போகும் மகிழ்ச்சி,

"நீ, நா தங்கி இருக்க வீட்டிற்கே வந்துடு, நா உனக்கு அட்ரஸ் மெசேஜ் பண்றேன் ஓகே வா"

"ஹ்ம்ம் சரி, ராதா" என்று கை பேசியையை வைத்த பொன்னிற மேனியனுக்கு ஆயிரம் யோசனைகள். அந்த வீட்டில் இருப்பவர்களுக்கும், அவனின் கார்மேகத்திற்கும் என்ன உறவு என இவன் அறியான், என்ன பிரச்சனை என்பதும் இவன் அறியான், எதுமே தெரியாமல் அங்கு எப்படி செல்வது, தன் முன்னால் அந்த வீட்டில் உள்ளவர்கள் அவனின் கார்மேகத்தை ஏதேனும் சொன்னால் தன்னால் பொறுக்க முடியாமா, தன்னால் அங்கு எந்த ரசபாதமும் நிகழ கூடாது, இதை எல்லம் விட கிறிஸ்வுடன் பேச வேண்டும், ராதிகாவிற்கு நெருக்கமான ஒருத்தருடன் முதல் சந்திப்பு, அது நல்ல முறையில் நடக்க வேண்டுமே என்ற பரிதவிப்பு, இது எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி கார்மேகத்தை காண போகிறோம் எனும் மகிழ்ச்சி மனதுக்குள் குமிழியிட இப்போதே அவளை காண ஏக்கம் கொண்டான். ஒருவாறு நேரத்தை நெட்டி தள்ளி கிளம்பி வெளியே வந்தான்.

பொன்னிற மேனியன் வாசம் விடுதியில் என்பதால் அவன் தன் பயன்பாட்டிற்கு என தனியாக எந்த வாகனத்தையும் இது வரை அங்கு எடுத்துவரவில்லை. அதனால் கார்மேகம் அனுப்பிய முகவரிக்கு, கார் புக் செய்து அவள் சொன்ன நேரத்திற்கு ஒரு அரைமணி நேரம் முன்பாகவே வீட்டிற்கு சென்றான். வீட்டை அடைந்து செக்குரிட்டியிடம் இவன் கல்லூரியின் பெயரை சொன்னதுமே உள்ள செல்ல அனுமதி கிடைத்தது. அது ஸ்வேதா தன் நண்பர்கள் யார் வந்தாலும் தடை இல்லாமல் வருவதற்காக செய்த முன்னேற்பாடு என இவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை தான். வீட்டிற்குள் செல்ல, ஏதிர் பட்ட வேலையாள் இவனை வரவேற்பறையில் உள்ள சோபாவில் அமர வைத்துவிட்டு செய்தி சொல்ல உள்ளே சென்றான்.

பொன்னிற மேனியனோ,ராதிகாவிற்கு அழைத்து தான் வந்துவிட்டதாக கூற சில நிமிடங்களில் வருவதாக சொல்லி வைத்தாள். ராகவ், வீட்டை சுற்றி கண்களை ஓட விட, தெய்வாவும், மதிய உணவிற்கு வந்து ஒரு குட்டி தூக்கம் போட்ட சண்முகமும் அப்போது தான் தங்கள் அறையில் இருந்து வேலையாள் சொன்ன செய்தி கேட்டு யாரென பார்க்க உள்ளே இருந்து வந்தனர். ஸ்வேதாவின் நண்பர்கள் ஆண், பெண் என பாகுபாடின்றி அவளை காண எப்போதும் வருவதும், எல்லோரும் சேர்ந்து வீட்டையே இரண்டு பண்ணுவதும் வழக்கம் தான், ஆனால் இந்த கம்பிரமான தோற்றமும், மிடுக்குமான இவனை ஸ்வேதாவின் நண்பண் என யோசிக்க முடியாமல் போக, ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே யாராக இருக்கும் என்ற எண்ணத்துடனே அவனிடம் தன் கணவன் பின்தொடர சென்ற தெய்வா, அவனுக்கு ஏதிர் சோபாவில் அமர்ந்தனர்.

" தம்பி, யாரு, யார பார்க்கணும்"

"நான் ராகவ் கிருஷ்ணா, எம்.ஐ.பி காலேஜ்ல படிக்கிறேன், வேலை விசயமாக பிரின்ட்ஐ பார்க்க வந்தேன்" என கூற அவனின் கல்லூரி பெயரை கேட்டதும் தங்கள் ஸ்வேதாவிற்கு தெரிந்தவர் என முடிவுக்கு வந்தனர் இருவரும். அதேநேரம் சண்முகம் ஒரு வேலையாளை அழைத்து ஸ்வேதாவை இந்த மாதிரி நண்பன் ஒருவன் காத்திருப்பதாக கூறி அழைத்து வரசொன்னவர், பொன்னிற மேனியனிடம் பொதுவாக பேச ஆரம்பித்தார்.

இவர்களை பார்த்ததும், அவனின் கார்மேகம் சொன்ன தெய்வாவும், தொட்டாலே ஒட்டிக்கும் என அவனின் கார்மேகத்தை பார்க்கும் சண்முகமும் இவர் தான் என்பது அவனுக்கு தெளிவானது. அவர்களிடம் பேச துளியும் விருப்பம் இல்லை என்றாலும், தானாக பேசுவர்களிடம் முகம் திருப்புவது நாகரிகம் இல்லை என்பாதலே முகம் மாறாமல்,அவர் கேள்விகளுக்கு விடை அளித்த வண்ணம், எப்போதடா தன் கார்மேகத்தை பார்ப்போம் என அவளின் தரிசனத்திற்காக காத்திருந்தான்.

தன்னை காண தன் நண்பன் யாரோ வந்து இருப்பதாக வேலையாள் சொல்லவும், தான் யாரையும் வர சொல்லவில்லையே என யோசனையோடு வெளியே வந்த ஸ்வேதா யாரை எதிர்பார்த்து இருந்தாலும், நிச்சயம் பொன்னிற மேனியனை எதிர் பார்க்கவில்லை. ஆனந்த அதிர்ச்சியோடு அவனை தன் வீட்டில் கண்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வந்த ஸ்வேதா, ஆர்வமுடன் அவனின் அருகில் சென்று,

"வாவ், ஆர்.கே, வாட் எ பிலசண்ட் சர்பரைஸ்" அவளின் உற்சாக குரலில் திரும்பிய ராகவ் இவளை காணவும், புருவங்கள் நெறிய,

"நீ இங்க என்ன பண்ற"

"நல்ல கேட்டீங்க போங்க, இது என்னோட வீடு, நீங்க என்னோட வீட்டுல என்னால நம்பவே முடில, உண்மையை சொல்லுங்க என்ன பார்க்க தானே வந்திங்க" பெற்றோர் அங்கு இருப்பதையும் மறந்து ஏதோ அவன் இவளை பெண் கேட்க வந்ததை போல் உற்சாக பந்தாய் குதிக்க, ஸ்வேதாவின் பெற்றோரும் அவளின் அதிகப்படியான ஆர்வத்தை கண்டு புருவம் உயர்த்தினர்.

சண்முகம் ஸ்வேதாவின் உற்சாகம் ததும்பும் முகத்தை மட்டும் கொண்டு நம் பெண்ணிற்கு இவனின் மேல் ஆர்வம் ஏதும் இருக்குமோ, இவன் தன் மகளுக்கு பொருத்தமாக இருப்பானா என அவனின் மனதை பற்றி யோசிக்காமல், தன் மகளை மட்டுமே பிராதனமாக கொண்டு அவனை ஆராட்சி பார்வை பார்க்க, தெய்வாவோ ஸ்வேதாவின் ஆர்வமான முகத்தையும், பொன்னிற மேனியனின் குழப்ப முகத்தையும் பார்த்து அப்போ இவன் ஸ்வேதாவை பார்க்க வரலையா என யோசிக்கலானர். இவை அனைத்தும் ராதிகா வர எடுத்துக்கொண்ட பத்து நிமிடங்களில் நடக்க, பொன்னிற மேனியன் ஸ்வேதாவிற்கு பதில் அளிக்க வாய் திறக்கும் முன் யாரோ வரும் அரவம் கேட்டு அனைவரும் மாடிப்படியை பார்க்க, ராதிகா அவசரமாக கீழே வந்து கொண்டு இருந்தாள்.

அவனின் கார்மேகத்தை பார்க்கவும், பொன்னிற மேனியன் அகத்தின் மகிழ்ச்சியில் முகம் தானாய் பூவாய் மலர, ஸ்வேதாவிற்கு அப்போது தான் அவன் தன்னை காண வரவில்லை என உண்மை முகத்தில் அறைய, தன்னை காண வந்ததாக நினைத்த தன் மடத்தனத்தை நினைக்க நினைக்க தன் மேலே ஆத்திரம் வர,இவளிடம் தான் தோற்பதா என்ற முகம் கோபத்தில் சிவக்க, இங்கு இருந்து இருவரும் பேசுவதை கேட்க சகிக்காமல் அங்கு இருந்து வேகமாக தன் அறைக்கு விரைந்தாள். இருவர் முக பாவத்தையும் கவனமாக குறித்துக்கொண்டார் தெய்வா. தன் பெண்ணை மட்டுமே கவனித்து கொண்டு இருந்த சண்முகம், உலகத்தின் மொத்த மகிழ்ச்சியையும் காட்டிய அவரின் பெண்ணின் முகம், ஒரே நிமிடத்தில் ஏமாற்றத்தில் சுருங்கி, அடுத்த நிமிடமே கோபத்தில் சிவக்க அவள் செல்லவும்,அவளின் முக மாற்றத்தையும், அவள் பார்வை சென்ற திக்கையும் பார்க்க, ராதிகாவின் வரவு தான் அவளின் கோவத்திற்கும், ஏமாற்றத்திற்கும் காரணமா ஆனால் ஏன் என்று எண்ணமிட்டவரே திரும்பி ராதிகாவை பார்த்தார்.

"சாரி, ராகி, வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சா" என அவனின் கார்மேகம் கேட்க, வெள்ளை நிறத்தில் நீள பாவடையும், அதற்க்கு தோதாக இளம் ரோஜா வண்ணத்தில் மேல் சட்டையும் அணிந்து வந்தவள் மீது கண்களையும், தன் மனதையும் திருப்பி, அவளின் கேள்விக்கு பதில் அளிக்க பொன்னிற மேனியன் அதிகமாகவே சிரமப்பட வேண்டி இருந்தது,

"இல்ல ராதா இப்போ தான் ஒரு பத்து நிமிசம் ஆகுது"

"ஏதாவது சாப்டியா"

"அது எல்லாம் எதும் வேண்டாம் ராதா" என்ற பொன்னிற மேனியனின் பதிலை கேட்டவாறே வந்த ராதிகா அப்போது தான் அங்கே இந்த வீட்டின் மனிதர்கள் புடைசூழ அமர்ந்து இருந்த ராகவனை பார்த்து புருவத்தை உயர்த்தினாலும், பெருசாக ஏதும் அலட்டி கொள்ளாமல், வந்தவருக்கு ஏதும் கொடுக்க கூட இல்லையா என்பதாய் தெய்வாவாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கமலாமா என உரக்க அழைத்தாள். அவர் வந்ததும்,

"கமலாமா, ஒரு டீ ஸ்டாரங்அஹ, சுகர் டூ ஸ்பூன்" பக்குவம் சரிதானே என்பது போல் திரும்பி பொன்னிற மேனியனை பார்த்து, ஒப்புதலாக அவனின் தலை அசைப்பை பெற்றவாறே திரும்ப, இந்த பார்வை பரிமாற்றம், பிரத்தேயக பெயர் அழைப்பு என எல்லாம் தெய்வாவின் புருவத்தை உயர்த்தியது.

"நீங்க காபி தானேமா குடிப்பிங்க" தயங்கியவாறே கேட்க, ராதிகா ஒரு சிரிப்புடன்,

"எனக்கு இல்லை கமலாமா, என்னோட பிரின்ட்க்கு, நீங்க போட்டு மேல எடுத்துட்டு வந்துடுங்க, அப்படியே கொஞ்சம் ஸ்னாக்ஸ்,எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு, போலாமா ராகி" என்றவாறே அவனை மேலே இருந்த கூடத்திற்கு அழைத்து வந்தாள். தெய்வா இவருக்கும் இடையே வெறும் நட்புதான என அனுமானிக்க முடியாமல் தவிக்க, சண்முகம் அந்த நட்பிற்கான காரணத்தை ஆராய முற்பட்டார். அவரை பொறுத்தவரை இப்படிப்பட்ட மயக்கும் தோற்றம் உடைய ஒருவன், ராதிகாவுடன் வெறும் நட்பு மட்டுமே கொண்டாலும், அது எதையும் எதிர்பார்க்கமல் ஏற்பற்றது என நம்ப அவர் தயாராக இல்லை. அவனின் மீதான தன் பெண்ணனின் ஆர்வமும், அவன் வேலையாக வந்ததாக சொல்லியதும் உறுத்த இது அந்த ராகவனிடம் பேச வேண்டிய விசயம் என தீர்மானித்துக்கொண்டார்.

மேலே அவனின் கார்மேகத்தை தொடர்ந்து சென்ற பொன்னிற மேனியனும், கார்மேகமும், அங்கு இருந்த சோபாபில் அமர, அவனை அங்கு அமர சொல்லிவிட்டு உள்ளே சென்று தன் மடிகணியை எடுத்து வந்தாள்.

"இன்னும் கிறிஸ் வரல போல, கொஞ்சம் நேரம் இருக்கு இல்ல, வெய்ட் பண்ணுவோம்"

"ஹ்ம்ம் சரி ராதா, ஆமா கிறிஸ் யு.எஸ்ல இருக்கிறதா சொல்ற, உனக்கு எப்படி தெரியும் அவரை"

அதுவா என கார்மேகம் தனக்கு, கிரிஷ் எவ்வாறு அறிமுகம் என சொல்ல ஆரம்பிக்க, பொன்னிற மேனியுடன் சேர்ந்து நாமும் அதை திங்கள் அன்று தெரிந்துகொள்வோம் மக்களே…..


இவன் ராதையின் கண்ணன்……
 

banumathi jayaraman

Well-Known Member
இதெல்லாம் செல்லாது செல்லாது,
ருத்ரா மேடம்
கிறிஸ் யாருன்னு அவிங்க ரெண்டு
பேருக்கு முட்டும் தெரிஞ்சா போதுமா?
எங்களுக்கும் தெரியத் தாவல
அதனால டுடே நோ லீவு, ருத்ரா டியர்

இவன் பொண்ணு ஸ்வேதா பெரிய
பேரழகி கிளியோபாட்ரா
அவ இஷ்டப்பட்டா அப்பன் நீயி
நடத்துவியா?
யோவ் சண்முகம்
உன்னைய மாதிரிதானே தன் பொண்ணு நினைச்சதை நடத்தணும்னு அவர் இருந்திருந்தால் ராதிகாவின் அப்பாவும் நினைப்பாரு?

என்னதான் உனக்கு உறுத்து உறுத்துன்னு உறுத்தினாலும் என்னதான் நீ பேச்சு வார்த்தை நடத்தினாலும் அவனோட கார்மேகத்தைத் தவிர வேற எவளையும் ராகவன் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டான்
போ போயி எங்கேயாவது போய்
முட்டிக்கோ சண்முகம்
வந்துட்டான் பெருசா வளமை பேச
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top