யாருமிங்கு அனாதையில்லை - 7

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!”
(நாவல்)

எழுதியவர் :
பொன்.கௌசல்யா​

அத்தியாயம் 7

கோபியுடன் அமர்ந்து உணவருந்தி முடித்தவள், அவனைத் தூங்க அனுப்பிவிட்டு, பெரியவரின் காலடியில் வந்து அமர்ந்தாள்.

அவருடன் பேசியவாறே அவரது கால்களை அமுக்கி விட்டவளைக் கண்ணீர் மல்கப் பார்த்தார் அவர்.

எதேச்சையாக அவர் முகத்தைப் பார்த்த ஜோதி, அவரது விழியோரம் பூத்திருந்த கண்ணீர் மொக்குகளைப் பார்த்து விட்டு, “அய்யய்யோ...ஏன் அழறீங்க?” பதறிப் போய்க் கேட்டாள்.

கண்ணீருடன் சிரித்தவர், “ஹூம்...இது அழுகையில வந்த கண்ணீர் இல்லைம்மா...ஆனந்தத்தில் வந்த கண்ணீர்!...என் பையன் என்னை விட்டுப் போனதும் என் எதிர்காலமே இருண்டு போச்சுன்னு நெனச்சேன்...மகனுக்கு மகனா வந்து என்னை அப்பாவா ஏத்துக் கிட்டு...இப்படியொரு அமோகமான வாழ்க்கையைக் குடுத்திருக்கானே இவன்...இவந்தாம்மா தெய்வம்!”

“அய்யா...நீங்க மட்டுமா?...இங்க இருக்கற எல்லோரையுமே இருட்டுல இருந்து மீட்டு..வெளிச்சத்துக்குக் கொடு வந்தவர்தானே அவர்?”

“என்னை அவன் “அப்பா”ன்னு ஏத்துக்கிட்ட பிறகு...ஒரு அப்பாவோட கடமையை நான் செய்யாம இருந்தா அது தப்பில்லையாம்மா?..” பெரியவர் பீடிகையாகக் கேட்க,

“கண்டிப்பா..”

“அதுக்காகத்தான் இன்னிக்கு கல்யாணசுந்தரத்தை வரச் சொல்லியிருக்கேன்!” என்றார் பெரியவர் வாயெல்லாம் பல்லாக,

“யாரு கல்யாணசுந்தரம்?” ஜோதி முகத்தைச் சுருக்கிக் கொண்டு கேட்டாள்.

“ம்...அவன் ஒரு கல்யாண புரோக்கர்!...என் மகனோட ஜாதகத்தை ஏற்கனவே அவன்கிட்டக் குடுத்திருந்தேன்!...அதுக்குப் பொருத்தமான நாலஞ்சு பொண்ணுக ஜாதகங்களைக் கொண்டு வர்றேன்னு சொல்லியிருக்கார்...இப்ப வந்துடுவார்!”

யாரோ தன் தலையில் சம்மட்டியால் ஓங்கி அடித்தாற் போலிருந்தது ஜோதிக்கு. கண்கள் மங்கிப் போக, சுவாசம் வேகமானது. கைகளும், கால்களும் சத்தற்று இற்று விட்டாற் போலாகின.

“ம்மா...ஏம்மா காலை அமுக்கறதை நிறுத்திட்டே?”

பெரியவர் கேட்ட பிறகுதான் ஜோதிக்கே தெரிந்தது, தான் அதை நிறுத்தி விட்ட விஷயம். இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல், சட்டென்று வேக, வேகமாக அமுக்கலானாள்.

பெரியவர் தொடர்ந்தார், “ம்மா...புரோக்கர் வரும் போது நீயும் எங்க கூட இரும்மா...திவாகருக்கு பொருத்தமான பொண்ணை நாம எல்லோருமாச் சேர்ந்தே தேர்ந்தெடுப்போம்!”

அதற்கு, “சரி”யென்று சொல்லி விட்டு, கனத்த இதயத்துடன் எழுந்து உள் அறையை நோக்கி நடந்தாள் ஜோதி.

அறைக்குள் சென்றதும் படுக்கையில் குப்புற விழுந்தவள், மெல்லக் குலுங்கினாள். சிறு வயதிலேயே தாயை இழந்து, சித்தியின் கொடுமைக்கு ஆளாகி, திருட்டுப் பட்டம் வாங்கி போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று வந்து, ஊரார் எதிரில் மானம் கெட்டு, மரியாதை கெட்டு, பெற்ற தந்தையாலேயே புறக்கணிக்கப்பட்டு, கடைசியில் தற்கொலைக்கு முயன்று, அதிலும் தோற்று, தொடர்ச்சியாக வாழ்க்கை முழுவதும் காயங்களையும், ரணங்களையும் மட்டுமே கண்டு வந்த ஜோதி, திவாகரைச் சந்தித்த பின்தான் வசந்த காலத் தென்றலை வாஞ்சையுடன் அனுபவித்தாள். இந்த வீட்டினுள் நுழைந்த பிறகுதான் இனிமைகளையும், சந்தோஷங்களையும் நுகர ஆரம்பித்தாள். இப்பொது, அதற்கும் ஒரு தீங்கு நேர்ந்து விட்டது. பாழும் மனசு அவளையும் மீறி திவாகரின் மீது காதல் வயப்பட்டது அவளது தவறா?...இல்லை அந்த ஆண்டவனின் தவறா?

“உன்னைச் சொல்லிக் குற்றமில்லை!...என்னைச் சொல்லிக் குற்றமில்லை! காலம் செய்த கோலமடி...கடவுள் செய்த குற்றமடி!” என்று கவிஞன் பாடியது கூடத் தனக்காகத்தானோ? என்று எண்ணியது அவள் மனம்.

உறக்கமா?...அல்லது மயக்கமா? என்று உணர முடியாத ஒரு நிலையில் படுத்துக் கிடந்த ஜோதியை,

“ஜோதி....அம்மா ஜோதி!” என்ற குரல் உசுப்ப, திடுக்கிட்டு விழித்து, “மலங்க...மலங்க” பார்த்தாள் அவள்.

எதிரே நின்றிருந்த திவாகரின் தாயார், “என்னம்மா தூக்கமா?” என்று அவள் தலையைத் தடவியபடியே கேட்க,

“இல்லம்மா...லேசாத் தலைவலியா இருந்திச்சு...அதான் படுத்திட்டேன்!” என்றாள்.

“வந்து...அந்த கல்யாண புரோக்கர் வந்திருக்கார்...நீயும் வந்து எங்களோட கலந்துக்கோயேன்!”

“நான் கண்டிப்பா வரணுமா?” கேட்கும் போதே ஜோதியின் குரல் கமறியது. அந்தக் கமறலுக்கான உண்மைக் காரணம் அவளுக்கே மட்டுமே தெரியும்.

“இல்லேம்மா...உன்னால முடியலைன்னா வேண்டாம் நீ அப்படியே படுத்து ரெஸ்ட் எடு...நாங்களே பார்த்துக்கறோம்!” என்று சொல்லி விட்டுத் திரும்பிய திவாகரின் தாயார், “வேணும்னா சூடா ஒரு தம்ளர் டீ போட்டுத் தரட்டுமா?” என்று மறுபடியும் கேட்க,

“வேண்டாம்மா!” என்றாள் ஜோதி.

அவரை அனுப்பி விட்டு, ஜோதி உறக்கத்தில் ஆழ்ந்து விட, அந்த நேரத்தில் திவாகரின் தாயாரும், தந்தையும், புரோக்கர் கொண்டு வந்திருந்த போட்டோக்களையும், ஜாதகக் குறிப்புக்களையும் ஆராய்ந்து அதில் திவாகருக்குப் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர்.
*****
திவாகருடன் பைக்கில் அமர்ந்து சென்று கொண்டிருந்த ஜோதி, திடீரென்று ஏற்பட்ட குலுக்கலில் பைக்கிலிருந்து கீழே விழுகிறாள். அவள் விழுந்ததே தெரியாமல் திவாகர் அதே வேகத்தில் சென்று கொண்டிருக்க, “என்னங்க...என்னங்க!” கத்துகிறாள். அவளது குரல் காற்றில் கரைந்து போய், அவனது காதுகளில் விழாது போக, பைக்கைத் துரத்திக் கொண்டு ஓடுகிறாள். ஓடும் பைக்கை ஒரு பெண்ணால் துரத்திப் போய் பிடிக்கத்தான் முடியுமா?..ஆனாலும் ஓடுகிறாள்!...ஓடுகிறாள்!...கால்கள் வலிக்க ஓடுகிறாள். ஒரு கட்டத்தில் கால்கள் தளர்ந்து போக, ஓட்டத்தை மாற்றிக் கொண்டு வேகமாய் நடக்கிறாள். அடுத்த சில நிமிடங்களில் அந்த வேக நடையையும் மாற்றிக் கொண்டு, மெதுவாய் நடக்கிறாள். அவள் உள்ளம் மட்டும் “திவாகர்...திவாகர்!” என்று அரற்றிக் கொண்டேயிருக்கின்றது. அப்போது, சற்று தூரத்தில், வண்ண வண்ண மின் விளக்குகளால் பிரகாசமாய் அலங்கரிக்கப்பட்ட ஒரு திருமண மண்டபம் தெரிய, நிதானமாய் நடந்து அதனுள் செல்கிறாள். சென்றவள் அங்கு மணமேடையில் இருந்த மணமகனைப் பார்த்து அதிர்கிறாள். “தி...திவாகரா...மாப்பிள்ளை?” அழுகை பொங்க தன்னைத் தானே கேட்கிறாள். உடனிருக்கும் மணப்பெண்ணைக் கூர்ந்து பார்க்கிறாள். அவள் கண்களுக்கு அப்பெண்ணின் உருவம் தெளிவாகத் தெரியாமல் மங்கலாகத் தெரிய, மணமேடையை நெருங்கிச் சென்று பார்க்கிறாள். அப்போதும் மணப்பெண்ணின் முகம் அவள் கண்களுக்குப் புலப்படாது போக, கண்களைத் தேய்த்துக் கொண்டு பார்க்கிறாள். ம்ஹூம்...அப்போதும் தெரியவில்லை. ஆனால் தன்னைத் தவிர மற்ற எல்லோருமே மணப்பெண்ணை சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருக்க, “ஏன்...எனக்கு மட்டும் பொண்ணோட முகமே தெரிய மாட்டேன் என்கிறது?” என்று நினைத்தபடியே மணமேடையின் மீது ஏறுகிறாள். மணமக்களை நெருங்குகிறாள். அப்போது திவாகரின் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த திவாகரின் தாயார், “வா ஜோதி...வந்து உட்காரு, முகூர்த்தத்துக்கு நேரமாச்சு!’ என்று சொல்லி அவள் கையைப் பிடித்து இழுத்து மணமகள் அமரும் இடத்தில் உட்கார வைக்க முயல, ஏற்கனவே அங்கு அமர்ந்திருந்த மணப்பெண்ணைப் பார்த்து திடுக்கிடுகிறாள் ஜோதி. “இவள்....இவள்....என் தங்கை சவிதா மாதிரியே இருக்கிறாளே!” என்று சொல்ல அவள் வாயெடுத்த போது,

சிலிர்த்துக் கொண்டு கண் விழித்தாள் ஜோதி, பட்டென எழுந்து படுக்கையில் அமர்ந்தாள். “ச்சே...கனவா?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவள், நிதானமாக அந்தக் கனவை அசை போட்டாள். “ஏன் எனக்கு இப்படியொரு கனவு?...அதுவும் பகல் நேரத்தில்?”

மெல்ல படுக்கையை விட்டுக் கீழிறங்கி முன் ஹாலுக்கு வந்தாள்.

அங்கே சோபாவில் அமர்ந்திருந்த பெரியவர், “என்னம்மா...தலை வலி இப்ப எப்படியிருக்கு?” விசாரித்தார்.

“ம்...பரவாயில்லை!”

“அம்மாடி... நீ இல்லம நாங்களே ஒரு பொண்ணைத் தேர்ந்தெடுத்திட்டோம்!...நீயும் பார்த்து “சரி”ன்னு சொல்லிட்டேன்னா...இதையே திவாகர்கிட்டக் குடுத்துடலாம்!...நாம் மூணு பேரும் சேர்ந்தே தேர்ந்தெடுத்ததுன்னா...நிச்சயம் அவர் மறுப்பே சொல்ல மாட்டார்!...” சொல்லியபடியே திவாகரின் தாயார் ஒரு புகைப்படத்தையும், ஜாதகக் குறிப்பையும் ஜோதியிடன் நீட்ட,

“ம்மா...நீங்க பெரியவங்க...உங்களுக்குத் தெரியாத்தா எனக்குத் தெரிஞ்சுடப் போவுது?...உங்க செலக்‌ஷன் எதுவாயிருந்தாலும் அது எனக்கும் ஓ.கே!” விரக்தியுடன் சொல்லி விட்டு, வீட்டின் புழற்கடையை நோக்கி நடந்தாள்.

“இருந்தாலும்...ஒரு பார்வையாவது பார்த்திட்டுக் குடும்மா!”

ஜோதி அதற்கு பதிலேதும் கூறாமல் அங்கிருந்த செல்ல, அவளையே வியப்புடன் பார்த்தனர் திவாகரின் தாயாரும், பெரியவரும்.

“உள்ளே உள்ள இதயம்! அதை யாரால் காண முடியும்! உள்ளே தீயும் எரியும்! அதை பொங்கும் புன்னகை மூடும்!” என்ற உண்மை பாவம் அந்த வயோதிக ஜீவன்களுக்குத் தெரியாது.
*****​
இரவு.

மொட்டை மாடிக்குச் செல்ல வேண்டி, மாடிப் படியேறிய ஜோதி, கோபியின் குரல் கேட்டுத் திரும்பினாள்.

“என்னையும் மொட்டை மாடிக்குக் கூட்டிட்டுப் போறீங்களா?” கெஞ்சலாய்க் கேட்டான்.

“தாராளமா?” என்று சொல்லி, அவனைத் தூக்கிக் கொண்டு படியேறினாள் ஜோதி.

இதமான தென்றல் அங்கு இனிமையைக் கொட்டியிருந்தது. அதன் மேனி வருடல் கொஞ்சம் ஜில்லிப்பையும்...நிறைய சிலிர்ப்பையும் உண்டாக்கியது. தூரத்து மலைகளைல் எரியும் காட்டுத் தீ, மகர ஜோதி போல் ஒளிர்ந்தது. மாடிக் கைப்பிடிச் சுவற்றை ஒட்டியிருந்த மாமரக் கிளையிலிருந்து மாம்பூ வாசம் மனதை மயக்கியது. இயற்கையின் இந்த ரம்மியங்களை ரசிக்கும் மனநிலையில் இல்லாதவளாய் எங்கோ நிலைக் குத்திப் பார்த்தபடி நின்றிருந்தாள் ஜோதி.

“ஏன் உங்க முகம் இப்பவும் வாடியிருக்கு?” கோபி கேட்டான்.

“ப்ச்!” என்ற ஜோதி முகத்தில் எந்தவித சலனமுமில்லை.

“எனக்குத் தெரியும்...நான் சொல்லட்டா?” என்று அவன் கேட்க, அவனைத் திரும்பிப் பார்த்தாள் ஜோதி.

“திவாகர் அண்ணனைப் பார்க்காமத்தான் உங்க முகம் சோகமா இருக்கு?”

விரக்தியாய்ச் சிரித்தாள் ஜோதி.

“எனக்கு எல்லாம் தெரியும்!” என்று அவன் சொல்ல, மேற் கொண்டு அவனைப் பேச விட்டால் தானே தன் வாயால் உண்மையை உளறிவிடுவோமோ? என்று அஞ்சிய ஜோதி, அப்பேச்சை மாற்றும் விதமாய்,

“கோபி உனக்குச் சொந்த ஊர் எது?” என்று கேட்டாள்.

“திருச்சி!” என்றான் அவன்.

“இங்க...இந்த வீட்டுக்கு எப்படி வந்தே?”

“அது ஒரு பெரிய கதை!” இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினான்.

“அப்படியா?...சொல்லேன்...கேட்போம்”

சில நிமிடங்கள் அமைதியாய் எங்கோ பார்த்தவாறே நின்றவன், திடீரென்று சொல்ல ஆரம்பித்தான். “எனக்கு...ரெண்டு காலும் இப்படி சூம்பிப் போய்...என்னால சுத்தமா நடக்கவே முடியதுன்னு தெரிஞ்சது...என்னைப் பெத்தவங்க...என்னைக் கொண்டு போய் ஒரு அனாதை விடுதியில் சேர்த்துட்டாங்க!...அங்கதான் நான் வளர்ந்தேன்!....ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி.....

அப்போது இன்ஸ்பெக்டர் திவாகருக்கு திருச்சியில் பணி.

ஒரு ஞாயிறன்று காலை, காவலர் குடியிருப்புப் பகுதியில், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த திவாகர் வாசலில் யாரோ அழைக்கும் குரல் கேட்க, எழுந்து சென்று பார்த்தார்.

வெள்ளுடையில் சர்ச் ஃபாதரும், உடன் ஒரு சிஸ்டரும் நிற்க,

“ம்...உள்ளார வாங்க!” வரவேற்றார் திவாகர்.

சர்ச் சார்ந்த ஒரு அனாதை விடுதியில் வளர்ந்தவரான திவாகருக்கு இயல்பாகவே அவர்களைக் கண்டதும், அவர்கள் மீது ஒரு தனி மரியாதையும், மதிப்பும் ஏற்பட, உள்ளே வரவழைத்து சோபாவில் அமர வைத்தார்.

“நான்...மோசஸ்!...இவங்க சிஸ்டர் மேரி!...நாங்க பக்கத்து ஊர் “அன்னை தெரசா அனாதைகள் இல்ல”த்திலிருந்து வர்றோம்!” ஃபாதர் தன் சுய அறிமுகத்தைத் துவக்க,

“மொதல்ல என்ன சாப்பிடறீங்க?...சொல்லுங்க!” என்று கேட்டார் திவாகர்.
“நோ..தேங்க்ஸ்!...நீங்க கேட்டதே எங்களுக்கு சாப்பிட்டது போல் இருக்கிறது!” என்ற ஃபாதர், “மிஸ்டர்.திவாகர்...நாங்க வர்ற பதினைந்தாம் தேதி எங்க அனாதைகள் இல்லத்துல ஆண்டு விழா கொண்ர்டாடுறோம்!...அதுக்கு உங்களைத்தான் சீஃப் கெஸ்டா போட்டிருக்கோம்!...நீங்க அவசியம் வந்து கலந்துக்கணும்!”

மெலிதாய் முறுவலித்த திவாகர், “ஃபாதர்...இந்த இடத்துல நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான் விஷயத்தை சொல்லியே ஆகணும்!...உண்மையில் நானும் ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்து...படிச்சு...மேலுக்கு வந்தவந்தான்!...அங்க இருக்கற குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்?...எதையெதை எதிர்பார்க்கும்?...எதையெல்லாம் விரும்பும்?...என்பதெல்லாம் எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்!...அதனால இந்த வாய்ப்பு எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய பாக்கியம்ன்னெ சொல்லுவேன்!” என்று நெகிழ்ந்து சொல்ல,

“ஓ...வெரி குட்!...வெரி குட்!...இதைக் கேட்கவே ரொம்ப சந்தோஷமாயிருக்கு!...” என்று ஃபாதர் மகிழ்ந்தார்.

“அப்ப...நாங்க சரியான ஒரு நபரைத்தான் சீஃப் கெஸ்டா போட்டிருக்கோம்!” சிஸ்டர் மேரியும் புன்னகையோடு சொன்னார்.

தன் ஒப்புதலை அந்த நிமிடமே இன்ஸ்பெக்டர் திவாகர் மனமுவந்து தர, அவர்களிருவரும் மனமகிழ்ச்சியுடன் புறப்பட்டனர்.

அவர்கள் சென்றதும் அதை நினைத்து நினைத்து புளகாங்கிதப்பட்டார் திவாகர். சீக்கிரமே அந்த நாள் வாராதா?...அனாதைகள் இல்லத்திற்குச் சென்று அங்கிருக்கும் குழந்தைகளைப் பார்க்க மாட்டோமா? என்று ஒருவித குறுகுறுப்பான எதிர்பார்ப்பு அவரது உள்ளத்தில் ஏற்பட்டது.
****​

அவர் காத்திருந்த அந்த நாளும் வந்தது. அதிகாலை வெகு சீக்கிரத்திலேயே எழுந்து, புறப்பட ஆயத்தமானார்.

பொதுவாக அங்கு நிகழும் எல்லா ஃபங்ஷன்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் கடைசி நேரத்திலோ...அல்லது நிகழ்ச்சி துவக்கப்பட்ட பிறகோதான் வருவர். ஆனால், திவாகரோ நிகழ்ச்சி துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்று, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை வியக்கச் செய்ததோடு, அந்த இல்லத்தின் ஒவ்வொரு அறைக்கும் சென்று அதன் வசதி வாய்ப்புக்களை ஆராய்ந்தார்.

சரியாக பத்து மணிக்கு, ஃபங்ஷன் துவங்கியது.

சம்பிரதாய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, பரிசளிப்பு விழா ஆரம்பமானது. விளையாட்டுப் போட்டிகளில் வென்ற அனாதைக் குழந்தைகளுக்கு மனமகிழ்ச்சியோடு பரிசுகளை வழங்கினார் திவாகர்.

“அடுத்து...தொடர்ந்து மூன்று வருடங்களாக அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்று வரும் மாணவனான கோபிக்கு சிறப்பு விருந்தினர் பரிசினை வழங்குவார்!” என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் மைக்கில் அறிவிக்க,

பார்வையால் தேடினார் திவாகர். கூட்டத்திலிருந்து யாருமே எழுந்து வராது போக, நெற்றியைச் சுருக்கினார் திவாகர்.

அப்போது,
(தொடரும்)​
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top