யாருமிங்கு அனாதையில்லை - 31

#1
யாருமிங்கு அனாதையில்லை – 31
எழுதியவர்: முனைவர். பொன்.கௌசல்யா.

அத்தியாயம் - 31


மலையடிவாரத்தில் மக்கள் குவிந்திருக்கும் தகவல் தெரிந்து அவசர அவசரமாய் வந்திறங்கினார் பஞ்சாயத்து தலைவர். அவர் வந்ததும் வராததுமாய் ஓடிப் போய் விஷயத்தைக் கக்கினார் பூசாரி. பொறுமையாய்க் கேட்டு முடித்த தலைவர், “அப்ப...நேத்திக்கு ராத்திரி அடிச்ச காத்துக்கும் மழைக்கும் அவன் அசரலை”ன்னு தெரிஞ்சிடுச்சு!...அதனால...” என்று சொல்லி விட்டு நிறுத்த.

“அதனால?” பொன்னுரங்கம் கேட்டார்.

“இனி வேற வழியே இல்லை...போலீஸுக்குத் தகவல் அனுப்பிட வேண்டியதுதான்!...ஏன்னா...நாளை மறுநாள் பௌர்ணமி...வழக்கம் போலவே இந்த வருஷமும் அம்மனுக்கு பௌர்ணமி பூஜையை நாம வெகு விமரிசையாய்ச் செஞ்சாகணும்!...அன்னிக்குத்தான் நம்ம சாதிசனமெல்லாம் ஒண்ணாக் கூடப் போறோம்!...பொழைப்புக்காக வெளியூர் போனவங்கெல்லாம் கூட எல்லா வேலைகளையும் விட்டுட்டு இங்க வந்து சேர்ந்திடுவாங்க!...அந்தச் சமயத்துல இப்படி இருந்திச்சுன்னா அது செரிப்பட்டு வராது”

சீறிக் கொண்டு வந்தாள் செல்லக்கிளி, “இளவட்டப் பசங்களை நம்பி அனுப்பிச்சீங்களே?....அது மாதிரி எங்க பொம்பளைகளையும் ஒரு தரம் நம்பி அனுப்புங்க!” உரிமையோடு கேட்டாள்.

“ஏய்...செல்லக்கிளி நீ யோசிச்சுத்தான் பேசறியா?...இல்லை...வேணுமின்னே குறுக்கு சால் ஓட்டறியா?” பஞ்சாயத்து தலைவர் கத்தினார்.

“இதுல குறுக்கு சாலும் இல்லை...நெடுக்கு சாலும் இல்லை!...நெஜத்தைத்தான் சொல்றேன்!...இப்ப..இப்ப....ஒரு வார்த்தை “ம்”ன்னு சொல்லுங்க..நாங்க பொம்பளைங்க போயி...ஒரே நிமிஷத்துல அவனைக் கீழே கொண்டு வர்றோமா...இல்லையா பாருங்க” சவால் விடும் தொணியில் பேசினாள் செல்லக்கிளி.

மறுபடியும் மறுபடியும் பஞ்சாயத்து தலைவர் அந்த செல்லக்கிளியுடன் மறுத்துப் பேசிக் கொண்டேயிருக்க, கடுப்பான பொன்னுரங்கம், “அய்யா...நீங்க எதுக்கு இவ்வளவு தூரம் கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க?... “சரி...போயிட்டு வாங்கம்மா”ன்னு சொல்லி அனுப்பி விடுங்க!...அங்க போய் அடிபட்டுட்டு வந்தால்தான் புத்தி வரும் போலிருக்கு அவங்களுக்கு” என்றார் எரிச்சலுடன்.

“இல்லைங்க பஞ்சாயத்தாரே...நம்ம பொம்பளைங்களுக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா...நமக்குத்தானே கேவலம்?”

“இவங்கெல்லாம் சொல்லிக் கேட்கற ஆளில்லைங்க அய்யா...போகட்டும் விடுங்க”

தனக்குக் கிடைத்த ஒப்புதலையே பெரிய வெற்றியாய் எடுத்துக் கொண்டு சந்தோஷமாய் அங்கிருந்து போனாள் செல்லக்கிளி.


“சரசக்கா....ஓ...சரசக்கா” பெட்டிக்கடை சரசுவின் வீட்டு முன் நின்று உரக்க அழைத்தாள் செல்லக்கிளி. நீண்ட நேரம் கழித்து வெளியே எட்டிப் பார்த்தாள் சரசு.

“சரசக்கா....பஞ்சாயத்துக்காரரும்...பொன்னுரங்கம் அய்யாவும் நம்ம பொம்பளைங்க கிட்டே பொறுப்பைக் குடுத்திட்டாங்க!...உடனே புறப்பட்டு வாங்க...மலை மேலே போயிஅந்தப் பைத்தியக்காரனை ரெண்டுல ஒண்ணு பார்த்திட்டு வரலாம்!” உற்சாகத்துடன் சொன்னாள்.

முகத்தில் சோகத்தைக் கொண்டு வந்த சரசு, “இல்லை செல்லக்கிளி....என்னால் இன்னிக்கு வர முடியாது!...என் பொண்ணுக்கு காய்ச்சல் கொதிக்குது...நெத்தில பத்துப் போட்டு...கஷாயம் குடுத்துப் படுக்க வெச்சிருக்கேன்!...ஆனாலும் காய்ச்சல் கொறைஞ்சபாடில்லை!...இன்னும் கொஞ்சம் நேரம் பார்த்திட்டு...அவளை நம்ம வைத்தியர் கிட்டக் கூட்டிட்டுப் போகணும்!” என்றாள் கரகரத்த குரலில்.

“அடடே...த்சொ...த்சொ...”என்று நிஜமாகவே வருத்தத்தைக் காட்டிய செல்லக்கிளி, “அப்படின்னா நீங்க வர வேண்டாம்க்கா...இங்கியே இருந்து...புள்ளையைக் கவனிச்சுக்கங்க!...நாங்க பார்த்துக்கறோம்” என்று சொல்லி விட்டு நகர்ந்தாள் செல்லக்கிளி.

அவள் சென்றதும் வீட்டிற்குள் திரும்பிய சரசுவிடம் அவள் புருஷன் கேட்டான், “எதுக்குடி... “புள்ளைக்குக் காய்ச்சல்!”ன்னு அவகிட்டப் பொய் சொன்னே?”

“பின்னே...அவ கூடப் போய் மலை ஏறச் சொல்றீங்களா?...அங்க எமலோக கிங்கரன் மாதிரி அந்தப் பைத்தியக்காரன் கைல சூலாயுதத்தோட உட்கார்ந்திட்டிருக்கானாம்!...போனா கொடலை உருவி மாலையாப் போட்டாலும் போட்டுக்குவான்!...அதான் அவ கிட்டப் பொய் சொல்லி நழுவிட்டேன்” என்றாள் சரசு.

அதே நேரம், அடுத்த தெரு மயிலாத்தா வீட்டில் அவளுடன் பேசிக் கொண்டிருந்தாள் செல்லக்கிளி. அங்கேயும் அவளுக்கு தோல்வியே கிடைத்தது.

“அது...வந்து...செல்லக்கிளி...நான் வர முடியாத சூழ்நிலைல இருக்கேன்!...புரிஞ்சுக்க!...இந்தத் தடவை உதிரப் போக்கு எக்கச்சக்கமாகி...கை காலெல்லாம் நடுக்கமாயிடுச்சு!...நிக்கவே முடியாதபடிக்கு உடம்பே ரொம்பத் தளர்ந்து போச்சு” மயிலாத்தா நடிப்பில் அசத்தினாள்.

ஆனாலும் சற்றும் தளராத பட்டி விக்கிரமாதித்தனைப் போல் பொறுப்பு வேதாளத்தைத் தோளில் போட்டுக் கொண்டு ஒவ்வொரு வீடாய் ஏறி இறங்கினாள் செல்லக்கிளி.

“ஊர்ல என்னோட மாமியார் “இப்பவோ....அப்பவோ”ன்னு கிடக்கு...கொஞ்சம் முன்னாடிதான் ஆள் வந்து தகவல் சொல்லிட்டுப் போறான்!...ஊருக்குக் கிளம்பிட்டிருக்கேன் செல்லக்கிளி” என்றாள் ஒருத்தி

“அட உனக்கு விஷயமே தெரியாதா செல்லக்கிளி?...அடுத்த தெருவில் இருக்கற என்னோட அண்ணன் பொண்ணு சடங்காயிடுச்சாம்!...தண்ணி ஊத்த அத்தைக்காரி நாந்தானே போயாகணும்?” என்றாள் இன்னொருத்தி.

“இந்த ஆஸ்த்மா என்னைப் பாடாய்ப்படுத்துது செல்லக்கிளி!...” இல்லாத ஆஸ்த்மா உருவாக்கி, வேண்டுமென்றே இழுத்து இழுத்து மூச்சு விட்டபடி சொன்னாள் வேறொருத்தி.

தொடர்ந்து எதிர்மறை பதில்களே வந்து கொண்டிருக்க நொந்து போன செல்லக்கிளி, தனியாகவே சென்று பார்த்து விடுவது என்கிற வைராக்கியத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மலை ஏறினாள். கீழே நின்று கொண்டிருந்த ஆண்கள் அவளை ஆனமட்டும் தடுத்துப் பார்த்தனர். அவர்கள் பேச்சைத் துளியும் காதில் வாங்கிக் கொள்ளாமல் “திமு...திமு”வென்று படிகளில் ஏறிச் சென்றாள் அவள்.

கால் மணி நேரம்...அரை மணி நேரம்...ஒரு மணி நேரம்...இரண்டு மணி நேரம்...என நேரம்தான் ஓடிக் கொண்டேயிருந்ததே தவிர மலை மேல் சென்ற செல்லக்கிளி திரும்பி வரவே இல்லை. அடிவாரத்தில் ஆவலோடு காத்திருந்த ஆண்கள் லேசாய்க் கலவரமானார்கள். “ஆஹா...மலை மேலே என்னமோ விபரீதம் நடந்திடுச்சு போலிருக்கு...அதான் போன செல்லக்கிளியை இன்னும் காணோம்”

“கிட்டத்தட்ட மூணு மணி நேரமாயிடுச்சே?”

பஞ்சாயத்து தலைவர் வீட்டை நோக்கி ஓடினான் ஒருத்தன். விஷயம் கேள்விப்பட்ட அவர் கடும் கோபத்திற்குள்ளானார். “அந்தப் பொம்பளைக்கு கொஞ்சமாவது அறிவிருந்தா இப்படிப் போய்த் தனியாய்ச் சிக்குவாளா?... பச்சை நாயகி ஆத்தா...அங்க என்ன நடந்திருக்கும்?ன்னே யூகிக்க முடியலையே ஆத்தா?” கலவரப்பட்ட மனதுடன் மலையடிவாரத்திற்கு வந்தார்.

அவரது வருகைக்காகவே காத்திருந்த செல்லக்கிளியின் உறவினன் பாண்டுரங்கன் அவரைக் கண்டவுடன் பரபரத்தான், “அய்யா...அய்யா...நீங்க வரட்டும்!ன்னுதான் காத்திட்டிருக்கோம்!ங்க அய்யா...நானும் என் தம்பி மோகனரங்கனும் மேலே போய் எங்க அக்கா செல்லக்கிளியோட நிலைமை என்ன?ன்னு பார்த்திட்டு வ்ரப்போறோம்!ங்க அய்யா...”

“அவசரப்படாதே பாண்டு ரங்கா....ஏற்கனவே பல பேர் போய் அடிபட்டுத் திரும்பியிருக்காங்க!...கொஞ்சம் பொறுமையா யோசிப்போம்” தன் வயதிற்குரிய பொறுமையோடு அவர் சொல்ல,

“அய்யா...அதுக்குத்தான் நானும் என் தம்பியும் வேறொரு யோசனை வெச்சிருக்கோம்...படியேறி மலை மேலே போனாத்தானே அவன் கண்ணுல படுவோம்?...மலைக்குப் பின்னாலிருந்து பாறைகள் மேலே ஏறி உச்சிக்குப் போய் என்ன ஆச்சு?ன்னு பார்த்திட்டு வர்றோம்..அப்புறமா என்ன பண்றது?ன்னு யோசிப்போம்” என்றான் அண்ணன் பாண்டுரங்கன்.

தாடையைத் தேய்த்த பஞ்சாயத்து தலைவர், “ம்ம்ம்...அதுவும் நல்ல யோசனைதான்!...சரி...பார்த்து ஜாக்கிரதையா போங்க!...அங்க போய் அவன் கண்ணுல படாம...செல்லக்கிளி நிலைமை என்ன?ன்னு மட்டும் தெரிஞ்சிட்டு வாங்க!..” என்றார்.

பாறை மேல் ஏறுவதற்குத் தோதாக கயிறு, இரும்புக் கொக்கிகள் போன்றவற்றைக் கையிலெடுத்துக் கொண்டு, மலையின் பின் புறத்திற்குச் சென்றனர் பாண்டுரங்கனும், அவன் தம்பி மோகனரங்கனும். அவர்கள் கொண்டு வரப் போகும் தகவலுக்காக அடிவார மண்டபத்தில் பஞ்சாயத்து தலைவர் உட்பட பலர் காத்திருந்தனர்.

மலையின் பின் புறமிருந்து மேலேறும் பழக்கம் இல்லாததால் அண்ணனும் தம்பியும் பெருத்த சிரமத்திற்கு ஆளாயினர். பாறைகளின் சூடு உள்ளங்கைகளில் கொப்புளங்களை ஏற்படுத்த, முட்புதர்கள் தங்களின் பங்காய் அவர்களிருவரின் கால்களிலும் நிறைய சிராய்ப்புக் காயங்களைக் கொடுத்தன. அரை மணி நேரப் போராட்ட மேனியெங்கும் வியர்வை ஆறாய்ப் பெருகியோட சன்னதிக்குப் பின் புறமாய் மலை உச்சியைத் தொட்டனர்.

பிறகு அங்கிருந்து மெல்ல மெல்ல பாறை மறைவிலேயே நகர்ந்து சன்னதியின் முன் பக்கம் வந்து, அங்கிருந்த ஒரு பெரிய புதரின் பின்னால் ஒளிந்து கொண்டு பார்த்தனர். கையில் சூலாயுதத்தோடு அண்ணாந்து வானத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்த அந்தப் பைத்தியக்காரனைப் பார்த்ததும் அண்ணனும், தம்பியும் மிரண்டே போயினர். “அண்ணே...அவனைப் பார்த்தா கடோத்கஜன் மாதிரி இருக்கான்...சிக்கினோம் நம்ம ரெண்டு பேரையும் தூக்கிப் பந்தாடிடுவான்!..” நடுங்கும் குரலில் சொன்னான் தம்பி மோகனரங்கன்.

“ச்சூ...நாம அவன் கூட மோதி...சண்டை போட வரலை!...நம்ம செல்லக்கிளி அக்காவுக்கு என்னாச்சு?ன்னு பார்த்திட்டுப் போகத்தான் வந்திருக்கோம்” என்றான் பாண்டுரங்கன்.

“அவங்க இங்கே எங்கேயும் இல்லை போலிருக்கே?” பார்வையை நாலாப்புறமும் சுழற்றியபடி சொன்னான் மோகனரங்கன்.

“எப்படி இல்லாமப் போவாங்க?...அவங்க படிகள்ல ஏறி மேலே போறதை நான் என் ரெண்டு கண்ணாலே பார்த்தேனே?...நிச்சயமா அவங்க இங்கதான் எங்காச்சும் இருக்கணும்” ஆணித்தரமாய்ச் சொன்னான் பாண்டுரங்கன்.

“சூலாயுதத்தால குத்திக் கித்திப் போட்டுட்டானோ என்னமோ?”

“அப்படியிருந்தா இங்கதானே எங்காச்சும் கிடக்கணும்...தேடு”

இருவரும் புதர் மறைவில் இருந்தபடியே, நகர்ந்து நகர்ந்து எல்லாப் பக்கமும் தேடினர். ஆனால் அவர்கள் தேடி வந்த செல்லக்கிளி அந்த ஏரியாவிலேயே இல்லை. “என்னது?...எங்கேயுமே காணோம்?” தம்பிக்காரன் சன்னக் குரலில் சொல்ல,

“அதாண்டா எனக்கும் புரியலை”

நீண்ட நேரம் தேடியும் செல்லக்கிளி கண் பார்வைக்குச் சிக்காமலே போக, “ஒருவேளை...மலைப் பாதைல எங்காச்சும் கிடக்கறாங்களோ?” தம்பி தன் சந்தேகத்தைக் கேட்டான்.

“இருக்கலாம்டா...அப்படியும் இருக்கலாம்!...நாம ஒண்ணு செய்வோம்...இப்படியே படிக்கட்டோரமா இருக்கற புதர் மறைவிலேயே ஊர்ந்து கீழே போவோம்....போகும் போது படிக்கட்டுல பார்த்திட்டே போவோம்!...என்ன?” பாண்டுரங்கன் சொல்லி விட்டு உடனே மெல்ல நகர ஆரம்பிக்க, தம்பியும் அவனைப் பின் தொடர்ந்தான். கிட்டத்தட்ட பாதி இறங்கிய பிறகு, தம்பிக்காரன் கூவினான், “அண்ணே...அங்க பாருங்க”

தம்பி காட்டிய திசையில் தலையைத் திருப்பிப் பார்த்த பாண்டுரங்கன், ஆடிப் போனான். உடலெங்கும் ரத்தக் காயங்களோடு, தலைவிரி கோலத்தில், நிலைக் குத்திய பார்வையோடு படிக்கட்டை ஒட்டிய ஒரு மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் செல்லக்கிளி.

மலை உச்சியிலிருந்து வெகு தூரம் தள்ளி வந்து விட்டதால், இனி அந்தப் பைத்தியக்காரன் கண்களில் தாங்கள் பட மாட்டோம், என்கிற தைரியத்தில் இருவரும் புதர் மறைவிலிருந்து வெளியேறி, படிக்கட்டுகளில் நடந்து, செல்லக்கிளியின் அருகில் சென்றமர்ந்தனர். “செல்லக்கிளியக்கா...செல்லக்கிளியக்கா”சன்னக் குரலில் அழைத்தவாறே அவள் தோளைத் தொட்டு உசுப்பினான் பாண்டுரங்கன். ஆனால் அவள் அதே நிலைக் குத்திய பார்வையோடு தரையையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“அண்ணே...அக்காவை மெல்லத் தூக்கி நாம ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் தோள் குடுத்து...அப்படியே கீழே கொண்டு போயிடுவோம்”

“ஆமாம்டா...அதுதான் வழி!....” தம்பி மோகனரங்கன் சொன்னது போலவே ஆளுக்கொரு பக்கமாய் அவளைத் தாங்கிப் பிடித்து, படிகளில் மெல்ல இறக்கி, அடிவாரத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.

ரத்தக் காயங்களுடன் வந்த செல்லக்கிளியைப் பார்த்து காத்திருந்தோர் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். “என்னாச்சு?...என்னாச்சு?” பதறினார் பஞ்சாயத்து தலைவர்.

உதட்டைப் பிதுக்கிய பாண்டுரங்கன், “தெரியலைங்க அய்யா!...மேலே என்ன நடந்தது?ன்னே தெரியலை!...சன்னதிக்குப் பின்புறமாப் போய் ஒளிஞ்சு நின்னு செல்லக்கிளி அக்காவைத் தேடினோம்...அவங்க அங்க இல்லை!...“படிக்கட்டுல எங்காச்சும் விழுந்து கிடக்குதோ?”ங்கற சந்தேகத்துல...படிக்கட்டெல்லாம் தேடிப் பார்த்திட்டே கீழே இறங்கி வந்தோம்!...பாதி தூரம் வந்த பிறகு பார்த்தா...ஒரு மரத்துக்குக் கீழே இந்தக்கா தலைவிரி கோலமாய்...சாஞ்சு உட்கார்ந்திட்டிருந்திச்சு!...ஓடிப் போய் எழுப்பினா...பேசவேயில்லை....நிலைக்குத்திப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்திச்சு!...சரி...கீழே கூடிட்டுப் போயிடலாம்!னு நானும் தம்பியும் ஆளுக்கொரு பக்கம் பிடிச்சுக் கீழே கொண்டாந்திட்டோம்” விளக்கமாய்ச் சொன்னான்.

“சரி...மொதல்ல இந்தச் செல்லக்கிளியை நம்ம வைத்தியர் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க” அவசரப்படுத்தினார் பொன்னுரங்கம்.

டிராக்டரிலேயே செல்லக்கிளியை உட்கார வைத்துக் கூட்டிச் சென்றனர், பாண்டுரங்கனும், மோகனரங்கனும். அவர்கள் அங்கிருந்து சென்றதும் மற்றவர்களிடம் புலம்பித் தள்ளினார் பொன்னுரங்கம். “இந்தப் பொம்பளைகிட்ட அத்தனை தடவை படிச்சுப் படிச்சுச் சொன்னேன்!... “வேண்டாம்...போக வேண்டாம்”ன்னு கேட்காமப் போனா...இப்ப இப்படித் திரும்பி வந்திருக்கா...”

“பொன்னுரங்கம் அய்யா...நடந்ததையே திரும்பத் திரும்ப பேசிட்டு இருக்க வேண்டாம்....இனி நடக்க வேண்டியதைப் பற்றிப் பேசுவோம்!...நாளன்னைக்கு பௌர்ணமி...நடுவுல ஒரு நாள்தான் இருக்கு!...வெளியூர் சாதி சனமெல்லாம் ஊர் வந்து சேர்ந்திட்டாங்க!...அதனால இதுக்கு மேலேயும் தாமதிக்கறது தப்பு...உடனே போலீஸுக்குப் போய் புகார் பண்ணிட்டு வந்திடுவோம்!” பஞ்சாயத்துத் தலைவர் அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னார்.

“நானும் அதைத்தான் நெனச்சேன்...நீங்க சொல்லிட்டீங்க” என்றார் பொன்னுரங்கம்.
.
“அப்ப...நான்...நீங்க...நம்ம வாத்தியாரய்யா...இன்னும் வேற யார் யார் வர விருப்பப் படறாங்களோ...அவங்கெல்லாம் வரட்டும்...இன்னிக்கு மதியமே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிடுவோம்” பஞ்சாயத்துத் தலைவர் ஒப்புதல் தந்தார்.

வானில் கரு மேகங்கள் ஊர்வலம் போகத் துவங்கியிருந்தன. அண்ணாந்து பார்த்த பொன்னுரங்கம் “மழை மறுபடியும் பிடிக்கும் போலிருக்கே” என்றார்.

“பௌர்ணமி பூசை முடிகிற வரைக்கும் மழை வராம இருக்கணும்” வானத்தைப் பார்த்துக் கும்பிட்டுச் சொன்னார் பஞ்சாயத்து தலைவர்.

காவல் நிலையம். இன்ஸ்பெக்டருக்கு எதிர் இருக்கையில் பொன்னுரங்கமும், பஞ்சாயத்துத் தலைவரும் அமர்ந்திருக்க, மற்றவர்கள் பின்னால் நின்று கொண்டிருந்தனர்.

பொன்னுரங்கம் தனக்கே உரிய பாணியில் நிதானமாய்...தெளிவாய் அந்தப் பிரச்சினையை இன்ஸ்பெக்டர் திவாகருக்கு எடுத்துரைக்க, பொறுமையாய்க் கேட்டு முடித்த இன்ஸ்பெக்டர் மேவாயைத் தடவினார். “என்னங்கய்யா...அவன் அங்க வந்து “அஞ்சு நாளைக்கும் மேலாச்சு”ன்னு சொல்றீங்க...அன்னிக்கே வந்து புகார் குடுத்திருக்கலாமே?”

“சார்...வந்த மொத நாள் நாங்க அவனை ரொம்பச் சாதாரணமா நெனச்சோம்!...மீறிப் போனா இருட்டற வரைக்கும் உட்கார்ந்திட்டிருப்பான்...அப்புறம் அவனாகவே எந்திரிச்சுப் போயிடுவான்னு விட்டுட்டோம்!...இப்படி ஒரேயடியா டேரா போடுவான்!...எங்க சாதி சனத்தையே மேலே வர விடாமத் துரத்தியடிப்பான்!னு நாங்க நெனச்சுக் கூடப் பார்க்கலை சார்” பொன்னுரங்கம் சொன்னார்.

“அஞ்சு நாள் மேலேயே இருந்திருக்கான்னா...சாப்பாட்டுக்கு என்ன பண்ணினான்?” இன்ஸ்பெக்டர் திவாகர் தன் போலீஸ் சந்தேகத்தை இறக்கினார்.

“ம்ஹூம்..அஞ்சு நாளா ஆகாரம்...தண்ணி...எதுவுமே இல்லாமக் கொலைப் பட்டினியாய் இருக்கான்!...ஆனாலும் பலகீனம் ஆகாம...ரொம்பவே பலசாலியா இருக்கான்”

“ஆச்சரியமாகவும்...அதே சமயம் நம்ப முடியாத மாதிரியும் இருக்கு நீங்க சொல்றது!...எப்படிங்க ஒரு மனுஷன்...அஞ்சு நாளைக்கு சாப்பாடு தண்ணி இல்லாம இருக்க முடியும்?...அவன் ஏதோ பண்ணி வயிற்றை ரொப்பிக்கிட்டிருக்கான்....அது உங்களுக்குத் தெரியலை!” என்று பொன்னுரங்கத்தைப் பார்த்துச் சொன்ன இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் பக்கம் திரும்பி, “யோவ்..ஜீப் ரெடியாயிருக்கா?” கேட்டார்.

“நேத்திக்குத்தான் சார் டேங்க் ஃபுல் பண்ணி வெச்சிருக்கோம்”

“அப்ப...அய்யா...நீங்க முன்னால போங்க...நான் ரெண்டு கான்ஸ்டபிள்களைக் கூட்டிட்டு பின்னாடியே வர்றேன்” என்றார் இன்ஸ்பெக்டர் திவாகர்.

“அய்யா...ஒரு சின்ன விண்ணப்பம்!...நாளைக்கு பௌர்ணமி...அந்தப் பௌர்ணமி நிலா வெளிச்சத்துல எங்க சாதி சனமெல்லாம் மலை மேலே ஒண்ணு கூடி எங்க குல தெய்வமான பச்சை நாயகி அம்மனுக்கு பொங்கல் வெச்சு வழிபடுவோம்!...அதுக்காக அன்னிக்கு மதியமே மேலே போய் வாழை மரம் கட்டறது...தோரணங்கள் அமைப்பது...அம்மனுக்கு அலங்காரம் பண்றது...மாதிரியான வேலைகளைச் செய்யணும்!...அதனால...எப்படியாவது..நீங்க அவனை இன்னிக்கு சாயந்திரமோ...இல்லை நாளைக்கு மதியத்துக்கு முன்னமோ துரத்திட்டீங்கன்னா...ரொம்ப நல்லாயிருக்கும்!...”என்று தன் கோரிக்கையை வைத்தார் பொன்னுரங்கம்.

“ம்ம்..ம்ம்..பார்ப்போம்!...பார்ப்போம்”
(தொடரும்)​
 
#6
செல்லக்கிளிக்கு என்ன ஆச்சு?
ஊர்ப் பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஒண்ணா போயிருந்தால் அவளுக்கு இப்படி ஆகியிருக்காது
Selfish Ladies
திவாகர் என்ன செய்யப் போறார்?
அந்த பைத்தியத்தை விரட்டி விடுவாரா?
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement