யாருமிங்கு அனாதையில்லை - 3

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!”
(நாவல்)

எழுதியவர் :
பொன்.கௌசல்யா​

அத்தியாயம் 3

பணி நிமித்தமாய் எங்கோ வெளியே சென்று விட்டு, இரவு வீடு திரும்பிய திவாகர், “என்னம்மா...அந்தப் பொண்ணு நார்மல் மனநிலைக்கு வந்திடுச்சா?...இல்லை...இன்னும் அதே மனநிலையில்தான் இருக்கா?” என்று கேட்க,

“இல்லப்பா...இப்பக் கொஞ்சம் தேவலை!...அவ வாயாலேயே “இந்த வீட்டுக்குள்ளார வந்தப்புறம்தான் கொஞ்சம் சந்தோஷத்தையே பார்க்கிறேன்!”ன்னு சொல்றா!”

“அப்படின்னா சரி!...இப்படியே ஒரு வாரம் அவளை பார்த்துக்கிட்டாப் போதும்...அதுக்கப்புறம் மறுபடியும் அவளுக்கு தற்கொலை எண்ணமே தோன்றாது!” என்ற திவாகர், சன்னமான குரலில், “இப்ப அந்தப் பொண்ணு எங்கே?” என்று கேட்டார்.

“இப்பத்தான் மொட்டை மாடிக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போனா!”

“ஓ” என்றபடி சில விநாடிகள் யோசித்த திவாகர், சட்டென்று ஏதோ உந்த, “ஓ...காட்!” தாவி ஓடினார் மொட்டை மாடிக்கு. அவர் மனதில் தவறான எண்ணங்கள் தாறுமாறாய் ஓடின.

மொட்டை மாடியை அடைந்தவர் அங்கே அந்த ஜோதி நிற்பதைப் பார்த்த பிறகுதான் நிம்மதியடைந்தார்.

மொட்டைமாடியின் கைப்பிடிச் சுவரோரம் நின்று, அப்போதுதான் எழும்பியிருந்த மஞ்சள் நிலாவையும், அதன் மீது உராய்ந்து உராய்ந்து நகரும் மேகத் துணுக்குகளையும், அமைதியாய்ப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்.

மெல்ல அவள் முதுகுக்குப் பின்னால் சென்று, தாழ்ந்த குரலில், “ஜோ...தி” என்றழைத்தார்.

திரும்பிப் பார்த்தவளின் முகத்தில் தேங்கியிருந்த தெளிவு திவாகருக்கு முழு திருப்தியைத் தந்தது.

“சாப்பிட்டாச்சா?” கேட்டார்.

“ம்”

வேறு என்ன கேட்பது என்று யோசித்து விட்டு, “மதியம் நல்லாத் தூங்கி ஓய்வெடுத்தியா?”

“ம்”

“வந்து...எங்க வீடு..பிடிச்சிருக்குதா?...சௌகரியமாயிருக்கா?” என்று கேட்டு விட்டு, உடனே, “அதற்கும் “ம்”ன்னு ஒரே வார்த்தைல பதில் சொல்ல வேண்டாம்...நாலஞ்சு வார்த்தைகளை சேர்த்தே சொல்லலாம்!” என்றார் திவாகர் சிரிப்புடன்.

“ம்..ரொம்பப் பிடிச்சிருக்கு!...நீங்க ரொம்பக் கொடுத்து வெச்சவரு...அன்பான அப்பா!...பாசமான அம்மா!...பிரியமான தம்பி!..ப்ச்!...எல்லாருக்கும் இந்த மாதிரி அமையாது!”

அதைக் கேட்டதும், “ஜோதி...நான் ஒரு உண்மையைச் சொன்னா நீ ரொம்பவே அதிர்ச்சியடைவே!” என்றார் திவாகர் பீடிகையாய்,

“ஹூம்!...ஏகப்பட்ட பிரளயங்களையும்.....பூகம்பங்களையும்...ஏன் சுனாமியையும் கூடப் பார்த்திட்டு வந்தவ நான்!...எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது!” என்றாள் தன் இதயப் பகுதியைத் தொட்டுக் காட்டி,

“ம்ம்ம்...கீழே நீ பார்த்தியே...என்னோட அப்பா!...அவரு என்னோட நிஜ அப்பா கிடையாது!”

“என்ன?” ஆச்சரியத்தில் விழிகளை விரித்தாள் ஜோதி.

“இதுக்கே இப்படி ரீஆக்ட் பண்றியே....இன்னொரு விஷயத்தையும் சொன்னா என்னென்ன பண்ணுவியோ?”

ஜோதி மௌனமாய் திவாகரின் முகத்தையே பார்க்க,
“என்னோட அம்மா இருக்காங்களே?...அவங்களும் என்னோட நிஜ அம்மா கிடையாது!”

“என்னங்க?...என்னென்னமோ சொல்லுறீங்க?” ஜோதி குழம்பிப் போய்க் கேட்டாள்.

“இரு..இரு...அதோட முடியலை...இன்னும் இருக்கு!....என்னோட தம்பி கோபி கூட என்னோட நிஜ தம்பி கிடையாது!”

எதுவும் பேசாமல் தரையையே நிலைக் குத்திப் பார்த்தபடி நின்றிருந்த ஜோதியின் தோளைத் தொட்டு உசுப்பிய திவாகர், “என்ன ஜோதி...அப்படியே சிலையாட்டாம் நின்னுட்டே?”

“எனக்கு ஒண்ணுமே புரியலைங்க!...லேசா பயமாக் கூட இருக்குங்க!”

“சேச்சே!...இதுல பயப்படறதுக்கு என்ன இருக்கு?”

“இல்ல....அவங்க யாருமே உங்களோட நிஜமான உறவுகள் இல்லைன்னு சொல்றீங்க!...அப்புறம் ஏன்?...எதுக்கு? அவங்க இங்க உங்க கூட இருக்காங்க?”

“ப்ச்!...அது ஒரு பெரிய கதைம்மா!... “கிராமங்கள்ல இருக்கற ஒவ்வொரு பாழுங் கிணறுகளுக்கும் பின்னாடி ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் சோகமான கதை இருக்கும்!”ன்னு சொல்லுவாங்க!...அதே மாதிரிதான் பாழடைஞ்சு போய்க் கிடந்த இந்த மாளிகைக்குப் பின்னாடியும்...இங்கு வாழ்ந்திட்டிருக்கற ஒவ்வொரு ஜீவன்க பின்னாடியும் ஒரு பெரிய இராமாயணமும்...ஒரு பெரிய மகாபாரதமும்...இருக்கு!...”

ஜோதியின் மனத்தில் இன்ஸ்பெக்டர் திவாகர் மீது ஒரு அபரிமிதமான நம்பிக்கை ஏற்பட்டது.. “சொல்லுங்க சார்!...எல்லாத்தையும் இப்பவே கேட்கணும் போலிருக்கு சார்!...இதுவரைக்கும் நான் நெனச்சிட்டிருந்தேன்...இந்த உலகத்துல என்னோட சோகம்தான் மாபெரும் சோகம்ன்னு!...ஆனா...நீங்க...சொல்றதைப் பார்க்கும் போது..என்னோட துயரங்களெல்லாம் ஒரு தூசி போலத் தெரியுதே!”

“இது...இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!...நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்ததற்கான முக்கிய காரணமே உன் மனசுல ஒரு உயிர்ப்பிடிப்பு....ஒரு வாழ்க்கைப் பற்று உண்டாகணும் என்பதற்காகத்தான்!...”

“சொல்லுங்க சார்...யார் அவங்கெல்லாம்?...எப்படி உங்க கிட்ட வந்து சேர்ந்தாங்க?” ஜோதியின் முகத்தில் ஆர்வம் தெரிந்தது.

“ம்...அதை சொல்றதுக்கு முன்னாடி...மொதல்ல நான் என்னைப் பத்திச் சொல்லணும்!...ம்ம்ம்...ஒரு இருபத்தியெட்டு...முப்பது வருஷத்துக்கு முன்னாடி...கோயமுத்தூர்ல...புலியகுளம் சர்ச் வாசல்ல....ஒரு அதிகாலைல....ஒரு குழந்தையோட அழுகைச் சத்தம் கேட்டிச்சு!....சர்ச்சோட ஃபாதர் ஜேம்ஸ் ஓடி வந்து அதை எடுத்துக் கைல வெச்சுக்கிட்டு...நாலப்பக்கமும் ஓடி ஒடித் தேடினார்...அதோட பெத்தவங்க அங்க எங்காவது இருக்காங்களா?ன்னு!...அப்படி யாரும் இல்லாததினால...அவரே அக்குழந்தையை சர்ச்சோட நிர்வாகத்துல இயங்கிக்கிட்டிருக்கற ஒரு அனாதை ஆசிரமத்துல சேர்த்துப் பராமரிச்சு...படிக்க வெச்சு...ஆளாக்கினார்!...அந்தக் குழந்தையும் அவரோட எண்ணம் போலவே நல்லாப் படிச்சு...பட்டம் வாங்கி...கடைசில காவல் துறைல சேர்ந்து ஒரு இன்ஸ்பெக்டராகி இப்ப உன் முன்னாடி நின்னு பேசிட்டிருக்கு!” என்று சொல்லி விட்டு, “ஹா...ஹா...ஹா..”வென்று வாய் விட்டுச் சிரித்த திவாகரைப் பார்க்கப் பார்க்க ஜோதியின் விழிகளில் நீர் கோர்த்தது. “தான் ஒரு அனாதை என்பதையும், கைக்குழந்தையாயிருந்த காலந் தொட்டே அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவனென்பதியும், மிகவும் இயல்பாகச் சொல்லிச் சிரித்த அந்த மனிதரை மனம் கனக்கப் பார்த்தாள். “கடவுளே!...பார்வைக்குப் பாறாங்கல்லாட்டம் இருக்கற இவருக்குள் இத்தனை சோகங்களா?”

எதுவும் பேசாமல் இறுகிப் போன முகத்துடன் அமைதியாய் நின்றவளை உசுப்பிய திவாகர், “என்னம்மா...அமைதியாயிட்டே?”

“சார்..உங்க கதையைக் கேட்டதுல எனக்கு மனசே கனத்துப் போச்சு சார்!...தாயன்பு....தந்தையன்பு....சகோதர அன்பு எதையுமே அனுபவிக்காம இத்தனை வருஷம் வாழ்ந்திருக்கீங்க...அதுவும் தன்னம்பிக்கையைக் கொஞ்சம் கூட இழக்காம...என்பதை நினைக்கும் போது இருதயமே நொறுங்கிப் போற மாதிரி இருக்குது சார்...” ஜோதி தழுதழுத்த குரலில் சொல்ல,

“ஹேய்...யார் சொன்னது? நான் தாயன்பு...தந்தையன்பு...சகோதர அன்பு எதையுமே அனுபவிக்காம வாழ்ந்தேன்!னு...ஆண்டவன் வேணா எனக்கு அந்த உறவுகள் எதையும் குடுக்காம இருந்திருக்கலாம்!...ஆனா...நான் அந்த ஆண்டவனுக்கும் மேலே...அதனால்தான் அந்த மூன்று உறவுகளையும் எனக்கு நானே ஏற்படுத்திக்கிட்டேன்!”

ஜோதி அவர் பேச்சின் அர்த்தம் விளங்காமல் விழித்தாள்.

“ம்மா...நான் காவல் துறைல சேர்ந்த புதுசுல...எஅன்க்கு கரூர்ல போஸ்டின் போட்டாங்க!...அங்க என் கூட தியாகராஜன்னு ஒருத்தர் வேலை பார்த்தார்!...அவரும் என்னைய மாதிரிதான்...அந்தப் பணிக்குப் புதுசு!....ஆனாலும் ஒரு மூத்த போலீஸ் அதிகாரிக்கு இருக்கும் அளவிற்கு பொறுப்பும்...கடமையுணர்வும் இயல்பாகவே இருந்தது அந்தத் தியாகராஜனிடம்!...அதனாலேயே அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!...ஒரு தடவை ஒரு ரவுடி கும்பலைப் பிடிக்கப் போன இடத்தில்...அந்த ரவுடி கும்பலுக்கும்...போலீஸ்காரங்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டைல அந்தத் தியாகராஜன்...அநியாயமா பலியாயிட்டாரு!”

“அடக் கடவுளே!” அங்கலாய்த்தாள் ஜோதி.

“அவர் சாவு எவ்வளவு பெரிய அதிர்ச்சியோ...அதை விட அதிர்ச்சி அவரோட சாவுச் செய்தியைக் கேட்டதும் அதைத் தாங்க முடியாம கத்திக் கதறி சுருண்டு விழுந்து துடியாய்த் துடிச்சு செத்தாளே அவரோட தாய்...அதுதான் பேரதிர்ச்சி!...ஹூம்...அங்கதான் இந்தப் பெரியவரைப் பார்த்தேன்! தியாகராஜனோட அப்பா!...ஒரே நாள்ல பெத்த மகனையும், கட்டிய மனைவியையும் பறி கொடுத்துட்டு...சிலையாய் உறைந்து நின்ற இந்தப் பெரியவரைப் பார்த்து எல்லோரும் பரிதாபப்பட்டாங்க!...ரத்த உறவுகள் ஆறுதல் சொல்லி முடிச்சதும் ஆளுக்கொரு திசைல பறந்துட்டாங்க!...தோழமை உறவுகள் பரிதாபப்பட்டதோட சரி!...யாருமே அவரோட எதிர்காலத்தைப் பத்திச் சிந்திக்கக் கூட இல்லை!...முதுமைக் காலத்துல தன்னைப் பார்த்துக்க மனைவியும் இல்லாம...மகனும் இல்லாம திக்குத் தெரியாத காட்டில் சிக்கிய சிறுவனைப் போல் விழி பிதுங்கி நின்றிருந்த பெரியவர்கிட்டப் போனேன்!...“அய்யா...நானும் உங்க மகன் தியாகராஜனும் ஒண்ணா வேலை பார்த்தவங்க!...அவர் என்கிட்ட உங்களைப் பற்றியும்...அம்மாவைப் பற்றியும் அடிக்கடி சொல்லுவார்!... “என்னை நம்பித்தாண்டா அந்த ரெண்டு உசுரும் இருக்குதுக!...எனக்காக என்னோட உயர்வுக்காக அதுக பட்ட பாட்டையெல்லாம் கண்ணால பார்த்தவன்டா நான்!...அந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் விடிவு வந்தாச்சுடா!...இனி அதுக கொஞ்சமும் சிரமப்படாத அளவுக்கு சந்தோஷமா…சொகுசா வாழ வைப்பேண்டா!...அதுதாண்டா என் வாழ்க்கை லட்சியமே!...”ன்னு சொல்லிட்டேயிருப்பார்!...அவருக்குப் போய் இப்படி ஆயிடுச்சே!.. என்னாலேயே இந்தக் கொடுமையைத் தாங்கிக்க முடியலையே!..நீங்க...எப்படி?”ன்னு கேட்டுக் கதறினேன்!”

கேட்டுக் கொண்டிருந்த ஜோதியின் விழிகளில் அவளையுமறியாமல் கண்ணீர் கசிந்தது. “ப்ச்...கேட்கவே மனசைப் பிசையுதுங்க!” கரகரத்த குரலில் சொன்னாள்.

“அப்புறம் அவர்கிட்டப் பேசி...கொஞ்சம் கொஞ்சமா அவர் மனதை மாற்றி...என் கூட கூட்டிட்டு வந்தேன்!...அவருக்கு மகனா நான் மாறிட்டேன்...எனக்கொரு அப்பாவை நானே உருவாக்கிக்கிட்டேன்!”

சொல்லி விட்டுச் சிரித்த திவாகரைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும் போலிருந்தது ஜோதிக்கு.

தான் மொட்டை மாடிக்கு வரும் போது கீழ் வானில் இருந்த நிலா தற்போது மேல் வானுக்கே வந்து விட்டதைப் பார்த்து, வெகு நேரமாகி விட்டதை உணர்ந்த திவாகர், “சரி..சரி...இப்படியே எங்களோட கதையைப் பேசிட்டிருந்தா விடிய விடியக் கூடப் பேசலாம்...அவ்வளவு இருக்கு!...கீழ அம்மா உனக்காக தூங்காமக் காத்திட்டிருப்பாங்க..போம்மா...போய் அவங்க கூடப் ப்டுத்துக்க...சரியா?”

தலையாட்டி விட்டுத் திரும்பிய ஜோதி, திடீரென்று ஞாபகம் வந்தவளாய், “அந்த அம்மா....?”

“அது இதை விடப் பெரிய சோகக் கதை!...அதை இன்னொரு நாள் சொல்றேன்...இப்பக் கீழே போகலாம்...வா!” சொல்லியபடியே சென்று மாடிப்படிகளில் இறங்க ஆரம்பித்த திவாகரின் பின்னால் மௌனமாய் இறங்கினாள் ஜோதி.

மேல் வானில் நிலவை மறைத்திருந்த சில மேகத் துணுக்குகள் தாமாக விலகி, நிலவு தன் பளீர் ஒளியை பூமிக்குப் பாய்ச்சிட உதவின.

இரண்டு தினங்களுக்குப் பிறகு,

இன்ஸ்பெக்டர் திவாகரைத் தேடி வந்த கான்ஸ்டபிள் ஒருவர், அவர் வீட்டில் ஜோதி இருப்பதைக் கண்டு நெற்றி சுருக்கி, “சார்...உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கலாமா?” என்று திவாகரிடம் சன்னமான குரலில் கேட்க,

“ம்...கேளுப்பா” என்றார் திவாகர், தன் வழக்கமான புன் சிரிப்புடன்.

“வந்து...சார்...இந்தப் பொண்ணு எப்படி இங்கே?”

“இந்தப் பொண்ணை உனக்கு ஏற்கனவே தெரியுமா?” ஆர்வமாய்க் கேட்டார் திவாகர்.

“ம்...தெரியும் சார்!...ஒரு தடவை டவுன் ஹால்ல ஒரு நகைக்கடைல நடந்த சில்லரைத் திருட்டுக்காக...இந்தப் பொண்ணை ஸ்டேஷன்ல வெச்சு விசாரிச்சிருக்கோம்!” அந்தக் கான்ஸ்டபிள் கொஞ்சம் தயக்கத்துடனேயே சொல்ல,

திவாகரின் மூளைக்குள் அப்போதுதான் உறைத்தது. “ஓ...அதனாலதான் அன்னிக்கு அந்தப் பெண், “ஒரு தடவை சந்தேகத்தின் பேரில் ஸ்டேஷனுக்குப் போய்ட்டு வந்ததினாலதான் இப்ப சாவைத் தேடி தண்டவாளத்துல ஓடிட்டிருக்கேன்!”ன்னு சொன்னாளா?”

“அப்படின்னா...இந்தப் பெண்ணைத் திருடின்னு சொல்றீங்களா?” திவாகர் வேண்டுமென்றே கேட்டார்.

“இல்லை சார்!...சந்தேகத்தின் பேரில் விசாரணைக்குக் கூட்டிட்டு வந்தோம் அவ்வளவுதான்!” கான்ஸ்டபிள் அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னார்.

“சரி...எதை வெச்சு...இந்தப் பெண் மேல சந்தேகப்பட்டீங்க?...அதைச் சொல்லுங்க மொதல்ல!” திவாகரும் விடாமல் குடைந்தார்.

“சார்...இந்தப் பெண் டவுன் ஹால்ல ஒரு ஜுவல்லரி ஷாப்ல வேலை பார்த்திட்டிருந்தது!...அந்தக் கடைல ஒரு தடவை ஒரு திருட்டு நடந்திருச்சு!...திருட்டுன்னா நகைத் திருட்டு இல்லை!...பணம்!...கேஷ்!...கல்லாவுல இருந்த பணம் பத்தாயிரம் ரூபாய்...ஒரே கட்டு!...காணாமப் போயிடுச்சு!...அப்பக் கடைல இந்தப் பொண்ணும்...வேற ரெண்டு பெண்களும் மட்டும்தான் இருந்திருக்காங்க!...அந்தக் கடை ஓனர் குடுத்த கம்ப்ளைண்ட் அடிப்படைலதான் அந்த மூன்று பெண்களையுமே ஸ்டேஷனுக்கு வரவழைச்சு விசாரிச்சோம்!” திவாகர் திரும்பத் திரும்ப அதைப் பற்றியே துருவித் துருவிக் கேட்பதிலிருந்து அந்தப் பெண் அவருடைய உறவுக்காரப் பெண்ணோ? என்று அஞ்சிய அந்தக் கான்ஸ்டபிள் மிக பவ்யமாகவே பதிலளித்தார்.

“ஓ.கே!...கடைசில திருடிய ஆளைக் கண்டுபிடிச்சீங்களா?”

“அதுதான் சார் கூத்து!...பணக்கட்டு மேஜை டிராயருக்கு அடியிலேயே விழுந்து கிடந்திருக்கு!...அது எப்படின்னா...டிராயர் திறந்திருக்குன்னு நெனச்சிட்டு அந்த ஓனர் மேல பார்த்துப் பேசிக்கிட்டே பணத்தை டிராயருக்குள்ளார போட்டிருக்கார்...அது கீழ விழுந்திடுச்சு!...அடுத்த நாள் காலைல கடையைப் பெருக்கறப்ப கிடைச்சிருக்கு!”

டென்ஷனாகிப் போனார் திவாகர், “என்னய்யா...இவ்வளவு அஸால்ட்டா சொல்றீங்க?...மூன்று பெண்களை ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வந்து விசாரிச்சிருக்கீங்க....அதனால அந்தப் பெண்களோட எதிர்காலம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கும்ன்னு நெனச்சுப் பாத்தீங்களாய்யா?...இந்த மாதிரி அங்கங்க நடக்கற சின்னச் சின்ன மிஸ்டேக்குகளாலதான்யா மொத்த டிபார்ட்மெண்டோட பேரே கெட்டுப் போய்க் கிடக்கு!” கோபமாய்ச் சொன்னார் திவாகர்.

“அது வந்து சார்...அங்க ஒரு இன்ஸ்பெக்டர்....” எதையோ சொல்லிச் சமாளிக்க அந்தக் கான்ஸ்டபிள் முயல,

மேற்கொண்டு அவர் சொல்ல வருவதை எதையுமே கேட்க விருப்பமில்லாதவராய், “நீங்க கெளம்பலாம்!” என்றார் திவாகர்.

சல்யூட் அடித்து விட்டு அந்தக் கான்ஸ்டபிள் சென்றதும், தன் டிபார்ட்மெண்ட் அந்த ஜோதிக்கு ஏற்படுத்திய மனக் காயத்தை தன்னால் முடிந்த அளவிற்குக் கொஞ்சமாவது ஆற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு, “ஜோதி!...அம்மா ஜோதி!” என்று நேசமாக....பாசமாக...அன்பாக...அழைத்தார் திவாகர்.

தயங்கித் தயங்கி வந்த ஜோதி, அந்தக் கான்ஸ்டபிள் சென்று விட்டார் என்பதையறிந்ததும் சற்று தைரியமானாள்.

“என்னம்மா...சாப்பிட்டியா?” திவாகர் கேட்க,

“ம்” என்றாள்.

“உட்காரு!’

அவள் சங்கோஜப்பட, “பரவாயில்லை உட்காரும்மா!” என்று திவாகர் புன்னகையுடன் சொல்ல,

உட்கார்ந்தாள்.

“சொல்லும்மா...நகைக்கடைல என்ன நடந்தது?...போலீ ஸ்டேஷன்ல என்ன நடந்தது?...அந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு உன்னுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது?...மனம் திறந்து என் கிட்டச் சொல்லு”

மறந்திருந்த அந்த அமங்கல நிகழ்வுகள் மறுபடியும் நினைவுக் குளத்தின் மேல் மட்டத்தில் வந்து மிதக்க, அவள் முகம் திடீரென்று சோக முலாம் பூசிக் கொண்டது.

அவளின் மௌனம் திவாகரை சங்கடப்படுத்த, “எப்ப நீ இந்த வீட்டிற்குள் அடியெடுத்து வெச்சியோ அந்த நிமிடமே நீயும் இந்தக் குடும்பத்தில் ஒருத்தி ஆயிட்டே!...அதனாலதான் இவ்வளவு அக்கறையா...இவ்வளவு உரிமையா உன் கிட்டக் கேட்கறேன்!...என் மேலே நம்பிக்கை இருந்தா சொல்லு!...இல்லேன்னா விட்டுடு...நான் உன்னைக் கட்டாயப்படுத்தலே!”

“விருட்”டென்று தலையைத் தூக்கி அவர் கண்களையே ஊடுருவிப் பார்த்த ஜோதி, அந்தக் கண்களுக்குள் பரவலாய் விரிந்து கிடந்த மனித நேயத்தை அடையாளம் கண்டு கொண்டாள். அவள் மனதில் திவாகர் மீதான நம்பிக்கை இமயம் போல் உயர்ந்து விட,

அந்த நிகழ்வுகளைச் சொல்ல ஆரம்பித்தாள்.
*****
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Dr.பொன் கௌசல்யா டியர்
 
Last edited:

தரணி

Well-Known Member
விசாரணைக்கு போனாலும் போலிஸ் ஸ்டேஷன் போறது இப்போ கூட ஏதோ பெரிய பாவசெயல் மாதிரி தான் பாக்குரங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top