யாருமிங்கு அனாதையில்லை - 29

Advertisement

pon kousalya

Active Member
யாருமிங்கு அனாதையில்லை – 29
எழுதியவர்:
முனைவர். பொன்.கௌசல்யா.

அத்தியாயம் - 29

இரண்டு நாட்களாகவே அந்த பெரும் பரபரப்பில் சிக்கியிருந்தது. தெருவில் ஆங்காங்கே கும்பல் கும்பலாய் நின்று விவாதித்துக் கொண்டிருந்தனர் அவ்வூர் மக்கள். கிணற்றடி, சந்தைக் கடை, சலூன் கடை, பேருந்து நிறுத்தம் என எல்லா இடங்களிலும் ஜனங்கள் வாயில் அதே பேச்சுத்தான்.

“கலிகாலத்துல மனுஷன் நிம்மதியாய்க் கோயிலுக்குப் போய் சாமி கும்பிடக் கூட முடியாது போலிருக்கே?” ஆறுமுகம் புலம்பினார்.

“இந்த ஊருக்குத்தான் இந்த மாதிரி புதுசு புதுசா பிரச்சினைகள் வருது” வெற்றிலைக்கார ரங்கசாமி தலையிலடித்துக் கொண்டு சொன்னார்.

“அய்யா...நீங்க மலைக் கோயிலுக்குப் போய் அவனைப் பார்த்திட்டு வந்தீங்களா?” பண்ணையாரின் தெற்குத் தெரு தோட்டத்தில் உழவு வேலைகள் மொத்தத்தையும் தனி ஆளாய் நின்று கவனித்துக் கொண்டிருக்கும் கண்ணுச்சாமி ஆறுமுகத்தைப் பார்த்துக் கேட்டான்.

“பின்னே?...போகாம இருப்பேனாப்பா?....மலை மேலே இருக்கறது...எங்களோட குலதெய்வமான பச்சைநாயகி அம்மனாச்சே...போகாம இருப்பேனா?” கடுப்போடு பதில் சொன்னார் ஆறுமுகம்.

“ஓ...அப்ப அவனைப் பார்த்திட்டீங்க?...எப்படியிருந்தான் ஆளு?” ஆர்வத்தோடு கேட்டான் கண்ணுசாமி.

“ஆறரை...ஏழடிக்குக் குறையாத உயரம்....“கரு...கரு”ன்னு கட்டுமஸ்தான உடம்பு...தோள் பட்டை ரெண்டும் அகலமா...கை காலெல்லாம் சும்மாக் கரணை கரணையா சதைக் கட்டுகளோட...கண்கள் ரெண்டும் நெருப்புக் கங்காட்டம்...” சொல்லும் போதே ஆறுமுகத்தின் குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது.

“போய்க் கேட்க வேண்டியதுதானே, “யாருடா நீ?...எதுக்குடா இங்க வந்து எங்க குலசாமியோட சன்னதில உட்கார்ந்திட்டிருக்கே?ன்னு கேட்டிருக்கலாமே?” கண்ணுசாமி சொல்ல,

“மலையேறும் போது அப்படித்தான் நெனச்சுக்கிட்டு ஏறினேன்...போய் அவனை நாலு அதட்டு அதட்டி... “இது எங்க குலசாமியோட கோயிலு...இங்கெல்லாம் எங்க சாதி சனத்தைத் தவிர வேற ஆளுக யாரும் வந்து உட்காரக் கூடாது!...ராத்திரி நேரங்கள்ல தங்கக் கூடாது!”ன்னு சொல்லி அவனை விரட்டி விட்டுட்டுத்தான் மலையை விட்டுக் கீழே இறங்கறது”ன்னு ஒரு தீர்மானத்தோடதான் மலை ஏறினேன்...”

“சரி....அப்புறம்?” கண்ணுசாமி விடாது கேட்டான்.

“போயி அவனை நேர்ல பார்த்ததும்...யப்பா...ஆடிப் போயிட்டேன்!...சப்த நாடியும் ஒடுங்கிப் போச்சு...எதையுமே கேட்க வாய் வரலை!...ஊருக்கு வெளிய கம்பீரமா உட்கார்ந்திட்டிருக்கற அய்யனார் சாமி மாதிரி...நம்ம குலசாமி கோயிலுக்குக் காவல்காரனாட்டம் உட்கார்ந்திட்டிருக்கான்” சொல்லி விட்டுத் தலையை வேகமாக இட, வலமாய் ஆட்டினார் ஆறுமுகம்.
அதைக் கேட்டு “ஹா...ஹா...ஹா”வென்று வாய் விட்டுச் சிரித்த கண்ணுசாமி “அப்ப...அவனைப் பார்த்துப் பயந்திட்டீங்க....”ன்னு சொல்லுங்க”
கண்ணுசாமியின் அந்த வார்த்தைகள் ஆறுமுகத்தின் தன்மானத்தைச் சீண்டி விட, “யோவ்...நான் மட்டுமாய்யா பயந்துக்கறேன்?...இன்னிக்குத் தேதில இந்த ஊர்ல இருக்கற எல்லாப் பயலுகளுமேதானே அந்தப் பைத்தியக்காரனைப் பார்த்துப் பயந்து நடுங்கிட்டிருக்காங்க?....நானாவது மலை மேலேயே போய்ப் பார்த்திட்டு வந்தேன்...பல பேரு...மலைக்குக் கீழேயே நின்னு அண்ணாந்து மலையைப் பார்த்திட்டிருக்கானுக!...” தன்னுடைய பராக்கிரமத்தைப் பறை சாற்றிக் கொண்டார் ஆறுமுகம்.

“சரி...சரி...கோவிச்சுக்காதீங்க...” என்ற கண்ணுசாமி, சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த வாழைக்காய் மண்டி வடிவேலுவிடம், “அப்பா...வடிவேலோய்...இதுக்கெல்லாம் என்னதான் முடிவு?” இங்கிருந்தே கேட்டான். உதட்டைப் பிதுக்கினான் வடிவேலு.

“என்ன சாமிகளா ஆளாளுக்கு இப்படி வாயிலேயே அசை போட்டுக்கிட்டிருந்தா எப்படி?...இன்னியோட மூணு நாளாச்சு நம்ம சாதி சனத்துக்காரங்க மலை மேலே போயி...கோயில்ல தீபமேத்தி...பூஜை பண்ணி...” கண்ணுசாமி உண்மையிலேயே அங்கலாய்த்தான்.

அது வரையில் அமைதியாய் நின்றிருந்த பள்ளிக் கூட வாத்தியார் சங்கரப்பன், “கோயில் பூசாரிதான் போய் ஊர்ப் பெரியதனக்காரங்ககிட்டேயும் பிராது வைக்கணும்!...அதைச் செய்யறதை விட்டுட்டு...அவரே அஞ்சிக்கிட்டு நிக்கறாரு” என்று பூசாரி மீது குற்றத்தைச் சுமத்த,

“பூசாரிக்கு மட்டும்தான் அந்தச் சாமி சொந்தமா?....நம்ம குலத்துக்காரங்க..எல்லோருக்கும்தானே சொந்தம்?...அதனால இன்னிக்கு சாயந்திரமே..நாம எல்லோரும் பொன்னுரங்கய்யா வீட்டுக்குப் போறோம்...இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டறோம்” ஆறுமுகம் சொல்லி முடித்தார்.

“அப்ப...அதுக்கு முன்னாடியே பஞ்சாயத்துத் தலைவருக்கு...சொல்லி வெச்சாத்தானே நாம அவரு வீட்டுக்குப் போய்ப் பேசும் போது அவரும் அங்க இருப்பாரு?” என்று வாத்தியார் சங்கரப்பன் சொல்ல, “அதெல்லாம் எல்லாருக்கும் தகவல் சொல்லியாச்சுங்க வாத்தியாரய்யா!...சாயந்திரம் நமக்கு முந்தி அவங்க அங்க இருப்பாங்க” என்றார் கண்ணுசாமி.

அப்போது, எங்கிருந்தோ “திமு...திமு”வென்று வந்தது ஊர்ப் பெண்கள் கூட்டம். அதன் தலைவி போல் செல்லக்கிளி முன்னால் வந்து கொண்டிருந்தாள். “இங்க பாருங்கடி அக்கிரமத்தை...அங்க யாரோ ஒருத்தன் நம்ம குலசாமி கோயில்ல உட்கார்ந்து கூத்தடிச்சிட்டிருக்கான்...அவனை அடிச்சுத் துரத்த வக்கில்லாத ஆம்பளைங்கெல்லாம் இங்க நின்னு கதை பேசிட்டிருக்காங்க!...” வரும் போதே தன் ஆலாபனையைத் துவக்கியிருந்தாள். அவள் சரியான வாய்த்துடுக்கு என்பதையும், அவளிடம் பேச்சுக் கொடுத்தால்...கொடுத்தவர்கள்தான் அசிங்கப் பட நேரிடும் என்பதையும், தெளிவாகவே அறிந்திருந்ததால், ஆண்கள் யாருமே வாயையே திறக்கவில்லை.

“ஹும்...என் புருஷன் மட்டும் ஊர்ல இருந்திருந்தா இன்னேரம் மலை மேலே ஏறிப் போய் அந்த ஆளைப் புரட்டியெடுத்து...கீழே தூக்கிப் போட்டிருப்பான்!” செல்லக்கிளி சொல்ல, ஆண்களில் சிலர் மட்டும் உள்ளூரச் சிரித்துக் கொண்டனர். அவள் புருஷன் சோமு... ஊரறிந்த திருடன். ஊருக்கு வெளியில் இருக்கும் தோட்டங்களுக்கு ராத்திரியோடு ராத்திரியாய்ப் போய்...கிணற்று மோட்டார்களைத் திருடி விற்பான். ஆடுகளைத் திருடுவான். கோழிகளைக் களவாடுவான். சமீபத்தில் எங்கோ ஒரு மாட்டுப் பண்ணைக்குப் போய் கறவை மாடுகள் இரண்டை ஓட்டிக் கொண்டு போய்...போலீஸில் கையும் களவுமாய்ச் சிக்கி, தற்போது மதுரை ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான் என்பதும், உள்ளூர நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்ட அந்த ஆண்களுக்கு மட்டும் தெரியும்.

“பாருங்கடி...நான் இத்தனை சொல்லிட்டிருக்கேன்...ஒரு மூஞ்சில ஈயாடுதா பாருங்க!...”என்று மற்ற பெண்களைப் பார்த்துச் சொன்ன செல்லக்கிளி, தன் பார்வையை கண்ணுசாமி மீது பதித்து, “என்ன தெக்குத் தோட்டக் கண்ணுசாமியண்ணே....வீட்டிலிருந்து பொடவையும், ரவிக்கையும் கொண்டாந்து தாரேன்...உடுத்திக்கறீங்களா?” கேட்டாள்.

அவள் தன்னைக் குறிப்பிட்டுச் சொன்னது கண்ணுசாமியை உசுப்பி விட, “த பாரு செல்லக்கிளி...வாய் இருக்குது!ன்னு என்ன வேணாலும் பேசிடக் கூடாது!...சாயங்காலம் பொன்னுரங்கம் அய்யா வீட்டுல கூட்டம் போடறோம்!....அதுல வெச்சு தீர்மானிப்போம்...இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது?ன்னு” என்றான் சினம் பொங்க.

“ஓ...கூட்டம் போட்டுத் தீர்மானம் போடப் போறீங்களாக்கும்?...அதுக்குள்ளார அவன் நம்மாளுக ரெண்டு மூணு பேரையாவது போட்டுடுவான்!” செல்லக்கிளி விடாமல் துரத்தினாள்.

“ந்தா....செல்லக்கிளி...இப்ப இங்கிருந்து போகப் போறியா...என்னாங்கறே?” ஸ்கூல் வாத்தியார் மாணவர்களை அதட்டுவது போல் அதட்டினார்.

“க்கும்...வந்திட்டாரு வாத்தி!...வாயிலேயே வாத்தியம் வாசிச்சு...வானத்து மழையைக் கொண்டு வர்றவர்” சொல்லியவாறே அவள் முன்னே நடக்க, பெண்கள் கூட்டம் அவளைப் பின் தொடர்ந்தது. அவள் சென்ற பின், “வர...வர...இந்தச் செல்லக்கிளிக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு!...ஒரு மட்டு மரியாதை இல்லாம...எல்லோரையும் எடுத்தெறிஞ்சு பேசறதே வேலையாய்ப் போச்சு அவளுக்கு!” வாத்தியார் புலம்பினார்.

“அவளைச் சொல்லிக் குத்தமில்லை வாத்தியாரய்யா...அவளைக் கேள்வி கேட்க வேண்டியவன் உள்ளார போயிட்டதால...இது அவிழ்த்து விட்ட கழுதையாட்டம் ஊரைச் சுத்திக்கிட்டிருக்கு” என்றான் கண்ணுசாமி.

மாலை ஆறு மணி. பொன்னுரங்கம் வீட்டு முற்றத்தில் சாதி சனம் மொத்தமும் அமர்ந்திருக்க, பஞ்சாயத்து ஒவ்வொருவரிடமும் பேசி விஷயங்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

மலைக் கோவில் சன்னதியில் பூசாரியாக இருக்கும் வினாயக மூர்த்தி தன் அனுபவத்தைச் சொன்னார். “மொதல் நாள் அவனைப் பார்த்ததுமே எனக்கு அடி வயித்துல “பகீர்”ன்னு ஆயிடுச்சு!...பார்த்தா பைத்தியக்காரனாட்டம் இருந்ததினால்..“சரி...சித்த சுவாதீனமில்லாத ஆள் போலிருக்கு”ன்னு நெனச்சு...சாதாரணமாய் துரத்தினேன்!...பதிலுக்கு அவன் என்னை முறைச்சான்!...“சர்ரி...சும்மாவாச்சும் கைல ஒரு தடியை வெச்சுக்கிட்டு மிரட்டலாம்!”னு...பாதுகாப்புக்காக நான் வெச்சிருக்கும் சிலம்பத் தடியை எடுத்துக் காட்டி மிரட்டினேன்!...அவன் கொஞ்சமும் அசரலை!....மேலே அண்ணாந்து வானத்தைப் பார்க்கறான்...அப்புறம் என்னைப் பார்த்து சீறுறான்!...”

“வானத்தை எதுக்கு அண்ணாந்து பார்க்கறான்?” பொன்னுரங்கம் குறுக்குக் கேள்வியை வைத்தார்.

“எனக்கென்ன தெரியும்?...சரி...பக்கத்துல போட்டு அடிக்கற மாதிரி பாவ்லா பண்ணலாம்னு...பக்கத்துல போனேன்...பாவிப்பயல் நான் எதிர்பார்க்காத நேரத்துல என்னை “பொசுக்”குன்னு கீழே தள்ளி விட்டுட்டான்...என் கையிலிருந்த தடி எகிறிப் போய் விழுந்திடுச்சு!...உடனே அவன் தாவிப் போய் அதைத் தானே எடுத்துக்கிட்டான்!..சரி...இதுக்கு மேலே அவன் கிட்டே வம்பு வெச்சுக்கிட்டா...அவன் கைல இருக்கற தடியாலேயே அடிச்சாலும் அடிச்சிடுவான்!னு நெனச்சு.. “மள...மள”ன்னு மலையை விட்டுக் கீழிறங்கி வந்து...நம்ம ராசய்யாவையும், கோதாப்பட்டி வாத்தியார் கோவிந்தனையும் கையோட கூட்டிக்கிட்டு மறுபடியும் மலை மேலே போனேன்!...”

“சரியான ஆளைத்தான் பூசாரி கூட்டிக்கிட்டுப் போயிருக்கீங்க பூசாரி...கோதப்பட்டி கோவிந்தன் ஒருத்தன் போதுமே...பத்து ஆளுக்குச் சமமாச்சே?” பஞ்சாயத்து தலைவர் சொன்னார்.

“க்கும்...நானும் நீங்களும்தான் மெச்சிக்கணும்!....அந்தக் கோவிந்தனையே பந்தாடிட்டான் அவன்!...விட்டாப் போதும்னு எனக்கு முன்னாடி ஓடி வந்துட்டானுக கோவிந்தனும்...ராசய்யாவும்”

சில நிமிடங்கள் தரையையே பார்த்து யோசித்த பொன்னுரங்கம், தன் குரலைத் தணித்துக் கொண்டு, “ஏன் பூசாரி...அதட்டல்...மிரட்டலையெல்லாம் விட்டுட்டு...அவன் கிட்டேயே...தன்மையா...பொறுமையாப் பேசிப் பார்த்தா என்ன?” புதிதாய் யோசனை சொன்னார் பள்ளிக் கூட வாத்தியார்.

“வாத்தியாரய்யா...அதையும் செஞ்சு பார்த்தேனே?... “இது கோயிலுப்பா....இங்கயெல்லாம் தங்கக் கூடாது!....பேசாம கீழே போயி...அடிவாரத்துல ஒரு கல் மண்டபம் இருக்கும் அதுல படுத்துக்கோ”ன்னு அன்பாகவும் சொல்லிப் பார்த்தேனே?”

“அதுக்கு என்ன செஞ்சான்?”

“மேலே அண்ணாந்து பார்த்தான்...வானத்தைக் கை காட்டினான்!...அப்புறம் “நீ மொதல்ல கீழே போ”ன்னு என்னை கை ஜாடையால் விரட்டினான்!...நான் அதைப் பார்த்து அப்படியே நிற்க...அடிக்கிற மாதிரி எந்திரிச்சு வந்தான்!...அவ்வளவுதான் ஒரே ஓட்டமாய் கீழே ஓடி வந்திட்டேன்” சொல்லும் போது பூசாரியின் மொத்த உடலும் நடுங்கியது.

“அன்னையிலிருந்து மேலே போறதையும்...குலதெய்வம் பச்சைநாயகி அம்மனுக்கு பூஜை பண்றதையும்....நிறுத்திட்டீங்க!...அப்படித்தானே பூசாரியய்யா?” பஞ்சாயத்துத் தலைவர் கேட்டார்.

“பின்னே?...மேலே போயி அவன் கிட்ட அடி வாங்கிச் சாகச் சொல்றீங்களா?....அந்தப் பைத்தியக்காரனை அங்கிருந்து விரட்டியடிச்சதுக்குப் பிறகுதான்..மேலேயே போகப் போறேன்!...ராத்திரி தூக்கத்திலெல்லாம் அவன் மூஞ்சியே வந்து வந்து மிரட்டுதுங்கய்யா...” பரிதாபமாய்ச் சொன்னார் பூசாரி வினாயக மூர்த்தி. அதற்குப் பிறகு அங்கு யாரும் எதுவும் பேசாது போக, அந்த இடத்தில் ஒரு கனத்த அமைதி நிலவியது. அந்த அமைதியைக் குலைக்கும் விதமாய் செல்லக்கிளி ஆரம்பித்தாள். “த பாருங்க!...ஆம்பளைங்களாலே முடியலைன்னா....நாங்க பொம்பளைங்க பார்த்துக்கறோம்!”

“என்ன பண்ணுவீங்க?...என்ன பண்ணுவீங்க பொம்பளைங்க?...அங்க அவன் கைல சிலம்பத் தடியோட உட்கார்ந்திட்டிருக்கான்...போனீங்கன்னா அதிலேயே நாலு சாத்து சாத்தி...மண்டையைப் பொளந்து...அனுப்புவான்...!...” என்றார் பூசாரி.

அடுத்து பஞ்சாயத்துத் தலைவரை வம்பிழுக்கும் விதமாய், “பஞ்சாயத்துத் தலைவர்....வாயே திறக்காமல் இடிச்ச புளியாட்டம் இருந்தா எப்படி?...சட்டுபுட்டுன்னு ஏதாச்சும் செஞ்சாத்தானே ஆகும்?...பௌர்ணமிக்கு இன்னும் அஞ்சு நாளுதான் இருக்கு...அதுக்குள்ளார அவனை அங்கிருந்து துரத்தியடிச்சாத்தான் நம்ம பச்சைநாயகி அம்மனுக்கு பௌர்ணமி பூஜையை நெறைவா செய்ய முடியும்?”

“அம்மா செல்லக்கிளி....பெரியவங்க பேசிட்டிருக்கோம்!...நீ பாட்டுக்கு இடையில் புகுந்து ஏதெதோ பேசிட்டிருக்கியே...இது நல்லாவா இருக்கு?” பொன்னுரங்கம் அவளை நாசூக்காக கண்டிக்க,

“க்கும்...அங்க உட்கார்ந்திருக்கறவனை அடக்க முடியாம...இங்க உட்கார்ந்துக்கிட்டு பொம்பளைகளை அடக்கறாரு...நம்ம பெரியதனக்காரரு” சன்னக் குரலில் முணுமுணுத்தாள் செல்லக்கிளி. அவள் அடங்கியதும் பொத்தாம் பொதுவாய்க் கூட்டத்தைப் பார்த்து, “சரிப்பா...நீங்களே ஒரு முடிவைச் சொல்லுங்க...என்ன பண்ணலாம்?” கூட்டத்தாரிடமே பொறுப்பை விட்டார் பஞ்சாயத்து தலைவர். எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனரே தவிர, யாரும் எந்த விதக் கருத்தையும் கூறவில்லை.

ஊருக்குள் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தி, பொதுக் காரியங்களைச் செய்து வரும் தனசேகர், கூட்டத்தின் பின் பகுதியிலிருந்து மெல்ல எழுந்தான். “ஊர்ப் பெரியவர்களுக்கு ஒரு சின்ன விண்ணப்பம்!...உங்க எல்லோருக்குமே நல்லாவே தெரியும் எங்க இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் ஊரில் பல நல்ல காரியங்களை நாங்க செஞ்சிட்டிருக்கோம்!...இப்ப...ஊர்ல ஒரு புதுப் பிரச்சினை முளைச்சிருக்கு!....இதை நல்ல முறையில் தீர்க்கணும்னு நீங்க எல்லோரும் பேசிட்டிருந்தீங்க!...சந்தோஷம்!...இதுல என்னோட விண்ணப்பம் என்ன?ன்னா... நீங்க இந்த வேலையை எங்க கிட்டே ஒப்படைச்சா யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லாத வகைல...எங்களால் இதைத் தீர்க்க முடியும்!...அதனால....எங்களுக்கு ஒரு வாய்ப்புக் குடுங்க!...செஞ்சு காட்டறோம்”

பஞ்சாயத்துத் தலைவர் பொன்னுரங்கத்தைப் பார்க்க, அவர் மற்றவர்களைப் பார்த்தார். சிறிது நேரம் மூத்த தலைமுறையினர் தங்களுக்குள்ளாகவே ஆலோசித்தனர். இறுதியில் பஞ்சாயத்து தலைவர் பேசினார்.

“த பாரு தனசேகர்...நீ நம்ம பொன்னுரங்கம் அய்யாவோட ஒரே மகன்...அதுவுமில்லாம கிழக்குச் சீமை ராமலிங்க பூபதியோட மருமகன்!...ஊருக்குள்ளார உங்களுக்கு ஒரு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு!...உங்க நற்பணி மன்றத்தைப் பத்தியும்...உங்களோட ஆக்கப் பணிகளைப் பத்தியும் எனக்கு நல்லாவே தெரியும்!...என்ன ஒரு உறுத்தல்ன்னா....?...அந்தப் பைத்தியக்காரன்....கைல சிலம்பத் தடியை வெச்சுக்கிட்டு..போறவங்க...வர்றவங்களையெல்லாம் தாக்கிட்டிருக்கான்!....நீங்க எல்லோருமே இள வட்டங்கள்!...உங்களுக்கும் ரத்தம் சூடாயிடும்!...பதிலுக்கு நீங்களும் அவனைத் திருப்பித் தாக்க ஆரம்பிச்சிட்டீங்கன்னா....நம்ம குலதெய்வம் சன்னதி...சண்டைக் களமாயிடும்!....அனாவசியமா அங்க ரத்தக்கறை படியும்!...அப்புறம் அதைக் கழுவ தனியா பூஜைகளும்...பரிகாரங்களும் பண்ண வேண்டியதாயிடும்!...பௌர்ணமி பூஜை பண்ற நேரத்துல அதெல்லாம் ஆகற காரியமா?...அதனால.....இது சரிப்பட்டு வராதுப்பா...விட்டுடு...வேற ஏதாச்சும் மார்க்கம் இருக்கா?ன்னு யோசிப்போம்”

“பொசுக்”கென்று முகம் வாடிப் போனான் தனசேகர். இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு, “அய்யா...இத்தனை பேர் முன்னாடி நாங்க நம்ம குலதெய்வம் பச்சைநாயகி அம்மன் மேலேயே வாக்குக் குடுக்கறோம்!...நாங்க எந்தக் காரணத்தைக் கொண்டும் அவன் மேல் கையை வைக்க மாட்டோம்!...அவனே எங்களைத் தாக்கினாலும் கூட...அட ரத்தக் காயத்தையே ஏற்படுத்தினாலும் கூட...திருப்பியடிக்க மாட்டோம்” என்றான் உறுதி வாக்காய்.

“அவன் பேசினால் கேக்கற ஆளில்லை!...நான் பேசிப் பார்த்திட்டுத்தான் சொல்றேன்”பூசாரி சொல்ல,

“நாங்க பேசிப் பார்க்கறோம்!...கேட்கலைன்னா எல்லோருமா சேர்ந்து மிரட்டிப் பார்க்கிறோம்!...அப்படியும் அசரலைன்னா...நாங்களே அவனை வலுக்கட்டாயமா நகர்த்தி நகர்த்தி...ஒவ்வொரு படியா இறங்க வெச்சு...கீழே கொண்டாந்திடுவோம்!...அட...அதுவும் சாத்தியப்படலைன்னா....குண்டுக்கட்டாய்த் தூக்கிட்டே வந்திடுவோம்!” சொல்லும் போதே தனசேகரின் கண்களில் நம்பிக்கை ஒளி வீசியது.

அப்போதும் மூத்தவர்களுக்கு நம்பிக்கை வராது போக, தனக்கு ஆதரவாய் யாராவது குரல் கொடுப்பார்களா? என்கிற நப்பாசையில் கூட்டத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்தான் தனசேகர். யாரும் எதுவும் பேசாததால் அமைதியாய் உட்கார்ந்தான்.
(தொடரும்)​
 

தரணி

Well-Known Member
சொக்கு கல்யாணம் என்ன ஆச்சு....இவான் யாரு புதுச
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top