யாருமிங்கு அனாதையில்லை - 27

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!” - 27
(நாவல்)
டாக்டர்.பொன்.கௌசல்யா.

அத்தியாயம் : 27

“எப்படிம்மா....இவர் இப்ப இருக்கற நிலைமைல இவரை எப்படி...நம்ம வண்டில?”

“ஒண்ணும் பிரச்சினையில்லை!...எனக்கும் உனக்கும் நடுவுல உட்கார வை!...இதோ இந்த துப்பட்டாவை வெச்சு...அவரை உன் முதுகோடு சேர்த்துக் கட்டிக்கோ...நான் பின்னாடி உட்கார்ந்து கீழே விழாமல் பிடிச்சுக்கறேன்!...அவ்வளவுதான்!”

“சரிம்மா” என்ற முரளி அவள் சொன்னது போலவே செய்து டி.வி.எஸ்-50-ஐ நிதானமாய்ச் செலுத்தி பத்தே நிமிடத்தில் அந்த சொக்குவை தன் வீட்டுக் கூடத்திலிருந்த கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்தான்.

“யாருடா இது?” கேட்டுக் கொண்டே வந்த முரளியின் தாய் ராக்கம்மா, அருகில் வந்து சொக்குவின் முகத்தைப் பார்த்ததும் “அடக் கருமமே...இவனையா தூக்கிட்டு வந்தீங்க?...உங்க ரெண்டு பேருக்கும் என்ன மூளை கெட்டுப் போச்சா?...இவன் ஒரு கொலைகார நாயி!ன்னு உங்களுக்குத் தெரியாதா?” கத்தினாள்.

“அப்படியாம்மா?...யாரைம்மா இவர் கொலை செஞ்சார்?” வசந்தி கேட்டாள்.

“அன்னிக்கு...தனசேகரை....”

“இப்பென்ன?...தனசேகர் செத்தா போயிட்டார்?...இல்லையே?...அப்புறம் எப்படி இவர் கொலைகாரர் ஆவார்?” வசந்தி சொல்ல

“இருந்தாலும்...கத்தியால் குத்தியவன் தானே?”

“அது ஆத்திரத்துல குத்தியது...அவ்வளவுதான்” என்றாள் வசந்தி.

அப்போது மூச்சை ஆழமாய் உறிஞ்சிய ராக்கம்மா “அடக் கடவுளே...தண்ணி வேற போட்டிருப்பான் போலிருக்கே?” என்றாள்.

“ஆமாம்மா...ஏக போதைல ரோட்டோரமாய்க் கிடந்தான்...வண்டிவாசிக போற ரோடு...எவனாவது லாரிக்காரன் அடிச்சுத் தூக்கிட்டுப் போயிட்டான்னா வம்பு!ன்னு நானும் வசந்தியும்...டி.வி.எஸ்-50ல வெச்சு இங்க தூக்கியாந்திட்டோம்” என்றான் முரளி.

“ஏண்டா...இது நமக்குத் தேவையாடா?” ராக்கம்மா சொல்ல

“அம்மா...யாருன்னே தெரியாத ஒருத்தர் கண்ணுல கண்ணீர் வரும் போது, அதைப் பார்த்து இன்னொருவர் கண்ணில் கண்ணீர் வந்தா...அதுதான்மா மனித நேயம்!...எனக்கும் வசந்திக்கும் அந்த மனித நேயம் நிறைய இருக்கும்மா” என்றான் முரளி.

“என்னமோ பண்ணுங்க...போங்க!” வெறுப்போடு சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் ராக்கம்மா.

சற்று நேரத்தில் முரளியும் அவன் தாயாரும் கடைவீதி சென்று விட வசந்தி மட்டும் வீட்டில் தனியே இருந்தாள்.

லேசான முனகலுடன் அந்த சொக்கு புரண்டு படுக்க அருகில் வந்து பார்த்தாள் வசந்தி. அப்போதுதான் அவள் கண்களில் அந்தக் காயம் பட்டது. முழங்கையில் சுமார் இரண்டு அங்கு நீளத்தில் சிராய்ப்புக் காயம்.

“அடடே...போதையில் மயங்கி விழுந்தப்ப காயம் ஆயிடுச்சு போலிருக்கே?” என்று நினைத்தபடியே வீட்டின் பின் புறம் சென்று கள்ளிப்பூட்டான் தழையை கொத்தாகப் பறித்துக் கொண்டு வந்து உள்ளங்கையில் வைத்து நசுக்கி அதன் பச்சை நிற சாற்றை ரத்தக் காயத்தின் மீது விழச் செய்தாள்.

பின்னர் அந்த தழையைக் காயத்தின் மீது வைத்து ஒரு வெள்ளைத் துணியால் கட்டி விட்டாள். “ஹும்...இப்படிக் குடிச்சுட்டு...நடு ரோட்டுல விழுந்து கையிலும் காலிலும் காயத்தை வாங்கிறதெல்லாம் ஒரு பொழப்பா?...குடிக்கற பயலுகளுக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவே இருக்காதா?....இப்படியா காசை செலவழிச்சு காயத்தை வாங்கிக்குவாங்க!...” தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

வலியால் முனகிக் கொண்டு அந்தச் சொக்கு திரும்பிப் படுத்த போது இடுப்புப் பகுதியில் அவன் மறைத்து வைத்திருந்த கத்தி தெரிய சிரித்துக் கொண்டாள் வசந்தி. “இன்னும் கத்தி எடுக்கற பழக்கத்தை விடலை போலிருக்கு”

மாலை மயங்கிய பின் வீடு திரும்பிய முரளி “என்ன வசந்தி...இன்னுமா இந்தச் சொக்கு கண் திறக்கவில்லை?” கேட்டான்.

“ஆமாம்ண்ணா...இடையில் ஒரு தரம் புரண்டு படுத்தார் அப்பத்தான் அவர் கையில் இருந்த காயத்தைப் பார்த்தேன்...வழக்கம் போல கள்ளிப்பூட்டான் தழையைக் கசக்கி வைத்துக் கட்டிட்டேன்!” என்றாள் வசந்தி.

“பரவாயில்லை இப்படியே இருக்கட்டும்...எப்பக் கண் திறக்கிறாரோ அப்பவே போகட்டும்” என்றான் முரளி.

இரவு பத்தரை மணி வாக்கில் மெல்ல எழுந்த சொக்கு கட்டிலில் அமர்ந்தவாறே சுற்றுப் புறத்தை நோட்டமிட்டான். கண்கள் சுருங்கின. “இது எந்த இடம்?” அவன் உதடுகள் முணுமுணுத்தன.

அந்த ஓசை கேட்டு வந்த முரளி “என்ன சொக்கு...போதையெல்லாம் தெளிஞ்சுதா?” புன்னகையோடு கேட்டான்.

“நீ...முரளி...நீ எப்படி எங்க வீட்டுல?” சொக்கு கேட்க

“ஆஹா...”என்று விழிகளை உயர்த்திய முரளி “அய்யா...இது உங்க வீடு இல்லை!...எங்க வீடு!” என்றான்.

எழுந்து தரையில் நின்ற சொக்கு “நான் எப்படி இங்கே?” கேட்டான்.

“அதை அப்புறம் சொல்றேன்...மொதல்ல வயித்துக்கு ஏதாச்சும் போடு...மணி பத்தரைக்கு மேலாயிடுச்சு!” என்ற முரளி சமையலறைப் பக்கம் திரும்பி “அம்மா...சொக்குவுக்கு சாப்பிட ஏதாச்சும் கொண்டு வாம்மா” என்றான்.

தோசைப் பிளேட்டைக் கையிலெடுத்துக் கொண்டு வந்தாள் வசந்தி.

எங்கே உட்காருவது என்று தெரியாமல் சொக்கு சுற்றும் முற்றும் பார்க்க, “அப்படியே கட்டிலேயே உட்கார்ந்து சாப்பிடுங்க” என்றாள் வசந்தி.

சொக்குவுக்கு அந்த அனுபவமே புதிதாயிருந்தது அவனது வாழ்க்கையில் யாருமே அவனை இந்த அளவிற்கு மதித்து வீட்டிற்குள் அனுமதித்து உட்கார வைத்து உண்ண உணவு கொடுத்ததேயில்லை. காரணம் அவ்வூர் மக்கள் மனதில் அவனைப் பற்றிப் பதிந்திருந்த அபிப்ராயம் வேறு மாதிரி. குடிகாரன் கோபக்காரன் ரவுடி பொறுக்கி...இன்னும் பலப்பல.

ஒவ்வொரு கவளமும் உள்ளே போகப் போக கண்களில் கண்ணீர் பெருகியது.

அப்போது முழங்கையிலிருந்த அந்தச் சிராய்ப்பில் லேசாய் வலியெடுக்க முகத்தைச் சுளித்தான்.

“காயம் ரொம்ப வலிக்குதா?” என்று வசந்தி கேட்டதும்தான் அந்த இடத்தைப் பார்த்தான். அப்போதுதான் தன் கையில் காயம் ஏற்பட்டிருப்பதே அவனுக்குத் தெரிந்தது.

“இந்தக் கட்டு....?”

“நான்தான் போட்டேன்” என்றாள் வசந்தி.

கண்ணீரால் நன்றி சொன்னான்.

சாப்பிட்டு முடித்தவன் கையைக் கழுவ சுற்றும் முற்றும் பார்க்க, “சும்மா அந்தப் பிளேட்டிலேயே கழுவுங்க” என்றாள் வசந்தி.

அவன் தயங்க “அட சும்மா கழுவுங்க” என்றவள் அவனருகில் வந்து அவனைக் கழுவ வைத்து கழுவியது அந்தப் பிளேட்டை சற்றும் கூச்சமில்லாமல் வாங்கிக் கொண்டு நகர

அதிசயமாய்ப் பார்த்தான் சொக்கு. “உலகில் இந்த மாதிரி மனிதர்கள் கூட இருக்கிறார்களா?”

சில நிமிடங்களுக்குப் பிறகு “நான் அப்படியே கிளம்பறேன் முரளி” என்ற சொக்குவை, புன்னகையோடு பார்த்த முரளி

“சொக்கு சார்...மணி இப்ப பதினொண்ணு...உங்க ஊருக்குப் போக இனிமேல் பஸ்ஸும் இல்லை!...உங்க கிட்ட வண்டியும் இல்லை!...எல்லாத்துக்கும் மேலே நீங்க இன்னும் முழு நிதானத்துக்கு வரலை!...அதனால ராத்திரி இங்கியே தங்கிட்டு...காலைல கிளம்பலாம்!...அப்படியே படுத்துத் தூங்குங்க!”

“இல்லை...முரளி...நான் எப்படியாவது...” சொக்கு இழுக்க

“எப்படியாவது”ன்னா எப்படி?...அதெல்லாம் முடியாது...பேசாம படுத்துத் தூங்கிட்டு காலைல போங்க!” அன்பாகக் கட்டளையிட்டாள் வசந்தி.

அமைதியானான் சொக்கு.

இரவு உறக்கம் பிடிக்காமல் படுத்துக் கிடந்த சொக்குவுக்கு அன்றைய அனுபவம் ஒருவித நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. “இவர்களெல்லாம் யார்?...இவர்களுக்கும் எனக்கும் என்ன உறவு?...இவர்கள் எதிரில்தானே நான் அந்த தனசேகரைக் கத்தியால் குத்தினேன்?...அப்புறம் எப்படி என்னை தைரியமாய் வீட்டிற்குள் அழைத்து உணவு பரிமாறுகின்றனர்?....இதற்குப் பெயர்தான் அன்ப?...பாசமா?...நேசமா?

ஏனோ உள்ளுக்குள்ளிருந்து “குபுக்”கென்று ஒரு அழுகை எட்டிப் பார்த்தது.

மறுநாள் காலை ஏழு மணி வாக்கில் எழுந்த சொக்கு தனியாய்க் கிளம்பத் துடிக்க “இருப்பா...நானே என் வண்டில கொண்டு போய் உங்க ஊர்ல விடறேன்” என்று சொல்லி தனது டி.வி.எஸ்-50ஐ ஸ்டார்ட் செய்தான்.

போகும் முன் திரும்பி வசந்தியைப் பார்த்தான். அவள் அழகாய்ப் புன்னகைத்து “டாட்டா” சொல்ல இவனும் கையாட்டினான்.

வசந்தியின் பார்வையில் ஏதோ தெரிய அது இன்னதென்று புரியாமல் குழம்பினான்.

போகும் வழியில் முரளியிடம் கேட்டான் “முரளி...உனக்கு என் மேல் துளிக் கூட கோபமில்லையா?”

“எதுக்கு?”

“என்னப்பா?...உன் உயிருக்குயிரான நண்பன் தனசேகரைக் கத்தியால் குத்திய கெட்டவன் நான்”

“இல்லை...என் உயிர் நண்பனுக்கு ரத்தம் கொடுத்து அவனை எமனிடமிருந்து மீட்டுக் கொடுத்த நல்லவன் நீ” என்றான் முரளி.

“நான் குடிகாரன்!...”

“அறியாமையால் குடிக்கிறாய்...அறிந்து கொண்டால் நிறுத்தி விடுவாய்” சற்றும் விகல்பமில்லாமல் முரளி பேசுவது சொக்குவுக்கு மிகவும் வியப்பாயிருந்தது.

சொக்குவின் வீடு வந்ததும் அவனை இறக்கி விட்டு முரளி அப்போதுதான் கவனித்தான் கதவில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. “என்ன சொக்கு...வீடு பூட்டியிருக்கு?”

“பின்னே?...இந்த வீட்டுல இருக்கறதே நான் ஒருத்தன்தான்...”

“உன்னோட அப்பா....அம்மா...?”

“அப்பன் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே போய்ச் சேர்ந்திட்டான்!..அம்மா மட்டும்தான்!... அவளும் என் கூட இருக்க முடியாம..தன்னோட அக்கா வீட்டுல போய் இருக்கா...” என்றான் சொக்கு. சொல்லும் போது இயல்பாய்ச் சொன்னாலும் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் சோகம் ஒட்டியிருந்ததை முரளி உணர்ந்தான்.

“அடிப்படையில் இவன் மிகவும் நல்லவன்!...ஆனால் வாழ்க்கைச் சூழ்நிலையும்... தீயோர் சேர்க்கையும்தான் இவனை வேறு திசையில் கொண்டு போய் விட்டிருக்கின்றன!...கெட்டவர்களில் இரண்டு வரை உண்டு!...ஒன்று திருத்த முடிந்த கெட்டவர்கள்!...இன்னொன்று திருத்தவே முடியாத கெட்டவர்கள்!...இவன் திருந்தும் கெட்டவன்!...அதற்கான சரியான நேரம் வரும் போதும் இவன் நிச்சயம் திருந்துவான்!...நல்லவனாய் மாறுவான்!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் முரளி.

மறுநாள் தனசேகரை எதேச்சையாக சந்தித்த முரளி முந்தின தினம் நடந்தவற்றை அவனிடம் சொல்ல

முரளியின் கைகளைப் பற்றி “நன்றி” தெரிவித்தான் தனசேகர்.

“என்னப்பா...உன்னைக் கத்தியால் குத்தியவனுக்கு உதவி செய்ததற்கு நன்றி சொல்றே?” முரளி தமாஷாய்க் கேட்க

“இல்லை முரளி!...தெரிஞ்சோ...தெரியாமலோ...நான் அவனுக்கு ஒரு கெடுதல் செஞ்சிட்டேன்” சொல்லும் போது தனசேகரின் முகத்தில் வாட்டம் தெரிந்தது.

“அன் மாமாவும் அத்தையும்....சின்ன வயசிலிருந்தே அவன் மனதில் “மல்லிகா உனக்குத்தான்!”னு சொல்லி வளர்த்திருக்காங்க!...அது அவன் மனசுல பசுமரத்தாணி போல் ஆழப் பதிஞ்சிடுச்சு” தனசேகர் பக்கத்து மரத்தின் இலையைப் பறித்து அதை முகர்ந்து பார்த்தவாறே சொல்ல

“சரி...அப்புறம் ஏன் மாறிட்டாங்க?”

“சொக்குவோட அப்பா இருந்த வரைக்கும் அவன் நல்லாத்தான் இருந்தான்!...ரெண்டு குடும்பமும் ஒற்றுமையா...ஒண்ணுக்கொண்ணு அனுசரனையாய்த்தான் இருந்திருக்காங்க!...அவங்க அப்பா செத்ததும்...அவனைக் கண்டிக்க ஆள் இல்லாமல் போச்சு!...கெட்ட சகவாசங்களால்...கெட்ட பழக்கங்கள் பரிச்சயம்!...அந்தக் கெட்ட பழக்கங்கள் ஒட்டிக்கிட்டதால் அடிதடிப் பழக்கம் அதுவா வந்திடுச்சு!...அப்புறம்...ஜெயில்...குடி...ன்னு அவன் தறிகெட்டுப் போக அத்தை குடும்பம் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தவிர்த்து...கடைசியில் மொத்தமாய் வெட்டியே விட்டது!...ஆனாலும் அவன் மல்லிகாவின் மீதிருந்த அன்பு...மாறவில்லை!...” என்றான் தனசேகர்.

“வெறும் அன்பிருந்தா போதுமா சேகர்?...அவளை அடையத் தகுதியும் வேணுமல்லவா?” தன் நண்பனுக்கு ஆதரவாய்ப் பேசினான் முரளி.

“அந்த அன்பு தோல்வி அடையும் போதுதான் அதைத் தாங்க முடியாம அவன் அன்னிக்கு கத்தியை எடுத்திட்டான்!...அடிப்படையில் அவன் ரொம்பவே நல்ல மனசுக்காரனாம்” என்றான் தனசேகர்.

“யார் சொன்னாங்க அப்படின்னு?”

“என் மனைவி மல்லிகாவே சொன்னாள்....”

“ம்ம்ம்...நேத்திக்கு அவன் கூடப் பேசிப் பழகினதுக்குப் பிறகு...என் மனசும் அப்படித்தான் சொல்லிச்சு!... “அவன் நல்லவன்!னு” என்றான் முரளி.

“எல்லாத்துக்கும் மேலே...அன்னிக்கொரு நாள் அவன் என் அத்தை வீட்டிற்கு வந்திருந்தான்!...எதுக்கு தெரியுமா?...தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்க...மன்னிப்புக் கேட்டதோட போகலை...அவங்க எல்லோர் மனசையும் நெகிழ வைக்கற மாதிரி ஒரு விஷயத்தையும் சொல்லிட்டுப் போயிருக்கான்!” தனசேகர் சொல்லி விட்டு நிறுத்த

“என்ன?...என்ன சொல்லிட்டுப் போனான்?”

“போலீஸ்காரங்க... “தனசேகருக்கு ரத்தம் குடுத்தா...உன் மேல் கேஸே வராமல் பண்ணிக்கலாம்!”னு சொன்னதுக்காக...அவன் ரத்தம் குடுக்கலையாம்!...தனக்குக் கிடைக்காத தன் முறைப் பெண்ணோட தாலியைக் காப்பாத்தணும்! என்பதற்காகத்தான் ரத்தம் குடுத்தானாம்!...பொதுவா...அவன் இட்த்துல வேற யாராவது இருந்திருந்தா... “தனக்குக் கிடைக்காத ஒருத்தி வேறொருத்தன் கூட நல்லா வாழக் கூடாது”ன்னுதான் நினைப்பாங்க!...ஆனா இவன்...வேற மாதிரி நினைச்சிருக்கான்!” நெகிழ்ச்சியோடு சொன்னான் தனசேகர்.

அதைக் கேட்டு முரளியும் நெகிழ்ந்து போனான்.

---------​

வெளியில் சென்றிருந்த முரளி மாலை ஆறரை மணி ஆகியும் வராததால், “ஏய்...வசந்தி...ஒரு சின்ன வேலை செய்யேண்டி” என்றாள்.

வீட்டிற்கு வெளியே முல்லைக் கொடியின் மொக்குகளைப் பறித்துக் கொண்டிருந்த வசந்தி அங்கிருந்தே கேட்டாள் “என்ன வேலை”

“வந்து...கடை வீதி வரைக்கும் போயி...எண்ணைக் கடைக்காரருக்கு...இந்த ரூபாயைக் குடுத்திட்டு வந்திடேன்”

“ஏன்...அதை இன்னிக்கே கொண்டு போய்க் குடுக்கணுமா?...நாளைக்கு அண்ணன் கிட்டே குடுத்தனுப்பினா போதாதா?” பதில் சொன்னாள் வசந்தி.

“அடியேய்...முந்தா நாளு...எண்ணை வாங்கும் போது...கொஞ்சம் பணம் பத்தலை!...அதை அவருகிட்ட சொன்னப்ப?.. “அதனாலென்ன...எங்க போயிடப் போகுது?... நாளைக்குக் கொண்டு வந்து குடுத்திடுங்க!....இப்ப எண்ணையை எடுத்திட்டுப் போங்க!”ன்னு எவ்வளவு பெருந்தன்மையாய்ச் சொன்னார் தெரியுமா!...நியாயபடி பார்த்தா நேத்திக்கே நான் குடுத்தனுப்பியிருக்கணும்!...மறந்திட்டேன்!...அதான் இன்னிக்கு...இப்பவே போகச் சொல்றேன்” கொஞ்சம் கெஞ்சலாய்ச் சொன்னாள் ராக்கம்மா.

தாய் சொல்லியதில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்ட வசந்தி பறித்த வரைக்கும் போதுமென மீதமிருந்த மொக்குகளைக் கொடியிலேயே விட்டு விட்டு வீட்டிற்குள் வந்தாள்.

“குடும்மா”

தாய் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு வாசலுக்கு வந்து செருப்பணிந்து கொண்டு தெருவில் இறங்கினாள்.

வேக வேகமாய் நடந்து அரை மணி நேரத்தில் கடை வீதியை அடைந்து எண்ணைக் கடைக்காரருக்கு பணத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பியவளுக்கு அப்போதுதான் உறைத்தது. “அடக் கடவுளே!...மணி ஏழே கால் ஆயிடுச்சு...பொழுது வேற இருட்டிடுச்சு!...வரும் போது கொஞ்சம் வெளிச்சம் இருந்திச்சு...அதனால...குறுக்கு வழில வந்திட்டோம்..இப்ப அதுல போக முடியாதே?...என்ன பண்றது?” யோசித்தாள்.

அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள் இன்னும் பகல் வெளிச்சம் மிச்சமிருக்க சுற்றும் முற்றும் பார்த்தாள். பார்வைக்குப் போதுமான வெளிச்சம் பரவலாயிருக்க “இந்த வெளிச்சத்திலேயே போயிடலாம் போலத்தான் இருக்கு!...”தனக்குத் தானே சொல்லிக் கொண்டு குருட்டு தைரியத்தில் குறுக்கு வழியில் நடை போட ஆரம்பித்தாள்.

சிறிது தூரம்தான் நடந்திருப்பாள். சூழலை அடர் இருட்டு மொத்தமாய் ஆக்கிரமித்துக் கொள்ள லேசான அச்சம் அவளுக்குள் முளைத்தது. “பேசாமல் மெயின் ரோட்டிலேயே போயிருக்கலாமோ?”

நாய்க்கர் தோட்டத்து வேலியோரம் ஓடும் ஒற்றையடிப் பாதை மங்கலாய்த்தான் தெரிந்தது. இருந்தாலும் தன் பார்வையைக் கூராக்கிக் கொண்டு நடந்தவள் பத்திரமாய் தார் ரோட்டை அடைந்தாள். கால்கள் வேக வேகமாய் ஓடின.

அந்த வழியில் உள்ள பஞ்சு மில்லின் உயரச் சுற்றுச் சுவர்களுக்குக் கீழே கள்ளச் சாராய வியாபாரம் களை கட்டியிருந்தது. குடிமகன்கள் உலகத்தை மறந்து சந்தோஷமாய் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டுமிருந்தனர்.

அதைப் பார்த்ததும் “திக்”கென்றானது வசந்திக்கு. “கடவுளே...தெரியாத்தனமா இதுல வந்திட்டேனே?”

தன்னை ஒரு புதருக்குப் பின்னால் மறைத்துக் கொண்டு அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தாள். “ஆஹா...சுத்தமா பத்துப் பேருக்கும் மேலே இருப்பானுக போலிருக்கே?...எல்லோரும் குடி போதைல வேற இருக்கானுக!...நான் போனா அவ்வளவுதான்...என்னைப் பிச்சுத் தின்னுடுவானுக!...இப்ப என்ன பண்றது...அவனுகளைக் கடந்துதான் போயாகணும்!” பொறியில் சிக்கிக் கொண்ட எலி போல் தவித்தாள்.

நேரம் ஓடிக் கொண்டேயிருக்க அவள் பயம் கூடிக் கொண்டே போனது.

“அடி வசந்தி...இன்னியோட உன் கதை முடிஞ்சுதுடி..” உள் மனம் அவளை பயமுறுத்தியது.

சில அவஸ்தையான நிமிடங்களுக்குப் பிறகு அவளுக்கு அந்த யோசனை வந்தது. “ம்ம்...அங்க நிற்கிறவனுகளைப் பார்த்தால் எல்லோருமே கொஞ்சம் வயசானவனுகளாய்த்தான் தெரியறானுக...அதிலும் போதைல வேற இருக்கானுக!...நான் குறுக்கே புகுந்து மின்னல் வேகத்துல ஓடினா...நிச்சயம் அவனுகளால் என்னைப் பிடிக்கவே முடியாது!...நான் ஸ்கூல்ல படிக்கும் போது ஓட்டப் பந்தயத்துல முதல் பரிசு வாங்கினவ!...”

தயாரானாள்.

ஒன்...டூ...த்ரீ....
(தொடரும்)​
 

banumathi jayaraman

Well-Known Member
ராக்கம்மாளுக்கு அறிவே கிடையாதா?
வயசுப் பெண்ணை அனுப்பி இப்போ வசந்தி எப்படி தப்பிக்கப் போறாள்?
சொக்கு காப்பாற்றுவானோ?
 

Saroja

Well-Known Member
இந்த பிள்ள என்ன
செய்றா
சொக்கு வருவானா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top