யாருமிங்கு அனாதையில்லை - 25

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!” - 25
(நாவல்)
டாக்டர்.பொன்.கௌசல்யா.

அத்தியாயம் : 25

மாலை நாலு மணி வாக்கில்தான் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தான் முரளி.

“என்னப்பா...மணி நாலு ஆயிடுச்சு இன்னிக்கு?” ராக்கம்மா அவனுக்கு உணவை எடுத்து வைத்தவாறே கேட்டாள்.

“ஆமாம்மா...இன்னிக்கு நாலு லாரி ஒரே சமயத்துல வந்திடுச்சு...எல்லாம் ஃபுல் லோடு...!...அதையெல்லாம் இறக்க வேண்டிய இடத்துக்கு அனுப்பிட்டு...வர்றதுக்கு இவ்வளவு நேரமாயிடுச்சு” என்றவாறே சாப்பிட ஆரம்பித்தவனுக்கு “கெக்...கெக்”கென்று விக்கலெடுக்க

அவசரமாய் தண்ணீர் டம்ளரை எடுத்து நீட்டினாள் ராக்கம்மா. வாங்கிப் பருகியவன் “என் நண்பன் தனசேகர் எங்கிருந்தோ என்னை நினைக்கிறான்” என்றான் முரளி கண்களில் நீர் வழிய

முரளிக்கு எதிரே திடீரென்று வந்து நின்று அவனுக்கு சர்ப்ரைஸ் தருவதற்காக வீட்டின் பின் புற வாழை மரத்தருகே மறைந்து நின்றிருந்த தனசேகரின் காதுகளில் அந்த வார்த்தைகள் விழ வாய் விட்டு அழுதான்.

அவன் முதுகில் தட்டி ஆறுதல் சொன்னார் தங்கவேலு.

“டேய் முரளி...நீதாண்டா எப்ப பார்த்தாலும்...“தனசேகர்...தனசேகர்”ன்னு புலம்பிக்கிட்டிருக்கே?...ஆனா உன் சிநேகிதகாரன் உன்னை சுத்தமாய் மறந்தே போயிட்டான்!...உன் மேல் உண்மையான அன்பிருந்திருந்தா இன்னேரம் உன்னைத் தேடி இங்க வந்திருக்கணும் அல்ல?” வேண்டுமென்றே மகனைச் சீண்டினாள் ராக்கம்மா.

“அப்படிச் சொல்லாதம்மா...இன்னேரம் அவன் என்னைக் கண்டுபிடிக்க படாதபாடு பட்டுக்கிட்டிருப்பான்!....நீ நம்பறியோ...நம்பலையோ...என் மனசு சொல்லுது...என்னிக்கோ ஒரு நாள் நிச்சயம்..அவன் நான் இருக்கும் இந்த இடத்தைக் கண்டுபிடிச்சு இங்க வருவான்!...திடீர்னு என் முன்னாடி வந்து நின்னு என்னை ஆச்சரியப்படுத்துவான்!...ஏன்னா...எங்க நட்பு அப்படிப்பட்டது” என்று முரளி சொல்ல

வெலவெலத்துப் போனாள் ராக்கம்மா. “அடப்பாவி...எல்லாம் தெரிஞ்சது போலவே சொல்றானே?” உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டாள்.

சாப்பிட்டு முடித்த முரளி தட்டிலேயே கை கழுவப் போக, “டேய்...டேய்...போடா...வீட்டுக்குப் பின்னாடி போயி கை கழுவிட்டு வாடா” என்றாள் ராக்கம்மா.

“அடப் போம்மா....காலெல்லாம் வலிக்குது” நடக்க சங்கடப்பட்டு அவன் சொல்ல

“அப்படியெல்லாம் தட்டுல கை கழுவக் கூடாதுடா” புதிதாய்ச் சொன்னாள் ராக்கம்மா.

“இது என்னம்மா புதுசா இருக்கு?...நான் எப்பவுமே தட்டுலதானே கை கழுவுவேன்?”

“டேய்...அதான் ஆகாது”ன்னு சொல்றேனல்ல?...போடா பின்னாடி போய் வாழை மரத்துக்குப் பக்கத்துல பக்கெட்ல தண்ணி இருக்கு எடுத்துக் கையைக் கழுவிட்டு வாடா” மகனை விரட்டினாள் ராக்கம்மா.

தாயின் அந்தச் செய்கைக்குக் காரணம் புரியாமல் கையை நக்கிக் கொண்டே வீட்டின் பின் புறம் வந்து பக்கெட் தண்ணீரில் கையைக் கழுவக் குனிந்த போது “மு...ர...ளி” என்ற அசரீரீ கேட்க

சட்டென்று திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தான். “ச்சே...தனசேகர் என்னைக் கூப்பிட்ட மாதிரியே இருக்கு” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு வீட்டிற்குள் வரத் திரும்பினான்.

“மு...ர...ளி” மீண்டும் அதே குரல்.

அதையும் தன் மனப்பிரமை என்று எண்ணிக் கொண்டே வீட்டிற்குள் வந்தவனிடம் அவன் தாய் கேட்டாள். “என்னடா...கை கழுவிட்டு வந்திட்டியா?”

“ம்...வந்திட்டேன்!” என்றவன் “அம்மா...குனிஞ்சு கை கழுவும் போது என் பின்னாடியிருந்து தனசேகர் என்னைக் கூப்பிட்ட மாதிரியே இருந்திச்சும்மா” என்றான்.

“அப்படியா?..ஒருவேளை உன்னைத் தேடி அவன் நேரிலேயே வந்திட்டானோ என்னவோ?” தமாஷாய்ச் சொன்னாள் ராக்கம்மா.

“அப்படி மட்டும் வந்திருந்தா...அவனை இங்கிருந்து திரும்பிப் போகவே விட மாட்டேன்!...என் கூடவே வெச்சுக்குவேன்!” கண்களைப் பெரிதாக்கிக் கொண்டு சொன்னான் முரளி.

“அப்படியா?...கொஞ்சம் இரு ஒரு மந்திரம் போட்டு அவனை வரவழைக்கறேன்!...உன் ஆசைப்படி அவனை உன் கூடவே வெச்சுக்கோ” என்றவள் கண்களை மூடி சும்மா வேணும் எதையோ முணுமுணுத்தாள்.

“ஆஹா...நீ பெரிய மோடி வித்தைக்காரி...நீ மந்திரம் போட்டா உடனே பல நூறு மைல் தள்ளி இருக்கற தனசேகர் இங்கே வந்திடுவானாக்கும்?...அடப் போம்மா...நாம எந்த திசையில் இருக்கிறோம்!ன்னே அவனுக்குத் தெரியாது”

“நீயும் உன் கண்களை மூடு” என்றாள் ராக்கம்மா கண்களை மூடிக் கொண்டே.

தாயின் ஆசைக்காக சும்மாவாகிலும் கண்களை மூடி நின்றான் முரளி. மூன்று நிமிடங்களுக்குப் பிறகு “ம்...இப்பக் கண்களைத் திறந்து பார்”என்றாள் ராக்கம்மா.

சாதாரணமாய்க் கண்களைத் திறந்த முரளி எதிரே தனசேகர் நிற்பதைக் கண்டதும் முதலில் நம்பாதவனாய் புன்னகைத்தபடியே கையால் தொட முயற்சித்தான்.

உண்மையிலேயே அவன் கைகளில் தனசேகரின் உடல் பட அவசர அவசரமாய் மொத்த உடலையும் தொட்டுத் தொட்டுப் பார்த்தான். “அம்மா...நிஜமாவே தனசேகர் வந்திட்டான்”என்று கூவியபடி அவனை இறுக அணைத்துக் கொண்டு தழுதழுத்தான். “டேய்...டேய்...சேகர்...எப்படா வந்தே?..எப்படிடா வந்தே?”

“முரளி...இந்த உலகத்தின் எந்த மூலைக்கு நீ போயிருந்தாலும் உன்னைத் தேடிக் கண்டுபிடிச்சு வந்திடுவேண்டா!....அதாண்டா நட்பு” என்றான் தனசேகர்.

“சாப்பிட்டியாடா?” நண்பனின் கண்களைப் பார்த்துக் கேட்டான் முரளி.

“ம்...சாப்பிட்டாச்சு!”

“சரி...எப்படி நான் இருக்குமிடத்தைக் கண்டுபிடிச்சே?” வியப்போடு கேட்டான் முரளி.

“தூய்மையான நட்பை...ஆண்டவன் ரொம்ப நாளைக்குப் பிரிச்சு வைக்க மாட்டான்!...” என்றான் தனசேகர்.

“முரளித் தம்பி...உன் சிநேகிதன் எப்படி உன்னோட இருப்பிடத்தைக் கண்டு பிடிச்சான்?ன்கிற கதையை நாம் அப்புறம் பேசலாம்!..அதுக்கு முன்னாடி உங்க ரெண்டு பேரையும் பிரிச்சவங்களுக்கு அவன் என்ன தண்டனை குடுத்திட்டு வந்திருக்கான்?ன்னு கேளு” என்றார் உள்ளே வந்த தங்கவேலு.

புருவங்களை நெரித்துக் கொண்டு தனசேகரைப் பார்த்த முரளி “என்னடா?...என்ன பண்ணி வெச்சிட்டு வந்திருக்கே?” இரண்டு கிராம் கோபத்தோடு கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைடா”என்று தனசேகர் சமாளிக்க

“அதையும் நானே சொல்றேன்...“எந்தப் பொண்ணை என் கூடச் சேர்ப்பதற்க்காக என் நண்பனைப் பிரிச்சீங்களோ...அந்தப் பெண்ணை நான் ஒதுக்கி வைக்கறேன்”னு சொல்லிட்டு தாலி கட்டின கையோட அந்தப் பெண்ணை அப்படியே மண்டபத்திலிருந்தே அவ வீட்டுக்குத் துரத்திட்டான்” என்று தங்கவேலு சொன்னதும்

முரளி தனசேகரைக் கோபமாய்ப் பார்க்க அவன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

“இன்னும் சொல்றேன் கேளு முரளி!...எப்ப நீ அவன் கூட சேருகிறாயோ...அப்பத்தான் அந்தப் பொண்ணையும் சேர்த்துக்குவேன்!னு ஏழு மாசமா வைராக்கியத்தோடு உன்னைத் தேடிட்டு இருக்கான்” என்றார் தங்கவேலு.

“என்ன சேகர்...அண்ணா சொல்றதெல்லாம் நிஜமா?” முரளி கேட்டான்.

“பின்னே?....உன்னை மிரட்டி ஊரை விட்டு அவங்க துரத்துவாங்க!...நான் அதைக் கண்டுக்காம...பொண்டாட்டி கூட ஜாலியா இருக்கணுமாக்கும்?...ம்ஹ்ஹும்...நம்ம கிட்ட அந்த வேலை நடக்காது!...எனக்கு என் பெற்றோரை விட...நான் தாலி கட்டின அந்தப் பெண்ணை விட நீதான் முக்கியம்” கான்கிரீட் உறுதியுடன் சொன்னான் தனசேகர்.

அவனருகில் வந்து அவனைக் கட்டிக் கொண்ட முரளி “உண்மையிலேயே நீ எனக்கு நண்பனா கிடைச்சது போன ஜென்மத்துல நான் செஞ்ச புண்ணியம்டா” என்ற முரளி “இருந்தாலும்...“கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி” என்கிற மாதிரி கல்யாணமாகி ஏழெட்டு மாசமா நீ தனிக்கட்டையாக வாழுறதும்...அதுக்குக் காரணமா நான் இருக்கறதும்...எனக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு சேகர்” மனம் நொந்து சொன்னான்.

“அப்ப..நீ வந்து என் கூட...அந்த ஊர்ல...பழைய மாதிரியே இரு...நானும் அவளைக் கூட்டிக்கறேன்”

சில விநாடிகள் யோசித்த முரளி, “சேகர்...தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ...நான் அங்க வந்து உன் கூட இருந்தால் உன்னோட வாழ்க்கையில் சந்தோஷங்கள் காணாமல் போயிடும்டா!...உன்னைப் பெத்தவங்களும்...உனக்குப் பொண்ணுக் குடுத்தவங்களும்...என்னை விரோதியாய்த்தான் பார்ப்பாங்க!...அதனால நான் தெனமும் உன் கூட போன்ல பேசறேன்...நம்ம நட்பை நாம தொடர்வோம்” என்றான்.

“ஏண்டா...நான் கூப்பிட்டா வர மாட்டியா?” சோகமாய்க் கேட்டான் தனசேகர்.

முரளி பதிலேதும் பேசாதிருக்க, “உனக்கு ஒண்ணு தெரியுமா?...என் அப்பாவும் சரி...அம்மாவும் சரி....இப்ப ரொம்ப மாறிட்டாங்க!... “முரளியைத் தேடிக் கண்டுபிடிச்சு..உங்க ரெண்டு பேரையும் நாங்களே சேர்த்து வைக்கறோம்”னு சொல்லியிருக்காங்க!...அதே மாதிரி என் மாமனார் வீட்டில் இருக்கறவங்க எல்லோருமே நம்மோட நல்ல நட்பைப் புரிஞ்சுக்கிட்டு...உனக்காக காத்திட்டிருக்காங்க” என்றான் தனசேகர்.

முரளி தங்கவேலுவைப் பார்க்க அவர் “முரளி...உன் நண்பனோட குடும்ப வாழ்க்கை சந்தோஷமா...நிறைவா இருக்கணும்!னு நீ நினைச்சா உடனே அவன் கூட கிளம்பிப் போ!...அவன் விருப்பப்படி அங்கியே இரு...அதுதான் நியாயம்” என்றார்.

முரளியின் தாயார் ராக்கம்மாவும் அவன் தங்கை வசந்தியும் அதையே சொல்ல முரளி இறங்கி வந்தான். “த பாரு சேகர்...சொன்ன வார்த்தை மாறக் கூடாது!...அங்க போனதும் முதல் வேலையா உன் மாமனார் வீட்டுக்குப் போய் உன் மனைவியைக் கூட்டிட்டு வந்து அவ கூட குடித்தனம் நடத்தணும்!...என்ன?”

“நிச்சயமா”என்றான் தனசேகர்.

மறுநாள் காலை டிரான்ஸ்போர்ட் முதலாளியிடமும் அவரது மனைவி ஜெதாம்பாளிடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு மீண்டும் சொந்த ஊரை நோக்கிப் படையெடுத்தது முரளியின் குடும்பம்.

“தங்கவேலு...உன்னோட லாரியிலேயே அவங்க சாமான்களையெல்லாம் எடுத்திட்டு...அவங்களையும் ஏத்திக்கிட்டுப் போய் அவங்க ஊர்ல இறக்கி விட்டுட்டு வா!...” என்றார் முதலாளி சிங்கமுத்து.

மறக்காமல் தனசேகரின் பைக்கையும் லாரியில் ஏற்றிக் கொண்டார் தங்கவேலு.

சொந்த ஊரில் அவர்களை எதிர் நோக்கியிருக்கும் விபரீதம் பற்றி கிஞ்சித்தும் தெரியாமல் சந்தோஷமாய்ப் பயணித்தனர் அவர்களனைவரும்.

அந்த லாரி ஊருக்குள் நுழைந்து முரளி முன்பு குடியிருந்த அதே வீட்டின் முன் நிற்க குதித்திறங்கிச் சென்ற முரளி அந்த வீட்டில் தற்போது வேறு யாரோ குடியிருப்பதைக் கண்டு சோகமாய்த் திரும்பி வந்தான்.

“என்ன முரளி...என்னாச்சு?” தங்கவேலு கேட்க

“வீட்டுல இப்ப வேற குடி வந்திடுச்சு சார்” என்றான் வருத்த முகத்துடன்.

“அதனாலென்ன?...எல்லோரும் எங்க வீட்டுக்குப் போவோம்...அங்க இருங்க” தாராளமாய்ச் சொன்னான் தனசேகர்.

முரளி அவனை வினோதமாய்ப் பார்க்க “டேய்...இப்ப அங்க எல்லாமே மாறிடுச்சு...நீ வந்து பாரு அங்க உனக்குக் கிடைக்கற மரியாதையே வேற” என்றான் தனசேகர்.

ஆனாலும் முரளி தயங்க தங்கவேலு தைரியமூட்டினார். “அதான் தனசேகர் இவ்வளவு நம்பிக்கையாய்ச் சொல்றான் அல்ல?...போய்த்தான் பார்ப்போமே?” என்றார்.

எல்லோரையும் ஏற்றிக் கொண்டு அந்த லாரி தனசேகரின் வீட்டை நோக்கிச் சென்றது.

தனசேகர் வீட்டின் பெரிய கேட்டிற்குள் லாரி நுழையும் போது அந்த சொக்கு அங்கே நின்று கத்திக் கொண்டிருந்தான். “என்னமோ...சிநேகிதகாரன்தான் பெருசு”ன்னு சொல்லி உங்க மகன் என்னோட அக்கா மகளை ஒதுக்கி வெச்சிட்டானாம்!...என்னய்யா அசிங்கம் இது?”

“த பாருப்பா...அதைப் பற்றியெல்லாம் நாங்களும்...அவங்களும் பேசிட்டோம்...நீ எதுக்கு ஊடால வந்து குறுக்கு சால் ஓட்டறே?” பொன்னுரங்கம் கேட்க

“நான் ஒண்ணும் குறுக்கு சால் ஓட்டலை...உங்க மகன் தான் என் வயல்ல வந்து குறுக்கு சால் ஓட்டிட்டான்” என்றான் சொக்கு.

பொன்னுரங்கம் அவன் என்ன சொல்கிறான்? என்று புரியாமல் அவன் முகத்தைக் கூர்ந்து பார்க்க

“என்ன...புரியலையா?..எங்க அக்கா மக மல்லிகாவை நான்தான் கட்டிக்கிறதா இருந்தேன்....நான் கொஞ்சம் ஏமாந்திருந்த நேரத்துல நீங்க வந்து உங்க மகனுக்கு முடிச்சுக்கிட்டீங்க!...எப்படி?...உங்க பணக்காரத்தனத்தைக் காட்டி..” என்றான்.

“யப்பா...இதையெல்லாம் நீ அங்க உங்க அக்கா கிட்டேயும்...உங்க மச்சான் கிட்டேயும் போய்ப் பேசு...எங்க கிட்டப் பேசாதே” பொன்னுரங்கம் சொல்ல

“சரி...கட்டிக்கிட்டீங்க!...அதுக்கப்புறம் எங்க பொண்ணை உங்க வீட்டுக்கே கூட்டிட்டு வராம அப்படியே மண்டபத்தோடவே திருப்பி அனுப்பிட்டீங்களாமே?...கேட்க யாருமில்லை!ன்னு நெனச்சு இதையெல்லாம் பண்றீங்களா?...கேட்கத்தான் நான் வந்திருக்கேன்..!...உங்க மகன் ஒதுக்கிய பெண்ணை பஞ்சாயத்துல நிக்க வெச்சு...தாலியை அறுக்க வெச்சு...மறு தாலியை நான் கட்டப் போறேன்!...பார்க்கறீங்களா?” காட்டுவாசி போல் ஆடிக் கொண்டே பேசினான் சொக்கு.

லாரியிலிருந்து இறங்கி வந்த தனசேகர் நேரே அவனிடம் சென்று “யார் நீ?...உனக்கு என்ன வேணும்?” கேட்டான்.

அவனைப் பார்த்ததும் அவன் தாய் சுந்தரி “டேய் சேகர்...எங்கேடா போயிருந்தே?” அடக்க மாட்டாமல் உடனே கேட்க

“ஓ...இவன்தான் எங்க பொண்ணை ஒதுக்கி வெச்ச மாப்பிள்ளையா?...”என்று கேட்டவாறே தனசேகரின் தாடையைத் தொட்டுத் திருப்பி “த பாருப்பா...மல்லிகா நான் கட்டிக்க வேண்டிய பொண்ணு!...நீதான் “அவ வேண்டாம்!”னு ஒதுக்கிட்டியல்ல?...அப்படியே இருந்துக்கோ!...இனி அவ பக்கம் வந்திடாதே!” என்றான் சொக்கு.

தனசேகர் தன் தாயைப் பார்க்க “உங்க மாமியாரோட ஒரே தம்பி...சொக்கு!...மல்லிகாவோட முறை மாமன்!”என்று அவனை அடையாளம் கூறினாள் அவள்.

“அய்யா...சொக்கு...எங்களுக்குள்ளே வந்திருப்பது சின்ன பிரிவுதான்!...பெரிய பிளவு இல்லை!...அந்தச் சின்னப் பிரிவும் இன்னும் கொஞ்சம் நேரத்துல சரியாயிடும்!...அதனால நீ கிளம்பிட்டே இரு!...உனக்கு இங்க வேலையில்லை!”என்றான் தனசேகர்.

“அதெப்படி வேலை இல்லாமல் போகும்?...நீதான் எவனோ ஈனசாதிப் பயல் “வந்தால்தான் எங்க பொண்ணைச் சேர்த்துக்குவேன்”னு சொன்னியாமா?...வந்திட்டானா அவன்?”

சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முரளியை அருகில் அழைத்த தனசேகர் “இவன்தான் என் நண்பன்...இவன் வந்திட்டான்...இன்னும் அரை மணி நேரத்துல என் மனைவியும் வந்திடுவா!...போதுமா?...கிளம்பு!..கிளம்பு!” என்று சொடுக்குப் போட்டு அந்த சொக்குவை விரட்டினான்.

அந்தச் சின்னப் பிரிவையே சாக்காய் வெச்சு மல்லிகாவை அடைந்து விடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டு வந்த சொக்கு தன் கணக்கு தப்பாகிப் போனதில் கோபமுற்று “இங்க பாரு...உனக்கு என்னைப் பற்றித் தெரியாது...ஏழு பேர் கையை வெட்டியிருக்கேன்...நாலு பேர் காலை வெட்டியிருக்கேன்!...ஜெயில் எனக்கு சத்திரம் மாதிரி...போவேன்...வருவேன்!...ஜெய்லர்களெல்லாம் எனக்கு மாமன் மச்சான் மாதிரி...அதனால...எனக்கு நீயெல்லாம் நவுத்துப் போன பிசுகோத்து மாதிரி..மரியாதையா என் மல்லிகாவை எனக்கே விட்டுக் குடுத்திட்டு...அப்படியே போயிடு...“மாமியார் வீடு...மாமனார் வீடு”ன்னு சொல்லிக்கிட்டு.....எங்காவது என் அக்கா வீட்டுப் பக்கம் வந்தே...?...மவனே கொடலை உருவிடுவேன்” கொக்கரித்தான்.

“எங்கே...கொடலை உருவு நான் பார்க்கிறேன்” என்று சொல்லியவாறே அந்த சொக்குவின் எதிரில் வந்து நின்றான் தனசேகர்.

சட்டென்று தன் இடுப்பிலிருந்த கத்தியை வெளியே எடுத்த சொக்கு, “டேய்...வேண்டாம்...என்னைத் தூண்டாதே...நான் யோசிக்க மாட்டேன்...ஒரே குத்தா குத்திடுவேன்” குதியாட்டம் போட்டான்.

“குத்துடா பார்க்கலாம்...உன் தைரியத்தை” தனசேகரும் உச்சஸ்தாயில் கத்தினான்.

ஆவேசமான அந்த சொக்கு தன்னிலை மறந்து தனசேகரின் வயிற்றில் கத்தியைப் பாய்ச்ச, பாய்ந்து வந்து தனசேகரைத் தள்ளி விட முயற்சித்தான் முரளி. ஆனால் அதற்குள் அந்தக் கத்தி தனசேகரின் வயிற்றினுள் ஆழப் புக செங்குருதி கொப்பளித்து வெளியே வந்தது.

“அய்யோ..அம்மா”என்று கத்தியவாறே மண்ணில் விழுந்தான் தனசேகர்.

சில வினாடிகளில் அங்கு ஒரு ரத்தச் சேறு உருவானது.

வேலை செய்து கொண்டிருந்த பண்ணை ஆட்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி வர அதற்கு மேலும் அங்கே நின்றால் தன்னைப் பிரித்து மேய்ந்து விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்ட சொக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போனான்.

ரத்தச் சகதியில் விழுந்து துடித்துக் கொண்டிருந்த தனசேகரைக் கையால் வாரியெடுத்த முரளி “தங்கவேலு...சார்...லாரியைக் கிளப்புங்க” கத்தலாய்ச் சொன்னான்.

அடுத்த நொடியே லாரிக்குள் பாய்ந்து சென்று ஸ்டார்ட் செய்தார் தங்கவேலு.

(தொடரும்)​
 

banumathi jayaraman

Well-Known Member
வாவ் முரளி தனசேகர் இடையே என்ன சூப்பரான நட்பு?
அச்சச்சோ
தனசேகர் கத்திக் குத்துப்பட்டு விட்டானே
முரளி இடையில் வந்து வாங்கிக்குவான்னு நான் நினைத்தேன்
தனாவுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது
திவாகரிடம் சொக்கு மாட்டி செமையாக வாங்க வேண்டும்
 

தரணி

Well-Known Member
சோக்கு காட்டின சொக்கு இப்படி எங்களை சோகத்தில் தள்ளிடனே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top