யாருமிங்கு அனாதையில்லை - 21

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!” -- 21
(நாவல்)
டாக்டர்.பொன்.கௌசல்யா

அத்தியாயம் : 21​


ஊரே உறங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவனுடைய பைக் சத்தம் மட்டும் பெரிதாய்க் கேட்க எங்கோ மறைந்திருந்த நாய்கள் ஒன்று கூடிக் குரைத்தபடியே அவனைத் துரத்தின.

அப்போது எதிரே வந்த இன்ஸ்பெக்டர் திவாகரின் ஜீப் அவன் பைக்கைக் கண்டதும் வேகத்தை மட்டுப் படுத்த, தனசேகரும் நின்றான்.

“என்னப்பா?...புது மாப்பிள்ளை…இந்த நேரத்துல இங்கிருக்கே?”

“அது…வந்து…ஒரு ஃபிரெண்டைப் பார்த்திட்டு வர்றேன்” பொய் சொன்னான்.

திவாகரின் போலீஸ் மூளைக்கா தெரியாது அவன் சொல்வது பொய்யென்று?

யோசித்தார்.

“இன்னிக்கு உனக்கு முதலிரவல்லவா?” கேட்டார்.

“அது…வந்து…இன்னிக்கு நாள் சரியில்லை!ன்னு பேசிட்டிருந்தாங்க” அடுத்த பொய்யைச் சொன்னான்.

மெலிதாய் முறுவலித்துக் கொண்ட திவாகர், “ஓ.கே…பார்த்துப் போப்பா” சொல்லி விட்டு ஜீப்பை நகர்த்தினார்.

-----​

மண்டபத்து வாசலில் குழப்பமான முகத்துடன் அவனுக்காகக் காத்திருந்த அவன் தாய் நேரே அவனிடம் வந்து “ஏண்டா முட்டாள்!...உனக்கு மண்டைல மூளை இருக்கா இல்லையா?...இன்னிக்கு உனக்கு முதலிரவு...இன்னிக்குமா ராத்திரி பனிரெண்டு மணி வரைக்கும் வெளிய சுத்திட்டு வரணும்?....போடா...அங்க உனக்காக உன்னோட புதுப் பொண்டாட்டி காத்திருக்கா...சீக்கிரம் போடா” விரட்டினாள்.

ஆனால் அவள் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாதவனாய் அங்கிருந்த ஒரு நாற்காலியில் சென்றமர்ந்தான்.

“டேய்...நான் என்ன சொல்றேன்?...நீ என்ன செய்யறே?...போடா அங்கே?” கோபமாய்ச் சொன்னாள் சுந்தரி.

“நான் போறது இருக்கட்டும்...அப்பா எங்கே?...அதைச் சொல்லு முதல்ல” என்றான் தனசேகர்.

“அவர் உன்னைத் தேடித்தான் போயிருக்கார்!...இப்ப வந்திடுவார்...நீ போ மொதல்ல” அவனை அந்த முதலிரவு அறைக்குள் அனுப்புவதிலேயே குறியாயிருந்தாள் சுந்தரி.

“இல்லை...நான் அப்பா வந்ததும்...அவர் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...அதைப் பேசிட்டு அப்புறமா போறேன்” என்று சொல்லி விட்டுக் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.

தாயின் பேச்சை சற்றும் மதிக்காமல் தெனாவெட்டாய் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை தனசேகரைப் பார்க்கப் பார்க்க ஆத்திரமாய் வந்தது ராமலிங்க பூபதிக்கு. ஆனாலும் தன் மகளுக்காக மொத்தக் கோபத்தையும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு தனசேகரிடம் வந்தவர் “மாப்பிள்ளை... “இந்த நாளை விட்டா...இனி அஞ்சு மாசம் கழிச்சுத்தான் சாந்தி முகூர்த்தம் வைக்கணும்!...”னு ஜோசியர் சொல்லியிருக்கார்!...அதனால...என்ன விஷயமா இருந்தாலும் அதைக் காலைல பேசிக்கலாம்...நீங்க இப்ப போங்க...என் பொண்ணு காத்திட்டிருக்கா!...பாவம் சின்னப் பொண்ணு...அழுதிட்டிருக்கா!” என்றார் சற்றுக் கடுமையான குரலில்.

“த பாருங்க மாமா!...அஞ்சு மாசமென்ன?...அஞ்சு வருஷமே சாந்தி முகூர்த்தம் தள்ளிப் போனாலும்...அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை!...இந்தக் கல்யாணத்துல எனக்கொரு பெரிய குறை ஏற்பட்டிடுச்சு....அது என் மனசுல பெரிய காயத்தை உண்டாக்கிடுச்சு!...அதுக்கு யார் காரணம்?...என்ன காரணம்”ன்னு தெரிஞ்சுக்காம நான் விட மாட்டேன்” ஆணித்தரமாய்ப் பேசினான் தனசேகர்.

அவன் அந்த முரளி விஷயத்தைத்தான் சொல்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட சுந்தரி. “டேய்..கல்யாணத்துக்கு வந்தவங்கள்ல பாதிப் பேர் இன்னமும் மண்டபத்துலதான் இருக்கங்க!...அவங்க முன்னாடி அசிங்கப்படுத்தாதேடா” என்றாள்.

அப்போது காரிலிருந்து இறங்கி வேக வேகமாய் வந்தார் பொன்னுரங்கம். வரும் போதே “டேய்...உன்னை எங்கெல்லாம் தேடுறது?...போடா...போடா.....சீக்கிரம் போடா...அந்தப் பொண்ணு எத்தனை நேரம்தான் உனக்காக...தூங்காம முழிச்சிட்டிருக்கும்?...அதுகிட்டப் போ...மொதல்ல...மத்த விஷயங்களை காலைல பேசிக்கலாம்!” என்றார்.

“அதுக்கு முன்னாடி நீங்க இங்க வந்து உட்காருங்க!...உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்!” என்றான் தனசேகர் ஒரு சேரைக் காட்டி.

“எதுவும் கேட்க வேண்டாம்...நீ மொதல்ல இடத்தைக் காலி பண்ணு” விரட்டினார்.

தலையை இட வலமாய் ஆட்டிய தனசேகர் “ம்ஹும்...நான் அதைப் பேசாமல்...முதலிரவு அறைக்குள் போக மாட்டேன்” என்று சொல்ல

“சம்மந்தி...ஒரு நிமிஷம் இருங்க!...மாப்பிள்ளை அப்படி என்னதான் கேட்கிறார்?ன்னு பார்ப்போம்?” என்ற ராமலிங்க பூபதி “நீங்க கேளுங்க மாப்பிள்ளை....உங்களுக்கு இந்தக் க்ல்யாணத்துல என்ன குறை ஏற்பட்டிடுச்சு?” தனசேகரைப் பார்த்துக் கேட்டார்.

“அப்பா...நீங்களும் அம்மாவும் முரளி வேலை பார்க்கிற அந்த ரைஸ் மில்லுக்குப் போயிருந்தீங்களா?” முகத்தை இரும்பு போல் வைத்துக் கொண்டு கேட்டான் தனசேகர்.

“ஆ...ஆ...மா..ம்!” என்றார் பொன்னுரங்கம்.

“எதுக்குப் போனீங்க?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டான்.

“அது...அந்த ரைஸ் மில் ஓனர்க்கு பத்திரிக்கை வைக்க” என்றாள் சுந்தரி சட்டென்று. ஆனால் பொய் சொல்லிப் பழக்கமில்லாத அவளால் முகத்தை இயல்பாக வைத்துக் கொள்ள முடியவில்லை. அதுவே அவளைக் காட்டிக் கொடுத்தது.

“இல்லையே....நாம எல்லோரும் பெரிய அத்தை ஊருக்குப் போயிட்டு வரும் போது வர்ற வழில...அந்த ரைஸ் மில் ஓனர் வீட்டுக்கு முன்னாடி காரை நிறுத்தி, “நீ காரிலேயே இருப்பா...நாங்க போய் பத்திரிக்கை குடுத்திட்டு வர்றோம்”ன்னு சொல்லிட்டு..நீங்களும் அம்மாவும் அப்பத்தானே பத்திரிக்கை குடுக்கப் போனீங்க?” கொக்கி போட்டான் தனசேகர்.

“அது...”என்று பொன்னுரங்கம் திணற

“நான் சொல்லட்டா?...நீங்க ரெண்டு பேரும்...ரைஸ் மில்லுக்குப் போய்...முரளியைக் கூப்பிட்டு மிரட்டி...ஊரை விட்டே போகச் சொல்லியிருக்கீங்க...அப்படித்தானே?” கண்களில் நெருப்புப் பொறி பறக்க கேட்டான் தனசேகர்.

பொன்னுரங்கமும் சுந்தரியும் பதில் சொல்ல முடியாமல் சிலையாய் நிற்க

“ஏன்?...ஏன் அப்படி செஞ்சீங்க?...இப்ப அவங்க குடும்பத்தோட இந்த ஊரை விட்டே போயிட்டாங்க!..இந்தப் பாவம் நம்மை சும்மா விடுமா” கத்தல் குரலில் தனசேகர் கேட்டான்.

“இல்லைப்பா...நாங்க ஒண்ணும் அவங்களை ஊரை விட்டுப் போகச் சொல்லலை!... “நீ எங்க பையன் கூட சிநேகிதம் வெச்சிருக்கறது...பொண்ணு வீட்டுக்காரங்களுக்குப் பிடிக்கலை”ன்னு மட்டும்தான் சொன்னோம்!...அவனே யோசனை பண்ணிப் பார்த்திட்டு..அவனால் உன்னோட வாழ்க்கையில் சந்தோஷம் கெட்டுடக் கூடாதுன்னு நெனச்சிட்டுப் போயிட்டானோ என்னவோ” என்று சமாளித்தாள் சுந்தரி.

“ஆக.... “இவங்க வீட்டுப் பெண் என் கூடச் சேர்ந்து வாழணும் என்பதற்காக...என்னோட நண்பனை நீங்க என் கிட்டேயிருந்து பிரிச்சீங்க!...அப்படித்தானே?...இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கங்க....என்னிக்கு என் நண்பன் மறுபடியும் என் கூட சேர்றானோ?...அன்னிக்குத்தான் இவங்க பெண் கூட நான் சேருவேன்!...அதுவரைக்கும் இந்தப் பெண் அவங்க வீட்டிலேயே இருக்கட்டும்!...நம்ம வீட்டுக்கு வர வேண்டாம்!...” தீர்மானமாய்ச் சொன்னான்.

கொதித்தெழுந்தார் ராமலிங்க பூபதி.

“ஓய் பொன்னுரங்கம்...என்னய்யா?...என்ன நாடகம் நடக்குது இங்கே?...நீங்க விளையாடறதுக்கு என் பொண்ணோட வாழ்க்கை என்ன விளையாட்டு மைதானமா?...ஓஹோ...இதை நான் விட மாட்டேன்யா....இதை நான் பெரிய பிரச்சினையாக்கி...பஞ்சாயத்தைக் கூட்டி நியாயம் கேட்கத்தான் போறேன்!...என் பொண்ணுக்கு நீதி கிடைச்சாகணும்” கத்தினார்.

அந்தக் கத்தலையும், தன் பெற்றோரின் கெஞ்சலையும் துளியும் கண்டு கொள்ளாமல் நிதானமாய் எழுந்து தன் பைக்கை நோக்கி நடந்த தனசேகர் கோபத்துடன் அதை ஸ்டார்ட் செய்தான்.

அவனை நோக்கி ஓடிய சுந்தரி அவனைச் சமாதானப்படுத்த முயல அவளைத் துளியும் கண்டு கொள்ளாமல் தன் வீட்டை நோக்கி “விர்ர்ர்ர்ர்ர்”ரென்று பறந்தான் தனசேகர்..

மண்டபமே ஸ்தம்பித்து நின்றது.

மல்லிகாவின் முதலிரவுப் படுக்கையிலிருந்த மல்லிகைகள் மரணித்துப் போயின. தட்டிலிருந்த பலகாரங்களும் பழங்களும் பாழாகிப் போயின. செம்பிலிருந்த பால் திரிந்து போயிற்று.

கனவுக் கோட்டைகள் சரிந்து போனதில் கண்ணீர்க் கோட்டையின் ராணியானாள் மல்லிகா. அழுகை தேசத்தின் அரசியானாள்.

அதே நேரம் தன் வீட்டில் முரளியைப் பிரிந்த சோகத்தைத் தாள முடியாமல் உறக்கமின்றி உலாத்திக் கொண்டிருந்தான் தனசேகர்.

---------​

இப்பூவுலகில் எத்தனையோ நிகழ்வுகள் மகிழ்ச்சியின் ஊஞ்சல்களாய், துயரங்களின் தொட்டில்களாய் நிகழ்ந்து கொண்டேயிருந்த போதிலும் புவிக் கண்டத்தின் ஒரு புறத்தில் வெள்ளப் பெருக்கும் மறு புறத்தில் வறட்சியும் நிலைப்பாட்டிலிருந்த போதிலும், அரசியல், ஆன்மீகம், விஞ்ஞானம், பொருளாதாரம், போன்ற பல கோட்பாடுகளில் மாற்றங்கள் இடம் பெற்றுக் கொண்டேயிருந்த போதிலும்

காலம் மட்டும் எந்தவொரு இடர்பாடுமின்றி தன் பாதையில் எவ்வித மாற்றமுமின்றி ஓடிக் கொண்டேயிருந்தது. காலத்திற்குப் பேச முடியாதுதான், ஆனால் அந்தக் காலம்தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து போயிருந்தது ஆறு மாதங்கள்.

இந்த ஆறு மாதத்தில் தன் முழு நேரத்தையும் முரளி மற்றும் அவன் குடும்பத்தாரைக் கண்டு பிடிக்கும் முயற்சியிலேயே செலவழித்துக் கொண்டிருந்தான் தனசேகர். போகாத ஊரில்லை தேடாத தெருவில்லை விசாரிக்காத ஆளில்லை.

“டேய் சேகர்...ஊரே கை கொட்டிச் சிரிக்குதுடா!...ஒரு கீழ்சாதிப் பையனுக்காக...தாலி கட்டிய பொண்டாட்டியையே தள்ளி வைத்திருக்கும் உயர்சாதிக்காரனை கேவலமாய்ப் பேசுதுடா” சுந்தரி கண் கலங்கிச் சொன்னாள்.

“தாராளமாய்ச் சிரிக்கட்டும்...கேவலமாய்ப் பேசட்டும்...அதுக்காக என் நண்பனை நான் தேடாமல் இருக்க முடியுமா?...தேடுவேன்!...தேடிக் கொண்டேயிருப்பேன்!...மாசக்கணக்கில் ஆனாலும் சரி...வருஷக் கணக்கில் ஆனாலும் சரி!...உங்களுக்கு குடும்பமும் சம்சாரமும் பெரிசு...ஆனா எனக்கு நட்பு மட்டுமே பெரிசு!” என்றான் தனசேகர்.

“டேய்...சும்மா அர்த்தமில்லாமல் பேசாதடா...இப்ப எல்லோருமே இறங்கி வந்திட்டாங்கடா... சம்மந்தி வீட்டுல கூட “மாப்பிள்ளை அந்தப் பையன் கூட முன்னைப் போலவே பேசட்டும்...பழகட்டும்...ஏன் எங்க வீட்டுக்கே வேணாலும் கூட்டிட்டு வரட்டும்”ன்னு எல்லோருமே ஒத்துக்கிட்டாங்கடா” என்றாள் சுந்தரி.

“அம்மா...அதெல்லாம் வெறும் வாய் வார்த்தைகள்...அப்படியெல்லாம் சொன்னால் நான் அவங்க மகளை இங்கே கூட்டிக்குவேன்!னு நெனச்சு பேசறாங்க!...அதை நம்பி நான் அவங்க மகளை இங்க வரவழைச்சேன்னா...நாளைக்கு முரளி வந்ததும் அப்படியே பல்டி அடிச்சிடுவாங்க!...பழைய மாதிரி அவனைக் காயப்ப்டுத்திப் பேசுவாங்க!...மொதல்ல முரளி கிடைக்கட்டும்...அப்புறம் பார்க்கலாம்” என்றான் ஸ்திரமாய்.
------​

இன்ஸ்பெக்டர் தனசேகரின் வீடு. வாசலில் யாரோ வந்து நிற்கும் நிழலாட, உள்ளேயிருந்து வெளியே வந்தார் திவாகர்.

சோகமான முகத்துடன் விரக்தியாய்ச் சிரித்தார் பொன்னுரங்கம்.

“வாங்க அய்யா” என்று சொல்லி அவரை உள்ளே வரவழைத்த திவாகர், கூடத்து நாற்காலியில் அமர வைத்தார். “சொல்லுங்க அய்யா….என்ன விஷயமா என்னைத் தேடி வந்திருக்கீங்க?” நகரீகமாய்க் கேட்டார் திவாகர்.

“வந்து…என் மகன் தனசேகர்…கல்யாணமாகி ஆறு மாசமாகியும்…தன் புது மனைவியை அவங்க வீட்டிலேயே விட்டு வெச்சிருக்கான்!...எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர நாங்க முயற்சி செஞ்சாலும்… “அந்த பொண்ணு இங்க வந்தா நான் இந்த வீட்டுக்குள்ளார வரவே மாட்டேன்!”னு அடம் பிடிக்கறான்!”

சில நிமிடங்கள் அமைதியாய் அவர் முகத்தையே பார்த்த திவாகர், “ஏன்?...அந்தப் பெண்ணைப் பார்த்து…மனசுக்குப் பிடித்து...தானே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டார்?” கேட்க,

“சார்…அந்தப் பொண்ணு மேலே அவன் இப்பவும் ரொம்ப பிரியமாய்த்தான் இருக்கான்!..”

“அப்புறம் ஏன் தன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு வர மாட்டேங்கறார்?...ஒருவேளை….அவருக்கு வேற ஏதாவது காதல்…கீதல்…இருக்கோ….என்னவோ?” திவாகர் வழக்கமாய் போலீஸ்காரர்கள் கேட்கும் அந்தக் கேள்வியைக் கேட்டார்.

“சத்தியமாய் இல்லை சார்!...இந்த விஷயத்துல பிரச்சினையே என் மகனோட சிநேகிதன் முரளிதான்”

“முரளி…”என்றபடி மேவாயைத் தேய்த்த திவாகர், “யாரு?...உங்க மகனோட பைக்குல…பின்னாடி உட்கார்ந்திட்டுப் போவானே?...அந்தப் பையனா?” கேட்டார்.

“அவனேதான் சார்”

“சரி…அவன்தான் இப்ப ஊரிலேயே இல்லையாமே?....எங்கியோ வெளியூருல வேலை கிடைச்சுப் போயிட்டதா அல்ல சொன்னாங்க?”

“இல்லை சார்…நாந்தான்…அவனை ஊரை விட்டுப் போக வெச்சேன்” பொன்னுரங்கம் கூனிக் குறுகி அந்த உண்மையைச் சொன்னார்.

நெற்றியைச் சுருக்கிய திவாகர், “நீங்களா?...ஏன்?...எதுக்கு?” சற்றுக் கனமான குரலில் கேட்டார்.

“வந்து…அந்த முரளிப் பையன்…கீழ் சாதிக்காரன்!...அதனால அவன் கூட நம்ம பையன் பழகறது…சம்மந்தி வீட்டுக்காரங்களுக்குப் பிடிக்கலை!...”

“ஸோ…நீங்க அவனை ஊரை விட்டே துரத்தியடிச்சிட்டீங்க…அப்படித்தானே?”

“இல்லை சார்…என்னோட வயசை மறந்து…கெஞ்சிக் கேட்டு…போக வெச்சேன் சார்!...இப்ப அவன் போனது எங்களால்தான்னு தெரிஞ்சுக்கிட்டு பையன் முரண்டு பிடிக்கறான்” என்றார் பொன்னுரங்கம்.

“சரி…என்னதான் வேணுமாம் உங்க மகனுக்கு?”

“திரும்பவும் அந்த முரளிப் பயல் இந்த ஊருக்குத் திரும்பி வரணுமாம்!...அப்படி அவன் வந்தால்தான் இவன் தன்னோட மனைவியைச் சேர்த்துக்குவானாம்?”

“இவன் சேர்த்துக்குவான்…ஆனா சம்மந்தி வீட்டுக்காரங்க?” இன்ஸ்பெக்டர் கொக்கி போட,

“அவங்களும் மாறிட்டாங்க சார்”

“ஓ.கே… அந்த முரளி எந்த ஊர்ல இருக்கான்?”

“அதுதான் தெரியலையே சார்!...ஸ்டேஷன் மாஸ்டர்கிட்டே “திருச்சிக்குப் போறோம்!”னு பொய் சொல்லிட்டு வேற எங்கியோ குடும்பத்தோட போயிட்டான்”

“ஓ.கே…நான் அந்த முரளியோட போட்டோவை எல்லா ஊர் ஸ்டேஷனுக்கு அனுப்பி டிரேஸ் பண்ணச் சொல்றேன்!...நீங்க கவலைப்படாம போங்க”

அவர் சென்றதும், “ஹும்…உண்மையான நட்பைப் புரிஞ்சுக்காம இன்னமும் சாதியைப் பிடிச்சுக்கிட்டு தொங்கற இந்த மாதிரி ஆளுங்களுக்கு அந்த தனசேகர் குடுக்கற டிரீட்மெண்ட் கூட சரிதான்!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு தோள்களைக் குலுக்கிக் கொண்டார் திவாகர்.
****​
கோயமுத்தூர்.

அந்த வழுக்கைத் தலை மனோதத்துவ மருத்துவர் தேவராஜின் மேசைக்கு எதிரே அமர்ந்திருந்தனர் டிரான்ஸ்போர்ட் முதலாளி சிங்கமுத்துவும், முரளியும்.

ஒரு நீண்ட யோசனைக்குப் பின் “மிஸ்டர் சிங்கமுத்து...உங்க மனைவி ஜெகதாம்பாள்...இறந்து போன தன் மகனோட சவத்தை.....கண்ணால் கூடப் பார்க்கவில்லை!ன்னு நீங்க சொல்றீங்க!...பட்...அதைக் கேட்கும் போது எனக்கு ரொம்பவே ஆச்சரியமாயிருக்கு!...ஏன்?...ஏன் அப்படி செஞ்சாங்க?”

“எப்பவுமே...கலகலப்பா...பேசிட்டும்...சிரிச்சுக்கிட்டும் இருந்த என்னோட மகனை பிணமாய்ப் பார்த்தால் என் மனசு தாங்காது!...நான் பார்க்க மாட்டேன்!...பார்க்க மாட்டேன்” கத்திக் கதறினாங்க!...நாங்க எல்லோருமே....“கொஞ்சம் நேரம்தான் அப்படி இருப்பாங்க...கடைசில சவத்தைத் தூக்கும் போது எப்படியும் வந்து பார்த்திடுவாங்க!”ன்னு நெனச்சோம்!...ஆனா கடைசி வரை என் மனைவி வரவேயில்லை!...சவத்தை ஹால்ல கிடத்தியிருந்தோம்...அவங்க ஹாலுக்கே வராமல் உள் அறையிலேயே...அவனோட போட்டோவைக் கையில் வெச்சுக்கிட்டு...அதைப் பார்த்துப் பார்த்தே அழுதாங்க!...” என்றார் சிங்கமுத்து கனத்த நெஞ்சுடன்.

“யெஸ்...தட் ஈஸ் த ரீஸன்!...மகனைப் பிணமாய்ப் பார்க்காததினால்...அவங்க மனசுல...மகன் எங்கேயோ வெளியூர் போயிருக்கான்!...எப்படியும் திரும்பி வந்திடுவான்!..என்கிற மாதிரியே கற்பனை பண்ணிட்டு இருந்திருக்காங்க!...அவங்க நெனைச்ச மாதிரியே அதே தோற்றத்துல இந்தப் பையனைப் பார்த்ததும்...தன் மகன் திரும்பி வந்திட்டான்!னு முடிவு பண்ணிட்டாங்க!...தட்ஸ் ஆல்” என்றார் டாக்டர் தேவராஜ்.

(தொடரும்)​
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
தனசேகர நட்புக்கு நல்ல
மரியாதை குடுத்துட்டான்
பாவம் முரளியின் முதலாளி அம்மா
 

தரணி

Well-Known Member
சரியான் பிடிவாதம் தனசேகர் இப்படி ஆளுங்களுக்கு இது தான் சரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top