யாருமிங்கு அனாதையில்லை - 20

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!” - 20
(நாவல்)
டாக்டர்.பொன்.கௌசல்யா

அத்தியாயம் : 20​


அவள் சென்றதும் “தம்பி...நீ உன் அம்மாவையும் தங்கச்சியையும் இங்க வந்து... அவுட் ஹவுஸ்ல இருந்துக்கச் சொல்லு..நீ இந்த வீட்டில் இருந்துக்கோ!...உனக்கு டிரான்ஸ்போர்ட் ஆபீஸ்ல வேலை போட்டுடறேன்!....காலைல அங்க போயிட்டு...இங்க ஈவினிங் இங்க வந்துடு!...என்ன?” என்று சிங்கமுத்து சொல்ல

தயங்கினான் முரளி. “அய்யா...எத்தனை நாளைக்கு இந்த நாடகத்தை நடத்த முடியும்?...எங்கம்மாவும் தங்கச்சியும் இங்க வந்து தங்கும் போது..நான் அவர்களுடனும் என் நேரத்தை செலவழிக்க வேண்டாமா?”

“நீ சொல்றது சரிதான் முரளி!...முதலாளியம்மா எப்படியும் கூடிய சீக்கிரத்துல நார்மலுக்கு வந்திடுவாங்க!...அப்ப...நாம உண்மையை அவங்களுக்குச் சொல்லிடலாம்!...அதுவரைக்கும் சமாளிப்போம்” என்றார் தங்கவேலு.

அப்போதும் முரளி யோசிக்க, “த பாருப்பா..உங்க அம்மாகிட்டேயும்...தங்கச்சி கிட்டேயும் நான் பேசறேன்!...அவங்களும் ஒரு தாய்!...நிச்சயம் அவங்க இந்த தாயோட மனநிலையை புரிஞ்சுக்குவாங்க!” தங்கவேலு சொன்னார்.

“சரிங்க” என்றான் முரளி.
-------​

அந்த மண்டபம் களை கட்டியிருந்தது.

தனசேகரின் தந்தை பொன்னுரங்கமும் மல்லிகாவின் தந்தை ராமலிங்க பூபதியும் செல்வச் செழிப்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்பதை ஊருக்குப் பறைசாற்றும் அந்த திருமண நிகழ்ச்சிக்காக பணத்தை வாரி இறைத்திருந்தனர்.

மொத்த ஊரையும் அழைத்து மண்டபத்தைச் சுற்றி மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பந்தலமைத்து மாலையில் இன்னிசைக் கச்சேரி இரவில் விடிய விடிய கலை நிகழ்ச்சிகள் என அமர்க்களப்படுத்தியிருந்தனர்.

ஆனால் மணமகன் தனசேகரின் முகம் மட்டும் சோபையிழந்து கிடந்தது. தாயிடமும் தந்தையிடமும் மாற்றி மாற்றி விசாரித்தான்.

“முரளி ரெண்டு நாளா என் கண்ணில் படலை!...என்னாச்சு அவனுக்கு?...ஏன் அவன் மண்டபத்துக்கு வரலை?...நீங்க யாராவது அவனை ஏதாச்சும் சொல்லிக் காயப்படுத்திட்டிங்களா?”

“டேய்...நீ படற பாட்டை பார்த்து நாங்களே அவன் வீட்டுக்கு ஒரு ஆளை அனுப்பி விசாரிச்சிட்டோம்!...அவங்க வீடு பூட்டிக் கிடக்காம்!...குடும்பத்தோட எங்கியோ வெளியூரு போயிட்டாங்களாம்” என்றாள் அவன் தாய் சுந்தரி.

“இல்லை நான் நம்ப மாட்டேன்!..என் கிட்டே சொல்லாம அவன் போக மாட்டான்!...ஏதோ சதி நடந்திருக்கு” தவித்தான் தனசேகர்.

“அட...ஊர்ல யாரோ பங்காளி வீட்டுல சாவு விழுந்திடுச்சாம்!...அந்த அசுப காரியத்தை கல்யாண மாப்பிள்ளையான உன் கிட்ட சொல்லக் கூடாது!ன்னு சொல்லாமலே கிளம்பிப் போயிட்டாங்களாம்” பொய்யை சரமாரியாகச் சொன்னாள் சுந்தரி.

“எப்ப திரும்பி வருவாங்க?”ன்னு விசாரிச்சீங்களா?”

“ம்...விசாரிக்காமல் இருப்போமா?...எப்படியும் முகூர்த்தத்துக்கு வந்திடுவானாம்” என்றாள் சுந்தரி.

மறுநாள் காலை மண மேடையில் அமர்ந்திருந்த தனசேகரின் கண்கள் கூட்டத்தில் முரளியைத் தேடின.

கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டர் திவாகர், மண மேடையிலிருந்த தன சேகரைப் பார்த்துக் கும்பிட, பதிலுக்கு அவனும் கும்பிட்டான். ஆனால், அந்த நிமிடம் அவன் நிலை கொள்ளாதவனாய் எதற்கோ தவித்துக் கொண்டுதான் மேடையில் அமர்ந்திருக்கின்றான் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டார் இன்ஸ்பெக்டர்.

“மாப்பிள்ளை சாமி...நான் சொல்ற மந்திரங்களைத் திருப்பிச் சொல்லுங்கோ” அந்த புரோகிதர் சொல்ல “யோவ்...கொஞ்சம் சும்மாயிருய்யா” என்று அதட்டி அவரை வாயடைத்தான்.

“பொண்ணை வரச் சொல்லுங்கோ...பொண்ணை வரச் சொல்லுங்கோ” யாரோ கூவ

மணமகள் அறையிலிருந்து தேவதை போன்ற அலங்காரத்தோடு வந்தாள் மல்லிகா. அவள் மேனியில் குடியேறியிருந்த தங்க நகைகளை ஊர் மக்கள் வாயைப் பிளந்து கொண்டு பார்த்தனர்.

கூட்டமே மணமகளையும் அவளுடைய அபரிமிதமான ஒப்பனையைக் கண்டு மெய் மறந்திருந்த வேளையில் அதை ரசிக்க வேண்டிய மாப்பிள்ளையோ தன் நண்பனைத் தேடிக் கொண்டிருந்தான்.

“கெட்டி மேளம்!...கெட்டி மேளம்” என்று ஐயர் சொல்ல

தவுலின் சத்தம் மண்டபத்தை அதிர வைக்க

அட்சதையைத் தயாராய் வைத்துக் கொண்டு காத்திருந்தது கூட்டம்.

ஆனால் தாலியைக் கையில் வாங்கிய தனசேகர் அதை மணமகள் கழுத்தில் கட்டாமல் பின்புறமாய் நின்று கொண்டிருந்த தன் தாயாரை அழைத்தான்.

“அம்மா...கொஞ்சம் இப்படி வாம்மா”

பற்களைக் கடித்துக் கொண்டே வந்தவள் “என்னப்பா..என்ன வேணும்?” கடுமையான குரலில் கேட்டாள்.

“முரளி வரலையா?”

“வந்திடுவேன்”ன்னு சொன்னான்!...ஆனா இதுவரை வரலை!...அவனுக்கு என்ன பிரச்சினையோ?...அவனுக்காக பார்த்திட்டிருந்தா....நல்ல நேரம் போயிடும் மொதல்ல நீ தாலியைக் கட்டு அப்புறம் பார்த்துக்கலாம்!” என்றாள் சுந்தரி.

கெட்டி மேளம் “டும்...டும்....டும்...” என்று முன்னை விட அதிக சப்தத்துடன் முழங்க...அது தனசேகரின் காதுகளில் “முரளி...முரளி...முரளி” என்றே கேட்டது.

அய்யர் “மாங்கல்யம் தந்துனா...”என்று கூவ அது “முரளிதரன் வந்தானா?” என்று ஒலித்தது.

அட்சதைகள் அதுவாகவே வந்து விழ

“மாங்கல்யத்தைக் கட்டுங்கோ” அய்யர் உசுப்ப

என்ன செய்கிறோம்?...என்பதே தெரியாமல் மல்லிகாவின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான் தனசேகர்.

கட்டி முடித்த பின்னும் அவன் பார்வை முரளியைத்தான் தேடியது. “ம்ஹ்ஹும்...அவன் வரலை...அவனை யாரோ...என்னமோ பண்ணிட்டாங்க!...அதனாலதான் அவன் வரலை!...இல்லேன்னா அவனாவது...என் கல்யாணத்துக்கு வராமல் இருப்பதாவது?”.

தனசேகரின் கோபம் மல்லிகாவின் வீட்டிலிருந்த அந்தக் கிழவியின் மீது பாய்ந்தது. “அந்தக் கிழவிதான் அன்னிக்கு தேவையில்லாத பழைய கதைகளைப் பேசி முரளி மனசைக் காயப்படுத்தினா....இப்பவும் அவதான்....அதே மாதிரி எதையாவது பண்ணி வெச்சிருப்பா”

திருமணத்திற்கு வந்திருந்தோரெல்லாம் தாங்கள் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை மணமக்களிடம் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட போது, தனசேகரின் முகத்தில் புன்னகைக்கு பதில் கோபம்தான் அப்பியிருந்தது.

“இந்த அமளியெல்லாம் அடங்கட்டும்...அப்புறம் வெச்சுக்கறேன் இவங்களை?” உள்ளுக்குள் பொருமிக் கொண்டேயிருந்தான்.

மணமகளின் குடும்பத்தார் ஒன்றாய் நின்று புகைப்படம் எடுக்க வந்த போது அந்தக் கிழவியை எரிப்பது போல் பார்த்து விட்டு வேண்டுமென்றே “எனக்கு டாய்லெட் போகணும்” என்று சொல்லி விட்டு நழுவினான்.

மறுபடியொருமுறை அவர்கள் வந்த போது அந்தக் கிழவி இல்லை. எல்லோரும் புகைப்படம் எடுக்க நின்ற போது “ஆத்தா எங்கே போச்சு?...யாராவது போய் ஆத்தாவைக் கூட்டிட்டு வாங்க” என்று யாரோ சொல்ல

“ஆத்தாவும் வேண்டாம்...அதிரசமும் வேண்டாம்!...மொதல்ல போட்டோவை எடுப்பா” என்றான் தனசேகர் குரூர சிரிப்போடு.

மாப்பிள்ளையே சொன்ன பிறகு மறுக்க முடியாமல் அந்த போட்டோகிராபர் போட்டோ எடுத்து முடிக்க வேக வேகமாய் ஓடி வந்தாள் அந்தக் கிழவி.

அவளைக் கண்டதும் “அதோ ஆத்தா வந்திட்டாங்க மறுபடியும் எடுக்கலாம்” என்று அதே யாரோ சொல்ல “விருட்”டென்று எழுந்து மணமகன் அறையை நோக்கி நடந்தான் தனசேகர்.

மணமக்கள் இருவரின் ஜாதகப்படி அன்றையே தினமே சாந்தி முகூர்த்தம் வைத்தாக வேண்டும் இல்லையேல் அடுத்து...ஐந்து மாதங்கள் கழித்துத்தான் சாந்தி முகூர்த்தம் வைக்கப்பட வேண்டும் என்று ஜோதிடர் ஆணித்தரமாய்க் கூறி விட அன்றே....அந்த மண்டபத்திலேயே சாந்தி முகூர்த்தத்தையும் வைத்து விடுவது என்று பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர்.

முதலிரவு அறை.

தோழிப் பெண்களின் கேலி கிண்டல் மற்றும் சிரிப்புக்களோடு அறைக்குள் வந்து கதவைத் தாழிட்ட மல்லிகா அங்கே தனசேகர் இல்லாதது கண்டு அதிர்ச்சியானாள். “என்னது?...அவரைக் காணோம்!...எங்கே போனார்?”

ஒருவேளை பாத்ரூமிற்குள் இருப்பாரோ? என்றெண்ணி பாத்ரூம் அருகே சென்று “என்னங்க....என்னங்க” என்று சன்னக் குரலில் அழைத்தவாறே கதவைக் கூர்ந்து பார்த்தாள். அது வெளிப்புறமாய்த்தான் தாழிடப்பட்டிருந்தது.

எதுவும் புரியாமல் அந்தக் கட்டில் மீதே நீண்ட நேரம் அமர்ந்திருந்தவள், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

“அய்யய்ய...இதென்ன பொண்ணு முதலிரவு அறையிலிருந்து வெளிய வருது?...” பெரிய அத்தைக்காரி எழுந்து மல்லிகாவை நோக்கி வர

“பயந்திட்டாளோ...என்னவோ?” சொல்லிக் கொண்டே சின்ன அத்தையும் கூட வந்தாள்.

“என்ன மல்லிகா...ஏன் வெளிய வந்திட்டே?” சத்தமில்லாமல் கிசு..கிசு...குரலில் கேட்டாள் அவள்.

“ம்ம்...எத்தனை நேரம்தான் நான் ஒருத்தி மட்டும் தனியா உட்கார்ந்திட்டிருக்கறது?” என்றாள் மல்லிகா கைகளைப் பிசைந்து கொண்டு.

“என்னது?...தனியா உட்கார்ந்திட்டிருந்தியா?...ஏன்?...மாப்பிள்ளை தூங்கிட்டாரா?” பெரிய அத்தை கேட்க

“அவரு உள்ளாரவே இல்லை அத்தை” கோபமாய்ச் சொன்னாள் மல்லிகா.

“இல்லையே!...அவரு உள்ளாரதானே இருந்தார்...நான் பார்த்தேனே?” என்றாள் சின்ன அத்தை.

“நீங்க ரெண்டு பேரும்...அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போயிருந்த நேரமாப் பார்த்து இவரு எங்கியோ வெளிய போயிட்டார் போலிருக்கு” என்றாள் மல்லிகா.

“இதென்னம்மா கொடுமையாயிருக்கு?...எந்த ஆம்பளையாவது மொதல் ராத்திரிய விட்டுட்டு எங்காவது வெளிய போவானா?” பெரிய அத்தை வாயில் கையை வைத்துக் கொண்டு அங்கலாய்க்க

“த பாரு மல்லிகா...நீ இங்க நிற்க வேணாம்....யாராவது பார்த்தாங்கன்னா..இல்லாததையும்...பொல்லாததையும் சொல்லுவாங்க!...அதனால...நீ உடனே அறைக்குள்ளார போய் வெய்ட் பண்ணிட்டிரு!...நாங்க போயி மாப்பிள்ளை எங்க இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சு இங்க அனுப்பி வைக்கறோம்” சொல்லி விட்டு இரண்டு அத்தைகளும் புயலாகக் கிளம்பினர்.

தங்களை நோக்கி பரபரப்பாய் வந்த தன் சகோதரிகளை புருவங்களை நெரித்துக் கொண்டு பார்த்தார் ராமலிங்க பூபதி. “என்னம்மா...என்ன பிரச்சினை?...ஏன் ரெண்டு இப்படி பேயைப் பார்த்த மாதிரி வர்றீங்க?”

“ம்ம்...இப்பத்தான் உன் பொண்ணை முதலிரவு அறைக்குள்ளார தள்ளிட்டு வர்றோம்” என்றாள் பெரிய அத்தை.

“ஹே...ஹே...ஹே...”....இது நல்ல விஷயம்தானே?..இதுக்கு ஏன் இந்தப் பரபரப்பு?” பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டவர் போல் அவர் ஓங்கிச் சிரிக்க

“ச்சூ” என்று அவரை அடக்கி விட்டு “ரூமுக்குள்ளார மாப்பிள்ளை இல்லை” சன்னக் குரலில் சொன்னாள் சின்ன அத்தை.

“அட...நல்லாப் பாருங்கம்மா..பாத்ரூமுக்குள்ளார கீது இருப்பார்” சாதாரணமாய்ச் சொன்னார் ராமலிங்க பூபதி.

“அய்யோ...அண்ணா..நாங்க மொதல் வேலையா பாத்ரூமுக்குள்ளாரதான் பார்த்தோம்!...பாத்ரூம் வெளிய தாழ் போட்டிருக்கு!...அதுக்கப்புறம்...மண்டபத்தையே சல்லடை போட்டுப் பார்த்திட்டோம்!..ம்ஹும்...மாப்பிள்ளை கண்ணுக்கே படலை!...அவர் மண்டபத்திலேயே இல்லை போலிருக்கு!”

யோசனையுடன் மேவாயைத் தடவிய ராமலிங்க பூபதி “நீங்க இந்த விஷயத்தை வெளிய சொல்லிட்டுத் திரியாதீங்க...நான் போய் மாப்பிள்ளையோட அப்பா அம்மா கிட்டப் பேசிட்டு வர்றேன்” சொல்லி விட்டு வேக வேகமாய் நடந்தார்.

தனசேகரின் தந்தை பொன்னுரங்கமும், தாய் சுந்தரியும் திருமணம் நல்ல முறையில் முடிந்து விட்ட சந்தோஷத்தில் ஜாலியாய் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தனர்.

“சம்மந்தி...உங்க கிட்டக் கொஞ்சம் பேசணும்!” சொல்லியபடியே வந்த ராமலிங்க பூபதி தானே ஒரு சேரை இழுத்துப் போட்டு அவர்கள் பக்கத்தில் அமர்ந்தார்.

“ம்...சொல்லுங்க சம்மந்தி” என்றார் பொன்னுரங்கம்.

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “உங்க மகன் எங்கே?” கேட்டார்.

“இதென்ன கேள்வி?..சாந்தி முகூர்ந்த அறைக்குள்ளார இருப்பான்” என்றார் பொன்னுரங்கம்.

“இல்லை...உங்க மகன்...அந்த ரூமுக்குள்ளார இல்லை!...அங்க மட்டுமில்லை...இந்த மண்டபத்திலேயே இல்லை!...எங்கியோ வெளிய கிளம்பிப் போயிட்டார்? கோபமாய்ச் சொன்னார் ராமலிங்க பூபதி.

“எதை வெச்சு அப்படிச் சொல்றீங்க?...அவன் வெளிய போனதை நீங்க பார்த்தீங்களா?” கோபமாய்க் கேட்டார் பொன்னுரங்கம்.

“நான் பார்க்கலை...கல்யாண மண்டப வாட்ச்மேன் பார்த்திருக்கான்!...அவன் தெளிவா சொல்றான்!”

அதிர்ந்து போனார் பொன்னுரங்கம். அவர் முகத்தில் தெரிந்த கலக்கத்தைக் கண்டுபிடித்து விட்ட சுந்தரி மெல்ல அவரருகே வந்து “ஏங்க...அந்த முரளிப்பயல் கல்யாணத்துக்கு வரலை...என்பதால் அவனைத் தேடி அவன் வீட்டிற்கே போயிருப்பானோ?” என்று சொல்ல

தன் வாய் மீது ஆட்காட்டி விரலை வைத்து அவளைப் பேச விடாமல் செய்தவர் “அதை சம்மந்தி இருக்கும் போது பேசாதே...நான் நைஸா அங்கியும் போய் பார்த்திட்டே வந்திடறேன்” என்றார் சன்னக் குரலில்.

“என்ன சம்மந்தி நான் இங்க உட்கார்ந்திட்டிருக்கேன்...அங்க நீங்க ரெண்டு பேரும் என்னமோ ரகசியம் பேசிட்டிருக்கீங்க?...என்ன விஷயம்?” கறாராய்க் கேட்டர் ராமலிங்க பூபதி.

“ஒண்ணுமில்லைங்க சம்மந்தி!...எங்க நெருங்கிய சொந்தத்துல ஒருத்தர் கல்யாணத்துக்கு வரலை...அதான் அவங்களை விசாரிக்கப் போயிருப்பானோ?னு தோணுது!...எதுக்கும் நான் ஒரு எட்டு போய்ப் பார்த்திட்டே வந்திடறேன்” என்று சொல்லி விட்டு உடனே எழுந்தார் பொன்னுரங்கம்.

“பார்த்திட்டு வந்தா மட்டும் பத்தாது...மாப்பிள்ளையைக் கையோட கூட்டிட்டும் வாங்க!...ஜோசியர் சொன்னது ஞாபகமிருக்கல்ல?...இன்னிக்கு சாந்தி முகூர்த்தம் வைக்கலேன்னா...அடுத்து...அஞ்சு மாசம் கழிச்சுத்தான் வைக்க முடியுமாம்” ஞாபகமூட்டி அனுப்பினார் ராமலிங்க பூபதி.

“நாட்டுல அவனவன் எப்படா முதலிரவு வரும்?னு காத்திட்டிருப்பாங்க!...இந்தப் பயல் என்னடான்னா...பயந்து ஓடிட்டான்!...ஹும்...என்ன ஆம்பளையோ?” தனசேகரின் பெற்றோர் காதுகளுக்கு கேட்கும் விதமாகவே சொல்லி விட்டு நடந்தார் ராமலிங்க பூபதி.

அதே நேரம்

பூட்டிக் கிடந்த முரளியின் வீட்டு முன் நின்றிருந்த தனசேகர் அக்கம் பக்கத்தில் விசாரித்துக் கொண்டிருந்தான். “எத்தனை நாளா வீடு பூட்டியிருக்கு?...அவங்க எங்கே போனாங்க?”

வெற்றுடம்புடன் நின்று கொண்டிருந்த ஒரு மனிதர் அவனிடம் வந்து “த பாருங்க தம்பி!...அவங்க எங்க போறாங்க?...எதுக்குப் போறங்க?ன்னு எந்த விவரமும் எங்களுக்குத் தெரியாது!...ஆனா...ரெண்டு மூணு நாளாவே வீட்டிலிருந்த சாமான் செட்டுக்களை ஒவ்வொண்ணா வித்திட்டிருந்தாங்க!...நேத்திக்கு காலைலயிருந்து வீடு பூட்டிக் கிடக்கு!...எனக்கென்னமோ...ராத்திரியோட ராத்திரியா ஊரை விட்டே போயிட்டாங்க!ன்னு தோணுது” என்று தோள் துண்டை உதறிக் கொண்டே சொல்ல

“ஊரை விட்டுப் போறதுன்னா...நிச்சயம் ரயில்லதான் போயிருக்கணும்!” நேரே ரயில்வே ஸ்டேஷன் ஓடினான்.

தனது அறையில் தனது இருக்கையில் அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தார் ஸ்டேஷன் மாஸ்டர்.

யாரோ அறைக்குள் வருவதை உணர்வின் உசுப்பலில் புரிந்து கொண்டு கண் விழித்தார். “அட....தனசேகர்!...என்ன தம்பி....இன்னிக்கு உனக்குக் கல்யாணமாச்சே?...நீ எப்படி இந்த நேரத்துல...இங்கே?” ஆச்சரியமாய்க் கேட்டார் ஸ்டேஷன் மாஸ்டர்.

“முரளி...குடும்பத்தோட ரயிலேறிப் போனானா?”

“ஆமாம் தம்பி”

“எந்த ஊருக்குப் போனாங்க?”

“தெரியலையே தம்பி...ராத்திரி பத்தரை ரயிலுக்கு...முரளி...அவங்க அம்மா...தங்கச்சி...மூணு பேரும் வந்தாங்க!..கைல பெரிய பெரிய பைகளைத் தூக்கிட்டு வந்தாங்க!... “எங்க போறீங்க?”ன்னு கேட்டேன்... “திருச்சி”ன்னு சொன்னாங்க!...அப்புறம் ரயில் வந்ததும் கிளம்பிப் போயிட்டாங்க!” என்றார் ஸ்டேஷன் மாஸ்டர்.

“திருச்சிக்கா?...இல்லை....அதுக்கு வாய்ப்பேயில்லை!...ஏன்னா...அவங்களுக்கு திருச்சில யாருமே கிடையாது!....வேற எங்கியோ போறாங்க!..உங்க கிட்ட உண்மையைச் சொன்னா...நீங்க நான் வந்து கேட்டா சொல்லிடுவீங்க!ன்னு பொய் சொல்லிட்டுப் போயிருக்காங்க!”

குழம்பிய மனதுடன் ஸ்டேஷனிலிருந்து பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தவனுக்கு திடீரென்று அந்த யோசனை வர முரளி வேலை பார்க்கும் சூடாமணி ரைஸ் மில் நோக்கிச் சென்றான்.

கேட்டிலிருந்த வாட்ச்மேன் அவனை அடையாளம் கண்டு கொண்டு சிரிக்க, “முரளி...வேலையை விட்டு நின்னுட்டானா?” கேட்டான்.

“ம்ஹ்ஹும்...எனக்கு எந்த விவரமும் தெரியலை தம்பி!...ஆனா ஒண்ணு மட்டும் தெரியும்...நாலு நாளைக்கு முன்னாடி உங்க அம்மாவும் அப்பாவும் இங்க வந்திருந்தாங்க!...முரளியைக் கூட்டிட்டுப் போய் சாப்பாட்டு ரூம்ல உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசிட்டிருந்தாங்க!...அவ்வளவுதான் தெரியும்!” என்றான் அந்த வாட்ச்மேன்.

அதிர்ந்து போனான் தனசேகர். “எதுக்கு?...எதுக்கு வந்திட்டுப் போனாங்க?”

“அதெல்லாம் எனக்கு எப்படித் தம்பி தெரியும்?...ஆனா அவங்க வந்திட்டுப் போன நாளிலிருந்துதான் முரளி வேலைக்கு வரலை!”

கையால் சொடுக்குப் போட்ட தனசேகர் “சந்தேகமேயில்லை...இது என்னைப் பெத்தவங்க செஞ்ச வேலைதான்....ஒண்ணு...அவனை மிரட்டி ஊரை விட்டே துரத்தியிருக்கணும்!...இல்லை...கெஞ்சிக் கூத்தாடி அவனைப் போக வெச்சிருக்கணும்!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு நேரே மண்டத்திற்கு விரைந்தான்.

(தொடரும்)​
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
தனசேகர் உண்மைய கண்டு பிடிச்சுட்டான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top