யாருமிங்கு அனாதையில்லை - 19

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!” - 19
(நாவல்)
(டாக்டர்.பொன்.கௌசல்யா)

அத்தியாயம் :19

கோயமுத்தூர்.

அந்த ஊருக்கு இயற்கை அளித்த கொடையான இதமான சீதோஷ்ணம் அவர்களை கை நீட்டி வரவேற்றது.

பரபரப்பான நகரமாய் இருந்த போதும் இங்கிதமான மக்களின் இங்கிதமான பழக்க வழக்கங்களால் இனிமை நகரமாய் இருந்தது கோவை.

ஒரு ஆட்டோ பிடித்து அந்த கே.பி.எஸ்.டிரான்ஸ்போர்ட் ஆபீஸிற்கு சென்றதும் வாசலிலிருந்த செக்யூரிட்டியிடம் “அண்ணே...இங்கே “தங்கவேலு”ன்னு ஒரு டிரைவர்?” முரளி கேட்டான்.

“தங்கவேலுவா?...நேத்திக்குத்தான் மைசூர் டிரிப் முடிச்சிட்டு வந்தார்!...அநேகமா...காலை நேரத்துல ஓய்வெடுத்திட்டு மதிய வாக்கில்தான் இங்க வருவாரு!...ஏன்?...என்ன வேணும் உங்களுக்கு?” அந்த செக்யூரிட்டி கேட்க

“அவரு கிட்டப் பேசணுமே?” என்றான் முரளி.

“வேணா அவரோட மொபைல் நெம்பர் தர்றேன்...பேசிக்கறியா?”

“வந்து...என்கிட்ட மொபைல் இல்லையே?” பரிதாபமாகச் சொன்னான் முரளி.

“என்னது?...மொபைல் இல்லையா?...என்னய்யா ஆளு நீ?...இந்தக் காலத்துல நாய் நரியெல்லாம் கூட மொபைல் வெச்சுக்கிட்டு சுத்துது...உன் கிட்ட மொபைல் இல்லையா?...வித்தியாசமான ஆளாயிருக்கியே?...கிராமத்துப் பக்கமா?” நக்கலாய்க் கேட்டான் அந்த செக்யூரிட்டி.

“ஆமாங்க அய்யா...நான் கிராமத்திலிருந்துதான் வர்றேன்!...அங்கெல்லாம் மொபைல் இன்னும் சரியான புழக்கத்துக்கு வரலை!” என்றான் முரளி.

“சரி...இந்தா என் மொபைலிலேயே பேசு” என்ற செக்யூரிட்டி டிரைவர் தங்கவேலுவின் எண்ணை டயல் செய்து கொடுத்தார்.

“இந்தாப்பா...ரிங் போகுது!...பேசு” போனை வாங்கிய முரளி அதை எப்படிக் காதில வைத்துப் பேசுவதென்றே தெரியாமல் விழிக்க “இப்படிப் பிடிச்சுப் பேசுப்பா” என்றபடி சரியாக காதில் வைத்துக் கொடுத்தான் செக்யூரிட்டி.

மறுமுனையில் “அன்னமிட்ட கை!...நம்மை ஆக்கி விட்ட கை!...உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழ வைத்து!...அன்னமிட்ட கை” என்ற பாடல் இசைக்க

“அண்ணே...பாட்டுப் பாடுதுண்ணே” என்று சொல்லி முரளி மொபைலைத் திருப்பிக் கொடுக்க “எம்.ஜி.ஆர்.பாட்டுக் கேட்குதா?.....அதுதான்பா ரிங் டோன்!...காதிலேயே வைப்பா...அவர் பேசுவார்” என்றார் செக்யூரிட்டி.

முரளி மொபைலை மீண்டும் காதில் வைக்க எதிர் முனையில் தங்கவேலு “அலோ...அலோ”என்று கத்திக் கொண்டிருந்தார்.

“அண்ணே...தங்கவேலண்ணே!...நான் முரளி பேசறேன்” என்றான்.

“முரளியா?...எந்த முரளி?”

“அண்ணே “சூடாமணி ரைஸ் மில்”...முரளி!...நீங்க கூட கோயமுத்தூர்ல ரைட்டர் வேலையிருக்கு!ன்னு சொல்லி கார்டு குடுத்தீங்களே?”கத்தலாய்ச் சொன்னான் முரளி.

“ஓ...நீயாப்பா?” என்ற அந்த தங்கவேலு “ஆமாம்..எப்ப வந்தே கோயமுத்தூருக்கு?” கேட்டார்.

“இப்பத்தாண்ணே வந்தோம்!...ரயிலை விட்டு இறங்கியதும்...ஆட்டோ பிடிச்சு நேரா உங்க டிரான்ஸ்போர்ட் ஆபீஸுக்கு வந்திட்டோம்”என்றான் முரளி.

“என்ன?...“வந்தோம்”...“வந்திட்டோம்”ன்னு பன்மைல சொல்றே?....எத்தனை பேர் வந்திருக்கீங்க?”

“அண்ணே!...நானு...அம்மா...தங்கச்சி...மூணு பேரும் அந்த ஊரை விட்டே வந்திட்டோம் அண்ணே”

“அடப்பாவி!...இப்படி திடீர்னு புறப்பட்டு வந்து நிற்கறியே?...இது என்ன கிராமமா?...டவுன்யா!...இங்கெல்லாம் மனுஷ வாழ்க்கையே வேற மாதிரியிருக்கும்!...”என்று சொல்லி விட்டு சிறிது நேரம் அமைதி காத்த அந்த தங்கவேலு “சரி போனை அந்த செக்யூரிட்டியிடம் குடு” என்றார்.

முரளி மொபலை செக்யூரிட்டியிடம் நீட்ட அதை வாங்கி “ம்...சொல்லு தங்கவேலு” என்றார் அவர்.

“நாகராஜு...அவங்களை நம்ம ரவியோட ஆட்டோவுல ஏத்தி எங்க வீட்டுக்கு அனுப்பு” என்றார்.

“சரி...தங்கவேலு” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்த அந்த செக்யூரிட்டி, உடனே ஆட்டோ ரவிக்கு கால் செய்தார்.

“விர்”ரென்று வந்து ரவுண்டடித்து நின்றது அந்த ஆட்டோ. “ரவி...இவங்களை...நம்ம தங்கவேலு அண்ணன் வீட்டுல இறக்கி விட்டுடு”என்றார் அந்த செக்யூரிட்டி.

“நிச்சயமாக...மூத்த சகோதரரே” என்று அந்த ரவி வித்தியாசமாகச் சொல்லி விட்டு முரளியின் பக்கம் திரும்பி “எல்லோரும் வாகனத்தினுள் ஏறி அமருங்கள் பயணிகளே” என்றான்.

“ஆஹா...இவன் ரவியா?....தமிழ்ப் பித்தனா?” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டே ஆட்டோவினுள் ஏறினான் முரளி. அவனைத் தொடர்ந்து அவன் தாயும் தங்கையும் ஏறிக் கொண்டனர்.

சுந்தராபுரம் பகுதியிலிருந்த அந்த வீட்டின் முன் ரவியின் ஆட்டோ நின்றது.

“பயணிகளே....நீங்கள் தேடி வந்த இல்லம் இதுதான்” என்றான் ஆட்டோ ரவி.

கேட்டிற்கு வெளியே காத்திருந்த தங்கவேலு தானே ஆட்டோவிற்கான தொகையைக் கொடுத்து ரவியை அனுப்பி விட்டு முரளியையும் அவன் குடும்பத்தையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

முன் அறையிலிருந்த சேரில் அவர்களை அமர வைத்தவர் உள் அறையைப் பார்த்து “வடிவு...வடிவு” என்று கத்தினார்.

உள் அறையிலிருந்த அவர் மனைவி வேக வேகமாய் வெளியே வந்து முரளியைப் பார்த்ததும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாள். பிறகு அவனருகில் சென்று அவனைச் சுற்றிச் சுற்றி வந்து வினோதமாய்ப் பார்த்தாள்.

முரளிக்கு தர்ம சங்கடமாயிருந்தது.

“என்ன வடிவு...நான் சொன்னது சரியா?” மனைவியைப் பார்த்துக் கேட்டார் தங்கவேலு.

“நூத்துக்கு நூறு சரிங்க!...நீங்க சொன்னப்பக் கூட நான் நம்பலை!...இப்ப இந்தப் பையனை நேர்ல பார்த்த பிறகுதான் நம்பிக்கையே வந்திச்சு!” அந்த வடிவு சொல்ல

குழப்பமாகிப் போன முரளி “அண்ணே...என்ன அண்ணே?...நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கறீங்க?” கேட்டான்.

“ஒரு நிமிஷம் தம்பி” என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்ற அந்த தங்கவேலு வரும் போது கையில் ஒரு சிறிய போட்டோ ஆல்பத்தோடு வந்தார். “இதைப் பாருங்க தம்பி”
முகத்தைச் சுருக்கிக் கொண்டு அதை வாங்கித் திறந்து பார்த்த முரளி அதிலிருந்த முதல் போட்டோவைப் பார்த்ததும் பேரதிர்ச்சிக்குள்ளானான்.

அந்தப் போட்டோவில் ஒரு சிகப்பு சட்டை அணிந்த இளைஞன் ஒருவனுடன் தங்கவேலு நின்றிருந்தார். அந்த இளைஞன் அச்சு அசலாய்....அப்படியே முரளியின் நகல் போலிருந்தான்.

முரளி குழப்பத்துடன் தலையைத் தூக்கி தங்கவேலுவைப் பார்க்க “ம்ம்..மீதி போட்டோக்களையும் பாருங்க” என்றார் தங்கவேலு.

அவசர அவசரமாய் அடுத்த போட்டோவிற்குப் போனான். அதில் ஒரு லாரிக்குப் பூசை செய்யப்பட்டுக் கொண்டிருக்க, பக்கத்தில் தங்கவேலுவும் முரளியைப் போலவே இருந்த அந்த இளைஞனும் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். மற்ற போட்டோக்கள் மொத்தத்தையும் பார்த்து முடித்தவன் அந்த ஆல்பத்தைத் தன் தாயிடம் தந்தான். ராக்கம்மாவும் வசந்தியும் அந்தப் போட்டோக்களைப் பார்த்து விட்டு அந்த தங்கவேலுவைப் பார்த்து “அய்யா!.....யாருங்க அய்யா இந்தப் பையன்...அப்படியே அச்சு அசலாய் என் மகன் போலவே இருக்கிறானே?” வியப்புடன் கேட்டாள் ராக்கம்மா.

“அவன்...எங்க டிரான்ஸ்போர்ட் ஓனரோட ஒரே மகன்!...பேரு...கோகுல்!..அந்தப் போட்டோவெல்லாம் புது லாரி வாங்கினப்ப பூஜை செய்த போது எடுத்த போட்டோக்கள்!...இப்ப அந்த கோகுல்..உயிரோட இல்லை!”

அரண்டு போயினர் முரளியும் அவன் தாயும் தங்கையும்.

“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்தப் பூவுலகம் பிடிக்காம...மேலோகத்துக்குப் போயிட்டான்” சொல்லி விட்டு லேசாய்க் கண் கலங்கினார் அந்த தங்கவேலு.

“அடக் கடவுளே!” வாய் மீது கை வைத்து அங்கலாய்த்தாள் ராக்கம்மா.

“ஏன்?...என்னாச்சு அவருக்கு?...ஏதாவது நோயா?” வசந்தி கேட்டாள்.

“இல்லைம்மா!...ஒரு விபத்து!...பசங்க கூட சேர்ந்துக்கிட்டு ஜாலியா...இங்க பக்கத்துல இருக்கற கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சிக்குப் போயிருக்காரு...போன இடத்துல அருவில குளிக்கும் போது கால் வழுக்கிக் கீழே விழுந்தவரை தண்ணி இழுத்திட்டுப் போயிடுச்சு!...ரெண்டு நாளைக்குப் பிறகுதான்...அவர் உடல் கிடைச்சுது!...அதுவும் அந்த இடத்திலிருந்து...சுத்தமா நாலு கிலோமீட்டர் தள்ளி” தங்கவேலு சொல்லிக் கொண்டே போக அவர் மனைவியும் கண் கலங்கினாள்..

“அன்னிக்கு லோடு இறக்கறதுக்காக அந்த சூடாமணி ரைஸ் மில்லுல உன்னைப் பார்த்ததும்...எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போச்சு...என் முதலாளி மகனையே நேரில் பார்த்தது மாதிரி இருந்திச்சு!...அதனாலதான் நானே வலிய வந்து உன் கிட்டப் பேச்சு குடுத்தேன்!...அந்த ரைஸ் மில் முதலாளி உன்னை அதட்டறதையும்...விரட்டறதையும் பார்த்து என் மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு...அதனாலதான் உன் கிட்ட “கோயமுத்தூர் பிராஞ்ச்ல வேலை இருக்கு வந்திடு தம்பி”ன்னு சொன்னேன்!” என்றார் தங்கவேலு முரளியிடம்.

“அய்யா...எனக்கு வேலை கிடைத்தால் மட்டும் போதாதுங்க அய்யா!...நாங்க தங்கறதுக்கும் ஒரு நல்ல வீடு கிடைக்கணும்” முரளி சொல்ல

“அதைப் பற்றி நீயேன் கவலைப் படறே?...உனக்கு வீடு பார்த்துக் குடுக்க நானாச்சு!...வீடு கிடைக்கும் வரை நீயும் உன் குடும்பமும் எங்க வீட்டிலேயே இருக்கலாம்!” என்றார் தங்கவேலு.

“அய்யா...உங்களுக்கு....குழந்தைகள்...?” என்று ராக்கம்மா இழுக்க

“ம்ம்ம்”...என்று யோசித்தவர்... “ஒரே மகள்...கல்யாணம் ஆகிப் போயிட்டா” என்றார் வேண்டா வெறுப்பாய் முகத்தை வைத்துக் கொண்டு. அவருடைய அந்த முகபாவத்திலிருந்தே அதன் பின்னணியில் ஏதோ பிரச்சினை இருக்கின்றதென்று புரிந்து கொண்ட ராக்கம்மா அதற்கு மேல் அதைக் குடைய விரும்பவில்லை.

“சரி...நீங்கெல்லாம் போய்க் குளிச்சிட்டு...சாப்பிட வாங்க!” என்ற தங்கவேலு முரளியைப் பார்த்து “தம்பி...நானும் நீயும் ஒரு பத்து மணிக்கு...எங்க டிரான்ஸ்போர்ட் முதலாளி வீட்டுக்குப் போவோம்” என்று சொல்ல

“சரிங்க அய்யா” என்றான் முரளி.

------​

அந்தப் பெரிய பங்களா வீட்டின் முன் தங்கவேலுவின் டி.வி.எஸ்-50 நின்றதும் நிதானமாய் பில்லியனிலிருந்து இறங்கினான் முரளி. “இதுதான் முதலாளி வீடுங்களா?” கேட்டான்.

“முதலாளி...வீடில்லை தம்பி....முதலாளியோட மாளிகை!...உள்ளே வந்து பாரு அசந்திடுவே” என்ற தங்கவேலு கேட்டிலிருந்த செக்யூரிட்டியிடம் “என்ன கோபாலு...சௌக்கியமா?...முதலாளி இருக்கார்தானே?” கேட்டார்.

“ம்...இருக்காருங்க அண்ணே” என்ற அந்த செக்யூரிட்டியின் பார்வை முரளி மீது திகிலுடன் பதிந்திருந்தது.

“என்ன கோபாலு பையனை அப்படிப் பார்க்கிறே?” தங்கவேலு கேட்க

“நம்ம...சின்ன முதலாளி......கோகுல்...” திணறினான்.

“அதே மாதிரி இருக்காரல்ல?...அதான்...அதுக்குத்தான் நம்ம முதலாளிகிட்டக் கூட்டிட்டு வந்தேன்” என்றவாறே தங்கவேலு வீட்டினுள் செல்ல பின் தொடர்ந்தான் முரளி.

போர்ட்டிகோவைக் கடக்கும் போது அங்கு நின்றிருந்த நீ.......ளமான காரையும் முன்புற ஹாலுக்குள் நுழைந்ததும் அங்கு காணப்பட்ட அலங்கார வேலைப்பாடுகளையும் வைத்த கண் வாங்காமல் பார்த்தான் முரளி. “அடேங்கப்பா...இந்த மாதிரி வீட்டை நான் சினிமாவுலதான் பார்த்திருக்கேன்” என்றான் சன்னக் குரலில் தங்கவேலுவிடம்.

அப்போது மாடிப்படிகளில் இறங்கி வந்த கே.பி.எஸ்.டிரான்ஸ்போர்ட் முதலாளி சிங்கமுத்து வரும் போதே முரளியைப் பார்த்து விட்டு பிரகாச முகத்தோடு வேகவேகமாய் இறங்கி வந்தார். அவர் கண்களில் பாசம் பொங்கியது. உதடுகள் துடித்தன.

வந்தவர் முரளியின் அருகில் வந்து நின்று “கோ...கு...ல்! கோகுல்” என்று தழுதழுத்த குரலில் அழைத்தவாறே அவன் தோளைத் தொட்டார்.

“முதலாளி!....இந்தத் தம்பி நம்ம கோகுல் இல்லைங்க முதலாளி!.....இவன் பேரு முரளி!...அந்த சூடாமணி ரைஸ் மில்லுக்கு லோடு அடிக்கப் போயிருந்தப்ப இவனை அங்கு பார்த்தேன்!...பார்த்ததுமே உங்களை மாதிரித்தான் நானும் அசந்து போயிட்டேன்!...இந்த தம்பி அந்த ரைஸ் மில்லுல ரொம்பக் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டிருந்ததைப் பார்த்து...நான்தான்...கோயமுத்தூர் வரச் சொன்னேன்” என்றார் தங்கவேலு.

“ஓ...ஆமாம்!...ஆமாம்!...நம்ம கோகுல்தான் பல வருஷத்துக்கு முன்னாடியே போய்ச் சேர்ந்திட்டானே?” என்று கண்களில் கண்ணீரோடு சொன்ன அந்த முதலாளி சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தன் மகனின் பிரம்மாண்ட சைஸ் போட்டோவை கூர்ந்து பார்த்து கேவினார்.

அப்போது வீட்டின் பின் புறமிருந்து உள்ளே வந்த முதலாளியின் மனைவி ஜெகதாம்பாள் முரளியைப் பார்த்ததும் ஓடோடி வந்து கட்டிக் கொண்டு கதறினாள் “கோகுல்...திரும்பி வந்திட்டியா?...என் ராசா!...எங்களை விட்டுட்டு இத்தனை நாளு...எங்கேடா போனே?...உன்னைப் பார்க்காம நான் எப்படித தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா?”

நிதானமாய் அவளருகில் வந்து “ஜெகதா...இவன் நம்ம மகன் கோகுல் இல்லை!...வேற பையன்...முரளி” என்றார் டிரான்ஸ்போர்ட் முதலாளி.

“இல்லை...இவன் என் மகன் கோகுல்தான்!...அவன் என்னிக்காவது ஒரு நாள் திரும்பி வருவான்!னு எனக்குத் தெரியும்!...இனி இவனை நான் எங்கேயும் போக விட மாட்டேன்!...விடவே மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டே முரளியை இறுகக் கட்டிக் கொண்டாள் அந்த ஜெகதாம்பாள்.

முரளியோ என்ன செய்வதென்று புரியாமல் நின்றான்.

முதலாளி மீண்டும் அவளிடம் “சரிம்மா...இனி இவன் எங்கேயும் போக மாட்டான்!...இங்கேயே இருப்பான்!...போதுமா?” என்றார்.

அவள் “கல...கல”வென்று சிரித்து விட்டு “என் மகனுக்கு இப்போதே நான் சோறு ஊட்டுவேன்” என்று சொல்லி விட்டு முரளியை சோபாவில் அமர வைத்து விட்டு தானே சமையல்கட்டிற்கு ஓடிப் போய் ஒரு தட்டில் இட்லி எடுத்து வந்தாள்.

முரளி அப்பாவியாய் தங்கவேலுவையும் முதலாளியையும் பார்க்க, இருவரும் “ம்...சாப்பிடு” என்று சன்னக் குரலில் சொல்ல

அந்தப் பெண் ஊட்டுவதை வாயில் வாங்கிக் கொண்டான்.

தங்கவேலுவைத் தனியே அழைத்து போர்ட்டிகோ நோக்கிச் சென்ற முதலாளி “இந்தப் பையனோட குடும்பம்?” கேட்டார்.

“அம்மாவும் ஒரு தங்கச்சியும் மட்டும்தான்...இப்ப அவங்க எங்க வீட்டுல இருக்காங்க!” என்றார் தங்கவேலு.

“ம்ம்ம்...பயல் படிச்ச பயல் தானே?”

“ஆமாங்க முதலாளி!...சூடாமணி ரைஸ் மில்லுக கணக்கு வழக்கு பார்த்திட்டிருந்தவன்தான்”

“அப்ப சரி...நம்ம கோயமுத்தூர் பிராஞ்ச்ல அக்கௌண்டெண்டா போட்டுடலாம்!...”என்றவர் திரும்பி ஹாலுக்குள் பார்த்து விட்டு, “என் மனைவி முகத்துல இத்தனை வருஷம் கழிச்சு இன்னிக்குத்தான் சந்தோஷத்தைப் பார்க்கிறேன்!... இது நீடிக்கணும்!ன்னா...அந்தப் பையனை அவ பார்த்துக்கிட்டே இருக்கணும்!...பேசாம அந்தப் பையனை குடும்பத்தோட வந்து நம்ம பங்களாவுக்குப் பின்னாடி இருக்கா அவுட்ஹவுஸில் தங்கச் சொல்லிடலாமே?”

“தாராளமாய் தங்க வெச்சிடலாம் முதலாளி!...நானே அவங்களுக்கு ஒரு வீடு பிடிக்கணும்!னுதான் யோசிச்சிட்டிருந்தேன் இப்ப அதுவும் சுலபமாயிடுச்சு” என்றார் தங்கவேலு.

“அப்ப...அந்தப் பையனை இங்க கூப்பிடு நான் பேசிடறேன்” என்றார் முதலாளி சிங்கமுத்து.

வீட்டிற்குள் திரும்பிய தங்கவேலு “முரளி...கொஞ்சம் இங்க வாப்பா...அய்யா ஏதோ சொல்லணும்கறார்” என்றார்.

முரளி வர அவன் பின்னாலேயே அந்த ஜெகதாம்பாளும் வந்தாள். “எதுக்கு...எதுக்கு என் பையனைத் தனியா கூப்பிடறீங்க?”. சிங்கமுத்துவைப் பார்த்துக் கேட்டாள்.

“அது வந்து...ஒண்ணுமில்லை ஜெகதா...” என்று சொல்லி அவளை நெருங்கி வந்து அவள் தாடையைத் தொட்டுத் தூக்கிய சிங்கமுத்து “அம்மாடி...உண்மையில் இந்தப் பையன்...நம்ம பையன் இல்லை!....நம்ம மகன் மாதிரியே இருக்கற வேறொரு பையன்” என்று சொல்ல

திரும்பி முரளியைக் கூர்ந்து பார்த்த ஜெகதாம்பாள் “இல்லை இவன் என் மகன்தான்...அதனால் என்னைத் தேடி வந்திருக்கான்” என்றாள்.

“சரிம்மா...இவன் இனி மேல் இங்கியே நம்ம வீட்டுப் பின்னாடி இருக்கற அவுட் ஹவுஸ்ல இருப்பான்...நீ இவனை நம்ம மகனாகவே நெனச்சுக்கோ...போதுமா?” என்றார்.

“என்னப்பா...முரளி...சரிதானே?” முரளியைப் பார்த்துக் கேட்டார்.

அவன் “சரி”யென்று தலையசைக்க “ம்ஹூம்....அதெல்லாம் முடியாது...நீ இந்த வீட்டுல என் கூடத்தான் இருக்கணும்” என்றாள் ஜெகதாம்பாள்.

சூழ்நிலையைப் புரிந்து கொண்ட முரளி “அய்யா...அம்மா சொல்வது போல் நான் இந்த வீட்டிலேயே இருக்கிறேன்” என்றான்.

“அப்படிச் சொல்லுடா என் ராசாக்குட்டி” என்று சொல்லி அவன் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள் ஜெகதாம்பாள்.

“சரி ஜெகதா...நீ போய் நம்ம பையனுக்கு மதிய உணவு தயார் பண்ணு!...நான் அவன் கூடப் பேசிட்டிருக்கேன்” என்று சொல்லி அவளை சமையலறைக்கு அனுப்பினார் சிங்கமுத்து. அவளும் “ஹய்யா...நான் என் பையனுக்கு என் கையாலேயே சமைச்சுப் போடப் போறேன்” என்று சொல்லிக் கொண்டு சந்தோஷமாய் ஓடினாள்.

(தொடரும்)​
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Dr.பொன் கௌசல்யா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பரவாயில்லை
முரளிக்கு கோயம்புத்தூரில் வளமான எதிர்காலம் காத்திருக்கு போலவே
ஜெகதா பாவம்
ஒரே பிள்ளை இல்லைன்னா கஷ்டமாத்தானே இருக்கும்
 

தரணி

Well-Known Member
பிரிவு பாத்து ஊரு விட்ட அனுப்பினங்அ ஆனா இங்க பெரிய வீட்டுக்கு வாரிசான மாதிரி இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top