யாருமிங்கு அனாதையில்லை - 18

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!” - 18
(நாவல்)
(டாக்டர்.பொன்.கௌசல்யா)

அத்தியாயம் :18​

“சூடாமணி ரைஸ் மில்” கேட்டினுள் தனசேகரின் தந்தை பொன்னுரங்கத்தின் கார் நுழைந்து உள்ளேயிருந்த ஒரு மரத்தடியில் நின்றது. அதனுள்ளிருந்து இறங்கிய பொன்னுரங்கமும் சுந்தரியும் நேரே அலுவலகம் என்று போர்டு வைத்திருந்த அந்தப் பகுதிக்குச் சென்றனர்.

அலுவலக மேனேஜர் சுந்தரம் தூரத்தில் வரும் போதே அவர்களை அடையாளம் கண்டு கொண்டு வேக வேகமா அவர்களை நோக்கி ஓட்டமும் நடையுமாய் வந்தார்.

“அய்யா வாங்க!...அம்மா வாங்க” என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்றார்.

“என்னப்பா...உங்க முதலாளி ராஜய்யா இருக்காரா?” பொன்னுரங்கம் நடந்தவாறே கேட்டார்.

“ம்...இருக்காருங்க அய்யா!...உள்ளார குடோன் பக்கம் போயிருக்கார்!...நீங்க அவரோட ரூம்ல உட்காருங்க அய்யா...நான் போய் தகவல் சொல்லி அவரைவரச் சொல்றேன்” என்று சொல்லி விட்டு அவர்களுக்கு முதலாளியின் அறை இருக்குமிடத்தைக் காட்டி விட்டு குடோனை நோக்கி ஓடினார் மேனேஜர்.
முதலாளி அறை என்பது படோடோபமாக இல்லாமல் படு சாதாரணமாயிருந்தது.

அங்கிருந்த ஒரு மேஜைக்கு எதிரேயிருந்த மர நாற்காலிகளில் அமர்ந்து காத்திருந்தனர் பொன்னுரங்கமும் சுந்தரியும்.

சரியாக ஐந்தாவது நிமிடம் அந்த அறைக்குள் வந்த ரைஸ் மில் முதலாளி ராஜய்யா வரும் போதே “வாங்க பொன்னுரங்கம் அய்யா...வாங்க!...வாங்க” என்று உரக்கச் சொல்லிக் கொண்டே வந்தார்.

தன் இருக்கையில் அமர்ந்தவர் சுந்தரியைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு “கேள்விப்பட்டேன்...மகனுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கீங்க!ன்னு...ரொம்ப சந்தோஷம்!...அதை விட சந்தோஷம் எனக்கு பத்திரிக்கை வைக்க நீங்க ரெண்டு பேரும் நேரில் வந்தது” என்றார்.

“ஒரு சின்ன திருத்தம்...உங்களுக்கான பத்திரிக்கையை நாங்க உங்க வீடு தேடி வந்து வைப்போமே தவிர...இப்படி மில்லுல வந்து வைக்க மாட்டோம்!...அது மரியாதை இல்லை...தவிர உங்க வீட்டுக்காரம்மாவையும் நேரில் பார்த்து அழைப்பதுதானே முறை” என்றாள் சுந்தரி.

அதைக் கேட்டு “ஹா...ஹா...ஹா”வென உரக்கச் சிரித்த ராஜய்யா “சொல்லுங்க வேற என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?” பட்டென்று கேட்டார்.

“வந்து...உங்க ரைஸ் மில்லுல...முரளின்னு ஒரு பையன் வேலை பார்க்கிறானா?” சுந்தரி கேட்டாள்.

“ஆமாம்...கணக்கு வழக்கு பார்த்திட்டிருக்கான்!...ஏன் அவனுக்கென்ன?...ஏதாவது தப்பு தண்டா பண்ணிட்டானா?” ராஜய்யா கேட்க

“சேச்சே...அப்படியெதுவும் இல்லை!...நாங்க அவன் கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்று பொன்னுரங்கம் சொன்னதும் ஆச்சரியமானார் அந்த ராஜய்யன் “என்னங்க அய்யா...நீங்க எவ்வளவு பெரிய மனிதர்...நீங்க போய் அந்தப் பையனைப் பார்ப்பதற்காக நேரில் வந்து...அனுமதி கேட்டுக்கிட்டு...நீங்க வீட்டுக்குப் போங்க...நான் அந்தப் பையனை உங்க வீட்டுக்கு வரச் சொல்றேன்” என்றார்.

“இல்லை...சில விஷயங்களை நாங்க வீட்டுல வெச்சுப் பேச முடியாது!...அதான் இங்க வந்தோம்” என்றாள் சுந்தரி.

“எனக்கு ரொம்பவே வியப்பா இருக்குங்க அய்யா!...அவனொரு தாழ்ந்த சாதிப் பையன்...அவனைப் போய் ஒரு பெரிய மனுஷனா மதிச்சு...நீங்க வந்து.!...ம்ஹ்ஹும்...ஒண்ணும் புரியலை” என்ற ராஜய்யன் அறையின் வாசலைப் பார்த்து “இந்தாப்பா...முருகு...அந்த முரளிப் பையனை வரச் சொல்லுப்பா” என்றார்.

வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவர் உள்ளே ஓட “நாங்க அவன் கூட கொஞ்சம் தனியா பேசணும்!...இங்க அது மாதிரியான அறை எதாவது இருக்கா?”பொன்னுரங்கம் கேட்டார்.

“ஏன் இல்லாமல்?...வேலையாளுங்க உட்கார்ந்து சாப்பிடற சாப்பாட்டுக் கூடம் இப்ப...சும்மாத்தான் இருக்கும்!...அங்க கூட்டிட்டுப் போய் பேசுங்க” என்ற ராஜய்யா “ஏதாவது பிரச்சினையா?...சொல்லுங்க அப்படி ஏதாச்சும் இருந்தா...பயலை கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிடறேன்!” சொன்னார்.

“சேச்சே...அந்த அளவுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை” என்றார்.

பத்து நிமிடத்தில் அந்த அறைக்குள் வந்த முரளி பொன்னுரங்கத்தையும் சுந்தரியையும் பார்த்துக் குழப்பமானான். “சேகரோட...அப்பாவும் அம்மாவும் எதுக்கு இங்க வந்திருக்காங்க?...”

“இந்தாப்பா...முரளி...இவங்க உன்கிட்ட ஏதோ பேசணுமாம்...அப்படியே சாப்பாட்டுக் கூடத்துக்குக் கூட்டிட்டுப் போய் அங்க பேசிட்டு வாங்க!” என்று ஆணையிடும் தொணியில் ராஜய்யா சொல்ல “சரிங்க முதலாளி” என்றபடி அந்த அறையிலிருந்து வெளியேறி சாப்பாட்டுக் கூடம் நோக்கி நடந்தான் முரளி.

போகும் வழியெங்கும் அவன் சிந்தனை தாறுமாறாய் ஓடியது. “என்கிட்டப் பேச இவங்களுக்கு என்ன இருக்கு?...ஒருவேளை பொண்ணு வீட்டுப் பக்கமிருந்து ஏதாச்சும் கம்ப்ளைண்ட் வந்திருக்குமோ?”

சாப்பாட்டுக் கூடத்தின் முகப்பிலிருந்த ஒரு மேஜையைக் காட்டி அதில் தனசேகரின் அம்மாவையும் அப்பாவையும் அமரச் சொன்ன முரளி, அவர்கள் எதிரில் தான் உட்காராமல் தள்ளி நின்று கொண்டான்.

அவர்களும் அவனை உட்காரச் சொல்லவில்லை.

“தம்பி...நான் சுற்றி வளைச்சு பேச விரும்பலை...நேராவே விஷயத்துக்கு வர்றேன்!...உன்னோட சிநேகிதனோட வருங்கால மாமனார் வீட்டுக்கு அவன் கூட நீயும் போனியா?” பொன்னுரங்கம் கேட்டார்.

“நான் “மாட்டேன்”னுதான் சொன்னேன்!...ஆனா தனசேகர் வற்புறுத்திக் கூப்பிட்டதால்...வேற வழியில்லாமல் போனேன்!” என்றான் முரளி.

“சரி...அது பரவாயில்லை!...அங்க போயி உள்ளார..அந்த ராமலிங்க பூபதிக்கு எதிர்ல நாற்காலில உட்கார்ந்தியா?” பொன்னுரங்கத்தின் முகத்தில் கடுமை தென்பட்டது.

முரளி வாயைத் திறந்து பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

“முரளித் தம்பி...அவங்க குடும்பமெல்லாம் நம்ம குடும்பம் மாதிரி...வர்ண பேதம் பார்க்காம...ஒண்ணுமண்ணாப் பழகி......விட்டுக் குடுத்துப் போற குடும்பமில்லை!...இன்னமும் பழைய காலம் மாதிரியே மேல் வர்க்கத் திமிரோட இருக்கற குடும்பம்!...என் மகன் அப்படிப்பட்ட ஒரு வீட்டுக்குத்தான் மாப்பிள்ளையாஇ போறான்!...அதனால....”என்று பொன்னுரங்கம் நிறுத்த

“அதனால...?”

“இனிமேல்..என் மகன் கூடப் பேசறதை....பழகறதை நிறுத்திக்கோ...!...அதுதான் அவனோட எதிர்காலத்துக்கும் நல்லது!...உன்னோட எதிர்காலத்துக்கும் நல்லது!”சுந்தரி சொல்லி முடித்தாள்.

சில நிமிடங்கள் தரையையே நிலைக்குத்திப் பார்த்தபடி நின்ற முரளி, கரகரத்த குரலில் சொன்னான். “அய்யா... “சாப்பிடறதை நிறுத்திக்கோ....தூங்கறதை நிறுத்திக்கோ...அவ்வளவு ஏன்?....மூச்சு விடறதை நிறுத்திக்கோ”ன்னு கூடச் சொல்லுங்க!...தாராளமா செய்யறேன்!...ஆனா... “தனசேகர் கூடப் பேசாம...பழகாம இரு!”ன்னு மட்டும் சொல்லாதீங்க அய்யா!...அது என்னாலும் முடியாது!...அவனாலும் முடியாதுங்க அய்யா!...நாங்க ரெண்டு பேருமே செத்துப் போனதுக்கு சமம் அய்யா அது”

“புரியுது தம்பி...நீயும் அவனும்...இன்னிக்கு நேத்து பழகின சிநேகிதனுக இல்லை!...கிட்டத்தட்ட இருபத்தி அஞ்சு வருஷமா உசுருக்கு உசுரா பழகினவங்க!னு தெரியும் தம்பி!...நெஞ்சைத் தொட்டுச் சொல்லு....உன்னால...உன் சிநேகத்தினால... அவனுக்கு அமையப் போற ஒரு நல்ல வாழ்க்கை கெட்டுப் போகுது!ன்னா அதை நீ ஏத்துக்குவியா?” சுந்தரி மனதைக் கரைய வைக்கும் முகமாய்ப் பேசினாள்.

“அய்யோ...அவன் எப்பவும் நல்லா இருக்கணும்!..ராஜாவாட்டம் இருக்கணும்!ன்னுதான் நான் நெனைப்பேன்!....அதுதான் என் ஆசை...என் லட்சியம்”

“ஆனா...அந்த ராமலிங்க பூபதி வீட்டில் இருப்பவர்கள் அப்படி நினைக்கலையே தம்பி!...உன் கூட எங்க மகன் பழகறான் என்கிற காரணத்தினாலேயே அவங்க இந்தக் கல்யாணத்தை நிறுத்திடக் கூடத் தயாரா இருக்காங்க” பொய்யை அள்ளி வீசினாள் சுந்தரி.

சட்டென்று கையை நெஞ்சில் வைத்த முரளி “அடக் கஷ்ட காலமே!...அப்படி ம்ட்டும் ஏதாச்சும் செஞ்சிட்டாங்கன்னா...தனசேகர் தாங்க மாட்டான் அம்மா!...அவன் அந்தப் பொண்ணு மேல் ரொம்ப ஆசை வெச்சிருக்கான்!...” என்று சொல்ல

“அப்ப....நீ விலகிப் போயிடறதுதான் நல்லதுப்பா!...நீ தப்பா நினைக்கலேன்னா...நான் ஒண்ணு சொல்றேன்!....என் மகனோட இத்தனை வருஷம் பழகின காரணத்துக்காக....உனக்கு நான் ஒரு தொகை தர்றேன் வாங்கிட்டு...குடும்பத்தோட இந்த ஊரை விட்டுப் போய்...வேற ஏதாவது ஒரு ஊர்ல ஏதாச்சும் கடைகிடை வெச்சுப் பொழைச்சிக்கோ...என்ன?” நைஸாக அந்தப் பொறியை வைத்தார் பொன்னுரங்கம்.

“அய்யா...தனசேகரோட நன்மைக்காக நான் எது வேணாலும் செய்யத் தயாராயிருக்கேன்!..இந்த உயிரைக் கூட கொடுக்கத் தயாராயிருக்கேன்!...ஆனா..இனிமேல் அவனைப் பார்க்காம....பேசாம...இருக்கணும்!கறதை....நினைச்சுப் பார்க்கவே பயமாயிருக்குங்க அய்யா”. தழுதழுத்த குரலில் சொன்னான் முரளி.

“வேற வழியில்லைப்பா...சில நன்மைகளுக்காக...சில விஷயங்களை...நம்ம மனசு ஏத்துக்காமல் போனாலும்...செஞ்சுதான் தீரணும்!” என்று சொல்லியவாறே முரளியின் அருகில் வந்து, அவன் கையில் பணக்கட்டைத் திணித்தார் பொன்னுரங்கம்.

அதை வாங்க மறுத்து விட்டு உடனே எழுந்த முரளி “அய்யா...நீங்க கவலைப்படாம போங்க!...இன்னிக்கு ராத்திரியே நானும் என் அம்மாவும் தங்கையும் இந்த ஊரை விட்டே போயிடறோம்!...” என்று சொல்லி விட்டு நகர,

“தம்பி...தயங்காம அய்யா குடுக்கற பணத்தையும் வாங்கிங்கப்பா...நிச்சயம் அது உங்களுக்கு உதவும்” என்றாள் சுந்தரி.

“இல்லைங்க அம்மா!...நீங்க குடுக்கற இந்தப் பணம்...நானும் தனசேகரும் இருபத்திஅஞ்சு வருஷமா வெச்சிருந்த நட்புக்கு நீங்க நிர்ணயிச்சிருக்கற விலை!...ஹும்...விலை குடுத்து வாங்க எங்க நட்பு...வெறும் பொருளில்லை அம்மா!...அது...எங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கற பரஸ்பர பக்தி!...”

விழியோரம் பீறிட்டுக் கிளம்பிய கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, வேக வேகமாய் வெளியேறினான் முரளி.

அன்று மதியத்திலிருந்தே வீட்டிலுள்ள மேஜை பீரோ அலமாரிகள் நாற்காலிகள் போன்ற பெரிய பொருட்களையெல்லாம் ஒரு வண்டி பிடித்து அதிலேற்றி....அடுத்த தெருவிலிருக்கும் பழைய பொருட்கள் வாங்கும் கடையில் கொண்டு போய்க் கொடுத்து விட்டு கடைக்காரன் கொடுத்த தொகையை மறு பேச்சின்றி வாங்கிக் கொண்டு வந்தான் முரளி.

“டேய்...முரளி...என்னடா பண்றே?...ஏன் வீட்டு சாமான்களையெல்லாம் கொண்டு போய் விற்கிறே?...என்னாச்சு உனக்கு?” அவன் தாய் ராக்கம்மா கேட்க

“அம்மா...இன்னிக்கு ராத்திரி ரயில்ல நாம இந்த ஊரை விட்டே கிளம்பப் போறோம்...” என்றான் அதிரடியாய்.

விக்கித்து நின்றாள் ராக்கம்மா. அவள் கை அவளையுமறியாமல் நெஞ்சைத் தொட்டது..

“டேய்...என்னடா சொல்றே?...காலங்காலமா...உங்க அப்பன்...தாத்தன்...பாட்டன்...பூட்டன்...எல்லோரும் பொழைச்ச ஊருடா இது!...இதை விட்டுப் போறதுன்னா...எப்படிடா?...நமக்கு வெளி உலகத்துல யாரைடா தெரியும்?...எங்க போயி...என்ன பண்ணப் போறோம்?” அச்சத்தோடு கேட்டாள்.

“அம்மா... “ஒரு கிணற்றுக்குள் உட்கார்ந்து வானத்தைப் பார்த்தா...அந்தக் கிணற்றோட சுற்றளவுக்குத்தான் வானம் தெரியும்!...அந்தக் கிணத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால்தான் விரிந்த வானம் மொத்தமும் தெரியும்!”...நாம இத்தனை நாளா கிணற்றுக்குள்ளார உட்கார்ந்திட்டிருந்தோம்...இனி வெளிய போயி பெரிய உலகத்தைப் பார்ப்போம்” என்றான்.

அவனுடன் மேற் கொண்டு பேச இயலாதவளாய் ராக்கம்மா வாயடைத்து நிற்க, முரளியின் தங்கை வசந்தி அவனருகில் வந்து “அண்ணா...இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்?ன்னு தெரிஞ்சுக்கலாமா?” நாசூக்காய்க் கேட்டாள்.

தங்கை கேட்ட தன்மையான முறையும் தன் நெஞ்சின் பாரத்தை யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் என்று காத்திருந்த தன் மனநிலையும் அவனைப் பேச வைக்க தனசேகருடனான தன் நட்பு அவன் திருமணத்தையே பாதித்து விடும் என்கிற நிலைக்குப் போய் விட்டதைச் சொன்னான்.

“நீ அந்தக் கல்யாணத்துக்குப் போறதுதான் பிரச்சினைக்கு காரணம்ன்னா...கல்யாணத்துக்குப் போகாம இருந்திடு!...அவன் கூடப் பேசிப் பழகறதுதான் பிரச்சினைக்குக் காரணம்ன்னா...அதையும் நிறுத்திடு!...இதுக்காக நாம ஊரை விட்டுப் போகணும்!னு என்னண்ணா அவசியம்?” தங்கை வசந்தி கேட்டாள்.

“அம்மா...எங்களோட இருபத்தி அஞ்சு வருஷ நட்பு வஜ்ரம் மாதிரியான நட்பும்மா...!...எங்க ரெண்டு பேராலும் அதை விட்டு விட முடியாது!...நான் அவன் கல்யாணத்துப் போகாம இருந்தா அவன் விட்டுடுவானா?..மண மேடையிலிருந்து இறங்கி நேரா நம்ம வீட்டுக்கு வந்திடுவான்!...நான் மண்டபத்துக்கு வந்தால்தான் தாலியே கட்டுவேன்!னு அடம்பிடிப்பான்!” என்றான்.

அமைதியாய் மகன் சொல்வதைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த ராக்கம்மா திடீரென்று கேட்டாள் “டேய்...முரளி!...எனக்கொரு சந்தேகம்!...இது சம்மந்தமா உன் கிட்ட அந்தப் பையனோட அம்மாவோ...அப்பாவோ மிரட்டினாங்களா?”

“ம்...ரெண்டு பேருமே நான் வேலை பார்க்கும் இடத்துக்கு வந்தாங்க!...ஆனா “மிரட்டலை!”...ரொம்பப் பணிவாய்த்தான் பேசினாங்க!...தங்கள் மகனோட எதிர்கால வாழ்க்கையே என்னால் கெட்டுப் போயிடுமோ?னு நெனச்சு என்கிட்ட கெஞ்சினாங்க!...எனக்கு அவங்களைப் பார்க்கவே பாவமாயிருந்திச்சு!...என்னால் ஒரு வயோதிகத் தம்பதிகளுக்கு மனக் கஷ்டம் என்கிற போது...எனக்கு வேற வழி தெரியலை!” என்றான் முரளி.

“ஓ...அவங்கதான் உன்னை “ஊரை விட்டுக் காலி பண்ணிட்டுப் போ”ன்னு சொன்னாங்களா?” ராக்கம்மாவின் குரலில் இப்போது லேசாய்க் கோபம் தெரிந்தது.

“ம்ம்ம்...ஆமாம்!...ஒரு தொகை கூடத் தந்தாங்க...“போயி ஏதாவதொரு ஊர்ல கடைகிடை வெச்சுப் பொழைச்சுக்க!”ன்னு சொல்லி!...நான் வாங்கலை!...எனக்கென்னமோ அந்தப் பணம் எங்க ரெண்டு பேரோட நட்புக்கான விலை மாதிரி தெரிஞ்சுது...அதனால வேண்டாம்!னுட்டேன்” என்றான்.

மகனை நெருங்கி வந்து அவன் தோளைத் தொட்டு “உன்னை நெனச்சு ரொம்ப பெருமைப்படறேண்டா!...உன்னோட அப்பனும் தாத்தனும் பிறப்புல கீழ் சாதியாய் இருந்தாலும்...குணத்திலேயும்...பழக்க வழக்கத்திலேயும்...ரொம்ப உயர்ந்தவங்களாய்த்தான் இந்த ஊர்ல வாழ்ந்து வந்தாங்க!...நீயும் அவங்க வம்சம்ன்னு நிரூபிச்சிட்டே!...சரிப்பா...நாம புறப்படலாம்!...இதுக்கு மேலேயும் இந்த ஊர்ல இருந்தா...வீண் பிரச்சினைகள் உருவாகும்!ன்னு உன் பேச்சிலிருந்தே தெரியுது!” என்றாள் ராக்கம்மா.

“அது செரி...எங்கே போறது?ன்னு முடிவு பண்ணி வெச்சிருக்கியா?” வசந்தி கேட்டாள்.

“போன மாசம் எங்க ரைஸ் மில்லுக்கு வந்திருந்த ஒரு லாரி டிரைவர்...அவங்க டிரான்ஸ்போர்ட் ஆபீஸோட கோயமுத்தூர் பிராஞ்ச்ல ரைட்டர் வேலைக்கு ஆள் தேவையிருக்காம்!... “உடனே வந்தா உடனே சேர்ந்திடலாம்!”னு சொன்னார்!...” என்ற முரளி தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து அந்த விசிட்டிங் கார்டை எடுத்துக் காட்டி “இதோ விசிட்டிங் கார்டு கூடக் குடுத்திட்டுப் போயிருக்கார்!....அங்க போய் அவரைப் பார்த்தா வேலையும் கிடைச்சிடும்...அவர் மூலமாகவே ஒரு வீடும் பார்த்துக்கலாம்” என்றான்.

இருந்த பொருட்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் கழித்து விட்டு துணிமணிகளையும் சில முக்கியமான பொருட்களையும் மட்டும் பெரிய பெரிய பைகளில் அடைத்துக் கொண்டு ஆளுக்கு இரண்டு பைகளாகத் தூக்கிக் கொண்டு, இரவு பத்தரை மணி ரயிலைப் பிடிக்க ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்தனர்.

“மணி என்னாச்சுப்பா?” ராக்கம்மா கேட்க

“பத்து...பத்து” என்றான் முரளி.

“பத்தரைக்குத்தான் ரயில் வரும்!...வாங்க அந்த சிமெண்டு பெஞ்சில் உட்காருவோம்” என்ற ராக்கம்மா தன்னுடைய இரண்டு பைகளையும் தூக்கிக் கொண்டு சிமெண்டு பெஞ்சை நோக்கி நடந்தாள்.

முரளியும் அவன் தங்கையும் உடன் நடந்தனர்.

சொந்த மண்ணைப் பிரியும் சோகம் ராக்காம்மாவின் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

யாருமே வராத அந்த ரயில் நிலையத்தில் யாரோ சிலர் ரயிலுக்காகக் காத்திருப்பதை தூரத்திலிருந்து கவனித்த ஸ்டேஷன் மாஸ்டர் அவர்களை நோக்கி நடந்து வந்தார். அருகில் வந்ததும் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு “என்னப்பா முரளித் தம்பி...மூணு பேருமா எங்க கிளம்பிட்டீங்க?...உறவுக்காரர்கள் வீட்டு விசேஷமா?” கேட்டாள்.

எழுந்து அவரருகே சென்று நின்ற முரளி “இல்லை சார்!...நாங்க...நாங்க...இந்த ஊரை விட்டே போறோம் சார்!” என்றான்.

அதைக் கேட்டு அதிர்ந்து போன ஸ்டேஷன் மாஸ்டர் “ஏன்?..என்ன பிரச்சினை?” அக்கறையோடு கேட்டார்.

“அது...வந்து...எனக்கு வெளியூர்ல வேலை கிடைச்சிருக்கு!...அதான் கிளம்பிட்டோம்” என்றான். பொய் சரளமாய் வந்தது.

“அப்படியா?...சந்தோஷம்!...எந்த ஊரு?”

“திருச்சி” சற்றும் யோசிக்காமல் அடுத்த பொய்யையும் சொன்னான்.

“சரி...பார்த்து பத்திரமா போங்க!..இன்னும் அஞ்சு நிமிஷத்துல வண்டி வந்திடும்” சொல்லி விட்டு ஸ்டேஷன் மாஸ்டர் சென்றதும் ராக்கம்மா மகனிடம் கேட்டாள் “முரளி...ஏம்பா...அவர் கிட்ட பொய் சொன்னே?”

“இல்லைம்மா...நிச்சயம் என்னைத் தேடி தனசேகர் நம்ம வீட்டுக்குப் போவான்!...வீடு பூட்டிக் கிடப்பதைப் பார்த்து அக்கம் பக்கத்துல விசாரிப்பான்!...அவங்க “நாம ஊரை விட்டே போயிட்டோம்”னு சொன்னா...நேரா இந்த ரயில்வே ஸ்டேஷனுக்குத்தான் வருவான்!...வந்து ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட விசாரிப்பான்!..அவர் ஊரைச் சொன்னதும்...நேரா அங்க கிளம்பி வந்திடுவான்!...அதான் பொய் சொன்னேன்!” என்றான் முரளி.

அப்போது தூரத்தில் ரயிலின் ஹெட் லைட் வெளிச்சம் தெரிய எல்லோரும் தயாராயினர்.

(தொடரும்)​
 

Saroja

Well-Known Member
அடப்பாவிங்களா ஒரு குடும்பத்த
ஊரைவிட்டு துரத்திட்டாங்களே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top