யாருமிங்கு அனாதையில்லை - 17

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!” - 17
(நாவல்)
(டாக்டர்.பொன்.கௌசல்யா)

அத்தியாயம் :17


“டேய் முரளி...புறாவெல்லாம் கீழே...அந்த பாறைக இடுக்குலதான் இருக்கும்!...அந்த இடத்துக்கு நாம போக முடியாது...அதனால இங்கிருந்தே பாறைக மேலே கல்லெறியலாம்...அப்ப புறாக்கள் வெளிய வரும்...பிடிச்சுடலாம்” என்றான் தனசேகர்.

“சரிடா!” என்ற முரளி “ஆனா...பிடிக்கும் போது ஜாக்கிரதையா பிடிக்கணும்டா!...கொஞ்சம் ஏமாந்தாலும் கீழே விழுந்திடுவோம்....” என்றான் கீழே பார்த்துக்கொண்டே

“கிணத்துல சுத்தமா ஒரு சொட்டுத் தண்ணி கூட இல்லை போலிருக்கு!...சேறுதான் கண்ணுக்குத் தெரியுது” என்றான் தனசேகர்.

“சேறுதான் ஆனா....ரொம்ப ஆழம்...நாம விழுந்தோம்..அப்படியே உள்ளார போயிடுவோம்”

இருவரும் அவ்வப்போது தாங்கள் கொண்டு வந்திருந்த சிறிய கற்களை பாறை இடுக்குகளை நோக்கி எறிந்து கொண்டேயிருந்தனர்.

நீண்ட நேரமாகியும் ஒரு புறா கூட வெளியில் வரவில்லை.

“என்னடா இது...ஒண்ணு கூட வெளிய வர மாட்டேங்குது” சலித்துக் கொண்டு சொன்னான் தனசேகர்.

அப்போது ஏதோ ஒரு பாறை இடுக்கிலிருந்து வெளிவந்த ஒரு பெரிய சைஸ் ஆந்தையொன்று “பட...பட”வென்று இறக்கையடித்துக் கொண்டு இலக்கின்றித் தாறுமாறாய்ப் பறந்து தனசேகரின் முகத்தில் மோதியது. அது இன்னதென்று புரியாமல் அனிச்சையாய் இரு கைகளாலும் முகத்தை மூடினான். கொடியைப் பற்றியிருந்த அவன் பிடி விடுபட்டதும் அப்படியே “தொபீர்”ரென்று கிணற்றுக்குள் விழுந்தான்.

உள்ளே மொத்தமும் சேறாயிருந்ததால் அடி ஏதும் படாமல் தப்பினான். ஆனால் அவனால் அந்த சேற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. இடுப்பளவு சேற்றிலிருந்து வெளியேற கையையும் காலையும் நீச்சலடிப்பது போல் அடித்துப் பார்த்தான். அந்த அதீத அசைவுகளால் மேலும் மேலும் ஆழத்திற்குப் போனானே தவிர மேலே வரவே முடியவில்லை.

வழுக்கலும் எக்கச்சக்கமாய் இருக்க தப்பிக்க வாய்ப்பேயில்லாமல் தவித்தான்.

“டேய்...முரளி...என்னைக் காப்பாற்றுடா...காப்பாற்றுடா” கத்தினான்.

“சேகர்...அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து...ஒரு ஓரத்துக்கு வந்து பாறையைப் பிடிச்சு மேலே வரப் பாருடா” கத்தலாய்ச் சொன்னான் முரளி.

“இல்லைடா!...லேசா அசைஞ்சாலும் கீழே போறேண்டா...ஏதாவது செய்டா...என்னைக் காப்பாற்றுடா!...நான் கொஞ்சம் கொஞ்சமாய் முழுகிட்டிருக்கேண்டா!” அபயக் குரலில் கத்தினான் தனசேகர். அந்தக் குரலில் உயிர்ப்பயம் தெரிந்தது.

தவழ்ந்து தவழந்து மேலே சமதளத்திற்குப் போய் அங்கிருந்து ஊருக்குள் ஓடிப் போய் யாரையாவது கூட்டிக் கொண்டு வரலாமென்றால் அதற்குள் தனசேகர் மொத்தமாய் உள்ளே போய் விடுவான் என்பதைப் புரிந்து கொண்ட முரளி என்ன செய்வதென்றே தெரியாமல் பரிதவித்தான். இங்குமங்கும் ஓடினான்.

“அய்யோ...தனசேகர் என்னால் எதுவுமே செய்ய முடியலைடா” அழுதான்.

சட்டென்று தன் சட்டையைக் கழற்றி அதை இரண்டாய்க் கிழித்து இரண்டு துண்டுகளையும் உருட்டி கயிறு போலாக்கி ஒன்றோடொன்றை முடிச்சிட்டு கீழே விட்டான். ஆனால் அதன் உயரம் போதாது போக சற்றும் யோசிக்காமல் தன் பேண்ட்டையும் கழற்றிக் கிழித்துக் கயிறாக்கினான்.

அக்கயிறு சேற்றில் நின்றிருந்த தனசேகரின் தலைக்கு மேல் தொங்கியதே தவிர அவன் கைகளுக்கு எட்டவில்லை. இனி என்ன செய்யலாம்?..என்று யோசித்த முரளி தான் அம்மணமாய் நின்றாலும் பரவாயில்லை என்றெண்ணி இடுப்பிலிருந்த ஜட்டியையும் பனியனையும் கழற்றி அவற்றையும் கயிறாக்கி இணைத்தான்.

இப்போது அந்தக் கயிற்றின் முனை தனசேகரின் கைக்குக் கிடைத்து விட, இறுகப் பற்றிக் கொண்டான்.

முரளி தன் மொத்த பலத்தையும் கொட்டி அவனை மேலே தூக்கினான்.

ஆனால் அவனை விட தனசேகர் சற்றுப் பருமனானவன் என்றதால் முரளி “சர...சர”வென்று சறுக்கி உள்ளே விழப் போனான். ஆனால், அவன் கை கடைசி விநாடியில் அங்கிருந்த ஒரு பெரிய செடியைப் பற்றிக் கொள்ள உள்ளே விழாமல் தப்பித்தான். அதே நேரம் கொஞ்சமாய் மேலே எழும்பியிருந்த தனசேகர் ”சர்”ரென்று கீழிறங்கி சேற்றில் இன்னும் அதிகமாய் மூழ்கிப் போனான்.

“டேய்...முரளி...எப்படியாவது என்னைக் காப்பாற்றுடா...”அழுதே விட்டான் தனசேகர்.

நண்பனின் கண்ணீரைத் தாங்கிக் கொள்ள முடியாத முரளி மறுபடியும் முயற்சி செய்தான். இம்முறை தன்னுடைய நிர்வாண உடம்பை அந்தப் பெரிய செடிக்குப் பின்புறம் கொண்டு போய் அந்த செடியை தாங்கலாய் வைத்துக் கொண்டு தனசேகரை மேலே தூக்கினான்.

நிதானமாய்...கொஞ்சம் கொஞ்சமாய் மேலே வந்த தனசேகர் “டேய் விட்டுடாதடா...அப்படியே மெல்ல மெல்லத் தூக்குடா” கெஞ்சினான்.

ஒரு கட்டத்தில் கைகளிரண்டும் வலுவிழந்து விட மூச்சு வாங்கினான் முரளி.

பாதியில் தொங்கிய தனசேகர் “இன்னும் கொஞ்சம்தான்...தூக்குடா...தூக்குடா...” பரபரத்தான்.

முரளியின் வயிற்றில் அந்தச் செடி உராய்ந்து உராய்ந்து பெரிய ரத்தக் காயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. முட்செடிகளில் அழுந்தியதில் சின்னச் சின்ன சிராய்ப்புக் காயங்கள் அவன் நிர்வாண உடம்பில் உண்டாயின.

சரியாக இருபத்தி ஐந்தாவது நிமிடம் தனசேகர் கிணற்றின் பாறைப் பகுதிக்கு மேலே மண் பகுதிக்கு வந்து விட தன் காலால் இன்னொரு பெரிய செடியை வளைத்து அவன் கை இருக்கும் பகுதிக்குக் கொண்டு சென்றான் முரளி.

சட்டென்று தனது இன்னொரு கையால் அந்தச் செடியைப் பற்றிய தனசேகர், அதை இழுத்துப் பார்த்தான். அது தன் எடை முழுவதையும் தாங்கும் அளவிற்கு உறுதியாயிருக்க முரளி அனுப்பிய கயிற்றை விட்டு விட்டு இரண்டு கைகளாலும் அந்த செடியைப் பற்றிக் கொண்டு காலால் உந்தி உந்தி தானே மேலே வர முயன்றான்.

செடியின் வேர்ப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாய் பெயர்ந்து வர பாய்ந்து வந்து தனசேகரின் ஒரு கையைப் பற்றினான் முரளி.

இருவரும் ஒரு சேர முயற்சித்ததில் முழுவதுமாய் மேலே வந்திருந்தான் தனசேகர்.

அவன் முன் நிர்வாணமாய் நிற்க வெட்கப்பட்ட முரளி செடி மறைவில் ஒளிய அவன் மனதைப் புரிந்து கொண்ட தனசேகர் முழுவதும் சேறு அப்பியிருந்த தன் சட்டையைக் கழற்றி முரளியிடம் எறிந்தான். அதைப் பிடித்து தன் இடுப்பில் கோவணமாய்க் கட்டிக் கொண்டு வெளியே வந்தான்.

பிறகு இருவரும் நிதானமாய்த் தவழ்ந்து மேலே சமதளத்திற்கு வந்தனர்.

மேலே வந்ததும் முரளியைக் கட்டிக் கொண்டு கதறினான் தனசேகர். “முரளி...நீ மட்டும் இல்லேன்னா...நான் சேத்துல மூழ்கி செத்தே போயிருப்பேன்டா!...இந்த நன்றியை நான் என் உயிருள்ள வரைக்கும் மறக்கவே மாட்டேண்டா!...”

“டேய்..டேய்...ஏண்டா இதுக்குப் போய் இவ்வளவு உணர்ச்சி வசப்படறே?..இது வரைக்கும் நீ எனக்குச் செஞ்ச உதவிகளுக்கு நான் எந்தவொரு கைம்மாறும் செய்ததில்லை!...ஏதோ இந்த வகையிலாவது செய்ய முடிஞ்சதே?ன்னு நான் சந்தோஷப்பட்டுட்டிருக்கேன்!” என்றான் முரளி.

அப்போது முரளியின் அடி வயிற்றைப் பார்த்த தனசேகர் அலறிவிட்டான். முட்செடிகள் ஏகமாகக் கீறி விட்டதில் பெரிய ரத்தக் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

-------​
தன் தலையைச் சிலுப்பி சுய நினைவுக்கு மீண்ட முரளி “யப்பா...இப்ப நெனைச்சா பயமாயிருக்குடா!...அப்ப எப்படி தைரியமாய்ச் செய்தே?ன்னு ஆச்சரியமாயிருக்கு” என்றான்.

“டேய்...முரளி...இந்த விஷயம்...நம்ம ரெண்டு பேரைத் தவிர வேற யாருக்குமே தெரியாது!...அதனாலதான் மத்தவங்கெல்லாம் நம்ம நட்பை வித்தியாசமாய்ப் பார்க்கறாங்க!...நான் ஒண்ணு கேட்கறேன்...அன்னிக்கு மட்டும் நீ பயந்து போய் என்னை அப்படியே சேத்துக்குள்ளார விட்டுட்டு ஓடிப் போயிருதேன்னா...என் கதி என்ன?...என் பொணத்தைக் கூட யாரும் கண்டுபிடிச்சிருக்க முடியாது!” என்ற தனசேகர் “எங்க உன் சட்டையைத் தூக்கி...அடி வயிற்றைக் காட்டு” என்று சொல்ல

“எதுக்குடா?”

“சட்டையைத் தூக்குடா” தனசேகர் சத்தமாய் ஆணையிட்டான்.

தன் சட்டையைத் தூக்கி வயிற்றை முரளி காட்ட பெரிய தழும்பொன்று அவர்களின் நட்பிற்கு அடையாளச் சின்னமாய் பதிந்திருந்தது.

“அட விடுடா...நட்புக்குள்ளே இதெல்லாம் இருந்தால்தான் அது நட்பு...இல்லேன்னா அது நட்பல்ல....துப்பு” என்றான் முரளி.

-------​
அன்று மாலை வீட்டிற்குச் சென்ற தனசேகரை அவன் தாய் சுந்தரி வாசலிலேயே நிறுத்திக் கேட்டாள். “ஏண்டா சேகரு...இன்னிக்கு சம்மந்தி வீட்டுக்குப் போனியா?”

“ஆமாம்” நிற்காமல் பதில் சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் நடந்தவனின் பின்னாடியே வந்த சுந்தரி “எதுக்குப் போனே?” விடாமல் கேட்டாள்.

“ம்ம்ம்...நான் கட்டிக்கப் போற அந்தப் பொண்ணுக்கு பர்ஸனலா ஒரு கல்யாண பத்திரிக்கை குடுக்கணும்!னு ஆசைப்பட்டேன்...போனேன்....அதிலென்ன தப்பு?” நின்று தாயின் முகத்தைப் பார்த்துக் கேட்டான்.

“நீ போனதோ...அந்தப் பொண்ணுக்கு பத்திரிக்கை வைக்கணும்!னு ஆசைப்பட்டதோ கொஞ்சமும் தப்பில்லை!...ஆனா...கூட ஒருத்தரைக் கூட்டிட்டுப் போனே பாரு?...அதுதான் தப்பு...மாபெரும் தப்பு!” என்றாள் சுந்தரி சற்றுப் பெரிய குரலில்.

“ஓ அதுக்குள்ளார இங்க தகவல் வந்திடுச்சா?” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட தனசேகர் “அம்மா...நான் பத்திரிக்கை குடுக்கப் போற எல்லா இடத்துக்கும் அவன்தான் என் கூட வந்திட்டிருக்கான்!...அதனாலதான் அங்கேயும் அவனையே கூட்டிட்டுப் போனேன்!...இது ஒரு சாதாரண விஷயம்...இதைப் போய் இவ்வளவு பெரிசு பண்ணிப் பேசணுமா?” ஒரு கோபத்துடனேயே சொன்னான்.

“நீ சாதாரண விஷயம்!னு சொல்லிட்டே?...ஆனா சம்மந்தி வீட்டுல அதைப் பெரிய விஷயமாய் அல்ல பேசறாங்க?” சுந்தரியும் தன் கோபத்தை வெளிப்படுத்தினாள்.

“என்ன சொல்றாங்க?” பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டான் தனசேகர்.

அப்போது உள்ளேயிருந்து வெளியே வந்த தனசேகரின் தந்தை பொன்னுரங்கம் “ம்...பையனோட சகவாசம் சரியில்லை போலிருக்கு”ன்னு ராமலிங்க பூபதி சொல்றார்!...” என்றார்.

“நான் என்ன அந்த ராமலிங்க பூபதியையா கட்டிக்கப் போறேன்?...நான் கட்டிக்கப் போறது அவரது மகள் மல்லிகாவைத்தானே?...அவர் என்ன வேணா சொல்லிட்டுப் போகட்டும்...அதை நாம காதுல கூட வாங்கிக்க வேண்டாம்” என்றான் தனசேகர்.

“டேய்...முட்டாள்தனமா பேசாதடா!...அந்த மனுஷன் மட்டுமில்லை அந்த வீட்டுல யாருக்குமே நீ அந்த முடி வெட்டுற சாதிக்காரனோட பழகறது பிடிக்கலை!...ஏண்டா...நான் கேட்கிறேன்...ஊர்ல வேற பசங்களே இல்லையாடா?...போயும் போயும் அந்தப் பயல் கூடத் திரியறியே?...உனக்கு வெட்கமாவே இல்லையா?” என்றார் தனசேகரின் தந்தை.

“ஓ...அப்படியா?” என்று சொல்லி விட்டு தன்னுடைய தாயையும் தந்தையையும் நேருக்கு நேர் பார்த்தவன் “அப்ப...இத்தனை வருஷமா அந்தக் குடும்பத்து ஆம்பளைக தங்களோட முடியையும் தாடியையும் அவங்களே வெட்டிக்கிட்டாங்களா?” கேட்டான்.

“அதுக்கெல்லாம் வீட்டுக்கே ஆள் வரும்...இவங்க யாரையும் தேடி போக மாட்டாங்க!...போக வேண்டிய அவசியமுமில்லை” கோபமாய்ச் சொன்னார் பொன்னுரங்கம்.

“ஓ..அவங்களுக்கு அவங்க ஜாதி ஆளுகளேதான் வந்து முடி வெட்டறாங்களா?” கொக்கி போட்டான் தனசேகர்.

“அதெப்படி?...முடி வெட்டறதுக்கு உள்ள சாதிக்காரன்தான் வருவான்”

“ஆக...அவங்களும் காலாகாலமா அந்த ஜாதிக்காரனோட சகவாசம் வெச்சிட்டுத்தான் இருக்காங்க!...அப்படி இருக்கும் போது என்னை மட்டும் குற்றம் சொல்றது என்ன நியாயம்!” தலையை ஆட்டிக் கொண்டே கேட்டான் தனசேகர்.

“டேய்...இதென்னடா பேச்சு?....இதுவரைக்கும் சரி...இனிமேல் அந்தப் பயலோட சகவாசத்தை விட்டுடு!...அது உன்னோட வாழ்க்கையையே கெடுத்துப்புடும் போலிருக்கு...சொல்லிட்டேன்!” கண்டிப்புடன் சொன்னாள் சுந்தரி.

“தாராளமாய் விட்டுடறேன்!...அதே மாதிரி அவங்களும் இதுவரைக்கும் அந்த ஜாதிக்காரங்க கிட்டப் போய் முடி வெட்டிக்கிட்டது போதும்...இனிமேல் அந்த சகவாசத்தை நிறுத்திக்கச் சொல்லு” என்றான் தனசேகர்.

“அப்ப நீ...நாங்க சொல்றதைக் கேட்க மாட்டே?...அப்படித்தானே?” சுந்தரி கேட்க,

“அம்மா...கல்யாணத்துல அவன் என் கூடத்தான் இருப்பான்...அவன்தான் எனக்குத் துணை மாப்பிள்ளையே!” தீர்மானமாய்ச் சொன்னான் தனசேகர்.

வாயடைத்துப் போயினர் பொன்னுரங்கமும் சுந்தரியும்.

அவர்கள் மீண்டும் எதையோ சொல்ல வாயெடுக்க “:இங்க பாருங்க இதைப் பற்றி யாரும் மறுபடி பேச வேண்டாம்!” கறாராய்ச் சொல்லி விட்டு உள் அறையை நோக்கிச் சென்ற மகனை கலவரமாய்ப் பார்த்தனர் பெற்றோர்.

“என்ன சுந்தரி இவன் இப்படிப் பேசறான்...அங்க சம்மந்தி வீட்டுல எல்லோரும் அந்த முரளி கல்யாணத்துக்கே வரக் கூடாது!ன்னு சொல்றாங்க!...இவன் என்னடான்னா...“முரளிதான் துணை மாப்பிள்ளை”ன்னு சொல்லிட்டுப் போறான்!...ஆஹா...நாம எப்படி இதைச் சமாளிக்கப் போறோம்?ன்னு தெரியலையே?” பொன்னுரங்கம் குழப்பத்துடன் கேட்டார்.

“நீங்க கவலைப் படாதீங்க...இந்த விஷயத்தைப் பத்தி இவன் கிட்டத்தானே பேசக் கூடாது?...நாம அந்த முரளி கிட்டப் பேசுவோம்” என்றாள் சுந்தரி.

“அவன் கிட்டப் போயி என்ன பேசறது?”

“த பாருப்பா...உண்மையிலேயே உனக்கு உன் சிநேகிதன் மேல் அன்பு இருந்தா...அவனோட கல்யாணம் எந்தப் பிரச்சினையும் இல்லாம நல்லபடியா நடக்கணும்!னு நீ நெனைச்சா...நீ கல்யாண மண்டபத்துப் பக்கமே வராதே!...தனசேகர் நம்பற மாதிரி வேற ஏதாவதொரு காரணத்தைச் சொல்லிட்டு அந்த அன்னைக்கு எங்காவது வெளியூரு போயிடு”ன்னு சொல்லுவோம்!...உண்மையிலேயே அவன் நம்ம மகன் மீது அன்புள்ளவனாய் இருந்தால் நாம் சொல்வதைக் கேட்பான்” தன் எண்ணத்தை சுந்தரி சொல்ல

“நம் பேச்சையும் மீறி அவன் வந்திட்டான்னா?” பொன்னுரங்கம் கவலையோடு கேட்டார்.

“நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்க?...நாமே நேர்ல போய் சொன்னா கேட்பான்...அவ்வளவுதான்” என்று சொல்லி அந்த வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் சுந்தரி.

------​

போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் வேக வேகமாய் உள்ளே வந்து இன்ஸ்பெக்டர் திவாகரிடம், “சார்…ராமலிங்க பூபதி அய்யா வர்றார்!” என்றான்.

“யாருய்யா ராமலிங்க பூபதி?”

“கிழக்குச்சீமை பண்ணையாருங்க அய்யா!...ஊர்ல கொஞ்சம் பெரிய ஆள்!...அரசியல் செல்வாக்கும் உண்டு சார்”

“ப்ச்” என்று அலட்சியம் காட்டினார் திவாகர்.

உள்ளே வந்த ராமலிங்க பூபதியைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவர் மொத்த குணத்தையும் படித்து விட்டார் திவாகர்.

“வணக்கம்…நான் ராமலிங்க பூபதி…கிழக்குச் சீமை” என்றபடி திவாகருக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்தார் அவர்.

“சொல்லுங்க…என்ன விஷயமா…என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?” திவாகர் சற்றும் அஞ்சாமல் தன் குரலை உயர்த்திக் கேட்டார்.

“பொதுவா…இந்த ஊருக்கு புதுசா வர்ற இன்ஸ்பெக்டர்கள் என்னை பண்ணை வீட்டுல வந்து பார்த்து அறிமுகம் செஞ்சுக்குவாங்க!...ஆனா நீங்க ஏனோ அப்படி வரலை!...சரி பரவாயில்லை!...அதான் நான் வந்திட்டேனா?” உரக்க சிரித்தபடி.

அந்தப் பேச்சை ரசிக்காதவராய், “வந்த விஷயம்?” கண்டிப்புடன் கேட்டார் திவாகர்.

“மகளுக்கு கல்யாணம்…அதான் பத்திரிக்கை வெச்சிட்டுப் போகலாம்!னு வந்தேன்” என்றபடி திரும்பி தன்னுடன் வந்தவனைப் பார்க்க, அவன் இன்விடேஷனை எடுத்துத் தர, அதை வாங்கி இன்ஸ்பெக்டரிடம் தந்தார் ராமலிங்க பூபதி.

வாங்கிப் படித்த திவாகர் நெற்றியைச் சுருக்கினார்.

“பொன்னுரங்கம் அய்யா பையன்தான் மாப்பிள்ளை…அநேகமா அவர் வீட்டுப் பத்திரிக்கையும் உங்களுக்கு வரும்!” சொல்லி விட்டு உடனே எழுந்தவர், “அப்ப வரட்டுங்களா?” திரும்பி நடந்தார்.

(தொடரும்)​
 

banumathi jayaraman

Well-Known Member
தன் உயிரை முரளி காப்பாற்றிய விஷயத்தை தனா ஏன் வீட்டில் சொல்லவில்லை?
முரளி வராமல் பொண்ணு கழுத்துல தாலி கட்ட மாட்டேன்னு தனசேகர் சொல்லியிருக்கிறான்
தனாவோட அம்மா இப்படி சொல்லுறாள்
என்ன நடக்கப் போகுது?
இந்த கல்யாணம் நடக்குமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top