யாருமிஙு அனாதையில்லை - 32

Advertisement

pon kousalya

Active Member
யாருமிங்கு அனாதையில்லை – 32
எழுதியவர்: முனைவர். பொன்.கௌசல்யா.

அத்தியாயம் - 32

மாலை வாக்கில் தனது ஜீப்பில் மலையடிவாரம் வந்திறங்கிய இன்ஸ்பெக்டர் திவாகரைக் கண்டதும் அடிவார மண்டபத்தில் ஆடு புலி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த சில இளைஞர்கள் எழுந்து ஓட்டமாய் ஓடினர். “கான்ஸ்டபிள்ஸ் அவனுகளைத் துரத்திட்டுப் போய் இழுத்திட்டு வாங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.

பத்தே நிமிடத்தில் இரண்டு பேரை மட்டும் இழுத்துக் கொண்டு வந்து இன்ஸ்பெக்டர் முன் நிறுத்தினர் கான்ஸ்டபிள்ஸ் இருவரும்.

இன்ஸ்பெக்டர் திவாகர் அந்த இளைஞர்களை முறைக்க, “சார்...காசு கீசெல்லாம் எதுவும் வெச்சு ஆடலைசார்!...சும்மா பொழுது போக்காய்த்தான் ஆடிட்டிருந்தோம் சார்” ஒரு இளைஞன் கெஞ்சினான்.

“பொழுது போகலைன்னா...மேலே போய் அங்க உட்கார்ந்திட்டிருக்கற அந்தப் பைத்தியக்காரனை விரட்டியடிக்கலாம் அல்ல?”

“சார்...அவன் கைல தடி வெச்சிருந்தப்ப...மேலே போனவங்க எல்லாரையும் அதிலேயே விளாசினான்!...இப்ப கைல சூலாயுதம் வெச்சிட்டு உட்கார்ந்திட்டிருக்கானாம்!...போனா கொடலை உருவிடுவான்” என்ற இளைஞனின் பெரிய மீசையைத் தொட்டு இழுத்த இன்ஸ்பெக்டர், “மீசை மட்டும் இவ்வளவு பெரிசா வெச்சிருக்கியே?...அதுக்குத் தகுந்த வீரம் இல்லையே?” கேட்டார்.

“ஹி...ஹி...ஹி...”

“சரி...சரி...அசடு வழியாம எங்க கூட மேலே வா!” என்றபடி இன்ஸ்பெக்டர் மலைப் படிகளில் ஏறத் துவங்க,

“அய்யோ...சார்...வேண்டாம் சார்...நாங்க வரலை சார்” இளைஞர்கள் இருவரும் ஒரே குரலில் கூவினர். திரும்பி, தன் போலீஸ் பார்வையை இன்ஸ்பெக்டர் காட்ட, மறு பேச்சின்றிப் பின் தொடர்ந்தனர் இருவரும்.

மலை மேலிருக்கும் அந்தப் பைத்தியக்காரன் போலீஸ் உடுப்பில் இருக்கும் தங்களைப் பார்த்ததும் நிச்சயம் மிரண்டு, ஓடி விடுவான் என்கிற எண்ணத்தில் தைரியமாய் மலை உச்சிக்குச் சென்ற இன்ஸ்பெக்டர் திவாகர் கையில் சூலாயுதத்தோடு எல்லைச்சாமி போல் அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்து ஒரு கணம் அரண்டு போனார். அவனது ஆகிருதியும், வானத்தை நோக்கியிருந்த தீர்க்கப் பார்வையும், அவருக்குள் ஏதேதோ சந்தேகங்களை ஏற்படுத்தின. “இவனைப் பார்த்தா தீவிரவாதி மாதிரியல்ல இருக்கான்?...ஒரு வேளை அன்னிய ஒற்றன் இங்க வந்து பைத்தியக்கார வேஷம் போட்டுக்கிட்டு வேவு பார்த்திட்டிருக்கானோ?...இங்க எங்காவது வயர்லஸ் மாதிரியான சாதனங்களை வைத்துக் கொண்டு அதிலிருந்து வெளி நாட்டுக்கு தவல அனுப்பிட்டிருக்கானோ?...அதனாலதான் மேலே வர்றங்களையெல்லாம் வர விடாமப் பண்ணிட்டிருக்கானோ?”

வானம் இருட்டத் துவங்கியிருந்தது.

தனக்குள் ஏற்பட்ட மிரட்சியை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “டாய்...இங்க என்னடா பண்ணிட்டிருக்கே?...இறங்கிப் போடா கீழே” கத்தல் குரலில் அவனைப் பார்த்துச் சொன்னார்.

கையில் சூலாயுதத்தோடு அமர்ந்திருந்த அவன் வானத்தை நோக்கியிருந்த தன் விழிகளைக் கீழே இறக்கி அவர்களைப் பார்த்தான். பார்த்து விட்டு துளியும் அஞ்சாமல் அடுத்த நிமிடமே மீண்டும் வானத்தைப் பார்க்க ஆரம்பித்தான்.

“ராஸ்கல்...நான் சொல்லிட்டிருக்கேன்...நீ எங்கேடா பார்த்திட்டிருக்கே?” இன்ஸ்பெக்டர் திவாகர் ஓங்கிக் கத்த, மேல் நோக்கிப் பிடித்திருந்த சூலாயுதத்தை கீழே இறக்கி அவர்களை நோக்கி நீட்டி, கீழே போய் விடும்படி கண் ஜாடை செய்தான். “இல்லாவிட்டால் குத்திக் கிழித்து விடுவேன்” என்பது போல் சூலாயுதத்தை ஓங்கிக் காட்டினான்.

“பார்ரா....நாங்க உன்னைக் கீழே போகச் சொன்னா நீ எங்களைக் கீழே போகச் சொல்றியா?” என்று அவனைப் பார்த்துக் கேட்ட இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிள் பக்கம் திரும்பி, “கான்ஸ்டபிள்...போய் அவன் கைல இருக்கற ஆயுதத்தைப் பிடுங்கிட்டு வாய்யா!” என்றார்.

“சார்...அவன் பைத்தியக்காரப் பயல் சார்....குத்தினாலும் குத்திடுவான் சார்!” கான்ஸ்டபிள் சொல்ல,

“என்னய்யா...பயப்படறியா?...கைல லத்தி வெச்சிருக்கியல்ல?...ஓங்கி நடு மண்டைல போடு...தானா குடுத்திடுவான்!...”

“வேண்டாம் சார்...வேண்டாம் சார்” “ஆடு புலி ஆட்ட”க்காரன் சன்னக்குரலில் எச்சரித்தான்.. திரும்பி அவனை எரிப்பது போல் பார்த்த இன்ஸ்பெக்டர் திவாகர், “அமைதியா நின்னு வேடிக்கை மட்டும் பாரு” என்று சொல்லி விட்டு, “கான்ஸ்டபிள் இன்னும் என்னய்யா யோசனை போய்யா”

தயங்கித் தயங்கி நடந்து கான்ஸ்டபிள் அவனை நெருங்கியதும், தன் சூலாயுதத்தை இலக்கின்றி கண்டபடி சுழற்ற ஆரம்பித்தான் அவன். அதைக் கண்ட இன்ஸ்பெக்டர் இன்னொரு கான்ஸ்டபிளைப் பார்க்க அவரும் ஓடிச் சென்று ஜோடி சேர, கான்ஸ்டபிள்கள் இருவரும் தங்கள் லத்தியைச் சுழற்றினர்.

ஆனால், அந்தப் பைத்தியக்காரனின் சூறாவளித் தாக்குதலில் கான்ஸ்டபிள்களின் லத்தி தெறித்துப் போய் எங்கோ விழுந்தது. மேற் கொண்டு அங்கு நின்றால் சூலாயுதம் தங்கள் உடலைத்தான் பதம் பார்க்கும் என்பதைப் புரிந்து கொண்ட கான்ஸ்டபிள்கள் உயிர் பிழைத்தால் போதும் என்கிற எண்ணத்தில் புறமுதுகிட்டு ஓடி வந்தனர். “சார்...அவன் முத்திப் போன பித்துக்குளி சார்...நாம போலீஸ்காரங்க என்பது கூட அவன் மூளைக்குப் புரியலை....அதே மாதிரி...அந்த சூலாயுதத்தால் குத்தினால் செத்திடுவாங்க!...என்பதும் புரியாது சார்” மூச்சு வாங்கியபடி சொன்னார் ஒரு கான்ஸ்டபிள்.

ஒரு சிறிய யோசனைக்குப் பின் இன்ஸ்பெக்டர் திவாகர் தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து, மேலே பார்த்துச் சுட்டார். வெளிச்சத்தோடு ஒலித்த அந்த வேட்டுச் சத்தத்தில் மலைப் புறாக்கள் தாறுமாறாய்ப் பறந்தன.

ஆடு புலி ஆட்ட இளைஞர்கள் சப்த நாடியும் ஒடுங்கிப் போயினர்.

பாறைகளில் பட்டு எதிரொலித்த அந்த ஓசை பைத்தியக்காரனை லேசாய்க் கூட அசைக்கவில்லை. அப்படியொரு சப்தம் கேட்டதாகவே அவன் உணரவில்லை. இன்ஸ்பெக்டர் கையிலிருந்த துப்பாக்கியை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு, அண்ணாந்து வானத்தைப் பார்க்க ஆரம்பித்தான்.

“என்னய்யா...இவன் செவிடனா?....துப்பாக்கிச் சத்தத்துக்கு கொஞ்சம் கூட அசைய மாட்டேங்கறான்?”

“சார்...ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?” கான்ஸ்டபிள் தயக்கத்துடன் கேட்க,

“ம்...சொல்லும்”

“பேசாம கீழ இறங்கிப் போய்...கமிஷனருக்குப் போன் போட்டு...நாளைக்கு இங்க பந்தோபஸ்துக்கு ஏற்பாடு பண்ணிடுவோம் சார்...”

“யோவ்...இவன் ஒத்தை ஆளு...இவனுக்கு பயந்து...பந்தோபஸ்து கேட்டா...கமிஷனர் என்னைக் கொதறிடுவார்...” இன்ஸ்பெக்டர் திவாகர் கடுப்பானார்.

“சார்...இவனுக்காக”ன்னு ஏன் சொல்றீங்க?....இங்க பௌர்ணமி பூஜை நடக்குது...கூட்டம் கொஞ்சம் அதிகமா இருக்கும்...ராத்திரி வேளைல...அதுவும் மலை மேலே பொங்கல் வெச்சுக் கொண்டாடறாங்க...அசம்பாவிதம் எதுவும் நடந்திடாம இருக்கறதுக்காக போலீஸ் காவல் போடணும்!ன்னு சொல்லுங்க!...ஒரு காவல் படையை அனுப்பச் சொல்லுங்க”

“இந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் வேற நாளைக்கு மதியத்துக்கு முன்னாடி அவனைத் துரத்திடுங்க!ன்னு சொல்லிட்டுப் போறார்!...நானும் “சரி”ன்னுட்டேன்!...அதனால....” இன்ஸ்பெக்டர் இழுத்தார்.

“சொல்லுங்க சார்...அதனால....”

“இவனைக் கால்ல சுட்டுச் சாய்ச்சிட்டா என்ன?”

“சார்ர்ர்ர்......”

“ஏன்யா பயப்படறே?...கான்ஸ்டபிளை சூலாயுதத்தால் குத்த வந்தான்...அந்தக் கான்ஸ்டபிளோட உயிரைக் காப்பாத்த சுட்டேன்!”ன்னு சொல்லிட்டுப் போறேன்!...” சொல்லி விட்டு இன்ஸ்பெக்டர் ஆடு புலி இளைஞர்களைப் பார்க்க, அவர்கள் இருவரும் வாய் மீது கையை வைத்துக் கொண்டு, இட வலமாய்த் தலையாட்டினர்.

வானம் ஒரு வெளிச்ச மின்னலை இறக்கியது. அந்த வெளிச்சத்தையே வெறித்துப் பார்த்தான் பைத்தியக்காரன்.

இன்ஸ்பெக்டர் அந்தப் பைத்தியக்காரனின் காலை நோக்கித் துப்பாக்கியை நீட்டி....குறி வைத்து....நிதானமாய்...நிதானமாய்...டிரிக்கரை அழுத்தப் போகும் போது.....

“படீ.................ர்ர்ர்ர்ர்ர்ர்”
வானத்திலிருந்து வந்த அந்த இடியோசையில் மலையே குலுங்கியது. இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்கள், ஆடு புலி ஆட்ட இளைஞர்கள் எல்லோருமே ஒரு விநாடி நடுநடுங்கிப் போயினர்.

“என்னய்யா...அது?” வாய் குழறிக் கேட்டார் இன்ஸ்பெக்டர் திவாகர்.

“கோடை இடி சார்” சொல்லும் போது கான்ஸ்டபிளின் குரலும் கமறியது.

அது வரை அமைதியாயிருந்த இளைஞன் மெல்லச் சொன்னான், “சார்...எப்பவுமே இந்த மாதிரி இடிக்குப் பின்னால் ஒரு பெரு மழை கொட்டும்!...பேய்க் காத்தும் வீசும்!...அப்படிக் காத்தும்...மழையும் பிடிச்சிடுச்சுன்னா...நாம இந்த மலை மேலே இருக்க முடியாது...காத்து நம்மைத் தூக்கிக் கொண்டு போய்...கொஞ்சம் நேரம் ஆகாயத்துல சருகுக பறக்கற மாதிரி பறக்க விட்டுட்டு “தொப்”புன்னு பாறை மேலே போட்டுடும்!...அதனால...எவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து கீழே போறோமோ...அவ்வளவு சீக்கிரம் போயிடறது நல்லது சார்”

இன்ஸ்பெக்டர் திவாகர் நிதானமாய் யோசிக்க, “நீங்க என்னமோ பண்ணுங்க சார்...நாங்க போறோம்” சொல்லி விட்டு அந்த இளைஞர்கள் இரண்டு பேரும் மலைப் படிகளில் இறங்கி ஓட ஆரம்பித்தனர்.

அவர்களிருவரும் கண் பார்வையிலிருந்து மறைந்ததும் கான்ஸ்டபிளும் புலம்ப ஆரம்பித்தார், “சார்...நீங்க இளைஞர்...உங்களுக்கும் ஒண்ணும் பிரச்சினையில்லை!...ஆனா நான் வயசானவன்!....என்னால சாகஸத்திலெல்லாம் ஈடுபட முடியாது....என்னை விட்டுடுங்கோ” சொல்லி விட்டு இன்ஸ்பெக்டரின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் அவரும் படிகளில் இறங்க ஆரம்பித்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு கான்ஸ்டபிள் எதுவும் சொல்லாமல் அவராகவே ஓட ஆரம்பித்தார்.

தனித்து நின்ற திவாகர் அந்தப் பைத்தியக்காரனைத் திரும்பிப் பார்த்தார். அவன் இன்னமும் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்க்கும் இடத்தைத் தானும் பார்த்தார் இன்ஸ்பெக்டர். அங்கே, அப்படி எதுவும் விசேஷமாய்த் தெரியாது போக, “இவனுக்கு அங்க என்ன தெரியுது?”

காற்றின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்க ஆரம்பித்ததும், மழையும் ஆரம்பித்தது. இறுதி முயற்சியாய் வானத்தை நோக்கி, இன்னொரு முறை சுட்டார் இன்ஸ்பெக்டர். அது அவன் காதில் கூட விழவில்லை. “கண்டிப்பா....இவன் செவிடுதான் சந்தேகமேயில்லை” என்று தனக்குள் சொல்லியபடி அவரும் படிகளில் இறங்க ஆரம்பித்தார்.

*****​
காவல் நிலையம். கான்ஸ்டபிள் சொன்னது போலவே, மறுநாள் கமிஷனருக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னார் இன்ஸ்பெக்டர் திவாகர்.

“நீங்க நேர்ல போய்ப் பாருங்க இன்ஸ்பெக்டர்...ஒரு வேளை அவன் டெரரிஸ்டாய்க் கீது இருந்தாலும் இருக்கலாம் அல்லவா?” கமிஷனர் சொல்ல,

“சார் அதே சந்தேகம் எனக்கும் வந்தது...அதனாலேயே நான் நேர்ல போய்ப் பார்த்தேன்!...அவன் முத்திப் போன பைத்தியமாய் இருக்கான் சார்!...வானத்தையே பார்த்திட்டு உட்கார்ந்திருக்கான்!...போலீஸைக் கூட சாதாரணமாய்ப் பார்க்கறான்...மேல் நோக்கித் துப்பாக்கில சுட்டா கண்டுக்கக் கூட மாட்டேங்கறான்...”

வாய் விட்டுச் சிரித்த கமிஷனர், “அந்த மென்டலைச் சமாளிக்க போலீஸ் ஃபோர்ஸ் வேணுமா உங்களுக்கு?”

“சார்...நான் அவனுக்காக போலீஸ் ஃபோர்ஸ் கேட்கலை சார்...அங்க இன்னிக்கு நைட் மலை மேலே பௌர்ணமி பூஜை நடக்குது...கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்...அதுக்காகத்தான் கேட்கிறேன்”

“ம்ம்ம்...சரி....ஒரு பத்து காப்ஸை அனுப்பறேன்...சமாளிங்க” என்று சொல்லி விட்டுக் கமிஷனர் பட்டென்று போனை வைத்து விட கடுப்பானார் இன்ஸ்பெக்டர். “ஹூம்...என்ன நாகரீகம் இது?...பேசப் பேச போனை வைக்கறாரே?”

காலையிலிருந்தே மப்பும் மந்தாரமுமாயிருந்த வானம் அவ்வப்போது லேசாய் தூறலிட்டுக் கொண்டேயிருக்க, இன்ஸ்பெக்டர் கேட்டார், “என்னய்யா...இந்த மழையிலும் அவங்க பௌர்ணமி பூஜை பண்ணுவானுகளா?”

“நீங்க வேற...அடாது மழை பெய்தாலும் விடாது சாமி கும்பிடுற ஆளுங்க அந்த ஊர்க்காரங்க!...நிச்சயம் பொங்கல் வெச்சே தீருவானுக...”

“கமிஷனர் ஒரு பத்து போலீஸை மட்டும் அனுப்பறேன்!னு சொல்றார்...என்ன பண்றது?”

“மேல அஞ்சு பேர்...கீழ அஞ்சு பேர்னு நிக்க வெச்சிடுவோம் சார்...நம்ம படிகள்ல நடந்து பார்த்துக்குவோம்!”

“ஹூம்... “ஏதோ ஒண்ணு நடக்கப் போகுது”ன்னு எனக்குள்ளார ஒரு பட்சி சொல்லுது...அதனால நாம மதியமே அங்க போயிடுவோம்” இன்ஸ்பெக்டர் திவாகர் சொல்ல,

“ஓ.கே.சார்...போயிடுவோம்”

ஆனால், மதியம் அவர்கள் கிளம்புவதற்கு முன்னமே பொன்னுரங்கமும், சில இளைஞர்களும் அவரை பார்க்க வந்தனர். “வாங்க அய்யா!...நாங்க அங்கதான் கிளம்பிட்டிருக்கோம்” அவர்களைப் பார்த்ததும் இன்ஸ்பெக்டர் திவாகர் சொல்ல,

“இன்ஸ்பெக்டர் சார்...நான் உங்க கிட்ட என்ன சொன்னேன்...இன்னிக்கு மதியத்துக்கு முன்னாடி அவனைத் துரத்திடுங்க...எங்களுக்கு மேலே வேலை இருக்கு”ன்னு சொன்னேனல்ல...பாருங்க அவன் இன்னமும் மேலே உட்கார்ந்திட்டு எங்க ஆளுங்க யாரையுமே மேலே வர விட மாட்டேங்கறான்” பொன்னுரங்கம் அய்யாவின் பேச்சில் கோபம் இருந்தது.

“கவலைப் படாதீங்க அய்யா..பத்து போலீஸ்காரங்க வேன்ல வந்திட்டிருக்காங்க!...அவங்க வந்ததும் மேலே போயிடுவோம்!...நாங்க அவனைப் பார்த்துக்கறோம்...நீங்க உங்க வேலையைப் பாருங்க” என்றார் இன்ஸ்பெக்டர் திவாகர்.

கடுப்பாய் எழுந்து இன்ஸ்பெக்டரை ஒரு முறை முறைத்து விட்டுக் கிளம்பினார் பொன்னுரங்கம். வெளியே மழை வலுக்கத் துவங்கியிருந்தது.


கொட்டும் மழையில் அந்த போலீஸ் வேன் மலை அடிவாரத்தில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய காவலர்கள் “திமு...திமு” வென்று அடிவார மண்டபத்திற்குச் சென்று ஒதுங்கினர். அங்கு காத்திருந்த இன்ஸ்பெக்டர் திவாகரைப் பார்த்ததும் எல்லோரும் சல்யூட் அடிக்க, “மலை மேலே போகணுமா சார்?” ஒரு காவலர் கேட்டார்.

“யெஸ்...”என்ற இன்ஸ்பெக்டர் அவர்களின் தலையை எண்ணிப் பார்த்து விட்டு, “பத்துப் பேர் இருக்கீங்களா?....அப்ப...ஒரு அஞ்சு பேர் மேலே போங்க...ஒரு அஞ்சு பேர் கீழே இருங்க” என்றார்.

“மழை விட்டதும் போகலாம்ங்களா?” அதே காவலர் கேட்க,

“இந்த மழை இப்போதைக்கு விடாது!...அதுவுமில்லாம இதோ இவங்கெல்லாம் மேலே போய் ராத்திரி பௌர்ணமி பூஜைக்கான ஏற்பாடுகளைப் பண்ணனுமாம்!......அதனால....உடனே மேலே கிளம்புங்க...இவங்களையும் உங்க கூடக் கூட்டிட்டுப் போங்க!”என்றார் இன்ஸ்பெக்டர் திவாகர்.

இருபதுக்கும் மேற்பட்ட ஆண்களும், ஏழெட்டுப் பெண்களும், மூட்டை முடிச்சுக்களுடன் முன்னே செல்லும் அந்த காவலர்களின் பின்னால் மலையேறினர்.

“ஏம்பா....பூக்கூடை எடுத்தாச்சா?” யாரோ கேட்க, “ம்...என் கிட்டே இருக்கு” யாரோ பதில் சொன்னார்கள்.

“அரிசி மூட்டை...மளிகைச் சாமான்?”

“அட...எல்லாத்தையும் எடுத்தாச்சுய்யா...சும்மா தொண தொணக்காம வாய்யா”

பாதி மலை ஏறிய போது வானம் இன்னும் மேக மூட்டமாகி பகலையே இரவாய்க் காட்டியது.

“இப்படி...இடியும் மழையுமாய் இருக்கே?....இதுல எப்படி பொங்கல் வைக்கப் போறோமோ தெரியலை?...இன்னிக்கு நிலா வருமா?ன்னே சந்தேகமாயிருக்கு” ஒரு பெருசு தனக்குத்தானே புலம்பிக் கொண்டு நடந்தது.

“ஏய் பெருசு...பார்த்துப் படில காலை வை...வழுக்கிக் கிழுக்கி விழுந்திடாதே....அப்புறம் அடிவாரத்துல போய்த்தான் உன்னையப் பொறுக்கி எடுக்கணும்” எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது.
(தொடரும்)​
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பொன் கௌசல்யா டியர்
 
Last edited:

தரணி

Well-Known Member
ஏதோ நடக்க போகுது அதை தடுக்க தான் இப்படியே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top