மை டியர் டே(டெ)டி - 6

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
இளா, குட்டி இளா இருவரும் அவர்கள் பிளாட்டிற்கு வந்து சேர, "நான் போயி குளிக்கப் போறேன். நீனும் ஓடு. குளி" என்று இளா கூற, "என்னது? குளிக்கணுமா?" என்றாள் குட்டி இளா. "ஆமா. குளி" என்று இளா மீண்டும் சொல்ல, "நான் தான் காலைலயே குளிச்சிட்டேனே" என்றாள் குட்டி இளா. "மேடம் என்ன சக்கரை கட்டியா? இன்னொரு முறை குளிச்சா கரைஞ்சிடுவீங்களோ?" என்று இளா கேட்க, "ஐயோ...உனக்குக் கொஞ்சம் கூட சமூக பொறுப்பே இல்ல இளா" என்றாள் நிலா.

"என்னது? சமூக பொறுப்பா? குளிக்கச் சொல்லுறதுக்கும் சமூக பொறுப்புக்கும் என்ன சம்பந்தம்?" என்று மாறன் விழிக்க, "எங்க மிஸ் தண்ணி வேஸ்ட் பண்ண கூடாது சொல்லிருக்காங்க. தண்ணி ரொம்ப பஞ்சமாம். அதுவும் இந்தியால நூறு மில்லியன் வீட்டு குழந்தைங்க குடிக்க சுத்தமான தண்ணி இல்லாம இருக்காங்களாம். அத்தனை குழந்தைங்க குடிக்கவே தண்ணி இல்லாம இருக்காங்க. நீ என்ன குளிக்கச் சொல்லுற. நீ குளிக்கறதே பெரிய தப்பு. இதுல என்னை வேற அந்தத் தப்பை செய்யத் தூண்டுற. தப்பு செய்யுறவங்கள விட, தப்ப செய்யத் தூண்டுறவங்களுக்கு தான் தண்டனை அதிகமாமே. நீ தண்டனை அனுபவிக்க கூடாதுன்னு தான் நான் குளிக்காம இருக்கேன். நீ ஜெயிலுக்கு போகக் கூடாதுன்னு தான இதெல்லாம். ஆனா, நீ என்ன புரிஞ்சிக்கவே மாட்டுற" என்று கண்ணைக் கசக்குவது போல நடித்தாள் குட்டி இளா.

" குட்டி ராட்சசி. உன்னைய குளிக்கச் சொன்னது ஒரு குத்தமா? அதுக்கு என்ன ஜெயிலுக்கு தள்ளுற அளவுக்குப் போய்ட்ட. எனக்கு வில்லங்கம் வெளிய இல்ல. வீட்டுக்குள்ளேயே தான் இருக்கு. நீ குளிக்கவே வேண்டாம்" என்று " சொல்லிவிட்டு அவன் மட்டும் குளிக்கச் சென்று விட்டான் மாறன்.

அவன் குளிக்கச் சென்றதும், "ஹப்பாடா. எப்டியோ மூச்சு முட்ட டைலாக் பேசி, குளிக்காம தப்பிச்சாச்சு" என்று சொல்லிவிட்டு பள்ளி சீருடையை கழட்டிவிட்டு, வீட்டில் அணியும் உடைக்கு மாறினாள். முட்டிவரை வரும் ஒரு வெள்ளை கவுன் அணிந்துகொண்டு சோபாவில் அமர்ந்து, தொலைக்காட்சியை ஓட விட, அந்த நேரம் பார்த்து மாறனின் அலைபேசி அலறியது.

"அட எவன்டா அவன். நொய்ய நொய்யன்னு போன் பண்றது" என்று போனை எடுக்கப் போக, அலைபேசி திரையில், "ரைனோசர்" என்று இருக்க, அந்தக் காலை அட்டென்ட் செய்தாள். "ஹலோ" என்று ரய்னா சார் சொல்ல, "ஹெல்லோவ்வ்வ்" என்றாள் நிலா. மாறனுக்கு அழைப்பு விடுத்தவர், இப்பொழுது வேறு குரல் கேட்கவும், மீண்டும் "ஹலோ" என்றார் ரய்னா சார். அவர் மறுபடியும் ஹலோ சொன்னதில் கடுப்பானவள், "ஹெல்லேல்லேல்லேல்லோவ்வ்வ்வ்" என்றாள் நிலா.

"என்ன இது. போன் பண்ணா இப்டி ஊளை விடறீங்க" என்று ரைனோசார் கேட்க, "நீங்க ஹலோ சொல்லிப் பழக நான் தான் கிடைச்சேனா? உங்கள மாதிரி நான் என்ன வேலை இல்லாமலா இருக்கேன். ஷின்-சேன் வந்துடுவான். எதுக்கு போன் பண்ணேன்னு சீக்கரம் சொல்லு ரைனோசர். விளம்பரம் முடிய போகுது" என்று குட்டி இளா சொல்ல, 'ரைனோசர்' என்ற அழைப்பைக் கேட்டதும், மாறன் தான் குரல் மாற்றிக் கலாய்க்கிறானோ என்று எண்ணினார் ரய்னா சார்.

"ஹலோ மிஸ்டர்.மாறன். நீங்க தான கொழந்தை மாதிரி வாய்ஸ் மாத்தி பேசுறது" என்று ரய்னா சார் கேட்க, "ரைனோசர் மனுஷன் வாய்ஸ்ல பேசும்போது, இளமாறன் இளநிலா போல வாய்ஸ்ல பேசக் கூடாதா?" என்று நிலா கேட்க, "நான் யாருன்னு தெரியாம பேசுற நீ" என்று ரைனோசர் கத்த, "நான் தான் போன வாரம் இளா கூட வண்டலூர் போனப்போ பாத்தேனே 'தி இந்தியன் ரைனோசர்ஸ்' " என்று சொல்லிவிட்டு, ரைனோசரஸ் போலச் சவுண்ட் போட்டுக் காமிக்க, "ஹலோ ஹல்லோ. நான் ரைனோசர்ன்னு உனக்கு யாரு சொன்னா?" என்று ரைனோ டென்ஷனாக, "நீ போன் பண்ணப்போ எனக்கு ரைனோசர்ன்னு தான் டா காட்டுச்சு கோழி முட்டை மண்டையா" என்றாள் நிலா.

"என்னது? கோழி முட்டை மண்டையா? என் மண்டைய நீ எப்போ பாத்த?" என்று ரைனோசர் கேட்க, "அதான் போன் பண்ணப்போ எனக்கு போட்டோ காட்டுச்சே" என்றால் நிலா.

"அதெல்லாம் இருக்கட்டும். மாறன் கிட்ட போன் குடு. ஒரு ப்ரெசென்ட்டேஷன் அவன் பண்ண வேண்டி இருக்கு" என்று ரைனோ சொல்ல, "உனக்கு ப்ரெசென்ட்டேஷன்அவன் பண்ணா , எனக்கு பாப்கார்ன் யாரு பண்ணி குடுப்பா?" என்று கேட்டுவிட்டு, அவர் அதற்கு பதில் அளிக்கும் முன்னமே,

"நான் பாக்க போறேன் ஷின்-சேன்.
பென்ஷன் வாங்குற வயசுல எதுக்கு இவ்ளோ டென்ஷன்.
முடிஞ்சிபோச்சு விளம்பரம்.
இதுக்கு மேல நீ பேசுனா...உன் மண்டை மேல விடுவேன் பம்பரம்"

என்று சொல்லிவிட்டு, இல்லை இல்லை சுருதி சேர்த்து பாடிவிட்டு, போனை கட் செய்து விட்டாள்.

இவள் பேசியதை கேட்டு, தாம்-தூம் என்று ஆபிஸில் குதித்துக்கொண்டிருந்தார் ரைனோசர். ஆனால், நடந்தது எதுவுமே தெரியாமல் கூலாகக் குளித்துவிட்டு, மாறன் குட்டி இளா அருகில் அமர, "என்ன உக்காருற? போ. போயி பாப்கார்ன் பண்ணு" என்று குட்டி இளா விரட்ட, "எதுக்கு இப்போ பாப்கார்ன்? வர வழியில தான் எனக்குக் கிள்ளி கூடக் குடுக்காம அள்ளி அள்ளி பிரௌனி சாப்டியே?" என்று அவன் கேட்க, "அது சாப்பிட்டு ஒரு மணி நேரம் ஆச்சு. இப்போ பாப்பாக்கு பசிக்கும்ல. பாரு தொப்பை குவா குவா சவுண்ட் போடுது" என்று தொப்பையை காமித்து, உதட்டைச் சுருக்கி காமிக்க, "நீயே குவா குவான்னு சவுண்ட் போடுற குட்டி பாப்பா தான். இந்தக் குட்டி தொப்பைக்கு ஒரு பிரௌனி பத்தாதா?" என்று அவள் குட்டி தொப்பையில் 'பாம் பாம்' என்று அழுத்தி விளையாடியவன், "யோசிச்சி சொல்லு. பசிக்குதுன்னு பாப்கார்ன் கேக்கறியா? இல்ல போர் அடிக்குதுன்னு கொறிக்க கேக்குறியா?" என்று கேட்க, "ஆமா. நமக்குப் பசிக்கல. போர் அடிக்குதுன்னு தான் சாப்புட கேக்கறோமோ" என்று யோசித்தாள் நிலாவும்.

"ஆமா. போர் அடிக்குது தான். எனக்குப் போர் அடிக்குது. சாப்புட ஏதாவது வேணும்" என்று அவன்மேல் ஏறிப் புரள, "போர் அடிக்கறதுக்கெல்லாம் சாப்பிட கூடாது. பசிச்சா தான் சாப்பிடணும். இல்லைன்னா பாப்பா தொப்பை பலூன் மாதிரி பெருசாகிடும்" என்று கூற, "சரி. பாப்கார்ன் வேணாம். ஆனா, போர் அடிக்குது. என்ன செய்யலாம்" என்று அவள் கேட்க, "கொஞ்சம் நேரம் டி.வி பாரு. அப்புறம் என் கூடச் சேர்ந்து டின்னர் செய்யலாம்" என்றான் இளா.

"அய்ய்ய். சமைக்க போறோமா. ஜாலி ஜாலி. என்று குதித்தவள், இப்போதைக்கு அமைதியாக அமர்ந்து டி.வி பார்த்தாள்.

மாலை 6 மணியும் ஆனது.

"வா சமைக்கலாம். வா சமைக்கலாம். இன்னைக்கு நீ என்னையும் சமைக்க சேத்துக்கறேன்னு சொல்லிருக்க. ஏமாத்த கூடாது. வா வா" என்று அவனை அவசரப்படுத்தினாள் அவள்.

ஓடிப்போன மாறன் தேவையான அளவு கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு வந்து டேபிளில் வைத்துவிட்டு, தண்ணீர் எடுத்து வரச் செல்ல, அதற்குள் ஒரு பிரளயமே செய்துவிட்டாள் நிலா. கப்பில் இருந்த மாவு அனைத்தும் அவள் முகத்தில் தான் இருந்தது.

டேபிள் மேல் இருக்கும் மாவை எடுக்க முடியவில்லை அவளால். டேபிளில் கை வைத்து, சேர் மீது கால் வைத்து, டேபிள் மீது ஏற முயற்சிக்க, அவள் கை அந்த மாவு இருந்த பாத்திரத்தில் பட்டு, மொத்தமும் இவள் மண்டை மீது தான் இருந்தது. பாத்திரம் தரையில் உருளும் சத்தம் கேட்டு, இளா வந்து பார்க்க, நியாயமாய் மாவை கொட்டியதற்கு கோவப்பட வேண்டியவன், இவள் கோலத்தைப் பார்த்ததும், சிரிப்பு தான் வந்தது.

"போ. இப்போவாச்சும் போயி குளிச்சிட்டு வா" என்று அவன் சொல்ல, "அதெல்லாம் முடியாது. ஒர்க் ஃபர்ஸ்ட் மத்ததெல்லாம் நெக்ஸ்ட். இப்போ நான் குளிக்கப் போனா, நீ அதுக்குள்ள மாவு பெசஞ்சிடுவ. என்ன ஆனாலும் நான் இன்னைக்கு மாவு பெசஞ்சிட்டு தான் போவேன்" என்று விடாப்பிடியாக அமர, வேறு பாத்திரத்தில் மாவு கொண்டுவந்து, அவளையும் டேபிள் மீதி ஏற்றி அமர வைத்தான்.

இவன் தண்ணீர் ஊற்ற ஊற்றப் பிஞ்சி விரல்கள் கொண்டு பிசைந்துகொண்டிருந்தாள் அவள். இவ்வளவு நேரம் ஒழுங்காகப் பிசைந்துகொண்டிருந்தவள் திடீரென, "இளா. ஷர்மி அம்மா. சப்பாத்தில சாஸ் போட்டுக் குடுப்பாங்க.நம்மளும் சாஸ் ஊத்தலாம்" என்று சொல்லிக் கீழே குதித்து, இவன் வேண்டாம் என்று சொல்வதையும் காதில் வாங்காமல் சாஸ் பாட்டிலை தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள்.

"ஏய். அது சப்பாத்தி சுட்டதுக்கு அப்புறம் தான் சாஸ் ஊத்தணும்" என்று அவன் சொல்வதை கேட்காமல், மாவில் சாஸ் ஊத்த போக, அதை மாறன் தடுப்பதற்காக அவள் பக்கம் திருப்ப, அவள் வெள்ளை கவுனில் அங்கங்கு டொமட்டோ சாஸ்.

வெள்ளை கவுன். அதில் ரத்த கரை போல, ஆங்காங்கு சாஸ் கரை. காலையில் ரெட்டை சிண்டு போட்டு அனுப்பியது. இப்பொழுதோ ஒரு சிண்டு அவிழ்ந்து தொங்கிக்கொண்டிருக்க, இன்னொரு சிண்டு அதன் இடத்தில் அசையாமல் நின்றிருந்தது. பத்தா குறைக்கு, மூஞ்சி முழுக்க மாவு வேறு. மொத்தத்தில் அழகு பொம்மை. இப்பொழுது அனபெல் பொம்மைபோல் இருந்தாள்.

அந்த நேரம் பார்த்துக் கரண்ட் வேறு நின்றுவிட்டது. நிலாவுக்கும் மாவு பிசைந்து போர் அடித்துவிட்டது.

எப்பொழுதும் கரண்ட் நின்றுவிட்டால், 5 நிமிடங்களுக்குள் ஜெனெரேட்டர் ஆன் செய்து விடுவார்கள் அந்த அப்பார்ட்மென்டில். ஆனால், இன்று ஏனோ கால் மணி நேரம் ஆகியும் ஆன் செய்யவில்லை. ஏதோ கோளாறுபோல.

"ஐயோ. ஒரே வேர்வையா இருக்கே. இங்க என்னால உக்கார முடியாது. நான் கீழ பார்க்குக்கு போறேன்" என்று அவள் கிளம்ப, "இந்தக் கோலத்துலயா? மூஞ்ச மட்டுமாச்சும் கழுவு டி" என்று இளா சொல்ல, "அது வேர்வையில தானா கழுவிக்கும் போ" என்று சொல்லிவிட்டு அவன் பேச்சைக் கேக்காமல் சென்றாள் அவள்.

அந்தக் கோலத்திலேயே அவள் கீழே செல்ல, நீச்சல் குளம் அருகில் இவளின் நட்புக் கூட்டம் அமர்ந்திருக்க, அங்குச் சென்றாள். அந்தக் கூட்டத்து உறுப்பினர்கள் எல்லாம், இவள் வயது பொடுசுகள் தான்.

இவளை இந்தக் கோலத்தில் பார்த்ததும், அடையாளம் கண்டுபுடிக்க முடியாமல், "அய்யோ.... அம்மா... பேயி..." என்று கத்திக்கொண்டு, அந்த இடத்தை விட்டு ஓடியே விட்டனர்.

"எதுக்கு நம்பள பார்த்து ஓடுறாய்ங்க எல்லாரும்?" என்று யோசித்துக்கொண்டே, நீச்சகுளத்தில் தன் பிம்பத்தைப் பார்க்க, "ஆத்தி! நமக்கே கொஞ்சம் பயமா தான் இருக்கு. பேயி மாதிரி தான் இருக்கோம்" என்று நினைத்துக்கொண்டவள், "இது தான் நல்ல வாய்ப்பு. இந்த அப்பார்ட்மெண்ட்ல நம்ப கிட்ட வம்பு பண்ண அத்தனை பேரையும் இன்னைக்கு பயம்புடுத்த போறேன்" என்று கிளம்பினாள் அவள்.

இவளைப் பார்த்து ஓடிப்போன பிள்ளைகள் அனைத்தும், அவர்கள் பெற்றோரிடம் பேயைப் பார்த்தோம் என்று கூற, முதலில் சும்மா விளையாடுகிறார்கள் என்று எண்ணிய பெற்றோர், சொல்லி வைத்தார் போல, அத்தனை பிள்ளைகளும் பேயைப் பார்த்ததாக கூற, அவர்களுக்கும் கொஞ்சம் நம்பிக்கை வரத்தான் செய்தது.

அவர்கள் ஏற்கனவே பயத்தில் இருக்க, நம் குட்டி இளா வேறு இன்னும் பயம்புறுத்த கிளம்பிக்கொண்டிருந்தாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
இளநிலாவின் வால்தனங்கள் சூப்பர்
ரைனோசரிடம் பெரிய இளாவுக்கு நாளைக்கு ஒரு கச்சேரி இருக்கு
ஹா ஹா ஹா
 

Kamali Ayappa

Well-Known Member
ஹா ஹா ஹா
இளநிலாவின் வால்தனங்கள் சூப்பர்
ரைனோசரிடம் பெரிய இளாவுக்கு நாளைக்கு ஒரு கச்சேரி இருக்கு
ஹா ஹா ஹா

அது சிக்கும் போது பாத்துக்குவோம்:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top