மை டியர் டே(டெ)டி - 11

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
“நாளைப் பள்ளிக்குச் செல்லமாட்டேன்!” என்று பிடிவாதமாய் சொல்லி அறைக்குள் சென்று படுத்துக்கொண்டவளை வினோதமாய் பார்த்துக்கொண்டிருந்தான் மாறன்.

ஏனெனில், பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம்பிடிப்பவள் இல்லை அவள். “வழக்கம்போல ஏதாவது ஏழரையை கூட்டி வச்சிருக்குமோ?” என்று யோசித்தவனுக்கு, “அப்டி கூட்டினாலும்... அதுக்கெல்லாம் அசரும் ஆளா டா உன் பொண்ணு!” என்று அவனையே திருப்பிக் கேட்டது அவன் மனசாட்சி.

“வேற என்னவா இருக்கும்?” என்று யோசித்திருந்தவன் மூளைக்கு அதிக வேலை கொடுக்காமல், பதில் சொன்னது அவன் அலைபேசிக்கு வந்த அடுத்தக் குறுஞ்செய்தி.

“நாளை அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதால், மாணவர்களுடன் அவர்கள் அன்னையர்களும் வருகைத் தர வேண்டிக்கொள்கிறோம். அன்னையர்களுக்கு சில போட்டிகளும், அதற்கானப் பரிசுகளும் உண்டு!” என்ற குறுஞ்செய்தியுடன் நாளை அன்னையர்களுக்கு நடக்கவிருக்கும் போட்டிப் பட்டியலும் இணைத்திருந்தார்கள்.

‘என்னது? பசங்க எல்லாம் அம்மா கூட வரணுமா? இவனுங்க மதர்ஸ் டே கொண்டாடல’ன்னு யாரு டா அழுதா?’ என்று உள்ளுக்குள் நொந்துக் கொண்டான். சட்டெனச் சுருங்கிய நிலாவின் முகம் வருத்தியது அவனை.

அந்த அறையின் வாசலில் நின்றவாறே, கட்டிலில் படுத்து, தலையணையில் முகம் புதைந்திருந்த தன் மகளை மௌனமாய் பார்த்திருந்தான் அவன்.

தாயை நினைத்து ஏங்கும் தன் மகளைச் சரி செய்ய வார்த்தைகள் அளிக்காமல் சதி செய்தது அவன் தாய்மொழி. வெகுநேரம் மௌனம் மட்டும் நிலவவும், புதைந்திருந்த முகத்தைச் சற்று இவன் பக்கம் திருப்பி, ஒரு கண்ணை மட்டும் திறந்துப் பார்த்தாள் நிலா.

இவன் நின்ற இடத்திலேயே அமைதியாக நிற்கவும், படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்து, “ஏன் அங்கேயே நிக்குற?” என்று மாறனைப் பார்த்துக் கேட்க, அறைக்குள் நுழைந்து, அவளைத் தன் மடியில் வைத்து அணைத்துக்கொண்டான்.

அவன் அணைப்புக்குள் அடங்கியிருந்தாள் அவளும். இன்னும் சில நிமிடங்களை மௌனம் தத்தெடுத்திருந்தது. ஆனால், ‘வார்த்தைகளா? உணர்வுகள் கொண்டு உரையாடுவோருக்கு அவை அவசியம் இல்லை!’ என்று நிரூபித்திருந்தனர் அவர்கள்.

அந்தச் சில நிமிட மௌன அணைப்பில் நடந்தது, ஆயிரம் ஆயிரம் உணர்வுப் பரிமாற்றம். சில நேரம் முன்பு, இவர்களுக்கு வார்த்தைகள் அளிக்காமல் சதி செய்திருந்த தாய்மொழி, இப்பொழுதோ, ‘அப்போ நான் வேண்டாமா?’ என்று பொறாமை கொண்டது, இவர்கள் பயன்டுத்திய மௌன மொழியின் மீது.

நிலாவின் கரிசனம் வெகுவாய் கிட்டியது தமிழுக்கு. இதோ, தமிழ் மொழியில் அவள் அறிந்த அழகான வார்த்தை அவள் மழலை மொழியில் புதிதாய் ஜனித்தது. “அப்பா...” என்று அழைத்தவள் அவன் முகம் பார்க்க, அவனோ அந்த அழைப்பில் கட்டுண்டு அவள் முகமெங்கும் முத்தமழை பொழிந்துக்கொண்டிருந்தான்.

அவள் குரலில் கேட்கும் போதெல்லாம் அவனுக்கும் பிடித்தமான தமிழ் வார்த்தையாக மாறிவிடுகிறது அவ்வார்த்தை. ‘அப்பா’ என்று அழைப்பதில் நிலா கஞ்சம் தான். எப்பொழுதும் ‘இளா...’ தான். சில நேரம் ‘பேபி’, அதிசயமாய் ‘டாடி’. ‘அப்பா’ என்ற அழைப்பு அதிசயத்திலும் அபூர்வம். அந்த அபூர்வம் இன்று நிகழப் பூரித்தான் அவன்.

“பாப்பா. நாளைக்கு மதர்ஸ் டே செலிப்ரேஷனாம். நீங்கப் போக வேணாம் நாளைக்கு ஸ்கூலுக்கு ஒன்னும். நான் மிஸ் கிட்ட பேசிக்கறேன்!” என்று நிலாவிடம் சொல்ல, “ஆனா... ஆனா...” என்று இழுத்தாள் நிலா.

“என்ன?” என்று மாறன் கேட்க, “இளா... ‘நாளைக்கு எல்லாரும் அம்மாவைக் கூட்டிட்டு வரணும்’ன்னு மிஸ் சொன்னாங்க. அப்போ என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம். ‘எங்க அம்மா தான் எல்லா போட்டிலயும் ஜெயிப்பாங்க. எங்க அம்மா தான் ஜெயிப்பாங்க’ன்னு சண்டை போட்டுக்கிட்டாங்க. நான் மட்டும் அமைதியா இருந்தேன். அப்போ கவி வந்து ‘என்ன உங்க அம்மா ஜெயிக்க மாட்டாங்களா? நீ அமைதியா இருக்க’ன்னு கேட்டா. அதுக்கு கேஷவ்'ல, ‘அவங்க அம்மா வரவே மாட்டாங்க’ன்னு சொல்லிச் சிரிச்சான். அத கேட்டு எல்லாரும் சிரிச்சாங்க. நான் அதுக்கு, ‘எங்க அம்மா வருவாங்க’ன்னு சொல்லிட்டேன்” என்றாள் நிலா.

“அடியேய்! அம்மா எப்படி டி வருவாங்க?” என்று மாறன் கேட்க, “நீ தான சொல்லிருக்க. ‘அம்மா இல்லைனு ஃபீல் பண்ணக் கூடாது. அம்மா செய்யறது எல்லாம் நானே செய்றேன்’ன்னு. மதர்ஸ் டே செலிப்ரஷன்க்கும் நீயே வா அப்போ. வந்து போட்டில எல்லாம் ஜெய்ச்சிக் காட்டு” என்றாள் அவள் கைகளைக் கட்டிக்கொண்டு.

“ஏய். நான் வந்தாலும் என்னைப் போட்டில எல்லாம் கலந்துக்க விடமாட்டாங்க” என்று மாறன் சொல்ல, “ஏன் மாட்டாங்க?” என்றாள் அவள் புருவங்களைச் சுருக்கி.

“ஏன்னா. அதுல எல்லாம் லேடீஸ் தான கலந்துக்கறாங்க. நான் ஜென்ட்ஸ்ல. என்னைச் சேர்த்துக்க மாட்டாங்க” என்றான் மாறன். “ஓஹ்! அது தான் பிரச்சனையா? அப்போ நீ என்ன பண்ணுறன்னா! லேடீஸ் மாதிரி வா. அப்போ எல்லாரும் உன்னையும் கேம்ஸ்ல சேர்த்துக்குவாங்க” என்றாள் நிலா அதிகாரமாய்.

“அடியேய்ய்ய்! குட்டி சாத்தான்” என்று அவள் கன்னத்தை நறுக்கெனக் கிள்ளியவன், “அதெல்லாம் போட முடியாது!” என்றான். “என்னது முடியாதா?” என்று அவன் கன்னத்தைக் கடித்து வைத்தாள் அவள். “ஆஆஹ்ஹ்ஹ். வலிக்குது டி” என்று அவன் கன்னத்தைத் தேய்க்க, “ச்சீ. ஒரே உப்பு கரிக்கற நீ. ஏய். உண்மைய சொல்லு. பல் துலக்க வாங்கி வச்சிருக்க ‘கோல்கேட் ஆக்ட்டிவ் சால்ட்’ போட்டு மூஞ்சி கழுவிட்டியா நீ? அதனால தான் கன்னத்துல கடிச்சா உப்பு கரிக்கிது?” என்று கேட்டாள் நிலா.

“நீ இந்த டி.வி விளம்பரம் எல்லாம் ரொம்ப அதிகமா பாக்குற போலக் குட்டி இளா” என்று அவன் சொல்ல, “ம்ம்கூம்” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள்.

“என்ன? இங்க பாரு?” என்று மாறன் அழைக்க, “நீ லேடி கெட்டப்’ல வரேன்’ன்னு சொல்லு. அப்போ தான் பார்ப்பேன் உன்ன” என்றாள் நிலா தீர்மானமாய்.

“சரி” என்று மாறன் சொல்லவும் தான் தரைக்கும் தளத்துக்கும் துள்ளிக் குதித்துக்கொண்டு அவனிடம் ஓடிவந்தாள் அவள்.




அவனிடம் வந்து அவன் தாடையை பிடித்துச் செல்லம் கொஞ்ச, “கொஞ்சுறது எல்லாம் இருக்கட்டும். பொண்ணு வேஷம் எப்படி போடுறது சொல்லு?” என்று கன்னத்தில் கை வைத்துக்கொண்டு கேட்டான் அவன். “அதான் அம்மா புடவை எல்லாம் இருக்குல்ல” என்று நிலா சொல்ல, “புடவையா? எனக்கும் புடவை கட்ட தெரியாதே. அதுவும் இல்லாம, புடவை கட்டுனா இடுப்பு எல்லாம் தெரியும். எனக்கு ஒரே கூச்சமா இருக்குமே!” என்றான் மாறன். “என்னது? கூச்சமா இருக்குமா?” என்று முகம் சுழித்தவள், “அப்போ அம்மாவோட சுடிதார். ஜீன்ஸ். டாப்ஸ் எல்லாம் இருக்குல்ல” என்று அடுத்த ஐடியாவை இறக்கினாள்.

“அதெல்லாம் எனக்குப் பத்தாதே!” என்று மாறன் சொல்ல, நிலமதியின் ஒரு சுடிதாரை எடுத்து வந்து அவன் மீதி வைத்துப் பார்த்தவள், “கண்டிப்பா பத்தாது! நீ ஏன் இப்டி பெருசா இருக்க. போ” என்றவள் எதையோ யோசித்தவளாய, “ஐடியா!” என்றாள், மீண்டும் முகம் பளிச்சிட.

“என்ன? என்ன?” என்று மாறன் கேட்க, “இந்த விக் பாட்டி இருக்காங்கல்ல. நான் அன்னைக்கு குட்டி சாத்தான் வேஷம் போடுறதுக்காக அவங்க வீட்ல இருந்து விக்(wig) எடுக்கப் போனேன்ல. அப்போ அந்தப் பாட்டி ஒரு கவுன் (gown) போட்டு அழகு பார்த்திட்டு இருந்தாங்க. அதைத் தூக்கிடவா? உனக்குச் சரியா இருக்கும் அது” என்று கண்கள் மின்ன அவள் சொல்ல, “செம ஐடியா. ஆனா, அந்தக் கவுன் எப்படி தூக்குறது? ஏற்கனவே தான் நம்ப மேல அந்தப் பாட்டி காண்டுல இருக்கு. மாட்டுனா கைமா தான்” என்று அவன் சொல்ல, ஆமோதித்தாள் நிலாவும்.

“ஆனா. எப்படியும். அந்தக் கவுன். அப்புறம் விக் எல்லாம் வேணுமே. அப்புறம் அந்தப் பாட்டியோட மேக்கப் பாக்ஸ் கூட வேணும்” என்று நிலா சொல்ல, “மறுபடியும் குட்டி சாத்தான் வேஷம் போடலாமா?” என்றான் மாறன்.

“போடலாமே!” என்றாள் அவளும் ஆவலாய். “இளா! நீ ஒன்னு பண்ணு. காலைல உனக்குச் செய்து குடுத்த மாதிரி லெமன் ஜூஸ் போட்டுத் தாரேன். நீ அதைப் போய் அந்தப் பாட்டி கிட்ட குடுத்து பேசிகிட்டு இரு. நான் அந்தக் கேப்ல போய் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்துடறேன்!” என்று அவள் கிளம்ப, “ஆத்தாடி. கொலைகேஸ் நம்ப மேல தான வரும்” என்று பதறினான் மாறன்.

“குட்டி இளா. நில்லு நில்லு. இந்த யோசனை சரி வராது. நீ உள்ள போய் எடுத்தாலும் திரும்ப வரும்போது மாட்டிக்குவ. அதனால நான் வேற ப்ளான் சொல்றேன். நான் போய் நம்ப ஃப்ளோர் பவர் கனெக்ஷன் கட் பண்றேன். நீ கரண்ட் இல்ல. அப்டி இப்டி’ன்னு ஏதாவது ரகள பண்ணி அவங்கள அங்க இருந்து இழுத்துட்டு போ. நான் அந்தக் கேப்’ல அவங்க வீட்டுக்குள்ள புகுந்து நான் எல்லாத்தையும் தூக்கிடுறேன்” என்றான் மாறன்.

“திருப்பி வரும்போது நீ மாட்டிக்கிட்டா?” என்று நிலா கேட்க, “நான் திரும்பி வரும்போது, அந்த விக், கவுன் எல்லாம் போட்டுக்கிட்டு பெரிய சாத்தான் வேஷத்துல வந்துடறேன் நானு” என்றான் மாறன். “அதுக்கு இப்படியே போகக் கூடாது” என்று சொன்னவள், அவன் மண்டை மீது பௌடரை கொட்டியவள், தலையை நன்றாகக் கலைத்துவிட்டு, அவன் முகத்தில் அங்கு அங்கு மை தடவிவிட்டு, “இப்போ போ. சரியா இருக்கும்” என்றாள் நிலா.

இருவரும் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினர்.

மாறன் சென்று அந்த ஃப்ளோரின் பவர் கனெக்ஷனை துண்டிக்க, நிலாவோ அந்த விக் பாட்டியின் கதவை பலமாகத் தட்டிக்கொண்டிருந்தாள்.

“என்ன? “ என்று அந்தப் பாட்டி வந்து கதவைத் திறக்க, “என்னவா? என்ன பண்ண வச்சிருக்கீங்க? நம்ப ஃப்ளோர்ல மட்டும் கரண்ட் இல்லை. அதுக்கு நீங்க தான் காரணமாம்” என்று அவர் வாசலில் நின்று கத்திக்கொண்டிருந்தாள் நிலா.

“கரண்ட் நின்னுச்சுன்னா அதுக்கு நான் என்ன டி பண்றது?” என்று அந்தப் பாட்டி கேட்க, “நீங்க தான் கரண்ட் நிறுத்தினீங்களாமே!” என்றாள் நிலா. “என்னது? நான் ஏதும் பண்ணல. நான் பண்ணேன்’ன்னு யார் சொன்னா?” என்று பாட்டி கேட்க, யோசித்தவள், “வாட்ச் மேன் அங்கிள் சொன்னாரு! வாங்க போய் அவர் கிட்ட கேப்போம்” என்று அவரை இழுத்துச் செல்ல, “அப்படியா சொன்னான்? செத்தான் இன்னைக்கு” என்று நிலாவுடன் சென்று வாட்ச்மேனிடம் காச் மூச் கத்திக்கொண்டிருந்தார் விக் பாட்டி.

ஒன்றும் புரியாமல் குழம்பிய வாட்ச்மேன், “கொஞ்சம் இருங்க. இப்போ எதுக்கு என்னைத் திட்டறீங்க?” என்று கேட்க, “எங்க ஃப்ளோர்ல மட்டும் கரண்ட் போனதுக்கு இந்தப் பாட்டி தான் காரணம்’ன்னு சொன்னீங்க இல்ல...” என்றாள் நிலா. “ஐயோ. நான் அப்டி எல்லாம் சொல்லல” என்று அந்த வாட்ச்மேன் பதற, “நானும் இல்லைன்னு தான சொன்னேன்” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள் நிலா. “என்னடா இது ஒளறுது” என்று ஒருத்தரை ஒருத்தர் பாட்டியும், வாட்ச்மேனும் பார்த்துக்கொண்டனர்.

வாட்ச்மேன், "நான் போய் ஏன் கரண்ட் கட் ஆச்சுன்னு பார்த்துட்டு வரேன்" என்று வாட்ச்மேன் நழுவ, "ச்ச. கரண்ட் போனாலும் விடாம ஹாட்ஸ்டார்ல சீரியல் பார்த்திட்டு இருந்தன். இப்டி என்னை அஞ்சு மாடி இறங்கி வர வச்சிடுச்சி குட்டி சாத்தான்" என்று நிலாவை வசை பாடிக்கொண்டே அவர் தளத்திற்கு போக, அங்கு அவர் வாசலுக்கு அருகே பெரிய சாத்தான் வேஷத்தில் நின்றிருந்தான்.

நிலா போட்டுவிட்ட பேய் வேஷத்தோடு சேர்ந்துகொண்டது, அந்தப் பாட்டியின் விக்கும், கவுனும். பேய் படத்தில் வருவது போல் ஓசையை வேறு அவன் அலைபேசியில் ஓடவிட்டிருந்தான். அதைப் பார்த்த பாட்டி, 'ஐயோ. அன்னைக்கு வந்த குட்டி சாத்தான் வளர்ந்து வந்துடுச்சு போலயே' என்று விக் பாட்டி பயப்பட தொடங்கிய நேரம் கரண்ட் வந்துவிட்டது. 'அய்யோ. மாட்டிக்குவோமோ?' என்று மாறன் யோசித்த நேரம், பேய் படங்களில் வருவது போல லைட் மின்னி மின்னி எரிய தொடங்கியது. நிலா தான் அந்தக் காரிடார் லைட் ஸ்விட்சை நிறுத்தி நிறுத்திப் போட்டுக்கொண்டிருந்தாள்.

அதில் இன்னும் பயந்த விக் பாட்டி அலறிக்கொண்டு செக்ரெட்டரியிடம் ஓட, விக் பாட்டியிடம் சுட்ட பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவர்கள் ஃப்ளாட்டிற்கு வந்து சேர்ந்தனர் மாறனும் நிலாவும்.

உள்ளே வந்ததும் மாறனின் வேஷத்தை கலைத்துவிட்டு, "அப்பாடா! நாளைக்கு பொண்ணு வேஷம் போடத் தேவையான பொருட்கள் எல்லாம் ரெடி ஆகிடுச்சு!" என்று பெரு மூச்சி விட்டார்கள் இருவரும்.

"நாளைக்கு லேடி கெட்டப்ல போறோம். போட்டியில கலந்துக்கறோம், பரிசு எல்லாம் தட்டுறோம் தூக்கறோம்!" என்று சொல்லி மாறன் கை உயர்த்த, அவனோடு ஹை-ஃபை அடித்துக்கொண்டாள் நிலா.



அன்றைய இரவு நாளைக்கான ஆயத்தங்கள் செய்வதிலே கழிய, இன்று மாறன் நிலாவிடம் சொல்ல எண்ணியிருந்த அந்த விஷயத்தை சொல்லவே இல்லை.



இன்று ஒரு முறை அவள் முகம் சுறுங்கிப் பார்த்தவன், அதைச் சொல்லி மீண்டும் ஒரு முறை சுறுங்க வைக்க விரும்பவில்லை.






This scene is inspired from a real incident! (நிலாவொட mother's day celebration க்கு மாறன் ladies outfit ல போகும் சீன்)

Link

Trending stories on Indian Lifestyle, Culture, Relationships, Food, Travel, Entertainment, News and New Technology News - Indiatimes.com
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கமலி ஐயப்பா டியர்

ஹா ஹா ஹா
குட்டி நிலாவின் அம்மாவா மாறன் பெண் வேஷத்தில் ஸ்கூலுக்கு போகப் போறானா?
சூப்பர் சூப்பர்
நிறைய போட்டிகளில் ஜெயித்து நிறைய பரிசுகள் வாங்கிட்டு வா, மாறன்
குட்டி நிலாவிடம் மாறன் என்ன விஷயத்தை சொல்லாமல் விட்டான்?
இவன் அமெரிக்கா போக வேண்டியதையா?
மாறன் ஒரு அற்புதமான மனிதன்
பொண்ணு முகம் சுருங்கக் கூடாதுன்னு நினைக்கும் அருமையான அப்பா
 
Last edited:

Janavi

Well-Known Member
சந்தோஷமான நிகழ்வு தான் என்றாலும் ,கொஞ்சம் ரெண்டு பேரின் நிலையை நினைத்து மனம் வலிக்கிறது....
 

Kamali Ayappa

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கமலி ஐயப்பா டியர்

ஹா ஹா ஹா
குட்டி நிலாவின் அம்மாவா மாறன் பெண் வேஷத்தில் ஸ்கூலுக்கு போகப் போறானா?
சூப்பர் சூப்பர்
நிறைய போட்டிகளில் ஜெயித்து நிறைய பரிசுகள் வாங்கிட்டு வா, மாறன்
குட்டி நிலாவிடம் மாறன் என்ன விஷயத்தை சொல்லாமல் விட்டான்?
இவன் அமெரிக்கா போக வேண்டியதையா?
மாறன் ஒரு அற்புதமான மனிதன்
பொண்ணு முகம் சுருங்கக் கூடாதுன்னு நினைக்கும் அருமையான அப்பா


Aamaa..lady getup potu viduvom maaran ku..

Yes yes.. America pora vishayam dhaan..

Thank you so much bhanu maa:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top