முரண்பாடே காதலாய் 2

Advertisement

RajiChele

Well-Known Member
Interesting ud sisi!!! Antha police ah vanthathu chandrayan ah?? Ipo avan kuda irukurathu yashi ya??
Neraya secrets irukum polaye sisi!!
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
காதல் என்பதே முரண் தானோ??
பயத்தின் நிழல்கூட தீண்டாதவனையும்,
தன் ஒருநிமிட மௌனத்தில் பயம்கொள்ள செய்கிறாள் மங்கையவள் ...!!!


அத்தியாயம் 2 :

வடக்காலத்தூர் :
அக்காட்டினில் இருந்து மிகுந்த தொலைவில் தெரியும் மக்கள் நடமாட்டத்தை கண்களில் ஆசை வழிய பார்த்தபடி இருந்தாள் சந்திரிகா . காட்டின் ஓரத்தில் இருந்த அம்மரத்தின் கிளையில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவளின் கருங்கூந்தல் மயிலின் தோகை போல் அக்கிளையின் பக்கவாட்டில் விரிந்திருக்க , கண்களில் வெளிப்பட்ட ஆசையில் அவளின் கண்களின் கரும்பாவைகள் இரண்டும் வைரமாய் ஜொலித்தது .

"சந்திரிகா" என தன் தாய் அழைக்கும் குரலை உணர்ந்தவள் ,

" ஈசனே! இந்த அம்மா எப்படி தான் நான் மனிதர்களை பார்ப்பதை உணர்கிறார்களோ! மிக சரியாய் அழைத்துவிடுகிறார் " என மனதினுள் புலம்பியவள் விரைவாக தன்னுருவான பாம்பின் உடலுக்கு மாறியவாறு கிளைகளிலிருந்து ஊர்ந்து இறங்கி, வேகவேகமாய் தங்கள் இருப்பிடம் நோக்கி விரைந்தாள் .

￰வடகாலத்தூரில் உள்ள அக்காட்டுப்பகுதியின் மத்தியில் ஏறத்தாழ மண்ணிற்க்குள்ளே உள்ளது " சந்திரமதி " என்னும் அவளின் ஊர்.

"நூறு ஆண்டுகளுக்கும் மேலான ஆயுளுடன் , மூவுலகையும் ஆளும் ￰எம்பெருமான் பரமேஷ்வரரை மட்டுமே துணையாய் எண்ணி வாழும் பல நூறு இச்சாதாரி நாகங்களின் இருப்பிடமே அந்த "சந்திரமதி".

மனிதர்கள் அக்காட்டுப்பக்கம் வந்து சில நூறு ஆண்டுகள் கடந்திருக்க , அங்கு வாழும் இளம் இச்சாதாரி நாகங்களுக்கு மனிதர்கள் மற்றும் அவர்களின் குணநலன்கள் பற்றி கடுகளவு கூட அறியப்படாமலே இருந்தது .

அதற்க்கு நேர்மாறாய் மூத்த தலைமுறை , மனித குலத்தை தான் தங்கள் இனத்தின் முதல் எதிரியாய் கருதியது. அவர்களின் கண்களில் அகப்பட்டுவிடக் கூடாதென்பதற்காகவே இளைய தலைமுறை இச்சாதாரிகளுக்கு "சந்திரமதி" -யை விட்டு வெளியில் செல்வதற்கு தடை விதித்திருக்கிறது .

வெளியில் செல்லவேண்டுமென்றால் அது அக்காட்டின் இறுதியில் இருக்கும் மலையின் மேல் அமைந்துள்ள தங்களின் குலம் காப்பவரான "புற்றீஸ்வரர்"- ரின் ஆலயத்திற்கு மட்டுமே செல்ல அனுமதி உண்டு."

பல இச்சாதாரிகள் வாழும் சந்திரமதியின் இன்றைய ராணி "சிந்திரை" தான் அழைத்த￰ பின்பும் வராத தன் மகளை எண்ணி வழக்கம்போல் மனம் பதைத்த வேளையில் அவரின் முன் வந்து நின்றாள் "சந்திரிகா" .

அவளை கண்டவரின் கண்கள் கோபத்தில் பொன்னிறமாக மாற, " எங்கு சென்றிருந்தாய் சந்திரிகா " என அன்னையாய் மட்டுமில்லாமல் ராணி என்னும் கம்பீரத்துடன் கேட்டதில்,

" அம்மா...!! நான் இன்று எம்பெருமான் பரமேஸ்வரரின் ஆலயம் சென்றிருந்தேன். வரும் வழியில் மிகவும் களைப்பாக இருக்கவே அங்கிருந்த மரத்தின் கிளையில் ஓய்வெடுத்தேன்" என ஏதும் அறியா பெண் போல் சொல்ல,

ராணி என்றால் அவ்வளவு இலகுவாய் ஏமாறுபவராய் என்ன? அவர்களின் ஒட்டுமொத்த இச்சாதாரிகள் இனத்தையே இத்தனை ஆண்டுகளாய் கட்டுக்கோப்பாய் வைத்து வருபவருக்கு தன் மகளின் கண்களில் மறைந்திருக்கும் பொய்யை அறியமுடியாமல் போகுமா என்ன?.

அதுவுமில்லாமல் கடந்த சில நாட்களாகவே சந்திரிகாவின் பார்வை மனிதர்களை ஆசையுடன் தொட்டுவருவதை உணர்ந்திருந்த சிந்திரை , " போதும் உனது பொய்கள்....நான் சொல்வதை கேளடி!! மனிதர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் சந்திரிகா . நம் இனத்தவரின் முக்கிய எதிரியே அவர்கள் தான்.மனிதர்களின் கண்களில் நாம் தென்பட்டோமானால் அது நமது உயிருக்கு மட்டுமில்லாமல் அதை தொடர்ந்து நம்மினத்திர்கே ஆபத்தாய் தான் முடியும் " என தன்னால் முடிந்தவரை தன் மகளின் மனிதர்களின் மேலான ஈடுபாட்டை கலையமுற்பட்டார் .

தனது அன்னையின் வார்த்தைகளை லட்சியம் செய்யாத சந்திரிகா,"அம்மா!! இதை சொல்லத்தான் என்னை அழைத்தீர்களா ?" என சிறு முகசுளிப்புடன் வினவ , அவளின் புரிந்துகொள்ள விரும்பா பாவனையில் மீண்டுமாய் அவளிடம் பேசவிளைந்த சிந்திரையை தடுத்தது, அவரின் கணவரும் அவர்கள் இனத்தின் இன்றைய ராஜாவுமாகிய "நாக புத்திரர்" -ரின் குரல்.

"சிந்திரை!! இன்று நாம் பூஜைக்கு செல்ல வேண்டும் என்பதை மறந்தாயா என்ன? பூஜைக்கு ஆயத்தம் செய்யும் வேளையில் தாயும் மகளும் என்ன வழக்காடி கொண்டிருக்கிறீர்கள்" என கேட்டுக்கொண்டே வந்த நாக புத்திரர்... ராஜாவிற்கே உரிய ஆளுமையுடனும், ராஜாநாகத்திற்க்கு மட்டுமே இருக்கும் சில சக்திகளின் விளைவால் முகத்தில் ஏற்பட்ட பொலிவுடனும் காணப்பெற்றார்.

பொதுவாக இச்சாதாரி நாகங்கள் ,தாங்கள் நினைத்த தோற்றத்திற்கு நினைத்த நேரத்தில் உருமாறும் சக்தி கொண்டவை. ராஜநாகமோ உருமாறும் சக்தி மட்டுமின்றி எவ்வுயிரனத்தையும் வசியபடுத்தும் சக்தியையும் கொண்டது.

நாகங்களுக்கே உரித்தான விஷத்தன்மை இச்சாதாரிகளுக்கு பலமடங்காய் இருந்தபோதும் , விஷ மூச்சுக்காற்றை வெளியிடும் ஆற்றல் ராஜநாகத்திற்கே உரியது .

தங்கள் குலத்தை பொறுப்புடன் ஆண்டு எத்துயரத்திலும் அவர்களின் நலம் காக்கும் மனோபலம் வாய்க்கப்பெறுவரை ராஜநாகமாய் தேர்ந்தெடுப்பது , மூவுலகின் நாகங்கள் அனைத்திற்கும் முதன்மையானவராய்..... இந்த உலகையே தன் தலை மேல் வைத்து காத்துவருவதாய் நம்பப்படும் "ஆதிசேஷரே "என நாககுலமக்கள் முழுமனதாய் நம்புகின்றனர் .

"ஆதிசேஷர் " எவர் ஒருவரை தேர்ந்தெடுகிறாரோ அவர் பிறக்கும்பொழுதே ஈசனின் ஆசியில் ராஜநாகத்திற்கு உரிய சக்திகளுடனே பிறக்க , அவர் வளர வளர அச்சக்திகளும் அவருடன் சேர்ந்து மெருகேறுகிறது.

இச்சக்திகளை கொண்டே தங்கள் குலத்தின் அரசரை கண்டுக்கொள்கிறார்கள் இச்சாதாரி நாகங்கள்.

பல ஆயிரம் தலைமுறைக்கு முந்தைய அவர்கள் இனத்தவர்கள் ஏகப்பட்ட துயரங்களை தாண்டி தங்களின் விஷங்களையெல்லாம் பல ஆண்டுகளாய் ஒன்றாய் திரட்டி சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்ததின் விளைவாய் நூறு ஆண்டுகளுக்கும் மேலான ஆயுளையும் , உருமாறும் வரத்தையும் பெற்றிருந்தனர்.

ஆயினும் சில ஆண்டுகளில் அந்தணர் ஒருவரின் சாபத்தால் பௌர்ணமி தினங்களில் இச்சாதாரி நாகங்கள் தங்களின் முழுசக்தியையும் இழந்துவிடுவது வழக்கமாகியது.

ஆதலால் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மலை மேல் உள்ள "புற்றீஸ்வர்"- ன் ஆலயத்திற்கு சென்று தங்கள் குலம் காப்பவரான ஈசனிடம் அடைக்கலம் தேடுவது சந்திரமதியினரின் வழக்கம் .

சந்திரமதியினர் பௌர்ணமி நாட்களில் சூரியன் மேற்கில் மறைய தொடங்கும் முன்பே "புற்றீஸ்வரர்" ஆலயம் சென்று பரமனே தங்களின் துணை என இரவு முழுக்க அவருக்கு அபிஷேகம் , ஆரத்தி , நடனம் என அவ்விரவை கழிப்பார்கள் .

இன்றும் அத்தகைய முழு பௌர்ணமி நாட்களில் ஒன்றாகும். அதற்கு ஆலயம் செல்ல ஏற்பாடு செய்ய சொல்லும் பொருட்டே ராஜநாகமான "நாகபுத்திரர்" வந்தது.

தந்தையின் கேள்வியை கேட்ட " சந்திரிகா" தனது தாயின் அறிவுரையில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பாய் இதை பயன்படுத்தி, " நானும் அதைத்தான் கூற வந்தேன் தந்தையே! நேரமாகிற்று நான் சென்று பூஜைக்குத் தயாராகுகிறேன்" என அவ்விடத்தை விட்டு செல்ல ,

அவளை தடுத்த நாகபுத்திரர் , " உன் தமையன் எங்கே அம்மா? அவனிடம் இன்றாவது நம்முடன் இணைந்து ஆலயம் வரச்சொல். நம்மினத்தில் அவன் மட்டும் எப்பொழுதும் முரண்பட்டே நிற்பது ஏன் என்று அறியேன்!!?? அவன் வருங்காலத்தில் ராஜநாகமாய் மாறும் சக்தியை வாய்க்கப்பெற்றுள்ளபோது இவ்வாறு நடப்பது சரியல்ல" என தான் ராஜாவாய் இருந்தும் தன் மகனே தங்கள் குலத்தின் பல கட்டுகளை மீறுவதை அறிந்திருந்ததால் யோசனையாய் சொல்ல,

"அவ்வாறெல்லாம் இல்லை அரசே! நமது மகன் தங்களின் மகள் போல் அல்ல, அவன் நம்குலத்தின் மேல் அதீத பற்றுள்ளவன். எப்பொழுதும் நம்மவர்களின் நலம் மற்றும் எம்பெருமானின் சிந்தனைகள்தான் அவன் மனதில் ஓடும். நமக்குப் பிறகு நம் மக்களை பாதுகாத்து அவர்களை நன்முறையில் ஆளும் புத்திக்கூர்மை மற்றும் மனோபலத்தை எம்பெருமான் ஈசன் நம் மகன்"சந்திராதித்யன்"-க்கு நிறைவாய் அளித்துள்ளார் " என தாய்க்கே உரிய பூரிப்புடன் மகனைப் பற்றி தன் கணவரிடமே எடுத்துரைத்தார் சிந்திரை.

அவர் பேச்சிற்கிடையில் தந்தையிடம் தன்னை குறை கூறினாலும் அவரை தொடர்ந்து சந்திரிகாவும், " ஆமாம் தந்தையே! அண்ணன் தங்களை விடவும் புத்திசாலியானவன். எப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதை மிகச் சரியாக அறிந்து இருப்பவன்" என தன்னுடன் பிறந்தவன் மேல் பாசம் பொங்க சொன்னாள் சந்திரிகா.

சந்திராதித்யன் - நாகபுத்திரர் மற்றும் சந்திரையின் மூத்த மகன் , பிறக்கும்பொழுதே ராஜநாகத்திற்கு உரித்தான சக்திகளை கொண்டு பிறந்ததில் அவர்கள் குலமே ராஜபுத்திரற்கு அடுத்து தங்களை காக்க போவது அவனே என்னும் எண்ணத்துடன் சிறுவயதுமுதலே அவனை மரியாதையுடனும் பக்தியுடனும் நடத்தினர் .

இளைய இச்சாதாரிகளுக்கு சந்திராதித்யனின் சொல்லே வேதவாக்கு . ஆனால் அவனோ பிறந்தபொழுதினில் இருந்து ஒவ்வொரு செயலிலும் மற்றவர்களுடன் முரண்பட்டே நின்றான்.

மனைவி மற்றும் மகள் இருவரும் மாற்றி மாற்றி தன் மகனின் புகழ்பாட அதில் உதட்டில் நிறைந்த புன்னகையுடன் இருவரையும் கண்ட நாகபுத்திரர் , " சரி தான்! இப்பொழுது அவன் எங்கிருக்கிறான் என இருவரில் ஒருவர் சொல்லுங்கள் பார்ப்போம் " என கேட்க, தாயும் மகளும் பதில் அறியாமல் முழித்தனர்.

மகளை தேடும் முதலே மகனை தேடிவிட்டிருந்தார் சிந்திரை. அவர் தேடலுக்கு கிடைத்த விடை அவன் சந்திரமதியில் மட்டுமல்லாமல் இந்த காட்டில் எங்குமே இல்லை என்பதுதான்.

ஆனால் அதை நாகபுத்திரரிடம் சொல்லவிடாமால் அவரின் மகன் மீதான பாசம் தடுத்தது .

தன்னுடன் சேர்ந்து தாயும் பதில் சொல்ல முடியாமல் தடுமாறியதில் தன் அண்ணன் எங்கு சென்றிருக்கக்கூடும் என அறிந்த சந்திரிகாவின் கண்கள் இரண்டும் பளபளத்தது பின்னால் நடக்கப்போவதை அறியாமல்.

------------------------------------------------------------------------------------------------------------------------

அந்த காட்டினில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ளது அச்சிறைச்சாலை. .

அங்கிருக்கும் பாதிக்கும் மேலானோர் தாங்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிப்பது போல் இல்லாமல் தங்கள் பண பலத்தையும், ஆள் பலத்தையும் பயன்படுத்தி காவலர்களை தங்கள் வசம் கொண்டு விருந்தினரின் வீட்டுக்கு சென்றது போல் நாட்களை கழித்து கொண்டிருந்திருந்தனர்.

அவர்களின் ஆர்ப்பாட்டத்தால் அச்சிறைச்சாலை கட்சி அலுவலகம் போல் ஆர்ப்பாட்டத்துடன் இருக்க, ஒரேஒரு அறை மட்டும் அமைதியாக இருந்தது .

அவ்வறையினுள் ஒருவன் மட்டுமே இருந்தான் . அவன் இச்சிறைச்சாலைக்கு வந்து இரு வாரங்கள் மட்டுமே கடந்திருந்தது.

அவனுடன் தண்டனை பெற்ற மூவரில் ஒருவன் வேறு சிறைக்கு அனுப்பப்பட , மற்ற இருவரும் இதே சிறைச்சாலையில் வேறுவேறு அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த இரண்டு வாரங்களில் , அவர்கள் இருவருமே ஒருவரை அடுத்து ஒருவர் என சிறைக்குள்ளே தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருக்க , அடுத்து தான் தானோ என்னும் அச்சம் அவனின் மனதை சூழ்ந்திருந்தது .

ஆம் ! அச்சம் தான், அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என அனைவரும் சொன்னபோதும் இவன் அவர்களை அறிந்தவன் ஆகிற்றே, அவர்கள் பயந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்க்கு கோழைகள் அல்லவே.

போலீசாரே அடித்து கொலை செய்து பின் அதை தற்கொலை என மாற்றிவிட்டதாகவே அவனின் மனதில் தோன்றியது.

இவ்வாறு தோன்றிய பின் கடக்கும் ஒவ்வொரு நிமிடமும் தனக்கு என்ன நேருமோ என்னும் பயத்துடனே கடந்தான்.

அதிலும் இன்று மற்றொரு கொலை சம்பந்தமாக அவனை விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஒருவர் வருவதாக சொல்லப்பட்டதில் இருந்து "இது வெறும் விசாரணை தானா ? இல்லை தன்னை கொள்வதற்கான சதி திட்டமா ?" என புரியாமல் வியர்வை வழிந்தோட அறையின் மூலையிலே வருபவரை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான்.

நேரம் மதியம் இரண்டை கடந்திருக்க அச்சிறைச்சாலையின் முன் வந்துநின்றது காவல்துறையின் நான்கு சக்கர வாகனம். அதிலிருந்து ஆணுக்கான சராசரி உயரத்துடன், காவல்துறையினர்க்கே உரிய முறுக்கேறிய உடலும் கூர்மையான கண்களுமாய் இறங்கினான் அவன்.

அப்பொழுது மதிய உணவு நேரம் கடந்திருக்க, சிறைச்சாலை உணவு போல் இல்லாமல் அரசியல்வாதி ஒருவர் உள்ளிருப்பால் ..அவரின் பணபலத்தில் விருந்துணவே கொடுக்கப்பட்டதில் ...அனைவரும் நிறைவாய் உண்ட மயக்கத்தில் இருக்க சிறைச்சாலையே தற்பொழுது மிகவும் அமைதியாய் இருந்தது .

சரசரவென வேகநடையுடன் உள்நுழைந்தவன், அங்கிருந்த காவலர்கள் கூட எவர் வரபோகின்றனர் என்ற அலட்சியத்துடன் அவரவர் இடங்களில் கண்ணயர்ந்திருப்பதை கண்டு, அங்கு கம்பியில் மாட்டப்பட்டிருந்த சிறைகளின் சாவிகள் அடங்கிய சாவிக்கொத்தை மெதுவாய் எடுத்தான் .

அவன் மெதுவாய் எடுத்தபோதும் சாவிக்கொத்து ஒலிஎழுப்பிட அங்கு நாற்காலியில் தூங்கிகொண்டிருந்த சிறை அதிகாரி சிறிதாய் கண்விழித்து எதிரில் இருப்பவனை கண்டு வேகமாய் எழுந்து " குட் அப்டர்நூன் சார் " தூக்கம் முழுதாய் கலையாமல் சல்யூட் வைத்தார் .

அவரின் முன் நின்றவனோ தனது தொப்பியை இடது கையின் கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் கொண்டு சற்றே சாய்வாய் அதை மாற்றி வேறோருபுறம் திரும்பியவன் , ஒரு தலையசைப்புடன் " நான் செல் நம்பர் 109 ல இருக்குறவன விசாரிச்சிட்டு வரேன்" என சொல்லி விரைவாய் அங்கிருந்து நகர்ந்தான் .

அவன் நகர்ந்த பின்பு ,தூக்கம் கலையாததில் அந்த அதிகாரி மீண்டுமாய் தூங்க தொடங்கினான்.

அச்சிறை அறையின் மூலையில் காலையிலிருந்து உணவு உண்ணகூட செல்லாமல் பயத்துடன் அமர்ந்திருந்தவனை கண்ட அவனின் கண்கள் இரண்டும் செங்கனல்களை கக்கியது .

தன்முன் வந்து நின்ற காவல் உடையை கண்டபின் இன்னும் பயத்துடன் சுவற்றுடன் ஒட்டிக்கொண்டான் அக்கைதி .

அதை பார்த்து ஏதோ ஒருவிதத்தில் நிறைவாய் உணர்ந்தவன் , ஒவ்வொரு அடியையும் மெதுவாய் எடுத்து வைத்து அவனை நோக்கி செல்ல ,

அவனின் கண்கள் வெளிப்படுத்திய வித்தியாசமான பாவனையை கண்ட அக்கைதி மாயைக்குட்டப்பட்டதை போல் வேகமாய் எழுந்தவன் இவனை தாண்டிச் சென்று அங்கிருந்த சிறைகம்பிகளில் தன் நெற்றியை முட்டிக்கொள்ள தொடங்கினான்.

மண்டை சற்று பிளந்து ரத்தம் வழிந்தோடிய போதும் நிறுத்தாதவன் , கண்கள் மயக்கத்தில் சொக்க ஆரம்பித்தபின்பே தன் நிலை உணர்ந்தது போல் அதிர்ந்து விலகினான்.

அத்தனை நேரம் அவனை பின் இருந்து பார்த்து கொண்டிருந்தவன், அக்கைதி தன் செயலை நிறுத்தியதில் சிறு புன்னகையுடன் அவனின் அருகில் வந்து அவனை அணைத்துப்பிடித்தான்.

அவன் அணைத்ததும் அதிர்ந்த அக்கைதி இவனை விலக்க போராடி முடியாமல் போக திகிலுடன் , " என்ன... என்...ன" என்று பேச ஆரம்பித்தவனின் வார்த்தையை "ஆ.....ஹக்க்..." என்பதுடன் நிறுத்தியது அவனின் அடிவயிற்றில் குத்தப்பட்ட அச்சிறு கத்தி.

கண்ணின் கருமணி இரண்டும் வெளியில் வரும் அளவிற்கு அக்கைதி எதிரில் இருப்பவனை பயத்துடன் பார்க்க அவனை அணைத்துப் பிடித்திருந்தவனோ சிறு குச்சியால் மண்ணில் கோலமிடுவது போல அவனின் அடிவயிற்றில் அக்கத்தியால் கோலமிட்டுக் கொண்டிருந்தான்.

உடலில் இருந்து ரத்தம் அளவுக்கதிகமாய் வெளிவருது தெரிந்தும், கத்த கூட முடியாமல் அவனை கட்டிப் போட்டிருந்தது எதிரிலிருந்தவனின் கண்கள் .

வாய்விட்டு வலியை சொல்லகூட முடியாமல் அவனின் ஒவ்வொரு அணுவும் முழுதாய் வலியை அனுபவித்தபின்பே அவனின் உயிர் சிறிது சிறிதாய் பிரிய , அதை கண்களிலோ முகத்திலோ உணர்வுகள் எதுவுமின்றி வெறித்த எதிரிலிருந்தவன் , அவனின் இறந்த உடலை தூக்கி தோளில் போட்டு கொண்டு வெளியேறினான்.

அவன் அங்கிருந்து வெளியேறும் நொடியில் தன் தூக்கம் மீண்டுமாய் கலைந்து எழுந்த சிறை அதிகாரி இவனை கண்டுவிட்டவர், " என்ன சார் ...விசாரிச்சிட்டீங்களா?" என கேட்டவரின் கேள்வி அவன் தோளில் தொங்கி கொண்டிருப்பவனின் நிலையை கண்டு அலறலாய் மாறபோக,

அவன் தனது தொப்பியை சற்று விலக்கி அவரை ஆழப்பார்த்தான். இதுவரை கருப்பு நிறத்தில் இருந்த அவனின் கண்களின் கருமணிகள் பச்சை நிறமாக மாற எதிரிலிருந்தவர் கொஞ்சம் கொஞ்சமாய் அனைத்தையும் மறந்து தூக்கத்தில் ஆழ்ந்தார் .

அவன் அங்கிருந்து வெளியேறிய சில மணி நேரங்களில் எல்லாம் அச் சிறைச்சாலையின் தொலைபேசி ஒலிக்க தொடங்கியது.
கஷ்டபட்டு கண்களை திறந்த அந்த அதிகாரி
அதை எடுத்துப் பேசிவிட்டு வைத்தபின் , "என்னாச்சி ?கண்ணு ரெண்டும் இப்படி சொக்குது !" என மனதில் நினைத்தவாரே ,

அங்கிருந்த மற்றோரு காவலரிடம், " அந்த 109 செல்- ல இருக்குறவனை பார்க்க வருவதாய் சொன்ன இன்ஸ்பெக்டர் சார் வேறொரு இடத்திற்குச் போறதுனால நாளைக்கு வாறாராம் " என்றவர் தொடர்ந்து,

" இவர் வராருனு அவன் காலைல இருந்து அந்த மூலையிலையே உட்காந்திருந்தான் . நான் போய் அவனை பாத்துட்டு வரேன் " என தூக்கத்தில் சொக்கும் கண்களை கசக்கியபடியே சென்றார்.

சிறிது நேரத்திலெல்லாம் 109-ம் எண் சிறையில் இருந்த கைதி தப்பிவிட்டான் என்னும் செய்தியில் அச்சிறைச்சாலையே அல்லல்கோலப்பட்டது .

--------------------------------------------------------------------------------

காற்று மிகவேகமாய் வீசிக்கொண்டிருக்க அதற்க்கு போட்டியாய் வேகத்துடன் சென்றுகொண்டிருந்தது அவ்வாகனம் .

வயிற்றின் குடல் முழுவதும் வெளிவந்திருக்க, உடை முழுதும் ரத்தத்தில் தோய்ந்திருக்க பின் சீட்டில் அகோரமாய் இருந்த அவ்வுடலின் மேல் ஒரு போர்வையை போட்டு மறைத்தவன் , முன் திரும்பி தன் பக்கவாட்டில் அமர்ந்திருந்தவளை கண்டு "நீ யார் ? உன் பெயர் என்ன? இங்க எப்படி வந்த? " என வினவினான்.

அவளோ பதில் சொல்ல முடியாமல் உதடுகளை பிதுக்கிவிட்டு , " உன் பெயர் என்ன ?" என்று பதிலுக்கு கேட்க,

அவளை தன் பச்சை நிற கண்களால் சுவாரஸ்யமாய் பார்த்தவனின் இதழ்கள் இயல்பாய் சிரித்ததில், கன்னங்களில் ஆழமாய் குழிவிழ... அச்சிரிப்புடனே , " சந்திராதித்யன் " என்றான்

-காதலாகும்
Nice ud
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top