முரண்பாடே காதலாய் 10

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
N
அத்தியாயம் 10 :


சந்திரமதியின் காடு :

நாட்கள் நதியின் சலசலப்பாய் விரைந்தோட அனகா அக்குகை வீட்டிற்கு வந்து ஒரு மாதம் ஆகியது .

அன்று ஒருநாள் சந்திராதித்யன் "தன்னை தெரியுமா?" என்று கேட்டபொழுது சந்திரிகா வந்துவிட அப்பேச்சை அப்பொழுது விட்டுவிட்டான் .

அதன் பிறகு எப்பொழுது அப்பேச்சை எடுத்தாலும் அனகா அதை தவிர்த்ததில் அவளிடம் கேட்பதை அவன் விட்டுவிட்டாலும், மனதில் அவளிற்கு முன்னமே அவனை தெரியுமோ என்னும் சந்தேகம் ஓடிக்கொண்டே தான் இருந்தது .


இன்று பௌர்ணமி ஆதலால் ஆலயம் செல்ல சந்திரமதியில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதை பார்த்தபடியே தன்னவளை தேடிச் சென்றான் சந்திராதித்யன் .

அவனிற்கு அனகாவை ஆலயத்திற்கு கூட்டிச்சென்றால் என்ன ?? என்று தோன்ற , எப்பொழுதும் பகல்பொழுதில் சந்திரிகாவை அனகாவுடன் விட்டு தன் வேலையை கவனிக்க செல்பவன் ... அன்று அவளை சந்திரமதியிலே இருக்க சொல்லி , தான் மட்டும் சென்றான் .

அவளை அழைத்துக்கொண்டு போகும் வழியில் ,

" பாருடா...! சாருக்கு வந்து ஒருமாசத்துக்கு அப்றம் தான் என்னைய வெளிய கூட்டிட்டு போனும்னு தோணுது ...ரொம்பவே கஷ்டமப்பா " என அவனின் காதில் விழவேண்டும் என்பதற்காகவே சத்தமாய் சலிப்புடன் முனங்கினாள் அனகா.

அவளின் முனங்களில் முன்சென்றுக் கொண்டிருந்த சந்திராதித்யன் திரும்பி அவளை பார்க்க , பார்த்தவன் வழக்கம்போல் அவள்மேல் பித்தானான் .

அவளின் சலிப்பான குரலுக்கு முரண்பட்டு , அவள் முகம் பூவாய் மலர்ந்திருக்க... மலையின் கடினமான பாதையில் தவறிவிடாமல் இருக்க சந்திராதித்யனின் கரம் அவளின் கரத்தை இறுக பற்றிருந்ததில் ...அவர்களின் கோர்த்திருந்த கரங்களையே நொடிக்கொருமுறை பார்த்து , முகம் ரோஜா பூ வண்ணம் கொண்டிருக்க அழகு பதுமையாய் அவனை கிறங்கடித்தாள்.

சந்திராதித்யனுக்கு அவளுடன் கழிந்த முப்பது நாட்களும் , இத்தனை வருடங்களாய் அவன் பூட்டிவைத்திருந்த உணர்வுகளை திறக்கும் சாவிகளாய் தான் இருந்தது .

தான் மனிதன் அல்ல அதே போல் அவள் தங்கள் நாகஇனம் இல்லை என்பதை உணர்ந்து அவளை காணும் வேளைகளில் மட்டுமே உயிர்த்தெழும் தன் உணர்வுகள் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருந்தவனுக்கு , இந்நொடி அக்கட்டுக்கள் அனைத்தும் தளர்வதாய் தோன்றியது.

தன் கைகளிலிருக்கும் அவளின் கைகளை கண்டவனுக்கு, தங்களுக்கு இடையில் இருக்கும் முரண்கள் அனைத்தும் மறைந்து அவளுடன் இப்படியே நாட்கள் சென்றுவிடக்கூடாதா என்ற எண்ணம் விஸ்வரூபம் எடுக்க அதன் தாக்கத்தில் , கைகளில் அழுத்தம் கொடுத்தவன் சட்டென்று தலையை குலுக்கி தெளிந்தான் .

விரல்களின் அழுத்தத்தில் நிமிர்ந்த அனகா , அவன் சிரித்தபடி தலையை குலுக்கி கொள்வதை பார்த்து "என்ன " என்று புருவம் உயர்த்தி கேட்டாள்.

அவளின் புருவ உயர்த்தலில் அவனின் சிறு புன்னைகை , ஆழ்ந்த சிரிப்பாய் மாற அதில் அவனும் கண்ணோரத்தில் ஆசையாய் வந்தமர்ந்தது அவனின் கன்னக்குழி .


சிரிப்புடனே அவளின் கைப்பிடித்த படி அவனும் ... அவனின் கன்னக்குழியில் தடுமாறி இதுவரை முழுதாய் வெளிக்காட்டாத தன் காதலை கண்களை காட்டியபடி அவளும்... அவனின் கைகோர்த்து ஆலயத்திற்குள் தங்களது வலது காலை எடுத்து வைத்து பிரவேசித்தனர்.
"இவர் தான் எங்களின் குலம் காக்கும் "புற்றீஸ்வர்" அனகா, ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இவருக்கு சிறப்பு பூஜை செய்வது எங்கள் குலத்தவரின் வழக்கம் " என தங்களின் பழக்கத்தை அவன் எடுத்துரைத்தான் .

அவன் சொன்னதை கவனமாய் கேட்ட அனகா , சுற்றும் முற்றும் பார்த்தவள் பின் சந்திராதித்யனை கேள்வியாய் பார்த்தாள்.

இந்த ஒருமாத பழக்கத்தில் அவளின் விழிமொழி இவன் வெகுவாய் விரும்பும் மொழியாய் மாறியிருக்க ....அவளின் கேள்வியை உணர்ந்துகொண்டவன் , " அது நான் சொன்ன பௌர்ணமி பூஜை சில வருடங்களுக்கு முன்பு வரை நடந்தது தற்பொழுது அல்ல " என அந்நேரத்தில் தோன்றியதை சொல்லிவைத்தான் .

அவளிடம் பொய் உரைத்ததில் அவளின் முகம் பார்க்கமுடியாமல் தடுமாறியவனின் பார்வை எதிரிலிருந்த ஈசனை பார்த்தது .

அவனின் கண்களை படிக்க முயன்ற அனகா, எதுவும் புரிந்துகொள்ள முடியாமல் அவனை தொடர்ந்து அவளும் பரம்பொருளை கண்டாள்.


மனித நடமாட்டம் இல்லாமல் எவ்வித வீண் அலட்டல்கள் இல்லாத இயற்கையின் உயிர்ப்பான அலங்காரத்தில் , அருவியின் ஓசை , காற்றின் சங்கீதம் மட்டும் கேட்க ஆனந்தத்துடன் வீற்றிருந்த பரமேஸ்வரரை கண்ட நொடி அனகாவிற்குள் ஓர் தடுமாற்றம் .


இத்தனை நாளாய் தன் மனதில் மறைத்து வைத்திருந்த நினைவுகள் அனைத்தும் மேல் எழும்ப சந்திராதித்யனை பார்த்தவள் திரும்பி ஈசனை பார்க்க ,

"உனது சரணாலயம் இவனே ...தன் வாழ்நாள் முழுவதும் உன்னை மட்டுமே நினைவில் வைத்து உன்னை காக்கப்போறவனும் இவனே .அனைத்தையும் இவனிடம் ஒப்புவித்துவிடு " என உள்ளுக்குள் ஓர் உணர்வு தோன்றியது.

கடந்த நாட்களில் அவன் விதவிதமாய் கேட்டும் பதில் சொல்லாமல் நாட்களை கழித்தவள், இங்குவந்து ஒருமாதம் ஆகிவிட்டதை உணர்ந்து அவனிடம் தன்னை பற்றி சொல்லித்தான் ஆக வேண்டும் ...இன்று சொல்லிவிடலாம் என்று எண்ணியே இங்கு வந்தாள்.


அவள் சொல்லப்போவதில் அவனுக்கு பாதகமானதாய் ஏதும் இருப்பதற்கில்லை ... அதிலும் அவனின் கண்கள் இவளை காணும் வேளையில் காட்டும் வர்ணஜாலங்களில் எத்தனையோ முறை முழ்கியவளுக்கு அவனின் காதல் புரிந்துதான் இருந்தது .

இதை எல்லாம் யோசித்தபடியே சந்திராதித்யனிடம் இருந்து நகர்ந்து ஆலயத்தின் வெளிவந்தவள்... யோசனையில் அம்மலையில் கால்களை சரியாய் வைக்காமல் போக பின்னால் சறுக்கி விழப்போனாள்.

கீழே விழப்போகிறோம் என்றதில் எழுந்த இயல்பான அச்சத்தில் கண்களை இறுக்க மூடியபடி விழுந்தவளை தாங்கிக்கொண்டது ஓர் வலக்கரம் .

தன் இடையில் பதிந்த கரத்தின் அழுத்தத்தில் கண்களை திறந்தவளின் முன் அவள் மிகவும் விரும்பும் பச்சை நிற கண்கள் காதலை பொழிந்தபடி இருந்தது.

அவள் கண்களை திறந்து தன்னை பார்த்த நொடி அவளின் இடையிலிருந்த கரத்தில் அழுத்தத்தை அவன் கூட்ட ...அவனின் கரத்தின் வெம்மை அணிந்திருந்த உடையை தாண்டி அவளை சுட்டது .

அவனால் தோன்றிய உணர்வுகளை தாங்கமுடியாத அனகா, அவனின் நெஞ்சில் தன் சிவந்த முகத்தை மறைத்துக்கொள்ள, உதடுகள் "என் அழகு குழியா " என்று கிறக்கமாக முனங்கியது.

மனம் கவர்ந்தவளின் வெட்கத்துடனான தஞ்சம் எந்த ஆண்மகனுக்கும் கர்வத்தை கொடுக்கக் கூடியதாகிற்றே .

சந்திராதித்யனும் , முகம் சிவந்தபடி தன் நெஞ்சில் சாய்ந்தவளை கண்டு தன் காதலின் கர்வத்துடன் சிரிக்க அதை சிந்தனையாய் மாற்றியது அவளின் முனங்கள்.

வேகமாய் அவளை தன்னை விட்டு விலக்கியவன் , மொத்தமாய் விலக்காமல் தன் கைவளைவிற்குள் அவளை வைத்தபடியே ,
"உனக்கு.....உனக்கு 'டாமினி'ய தெரியுமா என்ன ??" எனக் கேட்டான்.


தான் உளறிவிட்டோம் என்று உணர்ந்தவள் , எப்படியும் அனைத்தும் சொல்லத்தான் வேண்டும் என முதலே முடிவெடுத்ததில் சொல்லத் தொடங்கினாள்.

"உங்களை நான் முதல் முதல்லா பார்த்தது என்னோட பனிரெண்டாவது வயதில்....காரணம் 'டாமினி' " என ஆரம்பிக்க ,

இத்தனை நாள் அவளின் நடவடிக்கைகளில் , அன்று நான் அழைத்துவரும் முன்னரே தன்னை அவள் அறிந்திருப்பாளோ என்னும் சந்தேகம் அவள் 'டாமினி' என சொன்னதில் சற்று மாறி
இரண்டு அல்லது மூன்று வருடமாய் அறிந்திருப்பாள் என எண்ணியிருந்தவன், இவளின் பதிலில் என்ன சொல்வது என அறியாமல் அமைதியாய் விழித்திருந்தான்.


"எனக்கு தெரியும் நீங்க டாமினிய வருஷம் வருஷம் பார்க்க வருவீங்கன்னு. முதல் முறை நான் உங்களை பார்த்ததும் அப்படி நீங்க ஒருமுறை அவளை பார்க்க வந்தப்போ தான்.

என்னோட அப்பா தன்னோட தொழில்ல இருக்க ஆபத்துல... எனக்கு எதாவது ஆகிடுமோனு என்னை வெளிநாட்ல இருக்க என் அத்தை வீட்ல கூட்டிட்டு போய் விட்டுட்டார் . சின்ன வயசுல இருந்து நான் வளர்ந்தது எல்லாம் அங்க தான்.

வருஷத்துல ஒருதடவை தான் என்னை இந்தியாக்கு வரவைப்பாரு. அதுவும் 'டாமினி' - யோட வீட்ல அவங்க கூடத்தான் இருப்பேன் . அவளோட அப்பாவும் எங்க அப்பாவும் குடும்ப நண்பர்கள். அப்போதான் ஒருநாள் டாமினியும் நானும் விளையாடிட்டு இருக்கும் போது உன்களை பார்த்தேன் ".


"தூரத்துல இருந்து பார்த்தப்போ உங்க முகம் எனக்கு சரியா தெரியலானாலும் உங்களோட இந்த பச்சை கண்கள் ரெண்டும் மாறிமாறி மின்னுறத பார்த்தேன்.
நான் பார்க்குறது பார்த்து அந்த பக்கம் திரும்புன 'டாமினி' உங்களை பார்த்துட்டு சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே உங்க கிட்ட ஓடிவந்தா .அப்போ அவளை பார்த்து உங்களோட இந்த பச்சை கண்ணு இன்னும் மின்ன , கன்னத்துல ஆழமான குழியோட அழகா சிரிச்சீங்க பாருங்க.... அவ்வளவு அழகா இருந்துச்சி " என கண்களை மூடியபடி சொன்னவளின் முகம் பிரகாசிக்க , மூடிய விழிக்குள் கண்மணிகள் உருண்டோடியது .


அவளின் கண்ணின் மணிகளின் நடனத்தை கண்டபடியே ,"ம்ம்க்கும்...அப்போ உனக்கு என்ன வயசு இருக்கும் அனகா " என குறும்புடன் கேட்டவனின் குரலில் கலைந்தவள் வெட்கத்துடன் அவனின் கண்களை பார்க்காமல் குனிந்தாள் .

தன் சுட்டுவிரலால் அவளின் முகம் நிமிர்த்தியவன் அவளை பார்த்து கண்சிமிட்ட ,தன் முகத்தின் வெகு அருகே தெரிந்த அவனின் முகத்தில் அதிர்ந்து தெளிந்தவள் சற்று விலகி ,

"ஹலோ ...! உடனே கற்பனைக்கு போகவேணாம் ....எனக்கு அப்போ பனிரெண்டு வயசுதான் , தென் அப்போ நான் ஒன்னும் உங்க சிரிப்ப ரசிக்கலாம் இல்லை " என ஆரம்பித்தவள் அவனின் குறும்பு சிரிப்பில் தான் உளறியதை உணர்ந்து உதட்டை கடித்தாள்.

அவளின் செயலை கண்டவன் அவளின் இடை அனைத்து அருகில் நிறுத்தி, தன் விரல் கொண்டு அவளின் உதட்டை பிரித்தவன் , விரல்கள் உணர்ந்த அதன் மென்மையில் கரைய தொடங்க , அதில் தடுமாறி எங்கெங்கோ பார்த்த அனகாவின் விழிகள் இறுதியில் அவனின் மார்பில் உரசிக்கொண்டிருந்த டாலரை கண்டு கசங்கியது.

"இது 'டாமினி'-க்கு நான் கொடுத்தது " என்றவள் மீண்டும் தனது கடந்தகாலத்தை சொல்ல ஆரம்பித்தாள்.

"சின்ன வயசுல அவ அங்க எங்க வீட்டுக்கு வந்துட்டு திரும்ப இந்தியா வர ரொம்ப அழுதா. அப்போ நான்தான் அத குடுத்து வச்சிக்க சொன்னேன். அதுல இருந்த ஒரு பொம்மையை அவ தன்னோட அண்ணனுக்கு குடுத்துட்டதா அவங்க அம்மா சில வருஷம் கழிச்சி நான் இந்தியாக்கு வந்தப்போ சொன்னாங்க. அதுக்கு அப்றம் தான் நான் உங்களை பார்த்தது ."

" அன்னிக்கு நைட்டே நான் உங்கள பத்தி அவகிட்ட கேட்டேன் . அப்போ தான் உங்களை முதல் முறை பார்த்தது , இந்த செயின் குடுத்தது அப்றம் வருஷாவருஷம் நீங்க ரெண்டுபேரும் முதல் முதல் பார்த்த நாள்ல அவளை பார்க்க வருவதுலாம் சொன்னா . ஆனா நீங்க இதெல்லாம் யார்கிட்டையும் சொல்லகூடாதுனு சொன்னதாகவும் சொன்னா. அப்போ நானும் மண்டைய மண்டைய ஆட்டி கேட்டுக்கிட்டேன் . இன்னும் சொல்ல போனா நீங்க என்னிக்கு வருவீங்கன்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டு நானும் எல்லா வருஷமும் உங்களை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பிச்சிட்டேன் ."

- இதுவரை சாதாரணமாய் சொல்லிக்கொண்டிருந்தவள் தற்பொழுது அவனை ஆராய்ச்சியாய் பார்க்க , அவனும் என்ன என்பதை போல் புருவம் உயர்த்தினான் .

"இல்லை ....! சின்ன வயசுல தெரியலானாலும் கொஞ்சம் வளர்ந்த பிறகு தான் சில கேள்வி தோணுச்சு .....நீங்க ஏன் எப்பவும் அந்த ஒருநாள் அதுவும் வேற யாரும் பார்க்க முன்னாடி வந்து அவகிட்ட மட்டும் பேசிட்டு போறீங்க ?? அதுவுமில்லாம நீங்க தனியா தான் வருவீங்க அது நீங்க பெருசானதுகப்ரும் சரிதான் , ஆனா நான் உங்களை முதல் தடவை பார்க்கும் போதும் தனியா தான் வந்துருந்திங்க அது ஏன் ?? அண்ட் நீங்க அவளை தவிர யாரோடவும் பேசக்கூட மாட்டிங்க..... ஏன்...! அவ பக்கத்துல நிக்கும்போது ஒருதடவையாவது என்னைய பார்த்துட மாட்டிங்களானு நானே எத்தனையோ தடவ ஏங்கிருக்கேன் " என்றவளின் முகம் சுருங்கியது .


அவளின் கேள்விகளுக்கு எல்லாம் , எவ்வித உணர்வும் காட்டாமல் தனது உண்மையான வாழ்வை எண்ணி தங்களுக்கு இடையில் இருக்கும் முரண்பாட்டில் இறுக்கமாய் இருந்தவன் ,அவளின் கடைசி வார்த்தையில் ...அதில் இருந்த ஏக்கத்தில் ஏதோ பெரிய தவிறிழைத்தது போல் துடித்தான் .


அதை உணர்ந்துகொண்ட அனகா , "அடடா ...! உடனே பீலிங்ஸ் ஒப் இந்தியாவா மாறக்கூடாதுப்பா . அப்போ அந்த கேள்விக்குலாம் பதில் தெரியலைனா என்ன?? அதான் இப்போ தெரிஞ்சிருச்சில " என சொல்லி சிரித்தாள் .

அவளை புரியாமல் அவன் பார்க்க , " அதான் , நீங்க சொன்னிங்களே உங்க மக்களோட இந்த காட்ல தனியா வாழ்றதா...அதுதான காரணம் " .


நிம்மதி பெருமூச்சுவிட்டவனுக்கு அவளின் முனங்கல் நியாபகம் வர ,

"ஆமா அது என்ன ' குழியா...' ??? இந்த வார்த்தை டாமினி தான் என்கிட்ட ரெண்டு மூணு தடவை சொன்னாள் . அதுவும் நான் அர்த்தம் கேட்டதற்கு சிரித்தவள் அதை கூறவேண்டியவர்கள் கூறவேண்டும் என்றிருந்தாள் " என்றபடி அவளின் தலையில் தன் தலையை முட்டி தலையை எடுக்காமல் அப்படியே இருந்தவன் அவளின் கண்களை பார்க்க ,


" நான் முதலில் உங்களின் மேலான எனது உணர்வுகளை உணரவில்லை ....சிலவருடங்களுக்கு பிறகும் உங்களுக்கான எனது தேடல் தொடர , டாமினி தான் என்னையே எனக்கு புரியவச்சா , அதுக்கு அப்பறம் எல்லாம் யோசிச்சப்போ தான் முதல் தடவை உங்களை பார்த்த அப்பவே இந்த கன்னக்குழி என்னைய ஈர்த்துடிச்சினு புரிஞ்சிது அதுதான் அந்த பேரு . டாமினி அத வச்சிதான் என்னை வம்பு பண்ணுவா "

இதுவரை உற்சாகமாய், சிறு வெட்கத்துடன் தன் இத்தனை வருட காதலை எவ்வித மேல்பூச்சும் இல்லாமல் இயல்பாய் சொல்லிக்கொண்டிருந்த அனகா , " ஆன 'டாமினி' க்கு என்னாச்சிங்க ?? என்னால சில காரணத்தால ரெண்டு வருஷமா இந்தியா வரமுடியல இந்த தடவை இந்தியா வந்தப்போ தான் நம்ப டாமினி ...டாமினி .... ஆண்ட்டி , அங்கிள் இருந்த நிலைமையை பார்த்து என்னால எதுவும் கேக்க முடியல .அவளுக்கு ஏன் ...."என சொல்லமுடியாமல் தடுமாறியவள் ,

கண்கள் சிவந்தபடி முறுக்கேறிய சந்திராதித்யனின் உடலை கண்டு பயந்து விலக , அவளின் செயலில் தன் உணர்வுக்கு வந்தவன் தனது உள்ளத்துஉணர்வுகளை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டான்.


அவனின் கைகளை பிடித்துக்கொண்ட அனகா , " நான் இந்தியா வந்து மூணு மாசம் ஆகுது .டாமினி அப்பாகிட்ட பொறுமையா விசாரிச்சு உங்களை அவங்க முதல்ல பார்த்த இடத்தை தேடி கண்டுபிடிக்கவே ரெண்டு மாசம் ஆகிடிச்சி . அன்னிக்கு இங்க வரணும்னு தான் கிளம்புனேன் ஆனா வழியிலே உங்களை பார்த்துட்டேன் அதே மாதிரி உங்க வண்டில இருந்த அந்த பிணத்தையும் ".


தான் சொன்னதும் அதிர்வான் என பார்க்க அவனோ இயல்பாய் நின்றிருந்தான் . இவளின் குழம்பிய முகத்தை பார்த்தவன் ,

"நீ அத பார்த்துட்டன்னு ஒருநிமிஷம் அதிர்ந்து பின் சமாளிச்ச உன்னோட கண்கள் எனக்கு அப்போவே காட்டிக்குடுத்துடுச்சி அனகா. ஆனா நீ எதுவும் கேட்காதது மட்டுமில்லாம என்னோட இயல்பா இருந்த ....அதுல உன்மேல வந்த நம்பிக்கைல தான் இந்த இடத்துக்கே உன்னை கூட்டிட்டு வந்தேன் " என தன் பக்க விளக்கத்தை சொன்னான்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் கடந்திருக்க ... சந்திரமதியினர் ஆலயத்தை நோக்கி வருவதை உணர்ந்துகொண்ட சந்திராதித்யன், தான் சிறிதுநேரம் சென்று வருவதாய் சொல்லி அவளை வேகமாய் அங்கிருந்து குகைக்கு போகச் சொன்னான் .


அவளோ இருட்ட தொடங்கியிருந்த வானை கண்டு கண்களில் பயத்துடன், " சீக்கிரம் வந்துடுங்க....எனக்கு அங்க இருட்டுல தனியா இருக்க பயமா இருக்கும் " என முகத்தை சுருக்கி சொல்ல ,

அந்த பாவனையில் மீண்டுமாய் அவளிடம் வீழ்ந்தவன் , சரி என்பதை போல் தன் கன்னக்குழி சிரிப்புடன் தலையசைக்க ...அதை பார்த்து ரசித்தபடியே அவள் சென்றாள்.

சரியாய் அவள் சென்றபின் சந்திரமதியினரின் வருகை அமைய, அவர்களுடன் அவனும் கலந்துக்கொண்டான் .


மகன் போன முறை போல் அல்லாமல்... முதல் ஆளாய் இம்முறை இங்கு வந்ததில், அவனின் பெற்றவர்களான நாகராஜாவும் , நாகராணியும் மகிழ்ந்து நிம்மதியாய் பூஜையை ஆரம்பித்தனர் .


சிறிது நேரம் பூஜையில் இருந்தவன் தன் தங்கை சந்திரிக்காவிற்கு கண்களை சிமிட்டி சைகை காட்டிவிட்டு அங்கிருந்து எவரும் அறியும்முன் வெளியேறினான்.


வெளியேறும் கடைசி நொடியில் அப்பொழுதுதான் உள்வந்த அவனின் நண்பன் அவனை கண்டு ,

"நண்பா சந்திராதித்யா! எங்கு போகிறாய் ? இன்று பௌர்ணமி அல்லவா இன்று நாம் வெளியில் செல்வது ஆபத்து என்று நீ அறிவாய் தானே " என நல்ல நண்பனாய் எச்சரிக்க,

அதையும் மீறி "எனக்கு அங்க இருட்டுல பயமா இருக்கும் ...சீக்கிரம் வந்துடுங்க " என முகத்தை சுருக்கியவாறு சொன்ன தன்னவளின் முகம் மனதில் தோன்றியதில் தன் கன்னம் குழிய சிரித்தான் .


அவனின் அச்சிரிப்பை எதிரில் நின்று இருந்த நண்பனும் ரசித்து பார்த்து, "ஆனாலும் தாம் இத்தனை அழகாய் இருந்திருக்க வேண்டாம்... அதிலும் ஆணாய் இருந்திருக்க வேண்டாம், ம்ம்ம்ம்.... என்னாலையே முடிய வில்லையே" என மயங்குவது போல் நடித்தவன் தொடர்ந்து,


"இந்த சிரிப்புக்கு நம்ம உலகத்தில் எந்த ராணி கொடுத்து வைத்திருக்கிறாரோ " என விளையாட்டாய் பெருமூச்சு விட்டான்.


எதிரில் இருந்த சந்திராதித்யனுக்கு தான் அது விளையாட்டாய் தோன்றாமல் போனதில் "என்னோட ராணி எந்த உலகத்தில் இருந்தாலும் எனக்கு ராணிதான்" என்றவாறு அவ்விடம் விட்டு சென்றான்

"இப்பொழுது நான் என்ன கூறிவிட்டேன்? நானுமே நம் உலகத்து ராணினுதான சொன்னேன் . ஏதோ தவறாய் சொன்னது போல் பேசிட்டு செல்கிறான் ??? ம்ம்ம்ம்ம் ....! இன்றைக்கு நேற்றா இப்படி... பலவருடங்களாகவே இவர் இப்படி முரணாய் தானே இருக்கிறார் "என புலம்பியவாறே தன் வழி சென்றான்.


குகை வீடு :

அவ்விடம் முழுக்க இருட்டாய் இருக்க, அதில் அங்கிருந்த ஒற்றை ஜன்னலும் சில நாட்களுக்கு முன் சந்திராதித்யன் அடைத்திருந்ததில் அந்த இருட்டில் அவளின் பார்வைக்கு அகப்படாமல் போனது.


அந்த இருட்டில் தோன்றிய பயத்தை கட்டுப்படுத்த தன் இரு கைகளையும் மார்போடு அணைத்தவாறு இருந்தாள் அனகா,

அவளிற்கு சிறுவயது முதலே இருட்டென்றால் பயம் . அனைவரும் அவளை தலைமேல் வைத்து தாங்கியதில் அன்பை மட்டுமே எதிர்பார்ப்பவள். துயரங்கள் என்பதை இதுவரை கண்டிராத சின்னஞ்சிறு பறவை அவள் . டாமினியின் நிலை தான் அவளின் வாழ்வில் ஏற்பட்ட முதல் ஏற்றுக்கொள்ளமுடியாத நிகழ்வு .

சுற்றுமுற்றும் எதுவும் தெரியாததில் இருட்டில் பார்வையை துளாவ விட்டபடி இருந்தவளின் காலில் எதுவோ இடற பயத்தில் கத்தபோனவளின் வாயை ஒரு கரம் பொத்த, அதில் அதிர்ந்து திரும்பினாள்.

அவளின் வாயை பொத்திய கையை விலக்காமலே, மற்றொரு கரத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கை அவள் முகம் தெரியுமாறு பிடித்தான் சந்திராதித்யன், தன் பெயரைப் போலவே தன் வாழ்வில் அனைத்தையும் முரண்பாடுடன் கடந்துகொண்டிருப்பவன் .

அந்தச் சிறு வெளிச்சத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கண்களில் காதல் கசிய பார்த்தவாறு நின்றிருந்தனர்.


நேரம் நள்ளிரவிற்கு மேல் சென்றிருக்க, அங்கு தரையில் குளிர்க்கு இதமாய் அவன் கழட்டி தந்த சட்டையை இறுக்கியவாறு படுத்திருந்தாள் அனகா.

அவளின் அருகே அவளின் மேல் படாமல் சற்று நெருங்கிய நிலையில் உறக்கத்தில் இருந்தான் சந்திராதித்யன்.


உறங்கும் பொழுதும் ஒருவித கம்பீரத்துடன் உறங்கும் அவனின் முரண்பாடை பார்க்க காற்றும் ஆசை கொண்டதோ என்னவோ , வேகமாய் வீச ஆரம்பித்தது.


அதன் வேகத்தில் சரியாய் அடைக்க படாமல் இருந்த அந்த ஒற்றை ஜன்னலும் திறந்துகொள்ள, அதன் வழியில் காற்று மட்டுமின்றி ... முழு பூரண நிலவொளியும் அங்கு நுழைந்தது.


அதன் ஒளி சயனித்து இருந்தவர்களின் மேல் படர, அனகா அதை உணர்ந்ததாளோ சிறு சிரிப்புடன் உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

அருகிலிருந்த சந்திராதித்யன் உடலிலோ, அவ்வொளி படர்ந்ததில் சிறிது சிறிதாய் மாற்றம் ஏற்பட்டது.

அதில் காற்றும் , நிலவும் ஜோடி போட்டுக் கொண்டு அவனின் முரண்பாடான காதலை கண்டுகொண்ட மிதப்புடன் மீண்டும் பார்வையிட அங்கு இருந்தது ,

சிறு குழந்தை என சிரித்தவாறு உறங்கும் அனகாவும், அவளின் அருகில் இச்சாதாரி நாகமாய் மாறி இருந்த சந்திராதித்யனும்.


முரண்பாடுகளை கொண்டது தான் காதல்...! முரண்பாடுகளை தகர்த்தெறிவது தான் காதல் ...!
ஆக முரண்பாடே காதல்...!!!



-காதலாகும்
Nice ud
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top