மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 9

Advertisement

மதுரயாழினி

Writers Team
Tamil Novel Writer
நந்தனின் தேகச்சூடும் அவள் மேல் படர்ந்திருந்திருந்த அவனது கைகளும் அவளை நினைவிழக்கச் செய்துவிட்டன... சில நொடிகளில் சுயநினைவு வந்த மதுரா வெடுக்கென்று எழுந்தாள். நந்தன் அவளை ஒரு ஏக்கப் பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனிடம் வெட்டும் பார்வையை வீசியவாறே., 'கீழே விழுந்திருந்தா கூட இவ்வளவு கஷ்டமா இருந்திருக்காது...' என அவன் மட்டும் கேட்கும் குரலில் கூறிவிட்டு சென்றுவிட்டாள். அவளது குரலில் இருந்தது வலியா, கோபமா, இயலாமையா என்னவென்றே அவனால் அறியமுடியவில்லை...

சஞ்சனாவை முறைத்துவிட்டு., 'உனக்கு எதுக்கு இதெல்லாம்.. ' என்றுவாறு சென்றுவிட்டான்.. சஞ்சனா உடனடியாக மதுராவை இங்கிருந்து துரத்தியே ஆகவேண்டும் என கங்கணமே கட்டிக் கொண்டாள்.

நித்தியும் அவளுடன் பேசுவதைத் தவிர்க்க, தன்‌ அபித்தானும் பேசாமல் போக அவளுக்கு மதுராவின் மீது ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது... தந்தையிடம் அழைப்பு விடுத்து 'ஹாஸ்டல் பார்க்க சொன்னேன்ல... என்னாச்சு...' என சீறினாள்.

எதோ உதவி செய்யும் மனப்போக்கு போல., அதுவும்‌ தன் மகள் இப்படியெல்லாம் உதவுகிறாள் என்றால் நல்லது தானே என நினைத்துக் கொண்டு அவரும் தீவிரமாய் தேட ஆரம்பித்தார்.

இரண்டே நாட்களில் சஞ்சனாவிற்கு நல்லசேதி கிட்டியது. கேட்ட மறுநொடியே தாவிக் குதித்து மதுராவிடம் சென்று விஷயத்தைக் கூறினாள். மதுராவிற்கு துக்கம்‌ தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.

கிட்டத்தட்ட தாய் போல் ஆகிவிட்ட பார்வதியம்மாவை விட்டுச் செல்ல வேண்டும், நித்தி... அவளும் தான் இப்படி ஒரு அருமையான வாழ்விற்கு காரணமே அவள் தானே... அவளையும் பிரிய வேண்டும்.

நந்தன்... அவனை பார்க்காமல் இருப்பது தான் தனக்கு‌ நல்லது என்றாலும் அது முடியாத ஒன்று போல தோன்றியது. ஏன் அவன் மேல் இந்த மையல்... சட்டென்று தலையில் அடித்துக் கொண்டாள்...

இத்தனை நாள் பார்வதிம்மா பிள்ளை போல் பார்த்துக் கொண்டதற்கான பதிலா இது... நாய்க்கு உணவிட்டாலும் நன்றியோடிருக்கும்.. பின் தான் எப்படி இப்படி ஒரு காரியத்தை செய்யலாம்... 'இரண்டு நாட்கள் தான்‌ உனக்கு டைம் மதுமித்ரா... அதற்குள் இங்கிருந்து கிளம்பிவிடு...' என மனதிற்குள் உருப்போட்டுக் கொண்டாள்..

திடமாய் இருந்த மனது இன்று அவளை நிற்கதியாய் நிற்க வைப்பதைப் போல் தோன்றியது அவளுக்கு.. தன் மீதே கோபம் வந்தது. சுவற்றின் மேல் ஓங்கி அடித்தாள். கை வலித்தது தான் மிச்சம்..

இரவு உணவு உண்ணும் வேளை வந்தது.. ஐவரும் அமைதியாய் சாப்பிட்டு முடித்தனர்... மாலையில் ஏற்பட்ட கைவலி அவளை சரியாக சாப்பிட விடவில்லை.. பார்வதி இதனை கவனித்துவிட்டாள். 'மித்ரா... கையில என்னாச்சு... அப்போவே கேக்கணும்னு நெனச்சேன்... ' என்றாள்.

'ஒன்னுமில்லைம்மா...' என தன் கையை பின்னால் மறைக்க முயன்றாள். பார்வதி வம்புகட்டி கையை பிடித்து இழுக்கவும்., வலி தாங்காமல்., 'ஆ...' என்றாள். ரத்தம் கட்டிப் போய் இருந்தது அவளுடைய கை...

மூவரும் உடனடியாக பதற ஆரம்பித்தனர்... பார்வதி தன் மகனை அடுப்பில் தண்ணீர் சுடவைக்க உத்தரவிட்டாள்.. மகளை அழைத்து பேன்ட்-எய்ட் எடுத்து வரச் சொன்னாள். இருவரும் தூரிதமாக செயல்பட்டனர். நந்தனின் பதற்றம்‌ அவனது நடையிலேயே தெரிந்தது...

'என்னாச்சும்மா...' என்றாள் பார்வதி மித்ராவின் தலையைக் கோதியபடி... மதுராவிற்கு கண்கள் கலங்கிவிட்டன., 'சாயங்காலம் சுவத்துல இடிச்சிடுச்சு மா...' என்றாள். அவளது அழுகையைப் பார்த்த பார்வதி, 'ரொம்ப வலிக்குதாடா... இரு இந்தப் பய வந்திரட்டும்... ஒத்தடம் குடுக்கலாம்...' என தன் மகனை வேகமாக வரச்சொல்லி அழைத்தாள்....

அவன் சுடுதண்ணீரை கொண்டு வந்து கொடுத்ததும்., ஒரு துணியை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து மதுராவின் கையில் வைத்து எடுத்தாள்.
பார்வதியிடம் எப்படி சொல்லுவது இனி இங்க மாட்டேன்‌ என்று... மனதை தேற்றிக் கொண்டவளாய் மதுரா., 'ம்மா...' என்றழைத்தாள்...

'சொல்லுடா...'

'நான் ஹாஸ்டல் பார்த்துட்டேன்மா...'

மூவர் முகத்திலும் அதிர்ச்சி..

'ஏன் மது உங்களுக்கு இங்க இருக்க பிடிக்கலையா...' என்றாள் நித்தி..

'அப்படியில்ல நித்தி, ஹாஸ்டல் கிடைக்குற வரைக்கும்‌தான இங்கன்னு சொன்னேன்.. இப்போ நல்ல ஹாஸ்டல் கிடைச்சுடுச்சு... அதான் அங்க மாறிக்குறேன்... ' என்றாள் தடுமாறியவண்ணம்...

'ஹாஸ்டல் போய்ட்டாலும் எங்கள அடிக்கடி பார்க்க வாங்க... ' என சஞ்சு தன்‌ கொஞ்சும் குரலில் உறைக்க நித்தி அவளை முறைத்தாள். பார்வதி தன் மகனை நிமிந்து பார்த்தாள். அவன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டு இருந்தான்.

அவனது வலியை பார்வதியால் உணர முடிந்தது... மதுராவிடம் திரும்பி., 'ஏன்மா... இங்க இருக்கலாம்ல... உனக்கு இங்க எதுவும்‌ பிடிக்கலையா... ' என்றாள்.

மதுரா பதறிவிட்டாள்., 'என்னம்மா இப்படி கேட்குறீங்க.. நீங்க எனக்கு அம்மா தான்... ஆனா எப்படி இங்கயே... நல்லாருக்காதும்மா..' என படபடவென பொரிந்தாள். எங்கே நிதானமாக கூறினாள் தன் குரலை வைத்து பார்வதி உண்மையை அறிந்து விடுவாளோ என்ற பயம்‌ தான்...

ஒரு முடிவுக்கு வந்தவளாய் பார்வதி., 'சரி மித்ரா... உன் இஷ்டம்... ஆனா நியாபகம் இருக்குல‌... நான் பார்த்துட்டு சரி சொன்னபிறகு தான்‌ நீ போகணும்..' என்றாள் தீர்க்கமாக...

'சரிம்மா... ஆனா எனக்கு நல்லவிதமா சொல்லுவீங்கன்னு எதிர்பாக்குறேன்... ' என்று விட்டு மதுராவும் உறுதியான குரலில் கூறிவிட்டாள்.

சஞ்சனாவிற்கு எரிச்சலாய் வந்தது... 'அவளே போறேன்னு சொன்னாலும் இந்த அத்தை விடாது போல...' என மனதிற்குள் பார்வதியை திட்டிக் கொண்டாள்.

அபிநந்தனுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது... என்ன ஆயிற்று இந்தப் பெண்ணுக்கு..‌ தான் எதுவும் தவறாக நடந்து கொண்டோமா.. இல்லையே.. அவனுக்கு அப்போது தான்‌ உறைத்தது இவள் சஞ்சனா வந்த பிறகு தான் இப்படி நடக்கிறாள்.

அவள் சின்னப் பிள்ளைத்தனமாக அடம்பிடிப்பாளே தவிர மோசமானவள் இல்லையே.. புதிதாக ஒருத்தி என்பதனால் தயங்குகிறாளா... என நினைத்தவனுக்கு நடந்தது தெரிந்திருக்கவில்லை.. ஆனால் ஒன்றும் புரிபடவில்லை அவனுக்கு...

'நான்‌ காயப் போட்ட துணிய எடுத்துட்டு வர்றேன்ம்மா' என மதுரா மாடிக்கு சென்றாள்.‌‌ நித்தியும் சஞ்சுவும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருக்க பார்வதி பாத்திரம்‌ கழுவிக் கொண்டு இருந்தாள்.

இது தான் சந்தர்ப்பம் என நினைத்தவன் அவளுக்கு பின்னலேயே மாடிக்கு சென்றுவிட்டான். பார்வதி அதனை கவனித்து இருந்தாள். எதோ பிரச்சனை என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது..

அவள் சரியாக துணியை எடுக்க ஆரம்பிக்க, 'மதுரா' என்றான்... திடுக்கிட்டு அவனை திரும்பி பார்த்தவள் பின் மீண்டும் துணி எடுக்க ஆயத்தமானாள்..

அவன் இம்முறை அழுத்தம் கொடுத்து., 'மதுரா... ' என்றான்...

'என்ன...'

'இப்போ எதுக்கு ஹாஸ்டல்...'

'நான் ஹாஸ்டல் கிடைக்குற வரைக்கும்‌ இங்க இருக்கேன்னு தான சொல்லியிருந்தேன்.. இப்போ கிடைச்சுடுச்சு... அதான்... ' என்றாள் முயன்று வரவழைத்த ஏளனக் குரலில்..

'உனக்கு இங்க எதுவும் பிரச்சனையா...'

' இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை... '

'இல்ல.. நீ சஞ்சனா வந்த பிறகு தான் இப்படி ஆகிட்ட...'

'எப்படி ஆகிட்டேன்.. ' என்றாள் கோபமாக..

'கோபப்படாத மதுரா... சஞ்சனா சின்ன பொண்ணு தான... பிடிவாதம்‌ பண்ணுவா.. மிச்சப்படி எதுவும் மோசமானவ இல்ல... ' என்றான்.

கட்டிக்கொள்ளப் போகின்றவளுக்கு வக்காலத்தா என மனதிற்குள் நினைத்தவள்., 'நான் இப்போ உங்க சஞ்சுவுக்கு சர்ட்டிபிகேட் கேக்கலியே... ' என்றாள்..

'கொஞ்சம் புரிஞ்சுக்க... ' என்றான் அவன் கெஞ்சும் குரலில்..

'இப்போ நீங்க கீழ போங்க... ' என்றாள் எரிச்சலுற்று..

'நான் எதுக்கு போகணும்...'

'அப்போ நான் போறேன்...'

'நான் விடமாட்டேன்...' என அவளை நிறுத்த முயன்றான்..

'நீங்க விடலைனா இங்க இருந்து கீழ குதிச்சுடுவேன்... ' என மிரட்டிப் பார்த்தாள்..

அவன் விடுவதாயில்லை‌... அவள் ஒரு நொடியும் எதிர்பாராமல் கீழே குதிக்க வரப்பின் மேல் ஏறிவிட்டாள்.. சற்றும் தாமதியாமல் அவளைப் பிடித்து இழுத்தவன் ஓங்கி அவளை அறைந்தும் விட்டான்..

அழுதுகொண்டே.. 'நிம்மதியா வாழ தான் விடமாட்டிங்க.. சாகவும் கூடாதா.. ' என்றாள்.

சட்டென்று அவளை இழுத்து அணைத்தவன்., 'என்னடீ ஆச்சு உனக்கு... நீ ஏன் சாகணும்.. நான் இருக்கேன்ல உனக்கு‌.. நீ இல்லாம நான் மட்டும் எப்படி இருப்பேன்.. கூட சேர்ந்து குதிப்பேன்னு சொல்லல... ஆனா உன்ன நல்லா வச்சுக்க முடியும் என்னால... மாட்டேன்னு சொல்லிடாத மதுரா... ' என்றான்‌ உடைந்து போன குரலில்...

அப்போது அவள் அவனது அணைப்பில் முழுதுமாய் கட்டுண்டு கிடந்தாள்... நந்தன் நந்தன் என அவள் அறியாமலேயே அவளது வாய் முனகிக் கொண்டு இருந்தது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top