மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 7

Advertisement

மதுரயாழினி

Writers Team
Tamil Novel Writer
'என்ன கண்டிஷன்' என்றவளுக்கு குரல் எழும்பவில்லை...

'உங்க ரெண்டு பேரையும் நான் தான் கொண்டு வந்து விடுவேன்.. அதே மாதிரி காலேஜ் முடிஞ்சதும் கால் பண்ணுங்க... கூப்பிட வருவேன்.. கொஞ்ச நாளைக்காவது... ' என்றான்.

நித்தி உடனே சரியென்று விட்டாள். அவளும் பயந்து போய் தான் இருந்தாள் அந்த தடியன்களைப் பார்த்து. மதுமித்ராவிற்கு சுருக்கென்று இருந்தது. சூழ்நிலையை தனக்கு சாதகமாக்க முயற்சிக்கிறான் என்று.

வேறு வழியும் எதுவும் தோன்றவில்லை அவளுக்கு. மறுப்பாய் தலையசைத்தால் அவன் பார்வதிம்மாவிடம் கூறிவிடுவான். அவர்களுக்கும் எதற்கு தேவையில்லாத பயம். ச்சே... என்ன நேரமிது என எண்ணியவள்., ஒன்றும் கூறாமல் அவன் வண்டியை பின் தொடர்ந்தாள்.

அபிநந்தனுக்கோ தான் செய்வது சரியா தவறா, அம்மாவிடம் கூறவேண்டுமா இல்லையா, மதுரா தன்னை என்ன நினைப்பாள் என ஆயிரம்‌ சிந்தனைகள் உள்ளே ஓடினாலும்., இது மதுரா சம்பந்தப்பட்டது‌ மட்டுமில்லை.. தன் தங்கைக்கும் இது அவசியமே..

நிச்சயமாய் இதை அவன் மதுராவிற்காக செய்யவில்லை என்பது அவனுக்கு‌ தெரியும் தான். ஆனால் அவளுக்கு.... நினைத்து நினைத்து மனதை குழப்பிக் கொண்டு அதிலேயே உறங்கியும் போனான்.

மதுராவும் அப்படியே... அவன் எதற்காக இப்படி செய்கிறான். மற்றவர்கள் போல் இல்லையென்று நினைத்தேனே... ஆனால் ஏன் இப்படி... என எண்ணிக்கொண்டே இருந்தாள்.

மறுநாள் காலை அவர்கள் இருவருக்கும் முன்னர் அபிநந்தன் எழுந்துவிட்டான். அவனுக்கு தான் தூக்கம் சரியில்லையே... அவர்களுக்கு முன்னால் கிளம்பியும் விட்டான். அதற்கு பின் மதுராவும், நித்தியும் கிளம்ப மூவரும் தயாராகிவிட்டனர்.

நந்தன் தன் வண்டியை உயிர்ப்பித்ததும்., வண்டியை நகற்றுவதற்கு வாகாக மதுரா தள்ளி நின்று கொண்டாள் நித்தி பின்னால் ஏறி அமர முயற்சித்தாள். சட்டென்று வண்டியை அணைத்தவன்., 'என்னடீ... என்‌ கூட ஏறுற... அந்தப் பொண்ணு வரலையா...' என்றான் வினாவாக..

'நீ தான உன் கூட வரச் சொன்ன ரெண்டு பேரையும்... ' என்றாள் நித்தி.

'இறங்கு நித்தி.. உங்க கூட வர்றேன்னு தான சொன்னேன்... வண்டில கூட்டிட்டு போறேன்னா சொன்னேன்.. போய் உங்க வண்டில வாங்க... ' என்றான். மதுரா அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் பொய் உரைக்கவில்லை என அவனது கண்களே கூறின... அவளுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அவனோடு வண்டியில் இல்லை என்பதை விடவும்., அவன் மோசமானவன் இல்லை., தன் சூழ்நிலையை அவன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி என்பதை அவள் உணராமல் இல்லை.

வண்டியை எடுத்துக்‌கொண்டு அவன் பின்னே கிளம்பினாள். மாலையும் நித்தியின் அலைபேசியில் சார்ஜ் இல்லாமல் போக தானே அவனை அழைத்து கூட்டிப் போக வரச்சொன்னாள். நாளடைவில் அவனை வேற்று ஆளாக தோன்றவில்லை அவளுக்கு... அப்போது தான் அங்கு வந்து சேர்ந்தாள் சஞ்சனா...

அபிநந்தனின் ஒன்று விட்ட மாமா மகள். பார்வதி ஈஸ்வரனை இழந்த போது கண்டும் காணாமல் இருந்த அவளது பெரியப்பா மகன் தான் சுந்தரமூர்த்தி... அவனது மகள் தான் சஞ்சனா... பார்வதி கொஞ்சம் கொஞ்சமாய் முயன்று வெற்றி பெற்றுக் கொண்டு இருந்த சமயத்தில் எப்போதாவது ஒரு முறை வந்து தான் அண்ணன் என்பதை நினைவு படுத்திவிட்டு போவார். அவளுக்கும் நித்தி வயது தான். அவர் முதலில் தன் மகளுடன் வந்தது அபிநந்தன் 8 படிக்கும் போது. சஞ்சனா அந்நேரம் 4 தான் படித்துக் கொண்டு இருந்தாள்.

நித்திக் குட்டி போல எண்ணி இன்னுமொரு குட்டிப் பெண் என்ற எண்ணம் மட்டுமே அபிநந்தனிடம்‌ இருந்தது. மூவரும் சேர்ந்து விளையாடுவதும் உண்டு.. ஆனால் வளர வளர அவன் கொஞ்சம் விலகி இருக்க ஆரம்பித்தான். சாதாரணமாய் ஆண்பிள்ளைகளுக்கு இருப்பது தானே... சஞ்சனா தான் அவனை விட்டபாடில்லை..

அபித்தான்...அபித்தான் என அவன் பின்னால் சுற்றிக் கொண்டே இருப்பாள்... அந்த வயதில் வெறும் ஆர்வமாய் மட்டுமே இருந்தது என்று அவனை அடைய வேண்டும் என வெறியாக்கியது என அவளுக்கும் நினைவில்லை.

அபிநந்தனுக்கோ இப்படி ஒரு எண்ணமே இருந்ததில்லை... 'சரியான பிடிவாதக்காரிம்மா இவ...' என தாயிடம் கூறியுள்ளான். 'தப்பா பார்த்தா எல்லாமே தப்பு தான் அபி... சின்ன பொண்ணு‌ தான.. வளர வளர சரி ஆகிடுவா...' என அவனை சமாதானப்படுத்திய பார்வதிக்கும்‌ தெரிந்திருக்கவில்லை அவள் மாறமாட்டாள் என...

ஆறு மாதங்களுக்கு முன்னால் அவர்களது வீட்டுக்கு வந்திருந்தவள் 'அபித்தான் யாரையும் லவ் பண்ணுறியா' என்றாள். அவன் தான் அப்போது மதுராவை பார்த்திருக்கவே இல்லையே.. சற்றும் தயங்காமல்., 'இல்ல சஞ்சு.. ஆனா இதெல்லாம் கேட்க கூடாது யார்ட்டையும் புரியுதா...' என்றான் தான் அண்ணன் ஸ்தானம் என நினைத்துக் கொண்டு. இவள் இப்போது மீண்டும் விஜயம்.

கல்லூரி முடிந்து மதுராவும், நித்தியும் வந்துவிட்டிருந்தனர். அபிநந்தனும் அன்று வேகமாகவே வந்து விட நால்வருமாய் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டு இருந்தனர். அந்நேரம் உள்ளே நுழைந்த சஞ்சனா தாவி வந்து., 'அபித்தான்...' என அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டாள். மதுமித்ராவிற்கு சுர்ரென்று கோபம்‌ வந்தது.. ஆனால் தனக்கு வந்து என்ன ஆக என நினைத்துக் கொண்டவள் சஞ்சனாவை பார்க்க பிடிக்காமல் வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்..

அவனது காஃபி கொஞ்சம் சிதறிவிட., 'சஞ்சு... இப்போ எதுக்கு இப்படி கொட்டி விட்ட... ' என கேட்டுவிட்டு தன் கோப்பையை கீழே வைத்தான். விறுட்டென்று அவன் கோப்பையை எடுத்து அதில் இருந்த காஃபியை வேகமாக குடித்து முடித்துவிட்டு பார்வதியிடம் திரும்பி., 'அத்தை சமையல் ஆடம்பரம் தான்... காலத்துக்கும் இங்கயே இருக்கலாம் அத்தை அதுக்காகவே... ' என்றாள் ஒரு அழுத்தத்துடன்..

அந்த அழுத்தத்தை கவனியாமலே பார்வதியும்., 'வந்து இரு சஞ்சு குட்டி... உனக்கு இல்லாமலா...' என்றாள். அங்கிருந்த மதுமித்ராவை அவள் இதுவரை கண்டு கொண்டதாகவே இல்லை.. அவளுக்கு அங்கே அமர்ந்திருக்க என்னவோ போல் இருந்தது‌.. கொஞ்சம் நேரம் கழித்து தான் கவனித்தாள் அவள் நித்தியிடமும் பேசவேயில்லை..‌ நித்தியும் அதனைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை... சில நிமிடங்கள் கழித்து திரும்பி மதுமித்ராவைப் பார்த்தாள்.‌ அப்போது தான் அவளைக் கவனித்தவள் போல்., 'ஹே... யார் நீ...' என்றாள்.

நந்தனின் முகம் கடினமுற்றதை மதுமித்ராவால் உணர முடிந்தது. நித்தி சட்டென்று முன் வந்து., 'நீயா... மரியாதையா பேசு..‌ அவங்க சீனியர்... ' என்றாள். 'ஹோ... ' என்றவள் அதற்கு மேல் வேறு எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை... கிளம்பும் வரையிலும் அவள் வாயில் இருந்து நூறு முறையாவது., 'அபித்தான்' என வந்திருக்கும்..

மதுமித்ரா மடித்துக் கொண்டு இருந்த ஒரு உடையை கண்டவள்., 'வாவ்... ' என்றவாறே வெடுக்கென்று அவள் கையில் இருந்து பிடுங்கினாள். 'அது அவங்களோடது..‌ அவங்கட்ட குடு சஞ்சு...' என அவளிடம்‌ சீறினாள்‌ நித்தி... அதைக் கேட்ட சஞ்சனா ஒரு ஏளனமாக குரலில்.., 'இவளா... இவ கலருக்கு செட் ஆகுமா இது.. ' என்றாள்‌. மதுமித்ரா சட்டென்று அவள் பக்கம் திரும்பினாள்.

அபிநந்தனுக்கு ஆத்திரம்‌ அதிகமாயிற்று‌.‌ பின் மதுமித்ராவைக் கூறினால் கோபம்‌ வராதா.. 'பல்ல ஒடச்சிடுவேன் சஞ்சனா... ஒழுங்கா பேசிப் பழகு...' என்று விட்டு நகன்று விட்டான். அதன்‌பின் அவள் மதுராவின் பக்கம்‌ வரவில்லை..

இரவு நெருங்கும் நேரம்‌ கிளம்பியவள்., மதுமித்ரா மட்டுன் இன்னும் இங்கேயே இருக்கிறாளே.. இந்தப் பிசாசை சொன்னால் அத்தானுக்கு வேறு கோபம் வருகிறது. இவளைக் கூட்டிக் கொண்டு போய் விட்டு அபித்தானிடன் நல்ல விதமாக காட்டிக் கொள்ளலாம் என நினைத்து 'நித்தி... இந்தப் பொண்ணு கிளம்பலையா... நான் வேணா கொண்டு போய் விடவா...' என்றாள்.
அவளிடம்‌ முகத்தை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு நித்தி., 'அவங்க இங்க தான் இருப்பாங்க.. நீ கிளம்பு' என்றாள்.

சஞ்சனாவுக்கு பேரதிர்ச்சி... இவள் ஏன் இங்கே.. இதில் இந்த நித்தி வேறு வக்காலத்து... ச்சீய்... என மனதிற்குள் கருவியவள். பார்வதியிடமும் நந்தனிடமும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். நந்தன் மதுராவின் அருகில் வந்து ஒரு மெல்லிய குரலில்., 'ஒன்னும் நெனச்சுக்காத மதுரா... ' என்று விட்டு நகன்றுவிட்டான். நித்தி மெதுவாக மதுராவின் அருகில் வந்து., 'மது... தொல்ல போயிருச்சு... இனி 6 மாசத்துக்கு வராது.. ' என்றாள்.

மதுமித்ராவும் நித்தி கூறியதைக் கேட்டு சற்று ஆறுதல்‌ அடைந்தாள் இனி அவளால் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை அறியாமல்...
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ, சஞ்சனாதான் வில்லியா?
என்னடா உப்பு சப்பில்லாம
இஸ்மூத்தா ஸ்டோரி போகுதே-ன்னு
பார்த்தேன்

இன்னாதான் மதுப் புள்ளய
லவ்வு செஞ்சுக்கினாலும்,
அத்தை வெளியே சொல்லோ
மிடியாம அபிநந்தன் மருவிக்கினு
கீறான்ப்பா
தங்காச்சிங்க இருக்கோச் சொல்ல
அண்ணாத்தை-லாம்
இப்படித்தான் கீறோணும்ப்பா
அப்போத்தேன் கெத்து
மெயின்டெயின் பண்ணோ
மிடியும்-ன்னு நல்லா நல்லா
நந்தன் தெரிஞ்சு
வைச்சுக்கினான்ப்பா

வந்துட்டாய்யா, வில்லி
சஞ்சனா வந்துட்டாய்யா
 
Last edited:

மதுரயாழினி

Writers Team
Tamil Novel Writer
ஓ, சஞ்சனாதான் வில்லியா?
என்னடா உப்பு சப்பில்லாம
இஸ்மூத்தா ஸ்டோரி போகுதே-ன்னு பார்த்தேன்
இன்னாதான் மதுப் புள்ளய அபிநந்தன் லவ்வு செஞ்சுக்கினாலும் அத்தை வெளியே சொல்லோ மிடியாம மருவிக்கினு கீறான்ப்பா
தங்காச்சிங்க இருக்கோ அண்ணாத்தை-லாம்
இப்படித்தான் கீறோணும்ப்பா
அப்போத்தேன் கெத்து மெயின்டெயின் பண்ணோ
மிடியும்-ன்னு நல்லா நல்லா
நந்தன் தெரிஞ்சு
வைச்சுக்கினான்ப்பா

வந்துட்டாய்யா வில்லி
சஞ்சனா வந்துட்டாய்யா
semma ka....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top