மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 4

#1
mad 5.jpg
மதுமித்ரா... அந்தப் பெயர் அவன் வேண்டாம் என்றாலும் அவன் வாயில் இருந்து அடிக்கடி வந்து கொண்டே இருந்தது. ஒருமுறை தெரியாமல் சுதனிடமும் அந்தப் பெயரைக் சொல்லிவிட சுதன் அவனை குடைந்து எடுத்துவிட்டான். எதோ வித்தியாசமான பெயர்.. எங்கோ கேள்விப் பட்டு இருக்கிறேன் எனக் கூறி அவனிடம் மழுப்பிவிட்டு விலகிக் கொண்டான். அதன் பின் தான் அபிநந்தன் கொஞ்சம் கவனமாய் இருக்க முயற்சி செய்யலானான். ஆனால் அவளைப் பார்க்கும் வாய்ப்பை மட்டும் பெற முடியவில்லை. மூன்று வாரங்கள் கடந்து விட்டது. அவனுக்கு எப்போதாவது தான் அவளது நினைவு வருகிறதோ என அவனே அடிக்கடி நினைத்துக் கொண்டான்.

புதிதாய் ஒரு ஃப்ளேவரை அவன் வேலை பார்க்கும் ஐஸ்கிரீம் நிறுவனம் முயன்றுகொண்டு இருக்க அன்று அவனுக்கு வேலையும் அதிகமாகவே இருந்தது. இரவும் வேறு வரச்சொல்லி இருந்தார்கள். சாப்பிட்டுவிட்டு போக மட்டுமே வீட்டிற்கு வந்திருந்தான். பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. நன்றாக சாப்பிட வேண்டும் என நினைத்துக் கொண்டே சாப்பிட அமர்ந்த நொடி முதல்., 'அம்மா தோசை கொண்டு வா... அம்மா... தோசை கொண்டு வா...' என கத்திக் கொண்டே இருந்தான். ஆனால் பார்வதியோ வெளியே வரவேயில்லை. இவன் மீண்டும் இருமுறை அழைத்துப் பார்த்தும் பதில் இல்லாது போகவே கோபமாய் அடுக்களைக்குள் எழுந்து சென்றான். அங்கே பார்த்தால் தாயும் மகளும் ஒரு சேர நின்று கதை பேசிக் கொண்டு இருந்தனர். நித்தியின் கையைப் பிடித்து சட்டென்று இழுத்து நகற்றி., 'காலேஜ்ல இருந்து வந்ததும் என்னடீ சாப்பிட்ட...' என்றான். அண்ணனின் கோப முகத்தைக் கண்டு பயந்தவளாய்., 'தோசைண்ணா.. ' என்றாள்.

'எத்தன....'

'4...'

'நீ 4 தோச தின்னியே... இவ்வளவு நேரம் கத்துறேன்ல... யாருக்காச்சும் எனக்கு சாப்பாடு கொண்டு வரணும்னு தோணுச்சா... இங்க நின்னு வெட்டிக்கத வேற...' என அவளிடம் சீறினான்.

வீம்பாய் தன் மகளின் மீது இருந்து அவனது கையைத் தட்டிவிட்ட பார்வதி., 'நாங்க வெட்டிக்கத பேசுனத நீ பார்த்தியா... தோசை வேணும்னா உள்ள எந்திரிச்சு வரணும்... அங்க டீவிய வேற அலரவச்சுட்டு அந்தப் பிள்ளைய திட்டுற...' என அக்மார்க் தாயாய் அவனை இரண்டு வசவு வைதுவிட்டு நித்தியிடம் திரும்பி., 'நீ கூட்டிட்டு வாடி...' எனக் கூறினாள்.

தாயின் கோபத்தில் கொஞ்சம் வியந்து போனவன் நிச்சயமாய் எதோ முக்கியமான விஷயம் என உணர்ந்தான். சரி அவளிடம் மன்னிப்பு கேட்கலாம் என நினைத்து., 'நித்தி...' என்றான். அவனால் கன்றிச் சிவந்துவிட்ட தன் கையை தேய்த்தவாறே முகத்தை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு சென்றுவிட்டாள். 'குட்டிப் பிசாசு.. கொஞ்சம் எறங்குனா ஏறி மேய்வாளே...' என தங்கையை மனதிற்குள் திட்டிவிட்டு தாயிடம் திரும்பினான். அவளுடைய முகம் இன்னும் குழப்பத்தில் இருந்து தெளியவில்லை... 'மா.... சாரி மா... சோறு போடு.... நான் நைட்டும் இன்னைக்கு போகணும்... ப்ளீஸ்...' என்றான். அவன் முடிப்பதற்குள்ளாகவே அவனுக்கு தோசை ஊற்றி தட்டில் எடுத்து கொடுத்துவிட்டாள். இன்னுமும் தாயின் முகம் சரியில்லை எனத் தோன்ற., 'அதான் சாரி சொல்லிட்டேன்ல மா... இன்னும் என்ன கோபம்..' என்று வினவினான்..

'ப்ச்... நீயில்லடா... நித்திக்குட்டி அவ ஃப்ரண்ட வீட்டுக்கு கூட்டிட்டு வரப் போறாளாம்.. ' என்றாள் யோசனையுடனே...

'அதுக்கென்ன வரட்டுமேமா... '

'இல்ல தம்பி... தங்குறதுக்கு....'

சில நிமிடங்கள் யோசித்தவன்.. 'நித்திக்குட்டியே கேட்டாளா மா...' என்றான். பார்வதி தலையசைக்கவும்., 'அப்படினா வரட்டும்மா... அவ என்னைக்காச்சும் இப்படி கேட்டு இருக்காளா.. எதோ முக்கியமா இருக்கப் போய் தான கேக்குறா... நாம ரெண்டு பேரும் வெளிய படுத்துக்குவோம் மா... அவங்க ரூம்குள்ள படுத்துக்கட்டும்.... அதுக்கு ஏன் மூஞ்சிய தூக்கி வச்சிக்கிற... சரி ஒன்னும் குழப்பிக்காத... நான் கிளம்புறேன்... காலைல தான் வருவேன்... கதவ பூட்டிக்கங்க... பார்த்து இருங்க...' என அவளிடம் சொல்லிவிட்டு தன் வேலைக்கு கிளம்பிவிட்டான். '

இரவு முழுக்க வேலை இருந்தது.. துளி உறக்கமில்லை அவனுக்கு.. விடியற்காலை 4 மணியளவில் தான் அவனால் வீட்டிற்கு செல்ல முடிந்தது. ஆனால் நல்ல மனதோடு அவனுக்கு அன்று விடுமுறையும் அளித்துவிட்டனர்... எனவே நன்றாக தூங்கலாம் என எண்ணி வீட்டிற்குள் நுழைந்தான். அனைவரும் உறங்கிக் கொண்டு இருக்க பார்வதி தான் வந்து கதவைத் திறந்து விட்டாள். ஹாலில் அவளுக்கும் மகனுக்கும் என அவள் விரித்துப் போட்டிருக்க., தான் கூறியதையே மறந்தவனாய்., 'ஏன்மா இங்க விரிச்சு போட்டு இருக்க...' என்றான் தூக்கக் கலக்கத்தில்... 'நித்தி ஃப்ரண்ட் வந்துட்டாடா... அதனால தான் நமக்கு வெளில...' எனக் கூறிக்கொண்டே படுத்தும் விட்டாள். அவன் கண்ணில் இருந்த உறக்கத்தில் அவனும் அதை பெரிதாய் எண்ணாமல் படுத்து உறங்கிவிட்டான்..

மறுநாள் காலை 7 மணி இருக்கும். நித்தி எழுந்து பேசும் சத்தமும்., பார்வதியின் சமையலறை எழுப்பிய சத்தமுமே அவனை துயில் எழச்செய்துவிட்டன... 'இந்த வாலு ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்துச்சு...' என நினைத்துக் கொண்டே குளிப்பதற்கு உடைகளை எடுக்க கண்களைத் தேய்த்துக் கொண்டே தன் அறைக்குள் சென்றான். அங்கிருந்த பெண்ணைப் பார்த்ததும் அரைத் தூக்கத்தில் இருந்தவன்.., 'நித்தி தான் எழுந்திருச்சுட்டாளே... திரும்பவும் இங்க வந்து படுத்துட்டாளா... ' என யோசித்தவாறு அவளைப் பார்த்துக் கொண்டே நின்றான். படுத்து இருந்தவள் தூக்கத்தில் மெல்ல இவன் பக்கம் புரண்டு படுக்க.. அவளைப் பார்த்தவன் அரண்டு தான் போனான்.

மதுமித்ரா... இவள் எப்படி இங்கே... தங்கை தன் தோழியை அழைத்து வருவதாய் சொன்னாளே... அது இவள் தானா.... ஆனால் எப்படி,... ஒன்றும் புரிபட மறுத்தது அவனுக்கு... அப்பொழுது தான் துயிலில் இருந்து தெளிந்த மதுமித்ரா.. இவனைப் பார்த்ததும் யாரோ ஏதோ என பயந்து போய் விருட்டென்று எழுந்து அமர்ந்தாள். சில நொடிகளில் நிதானம் வந்து விட்டது அவளுக்கு. அபிநந்தனுக்கு தான் மூளை மறத்துப் போய் இருந்தது. எழுந்து இரண்டு அடிகளில் அவனை நெருங்கியவள் அவனது கையைப் பிடித்து திருப்ப முயன்றாள். அவள் எழுந்ததும் இயல்பிற்கு திரும்பிய அபிநந்தன் அவள் செய்ய வருவதை முன்கூட்டியே ஊகித்து அவளது கையைப் பற்றி திருப்பி அவளைத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.

அவள் அவனிடம் இருந்து திமிறி வெளிவற முயன்று முடியாமல்., 'நீ எப்படி இங்க... யாரு நீ...' என்றாள் கோபத்துடனே... 'கத்தாத...' என அவளைப் பணித்துவிட்டு., 'நான் நித்தியோட அண்ணன்...' என்றான். அவன் கைக்குள் நின்றவாறே அவள் திரும்பி அவனது கண்களைப் பார்த்தாள் உண்மைதான் கூறுகிறானா என்று அறிய.. ஆனால் எதிர்பாராவண்ணம் அந்த விழிகளின் மோதலில் இருவருமே தடுமாறித்தான் போய் இருந்தனர்.. எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தனர் என இருவருக்கும் தெரியவில்லை. மெல்ல நினைவு திரும்பிய அபிநந்தன் அவளை தன் கைகளுக்குள் இருந்து விடுவித்து., 'சாரி மதுரா... இது என் ரூம்... நீ வந்தது எனக்கு நியாபகம் இல்லாம உள்ள வந்துட்டேன்... ட்ரஸ் எடுக்க தான் வந்தேன்,..' என கூறிவிட்டு எடுக்க நினைத்த உடையை எடுக்காமலேயே சென்றுவிட்டான்... மதுரா... அந்தப் பெயர் அவளை என்னவோ செய்தது. இதுவரை யாரும் அவளை அப்படி அழைத்ததில்லை... இப்படி நிலைதடுமாறி அவளும் நின்றதில்லை.. வெளியே சென்ற அபிநந்தனோ நல்லவேளை அம்மாவிடம் நேற்று.. 'நித்தி ஃப்ரண்ட் எனக்கும் தங்கச்சி மாதிரினு சொல்லல...' என நினைத்துக் கொண்டான்.

ஆனால் நித்தி மூன்றாம் வருடம். இவள் கடைசி வருடம்... பின் எப்படி இருவரும் தோழிகள், அதுவும் வீடு வந்து தங்கும் அளவிற்கு என்ற ஒரு குழப்பமும் அவனுக்கு இருந்தது.
 

Latest profile posts

மண்ணில் தோன்றிய வைரம் 35 அப்டேட் போட்டாச்சு மக்களே.....
மண்ணில் தோன்றிய வைரம் 34 அப்டேட் போட்டாச்சு மக்களே.
ஹாய் ப்ரண்ட்ஸ் கல்லுக்குள் ஒரு காதல் பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்....
அம்மு dear இதுலயும் mani sir irukaruthanu
எங்கேயும் காதல்! - 17 போட்டாச்சு. படிச்சுட்டு உங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Sponsored

Recent Updates