மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 13

Advertisement

மதுரயாழினி

Writers Team
Tamil Novel Writer
மதுமித்ராவிற்கு தன்‌ வீடே சூனியம் போல் தெரிய ஆரம்பித்தது. நந்தனைப் பார்க்க வேண்டும்‌ என்றாலும் சஞ்சனாவும் அங்கே இருப்பாளே.. ஆனால் பார்வதிம்மாவை பார்க்க வேண்டும். மனதினுள் ஆயிரம் யோசனைகள் அவளை‌ படுத்தி எடுத்தவாறு இருந்தன.. நித்திக்கு அவளது தவிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தது.. அண்ணன் உணவு கொடுக்கவரும் நேரமெல்லாம் மதுமித்ரா ஒரு வித பதற்றத்துடன் இருப்பதை அவளும் கவனித்துவிட்டாள்.

நந்தனுக்கோ அப்போது அவனது வேலையே பிரதானமாய் இருந்தது. மதுமித்ரா தன்னை ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கை‌ அவனுக்கு அடியோடு சிதைந்து விட்டது.. தொழில் தொடங்க முயற்சிகளை எடுக்கத் தொடங்கினான்.‌ லோன் என நினைத்தால் அவர்களிடம் சொத்து என எதுவும் இல்லை... எதை வைத்து கேட்பது. யாருடைய சூரிட்டி கையெழுத்தாவது வேண்டும் என்றார்கள்.

அவன் என்ன செய்யலாம்‌ என பார்வதியிடம் யோசனை கேட்டுக் கொண்டு இருக்க, அதைக் கேட்ட சஞ்சனா அபித்தானுக்கு தன் மேல் பிரியம் வரவைப்பதற்கான வழியாக எண்ணி தன் வீட்டிற்கு விரைந்து தன் தந்தையை கையெழுத்திடச் சொன்னாள்.

சுந்தரமூர்த்தி சஞ்சனாவை முட்டாள் என்றுவிட்டார்... 'அறிவு இருக்கா சஞ்சனா... அவங்களே காசில்லாம பிச்சை எடுக்குறாங்க... இதுல நான் கையெழுத்து போடணுமா... போனோமா வந்தோமானு இருக்கணும்... இதுலலாம் நீ ஏன் தலையிடுற... உன் அத்த கேட்டாளா.. இல்ல அந்த பரதேசி கேட்டானா..' என அவளைக் கேட்க.. சஞ்சனாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

'யாரைப் பரதேசினு சொல்றீங்க...' என்றாள்.

'அந்த அபிநந்தனைத் தான்..' என சுந்தரமூர்த்தி காட்டமாக உரைக்கவும் கோபமுற்றவள் சமையல் அறைக்குள் சென்று கத்தியை எடுத்து கை நரம்பின் அருகில் வைத்துக் கொண்டாள்.

சஞ்சனாவின் அம்மாவும் அப்பாவும் பதறிவிட்டனர்.. ஒரே பெண்ணாயிற்றே... அவளது அம்மா, 'என் பிள்ளைய மயக்கி வச்சிருக்கா படுபாவி...' என பார்வதியை திட்டிக் கொண்டே இருக்க., சுந்தரமூர்த்தியோ மகள் தன் கையில் இருந்த கத்திக்கு அழுத்தம்‌ கொடுப்பதைப் பார்த்து சரியென்று விட்டார்...

சஞ்சனாவிற்கு தான் முழுதாய் வெற்றி பெற்று விட்டதாகவே தோன்றியது. பார்வதியின் வீட்டிற்கு தன்‌ தந்தையையும் அழைத்துச் சென்றாள்.

பார்வதி சுந்தரமூர்த்தி வந்ததன்‌ காரணத்தை அறியாமல்., 'வாங்கண்ணா' என வரவேற்று காஃபி போட்டுக் கொடுத்தாள். அபிநந்தன் உள்ளே எழுந்து போக முற்பட.‌..

'அபி உன்கிட்ட தான் பேசணும்' என்றார்.

'சொல்லுங்க மாமா...'

'நீ பிசினஸ் லோன்க்கு என் கிட்ட சூரிட்டி கையெழுத்து கேட்டியாம்ல...'

'நான் யார்கிட்டயும் கேட்கலையே....'

சுந்தரமூர்த்தி திரும்பி தன் மகளைப் பார்த்தார். அவள் பேசுமாறு கண் அசைக்க அதற்கு கட்டுப்பட்டவராய்.. பார்வதி பக்கம்‌ திரும்பி

'இல்ல பார்வதி... நான் கையெழுத்துப் போட்டுத் தர்றேன்...'

பார்வதி தன் மகனைப் பார்த்தாள். அவன் வேண்டாம் என கண்ணசைத்தான்...

'இல்ல இருக்கட்டும்ணா... அவன் கொஞ்சம் தேடிப் பார்க்கட்டும்..'

'அட என்னம்மா நீ... நம்ம பையன் நல்லா வரணும்னு ஆசைல தான சொல்லுறேன்.. நீ இன்னும் என்ன அன்னியமாதான் மா நினைக்குற... 'என்றார் முயன்று வரவழைத்த உடைந்த குரலில்‌‌‌...

அபிநந்தனுக்கு அவரது குரல் அப்பட்டமாய் புரிந்தது... ஆனால்‌ பார்வதி கொஞ்சம் கலங்கிவிட்டாள். இருக்கும் ஒரே உறவு சுந்தரமூர்த்தி தான். அதுவும் தானாய் வந்து உதவுகிறார் என்பதால் அவள் மகிழ்ந்து தான் போயிருந்தாள். தன் மகன் பக்கம் திரும்பி., 'தம்பி... நீ சரின்னு சொல்லு... எனக்காக...' என்றாள்.

பார்வதி கூறிவிட்ட பிறகு அபிநந்தனால் ஒன்றும் செய்ய முடியவில்லை... 'சரி மாமா... நான் விவரம் கேட்டுட்டு எப்போ கையெழுத்து போடணும்னு சொல்றேன்...' என்று‌ கூறிவிட்டு எழுந்துவிட்டான்.

சனிக்கிழமையும் வந்தது... நாளை நந்தனையும் பார்வதியையும் பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் மதுமித்ராவிற்கு அதிகமாகிக் கொண்டே சென்றது... நித்தி காதில் ஹெட் செட்டை மாட்டிக்‌கொண்டு உறங்கிவிட மதுமித்ரா மட்டும் ஏதேதோ நினைத்துக் கிடந்தாள். கதவு
தட்டப்படும் ஓசை கேட்டது...

நந்தன்‌ தான் வந்துவிட்டான் என ஆவலுடன் ஓடிச்சென்று பார்த்தாள். ஆனால் அங்கு அவன் இல்லை... மணியைப் பார்த்தாள் 7 தான் ஆகியிருந்தது.. அங்கு வீட்டு ஓனர் நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும் பேசாமல் நின்றாள்...

'எப்படிம்மா இருக்க...' என்றார்...

'நல்லா இருக்கேன் சார்..'

அவர் மேல் இருநது மது நெடி வீசியது... அந்த ஆள் மதுவை பார்த்துக் கொண்டே நிற்கவும் அவள்., 'எனக்கு வேலை இருக்கு‌ சார்... நீங்க கிளம்புங்க...' என்றுவிட்டு கதவடைக்க முயன்றாள்..

அவன் கதவை மூட விடாமல் கையை வைத்து தடுத்துவிட்டான்... துணைக்கு நித்தியை அழைக்கலாம்‌ என மதுமித்ரா உள்ளே திரும்பி., 'நித்தி... ' என கத்தினாள்.‌‌ வராண்டா, ஹால் அடுத்து அறை என்பதால் உறங்கிக்‌கொண்டு இருந்த நித்திக்கு சத்தம் கேட்கவில்லை...

அந்த ஆள்., 'ஓ... ரெண்டு பேர் இருக்கீங்களா... ரொம்ப வசம்...' என்றுவிட்டு மதுமித்ராவை நகற்றிக்கொண்டே உள்ளே நுழைந்துவிட்டான்.. ரோட்டிலும்‌ ஆள் இல்லை... கத்திக் கூப்பிட்டாலும் யாருக்கும் கேட்காது... என்ன செய்ய என மதுமித்ரா மூளையை வேகமாக செயல்படுத்தினாள்.


தற்செயலாக திரும்பியவளின் கண்களில் ஆப்பிள் சாப்பிடுவதற்காக அவள் உபயோகப் படுத்திய கத்தி தெரிந்தது... சட்டென்று அவள் அதை எடுக்கப்‌ பாய., இவன் அவளது கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்து சுவற்றோடு சாய்த்துக் கொண்டான்...

மதுமித்ரா அவனிடம்‌ இருந்து திமிறி நகன்று வர முயன்று அவன் முகத்தில் ஓங்கி குத்தினாள். ஒரு நொடி விலகியவன் அவளை மீண்டும் பிடித்து தன் பக்கம் இழுத்து தன் கைகளை அவளது கழுத்தில் படரவிட ஆரம்பித்தான்.

அவள் சரியாக நித்தி என கத்திய நொடி., அவன் தலையில் எதோ ஒன்று வந்து விழுந்தது., 'அம்மா...' என்ற அலறலுடன் அவளிடம் இருந்து பின்னால் திரும்பியவன் அங்கே இன்னொருவன் நிற்பதைக் கண்டான்... உணவு கேரியரை எடுத்துக்‌கொண்டு அபிநந்தன்‌ தான் வந்திருந்தான்.

பயந்து போன மதுமித்ரா அவனுக்கு பின்னால் சென்று நின்று கொண்டாள். அவள் விசும்பும் சத்தம் மட்டும் கேட்டது... அபிநந்தனை அடிக்க மற்றவன் வரவும் பலம் கொண்ட மட்டும்‌ ஓங்கி அவனை ஓர் அறை அறைய., அவன் மயங்கிச் சரிந்தான்...


அவள் இன்னும் விசும்பிக் கொண்டே இருந்தாள். அவளை மெல்ல அணைக்க முற்பட்டவன் சட்டென்று அவளை தன் பக்கம் இருந்து விலக்கினான். அவளுக்கு ஏன் அவன் அப்படி செய்தான்
என புரிந்தது...

அவளுக்கும் பழையது எல்லாம் நினைவில் வர., 'இதென்ன நடிப்பு அபிநந்தன்... அதான்‌ நீங்க எல்லாரையும் கட்டிப்‌பிடிப்பீங்களே...' என்றாள்.

அவனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது., 'முட்டாள்...நான் யார அப்படி கட்டிப் புடிச்சேன்... உன்ன லவ் பண்ணித் தொலச்சதுனால தான் அது எனக்கு தப்பா தோணல... அதுவும் அசிங்கமான எண்ணத்துல இல்ல... ஆறுதலா தான் நெனச்சேன்... நீ இவ்வளவு கேவலமா நெனப்பன்னு தெரிஞ்சிருந்தா உன் பக்கமே வந்திருக்க மாட்டேன்...' என கர்ஜித்தான்...

'பொய் சொல்லாத... ஞாயிற்றுக்கிழமை நீ சஞ்சனாவ கட்டிப் பிடிக்கல...'

'சீ... என்ன பேச்சு இது.. அவ எனக்கு நித்தி போல தான்..'

'மறுபடியும் மறுபடியும் நடிக்காத...'

'கட்டிப் புடிச்சேன்னு நீ பார்த்தியா... இல்ல அவ சொன்னாளா...'

'பார்த்தேன்...'

'நீ தான் நடிக்கிற மதுரா... வாய்ப்பே இல்ல... அப்படி ஒன்னு நடந்தா தான நீ பார்க்குறதுக்கு...'

'பார்த்தேன்.. சஞ்சனா உன் ரூம்குள்ள வந்து தாழ்ப்பாள் போட்டதையும் பார்த்தேன், அடுத்து அவ ஈர ட்ரஸ்ஸோட வர்றதையும் பார்த்தேன், கடைசியா நீ தலைய துவட்டிட்டு வர்றதையும் பார்த்தேன்...'

அன்று எதோ கதவு தாளிடப் படும் ஓசை கேட்டது அவனுக்கு லேசாக நினைவு வந்தது...

'இதுல நான் கட்டிப் பிடிச்சமாதிரி எதுவுமே வரலையே..'

'போதும் நந்த‌ன்.. நான் அவ்வளவு முட்டாள் இல்ல...'

'நீ பார்த்தது உண்மையில்லைனு என்னால ப்ரூவ் பண்ண முடியும்'

'பொய்ய உண்மையாக இன்னொரு பொய்யா...'

'உண்மைய உனக்கு புரிய வைக்குறேன்.. ஆனா நீ இனி இந்த வீட்டுக்கு வரக்கூடாது தனியா... இப்போ நித்திய கூட்டிட்டு வா.... இப்போவே கிளம்பணும்...' என்றுவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டான்...

தவறு இவன் மேல்... இதில் நிரூபிக்க வேறு போகிறானாமா??? என மனதிற்குள் நினைத்துக்‌கொண்டாலும், அப்படியிருந்தால் நன்றாய் இருக்கும் என்றும் அவளுக்கு தோன்றியது...


மூவருமாய் பார்வதியின் வீட்டிற்கு கிளம்பினர்... உள்ளே நுழைந்ததும் நந்தன் சஞ்சனாவின் காதருகில் சென்று.,'சஞ்சு... நான்‌ உன்கிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயம்‌ பேசணும்... எழுந்து வா... ' என்று மாடிக்கு சென்றான்...

சஞ்சனா சற்று குழப்பத்துடன் என்றாலும், கூப்பிடுவது அபித்தான் ஆயிற்றே... பின்னாலேயே சென்றாள். அவன் மதுமித்ராவிற்கு கண்ணசைவில் பின் வருமாறு கூறி இருந்ததும் அவளுக்கு தெரியவில்லை... அடுத்து நடக்க இருப்பதையும்‌ அவள் அறியவில்லை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top