மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 10

Advertisement

மதுரயாழினி

Writers Team
Tamil Novel Writer
அவனது அணைப்பு அவளுக்கு பெரும் ஆறுதலாய் இருந்தது.. நந்தன் அவளது முகத்தை மெல்ல நிமிர்த்தினான். நிலவொழியில் கண்ணீர் தேங்கி நின்ற அவளது கண்கள் குழந்தையினதைப் போல இருந்தன... 'உனக்கு சரிதானா மதுரா...' என்றான் அவளைப் பார்த்து... அப்போது தான் அவளது மூளை‌ வேலை செய்ய ஆரம்பித்தது. 'என்ன சரிதானா' என்கிறான்.

சட்டென்று நியாபகம் வர., தீ சுட்டதைப் போல் அவனிடம் இருந்து விலகி நின்றாள். இப்படி அறியா ஒருவனை கட்டிக்கொண்டு நிற்கிறோமே என்ற எண்ணமே அவளை கூறு போட்டுக் கொண்டு இருந்தது.. தன்னை அசிங்கமாய் உணர்ந்தாள். தன் நிலையை தானே அவனும் உபயோகிக்கிறான். சஞ்சனாவையும் இங்கேயே வைத்துக் கொண்டு என்ன திமிர் அவனுக்கு... அவளிடமும் ஆசையை வளர்க்கிறான்.. என்னிடமும் தூபம் போடுகிறான்..

அவனிடம் உருகிப் போய் தொலைந்தது என்னுடைய தவறு தான் என எண்ணினாள். நந்தனின் செயலால் எரிச்சலுற்றவளுக்கு பார்வதியம்மாவின் முகம்‌ வேறு கண்களுக்குள் வந்து போயிற்று... அன்னமிட்ட கைக்கு இதுவா பதில்... கண்களைத் துடைத்துக் கொண்டு அவனிடம் இருந்து விலகி நின்றவளை வியப்பாய் பார்த்தான்..

'மதுரா...' என அவன் மீண்டும் அழைக்க கனல் கக்கும் பார்வையுடன் அவனைத் திரும்பிப் பார்த்தவள்., ஒரு விரக்திச் சிரிப்புடன்.., 'நீயும் எல்லாரையும் போல தான‌.. என்னோட சிட்சுவேஷன ரொம்ப கேவலமா யூஸ் பண்ணிக்கிட்ட... எனக்கு அறிவு இருந்திருக்கணும்...‌ உன்ன சொல்லி என்ன ப்ரயோஜனம்... உரசிட்டு நிக்க நானும் தான இடம் கொடுத்துட்டேன்' எனக் கூறிவிட்டு அவனைத்‌ தாண்டி நடந்தாள்.

அபிநந்தனின்‌ உடல் சட்டென்று விறைப்புற்றது... எதோ செய்யக் கூடாத பாவத்தை செய்துவிட்டது போல் அவனுக்கு தோன்றியது..‌ தான் செய்தது எவ்வளவு அசிங்கமான காரியம். ஒரு பெண்ணுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என தெரியாமலேயே இப்படி அவளைத் தொடுவது நியாயமாகுமா... தனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள்‌ தானே... கேட்க ஆள் இல்லாமல்‌ தான் இப்படியெல்லாம் செய்கிறோம்‌ என அவள் நினைத்திருப்பாள். தன்னைத் தானே நொந்து கொண்டான்... அவளிடம் தன்‌ விருப்பத்தை அல்லவா தெரிவித்து இருக்க வேண்டும்... அதைவிட்டு விட்டு இதென்ன முட்டாள்‌தனம்.. நான்‌ ஏன் இப்படி செய்தேன். அவளை இழந்து விட்டேன்.. எவ்வளவு கேவலமாய் தன்னை எண்ணிவிட்டாள்..‌ நினைக்கையில் அழுகையே வந்துவிட்டது அவனுக்கு...

'சாரி மதுமித்ரா... இதை நியாயப் படுத்த விரும்பல... ஆனா என்னால உனக்கு இனி எந்த தொந்தரவும் இருக்காது சரியா...' என்றுவிட்டு முதலில் அவன் கீழே இறங்கிவிட்டான்... 'மதுமித்ராவா..' என நினைத்தவளுக்கு அதுதான் இனி சரியென்று பட்டது... நாளைக்கே ஹாஸ்டல் சென்றாலும் சரிதான் என நினைத்துக் கொண்டாள். அவன் முன்னால் மட்டும் வரவே கூடாது... மீண்டும் அவனிடம் உருகிவிடக்கூடாது என்பதற்காக., 'முதல்முறையாக ஏமாற்றத் துணிந்த ஒருவனிடம் தோற்றுப் போய் இருக்கிறாய் மதுமித்ரா' என அவளது மூளைக்கு வீம்பாய் உருப்போட்டுக் கொண்டாள்...

இருவரும் மேலே பேசி தான் அறியாத சண்டை முடிவுக்கு வந்திருக்கும் என்ற நம்பிக்கையோடு கீழே இறங்கி வந்த மகனை பார்வதி நோட்டமிட்டாள்‌. அவன் முகம் துவண்டு போய் இருந்தது... அடுத்து இறங்கி வந்த மித்ராவின் முகமோ அழுது கணத்து இருந்தது.. என்ன தான் நடந்திருக்கும்... இருவரிடமும் கேட்கலாமா.. இல்லை‌ அவள் புதுப் பெண் தான்... அவளிடம் வேண்டாம் என எண்ணியவள், மகனிடம் முதலில் கேட்க ஆயத்தமானாள்...

அவன் அறைக்குள் நுழைய தானும் பின்னேயே நுழைந்தாள்‌. அவள் வருவதை அறியாத நந்தன் மெத்தையில் படுத்துக் கிடந்தான். அவனை உற்று நோக்கியவள் அப்போது தான்‌ பார்த்தாள் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதை.. பதறிப் போனவளாய் அவன் மேல் கை வைத்து., 'தம்பி...' என்றாள். சட்டென்று எழுந்தவன் தன்‌ தாயைப் பார்த்ததும் அவளது மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்... வெளியே மதுமித்ரா தன் உடைமைகளை சேகரித்து ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு இருந்தாள். இனி வெளியேறித்தானே ஆக வேண்டும்.. அவனைப் பார்க்காமல் இருப்பதே நலம். அவனைப் பற்றி என்ன நினைக்க இனி‌.. கை போன போக்கில் தன் வேலைகளைச் செய்து கொண்டு இருந்தாள்.

மடியில் கிடந்த மகனின் முதுகை தடவிக் கொடுத்தவள்., 'என்ன அபி பிரச்சனை உனக்கும் மித்ராவுக்கும்..' என்றாள். எழுந்து தன்‌ தாயின் முகத்தைப் பார்த்தவன்., 'அவகிட்ட என்னம்மா எனக்கு பிரச்சனை... சும்மா வேலை டென்ஷன்.. ' என்றான் தட்டுத் தடுமாறி...

'பொய் சொல்லக்கூட பழகிட்டியா தம்பி... சரி நீ உன் வேலைய பாரு... நான் கிளம்புறேன்.. ' என பார்வதி எழவும் அவளது கையைப் பிடித்து தடுத்து நிறுத்தி., 'நான் அவள... எனக்கு புடிச்சதும்மா... ' என்றான் தயங்கிய குரலில்...

'தெரியும் அபி... அவ வந்த முதல்‌ நாள் நித்தி கிட்ட உனக்கு சீனியர்லனு நீ கேட்டதுல இருந்து இப்போ நீ மாடிக்கு போய்ட்டு வர்ற வரைக்கும் தெரியும்... ஆனா உன்ன நான்‌ இவ்வளவு‌ உடைஞ்சு போய் பார்த்ததில்ல டா... எதுவும் சண்டையா...' என்றாள்

நடந்ததை மறைக்காமல் தன்‌ தாயிடம்‌ கூறினான். அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தவள்., 'எனக்கு இப்போ வர்ற கோபத்துக்கு உன்ன அறைஞ்சிருக்கணும் அபி... அதென்ன பழக்கம் என்ன ஏதுன்னு தெரியாம அவள ... சொல்லக் கூட முடியல என்னால... ஆனா நீ வேணும்னு செஞ்சிருக்க மாட்ட எனக்கு தெரியும்.. அத அவளுக்கு புரிய வை... பாவம்‌ அந்தப் பொண்ணு... நீயாவது என் கிட்ட சொல்லுறடா... அவ யார்கிட்ட சொல்லுவா... நீதான் இனி பேசணும் அவ கிட்ட' என்றாள்.

'இல்லம்மா.. அவளுக்கு என்ன புடிக்கல... நான் இனி அவ முன்னாடியே வரமாட்டேம்மா... ' என்றான் வாடிப்போய்...

'யார் சொன்னா... அவளுக்கு புடிக்கலன்னு... அவளே சொன்னாளா... '

'இல்ல... '

'பின்ன எப்படி நீ சொல்ற...'

'திட்டிட்டாளே மா...'

'நீ செஞ்ச காரியத்துக்கு பழைய மித்ராவா இருந்தா உன் ஒரு காது கேட்காம பண்ணியிருப்பா... அவ சும்மாவே தான் தைரியமா இல்லையோ., தன்‌ தைரியம்லாம் போச்சோ... யாரையாவது சார்ந்து தான்‌ இருக்கணுமோன்னு பயத்துல இருக்கா டா... நீ வேற போதாகுறைக்கு இதெல்லாம் செஞ்சா... போ பேசிப்பார்.. அவ நார்மல் ஆகோட்டு... ' என்றுவிட்டு பார்வதி வெளியே வந்தாள்.

மதுமித்ரா அங்கே அமைதியாய் அமர்ந்திருந்தாள். எதோ தண்ணிரில் விழப் போன குழந்தை போன்ற பயந்த முகபாவத்துடன். அவளைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது பார்வதிக்கு... பார்வதியைப் பார்த்ததும் முயன்று முறுவலித்தாள் மதுமித்ரா... அந்த சிரிப்பில் இருந்த வலியை பார்வதியால் உணர முடிந்தது...

மதுமித்ரா மெல்ல., 'ம்மா...நாளைக்கு ஹாஸ்டல் பார்க்க போவோமாம்மா...' என்றாள்‌‌.

'வேண்டாம்... 'என கூற எத்தனித்த வாயை தடுத்து., 'சரிம்மா... ' என்றாள் பார்வதி.. எங்கே வேண்டாம்‌ என கூறினால்‌ அபிநந்தனின் செயலை‌ தான் கவனிக்காமல் விட்டுவிட்டதாய் எண்ணிவிடுவாளோ என்ற பயம் தான்.

அன்று முழுவதும் மதுமித்ரா தூங்கவே இல்லை... அம்மா அப்பாவின் நினைப்பு அதிகமாய் இருந்தது... தனக்கென்று யாருமே இல்லாததைப் போல் உணர்ந்தாள். சஞ்சனாவும் வேகமாக தூங்கிவிடவே அவளைப் பார்த்த மதுமித்ராவிற்கு அவள் மேல் பரிதாபம் தோன்றியது... பாவம் இந்தப் பெண்... அவன் மேல் எவ்வளவு ஆசை வைத்திருக்கிறாள். பின் எப்படி அவன் இவ்வாறு நடந்து கொண்டான்.

மனது அவன் தவறானவன் அல்ல என்று கூற மூளையோ இவ்வளவு நடந்த பிறகும் இன்னும் நம்பிக்கையா என அவளை ஏளனம் செய்தது...

காலையில் முதல் ஆளாய் எழுந்து விட்டாள். பார்வதி எழும் முன் அனைவருக்கும் என்று டீ ஆற்றி வைத்தாள். அதன் பின் எழுந்து வந்த பார்வதி அவளது கண்களை வைத்தே தூங்கவில்லை என கணித்துவிட்டாள்.
தன் மகனும் தூங்கவில்லை என அவள் அறிவாள் தானே.. இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டாள் தேவலை என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்.

மாலையில் மதுமித்ரா மீண்டும்., 'ஹாஸ்டல்மா... ' என ஆரம்பிக்க, 'தனியா போக முடியாதும்மா... அபி வந்ததும் சேர்ந்து போவோம்.. ' என அவளை சமாதானப்படுத்தினாள். அவனுடனா என யோசித்தாலும் வேறு வழியில்லை என்று தோன்ற அப்படியே விட்டுவிட்டாள்.

சஞ்சனா தான்‌ மிகுந்த மகிழ்ச்சியில்‌ இருந்தாள். தன் பிரச்சனை இன்றோடு தீர்ந்துவிடும் என்று‌.. அபிநந்தன்‌ வந்ததும் பார்வதி., 'மித்ராக்கு ஹாஸ்டல் பார்க்க போகணும்டா... கூட்டிட்டு போ... ' என்றாள். அவன் முகத்தில் சலனமே இல்லை..‌ சரியென்று விட்டான்...‌

மூவருமாய்., ஹாஸ்டலை பார்வையிடச் சென்றனர். வழி தெரியாது போகவே ஒரு கடையில் வண்டியை நிறுத்தி., 'திவ்யா லேடீஸ் ஹாஸ்ட்டல் எங்கண்ணா... ' என்றான் நந்தன். அந்த கடைக்காரரோ.,'அடுத்த தெருவில இருக்குற வைன் ஷாப்புக்கு அடுத்துப்பா... ' என்றார்.

பார்வதிக்கு தூக்கிவாரிப் போட்டது..‌ மதுபானக்கடைக்கு அடுத்தா... இவளும் மகள் போலத்தானே எப்படி இவளை விடுவேன் என மனது அடித்துக் கொள்ள ஆரம்பித்தது... மதுமித்ரா முதலிலேயே இந்த ஹாஸ்டலைப் பற்றி அறிந்திருந்து வேண்டாம் என்று விட்டிருந்தாள்.. இப்போது நிலையே வேறு.. அங்கிருந்து முதலில் கிளம்பியே ஆகவேண்டும்... அதனால் தான் சம்மதித்து இருந்தாள்.

அந்த ஹாஸ்டலுக்குள் நுழைந்தாள் அது குப்பைக் கிடங்கு போல் இருந்தது‌.. இவ்வளவு மோசமான இடத்தை பார்வதி பார்த்ததே இல்லை போல் தோன்றியது.. மதுமித்ராவிற்கு என ஒதுக்கப் பட்ட அறை பார்த்தால் அதனினும் மோசம்... மிகக் குறுகிய இடம். அதில் இருவர் இருக்க இவள் மூன்றாவதாய் என ஹாஸ்டல் நடத்தும் பெண் கூறினாள்.

வாசல் அருகில் ரிசப்ஷனிடம் வந்ததும் மதுமித்ரா பார்வதியைப் பார்த்து., 'ம்மா... அட்வான்ஸ் எடுக்கவா... ' என்றாள். பார்வதி தீர்க்கமான குரலில்., 'நான் உனக்கு‌ கெட்டது செய்யமாட்டேன்னு நம்புறியா மித்ரா...' என்றாள்..

'இதென்னம்மா கேள்வி... நீங்க எனக்கு அம்மா தான்... அம்மா எப்படி கெட்டது செய்வாங்க.. ' என்றாள் பதறிப் போனவளாய்...

'பின்ன ஏன்மா என் கூட இருக்காம இப்படி ஒரு இடத்துல வந்து இருக்கப் போறேன்னு சொல்லுற... ' என்றாள் பார்வதி வருத்ததோடு...

மதுமித்ரா உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றாள். அந்த ரிசப்ஷன் பெண்மணி வந்து., 'அட்வான்ஸ் எப்போ குடுக்குறீங்க... ' என்றாள்.

பார்வதி மதுமித்ராவைப் பார்த்துக் கொண்டே., 'சாரிங்க... இப்போதைக்கு வேண்டாம்...‌நாங்க பார்த்துக்குறோம்... ' எனக் கூறிவிட்டாள். நந்தனும் மதுராவும் ஒருசேர பார்வதியைப் பார்த்தனர். நந்தனுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்ள என்றே தெரியவில்லை. மகிழ்ச்சி தான் அவனுக்கும்..


ஆனால் மதுமித்ராவோ அவளே எதிர்பாராவிதமாக சற்று நிம்மதியாய் உணர்ந்தாள். அதற்கான காரணத்தை தான் அவளாள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை
 

Punitha M

Well-Known Member
Nice ud sis..
அவசரத்துல எடுக்கற எந்த முடிவும் தவறாவே முடியும்..
நந்து மேல இருக்க அபிப்ராயம் முதற்கொண்டு ஹாஸ்டல் தேடுறதுவரை ரொம்ப அவசரப்படுறா அவ..
அதை உணர்ந்தாலே எல்லாம் நல்லதா முடியும்:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top