மன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 8

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
மறுநாள் காலை தேவியின் வீட்டை நோக்கி படையெடுத்தான் சந்திரன். அன்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தாள் தேவி...
வழமைபோல் சந்திரனின் தலை தெரிந்தவுடன் ஓடி ஒளிந்த தேவியை கண்ட சந்திரனுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்தது.... அவ்வளவு தெளிவாக தன் காதலை ஒற்றை வரியில் அந்த கடிதத்தில் வெளிப்படுத்திய பின்னும் ஏனோ பேயைப் பார்த்தது போல் ஓடி ஒழிபவளை அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை... ஏதேனும் முகபாவனையில் அவளது பதிலை அறியலாம் என்று முயல அவளோ இவன் இருக்கும் திசை பக்கம் வரவே இல்லை.... அவன் என்ன செய்வது என்று குழம்பித்தவிக்க அவனது மனசாட்சி அவனை கிண்டலடித்துக் கொண்டிருந்தது...
“டேய் சந்திரா... உனக்கு இது தேவை தான்... நீ சாதாரணமா பேசும் போதே அவ நின்னு ஒரு வார்த்த பேச மாட்டா... இப்போ நீ லவ் லெட்டர் குடுத்திருக்க... இதுக்கு பொறகு அவ நீ இருக்க திசையால போவானு நீ எப்படி நினைக்கலாம்.... ஆனா எனக்கு ஒரு சந்தேகம்... நீ குடுத்த லெட்டர அவ வாசிச்சிருப்பாளா???... இல்ல தூக்கி வீசிருப்பாளா???”
“இல்ல... அவ வீசல... அவ வாசிக்கும் போது தான் நா எழும்பி வந்தேன்...”
“அப்படீங்கிற.... அப்படினா அவளுக்கு நீ எழுதி குடுத்ததோட அர்த்தம் புரியலையோனு தோணுது??”
“ஏன் புரிஞ்சிருக்காது??? எத்தன ஜெமினி கணேஷன் படம் பார்த்திருப்போம்.... அதுல எத்தன காதல் காட்சிகள்ல நம்ம காதல் மன்னன் தன்னோட காதல அழகா சொல்லுவாரு....”
“நீ சொல்லுறது எல்லாம் நியாயம் தான்... ஆனா நீ உன்னை ஜெமினி கணேஷனா நினச்சிக்கலாம்... ஆனா நம்ம பாப்பா சாவித்திரி அம்மா இல்லயே...?? அத நீ புரிஞ்சிக்கனும்....”
“ஐயோ இத எப்படி மறந்தேன்.... நம்ம பாப்பாக்கு தான் சினிமா பாக்க போற பழக்கமே இல்லயே... இவளுக்கு எப்படி நா எழுதி குடுத்ததுக்கு அர்த்தம் தெரியும்???? அது உண்மையாவே ஏதோ கணக்குனு நினச்சிருச்சோ தெரியல.... இப்ப என்ன பண்ணுவேன்???”
“இப்போ சரி உனக்கு வெவரம் புரிஞ்சிச்சே.. நீ நேரங்கடத்தாம ஒடனே இன்னொரு துண்டுல உன்னோட நேசத்த அதுக்கு புரியிற தமிழ்ல எழுதி குடு.... அப்போ அது ஏதாவது சொல்லுமில்ல??” என்ற அவனது மனசாட்சி நிச்சயமில்லாத நிதர்சனத்தை விளக்க அவன் அந்த பணியை செய்ய விரைந்தான்....
வசந்தனிடம் ஒரு துண்டும் பேனையையும் பெற்றவன் அதில் “ நான் உன்னை விரும்புகின்றேன்” என்று எழுதினான்... எங்கே நான் உன்னை காதலிக்கின்றேன் என்று எழுதினால் அவளுக்கு காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் போய்விடுவோ என்ற பயத்தில் அவ்வாறு எழுதினான்.... எழுதியவன் வசந்தனின் உதவியால் தேவி பின்புற தோட்டத்தில் இருப்பதை அறிந்தவன் அவளை தேடிச்சென்றான்......
அங்கே தேவி மாமரத்தில் தொங்கிக்கொண்டிருந்த மாங்காயை உண்டிகோல் கொண்டு வேட்டையாடிக் கொண்டிருந்தாள்... அதை பலமுறை பயன்படுத்தி பரிச்சயம் உள்ள கைகள் சரியாக குறி பார்த்து தொங்கிக்கொண்டிருந்த கனிகளை நோக்கி எறியப்பட கனிகள் கொப்புக்களுடன் பொத்தென்று விழுந்த வண்ணம் இருந்தது...... வழமையாக திருட்டு தனமாய் கனிகளை ருசிக்க விரும்புவோர் இந்த ஆயுதத்தை பயன்படுத்துவர்.... ஆனால் தேவியோ சொந்த தோட்டத்தில் இதை பயன்படுத்திக்கொண்டிருந்தாள்... அவளுக்கு திருட்டு மாங்காய் ருசிப்பதில் அலாதி பிரியம்... ஆனால் தன் தாத்தா மீது இருந்த பயத்தால் அவளுக்கு திருட்டு மாங்காய் ருசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததில்லை... தோட்டத்தில் கனிகள் திருடுவதற்கு அவளது தோழிகள் அழைத்தாலும் தாத்தாவிற்கு பயந்து அவர்களுடன் செல்ல மாட்டாள்... அது இப்போது பழக்கமாகி விட தாத்தா இல்லாத போதும் அவளுக்கு திருட்டு மாங்காய் சாப்பிட மனம் ஒப்பவில்லை. எனவே தமது வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்று உண்டிகோலால் மாங்காய் பறிப்பாள்... அவள் பறித்ததும் வசந்தன் மூலம் தன் தோழிகளை வரவழைத்து அவர்களுடன் மரத்திலேறி அமர்ந்து மாங்காயினை சிறு துண்டுகளாக வெட்டி உப்பும் மிளகுத்தூளும் தொட்டு தின்பது அவர்களது வழக்கம்..... தன் வீட்டார் கண்ணில் படாமல் இருக்கவே மரத்தை உணவறையாக மாற்றி இருந்தனர்... இன்றும் அதே போல் மாங்காய் வேட்டையை தேவி தனியாளாக நிகழ்த்திய வண்ணம் இருக்க அவளை பார்த்தவாறு அருகில் வந்தான் சந்திரன்...
சருகுகள் சத்தம் மிதிபடும் ஓசை கேட்டு திரும்பி பாராமல் மரம் மீது ஏறிய தேவியை பார்த்து ஒரு நிமிடம் பதறி விட்டான் சந்திரன்...
“பாப்பா எங்க போற???? நான் தா சின்ன மச்சான்.... கவனம் கீழ விழுந்துர போற..” என்று சந்திரன் பதற அவனது குரல் கேட்டதும் இன்னும் விரைவாக மரம் ஏறியவள் கிளைகளுக்குள் மறைந்து கொண்டாள்...
“என்ன பாப்பா??? கீழ எறங்குவனு பார்த்தா மரத்து மேல போய் மறஞ்சிகிட்ட??? எதுக்கு என்ன பார்த்து பயப்படுற??? நான் என்ன பேயா பூதமா??? எப்போ என்ன பார்த்தாலும் ஓடி ஒளிஞ்சிக்கிற????மொதல்ல கீழ எறங்கு... உன்கிட்ட கொஞ்சம் பேசனும்......” என்று சந்திரன் அழைக்க அவளிடம் பதிலில்லை.... எதிர்பார்த்தது தான் என்றாலும் அவனுள் சிறு ஏமாற்றம்... மீண்டும் அவளை அவன் அழைக்க எந்த பதிலும் இல்லை.....பின் கோபம் தன்னை ஆக்கிரமிப்பதை உணர்ந்த சந்திரன்
“சரி நீ அங்கயே இரு... நா சொல்ல வந்தத இங்க இருந்தே சொல்லிட்டு போறேன்... நேத்து நான் எழுதி குடுத்தது உனக்கு புரிஞ்சிச்சோ தெரில..... உனக்கு அது புரியலையோனு தோணிச்சி.... அதான் உனக்கு புரியிற மாதிரி இந்த துண்டுல எழுதிட்டு வந்திருக்கேன்..... இதுக்கு நீ கட்டாயம் பதில் சொல்லியே ஆகனும்....நான் இன்னைக்கு ராவு பஸ்ஸுல கொழும்புக்கு கெளம்புறேன்...இனி அடுத்த மாசம் தான் வருவேன்... நான் அடுத்த முறை வரும் போது இதுக்கான பதில நீ சொல்லனும்... என்கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு நெனைக்காத..... உனக்கு நான் என்ன சொல்லுறேனு புரிய தான் உனக்கு இந்த ஒரு மாசம் அவகாசம்... எடயெடல லெட்டர் போடறேன்... நான் அடுத்த மொற வரும் போது எனக்கு உன்னோட பதில் வேணும்... அந்த துண்ட இந்த மரத்துக்கு கீழ உள்ள உப்பு டப்பாக்கு கீழ வச்சிட்டு போறேன்... மறந்துறாம எடுத்துக்கோ... இப்போ நான் கெளம்புறேன்... நீ கவனமா கீழ எறங்கி வா.. அப்புறம் எசகு பிசகா விழுந்த கஷ்டமா போயிரும்...நான் சொன்னத மறந்துறாத..... இப்போ நான் கெளம்புறேன்....வரேன் பாப்பா..” என்று விட்டு சந்திரன் அங்கிருந்து செல்ல அவன் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டு கீழே இறங்கிய தேவி அவன் அவளுக்காக விட்டுச்சென்ற அந்த சீட்டுத்துண்டை எடுத்தவள் அதை தான் அணிந்திருந்த சட்டையின் இருந்த பையில் பத்திரப்படுத்தவள் மாங்காய்களை வெட்டத்தொடங்கினாள்........
சந்திரனுக்கு தேவியிடம் இருந்து ஏதேனும் பதில் கிடைக்குமா???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top