மன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 6

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
#1
தேவியின் அன்னை வழி பாட்டன் ரெங்கசாமி இறந்து எட்டு நாட்கள்... அவர்கள் முறைப்படி எட்டாம் நாள் எட்டு கும்பிடுதல் என்று ஒரு சடங்கு நடைபெறும்... அதற்கு நெருங்கிய உறவினர்கள் அனைவரும் வருவர்... அந்த நிகழ்வு பல சடங்குகளை கொண்டது... சரியாக மாலை ஆறு தொடக்கம் ஏழு மணிக்குள் வாசலில் துணி விரித்து அதன் இருமருங்கிலும் இரண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து விரித்த துணியின் மேல் அவித்த பிட்டை மலை போல் குவித்து வைத்து கொள்ளியிட்ட நபர் அதற்கு சாம்பிராணி மற்றும் சூடம் காட்ட அமங்கலி பெண்கள் மூவர் ஒப்பாரி பாடல் பாடுவர்...ஒருவர் இறந்ததும் எட்டு நாட்கள் அவரது ஆன்மா அவர் வாழ்ந்த இடத்தை சுற்றிக்கொண்டிருக்கும் என்பது ஒரு நம்பிக்கை.... அந்த எட்டு நாட்களும் இரவு பகல் என்று பாராது வீட்டில் விளக்கு எரிந்தவண்ணமே இருக்கும்......அந்த துக்கம் நடந்த வீட்டில் உறவினர்கள் இருந்த வண்ணமே இருப்பர்...வீட்டில் விளக்கு எரிவதால் அந்த இறந்தவரின் ஆத்மா வீட்டில் உள்ளவரை தொந்தரவு செய்யாது என்பது நம்பிக்கை.... அந்த ஆத்மாவை வீட்டிற்கு அழைக்கும் முகமாகவே மேற்குறிப்பிட்ட சடங்கை செய்வர்.... பின் இறந்தவரின் கையால் தொடச்செய்து சுவரில் பதிக்கப்பட்ட வரட்டியின் கீழ் எட்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் முன் படையல் போடுவார்கள்... அந்த படையலில் அனைத்து வகை உணவுகளும் இருக்கும்... விசேஷமாக இறந்தவருக்கு மிகவும் பிடித்த உணவுவகைகள் அதில் இடம்பிடிக்கும்..... பின் போடப்பட்ட படையலுக்கு சாம்பிராணி சூடம் காட்டி விட்டு படையல் போட்ட அறையை சிறிது நேரம் மூடுவர்... பின் சிதையூட்டியவரின் மாமன் மச்சான் துண்டு கட்டி பந்தி போடுவர்...
தேவியின் தாத்தாவிற்கு நான்கு பெண்பிள்ளைகளாகையால் அவரது பட்டத்தை உடைய பங்காளி மற்றும் நெருங்கிய உறவினரான சந்திரனே அவரது உடலுக்கு சிதையூட்டி இருந்தான்...அதனால் அனைத்து சடங்குகளுமே அவனை முன்னிறுத்தியே செய்யப்பட்டது....படையல் போட்டு பந்தியில் உணவருந்தி விட்டு சந்திரன் எழ பந்தி நடந்துக்கொண்டிருந்த இடத்திற்கு வந்த தேவியை அழைத்த அங்கிருந்த வேலம்மாள் அவளை சந்திரன் சாப்பிட்ட இலையில் சாப்பிட அமருமாறு கூற கொலைப்பசியில் இருந்த தேவி சாப்பிட அமர்ந்துவிட்டாள்... அங்கிருந்தவர்களின் கேலி பசி மயக்கத்தால் அவளது காதில் விழவில்லை... நன்றாக ஒரு கட்டு கட்டிவிட்டு வெளியே வந்தவளை நாதன்
“என்ன பாப்பா சாப்பாடு ருசியா இருந்திச்சா???”
“ஆமா அண்ணே... செம்ம ருசி.....இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு சாப்பாட்டை நான் சாப்டதே இல்லைனா பார்த்துக்கோங்களே....”
“அப்படீங்கிற???”
“ஆமா அண்ணே.... ஏன் உங்களுக்கு ருசியா இல்லையா??? எனக்கு தான் பசியில சாப்பிட்டதால அப்படி இருந்துச்சோ??” என்று அவள் தீவிர யோசனையில் இறங்க அவளது பாவனையில் சிரித்த நாதன்
“எப்படி நீ சாப்பிட்ட சாப்பாடு ருசியில்லாம இருக்கும்??? அதுவும் சின்னப்பு சாப்பிட்டு வச்ச இலையில தானே நீ சாப்பிட்டிருக்க.... அது உனக்கு ருசிக்காம கசக்குமா???” என்று அவளை கேலி செய்ய அவனது கேலியின் அர்த்தம் புரியாத தேவி
“அத்த தான் அண்ணா சாப்பிட சொன்னாங்க.... அது ஏதோ சடங்குனும் சொன்னாங்க அதா சாப்பிட்டேன்....சாப்படும் செம்ம ருசி... யாரு சாப்பிட்ட எலையா இருந்தா என்ன?? நமக்கு சாப்பாடு தான் முக்கியம்.. அதான் ஒரு கட்டு கட்டிட்டேன்....”
“சரி ஏதோ சடங்குனு சொன்னியே... அது என்ன சடங்குனு தெரியுமா??”
“இல்லையே அண்ணா... என்ன சடங்கு அது...?”
“அது வந்து மச்சான் சாப்பிட்ட எலையில முறைப்பொண்ணு சாப்பிட்ற சடங்கு...”
“ஓ இது எட்டு வீட்டுல மட்டும் தான் செய்வாங்களோ....??” என்ற அவள் வினவ
“அதை நீ அத்த கிட்ட தான் கேட்கனும்... ஆனா ஒன்னு சொல்றேன்... சின்னப்பு பாடு திண்டாட்டம் தான் போ...
“ஐயோ அத்த கிட்டயா??? வேணாம்.... சரி மச்சான் பாடு ஏன் திண்டாட்டம்னு சொல்லுறீங்க??”
“அத போய் நீ அவன்கிட்டயே கேளு..” என்று அவன் அங்கிருந்து செல்ல அவன் சொன்னது புரியாமல் தன்னுள் குழம்பியவாறு சென்றாள் தேவி...
ஆண்கள் அனைவரும் வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருக்க தேவியும் பிரேமாவும் படையலுக்கு வைத்த பழங்களை தட்டில் ஏந்தியவாறு அனைவருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தினர்... சந்திரனுக்கு கொடுக்கும் முறை வந்ததும் அவனிடம் தட்டை நீட்டிய தேவியிடம்
“என்ன பாப்பா சாப்பாடு நல்லா ருசியா இருந்திச்சா???”
“என்ன எல்லாரும் இதே கேள்விய கேட்குறீங்க...? அப்படி என்ன இருந்திச்சி அந்த சாப்பாட்டுல??? எல்லாரும் அதே சாப்பட்ட தானே சாப்பிட்டோம்... அப்புறம் எதுக்கு தனியா என்கிட்ட சாப்பாட்ட பத்தி விசாரிக்கிறீங்க...?”
“வேற யாரு உன்கிட்ட கேட்டா?”
“நாதன் அண்ணா தான்...”
“அவனா..... சரி சாப்பாடு நல்லா இருந்திச்சா??”
“மறுபடியும் என்ன அதே கேட்குறீங்க??”
“கேட்டதுக்கு பதில்??”
“ஆமா நல்லா இருந்துச்சி...”
“ஆனா பாயாசம் இருந்திருக்காதே....”
“இல்லையே நான் பாயாசம் சாப்பிட்டேனே.... தனியா ரெண்டு ரவுண்டு போட்டு சாப்பிட்டுட்டு தான் எலய விட்டே எழும்புனேன்...”
“சே.... அநியாயம்..... தெரிஞ்சிருந்த பாயாசம் கொஞ்சம் மிச்சம் வச்சிருந்திருப்பேன்...”
“என்ன தெரிஞ்சிருந்தா மிச்சம் வச்சிருப்பீங்க???”
“பாப்பா நான் சாப்பிட்ட எலயில சாப்பிடும்னு தெரிஞ்சிருந்தா....” என்று கூறி சந்திரன் ஆரஞ்சு பழத்தை தட்டில் இருந்து எடுத்தவாறு சிரிக்க அப்போதுதான் அவன் எதை குறிப்பிட்டு பேசுகின்றான் என்று புரிந்தது... ஆனாலும் தன் நிலையினை உணர்த்திவிடும் பொருட்டு உள் சென்ற குரலில்
“நானா ஒன்னும் சாப்பிடல.... அத்த ஏதோ சடங்குனு சொன்னாங்க அதான் சாப்பிட்டேன்.... அதோட எனக்கு கொல பசி. அதான் அவங்க சொன்னதும் மறுபேச்சு பேசாம சாப்பிட்டேன்... அண்ணாவும் ஏதோ சடங்குனு சொல்லிச்சி....”
“ஹாஹா... சரி எதுக்கு அந்த சடங்கு செய்வாங்கனு தெரியுமா??”
“தெரியல... அண்ணேகிட்ட கேட்டபோ அவரு அத்தகிட்ட கேட்க சொன்னாரு... உங்களுக்கு அதுக்கு விளக்கம் தெரியுமா?”
“தெரியும்.... ஆனா நீ உன் அத்தகிட்டயே கேட்டுக்கோ” என்றுவிட அவள் மீண்டும் தன்னுள் குழம்பியவாறு மற்றவர்களுக்கு பரிமாறத்தொடங்கினாள்....
அவளது பாவனையில் தன்னுள் சிரித்த சந்திரன் “உன்பாடு திண்டாட்டம் தான் போ...இவளுக்கு எப்படி உன்னோட காதலை புரியவைக்க போற?? அதுக்கு முதல்ல அவளுக்கு காதல்னா என்னான்னு தெரியுமா?? அதை சொன்னா புரிஞ்சிக்கிற வயசுதான்... ஆனா அவ புரிஞ்சிப்பாளா??? வளர்ந்தும் இன்னும் குழந்தையாவே இருக்காளே......பொண்ணுங்களுக்கே உரிய பயம்,எச்சரிக்கையுணர்வு, தெளிவு , நாணம் எல்லாமே இருந்தும் சில விஷயங்களை ஏன் புரிஞ்சிக்கிற மறுக்குறா??? புரிஞ்சிகிட்டதுனால தான் மறுக்குறாலா?? இல்லை அவளுக்கு நெசமாவே புரியலையா??? என்னானாலும் சரி... எனக்கு அவதான் அவளுக்கு நான்தான்... எந்த பிரச்சனை வந்தாலும் அவளுக்காக நான் எப்பவும் என் உசுரு இருக்கும் வரை இருப்பேன்....” என்று தன்னுள் சத்தியபிரமாணம் எடுத்தவனுக்கு விதி எந்த வகையில் சோதிக்க காத்திருக்கின்றதோ...???
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes