பெயிண்ட் அடித்த படகு

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.

பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை அவதானித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.

வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிமிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.

பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.

" இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் படகின் உரிமையாளர்.

" இல்லை சேர்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.

" நண்பரே... உங்களுக்கு விடயம் புரியவில்லை. நடந்த விடயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.

" நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன்.

பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.

படகில் ஓட்டை இருந்த விடயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவுமில்லை.

நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விடயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன்.

கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.

உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது பெறுமதியற்ற சிறியதொரு வேலையா? நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்? உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.

நண்பர்களே... இதிலிருந்து என்ன புரிகிறது. யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top