புள்ளினங்காதல் - 5

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
இரவு 10 மணி அளவில் இருவரும் ஆதிச்சநல்லூர் வந்து சேர்ந்தனர். அவிரா அவள் குழுவுடன் ஆராய்ச்சி செய்யும் தளத்திற்கு அருகிலேயே, அவளுக்கு தங்குவதற்கு இல்லம் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. திண்ணை, நடை, ஹால், அதன் நடுவே முற்றம், கிட்சன், இரண்டு பெட்ரூம் என்று அழகாய், நேர்த்தியாய் கட்டப்பட்ட வீடு, தற்சமயம், அவிராவிற்கும், அவளோட ஆராய்ச்சி புரியும் மற்றோரு பெண்ணிற்கும், ஆராய்ச்சி பணிகள் முடியும் வரை அளிக்கப்பட்டிருந்தது.



இவர்கள் இருவரும் வந்து சேர, அந்த இல்லத்தின் வாசலின் நின்று, உள்ளே இருந்த அவள் தோழிக்கு, அழைப்பு விடுக்க, அவள் வந்து கதவை திறந்தாள். திறந்தவள், ஆரூரன் அவிரா இருவரும் நிற்பதை பார்த்ததும், ஒரு நிமிடம் அதிர்ச்சியை காட்டிய அவள் கண்கள், அடுத்த நிமிடம் அவிராவை பார்த்ததும் கேலியை வாரி வீசியது.

"என்னடி? இங்கேயே கூட்டிட்டு..." என பேசத் தொடங்கியவள் வாயை பொத்தி, "அவனுக்கு எதுவும் தெரியாது. நீ உலராத" என்று தோழி காதில் கிசுகிசுத்தவள், "நீங்க உள்ள போங்க ஆரூரன். இவ இப்டி தான் பைத்தியம் மாதிரி ஏதாவது பெனாத்திட்டு இருப்பா..." என்று கூற, அவனும் உள்ளே சென்றான். அவன் சென்றதும், " நான் பைத்தியமா டி? உன் லவ்க்கு என்னை பைத்தியம் ஆக்கிட்டியா டி?" என்று அவிராவின் தோழி கேட்க, "ஈஈஈஈஈஈஈஈ. அவர் கிட்ட நான் எதுவும் சொல்லல இது வரை. கொஞ்சம் சும்மா இருடி செல்லம்" என அசடு வழிந்தாள் அவிரா.



அங்கு இருந்தது, இரண்டே அறை. ஒன்றில் அவள் தோழி தங்கி இருக்க, மற்றொன்றில் அவிரா தங்கி இருந்தாள். தான் எங்கே தங்குவது என்று ஆரூரன் கேள்வி எழுப்ப, "என் ரூம் ல ஒரு ஓரமா இருக்க, அந்த சோபால நீ தூங்குறதுல எனக்கு எந்த பிரச்சினையும் இல்லப்பா" என்று தோள்களை குலுக்கி அவிரா கூற, "என்னது சோபாலயா? அதுவும் உன் ரூம்ல, ஒரு ஓரமா இருக்க சோபாவா? இது என்ன டா ஒரு ஆர்ணித்தாலொஜிஸ்ட்க்கு வந்த சோதனை!" என்று புலம்பினான் ஆரூரன். "வேற? ஆர்ணித்தோலோஜிஸ்ட் ஐயா வாராருன்னு, ஆதிச்சநல்லூர்ல ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் கட்டி, அதுல ஐந்தாவது மாடில, சொகுசு ரூம்ல தங்க வைப்பாங்களோ? வேணும்னா இந்த ஓரமா ஒரு சோபா ல தூங்கு. இல்லைனா இந்த திண்ணை காலியா தான் இருக்கு" என்று அவள் கை காமிக்க, "இன்னைக்கு ஒரு நாள், இந்த அபலைகளோட கோரிக்கையை ஏற்று, இந்த சோபாலேயே தூங்குறதா முடிவு பண்ணிட்டான் இந்த ஆர்ணித்தாலொஜிஸ்ட் ஆரூரன்" என்று சொல்லி, உள்ளே சென்றான். அவன் செல்லும் தோரணையை பார்த்து அவிராவிற்கு சிரிப்பு வர, சிரித்துக்கொண்டே அவன் பின்னால் சென்றாள்.



அதிக அலங்காரம் ஏதும் இன்றி, குறிப்பிட்ட சில பொருட்கள் மட்டுமே இருந்தாலும் அழகாய் அடுக்கி வைத்து, தூய்மையாய் பராமரிக்கப்பட்ட அறை அது.



சோபாவில் ஆரூரன் படுத்துக்கொண்டு, "வாழ்வே மாயம்...இந்த வாழ்வே மாயம்..." என்று பாட்டு பாடி கொண்டிருக்க, அவன் மேலே, ஒரு பெட்ஷீட்டை தூக்கி ஏறிய, "கொஞ்சமாச்சும் மதிக்கறாளா பாரு? ராட்சசி..." முணுமுணுத்துக்கொண்டே, அங்கு இருந்த மேஜை மேல் இருந்த பொருட்களை நோட்டமிட்டான்.



பைல்ஸ், புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், பூதக்கண்ணாடி இவை எதுவுமே அவன் கவனத்தை ஈர்க்காமல் போக, கல்லில் செதுக்கிய விநாயகர் உருவில் ஒரு குட்டி பேப்பர் வெயிட், மிரர் ஒர்க் வைத்த அழகிய பென் ஸ்டாண்ட், 24 மணி நேரமும், 365 நாட்களும் நிக்காமல் ஓடும், மரத்தால் செய்த டேபிள் கிளாக், அந்த கிளாக் மீது இருந்த பச்சை, சிவப்பு கல் வைத்த டிசைன் என சில பொருட்கள் கவர்ந்தன. ஆனால் அவை அனைத்தையும் விட அவன் கவனத்தை அதிகமாய் ஈர்த்தது, அந்த டேபிளில் இருந்த இன்னொரு பொருள்.



ரூபிக்ஸ் க்யூப்(Rubix cube) போல, கல்லில் செய்த பொருள் ஒன்று இருக்க, அதை கையில் எடுத்தவன், அப்படியும் இப்படியும் திருப்பி பார்க்க, அந்த க்யூபின் ஒவ்வொரு முகத்திலும் இருந்த ஒன்பது சதுக்கங்களில் ஏதோ வரைந்தது போல இருந்தது. அவன் அதை கையில் வைத்து ஆராய்வதை பார்த்த அவிரா, "அது இங்க ஆராய்ச்சியில் கிடைச்சுது ஆரூரன். இந்த மாதிரி கிடைக்கற பொருள் எதுவுமே ஒரு ஆர்கியாலஜிஸ்ட் தன்னோடவே வச்சிருக்க கூடாது. ஆனா இதை பார்த்த ஒடனே, இது என்னன்னு ஒரு ஆர்வத்தில் கொண்டு வந்துட்டேன். ஏதோ ரூபிக்ஸ் க்யூப் மாதிரி இருந்துச்சு ஆரூரன். ஆனா நம்ப எப்போவும் செய்யுற மாதிரி இதுல வெவ்வேறு வண்ணம் இல்ல. அதுக்கு பதிலா ஏதோ வரஞ்சி வைச்ச மாதிரி இருக்கு. அதா வச்சி தான் சால்வ் பண்ணணுமோ என்னவோ? நானும் ரொம்ப நாளா அதை எப்படி எப்டியோ திருப்பி பாக்குறன். ஆனா இதை சால்வ் பண்ண முடியல" என்றால் அவிரா.



"அவிரா. எனக்கு என்னமோ இதை சால்வ் பண்ணா பறவைகளோட உருவம் வருமோன்னு தோணுது" என்று ",இதோ பாரு டா. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். அப்டி தான். பறவையியல் நிபுணர் கண்ணனுக்கு காண்பதெல்லாம் பறவை போல. அதை வச்சிட்டு தூங்குற வழிய பாருங்க ஆரூரன்" என்று கூறிவிட்டு நித்திரையில் ஆழ்ந்தாள் அவள்.



படுத்தவுடன் அவிரா உறங்கிவிட, ஆரூரனுக்கோ உறக்கம் கண்ணை தழுவவே இல்லை. அந்த கியூப்பின் ஒவ்வொரு சதுரத்தில் இருக்கும் வரைபடங்களும், பறவைகளின் உடல் பகுதிகளை போலவே இவன் கண்களுக்கு தெரிய, தூங்க முயற்சி கூட எடுக்காமல் அந்த க்யூப்பையே சுழற்றி பார்த்துக்கொண்டிருந்தான்.



காலை ஒரு 6 மணி இருக்க, நேற்று பயணம் செய்த அசதியில் நன்றாய் உறங்கிக்கொண்டிருக்க, யாரோ உலுக்குவது போல் இருக்க, எழுந்து பார்த்தாள். "அவிரா. எழுத்துரு. இங்க பாரு அவிரா. இங்க பாரு. சீக்கரம்" என்று ஆரூரன் எதையோ பரபரப்பாக காமிக்க, கண்களை நன்கு துடைத்து, மிச்சம் ஒட்டிஇருந்த தூக்கத்தை கலைத்துக்கொண்டு, அவன் காமித்ததை வியப்பாய் பார்த்தாள் அவள்.



நேற்று இரவு அவள் பார்த்த அதே க்யூப், ஆனால் அதே போல் இல்லை. கரடுமுரடாய் ஏதேதோ கிறுக்கி வைத்தது போல இருந்த சதுரங்கள், இப்பொழுதோ, அழகாய் தெரிந்தன. அந்த க்யூபின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒன்பது சதுரங்கள் ஒன்றாய் சேர்ந்து, அழகிய பறவையின் தோற்றம் தெரிந்தது. க்யூபின் ஆறு பக்கங்களிலும் வெவ்வேறு பறவைகளின் உருவங்கள் வரையபட்டிருந்தன.



இரவு முழுதும் கண் விழித்து அதை சரியாய் பொருத்தியிருந்தான் ஆரூரன். அதை வியந்து பார்த்தாள் அவிரா. "ஆரூரன். இது...இது...நான் இவ்வளவு நாள் முயற்சி பண்ணி, முடியாம போனது. ஆனா நீங்க இப்போ முடிச்சிடீங்க" என்று கூறி, இதழ்களுடன் சேர்த்து, கண்களும் சிரித்தது. "ஹப்பாப்பா...இந்த குட்டி கண்ணு சிரிக்கிற சிரிப்புக்கு என்ன வேணாலும் செய்யலாம் போலயே" என்று அவள் சிரிப்பில் இவன் மெய்மறந்திருக்க, "அதை குடுங்க" என்று அவன்கையில் இருந்து அதை வாங்க முற்பட்டாள் அவள்.





"அவிரா... ஒரு நிமிஷம்..இதை முடிச்சதுக்கு அப்புறம் தான் கண்டுபிடிச்சேன். இதை சால்வ் பண்ணதும், இந்த கியூபை ரெண்டா பிரிக்க முடிஞ்சுது. அதை பிரிச்சி பாரு...உள்ள ஏதோ துணி இருக்கு" என்று அவளிடம் நீட்டினான் அவன்.



அதை கையில் வாங்கியவள், அவன் சொன்னது போலவே, அந்த கியூபை ரெண்டாய் பிரிக்க முடிந்ததை கண்டு வியந்தாள். அதை பிரிந்ததும், அவள் மடியில் வந்து விழுந்தது வெள்ளை நிற பட்டு துணி. அதை எடுத்து பிரித்து பார்த்தவள், அதில் கருப்பு நிற மையில் ஏதோ எழுதி இருப்பதை கண்டாள்.



அதை ஆரூரன் முன்பே பார்த்திருந்தும், என்ன எழுதி இருகிறது என்று புரியவில்லை அவனுக்கு. தெரிந்துகொள்ள ஆர்வமும் இல்லாததால், அதை அப்படியே விட்டுவிட்டான். ஆனால் அவிராவிற்கோ, அதில் என்ன எழுதி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் பொங்கியது. எழுத்துக்கள் சரியாக தெரியாததால், இத்தனை நேரம் படுக்கையிலே அமர்ந்திருந்தவள், மேஜைக்கு எழுந்து சென்று பூதக்கண்ணாடியின் கீழ், வைத்து பார்த்தால். ஆர்கியாலஜி பயின்றவள், அதில் ஒரு பகுதியாக எபிகிராபியும் (epigraphy-கல்வெட்டியல்) பயின்றுக்க, அதில் இருந்த பழந்தமிழ் எழுத்துக்களை படிப்பது, அவளுக்கு அவ்வளவு கடினமான வேலையாக இல்லை







“ஈசன் அவன் பாதம் தொடங்கி...

ஆயிரஞ்சோதியுள்ளோன் அவன் பிறப்பு நோக்கி,

ஒரு காதம் நடக்க,

இறும்பு அதை அடைந்து,

அதன் நடுவே,

கிளை படர்ந்த கூவிளம்...

அதன் நிழலில் நிற்க..

தவளம் அதன் வாசம்,

வீசும் திசை,

பவழம் அதை அடையும் முன்,

புரண்டு ஓடும் நீர் அதனுள்,

எழால் அதன் அலகின் ஊடே,

ஏழு அடி,

அதன் மேல,

கைக்கு எட்டும் தொலைவு தான்...

பொற்குவியல் அதுவும்...”



என்று அதில் இருப்பதை படித்தாள் அவிரா.



அதை படித்தவள் கண்கள் மின்ன, "அப்படி என்ன இருக்கு அவிரா அதுல?", என்று கேட்டான் ஆரூரன். "ஆரூரன்...இதுல ஏதோ ஒரு இடத்துக்கு போகுற வழி இருக்கு" என்றாள் அவள். அவன் பதில் அளிக்கவும் இடைவேளை விடாமல், அவளே தொடர்ந்தாள். கடைசி லைன், "கைக்கு எட்டும் தொலைவு தான்...பொற்குவியல் அதுவும்..ன்னு இருக்கு. அப்போ. அப்போ...எனக்கு என்ன தோணுதுன்னா...இது ஏதோ புதையலுக்கான வழியா இருக்கனும்..", என்றாள் அவிரா.



"என்ன? புதையலா? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?" என்று ஆரூரன் அலட்சியமாய் கேட்க, " ஆமா ஆரூரன். அந்த துணில எழுதி இருக்க ஹிண்ட் வச்சி பார்த்தா அப்டி தான் தெரியுது. அது மட்டும் இல்ல. இது அப்டி ஏதும் முக்கியமான குறிப்பு இல்லனா, இதை ஏன் இந்த க்யூப் குள்ள, இவளோ பத்திரமா ஏன் வச்சிருக்கணும். ஒன்னு நான் நெனைக்கற மாதிரி இது ஏதாவது, புதையல் பத்தின குறிப்பா இருக்கலாம், இல்லைனா இதுல குறிப்பிட்டிருக்க இடத்துல முக்கியமான ஏதாவது இருக்கனும்" என்றாள் அவிரா.



ஆருரனோ ஒன்றும் சொல்லாமல் அப்படியே நிற்க, "என்ன ஆரூரன். அப்டியே நிக்குறீங்க. வாங்க போயி என்ன இருக்குனு பாக்கலாம்" என்று அவனையும் சேர்த்து இழுக்க, அவள் கையை பிடித்து நிறுத்தினான் அவன். அவளை மேலும் கீழும் பார்த்தவன், "தூங்கி எழுந்து இன்னும் பள்ளு கூட துலக்கல...அதுக்குள்ள எங்க ஓடுற? இதுல என்னையும் வேற இழுக்கிற?" என்று கேட்க, ஒரு ஆர்வத்தில் என்ன செய்கிறாள் என்று அவளுக்கே தெரியாமல் விழித்து கொண்டிருந்தாள் அவள். இவன் இப்படி கேட்கவும், இன்னும் அதிகமாய் விழித்தவள், அப்படியே நிற்க, "போ போயி பிரெஷ் ஆகிட்டு வா" என்றான் ஆரூரன். ".அப்போ...இந்த இடத்துக்கு போக வேண்டாமா?" என்று அவள் கண்ணில் இத்தனை நேரம் இருந்த மின்னல் நீங்கி கேட்க, "போகலாம். போகலாம். நீ ரெடி ஆகு. அப்புறம் போகலாம்" என்று அவன் கூற, இவளும் நகர்ந்தாள்.



குளித்துவிட்டு வந்தவள், ப்ளூ நிற ஜீன்ஸ், மெரூன் நிற டாப்ஸில் வந்து, "நான் கிளம்பிட்டேன், போலாமா?" என்று பரபரக்க, "சாப்பிடு. சாப்பிட்டு போகலாம்" என்று கூற, அவனுடன் அவளும் சாப்பிட அமர, அவள் தோழி இருவருக்கும் காலை உணவு பரிமாறினாள்.



சாப்பிட்டு முடித்தவுடன், "போலாமா? நீ வரியா இல்லையானு மட்டும் சொல்லு. நான் கிளம்பறேன்" என்று அவள் கேட்க, "ஏன் இவளோ அவசரம். "சரி. போறேன் போறேன்னு சொல்றியே. இந்த துண்டு துணிய வச்சிட்டு எங்க மா போற?" என்று அவன் கேட்க, "அதெல்லாம் இந்த துண்து துணில வழி இருக்கு. நீ வரியா இல்லையா?" என்று அவள் கேட்க, "சரி. முதல்ல எங்க போகணும்?" என்று கேட்டான் அவன்.



"ஈசன் அவன் பாதம் தொடங்கி'ன்னு இருக்கு. இந்த ஊருல ஒரு சிவன் கோவில் இருக்கு. அங்க போயி பாப்போம்" என்று அவள் கூற, மறுப்பு எதுவும் கூற முடியாமல் உடன் சென்றான் அவன்.



அங்கு கோவிலுக்குள் சென்றவள், ஏதோ யோசனை செய்தவளாய், கோவில் தரிசனம் கூட செய்யாமல், அப்படியே அமர, "என்ன ஆச்சு அவிரா?" என்று கேட்டான் ஆரூரன். அதுதடுத்த லைன்ஸ், "ஒரு காதம் நடக்க, இறும்பு அதை அடைந்து'ன்னு இருக்கு" என்று அவிரா கூற, "இறும்பு'ன்னா?" என்று ஆரூரன் கேள்வி கேட்க, "சிறுமரங்கள் அதிகமா இருக்குற காட்டை, இறும்பு'ன்னு சொல்லுவாங்க ஆரூரன். என்றாள் அவிரா.



"வேற என்ன அவிரா யோசிக்கற?" என்று அவன் கேட்க, இந்த கோவில்ல இருந்து ஒரு காதம் ரேடியஸ்ல எனக்கு தெரிஞ்சி அப்டி எதுவும் காடு இல்ல. அதுவும் இல்லாமா. இது இப்போ ஒரு ஐம்பது வருஷம் முன்னாடி தான் கட்டின கோவிலாக இருக்கனும். ஆனா. நம்ப எடுத்த க்யூப், அதை நான் எடுத்து வைச்சுருக்கறதால, அதுக்கு கார்பன் டேட்டிங் பண்ணலானாலும், அதுகூட கிடைச்ச சில பொருட்களுக்கு கார்பன் டேட்டிங் (கதிரியக்கக்கார்பன் காலக்கணிப்பு) பண்ணி பார்த்தோம். அந்த பொருட்களின் வயது சுமார் 1000இல் இருந்துது 1500 வரைக்கும் இருந்துச்சு. அப்படி இருக்கப்போ? இதுல இருக்கும் அந்த கோவில் இதுவா இருக்க முடியாது" என்று அவள் கூற, "வேற ஏதும் பழைய கோவில் இல்லையா இங்க?" என்றான் ஆரூரன்.



அப்போது தான் அவிராவின் நினைவிற்கு வந்தது, ஊரை தாண்டி அவள் முன்பு ஒரு நாள் கண்ட பாழடைந்த கோவில். "ஆரூரன். ஒரு தடவை. ஊரை தாண்டி பாழடைந்த கோவில் பாத்துருக்கேன். ஆனா அது என்ன கோவில்ன்னு தெரியல. ஒரு தடவை போயி பாக்கலாமா?" என்று அவிரான் கேட்க, அவனும் சரி என தலை ஆசைத்தான்.



செல்லும் வழியில், "ஏன் அவிரா? புதையல் இருக்குமே ன்னு இவ்வளவு ஆர்வமா போற?" என்று ஆரூரன் கேட்க, சிரித்தாள் அவிரா. "நீ நினைக்குற மாதிரி, புதையலுக்கு ஆசை பட்டு இல்ல ஆரூரன். அங்க புதையல் கிடைச்சாலும், அதை நம்ப தேடி எடுத்தாலும் அது கவர்ன்மெண்ட்க்கு தான் சொந்தம் ஆரூரன். அஸ் ஆன் ஆர்கியாலஜிஸ்ட், அங்க என்ன இருக்கும்? ஏதாவது புது விஷயம் தெரிய வருமான்னு ஒரு ஆர்வம் தான்" என்றாள் அவள்.



அந்த பாழடைந்த கல்லில் செதுக்கிய அந்த கோவிலை அடைந்ததும், இடர்பாடுகளுக்கு இடையிலும், அங்கு தொங்கி கொண்டிருந்த தூசி, சுவற்றின் ஊடே வளர்ந்த செடிகள் என, அனைத்தையும் நகர்த்தி உள்ளே சென்றனர். அவர்கள் இங்கு வந்தது வீண் போகவில்லை. அத்தனை அலங்கோலங்களுக்கும் நடுவே திவ்யமாய் காட்சி அளித்தார் ஈசன். தெய்வீக ஒளி பொங்கும் அந்த சிவ லிங்கத்தை கண்டதும், இருவரின் கரங்களும் தானாய் கூப்பியது.



சிவலிங்கத்திற்கு, நந்திக்கும் நடுவில் இருந்த இடைவேளையில், தரையில் ஏதோ, பச்சை சிவப்பு கற்களை பொதித்து வைத்து, ஏதோ சின்னம் போல் இருக்க, அது தூசியால் மூடி இருந்தது. அங்கு இருந்த இலை சறுகுகளையும், தூசியையும் கையால் அகற்றிய ஆரூரன், அங்கு இருந்த சின்னத்தை உற்று பார்த்தான். "அவிரா. இங்க பாரு. இது உன் ரூம் ல இருந்த, அந்த டேபிள் கிளாக் மேல இருந்த அதே சின்னம். அந்த கிளாக் ஏதாவது ஆராய்ச்சி செய்யும் போது கிடைத்ததா அவிரா?" என்று கேட்டான் அவன்.



"ஆமா ஆரூரன். அதே டிசைன் தான். இல்லையே. அது எங்க தாத்தாவுடையது. தாத்தா வீட்டுக்கு போனப்போ, எனக்கு புடிச்சிருக்குனு எடுத்துட்டு வந்துட்டேன். இந்த டேபிள் கிளாக் ல மட்டும் இல்ல. தாத்தா வீட்டு ஸ்டோர்ரூம் ல இருக்குற நெறைய பொருட்கள்ல இதை பாத்துருக்கேன்" என்றாள் அவள்.



சிறிது நேரம் அங்கு அமைதியே நிலவ, "என் உள்ளுணர்வு என்னமோ இங்க இருந்து தான் தொடங்கணும்ன்னு சொல்லுது ஆரூரன்" என்று அவள் கூற, "சரி. எந்த பக்கம் போகணும்? என்று கேட்டான் அவன். அதுக்கு பதிலும் இதுலயே இருக்கே, என்று அந்த துணியை பிரித்தவள், "ஆயிரஞ்சோதியுள்ளோன் அவன் பிறப்பு நோக்கி" என்று அந்த வரியை படித்து காட்டியும், ஆரூரன் விழிக்க, "எனக்கு தெரிஞ்சி. ஆயிரம் ஜோதி உள்ளான்ன்னு சூரியனை தான் சொல்லுறாங்க. அவன் பிறப்பு நோக்கி'ன்னா..அப்போ. இந்த எடத்துல இருந்து கிழக்கு திசை ல போகணும்" என்றாள் அவள்.



சொன்னது மட்டும் இல்லாமல், கிழக்கு திசையில் நடக்கவும் தொடங்க, அவள் பின்னால் சென்றான் இவன்.

எவ்வளவு தூரம் நடக்கிறோம், என்பதை அறிந்து கொள்ள, கூகிள் மேப்பில் அந்த கோவிலின் லொகேஷனை சேவ் செய்து வைத்துக்கொள்ள, சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்தில், தொடங்கியது அந்த சிறுமரங்கள் நிறைந்த இறும்பு.இது வரை பாதி தூரம் வயல், மீதி தூரம் பொட்டல் காடு என்று இருக்க, தோராயமாக ஏழு கிலோமீட்டர் தூரத்தில் தொடங்கியது காடு. அதன் நடுவே ஒத்தையடி பாதை ஒன்று போக, அதில் நடந்து சென்றனர் இருவரும்.



"இதுக்கு மேல எங்க போகணும் அவிரா?" என்று ஆரூரன் கேட்க, "அடுத்து இருக்க லைன்..அதன் நடுவே,

கிளை படர்ந்த கூவிளம்..கூவிளம்க்கு என்ன அர்த்தம்ன்னு எனக்கு தெரியல பா...ஆனா? என் கெஸ் படி, சின்ன மரங்கள் நெறையா இருக்கும் இந்த காட்டுக்கு நடுல, ஏதோ பெரிய மரம் ஒன்னு இருக்கனும். அந்த மரத்தோட பெயர் கூவிளமா இருக்கனும்" என்று அவள் கூறும் போதே, தூரத்தில், அடர்ந்து வளர்ந்த வில்வமரம் ஒன்று அவர்கள் கண்ணில் பட்டது. ஒரே நேரத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ள, "அந்த மரத்தை நோக்கியே போலாம் ஆரூரன்" என்றாள் அவிரா.



இருவரும் அந்த மரத்தின் அடியை அடைந்த போது, அவர்கள் ஆரமித்த இடத்தில் இருந்து பதினாறு கிலோமீட்டர் கடந்திருந்தனர். "கொஞ்சம் நேரம் உட்காரலாம்" என்று அவிரா கூறி முடிப்பதற்குள், மரத்தடியில் சம்மணம் இட்டு அமர்ந்திருந்தான் ஆரூரன். அவள் அவனை சிரிப்பாய் பார்க்க, "ஒரு பச்சை புள்ளைய இவ்ளோ தூரம் நடக்க விடுற? வா வந்து உட்காரு" என்றான் அவன்.



அவன் அருகில் சென்று அவள் அமர, "பசிக்குது. ஐயோ. இப்டி சுத்த விடுவான்னு தெரிஞ்சிருந்தா, ஒரு பேக் முழுக்க ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வந்துருப்பேன்" என்றான் அவன். "இப்போதைக்கு என்கிட்ட இந்த ஒரு ஹாண்ட் பேக் இருக்கே" என்று அவிரா கூற, "பொண்ணுங்க ஹாண்ட் பேக் தான. அதுல என்ன? லிப்ஸ்டிக்க்கும், கண் மையும் தான் இருக்கும்" என்றான் ஆரூரன்.



"ஒஹ்ஹ் . சார்க்கு எத்தனை பொண்ணுங்க ஹாண்ட் பேக்கை ஆராய்ந்து பழக்கம்?" என்று அவிரா கேட்க,

விழித்தான் அவன். "அப்டி நெறையா ஆராய்ந்திருந்தாலும், நான் அப்டி இல்ல" என்றாள் அவள்.



"அப்போ. உள்ள சாப்பிட ஏதாவது வைத்திருக்கியா?" என்று அவள் பேக்கை பிடிங்கி, உள்ளே ஆராய, சிகப்பு நிறத்தில் வெல்வெட்டில் செய்த சுருக்குபை போல் இருந்த ஒரு குட்டி பை, தங்க நிற நூலால் முடிச்சிட்டு இருந்தது. சின்னதாய், கண்ணை கவரும் விதத்தில் அந்த பை இருக்க, அதை கையில் எடுத்து பார்த்தான் அவன்.



அதை அவன் கையில் எடுப்பதை பார்த்தவள், டக்கென்று அதை பிடுங்கி கொள்ள, ஏனென்று புரியாவிட்டாலும், கேள்வி எதுவும் கேட்காமல், அவள் பைக்குள் இருந்த, முறுக்கு, தேன் மிட்டாய் என்று இருந்ததில் பாதி கொறித்துவிட்டு, மீதியை அவளிடம் கொடுத்தான்.



இருவரும், தற்போதைக்கு பசி அடங்கும் வரை உண்டு விட்டு, சிறிது நேரம் இளைப்பாற அங்கேயே அமர்ந்திருந்தனர் இருவரும்.



மீண்டும் ஒரு முறை, ஆருரனின் பார்வை, அந்த சிகப்பு நிற குட்டி பை மீது போக, "இதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்குல? இது. எங்க அத்தை குடுத்தது. அத்தை சென்னை ல தான் இருக்காங்க. கெட்-டுகெதர்க்கு வரதுக்கு முன்னாடி அங்க போய்ட்டு வந்தேன். அவங்க குடுத்தது இது. ஏதோ...இது நம்ப வம்சாவழில பொறக்குற பொண்ணுங்களோட சொத்தும்மா. எனக்கு அப்புறம் இது உனக்கு தான் வரணும். நீ தான் இதை பத்திரமா வச்சுக்கணும். உனக்கு அப்புறம் இது உன் அண்ணண் பொண்ணுக்கு போயி சேரனும். இது நம்ப குலத்தோட பொக்கிஷம் அப்டி இப்டினு ஏதேதோ சொல்லி குடுத்தாங்க. பேக்ல இருந்து வெளிய எடுத்து வைக்க மறந்துட்டேன். எனக்கு இதுல பெரிசா ஏதும் நம்பிக்கை இல்லைனாலும், அவங்க சொன்னது மனசுல பதிஞ்சிடுச்சு போல. அதான் நீ கைல எடுத்ததும் டக்குனு என்னையே அறியாம பிடுங்கிட்டேன்" என்று கூறிக்கொண்டே, உள்ளே இருப்பதை வெளியில் எடுத்தாள் அவள்.



உருளை வடிவில் தங்கத்தில் செய்த குட்டி சிலை போல இருக்க, அதில் வைரம், வைடூரியம், முத்து, மரகதம், மாணிக்கம், பவளம், புட்பராகம், கோமேதகம், நீலம் என்று நவரத்தினங்களை பொதிக்கபட்டு, மின்னியது அது.



அதை பார்த்தவன் கண்ணும் பளபளக்க, அதை அவனிடம் நீட்டினாள் அவிரா. அதை வாங்க மறுத்தவன். "வேணாம். நீயே வச்சிக்கோ. இது ரொம்ப அழகா இருக்கு. இதை தொட்டு பாக்கவே லைட்டா பயமா தான் இருக்கு" என்றான் அவன்.

அவன் அப்படி கூறவும், அதை மறுபடியும் தன் கைப்பைக்குள்ளேயே வைத்துக்கொண்டு, கண்களை மூடி அந்த மரத்தடியில் சாய்ந்தாள். "இங்க காத்து எவ்ளோ நல்லா வருதுல அவிரா. காத்துலயே ஒரு வாசம் இருக்கு" என்று அவன் கூற, "கிளை படர்ந்த கூவிளம்...அதன் நிழலில் நிற்க..தவளம் அதன் வாசம், வீசும் திசை.." என்ற அடுத்த வரிகளை முணுமுணுத்தது அவள் இதழ்கள்.

சட்டென கண் விழித்தவள், "காத்துல வாசம் வருதுல ஆரூரன். என்ன வாசம் வருது. எந்த பக்கம் வருது" என்று பரபரப்பாய் கேட்டாள் அவள். "என்ன ஆச்சு அவிரா? எதுக்கு இவளோ படபடப்பு?" என்று அவன் கேட்க, "அடுத்து நம்ப போக வேண்டிய இடத்துக்கு இந்த வாசத்தை வச்சி தான் ஆரூரன் வழி கண்டுபிடிக்கணும். இது என்ன வாசம்?"என்று அவள் கேக்க, "ரொம்ப ஸ்வீட் ஸ்மெல் அவிரா. ஏதோ பூவின் வாசம்" என்றான் அவன். "பூ.....ஆமா பூவோட வாசம்...." என்று அவள் எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்க, "என்ன ஆச்சு அவிரா"என்று அவன் அவளின் தோள் தொட,யோசனையில் இருந்து மீண்டாள் அவள். "தவளம் அதன் வாசம்....இதை படிச்சப்போ... தவளம்க்கு அர்த்தம் கற்பூரம்ன்னு நெனச்சேன். தவளம்ன்னு கற்பூரத்தை கூட சொல்லுவாங்க. ஆனா...இதுல குறிப்பிட்டிருக்கும் தவளம்...அது கற்பூரம் கெடையாது. சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்கள். அதில் ஒன்று தவளம்" என்றாள் அவள்.

"அப்படி ஒரு பூ நான் இதுவரை கேட்டதில்லையே" என்று ஆரூரன் கேள்வியாய் நோக்க, "இப்போ நம்ப பிச்சிப்பூ , செம்முல்லைன்னு சொல்றோமே அந்த பூ தான் ஆரூரன்" என்று கூறிக்கொண்டே, அந்த பூவின் வாசம் வந்த திசை நோக்கி நடந்தன அவள் கால்கள்.

சிறிது தூரம் செல்ல, இருபுறமும் முல்லை கோடி படர்ந்து, செம்முல்லை மொட்டுக்கள் குளிங்கிக்கொண்டிருந்த, முல்லைவனம். அதன் நடுவே ஊர்ந்த ஒத்தையடி பாதை அதில், அவிரா நடக்க, அவள் பின்னே தொடர்ந்தான் ஆரூரன்.

"இங்க நிக்க வேண்டாமா?" என்று ஆரூரன் கேட்க, இல்லை என்று தலை அசைத்தாள் அவள்.

அந்த முல்லைவனம் ஒரு ஆற்றங்களையில் முடிய, ஆற்றங்கரைக்கு மறு புறம், முதிர்ந்த மரங்கள் பல அடர்ந்து இருக்கும் வனம் தென்பட, இக்கரையிலேயே நின்றாள் அவள்.

"பவழம் அதை அடையும் முன், புரண்டு ஓடும் நீர் அதனுள்" என்று அடுத்த வரிகளை அவள் படிக்க, "பழவம்ன்னா என்ன?" என்று வினவினான் அவன். "முதிர்ந்த மரங்கள் அடர்ந்து இருக்க காடு தான் பவழம்ன்னு சொல்லுவாங்க" என்றாள் அவிரா.

"இப்போ இந்த ஆற்றை தாண்டி போகணுமா?" என்று ஆரூரன் கேட்க, "பவழம்...அதை அடைவதற்கு முன்னாடியே நீர் புரண்டு ஓடும்...அதுக்குள்ள இருக்க எழால்...எழால்ன்னா பருந்து..நீருக்குள்ளன்னு தான் சொல்லிருக்காங்க" என்று கூறி, "நீச்சல் தெரியும்ல?" என்று கேள்வியாய் நோக்க, "தெரியும்...அதுக்கென்ன?" என்று விலகி செல்ல பார்த்தவனை பிடித்து, புரண்டு ஓடும் அந்த ஆற்றில் தள்ளி விட்டு, இவளும் குதித்தாள்.

ஆள் உயரத்தை விட ஆழம் அதிகமாய் இருக்க, உள்நீச்சல் அடித்து அங்கும் இங்கும் தேடி அலைந்தாள் அவள். என்ன செய்வது என்றும் தெரியாமல், அவள் பின்னே அலைந்தான் அவனும்.

நீருக்கு அடியில், ஆற்றின் அடி ஆழம் அதில் இருக்கும் மண் படுகை அதில், அலகை பிளந்து படுத்திருக்கும் ஆள் உயர சிலை ஒன்று இருக்க...அதன் அலகின் உள்ளே அவள் செல்ல, அது ஒரு சுரங்க பாதை என்று அறிந்தாள் அவள். அந்த எழால் உருவின் உள்ளே ஏழு படிகள் இருக்க, அந்த படிகளில் ஏறி கடந்ததும், நீரை விட்டு வெளியே வந்திருந்தாள். அவள் பின்னால் வந்த ஆரூரனும் அதே இடம் அடைந்திருக்க, அதன் பிறகு செல்லும் வழி ஏதுமில்லை.

எதிரில் ஒரு கருங்கல் சுவர் எழுப்பப்பட்டிருக்க, மேலேயும் கருங்கல் சதுரங்களால் செய்த தளம் இருந்தது. அதன் மேல் வழி தெரியாமல், எங்கு செல்வது என்றும் தெளிவு இல்லாமல் திண்டாடியவள், கடைசி வரிகளை மீண்டும் படித்தாள்.

"எழால் அதன் அலகின் ஊடே, ஏழு அடி,அதன் மேல,கைக்கு எட்டும் தொலைவு தான்...பொற்குவியல் அதுவும்..." என்று படித்தாள் அவள். பருந்தோட அலகு வழியா வந்து, ஏழு படி அதையும் ஏறி வந்தாச்சு. இதுக்கு மேல எதுவும் இல்லையே. கைக்கு எட்டும் தொலைவுல பொற்குவியல்ன்னு இருக்கு. இங்க கைக்கு எட்டும் தொலைவுல கருங்கல் தளம் தான இருக்கு" என்று யோசிக்க, அவள் யோசனையை நிறுத்தியது, அவன் குரல்.

"அவிரா. இங்க பாரு. நம்ப உன்னோட டேபிள் கிளாக்ல, நம்ப தொடங்குன சிவன் கோவில்ல பார்த்த அதே சின்னம்" என்று அவன் காமிக்க, அங்கு தரையில் அதே சின்னம் இருந்தது.

அதன் பக்கத்தில் சென்றவள், ஏதோ யோசனை வந்தவளாய், தரையில் இருந்த அந்த சின்னத்திற்கு நேராக தளத்தில் பார்த்து, அந்த சின்னத்திற்கு நேராக, தளத்தில் இருந்த கருங்கல் சதுரம் அதை அழுத்த, அது உள்ளே அமுங்கியது.

அதை அவள் ஆச்சர்யமாய் பார்க்க, இதென்ன ஆச்சர்யம் என்று கேட்கும் வண்ணம், அவள் முன்னே இருந்த கருங்கல் சுவர் அது இரண்டாய் பிளந்து வழிவிட்டது இவர்கள் உள்ளே நுழைய.
 

தரணி

Well-Known Member
வாவ் ரொம்ப நல்லஸ் இருந்துச்சி.... அந்த பாடல் எதில் வரும் பாடல் .... ரபிம்ப அருமையான cules நிறைய புது புது வார்த்தை தெரிஞ்சிக்க முடிஞ்சது.. எனக்கு என்னோவோ அந்த நவனத்திரம் கூட இதோட தொடர்பு உடைய பொருள் யா இருக்குமோ தோணுது.. கதைப்போ விறு விருன்னு.போகுது.... சீக்கிரம்.அடுத்த ud கொடுங்க...
 

Kamali Ayappa

Well-Known Member
வாவ் ரொம்ப நல்லஸ் இருந்துச்சி.... அந்த பாடல் எதில் வரும் பாடல் .... ரபிம்ப அருமையான cules நிறைய புது புது வார்த்தை தெரிஞ்சிக்க முடிஞ்சது.. எனக்கு என்னோவோ அந்த நவனத்திரம் கூட இதோட தொடர்பு உடைய பொருள் யா இருக்குமோ தோணுது.. கதைப்போ விறு விருன்னு.போகுது.... சீக்கிரம்.அடுத்த ud கொடுங்க...


paadalum naane ezhudhunadhu dhaan sis...romba nandri sis..unga comments romba encouraging aa iruku
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top