புள்ளினங்காதல் - 3

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
காலை மென்பனி முழுதும் விலகாமல், ஆழ்கடல் அதை மஞ்சமாய் கொண்டு இரவு முழுதும் துயில்கொண்ட கதிரவன், எழும்ப மனமின்றி சோம்பலாய் எழும்பிக்கொண்டிருக்க, புதுச்சேரி பேருந்து நிலையம் அந்நேரத்திலும் பரபரப்பாய் இயங்கி கொண்டுதான் இருந்தது. பஸ் ஹாரனை உயிர்ப்பித்துக்கொண்டிருந்த ஓட்டுனர்கள், தங்கள் பஸ் செல்லும் இடங்களை கூவிக்கொண்டிருந்த நடத்துனர்கள், ஆங்காங்கு இருந்த டீ கடைகள், வேவ்வேறு ஊர்களில் இருந்து வந்திறங்கிய பூக்கள், காய், கனிகள் என்று ஆர்ப்பாட்டமாய் தான் இருந்தது அந்த பேருந்து நிலையம்.



ஆதிச்சநல்லூருக்கு நேரடி பேருந்து கிடையாது. திருநெல்வேலி சென்று, அங்கிருந்து வேறு பேருந்தில் செல்லலாம் என்று முடிவு செய்து, திருநெல்வேலி பேருந்தை தேடிக்கொண்டிருந்தனர் நம் ஆரூரனும், அவிராவும்.



பேருந்தை கண்டுப்பிடித்து இருவரும் ஏறி அமர, "ஹப்பா....என்னா ஊரு டா இது. ஊரு இல்ல சொர்கம். பஸ் ஸ்டாண்டை சுத்தியே எத்தனை பார். பாண்டிச்சேரின்னா பாண்டிச்சேரி தான் டா" என்று வாயை விட்டு, அவிராவிடம் முறைப்புகளை பரிசாக பெற்றுக்கொண்டான். "அட முறைக்காத மா. எனக்குன்னு இல்ல. யாருக்கா இருந்தாலும் பாண்டிச்சேரின்னு சொன்னா, இந்த தண்ணியோட நெனப்பு வரத்தான் செய்யும்" என்றான் ஆரூரன்.



"அந்த தண்ணியை பத்தி கதை அளந்தது போதும். இப்போ எனக்கு குடிநீர் வேணும்" என்று அவள் கூற, "நான் போயி வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வரேன் அவிரா" என்று எழுதவனை, வேண்டாம் என அமர்த்தி விட்டு, எழுந்து வெளியில் சென்றாள்.



ஏதேனும் கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் வாங்குவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம் தான். அந்த பேருந்து நிலையத்தின் ஒரு ஓரத்தில், தென்னங்கீற்றில் ஒரு சிறு பந்தல் போட்டு, இரு பக்கத்திலும் பேனர்கள், ஒரு அரசியல்வாதியின் புகைப்படத்தை தாங்கி இருக்க, அதில் இரண்டு மண் குவியல்கள், ஒவ்வொரு குவியலுக்கும் மேல் ஒரு மண் பானை, ஒரு கிளாஸ் என இருந்தது. அங்கு சென்றவள், தன் கைப்பையில் இருந்து, ஒரு செப்பு தண்ணீர் குப்பியை எடுத்து, அதில் தண்ணீர் பிடித்து குடித்துவிட்டு, மீண்டும் நிரப்பிக்கொண்டு, இவன் அருகில் வந்து அமர்ந்தாள்.



"ஏன் அவிரா. பாட்டில் வாங்கி குடிச்சிருக்கலாமே!" என்று ஆரூரன் கேட்க, "நான் தண்ணீர் தான் குடிப்பேன். H2O இல்லை" என்று அவள் கூற, விழித்தான் இவன். அவன் பதில் ஏதும் பேசாமல் இருக்க, அவளே தொடர்ந்தாள். "பாட்டிலில் அடைத்த அந்த தண்ணீரில் இருப்பது வெறும் H2O மட்டும் தான் ஆரூரன். தண்ணீரை சுத்தம் செய்யுறேன்னு குடிநீரில் இருக்க வேண்டிய 13 மினெரல்ஸையும் சேர்த்து சுத்தம் பண்ணிடறாங்க. இதனால தண்ணீர்ல இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் எதுவுமே கிடைக்காம போய்டும். அது மட்டும் இல்லாம, தண்ணிய அடைத்து வைக்கும் பிளாஸ்டிக். அது மறுசுழற்சி செய்ய கூடிய பிளாஸ்டிக் தான். இருந்தாலும் உற்பத்தி ஆகுற பிளாஸ்டிக் பாட்டில்களில் 30 சதவீதம் கூட மறுசுழற்சிக்கு அனுப்பப்படுவதில்லை. நம்ப உடம்புக்கு சேர வேண்டிய சத்தையும் இழந்துட்டு, ஏற்கனவே மூச்சி திணறிக்கொண்டு இருக்கும் பூமித்தாய் மேல, இன்னும் தலைகாணி வச்சி அழுத்தணுமா என்ன? " என்று அவள் சொன்ன கடைசி வார்த்தைகள் இதழ்களை விரிய வைத்தாலும், யோசிக்க வைத்தது.



அவள் சொன்னதை யோசித்துக்கொண்டே, அவள் தண்ணீர் பிடித்து வந்த அந்த பந்தலை பார்த்தான் அவன். அவன் தண்ணீர் பற்றி யோசித்து கொண்டிருந்தாலும், அந்த பந்தலின் இரு பக்கமும் இருந்த பேனரும், அதில் 32 பற்களும் தெரியுமாறு கைகளை கூப்பி போஸ் கொடுத்தவரும், அதன் அருகில் இருந்த வாசகங்களும் இவன் கவனத்தை ஈர்த்தன.



"கர்நாடகா கஞ்சமாகி போனாலும்...

காவேரி பொய்த்து போனாலும்...

கங்கையின் மைந்தனாய் எம் அண்ணன்...

புதுவையின் பாரி மன்னன்...

தண்ணீர் வழங்குவதை நிறுத்துவதே இல்லை..



உங்கள் ஓட்டு பானை சின்னத்திற்கே"



என்ற வாசங்கள் கண்டவன் சிரித்து கொண்டிருக்க, "என்ன சிரிக்கறீங்க" என்றாள் அவிரா. "வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாதுன்னு சொல்லுவாங்க. இப்போ ஊருக்கு தெரியணும்னு தான் உதவியே செய்றாங்க" என்று அவன் கூற, எதை குறிப்பிடுகிறான் என்பது புரிந்தது அவளுக்கு.



"அட. சாமிக்கு அளிக்குற நன்கொடையே உபயம்ன்னு கோவிலில் போட்டுக்கறவங்க தான. மனுஷனுக்கு செய்யுற சேவையை சொல்லாமலா போய்டுவாங்க" என்று கூறி சிரித்தாள் அவளும்.



"அவிராவுக்கு கடவுள் பக்தி உண்டோ?" என்று ஆரூரன் கேட்க, "நம்பள மீறின சக்தி ஒன்னு இருக்குன்னு நம்புறேன். அதுக்கு கடவுள்ன்னு பெயர் குடுத்து, அதுக்கு எத்தனை கதைகள்... ஹப்பா...." என்று கூறியவள், "நல்ல வேலை...அப்போ பேஸ்புக் இல்லை" என்று கூறி சிரித்தாள்.



"இருந்தா என்ன?" என்று அவள் சிரிப்பதன் காரணம் தெரியாமல் கேட்டான் ஆரூரன்.



இருந்தா என்னவா...நெனச்சி பாரேன் கொஞ்சம். "பாற்கடலை கடைய போகிறோம் - தேவர்கள் ஃபீலிங் எக்ஸைடட் வித் அசுரர்கள்", "அமிர்த கலசத்தில் விஷம் கலந்ததால், சம்பவ இடத்திற்கு விரைந்தார் சிவபெருமான்- தேவர்கள் டேக்ட் சிவபெருமான்", "ராமன் அண்ணாவும், லக்ஷ்மணனும், சீதா தேவியுடன் வனவாசம் சென்றுவிட்டனர்-பரதன் போஸ்டேட் இன் அயோத்தியா மக்கள் பப்ளிக் குரூப்" , "லக்ஷ்மணன் என் மூக்கை அறுத்து விட்டான். ஒரு நல்ல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் பரிந்துரை செய்யுங்கள் நண்பர்களே - சூர்ப்பனகை ஃபீலிங் அங்கிரி வித் லக்ஷ்மணன்", "நாரதர் செக்ட் -இன் அட் கைலாசம்"....இப்டி தான் இருந்துருக்கும் என்று கூற கூற இவனும் சிரித்துக்கொண்டிருந்தான்.



"அது மட்டும் இல்லாமல், முதன் முதலில் fake-id பயன்படுத்தியவர் இந்திரராக இருந்திருப்பார். fake-idயால் மோசம் போன முதல் பெண் அகலிகையாக இருந்திருப்பார்" என்று அவள் கூற, இவ்வளவு நேரம் சிரித்துக்கொண்டிருந்தவன் முகம் ஏனோ சுருங்கியது.



"அவிரா. fake-idல தொல்லை குடுபவங்களை என்ன செய்யுறது. ஒரு fake-id ரொம்ப தொல்லை பண்ணுது என்னை" என்று அவன் கூற, நாக்கை கடித்துக்கொண்டாள் அவள். "உன்னை தொல்லை பண்ணுற அந்த fake-id யே நான் தான். இது தெரியாம என்கிட்டயே ஐடியா கேக்குறான் பாரு...கிறுக்கு பயபுள்ள" என உள்ளுக்குள் சிரித்து கொண்டு, "தெரியலையே" என்றாள் அவனிடம்.



அவள் அந்த fake-id விஷயத்தில் இருந்து அவன் கவனத்தை திருப்ப பார்க்க, அவனோ அதை பத்தியே பேசிக்கொண்டிருக்க, எதை பத்தி பேசினால், இவன் கவனம் திரும்பும் என யோசித்துக்கொண்டிருந்தாள் அவிரா.



அதே யோசனையில் ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸின் ஜன்னல் வழியே பார்க்க, ஒரு பார் தென்பட, "இப்போ பாரு. உன் மைண்ட் எப்படி டைவர்ட் பன்றேன்னு!" என்று நினைத்துக்கொண்டவள், "ஆரூரன். பாண்டிச்சேரி ல சரக்கு பேமஸ்ன்னு சொன்னியே? ஏன் அப்டி?" என்று கேட்க, அவிராவிடம் இருந்து இந்த கேள்வியை எதிர் பாக்காதவன், சில நேரம் அமைதிக்கு பிறகு, "அவிரா! நீயா இதை கேக்குற? என்னால நம்பவே முடியலையே..." என்று ஆச்சர்யமாய் கேட்க, "சும்மா...ஒரு ஜெனரல் நாலேஜ்க்கு தான் கேட்டேன். சொல்ல இஷ்டம் இல்லைனா விடு" என்று பொய் கோபத்துடன் திரும்பி அமர்ந்துகொள்ள, "அய்யோயோ. என்ன இப்டி சொல்லிட்ட. எனக்கு உன்னோட ஜெனரல் நாலெட்ஜை வளர்ப்பதற்கு, இதை விட வேற நல்ல வாய்ப்பு கிடைக்காது. இப்போ எப்புடி புட்டு புட்டு வைக்கிறேன் பாரு" என்றவன், ஏதோ சபா மண்டபத்தில் பாட தொடங்கப்போவது போல, தொண்டையை கணைத்துக்கொள்ள, "ஹப்பப்பா..ரொம்ப தான்.." என்றாள் அவிரா.



"பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம். அதனால இங்க சரக்கு விலை கம்மி. இது ஒரு முக்கியமான காரணம்" என்று அவன் கூற, "ஏன் விலை கம்மி?" என்று கேள்வி தொடுத்தாள் அவிரா. "அது. யூனியன் பிரதேசத்தோட பொருளாதாரம், வரி விதிப்பு எல்லாம், நேரடியாக இல்லைனாலும் மறைமுகமா, மத்திய அரசோடு கட்டுப்பாட்டுக்குள்ள தான் இருக்கும். VAT வரி போல சில வரிகள், இங்க கிடையாது. அது மட்டும் இல்லாமல், பாண்டிச்சேரியின் மாநில அரசு, இதற்கு தனியா எதுவும் வரி விதிப்பதில்லை. அதுக்கு காரணம், இப்போ மட்டும் இல்லை, பழங்காலம் முதலே, அதாவது பிரெஞ்சு ஆட்சிக்காலம் முதலே இங்க குறைந்த விலையில் தான் மதுபானம் விற்கப்படுகிறது. இன்னொரு காரணம், பாண்டிச்சேரி மாநிலத்தின் வருமானத்தில் 20 சதவீதம் மதுபான விற்பனை மூலம் தான்.புதுவையில் மட்டும், 48 மதுபான கடைகள், 155 பார்கள், 98 ஹோட்டல்கள் உள்ள பார்கள், 301 மதுபான விற்பனையகங்கள் இருக்கு. கள்ளுக்கடை சாராயக்கடையெல்லாம் நான் கணக்குலே எடுக்கலன்னா பாத்துக்கோயேன். அப்புறம்...விலை மலிவு என்பது மட்டும் அல்லாது, இங்க நம்பி வாங்கி குடிக்கலாம், டூப்ளிகேட் சரக்கு சுத்தமா கிடையாது. அதனால தான், இந்த ஊருல மதுபானம் அருந்துபவர்கள் நிறைய பேர் இருந்தாலும், ரோடுல விழுந்து கெடக்கறவங்க கம்மி தான். சரக்கோட குவாலிட்டி அப்டி. இன்னொரு காரணம், கள்ளு, சாராயம்ல தொடங்கி, உள்ளநாட்டு மதுபானம், அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதி ஆகும் மதுபானம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் சில மதுபானங்கள், கோவாவிலும், புதுவையிலும் மட்டும் பிரத்தியேகமாக கிடைக்கக்கூடிய உயர்ரகம் மதுபானங்ககளும் உண்டு. என்ன வேண்டும் உங்களுக்கு, எல்லாமே இங்க இருக்குன்னு, கேப்ஷன் போடுற அளவுக்கு ஸ்பெஷல் இந்த பாண்டிச்சேரி" என்று முடித்தான் ஆரூரன்.



உணர்ச்சிவசப்பட்டு கடைசி வரியை மட்டும், சற்று குரல் உயர்த்தி கூறிவிட, எதிர் இருக்கையில் தன் தாயின் தோளில் தலை வைத்து உறங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு, விழிப்பு தட்டி, இவனை நிமிர்ந்து பார்த்தது. இவன், அந்த குழந்தையை பார்த்துக்கொண்டிருக்க, "ஒரே கேள்வி தான் கேட்டேன். எம்புட்டு பேச்சு பேசுற. எம்மாடியோவ்..:" என்று ஆச்சரியமாய் அவிரா இவனை பார்க்க, இவன் பார்வை வேறு திசையில் இருப்பதை கவனித்து, அப்போது தான் அவள் கவனித்தாள் எதிர் இருக்கையில் இருந்த குழந்தையை.



தோராயமாக கூறினால், ஒரு மூன்று வயது இருக்கும் அந்த பெண் குழந்தைக்கு. இப்போது தான் முதல் மொட்டை போட்டு, காது குத்திவிட்டு வருகிறார்கள் போலும். ஊதா நிற சட்டை, தங்க நிறத்தில் ஜரிகை வைத்த பாவாடை என தேவதையாய் இருந்தது குழந்தை. காது குத்திய வலியினால், அழுது ஓய்ந்து, இப்பொழுது தான் கண்ணயர்த்திருக்கும் போல. பாவம். இவன் மதுபானம் பற்றி, ஆற்றிய உரையின் கடைசி வரியில் விழித்துவிட்டாள் குழந்தை.



குழந்தையை சமாதானம் செய்கிறேன் என்று இவன் கண்ணடிக்க, இன்னும் கோவமானது அந்த குழந்தை. "அச்சச்சோ...பாப்பாவுக்கு காது குத்தி இருக்காங்களா? வலிக்குதா பாப்பாக்கு" என்று லேசாய் அந்த குழந்தையின் காதை தொட, அது வலித்தது போலும். இவ்வளவு நேரம் முரைத்துகொண்டிருந்த குழந்தை, வீலென அலறியது குழந்தை. "அச்சச்சோ..." என பதறிய அவன், பெரும்பாடு பட்டு குழந்தையை சமாதானம் செய்து கொண்டிருக்க, தன்னை மறந்து அவனை சில நொடிகள் ரசிக்கத்தான் செய்தாள் அவிரா.



ஒரு வழியாய் குழந்தை அழுவதை நிறுத்திவிட, இல்லை இல்லை...குழந்தையின் அழுகையை ஆரூரன் நிறுத்திவிட, பெருமூச்சி விட்டான் ஆரூரன். "ஹப்பாடா...ஒரு வழியா குழந்தை அழுவதை நிறுத்திடுச்சு. சின்ன குழந்தைக்கு இப்படியா காதுகுத்துவாங்க. வளர்ந்ததுக்கு அப்புறம் அவங்களுக்கு வேணும்னா அவங்களே குத்திக்க போறாங்க. அப்டி அழகுக்காக குழந்தைக்கு இப்போவே மாட்டி விடணும்ன்னு ஆசைப்பட்டா ஒட்டுக்கம்மல் வாங்கி போட்டு அழகுபாத்துக்க வேண்டியது தான..." என்று அவன் சற்று கோவமாவே பேச, அவன் இப்டி பேசி பார்த்திராதவள், சற்று அதிர்ந்து தான் போனாலும், ஒரு குழந்தை அழுகைக்காக அவன் கோவப்படுவதும் மங்கை மனதிற்கு பிடித்து தான் போனது.



அவன் கோவத்தில் அவள் மனம் மயங்கினாலும், அவள் மூளையோ அவன் கோவம் முறையானதல்ல என்பதை உணர்த்த முற்பட்டது.



"ஆரூரன்.கூல். இப்படி அணிகலன்கள் எல்லாம் அணிந்து கொள்வது, நம்ப பண்பாடு. அது மட்டும் இல்லை...அதெல்லாம் அழகுக்கு அணிவது கிடையாது" என்று அவிரா கூற, "என்ன? அழகுக்கு அணிவது இல்லையா? அப்போ என்ன? இந்த கம்மல், வளையல், செயின், மூக்குத்தி, கொலுசு...இதெல்லாம் அழகுக்காக தான போட்டுக்கறாங்க.." என்று அவன் பக்க வாதத்தை வைத்தான் ஆரூரன்.



"இப்போ பெரும்பாலானோர் அழுகுக்காக தான் போடுறாங்க. ஆனா. நம்ப முன்னோர்கள் அதையெல்லாம் அணிய சொன்னதுக்கு காரணம் இருக்கு. கம்மல், மூக்குத்தின்னு நீ சொன்ன ஒவ்வொன்னுக்கும் காரணம் இருக்கு.." என்று அவள் கூற, "என்ன?!" என்று சற்று ஆச்சர்யத்துடன் கேட்டான் ஆரூரன்.



"ஆமாம். இருக்காதா பின்ன. தண்டனையாய் வழங்கும் தோப்புக்கர்ணத்துக்கு பின்னாடியே அத்தனை நன்மைகள் இருக்காப்போ, அணிகலன்களாய் அறிமுகப்படுத்திய இதுக்கெல்லாம் காரணம் இல்லாமலா இருக்கும். ஒவ்வொன்னா சொல்றேன். கேட்டுக்கோங்க சார்" என்று அவள் கூற, "சரிங்க மேடம்" என்று அவன் கூறிய தோரணையிலும், கை கட்டி அமர்ந்த விதத்திலும் சிரித்தவள், கூற தொடங்கினாள்.



"காதுல தோடு போடுவது, "புத்திகூர்மை ஏற்படுத்தி தெளிவான முடிவு எடுக்க உதவுகிறது. கொலுசு அணிவது, கர்பப்பை, கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம் போன்ற பல உறுப்புகளை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. விரலில் மோதிரம் அணிவது, இதய நோய், வயிற்றுக்கோளாறுகளை தடை செய்யும், இனவிருத்தி உறுப்புகளுக்கு ஷக்தி அளிக்கும். மருதாணி உடம்பிற்கு குளிர்ச்சி தந்து புத்தியை சாந்தப்படுத்தும். நெற்றிச்சுட்டி அணியும்போது தலைவலி, சைனஸ் பிரச்சனை சரிசெய்கிறது. வளையல்கள் முக்கியமான ஹார்மோன்களை சீராக்குகிறது. இதன் மூலம் தாய்க்கும்-சேய்க்கும் நோய்எதிர்ப்பாற்றல் கூடும். மூக்கில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளுக்கு, பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கு நெருக்கமான தொடர்பும் உண்டு. மூக்குத்தி அணியும் போது, சில பெண்கள், வயிற்று சிக்கல்கள் சரியாகி வருவதை உணரலாம். கழுத்தில் செயின் அல்லது நெக்லஸ் அணியும்போது, உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள ஷக்தி ஓட்டம் சீராகும்...இப்போ .சொல்லுங்க ஆரூரன். இதெல்லாம் அழகுக்காகவா அணிய சொல்லிருக்காங்க" என்று அவள் கேட்க, இவனுக்கு தான் வாதம் புரிய வாய்ப்பே இல்லாமல் போனது.



அவிரா பேசி முடித்ததும் ஆருரனின் கைபேசிக்கு ஏதோ அழைப்பு வர, அதை கட் செய்தான். "அட்டென்ட் செய்யலையா?" என்று அவிரா கேட்க, "அட்டென்ட் செய்ய தேவை இல்லாத கால்" என்று என்றான் ஆரூரன். ஆனால் அவன் முகத்தில் இருந்த கோபம் கூறியது, "அட்டென்ட் செய்ய விரும்பாத கால் என்று".

அதன் பின் ஆரூரன் யோசித்துக்கொண்டே வர, அவன் யோசனையை தடை செய்யாமல் இவளும் அமைதியாகத்தான் வந்தாள்.

சிறிது நேரத்தில் மதிய உணவுக்காக பஸ் ஒரு உணவகத்தில் நின்றுவிட, அனைவரும் கீழே இறங்கினர்.


ஒரு நடுத்தர உணவத்தில் அந்த பேருந்து நின்றிருக்க, "வாங்க சாப்பிடலாம் மிஸ்டர். ஓர்நிதோலோஜிஸ்ட்" என்று அவிரா அழைக்க, அவனிடம் அசைவே இல்லை. அவன் செவிகளில் அவள் வார்த்தைகள் எட்டியது போலவே தெரியவில்லையே. "பயபுள்ள கண்ணை தொறந்துட்டே தூங்குமோ?" என்று யோசித்தவள், அதை சத்தமாய் கேட்டும், பதில் தான் இல்லை.


பொறுமை இழந்தவள் அவனை உலுக்க, அப்போது தான் "கூப்டியா அவிரா" என்றான் அவன்.



"அடப்பாவி. கூப்ட்டியாவா? இவளோ நேரமா ஒருத்தி தொண்டை தண்ணி வற்ற கத்திக்கிட்டு இருக்கேன். வா சாப்பிடலாம்" என்று அவள் அழைக்க, "எனக்கு வேணாம்" என்று மறுப்பு தெரிவித்தான் அவன்.



"நீ சாப்பிடலைன்னா எனக்கும் சாப்பாடு வேணாம்னு சொல்லுவேன்னு நினைக்காத. எனக்கு பசிக்குது. சாப்பிட போறேன்" என்று கூற, அதற்கும் பதில் அளிக்கவில்லை அவன்.



இதற்கு முன்னர் யாரையும் சாப்பிட சொல்லி வற்புறுத்தியது இல்லையே அவள். எப்படி சாப்பிட அழைத்தால் வருவான் என்றும் தெரியவில்லை அவளுக்கு...



"இவனை எப்படி சமாதானம் செய்து சாப்பிட அழைப்பது" என்று அவள் யோசிக்க, "முதல நீ என்னை சமாதானம் செய்" என்று சத்தமிட்டது அவள் வயிறு.

"இவன் அமைதியா தான் இருப்பான். ஆனா இந்த வயிறு. அதை அமைதிப்படுத்த ஒரே வழி, சாப்பாடு. அதை பாப்போம் முதல" என்று பேருந்தை விட்டு, கீழே இறங்கினாள். உள்ளே அமர்ந்து சாப்பிட இடம் இருந்தாலும், வெளியேவே போடப்பட்டிருந்த நான்கு டேபிள்களில் ஒன்றில் அமர்ந்தாள். அதுவும், ஜன்னல் ஓரமாய் அமர்ந்திருக்கும் ஆரூரன் கண்களுக்கு நன்கு தெரியும் இடத்தில் தான். ஹோட்டலை ஒட்டியே தான் பேருந்து நிறுத்தப்பட்டிருந்ததால் அவள் இங்கிருந்து பேசினால் கூட, ஆரூரன் செவிகளுக்கு எட்டும் அளவுக்கு தூரத்தில் தான் அமர்ந்திருந்தாள்.



கை கழுவி விட்டு டேபிளில் அமர்ந்தவள், "மறுபடி கேக்கறேன். சாப்பாடு வேணாம் ல...?" எங்க, "வேண்டாம்" என்றான் அவன்.



"எப்பா...வெயிட்டர் தம்பி. இங்க வாப்பா.." என அழைக்க, இரண்டு செகண்டில் அவளுக்கு தம்பியாகி போன, அந்த வெயிட்டரும் வந்து, "சொல்லுக்கா..என்ன சாப்புட்ற" என கேட்க, "ஒரு பிரைட் ரைஸ். பிரைட் ரைஸ்ன்னு சொன்னதும், அஜினமோட்டோ வாரி கொட்டி, கிண்டி எடுத்துட்டு வந்துடாத. சாதம் பாக்கவே பலபலன்னு இருக்கனும், காய்கறியில் கஞ்சத்தனம் பன்னாதீங்க டா தம்பி. இந்த முட்டகோஸ், கேரட், பீன்ஸ், முடிஞ்சா கொஞ்சம் பச்சை பட்டாணி இதெல்லாம் நெறையா போட்டு, சுட சுட கொண்டு வரணும். எண்ணெய் அளவா இருப்பது முக்கியம். கொலெஸ்ட்ரோல் அதிகமாயிடும் பாரு. அப்டியே. பெப்பர் தூக்கலா ஒரு ஆம்ப்லேட்" என்று அவள் கூற, "சரி கா" என்று செல்ல முயன்றவனை. "நில்லு நில்லு. எங்க ஓடுற. சாத்துக்குடி ஜூஸ் இருக்கா?" என்று கேட்க, "இருக்கு கா" என்று கூற, "ஜூஸ்ன்னா. ஒரு மடங்கு பழச்சாறுல நாலு மடங்கு தண்ணி ஊத்தி, அது பத்தாதுன்னு அரை கிலோ ஐஸை தூக்கி கரைச்சி, வெள்ளை சக்கரையை அள்ளி கொட்டுவீங்களே. அப்படி இருக்க கூடாது. சுத்தமான பழச்சாறு ல தண்ணி கலக்காம, மிதமான அளவு சக்கரை கலந்து, கொஞ்சமா ஐஸ். இந்த வெயிலுக்கு இதமாக தொண்டையில் இறங்குற மாதிரி இருக்கனும். அப்புறம்...இந்த ஜூஸ் கணக்கை மட்டும், தோ...ஒருத்தவன் அந்த ஜன்னல் ஓரம் ப்ளூ டீ-ஷர்ட் போட்டு உக்காந்துட்டு இருக்கானே. அவன் தலைல கட்டிடு" என்றதும், "சரி கா" என்று சென்றுவிட்டான் அந்த பையன்.



இவ்வளவு நேரம் அவள் சொல்லியது அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தவன், "அது என்ன? ஜூஸ் பில் மட்டும் என் தலையில?" என்று கேட்க, "அதுவா? உன்ன கூட்டு கூட்டு தானே என் தொண்டை தண்ணி வத்தி போச்சு. அதனால தான்" என்று அவள் கூற, "ஓஹ். இன்னும் உன்ன கூப்டுட்டு இருந்ததால தான் எனக்கு பசியே எடுக்குதுன்னு சொல்லி, மொத்த பில்லையும் என் தலையிலே கட்ட வேண்டியது தான" என்று அவன் சிரித்துக்கொண்டே கேட்க, "அப்பாடா சிரிச்சிட்டான்" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டவள். "நல்ல ஐடியா தான். அடுத்த முறை செயல்படுத்திட வேண்டியது தான்" என்றாள் அவள்.



"நீ குடுத்த ஆர்டரை கேட்டே எனக்கு பசி எடுக்குற மாதிரி இருக்கு, இதோ வரேன்" என்று இறங்கினான் அவன்.



"அப்படி வாடா வழிக்கு" என்று நினைத்துக்கொண்டவள், "யாரோ சாப்பாடே வேணாம்னு சொன்னாங்க" என்று பார்க்க, "இப்போ வேணும்" என்று இறங்கி வந்து, அவள் அருகில் அமர்ந்தான்.



"என்ன சாப்பிடுற" என்று அவள் கேட்க, "சாம்பார் ரைஸ்" என்றான் அவன். "தம்பி..இங்க வாடா...இந்த சாம்பார் சாதத்துக்கு ஒரு சாம்பார் சாதம் கொண்டு வாடா" என்று கூற, "என்னக்கா...மாமாவை சாம்பார் சாதம்ன்னு சொல்ற" என்றான் அந்த பையன்.



"என்னது மாமாவா? உனக்கு இவரு சொந்தமா அப்போ?" என்று கேட்க, "ச்ச. ச்ச..எனக்கு நீ அக்கான்னா, அவரு மாமா தான?" என்று அவளை பார்த்து கண்ணடிக்க, "டேய் அதிகப்ரசங்கி....போயி சொன்னதை கொண்டுவாடா" என்று துரத்தினாள் அவனை.





"இன்னும் அஞ்சு நிமிஷத்துல பஸ் எடுத்துடுவோம்" என்று கண்டக்டர் கூவ, "என்னது? பஸ் எடுக்க போறீங்களா? நான் இன்னும் சாப்பிட தொடங்கவே இல்லையே" என்றாள் அவிரா. "நீ தான் ஆர்டரே அரைமணி நேரம் குடுத்தியே. நீ நைட் தான் சாப்பிட்டு முடிப்ப. இங்கயே இரு. நாங்க அடுத்த ட்ரிப் வரப்போ கூட்டிட்டு போறோம்" என்க, "என்ன விட்டுட்டு பஸ்சை எடுத்துடுவீங்களா நீங்க" என சவுண்ட் விட்டாள் அவிரா.



"எடுத்தா என்ன பண்ணுவ?" என்று கண்டக்டர் அதட்ட, "என்ன பண்ணுவேன்னா? பசியில பச்சைப்பிள்ளை விடும் சாபம் பலிக்கும். என்னைய விட்டுட்டு போனா...நைட் தூங்குறப்போ சாமி கண்ணை குத்தும்" என்றாள் அவிரா.



"என்னது சாபமா? என்னமா பயம்புடுத்துற. நாங்க மீதி தூரம் போயி சேர வேணாம். சாப்பிட்டு வா. வெயிட் பண்ணி தொலைக்கறோம்" என்றார் கண்டக்டர்.



இவள் செய்வதெல்லாம் பார்த்து, வியப்பு தான் அவனுக்கு. எப்படி எல்லாரிடம் இப்படி இஷ்டத்துக்கு பேச முடிகிறது என்று.



அரைமணி நேரம் ரசித்து ருசித்து சாப்பிட்டு முடித்து விட்டு தான், ஏறினாள் பேருந்துக்குள். "இந்தா மா பொண்ணே...உன்னால ஆல்ரெடி லேட். நல்லா சாப்டுட்டு, நடுவுல கொமட்டுதுன்னு சொன்ன, "அதுக்கெல்லாம் வண்டிய நிறுத்த முடியாது" என்று டிரைவர் கராறாய் பேச, "ஹையோ டா. இவரு அப்டியே ஸ்பைஸ் ஜெட் பிலைட் ஓட்டுறாரு. எங்களுக்கு கொமட்ட போகுது. ஓட்டுறது ஒரு ஓட்டை பஸ். பேச்சை பாத்தியா" என்றாள் அவரிடமும்.



எப்பொழுதும் இப்படி பேசுபவள் இல்லை தான். இருந்தாலும், ஆரூரன் எண்ணவோட்டத்தை திசை திருப்ப, இப்பொழுது தேவைப்பட்டது.



இருவரும் முன்பு போல அவர்களிடத்திற்கே வந்து அமர, "இவ்ளோ நேரம் எப்படி பெரியமனுஷ தனமா எல்லாத்துக்கும் எஸ்பிளனேஷன் எல்லாம் குடுத்துட்டு. இப்போ என்ன சின்ன புள்ள தனம்" என்று ஆரூரன் கேட்க, "பசி வந்தா...நீ நீயா இருக்க மாட்ட" என்றாள் அவிரா.

"அது சரி" என்று சிரித்தவனிடம், "அது இருக்கட்டும். நான் இதெல்லாம் கேக்கலாமான்னு தெரியல. இருந்தாலும் கேக்கறேன். போன் செய்தது யாரு? ஏன் அதை பார்த்ததும் ஒரு மாதிரி ஆகிடுச்சு முகம்?" என்று கேட்க, மீண்டும் அவன் முகம் சுருங்கியது.



"சொல்ல இஷ்டம் இல்லனா வேணாம்" என்றாள் அவள்.



"எங்க அம்மா..." என்று அவன் கூற, "புரியல" என்றாள் அவள்.



"போன் செய்தது எங்க அம்மா..." என்றான் ஆரூரன்.




உங்கள் விமர்சனங்களை எதிர்நோக்கும்,
கமலி ஐயப்பா...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top