Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#1
ஆதிரா...!!

அந்த காந்தக் கண்ணியின் பெயர்..

சிவபாலன் பல்லாண்டுகளுக்கு முன்பே வேலை பார்க்க ஆஸ்திரேலியா சென்றார்.. படிப்படியாய் முன்னேறி சொந்தமாக வீடு வாங்கினார்.. அவர் ஈன்றெடுத்த தவப் புதல்வன் சங்கரநாராயணன்..

தனது ஊர் தெய்வத்தை மறக்காமல் கடவுளின் பெயரையே மகனுக்கு வைத்திருந்தார் சிவபாலன்.. சங்கரன்கோவில் காரர்..!!

சங்கர் படித்து முடித்ததும் சொந்தமாய் தொழில் தொடங்கினார்.. மெல்ல மெல்ல முன்னேறி இன்று ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் அங்காடிகள் நடத்தி வந்தார்..

செல்வமும் நிறையவே..!! ஆனால் குடும்பத்தின் தமிழ் பண்பாடு, பாரம்பரியத்தை கட்டிக்காத்தார் சிவபாலன்..

அவரது கண்டிப்பால் வீட்டில் தமிழ் தழைத்தோங்கியது..!! சங்கரன், தான் பெற்ற பிள்ளைகளுக்கு பெயரை மட்டுமல்ல பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் சொல்லி வளர்த்தார்..

பல குடும்பங்கள் இப்படித் தான் அன்னிய தேசத்தில் வாழ்ந்தாலும் தம் வேரை மறவாது இன்றும் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்..!!


சங்கரனின் மகன் ஐரோப்பாவில் கல்விக்காக சென்றிருக்க... ஆராய்ச்சி மாணவியான ஆதிராவிடம் ஆதவனை கவனிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது.. அதிலிருந்து அவனுக்கு சகலமுமாய் ஆனாள் அவனது அலுவல்களில்..!!

உற்ற தோழியானாள் மற்ற பொழுதுகளில் ..
அந்த உரிமையிலேயே.., அவன் தவிப்பதை கண்டவள் அவனை திசைதிருப்ப தன்னுடன் அழைத்துச் சென்றாள்..

...

தன்னுடைய அலைபேசியில் ஆதவனின் அழைப்பை பார்த்தும் அவனுக்கு அழைத்து பேச விழையவில்லை பவித்ரா.. காதல் கொண்ட மனதை கோபம் மறைக்க.. "இவன் பேச நினச்சா உடனே நான் பேசனுமாம்.. இவனுக்கு புடிக்கலன்னா பேசாம இருந்துப்பானாம்.. நான் என்ன இவன்கிட்ட பேச தவிச்சுப் போயா கிடக்குறேன்.." என மனதுள் முறுக்கிக் கொண்டாள்..

'அடேய் மகேஷ்பாபு மூஞ்சி.. ஊருப்பக்கம் வந்து தான ஆகனும்.. வாடா உன்னய கருவாடாக்கி காக்காவுக்கு போடுறேன்..' என மனதுள் கருவிக் கொண்டாள்..

ஒருவேளை அவனது அழைப்பை ஏற்று பேசியிருந்தாள் அவளுக்கு ஆதிராவை பற்றி சொல்லியிருப்பான்.. ஆனால், அங்கு தான் விதி தன் வேலையை அழகாக செய்தது..!!

ஒரு வழியாக அந்த குழந்தைக்கான சிகிச்சைகள் ஓரளவு நல்ல முறையில் சென்று கொண்டிருக்க.. விபத்து பாதிப்பில் இருந்து எல்லோருமே இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்..

ஆதவன் தொழிலுக்காக என சென்று ஒரு மாதத்திற்கு மேலாகவே இழுத்துவிட்டது..

அவன் பார்க்க வேண்டிய வேலைகள் ஒருபுறமென்றால், ஊர் சுற்றி காட்டுகிறேன் என அவனை ஆதிரா அலைக்கழித்ததும் அதிகமே..!!

போகுமிடமெல்லாம்.. பார்க்கும் பொருளிலெல்லாம் பவித்ராவிற்கு பொருத்தமானவற்றை தேடி அலைந்தது காதல் மனது.. ஒவ்வொரு இடத்திலும் இங்கு அவளுடன் வந்து அவள் கரம் கோர்த்து நடக்க வேண்டும், அவள் இடை சேர்த்து அணைக்க வேண்டும் என்றே எண்ணங்கள் ஏரோப்ளேன் ஏறியது..!!

கடல் கடந்து இருந்தாலும் காதலை கண்ணிமைக்குள் வைத்து சுற்றியவன்.. அவளது நிராகரிப்பில் கோபத்தின் பிடியில் சிக்கினான்.. ஆனாலும், ஊர் திரும்பும் நாளையும் ஆவலுடனே எதிர்பார்த்தான்.. அவனது லெஷ்மி வெடியை அருகில் சென்று ரசிக்கலாமே..!!


மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கியவனை வரவேற்க அதியவன்-ஆதிமூலம் ஆகியோரின் மொத்த குடும்பமும் கூடி இருக்க.. அவனது கண்களோ அவளைத் தேடி சுழன்றது...

ஆனால், அவனவள் அங்கு இல்லை...!! உற்சாகத்துடன் வந்து சேர்ந்தவன் அவளை காணாது வாடிப் போனான்.. அவனது முகம் பிரகாசம் தொலைத்து இருட்டில் விழுவதை பார்த்த அத்தனை பேருக்கும் மனம் சங்கடப்பட்டது...

ஆதிரா வெளிப்படையாகவே கேட்டாள்.. அவளுக்கும் பவித்ராவை போல உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியறியாதவள்....

"என்ன ஹேண்சம் உன் பட்டாச எங்க? ஆளயே காணோம்? நீ தான் உருகி உருகி காதலிக்கிற போல.. ஆனா, அவங்கள ஆள காணோமே.. மேன்?" என்றாள் குறும்பாக..

அவளுக்கு பதிலளிக்க முடியாது மேலும் இருண்டு போனான் ஆதவன்..

"அவ ஒரு முக்கியமான வேலையா போய்ருக்கா.. இங்க வரக்கூடாதுன்னு இல்ல.. ஆனா, அந்த வேலைய தவிர்க்க முடியல.." என சங்கடமாக பதிலளித்தான் பாலன்..

"அப்படி என்ன வேலையோ? பிரதமர் கூட ஏதாவது மீட்டீங்கா? இல்ல பொருளாதார கொள்கைய விவாதிக்க எகனாமிக் மினிஸ்டர பாக்க போய்ருக்காங்களா?" என்றாள் மீண்டும் இடக்காகவே..!!

"நம்ம ஆலைல வேலை பார்க்குற ஒருத்தங்களோட குழந்தைக்கு இன்னிக்கு கேன்சர் கட்டி ரிமூவ் செய்ய ஆபரேசன் செய்யறாங்க.. அந்த குழந்தையோட அம்மா விவரமில்லாதவங்க.. பாவம் தனியா வேற இருக்குறாங்க.. அதான் அவ கூட இருக்கா.." என்றான் உண்மையாகவே வருத்தக்குரலில்..

"ஹே சாரி.. நான் சும்மா கிண்டலுக்கு கேட்டேன்.. உங்கள ஹர்ட் செய்யனும்னு இல்ல.. பவித்ரா கண்டிப்பா முக்கியமான காரணமா தான் போய்ருப்பாங்கன்னு தெரியும்.." என்றாள் ஆதிரா..

அவளை எப்படி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை யாருக்கும்.. அதன் பின்பும் பேச்சை திசைதிருப்பி கலகலப்பாக பேசிக் கொண்டே ஊர் திரும்பினார்கள்..

ஆனால் அந்த கலகலப்பு கொஞ்சமும் அசைக்கவில்லை ஆதவனை... பாலன் சொன்ன காரணம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும் தன்னை அழைக்க அவள் வரவில்லை.. அவள் மனதில் தான் முதல் இடத்தில் இல்லை.. என்பதே மீண்டும் மீண்டுமாய் அவனது மூளையில் ஓட ... அமைதியாகி விட்டான் ஆதவன்.

பாலனும், ஆதிராவும் தான் சலசலத்துக் கொண்டு வந்தனர்.. பெரியவர்கள் சங்கடமான ஒரு அமைதியை தொடர விரும்பாமல் அவர்களுக்குள் சலசலக்க ஆரம்பிக்க.. எந்த பிரச்சினையும் இல்லாமல் வீடு வந்து சேர்ந்தனர்..

ஆதவன், கார் காம்பவுண்டுக்குள் நுழையும் போதே பார்த்துவிட்டான்.. பவித்ரா!! அவனை வரவேற்க வீட்டு வாயிலில் நின்றிருந்தாள்.. யாருமே அவளை எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களது உற்சாகத்தில் தெரிந்தது..

"டேய் அங்க பாரு டா ஆதி.. பவி நிக்கிறா.. பாவம் பிள்ள அரக்க பறக்க வந்திருக்கும் போல.. சோர்ந்து போய் நிக்கிறா.." என்றார் அகிலா...

"அட ஆமா.., வருவான்னு சொல்லவே இல்லயே.. ஆனா பாரு ஆதி மேல பாசமில்லாமலா இப்டி வந்து நிப்பா.." என சிரித்தார் அதியவன்..

"என் பிள்ள களைச்சு போயில்ல நிக்கிது.. அங்க என்ன ஆச்சோ என்னவோ?" என கவலைப்பட்டார் ஆதிமூலம்..

"அம்மா பரதேவத ..., பாத்துக்கோ இது தான் நீ கேட்ட பட்டாசு.. வட்டமேசை மாநாட்ட முடிச்சிட்டு வந்து நிக்கிது.." என்றான் பாலன்..

"ம்ம்ம் ஹேண்ட்சம் உன் ஆளு ஓரளவு ஓக்கே தான்.." என்றாள் ஆதிரா..

இத்தனை பேரின் உற்சாக கூச்சல்களுக்கிடையேயும் அவனது இறுகிய மவுனத்தை மனதில் எடுத்து கவலை கொண்டார்..யசோதா..!!

மகளை பெற்ற மனம் பரிதவித்தது.. "வேலுவ தொணைக்கு அனுப்பிட்டு நீ எங்க கூட வா பவி.. மாப்பிள்ள எத்தன நாள் கழிச்சு வர்றாரு.. கூப்ட நீ வரலன்னா தப்பா இருக்கும்.." என எவ்வளவு கெஞ்சினார்.??.

"அம்மா.. அவுக இங்கன தானே இருக்கப் போறாக.. மெல்ல பாத்துக்கலாம்.. ஆனா, பாவம் மாரியக்கா.. பிள்ளைக்கு ஆபரேசன்.. முருகேசனும் ஜெயில்ல கிடக்காரு.. சொந்தம் பந்தம்னு பெருசா யாருமில்ல.. அதும் அவ்வளவு பெரிய ஆஸ்பத்திரில திக்குதிச தெரியாம தவிச்சு போகும்.." என்றாளே..

"அதா வேலுவ அனுப்ப சொல்றனே.." என்றவருக்கே தெரிந்திருந்தது வேலுவாலும் அந்த பெரிய மருத்துவமனையில் தனியாக சமாளிக்க இயலாது என..

"அம்மா.. அவுகளுக்கு ஆதரவா இப்போ ஒரு தோள் வேணும்.. பாவம்மா.. இப்டி நட்டாத்துல விட்ட மாதிரி நான் பணம் கட்டிட்டேன் இனி நீயே பாத்துக்கன்னு எப்டி சொல்ல முடியும்? நான் அங்க போய் தான் ஆகனும்மா.. அத்த மாமா எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன்.. நீ இப்டியே பேசிக்கிட்டிருக்காம வழிய விடு.." என வெடுவெடுத்துவிட்டு கிளம்பிப் போனாள்..!

இப்படி அடங்காத மகளை பெற்றுவிட்டு அவஸ்தை படுகிறோமே என மீண்டும் மனதுள் நொந்துகொண்டார் யசோதா..

என்ன செய்யப்போகிறான் ஆதி?!!
 
Attachments

Sundaramuma

Well-Known Member
#9
பவித்ரா நியாயமா செய்ய வேண்டியதை செய்து இருக்கா ...அவளோட அம்மா அடுக்கு பெருமை தான் படனும் ....ஆதவனுக்கு புரியலைன்னா அவனோட காதலுக்கு அர்த்தம் இல்லை .....
நன்றி ராஜலக்ஷ்மி :love::love:
 
Sundaramuma

Well-Known Member
#10
கதை ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ராஜலக்ஷ்மி .....
கிராமிய பேச்சு வழக்கு , விவசாய தகவல்கள் , குடும்பம் ,காதல்
எல்லாம் எல்லாமே கொடுத்து இருக்கீங்க ...முக்கியமா போரடிக்காம போகுது கதை ..... மீதி கதை எப்போ வரும்???

எழுத்துப்பிழை இல்லாமலும் இலக்கணப்பிழை இல்லாமலும் இருக்கு ...அதுக்கே நிறைய பாராட்டணும் ...வார்த்தை கோர்ப்பு அருமை .... அடுத்து என்னன்னு படிக்க ஆவலா இருக்கேன் ...
நன்றி :love::love:
 
Advertisement

New Episodes