Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#1
கூடை நிறைய ஐஸ் கிரீம் வாங்கி வந்து அதை அனைவருக்கும் கொடுத்து சொன்னது போலவே அந்த வீட்டின் குட்டி வாண்டுகளை எல்லாம் தோழர்கள் ஆக்கிக் கொண்டான் ஆதவன்..

அவளிடம் ஒன்று சொல்லி.., அது விளையாட்டாகவே இருந்தாலும்.. அதை உறுதியாக பின்பற்ற வேண்டும்..!! என்று எண்ணினான்..

உற்றார் உறவினர் எல்லாம் வந்து சேரவும் திருவிழா களைகட்டியது..

மூன்று கோவில்கள் மூன்று நாட்கள் மூன்று உற்சவங்கள்... அனைத்து கோயில்களிலும் பொங்கல் வைத்து வழிபடுவார்கள் ஆதிமூலத்தின் விட்டார்..

பொங்கல் வைப்பது அந்தந்த வீட்டு மக்களின் வசதியை பொருத்தது.. அனைவரும் பொங்கல் வைக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.. சிலர் நேர்த்திக் கடனுக்காக, சிலர் நன்றியைத் தெரிவிப்பதற்காக, சிலர் நடக்கப் போகும் நல்ல காரியங்கள் சுபமாக முடிய வேண்டும்.. என்று, வேண்டுதலுக்காக என்று மக்கள் பொங்கல் வைக்கும் காரணங்களும் காரியங்களும் ஆளாளுக்கு வேறுபடும்..

ஒரு சிலர் வருடா வருடம் பொங்கல் வைப்பதை தங்கள் கடமையாக செய்வார்கள்.. அப்படி ஆதிமூலத்தின் குடும்பம் 3 பொங்கல்களையும் விடாது வைத்துக் கொண்டு வந்தார்கள்...

வீட்டினுடைய இளம் பெண் என்பதால் மாவிளக்கு எடுத்து போவது, பொங்கல் பானையை எடுத்துக் கொண்டு செல்வது என்று முக்கியமான சடங்குகள் எல்லாம் பவித்ரா தான் செய்ய வேண்டியது இருந்தது...

கிராமங்களில் திருவிழாக்களில் இதுவும் ஓர் அழகான விஷயம் தான்.. ஊர் அழைக்க வீடு வீடாக கெட்டி மேளம் கொண்டு வருவார்கள் விழா கமிட்டியார்.... பொங்கல் வைக்கும் வீடுகளிலிருந்து கெட்டி மேளத்துடன் இணைந்து கொள்வார்கள் மக்கள்.. அப்படியே ஊர்வலமாக சென்று ஊரில் அனைத்து வீடுகளுக்கும் அழைப்பு விடுத்து அனைவரையும் ஒன்றுபோல் அழைத்துக் கொண்டு கோவில் வந்து சேர்வார்கள்... அங்கு ஏற்கனவே அவர்கள் வீட்டு ஆண்மக்கள் அடுப்பிற்கு தேவையான விறகுகள், கற்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து தங்கள் குடும்பத்திற்கு ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பார்கள்...

ஒன்று போல் அனைவரும் அடுப்பு தயார் செய்து பானை வைத்து ஊரோடு மொத்தமாய் பொங்கல் வைக்கும் அழகே அழகுதான்... இதையெல்லாம் முதன் முதலில் பார்க்கும் அதியவன் குடும்பத்தார் மிக ஆர்வமாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்கள்.... மாவிளக்கு எடுப்பது, பொங்கல் வைப்பது, முளைப்பாரி, விளக்கு பூஜை என ஒரு நாளில் நடக்கும் ஒவ்வொரு பூஜைக்கும் ஒவ்வொரு விதமாய் அழகாக உடை அணிந்து காண்போரை எல்லாம் சொக்கிப் போக வைத்துக் கொண்டிருந்தாள் பவித்ரா....

அவள் என்றில்லை... ஊரில் இருக்கும் இளம் பெண்கள் எல்லாம் திருவிழா என்று வந்து விட்டால் ஒரே நாளில் தேவதைகளாக மாறி விடுவார்கள்! அந்த மூன்று நாட்கள் தானே அந்த ஊருக்கு மிகவும் விசேஷமான கொண்டாட்டமான நாள்கள்...

அதை சிறப்பாக கொண்டாடா விட்டால் எப்படி? எனவே கட்டறுந்த கன்றுகளாய், காட்டாற்று வெள்ளமாய், மகிழ்ச்சி கரை புரள சுற்றித் திரிவார்கள்...இளவட்டங்கள்!

முதல் நாள் ஒரு ஆகாய வண்ண அனார்கலியில் உள்ளம் திருடியவள், அடுத்த நாள் பச்சை பட்டு தாவணியில் கண் பறித்தாள்...

மூன்றாம் நாள் அதிகாலையிலேயே பொங்கல் வைத்து பின் கிடாவெட்டு கறிவிருந்து நடக்குமாதலால்.. சூரியன் உதிக்கும் முன்னே செம்பவளச்சேலையில் சூரியனுக்கே போட்டிபோல ஜொலித்துக் கொண்டிருந்தாள்... அதிகாலையிலேயே எழுந்த அலுப்பில் மொட்டை மாடியில் ப்ராணவாயு பெறப் போனவன்... அங்கே தலை உணர்த்திக் கொண்டிருந்தவளின் ஜொலிப்பில் தன் ப்ராணனை தொலைத்தான்...

எப்போது எந்த கணம் அவளை விரும்ப ஆரம்பித்தான் என தெரியவில்லை.. ஆனால் இந்த கணம் அதை முழுதாய் உயிரின் ஊற்றாய் உணர்ந்தான்...

தன் வாழ்வும் காதலும் இல்லறமும் இன்பமும் அவளின்றி வேறில்லை என ஐயம் திரிபட புரிந்து போன நிமிடத்தில் அப்படியே உறைந்து நின்றிருந்தான்..

வழக்கம் போல அவளை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்க.. அவளோ.. அவனை கடந்து போய்விட்டிருந்தாள்..

இப்படி மூன்று நாட்களும் மூன்று நிமிடங்களாய் சடுதியில் மறைய.. மூன்றாம் நாள் மாலை மஞ்சள் நீராட்டு விழா நடந்து கொண்டிருந்தது...

பவித்ராவும் அவளுடைய சித்தப்பா பெரியப்பா பிள்ளைகளும் இணைந்து மாமன் பிள்ளைகள் மீது மஞ்சள் நீர் தெளித்து இரு குழுவினரும் மகிழ்ச்சியோடு விளையாண்டு கொண்டு இருந்தார்கள்...

ஆதவனுக்கு தான் மஞ்சள் தண்ணீரை ஊற்ற முறைப்பெண் இல்லையே... காதலிப்பவள் மேல் ஊற்றி விளையாடலாம் என்றால்... அவள் முறைப்பாளே? எனவே அவன் கேஷுவலாக ஒரு பிஸ்தா பச்சை வண்ண சட்டை அணிந்து கொண்டு அமர்ந்திருந்தான்... மஞ்சள் நீராட்டு விளையாடிக் கொண்டிருந்த பவித்ரா ஓரக் கண்ணால் அவனையும் அவன் சட்டையையும் பார்த்துக் கொண்டே இருந்தாள்...

சிறிது அமர்ந்து விட்டு தனது அறைக்கு சென்ற அவனை பூனைபோல பின் தொடர்ந்தாள் பவித்ரா... அவன் அறைக்குள் செல்வதற்கு ஒரு நொடி முன்பு ஆதி..!! என அழைத்தவள் அவன் திரும்பியவுடன் அவன் மீது மஞ்சள் நீரை ஊற்றி விட்டு இரு கன்னங்களிலும் மஞ்சளை அப்பி விட்டு ஓடிவிட்டாள்...

அனைவரும் மஞ்சள் நீராட்டு விழாவில் நீரில் மூழ்கி பைத்தியங்கள் போல் சுற்றிக் கொண்டிருக்க.. இவன் மட்டும் அழகாய் அணிந்து அமர்ந்திருந்தது அவளுக்கு பிடிக்கவில்லை.. அதனாலேயே அவன் மீது மஞ்சள் நீரை ஊற்றினாள் ஆனால் முறை மக்கள் மீது மட்டும் தான் மஞ்சள் நீர் ஊற்ற வேண்டும் என்பதை மறந்து தான் போயிருந்தாள்..
விளையாட்டு எல்லாம் முடிந்து அனைவரும் சென்று உடை மாற்றி வந்து சிற்றுண்டி உண்ணும் வேளையில் தான் தான் செய்த தவறு உரைத்தது பவித்ராவிற்கு..

அப்போது உணர்ந்து என்ன செய்ய?? அது தான் மஞ்சள் நீரை ஊற்றி விட்டாளே!! அவள் மஞ்சள் நீரை ஊற்றியதை யசோதாவும், அகிலாவும் பார்த்துவிட்டார்கள்!! ஏற்கனவே அவளை பார்க்கும் முன்பே பிடித்துப் போயிருந்த அகிலாவிற்கு அவளை பார்க்க பார்க்க இன்னும் இன்னும் பிடித்தது... தன் கணவன் நினைத்த படி இந்த சுட்டிப்பெண் தங்கள் வீட்டிற்கு மருமகளாக வந்தால் வாழ்வில் வசந்தம் வீசும் என்று அவர் நம்பினார்..

திருவிழாவிற்கு என்று வந்த மறுநாளே யசோதாவிடம் தங்களது எண்ணத்தை கூறியிருந்தார் அகிலா..

ஆதிமூலத்துடன் கலந்து பேசிய யசோதாவுக்கும் .. ஆதவனுக்கு தங்கள் மகளை கட்டிக் கொடுக்க சம்மதமாகவே இருந்தது.. ஆனால் அந்த ராங்கிகாரி ஒத்துக்கொள்வாளோ? மாட்டாளோ? என்று... அவர்களுக்கு ஏதும் வாக்கு கொடுக்காமல் அமைதியாக இருந்தார்..

இன்று அவள் தன் கையால் அவனுக்கு மஞ்சள் பூசி விடவும் இருவரும் விரும்புவதாகவே நினைத்துக் கொண்டனர் பெற்றோர்கள்.. திருவிழா எல்லாம் முடிந்து மறுநாள் உறவினர்கள் முன்னிலையில் திருமண பேச்சை எடுத்தார் அதியவன்.. அனைவருக்கும் சம்மதமாகவே இருக்க.. சம்மதம் சொல்ல வேண்டிய அவள் முகத்தில் மட்டும் எள்ளும் கொள்ளும் வெடிக்க முகத்தைத் திருப்பிக் கொண்டு தனது அறைக்கு சென்று விட்டாள்..

அவள் மனதில் இருந்தது யாருக்கு புரிந்ததோ.. இல்லையோ? அவளது கண்ணாளனுக்கு நிச்சயம் புரிந்து தான் இருந்தது.. அவள் மனதை மாற்றுவானா? மனமுடிக்க சம்மதிப்பாளா மங்கையவள்??

உன்னை விரும்பவே
விளைகிறதென் மனம்..
விட்டு விலகிவிட
துடிக்கிறதென் அறிவு
காதலில் கரைந்துவிட
காத்திருக்கிறது நெஞ்சம்
கடுகளவும் இடம்தர
மறுக்கிறது மூளை
மனமும் அறிவும்
ஒரு புள்ளியில்
நிற்பதெப்போது?
உன் நெஞ்சுச் சூட்டில்
நான் வசிப்பதெப்போது?

அவளுக்கும் அவனைப் பிடித்து தான் இருந்தது.. கொஞ்சம் அல்ல நிறையவே பிடித்திருந்தது.. ஆனால் அவர்கள் செய்யும் தொழில் அவளுக்கு பிடிக்கவில்லையே... பட்டாசாலை.. அதை நினைத்தாலே கொஞ்சம் கடுப்பேற்றியது என்றால்., அதையே தொழிலாக செய்பவனை திருமணம் செய்வது என்பது மேலும் கடுப்பேற்றியது...

மேலும் இப்போது தான் படிப்பை முடித்திருக்கிறாள்.. ஒரு இரண்டு ஆண்டுகளாவது கொஞ்சம் ஜாலியாக சுதந்திரமாக விட்டு வைப்பார்கள் என்று நினைத்திருந்தால் அதற்குள் திருமணம் என்ற கூட்டுக்குள் அடைக்க பார்க்கிறார்களே... என்று அதுவும் கோபமாக வந்தது..

காதல் கொண்ட மனம் அவனை விட்டு விடவும் தயாராக இல்லை.. சுதந்திரம் விரும்பிய அறிவு திருமணத்தை அனுமதிக்கவும் தயாராக இல்லை..

என்ன மாதிரியான முடிவெடுப்பது என்பது அவளுக்கே விளங்காத போது இது வேண்டாம் என்றோ.. வேண்டும் என்றோ தன் தந்தையிடம் தைரியமாக எதையும் சொல்லவும் அவளுக்கு மனம் இல்லை..

இப்படி ஒரு குழப்பமான மன நிலையிலேயே ஒரு வாரம் கழிந்தது... அவள் கண்ணெதிரே தான் பேசினார்கள்.. அவள் மறுப்பேதும் சொல்லவில்லை என்பதால் திருமணப் பேச்சு பேசியதோடு பெரியவர்கள் நிம்மதியாய் இருந்தார்கள்...

கொஞ்சமாவது யோசிக்க விடுவோம் என்று அவளை அவள் போக்கிலேயே விட்டு விட்டார்கள். அனைவரும்..

பத்து தினங்கள் கழித்து வீட்டிற்கு வந்தான் ஆதவன்... " மாமா நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா பவித்ராவை நான் கொஞ்சம் வெளியே கூட்டிடு போகட்டா? சாயங்காலம் கொண்டு வந்து விட்டுவேன்" என்றான்.

காலை 8 மணிக்கே வந்து இப்படி கேட்டவனிடம் மறுப்பதற்கு காரணம் ஏதுமில்லை என்றாலும்... இன்னும் குப்புற படுத்து தூங்கும் மகளை கிளம்ப வேண்டுமே...
" நீங்க இருங்க மாப்ளே.. நம்ம மாந்தோப்புல மாம்பழ சீசன் இப்போ.. பாலா, தம்பிய கூட்டுட்டு மாந்தோப்புக்கு போ... அந்நேரமே மாம்பழம் பரிச்சி சாப்பிட்டால் நல்லாருக்கும் மாப்ள... மரத்திலேயே பழுத்ததுக்கு ருசி அதிகம்" என்று அவனை அனுப்பி வைத்த ஆதிமூலம்... கையோடு பவித்ராவின் அறைக்குச் சென்று அவளை கெஞ்சி கொஞ்சி, உருட்டி மிரட்டி, எழுப்பி கிளம்ப செய்தார்..

ஒரு வழியாக கிளம்பி ரெடியாக இருந்தவளை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார் ஆதவனுடன்..

முறைப்பும் விரைப்புமாய்
அமர்ந்திருக்கும்
அஞ்சன கண்ணழகி..!!
மயூர கழுத்தழகி..
உன் காதல் பார்வைக்காய்
தவமிருக்கும்
மதுரக் காதலன் நான்..!!
சுட்டெரிக்கும் முறைப்பை விட்டு
குளிர்ந்த வெண்பனித் துளியாய்
தோள் சாயடி..
தகிக்கும் நெஞ்சத்துடன்
காத்திருக்கிறேன்!!
 
Attachments

Advertisement

New Episodes