Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#1
"உங்க மனசுல என்ன தான் நினைச்சிகிட்டு இருக்கீங்க? ஒரு பொம்பள புள்ள இருக்க வீடுனு எண்ணம் இருக்கா இல்லையா உங்களுக்கு?.. சும்மாவே வீட்டுக்குள் அங்கிட்டும் இங்கிட்டும் எந்நேரமும் காட்டு வேலை பார்க்குறோம், வீட்டு வேலை பார்க்குறோம், மாடு மேய்கிறோம், ஆடு மேய்கிறோம்னு ஆயிரம் பேர் திரியுறாங்க....

இதுல யாருன்னே தெரியாத ஆளுகளை கொண்டு வந்து விருந்தாளிகளா வீட்டில வைக்கப் போறீங்களா??...

இது என்னம்மா அநியாயமா இருக்கு...!!
எனக்கு இந்த வீட்டில கொஞ்சம் கூட பிரைவசியே இல்லை!!" என்று தன் தாயாரிடம் குதித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா ...

எப்போதுமே இப்படித் தான்.. அவளுக்கு கீழே உள்ள ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடவும், சாய்வு நாற்காலியில் குதித்துக் கொண்டே நாவல் படிக்கவும் தானாக சுற்றி சுற்றி வரவும் ஒரு சுதந்திரம் இல்லாது தான் இருந்தது.... அந்த வீட்டில் குறுக்கும் நெடுக்குமாய் என்நேரமும் ஆட்கள் திரியும் போது அவளுக்கு எப்படி சுதந்திரம் இருக்கும்?? அதனாலேயே வெளியில் சுற்றுவது பிடித்திருந்தது.. பவித்ராவிற்கு !!

அப்படி இருக்கும் போது உறவினர்கள் என்றால் கூட பரவாயில்லை... ஒரு மாதத்திற்கு முன் தான் நட்பான ஒரு குடும்பத்தையே திருவிழாவிற்கு அழைத்து வீட்டில் தங்க வைக்கப் போகிறோம் என்றால் கடுகடுவென்று இருந்தது... அதுவும் அந்த பட்டாசு ஆலை உரிமையாளர்களை அழைத்திருந்தார்கள் எனவும் மிகவும் கடுப்பாகி விட்டது..

"ஐயோ அவன் வருவான்... சும்மாவே ஒரு டைப்பா சிரிப்பான்... இந்த மைதா மாவு மூஞ்சிய வேற வீட்டில வைத்து கொண்டு நான் எப்படி இருப்பேன்...!!" என்ற அவளது உள்ளக்குமுறல் தன் தாயிடம் வெடித்து சிதறியது..

இவ்வாறாக அவள் கத்திக் கொண்டிருக்க.. அவர் பாட்டுக்கு தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா இங்க ஒருத்தி புலம்பிகிட்டிருக்கேன்.. நீ கண்டுக்குறியா என்னய..?" என்று அதற்கும் சேர்த்து எகிறினாள் தன் தாயிடம்....

"எல்லாம் கேக்குது கேக்குது... நான் கூட உனக்கு பொம்பளைப் பிள்ளைங்கற எண்ணம் சுத்தமா இல்லனுல்ல நெனச்சிகிட்டு இருக்கேன்... அந்த நினைப்பும் மனசுல இருக்கத்தான் செய்தா?? ரொம்ப சந்தோஷம்மா
. இந்த நினைப்பை எப்பவும் மனசுல வச்சுக்கிட்டு அடக்க ஒடுக்கமாக பொம்பள புள்ள மாதிரி நடந்துக்கோ.." என்றார் யசோதா..

" அது என்ன? எனக்கும் ரெண்டு கையும் ரெண்டு காலும் ஒரு வாய் தான இருக்கு? அடக்கமா நடந்துகிட பெண்ணா இல்ல பிள்ளைப் பூச்சியா..?? உன் இஷ்டத்துக்கு எல்லாம் நான் ஆட முடியாது" என்றாள்

" அதே மாதிரி தான்டி... உன் இஷ்டத்துக்கு எல்லாம் எங்களால ஆட முடியாது.. ஓ ஒருத்திக்காக சொந்த பந்தம் அறிஞ்சவர் தெரிஞ்சவங்க யாரையும் வீட்டுக்குள்ள விடாமல் இருக்க முடியுமா? அவங்கள வரச் சொல்லியாச்சு அவ்வளவு தான்... இதுக்கு மேல எதுனா பேசணும்னா உங்க அப்பாட்ட போய் பேசிக்கோ" என்று விரட்டினார் யசோதா

" எப்போதும் அன்பே உருவான ஆதிமூலம்... அவகளுக்கு அது செய்யக்கூடாது.., இவங்களுக்கு இது செய்யக்கூடாது.., வீட்டுக்கு வருபவர்களை வரக்கூடாது" என்பது போல் ஏதாவது சொன்னால்.. ருத்ர மூர்த்தியாக மாறிவிடுவார்..!!

எனவே அமைதியாக தன் அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டாள். தான் என்ன நினைக்கிறோம்? என்ன யோசிக்கிறோம்? என்றே அவளுக்கு புரியவில்லை.. அவனை பிடித்திருக்கிறதா? பிடிக்கவில்லையா? என்று கூட தெரியவில்லை...

ஆனால் அவன் வந்தால் தனக்கு ஏன் ஒரு மாதிரியாக படபடப்பாக வரவேண்டும்..? இதே வீட்டில் பாலன் இல்லையா? அதே போல அவனும் வந்து இருந்து கொள்கிறான்..' என யோசிக்க நினைத்தால் அந்த நினைப்பே கசந்தது... பாலனுடன் எப்படி அவனை ஒப்பிட முடியும்? என்றது மனது... அண்ணன் ஸ்தானத்தில் அவனை வைக்க முடியுமா? என கேட்டது..
'அப்போ அவன் யார் உனக்கு?' என தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.. அந்த கேள்விக்கான விடைதான் கிடைக்கவில்லை.. அவளுக்கு!!

திருவிழாவிற்கு முதல் நாளே குடும்பத்துடன் வந்து இறங்கி விட்டார் அதியவன்.. பவித்ரா ஆதிமூலத்தின் மகள்தான் என ஆதவனுக்கு தெரியாததால் அவனுக்கு அது பற்றிய எண்ணம் இருக்கவில்லை... அந்த ஊருக்குச் சென்றால் திருவிழாவின் போது பவித்ராவை பார்க்கலாம் என்று எண்ணினானே தவிர அவள் வீட்டிலேயே தங்கப் போகிறோம் என்று அவனுக்கு தெரியவில்லை...

எனினும் அன்பாக பேசி அரவணைத்துக் கொள்ளும் ஆதிமூலம், யசோதா மற்றும் பாலன் இருக்கும் வீட்டிற்கு செல்வது அவனுக்கும் மகிழ்ச்சி தான்... இப்படி விசேஷங்களுக்கும், திருவிழாவிற்கும் உறவினர்கள் வீட்டிற்கு சென்று பழக்கம் இல்லை அவனுக்கு ... எனவே இதுவும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று மட்டும் தான் எண்ணினான்.. குடும்பத்துடன் உறவினர் என்று ஒருவர் வீட்டில் போய் தங்குவது இது தான் முதல் முறை என்பதால் மிகவும் குதூகலமாகவே ஒருவித எதிர்பார்ப்புடன் முதல் நாளே வந்து சேர்ந்துவிட்டார்கள் ஆதிமூலத்தின் வீட்டிற்கு...

இவர்களுக்கான வரவேற்பும் தடபுடலாய் தான் இருந்தது.. பவித்ரா தான் தனது அறையை விட்டு வெளியே வரவே இல்லை.. ஆதிமூலத்திற்கு கோபம் கூட வந்தது... 'வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து இருக்கப்ப வந்து வாங்கனு ஒரு வார்த்தை கூப்ட வேண்டாமா? இப்படியா உள்ளேயே முடங்கி கிடப்பாள்..?' என எண்ணிக் கொண்டவர்.. அவளது அறைக்குச் சென்றார்...

"குட்டிமா என்னடா நீ.. வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் வந்து வாங்கன்னு கூப்பிட வேண்டாம்? இது என்ன மரியாதை இல்லாம நடக்கிறது..? அப்பாக்கு கொஞ்சம் கூட பிடிக்கல பாப்பா" என்றார்

"அப்பா.., முன்ன பின்ன தெரியாதவங்க முன்னாடி சட்டுன்னு வந்து நிக்க எப்படியோ இருக்கு.. கொஞ்சம் இருங்க கிளம்பிட்டு வரேன்" என்றாள்..

பின்னே விடுமுறை என்றால் பட்ட பகல் 12 மணி வரை கட்டிலைவிட்டு அசையாது படுத்திருக்கும் ஆள் அல்லவா நாம்?!!

அதிகாலை 7 மணிக்கே விருந்து கொண்டாட வந்தவர்களை வரவேற்க வேண்டுமென்றால் எவ்வாறு இயலும்? எனினும் அன்று பட்டாசு ஆலையில் தன்னிடம் கனிவாக நடந்து கொண்ட அதியவனை நினைத்துப் பார்த்தாள்..

'அவரும் நம்ம அப்பா மாதிரி தானே?? எவ்வளவு கனிவா பேசினார்.. அன்பாய் என்ன வேணும்னு கேட்டாரே' என்று அவருக்காக கொஞ்சம் மனமிறங்கியவள் தயாராகிக் கீழே சென்றாள்...

அவள் சென்ற நேரம்... மற்ற உறவினர்களும் அத்தை மாமா அவர்களது பிள்ளைகள் என கூட்டமாக வந்து இறங்கவும்.. தனித்து இவர்கள் முன் சென்று நிற்கும் நிலை ஏற்படாது போயிற்று..

பொதுவாக அனைவரையும் வாங்க என்று வரவேற்று தன் தாய் தயாரித்து வைத்திருந்த பழச்சாறு எடுத்து சென்று கொடுத்தாள்..

பவித்ராவை அங்கு எதிர்பார்க்காத ஆதவனின் நிலைதான் திண்டாட்டமாக போயிற்று..!! இவளை பார்ப்பதற்கு என்றே இந்த ஊர் திருவிழாவிற்கு வர வேண்டும்.. என்று நினைத்தவனுக்கு அவளது வீட்டிலேயே தங்கி 24 மணி நேரமும் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம் என்ற நினைப்பே தித்திப்பாக இருந்தது...

அவளும் உறவு கூட்டத்தில் இவனைத் தேடிக் கண்டு பிடித்தாள் தான்... ஆயினும் அவனை கண்டு கொள்ளாது தன் வயது உறவினர்களிடம் வளவளக்க ஆரம்பித்துவிட்டாள்...

பாலனும் வந்த விருந்தினர்களை உபசரித்து விட்டு தன் வயது உறவு தோழர்களை அழைத்துக் கொண்டு தோப்பு பக்கம் சென்றுவிட்டான்.. பெரியவர்கள் எல்லாம் ஓரிடத்தில் அமர்ந்து.. அனைவரும் குசலம் விசாரித்து, அவர்களும் ஒருவருக்கு ஒருவர் ஐக்கியமாகி விட்டனர்.. பேசுவதற்கு பஞ்சமா அவர்களுக்கு!! காடுகரை, நிலம் நீச்சு, பட்டாசு ஆலை, அது தொடர்பான பிரச்சினைகள் என ஆயிரம் இருந்தது அவர்களுக்கு...

யாரிடமும் சட்டென உரையாடாத.. இதுபோல் கூட்டத்தில் இருந்து பழக்கமில்லாத ஆதவன் தான் அம்போ என்று தனியாக அமர்ந்திருந்தான்..

கண்கள் அது பாட்டுக்கு அது வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தாலும்... தனியாய் அமர்ந்திருப்பது ஏதோ தனித்து விட்டதைப் போன்ற ஒரு உணர்வை தரத்தான் செய்தது..

சிறிது சென்று அவனைப் பார்த்தவள் அவனின் நிலையை ஓரளவு ஊகித்துக் கொண்டாள்.. தன் நட்பு வட்டத்துடன் அவன் இருக்கும் இடத்திற்கு வந்தவள் அவர்களை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்து அவனையும் அவர்களது சங்கத்தில் இணைத்துக்கொண்டாள்..

தனக்காக அவள் செய்யும் முயற்சிகளை கண்டு மனதிற்குள் இதமாய் இருந்தது... ஆனாலும் இது அவன் மீதான காதலில் அவள் செய்யவில்லை.. ஒரு இரக்கத்தினால் எவராக இருந்தாலும் செய்திருப்பாள் தான்...!! என்றே தோன்றியது ஆதவனுக்கு..

சிறிது தனிமை கிடைக்கும் போது அவளும் அதையே தான் சொன்னாள், அவனிடம்..

"உங்க வயசு தானே ஏறக்குறைய எல்லாருக்கும்.. இத்தனை பேர் இருக்கும் போது ஏன் தனியாக உக்காந்திருக்கீங்க? சும்மா எல்லாரு கூடயும் பேசுங்க.. இன்னைக்கு சாயந்தரம் சித்தி அவங்க குழந்தைகளும் வந்துருவாங்க.. அவங்கள்ளாம் சின்ன பசங்க தான்.. சின்னப் பசங்களோட பழகுறது ரொம்ப ஈசியான ஒரு வேலை.. அதுக்கெல்லாம் உங்களுக்கு சிபாரிசுக்கு நான் வரமாட்டேன்.. சின்ன பசங்களை எப்படியாவது காக்கா பிடிச்சிட்டீங்கன்னா மூன்று நாள் தன்னால ஓடிடும்.. இப்படி தெரியாத இடத்தில் வந்து மாட்டிக்கிட்டு நீங்களும் முழிக்க வேண்டாம்... வந்த விருந்தாளியை சரியா கவனிக்கலைன்னு நாங்களும் கவலைப் பட வேண்டாம்.." என்றாள்

"சரிங்க மகாராணி... உத்தரவு !! நீங்க சொன்னபடியே குழந்தைகளோட ஐக்கியமாகிடுறேன்... தங்கள் விருப்பம் என் பாக்கியம்" என்றான் ஆதவன்

"மத்தவங்க கிட்ட பேசுறதுக்கு வாயே வரமாட்டேங்குது.. என்கிட்ட மட்டும் வஞ்சனை இல்லாம நல்லா வக்கனையா வருது " என்று உதட்டை சுளித்துக் கொண்டு சென்றாள் பவித்ரா

அந்த உதட்டுச் சுழிப்பில் அவன் இதயம் சுளுக்கிக் கொண்டது

எந்னுயிர் உருக்கி
உள்ளம் நெருங்கி
உதட்டுச் சுழிப்பில்
என் இதயம் சுருட்டி
போறவளே.. !!
என் ஆண்மை
தவிக்கும்
அவஸ்தை
அறிவாயா?
என் நெஞ்சம்
துடிக்கும்
காதல்
உணர்வாயா?
உன் மனமொத்து
கரம் சேர்வாயா?
இதயம்
இசைபாட
தோள் சேர்வாயா?
 
Attachments

Advertisement

New Episodes