நேசம் மறவா நெஞ்சம் -24Nesam Marava Nenjam

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்-24

சுதா உள்ளுரிலே இருப்பதால் அன்று இரவே அவளும் வீட்டிற்கு கிளம்பியிருந்தாள்..... காந்திமதி தன் மகனிடமும் மருமகளிடமும்..அன்று இரவே.. கோயிலில் குறி சொல்லியதிலிருந்து சுதா திருமணம் வரை சொல்லியிருந்தார்.... மாணிக்கம் அப்படியே இடிந்து போனார்.....“இங்க பாரு மாணிக்கம் நீ இப்புடி மனசு உடஞ்சு போயிருவன்னு தான் உன்கிட்ட நான் சொல்லவேயில்ல... ஆனா இப்ப என்னவோ எனக்கு நடக்குறது சரின்னு படலப்பா.... ஏதோ தப்புன்னு என்னோட மனசுக்கு படுது..... சுதாவும் என்னோட பேத்திதான் அதுக்காக அவ செஞ்சது சரின்னு நான் சொல்லமாட்டேன்..... இவளால நம்ம மத்த பொண்ணுகளோட வாழ்க்கையும் வீணா போக பாத்துச்சு .....நம்ம கயல மட்டும் அவுக கட்டலைனா இன்னைக்கு பஞ்சாயத்து வரைக்கும் போய் எல்லா பொண்ணு வாழ்க்கையும் கெட்டு குட்டிச்சுவரா போயிருக்கும்....கயல கட்டி வச்சுட்டு எம்மனசுக்குள்ள வதையா வதைச்சுருச்சுப்பா.... அதான் மனசு கேக்காம அவுக வீட்ல ரெண்டு நாளு போய் தங்குனேன்.... பரவால்லப்பா.... அந்த பையன் நம்ம கயல தாய் மாதிரி அன்பு காட்டுறதுலயும் தகப்பன் மாதிரி கண்டிப்பு காட்டிட்டு அப்புறம் அரவணைச்சு அனுசரிச்சும் போறாரு.....அதுக ரெண்டும் நூறு வருசம் பிள்ளகுட்டிகளோட நல்லாயிருக்கனும்பா.....ஆனா இன்னைக்கு ஏன் இத உன்கிட்ட சொல்றேன்னா.... உனக்கு இன்னும் ரெண்டு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்... இந்த சுதா உள்ளுர்ல கல்யாணம் பண்ணியிருக்கா... இவ நடந்துக்குறத வச்சு நம்ம மத்த பொண்ணுகள எடை போட்ற கூடாதுல...நம்ம வீட்ல பொண்ணு எடுக்குறவுங்க அக்கம் பக்கம் விசாரிக்காம இருக்கமாட்டாங்க.....என்னடா ….. ஆத்தா.... இவ்வளவு பெரிய காரியம் பண்ணியிருக்கு நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லைன்னு நீ நினைக்கக் கூடாது.... எல்லாம் உன்னோட உடம்பு சூழ்நிலையை மனசுக்குள்ள வச்சுதாம்பா சொல்லல.... ஆனா போற போக்கப் பாத்தா .உன்னோட பொண்ணு புகுந்த வீட்லயும் நல்லபேரு எடுக்கமாட்டான்னு நினைக்கிறேன்... புகுந்தவீட்ல இருக்கவுகள அனுசரிச்சு போகனும்னு கூட தெரியாம அவ இஷ்டத்துக்கு நடந்துக்கிறதா கேள்விப்பட்டேன்.... நாங்க புத்தி சொன்னா கேப்பான்னு எங்களுக்கு நம்பிக்கையில்லப்பா...........”

“ஆத்தா சகுந்தலா என்னடா அயித்த இப்புடி பேசுதுன்னு நினைக்காத.... நான் என்ன சொன்னாலும் எம் பேரன் பேத்திகளோட நல்லதுக்குதாத்தா இருக்கும்......”“என்னத்தே .... இப்புடி சொல்லிப்புட்டிக....நான் வாக்கப்பட்டு வந்த நாள்ளயிருந்து உங்கள எங்க அம்மாமாதிரிதானே நினைக்கிறேன்.... உங்களுக்கு உங்க பேரன் பேத்திகளுகிட்ட இல்லாத உரிமையா..... நீங்க எப்புடி எம்புள்ளைகள வளத்திகன்னு நான் பாத்துகிட்டுதானேத்தே இருந்தேன்.... உங்கள ஏதாச்சும் சொன்னா.... அந்த பாவத்த நான் போய் எங்கத்த தொலைப்பேன்....” என்றபடி அழ ஆரம்பிக்க.....“ஆத்தா விடு.... எனக்கென்ன மகளா இருக்கு.... உன்னையதானே.... எம்மகளா நினைச்சிருக்கேன்.... எனக்கென்ன இந்த விசயத்தை இப்ப உங்க கிட்ட சொல்லனும்னு தோனுச்சு..... சொல்லிட்டேன்..... மேக்கொண்டு என்ன செய்யனும்னு பாத்து செய்ங்க......”..என்றபடி அவர் உள்ளே செல்ல...........சகுந்தலா.... தன் கணவரின் காலடியில் அமர்ந்தவர்......” அத்த சொன்னது உண்மைதாங்க....சுதா புருசன்வீட்ல ஒழுங்கா சொல்றத கேட்டு நடக்கலைன்னு நானும் கேள்விப்பட்டேங்க.......இத எப்புடி உங்ககிட்ட சொல்றதுன்னுதான் யோசிச்சுகிட்டு இருந்தேன்..... இப்ப என்னங்க பண்ணுறது......நாம நம்ம பொண்ண நல்லா வளக்காம விட்டுட்டோமோ...... “மாணிக்கம்.... அவர் உச்சந்தலையில் கைவைத்து வருடிக்கொடுத்தவர்....

“ நீ கவலை படாதம்மா நான் என்ன செய்யலாம்னு பாக்குறேன்....”மாணிக்கம் பக்கா கிரமத்துக்காரர்.... தான் ஒற்றையாளாக வளர்ந்தவர்.... சித்தப்பா மகன்கள்மகள்கள் இருந்தாலும் அந்த அளவுக்கு ஒட்டுதல் இல்லை.... திருவிழா.... தேதிகளில் பார்ப்பதுதான்...... தனக்கு அடுத்தடுத்து ஐந்து பெண் குழந்தைகள் பிறந்த போதும் ஒருநாளும் அதற்காக கவலைபடவில்லை....தன்னால் உழைத்து அந்த புள்ளகளை கரையேற்றமுடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.... ஆனால் பெண்பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும் எந்த கெட்டபேரும் எடுக்காமல் திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.... அதனால் தான் கயலை கல்லூரியில் சேர்க்கும் போதே சொல்லியிருந்தார்........ ஆத்தா... இன்னைக்கு அப்பா சொல்லறத நல்லா கேட்டுக்கத்தா.... நீ காலேஜ்க்கு போறதும் தெரியக்கூடாது...வாரதும் தெரியக்கூடாது.... மாணிக்கம் மகள அங்கன பாத்தேன்...இங்கன பாத்தேன்னு யாரும் சொல்லக்கூடாது.... அத எப்பவும் ஞாபகத்துல வச்சுக்க.....தங்கள் மற்ற பெண்பிள்ளைகளிடமும் முதல்ல ஒழுக்கம்தான் முக்கியம் படிப்பெல்லாம் அப்புறம்தான்.....என்று சொல்லியிருந்தார்....தன் தாய் தங்கள் பிள்ளைகளை கண்டிப்பதால்.... தான் அவர் பெரிதாக தன் பிள்ளைகளை கண்டிக்க மாட்டார்....... பிள்ளைகள் வீட்டில் ஆடலும் பாடலுமாக இருந்தாலும் அதை ரசிப்பாரே தவிர அவர்கள் மனம் புண்பட பேசமாட்டார்....அவருக்கு வீடு எப்போதும் கலகலவென்று இருக்கவேண்டும்.... காலமெல்லாம் அவர்கள் சந்தோசமாக இருப்பதற்காக உழைக்க அவர் தயங்கியதில்லை.... இன்று முதல் முறையாக என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க முடியாமல் இருந்தார்.......இங்கு கண்ணன் வீட்டில் .... கயலிடம்....” இன்னும் மூனுமாசத்துக்கு எனக்கு வயல்ல வேலையில்ல... உனக்கும் இப்ப காலேஜ் லீவுதானே.... வா... உனக்கு வண்டி ஓட்ட கத்து தாறேன்......”கயலோ தன் கன்னத்தில் கை வைத்தபடி....”. வேணாங்க.... எனக்கு வண்டி ஓட்ட வராது ப்ளிஸ் வேணாமே....”

“ஏய் அன்னைக்கு அடிச்சதுனால சொல்றியா..... இனிமே அடிக்கமாட்டேன்.....”

கயல் மீண்டும் மீண்டும் மறுக்கவும் கண்ணனுக்கு சுர்ரென்று கோபம் ஏறியது..... “இன்னும் அஞ்சு நிமிசத்துல நீ நைட்டிய மாத்திட்டு கீழ வார......அவ்வளவுதான்.....போ....”ஸ்கூட்டி வாங்கும் போது நம்மகிட்ட ஒருவார்த்தை கூட கேக்கல.... நமக்குதான் சைக்கிளே ஓட்டத்தெரியாதே.... எனக்கு கத்துக் குடுக்குறேன்னு வீட்ல என்னைய தவிர அம்புட்டும் கத்துகிச்சுக.... நான் கடைசி வரைக்கும் அதுக பின்னாடி ஓடி ஓடி மூச்சு வாங்குனதுதான் மிச்சம்....ஒரு தரம் அதுககிட்ட வாங்கி நானா ஓட்டுறேன்னு ஓட்டி வேலிகாத்தான் முள்ளுக்குள்ள பாஞ்சு உடம்புபூரா முள்ளு குத்துனதுதான் மிச்சம்.....ம்ம்ம் இன்னைக்கு எங்க பாய போறேன்னு தெரியலயே..... ஆத்தா.... கண்ணாத்தா... என்னைய நல்லபடியா காப்பாத்தி குடுத்தீனா இந்த வருசம் திருவிழாவுக்கு உனக்கு உருவம் வாங்கி போடுறேத்தா..... என்று மனதிற்குள் நினைத்தபடி சுடிதார் மாற்றி வர.... கண்ணன் கயலை ஸ்கூட்டியில் ஏற்றி ஒரு பொட்டல் காட்டிற்கு கூட்டிச் சென்றான்......
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#4
“என்னங்க இவ்வளவு பெரிய பொட்டல்..”.

.” இது ஒரு கம்மாய்.... அதுதான் இப்ப பிளாட் போட்டு விக்க ரெடியா இருக்கு...”

“அப்ப இங்க வார தண்ணியெல்லாம் எங்க போகும்,......”

“இன்னும் அந்த அளவுக்கு தண்ணி வரல..... மழை இங்க ரொம்ப பெய்யலைல....”.

கண்ணனுக்கு இந்த ஒரு வாரத்தில் கயலுக்கு வண்டியை கற்றுக் கொடுப்பதில் கண்ணை கட்டியிருந்தது.... வண்டி ஓட்ட ஆரம்பிக்கும் முன் மண்டையை மண்டையை ஆட்டுபவள்.... இவன் எதை செய்ய சொன்னாலும் அதற்கு எதிராகதான் செய்தாள்.... பிரேக் பிடிப்பதற்கு பதில் ஆக்சிலேட்டரை திருகுவதும்.... ஆக்சிலேட்டருக்கு பதில் பிரேக் பிடிப்பதும்...... என்று கண்ணன் கயலின் பின்னால் அமர்ந்து பொறுமையாக சொல்லிக்கொடுக்க..... ஒரு வாரத்தில் கயலும் வண்டி ஓட்ட கற்றுக் கொண்டாள்.... அன்றும் வண்டி ஓட்ட வந்தவர்கள்...... கண்ணன் கயலின் பின்னால் அமர்ந்து ஓட்டச் சொல்ல..... கயலுக்கு அப்போதுதான் கண்ணனின் உடல் தன்மேல் உரசுவதே.... தெரிந்தது.... இவரு என்ன இப்புடி நம்மள ஒட்டிகிட்டு உக்காந்திருக்காரு.... இம்புட்டு நாளும் இப்புடித்தான் இருந்தாரா..........அவள்தான் இத்தனை நாளும் பள்ளிக்கு முதல் நாள் செல்லும் குழந்தையின் நிலையில் தான் இருந்தாள்..... என்னடா... சொல்லி இவன்கிட்ட இருந்து தப்பிப்பது என்று..... சாவித்திரி கூட சொன்னார்” பாவம்ப்பா... ரொம்ப பயப்படுறா....விடு......”

“இல்லம்மா.... இப்பல்லாம் பெண்கள் எவ்வளவு தைரியமா.... இருக்காங்க.... இவ சாதாரணம் ஒரு வண்டிய ஓட்ட இவ்வளவு பயந்தா...... ஒன்னும் வேலைக்காகாது.... நான் பாத்துக்கிறேம்மா..... என்ன மூஞ்சிய இப்புடி பாவமா வச்சுக்கிட்டா.... நான் விட்டுருவேனே...... வா வந்து வண்டியில ஏறு.....”ஆனால் இன்று அவன் உடல் உரசவும் கயலுக்கு ஒரு மாதிரியாக கூசியது...

“.ஏய் வண்டிய ஏன் இப்புடி ஆட்டுற..... நேத்தெல்லாம் நல்லாத்தானே ஓட்டுன..”

.அவள் இடுப்பின் இடையே இரு கையை கொடுத்து வண்டியின் முன்னால் கயலின் கைமேல் கை வைக்க கயல் படக்கென்று கையை எடுக்க வண்டி ஒருநிமிடம் கீழே விழப்போக கண்ணன் சுதாரித்து வண்டியை நிப்பாட்டியவன்.... கயலை முறைத்து

“என்னாச்சு.... என்ன மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனுமா.... எதுக்கு இப்ப கைய எடுத்த........”கயல் கீழே குனிந்த படி பேசாமல் இருக்க......

தன் கையால் அவள் தாடையை பிரித்து தன்னை பார்க்கச் செய்தவன்...”.. என்ன.....”

“எனக்கு கூச்சமாயிருக்கு....”.

“கூச்சாமாயிருக்கா.... இத்தனநாளா இல்லாம இன்னைக்கு என்ன புதுசா.......”

“இல்ல ........ நீங்க அங்கயிங்க தொடுறீங்கள்ள அதான் எனக்கு கூச்சமாயிருக்கு...”

அடிப்பாவி நான் ஒன்னுமே பண்ணல ..... இதுல இவளுக்கு கூச்சமாயிருக்காம் இவள.... தங்களை சுற்றி யாராவது இருக்கிறார்களா என சுற்றி பார்க்க.... ஒருவரையும் காணவில்லை..... அவளை நன்கு நெருங்கியவன் அவளின் இடுப்பைபிடித்து தன்னை நோக்கி இழுத்தவன்.... தன் உடம்பு அவள் மேல் நன்கு படுமாறு அழுத்தி பிடித்தவன்..... அவள் கழுத்தில் தன் முகத்தை பதித்தான்......கயலின் நெஞ்சு பந்தய குதிரையாக மாறியது....... அவன் மார்பில் கைவைத்து தள்ள பார்க்க...... மெதுவாக அவளைவிட்டு விலகியவன்.......

“வண்டி ஓட்டும் போது உன்னைய இப்புடி கட்டிப் புடுச்சனா... இல்ல முத்தம் கொடுத்தனா..... உனக்கு கூச்சம் வர.....நான் சும்மாதானே உக்காந்திருந்தேன்.......வா வந்து ஒழுங்கா ஓட்டு......”


கயல் திருதிருவென்று விழித்தாள்.... அடப்பாவி ஐயனாரு கூச்சமாயிருக்குன்னு ஒரு வார்த்தை தானே சொன்னேன்.... அதுக்காக காலேஜ்ல பேட்டச்ல என்னன்ன செய்யக்கூடாதுன்னு சொன்னாங்களோ..... அம்புட்டையும் இப்ப இவரு செய்யிராரு.... அத இவரு செஞ்சா தப்பில்லைன்னு அமுதா சொன்னாலே....... இப்ப இவரு முகத்தை எப்புடி நிமிந்து பாக்குறது..... கயலுக்கு வெக்க வெக்கமாக வந்தது...... கயலின் வெட்கத்தை ரசித்தவன்......


“இப்ப வண்டிய ஓட்டுவமா......”.

“ம்ம்ம்...”கயலு வாய மூடிக்கிட்டு வண்டிய எடுத்திரு..... தேவையில்லாம பேசி மேக்கொண்டு இவரு என்னமும் பண்ணிறாம...... இவரு பாக்குறதான் பாரேன்......ப்பா....நம்மள முழுங்கிருவாரோ...... என்று நினைத்தபடி வண்டியை எடுக்க பின்னால் ஏறிய கண்ணன்..... அவளை இன்னும் நெருங்கி அமர்ந்து அவள் இடுப்பை இரு கையால் பிடித்து தன் முகத்தை அவள் தோளில் வைத்து தன் ஓரக் கண்ணால் கயலை பார்த்தபடியும் மறுகண்ணால் பாதையை பார்த்தபடியும்......

“ம்ம்ம் ..... வண்டியை... எடு....”அன்று சுதாவை மாணிக்கம் போன் பண்ணி வரச் சொன்னவர்......” உனக்கு தெரிஞ்சுதான் வாசு கல்யாணம் பண்ணுனதா அப்பத்தா சொல்றாங்களே..... அது உண்மையா....”

சுதாவுக்கு ....கை காலெல்லாம் வெடவெடத்தது...தன் தந்தைக்கு சாதாரணமாக கோபம் வராது.......... வந்தால் அடி பின்னிவிடுவார் ...... இந்த அப்பத்தாவுக்கு என்ன கேடு இப்ப இவருகிட்ட சொல்லைனா.....என்ன..... இப்ப என்ன......பண்ணுறது......

“என்ன ஒன்னும் சொல்லாம இருக்க...நீ பதில் பேசாம இருக்கிறதிலேயே தெரியுது நீ செஞ்சன்னு………. எப்ப பெத்தவங்க பாக்குற மாப்பிள்ளை வேணாமுன்னு நீயா மாப்புள்ளைய தேடிக்கிட்டியோ.... இதுக்குமேல நீ இங்க வரக்கூடாது.... என்னால முடிஞ்ச அளவுக்கு மேலயே உனக்கு நகையும் சீரும் செஞ்சுட்டேன்.... அதுனால நீ இனிமே.... அடிக்கடி இங்க வராம ஒரு நல்லது கெட்டதுனா மட்டும் தலைகாட்டுற வேலை வச்சுக்க..... அதுவும் நீ பண்ணுனது மத்த புள்ளங்களுக்கு தெரியக் கூடாதுங்கறாலதான் வரச் சொல்றேன்......என்னைக்கும் வாழையடி வாழையா....நம்ம குடும்பத்துல நடக்குற எல்லா கல்யாணமும் நம்ம கருப்பர் குறி சொல்லிதான் நடந்திருக்கு...., ஆனா அது வேணாமுன்னு நீயா உன் வாழ்க்கைய தேடிக்கிட்ட..... அந்த அளவுக்கு உனக்கு பெத்தவங்களும் கூட பொறந்தவங்களும் வேண்டாத ஆளா போயிட்டமோ......இனி உன்னோட வாழ்க்கையில எந்த பிரச்சனை வந்தாலும் அதையும் நீயே பாத்துக்க..... உன்னோட மாமனார் மாமியார் சொல்றத கேட்டு உன் வாழ்க்கைய நல்லா அமைச்சுக்கிட்டாலும் சரி...... இல்லையா உன்னோட இஷ்டத்துக்கு....நடந்து உன் வாழ்க்கைய பாழாக்குனாலும் அது உம் பிரியம்...... சகுந்தலா.... உம் மகளுக்கு புத்திய சொல்லி அனுப்பி வை.... இனி போன் பண்ணாம அவளோ... அவ புருசனோ இந்த பக்கம் வரக் கூடாதுன்னு சொல்லி அனுப்பு......” என்றபடி அவர் வெளியே எழுந்து செல்ல.....சகுந்தலா அழுதபடி......” உனக்கு ஏண்டி புத்தி இப்புடி போச்சு.........”“ஏம்மா... இப்ப எதுக்கு அழுகுற...... அப்பா இங்க வரக்கூடாதுன்னு சொன்னாரு அவ்வளவுதானே.... நான் அங்க நல்லாதான் இருக்கேன்..... நீங்க பாத்த மாப்பிள்ளைய விட அவரு என்னைய நல்லா பாத்துக்குவாரு..... அன்னைக்குதான் பாத்தனே.... கயலு புருசன் ஊருக்கு கிளம்புன்னு சொன்னவுடனே இவ நாய்குட்டி மாதிரி பின்னாடி பயந்துகிட்டு ஒடுனத....... அவர விட இவரு ஒன்னும் குறைஞ்சிரல.....”“ஏண்டி அப்ப உனக்கு நீ பண்ணுனது குத்தமா படவேயில்லயா.....”“நீங்கதாம்மா தப்பு பண்ணிட்டீங்க கோயில்ல குறி சொன்னுச்சு....அது சொன்னுச்சுன்னு என்னைய கொண்டுபோய் ஒரு கூட்டு குடும்பத்துல தள்ளிவிட்டா.... யாரு அவுகளுக்கு வடிச்சு கொட்டுறது.....ந்தா.... தாமரை அக்காவ ஒரு வீட்ல கட்டிக்குடுத்தீங்க அவ அங்க கிடந்து அவுக மாமியார் மாமனாருக்கு பண்டுவம் பாக்குறா....பத்தாத்துக்கு நண்டும் சிண்டுமா நாத்தனார் கொழுந்தங்க வேற...என்னால அப்புடியெல்லாம் வேலை பாக்க முடியாது.........”“ச்சீ..... வாயை மூடு.... உன்னைய நாந்தான் பெத்தனாடி..... நீ இப்புடி ஒரு கேடு கெட்டவளா இருக்க.....பாவம் உங்க அப்பாட்ட எடுத்து சொல்லலாம்னு இருந்தேன்.... உங்க அப்பா சொன்னா மாதிரி நீ இங்க வராம இருக்குறதே நல்லதுடி......”“ம்ம்ம்……… என்னைய தூரம் தொலைவுல கட்டிக்குடுத்திருந்தா என்ன பண்ணுவேன்....ஓயாம வர முடியாதுல நான் அது மாதிரி நினைச்சுக்கிறேன்...... நான் வாரேன்.......” என்றபடி வேகமாக வெளியே செல்ல..... சகுந்தலா.... அழுதுகொண்டு கீழே உட்கார காந்திமதி வந்து அவள் கையை பிடித்து.....“ உம்மக இப்புடி பேசுறத நீ இப்பத்தான் கேக்குற ஆனா நான் கல்யாணத்துக்கு முதல்நாளே கேட்டுட்டேன் அதான் உம்மக பேசும்போது நான் குறுக்க எதுவுமே பேசாம இருந்தேன்...... விடு அவ தலையில அவளே மண்ணள்ளி போட்டுக்குறா......நாம என்ன பண்ணமுடியும்.......போத்தா போய் வேலையிருந்தா பாரு....”
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#6
நாட்கள் அதன் போக்கில் செல்ல.... அன்று ஏழு மணியிருக்கும் கயல் டியூசன் முடித்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டு திரும்பியவள் கண்ணன் கால் கையில் கட்டுப்போட்டு நொன்டியபடி வருவதை கண்டவள்.... அவனை நோக்கி ஓடி....

“என்னங்க..... என்னாச்சு..... கால்ல இவ்வளவு பெரிய கட்டுப் போட்டு இருக்கிங்க.... கையிலயும் கட்டு போட்டுருக்கிங்க.....”.அவள் வாய்தான் பேசியது கைகாலெல்லாம் வெடவெடக்க கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.... மெதுவாக அவன் கட்டை வருடியவள்..... அவனை நிமிர்ந்து பார்க்க.......“ஏய் ஏண்டா அழுகுறா.... எனக்கு ஒன்னுமில்ல.... நான் வண்டியில வரும்போது நாய் ஒன்னு குறுக்க வந்திருச்சு அதுமேல மோதக்கூடாதுன்னு வண்டிய திருப்புனேன்.... கொஞ்சம் சறுக்கிருச்சு..... வேற ஒன்னுமில்ல.... நீ மொதல்ல அழுகுறத நிப்பாட்டு....” என்று அவள் கண்ணைத் துடைக்க... அவள் ஓடிச் சென்று அவனுக்கு உட்கார சேர் எடுத்துப் போட்டவள்.....

“ இருங்க இந்தா வாரேன் ……”என்றபடி வெளியே ஓடியவள் வரும்போது உப்பு மிளகாய் எடுத்து வந்து அவனுக்கு சுற்றிப் போட்டவள்.......“ஏய் என்ன பண்ணுற.... இப்ப ஏன் வெளிய ஓடுன....”“அது இங்கன சிமெண்ட் தரையா இருக்குல... அதான் வெளிய மண்ணுல போய் நின்னு என்னோட காலடி மண்ணெடுக்க போனேன்..... நான் ரெண்டுமூனு நாளா உங்களையே பாத்து கண்ணு வச்சுட்டேன் அதாங்க நீங்க இப்புடி கீழ விழுந்திட்டீங்க......”கண்ணனோ கிழுஞ்சிச்சு..... நம்ம பொண்டாட்டி எப்படா நம்மள நிமிந்து பாப்பான்னு காத்திருந்தேன்..... இப்பதான் ரெண்டு மூனு நாள் பாத்தா போல அது கடவுளுக்கே பொருக்கலயா......” ஏய் நீ பாத்ததால ஒன்னும் நான் கீழ விழுகல.......”“இல்லங்க.... எங்க அப்பத்தா சொல்லும் எதுல வேணும்னாலும் தப்புச்சிரலாம்.... ஆனா கண்ணடியில இருந்து தப்பிக்க முடியாதுன்னு...... அதாங்க உங்களுக்கு இப்புடி நடந்திருச்சு..(.இந்த அப்பத்தாவோட நீ சேராம இருக்குறதுதான் நல்லது சொல்லிட்டேன்) ஆமா டாக்டர் என்ன சொன்னாங்க.....எக்ஸ்ரே எல்லாம் எடுத்து பாத்தீங்களா.....”“ம்ம்ம் ...பாத்துட்டேன்.... ஒன்னும் பயமில்ல.... கைல ஒன்னும் பிரச்சனை இல்லை..... காலுக்குதான் ரொம்ப வேலை குடுக்காம ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்க சொன்னாரு.... அதான் ராமனுக்கும் லீவுதானே.... அவன இருக்கச் சொல்லிட்டு வந்திட்டேன்......அம்மாவும் முத்துவும் எங்க.....”“அத்த யாரையோ பாக்க போயிட்டாங்க ....முத்து பிரண்ட பாக்க போயிருக்கான்..... நீங்க கீழ இருக்குற ரூமுலயே இருக்கிங்களா.....”“வேணாம் நான் மெதுவா மாடிக்கே போயிருறேன்.....”

கயல் அவன் தோளை பிடித்து மாடிக்கு கூட்டிச் சென்றாள்.....அன்றிலிருந்து கயல் கண்ணனை விட்டு ஒரு நிமிடமும் விலகவில்லை...... இரவு படுக்கும் போது

“ ஏங்க நான் கீழயே படுத்துக்கவா.......”“ஏன்....... கட்டில் என்னாச்சு....”“இல்ல நான் எப்புடி படுத்தாலும் ராத்திரில தலகாணி கீழ விழுந்திருது....நான் உங்க மேல கால போட்டுறுரேன்.... இப்ப கால்ல வேற அடிப்பட்டிருக்கு...நான் கால போட்டு ரொம்ப அடிப்பட்டிருச்சுனா...... அதாங்க....”“அதால்லாம் பரவால்ல நீ படு...... “மனதிற்குள் நான்தான்டி அந்த தலகாணிய கீழ தூக்கிப் போட்டேன்..... எப்பொழுதும் படுத்தால் இடையில் எழாதவள்.......கண்ணனுக்கு அடிபட்டதிலிருந்து அவன் லேசாக அசைந்தால் கூட படக்கென்று எழுந்து என்னங்க என்ன வேணும்....என்று கேட்க.... கண்ணனுக்கு ஆச்சரியமாக இருக்கும் எப்புடி இவ லேசாக அசைந்தால் கூட முழிச்சிடுறா..... கண்ணனை கீழே விடாமல் எல்லா பொருளையும் மேலேயே கொண்டு வந்து கொடுத்தாள்......கண்ணனுக்கு கையில் அடிப்பட்டிருப்பதால் கயலே அவனுக்கு சாப்பாடு ஊட்டுவதிலிருந்து தலை சீவுவது வரை அவளே செய்தாள்......அன்று அவன் கை கட்டை அவிழ்த்ததால் மருந்தை அவனுக்கு மெதுவாக தேய்த்து கொண்டிருந்தாள் ....கண்ணன் அவளை நேசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவன்.....“ராத்திரியில ........எப்புடி நான் முழிச்சவுடன நீயும் முழிச்சிருர.........”“தெரியல.......... ஆனா இதே மாதிரிதான் எங்க தாமரை அக்காவுக்கு குழந்தை பொறந்திருந்துச்சுல.... அப்ப அது குழந்தை லேசாதான் அசையும் உடனே டக்குன்னு எந்திருச்சுருவா...... எப்புடிக்கான்னு கேட்டா... அது உள்மனசு சொல்லும்னு சொல்லுவா.... அதுமாதிரிதாங்க எம்மனசு சொல்லும் நீங்க எந்திரிக்க போறிங்கன்னு..... உடனே எனக்கும் முழிப்பு வந்திடும்.... ஆனா எனக்கு ஒரு டவுட்டுங்க இம்புட்டு நாளும் ஏங்க எனக்கு முழிப்பு வரல........”கண்ணனோ ........ கடவுள் ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியா கவனிக்கத்தான் தாய்மைங்குற ஒரு வரத்தை பெண்களுக்கு கொடுத்திருக்கானோ......பெரும்பாலான ஆண்கள் மனைவி இறந்தவுடன தன்னோட குடும்பத்துக்காக மறு கல்யாணம் பண்ணிக்கிறாங்க ஆனா நூத்துக்கு தொன்னூறு சதவித பெண்கள் கணவர் எந்த நிலையில விட்டாலும் கஷ்டப்பட்டு முன்னேறி தன்பிள்ளைகளை முன்னுக்கு கொண்டு வந்திருராங்க..... பாக்க ஆண்கள் உடம்பால் வலிமை உடையவர்கள் என்றால்..... பெண்கள் மனதால் வலிமை உடையவர்கள்தான்.... ஆதே தாய்மை உணர்வு எம்மேல இவளுக்கு வருதுன்னா நான் அவ மனசுக்குள்ள எடம்பிடிச்சிட்டேன்தானே அர்த்தம் என்று நினைத்தவனுக்கு மனதிற்குள் குப்பென சந்தோசம் பெருகியது.....“என்னங்க....” என்றபடி அவளை நிமிர்ந்து பார்க்க..... அவளை மெதுவாக தன் அருகில் இழுத்தவன்.... கயல் உச்சியில் முத்தமிட்டவன்.... அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.......“ஏங்க கையெல்லாம் மருந்தாயிருக்கு கைய போய் கழுவிட்டு வரவா......”“இல்லடா..... எனக்கு தூக்கம் வருது கொஞ்சநேரம் அப்புடியே படு ....நான் தூங்குனவுடன நீ போகலாம் ..... சரியா....” சின்ன குழந்தைக்கு சொல்வதுபோல் சொன்னதை கேட்டவுடன்..... கயலும் அவன் நெஞ்சில் கண்ணயர்ந்தாள்........கண்ணனுக்கு மனம் நிறைந்திருந்தது..... இவளவிட வேற பொண்ணு வந்திருந்தா.... நம்ம வாழ்க்கையில நாம மகிழ்ச்சியா இருந்திருப்போமாங்கிறது சந்தேகம்தான்.....என்று நினைத்தவன் சந்தோசமாக கயலை இறுக்கி அணைத்தபடி தூங்கினான்.......அங்கு வாசு வீட்டில் வாசுவுக்கு தன் தம்பி மேல் சந்தேகமாக இருந்தது.... இவ ஏன் வீட்லயே இருக்கான் ... நம்ம பொண்டாட்டிய பாக்குறது சரியில்லயே..... பாம்பின் கால் பாம்பு அறியும் என்பதுபோலதன் தம்பியின் பார்வை சரியில்லை என்பதை கண்டவன்...

“..சுதா இனிமேல் நீ நைட்டி போடுறதா இருந்தா நம்ம ரூமுக்குள்ள மட்டும் போடு ......வெளிய சேலைய கட்டிப் பழகு.....”.“ஏன் இம்புட்டு நாளும் பேசாம தானே இருந்தீங்க .... இப்ப என்ன புதுசா.....”“என்னமாச்சும் ஒரு காரணம் இருக்கும் எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லமுடியாது.....”

“என்ன..... புதுசா.... என்னமோ மாதிரி பேசுறீங்க.... என்னாலயெல்லாம் போட முடியாது....”“நான் சொல்றத கேட்டு இங்க இருக்குறதா இருந்தா..... இரு அதுக்கும் மேல உன்னோட விருப்பம்.....” என்றபடி குப்புற படுக்க.....

திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக வாசு சுதாவின் துணையில்லாமல் படுக்கிறான்..... சுதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை...... இப்ப என்ன பண்ணுறது...... மறுநாளில் இருந்து சுதா......... சேலையில் இருந்தாள்.......இங்கு கண்ணனுக்கு கால் சற்று குணமாகியிருக்க...... அவன் லேசாக காலை ஊன்றி நடக்க ஆரம்பித்திருந்தான்..... இன்று கடைக்கு போவதாக சொல்ல..... கயல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ...காலையில் இருந்து மாடிக்கு வராமல் கீழேயே சுற்றிக் கொண்டிருந்தாள்......“கயலு.......கயலு....”

“ஆத்தா உன்னைய கண்ணன் கூப்புடுமாதிரி இருக்குத்தா.....”

“இல்லத்தே.... அடுப்புல கொஞ்சம் வேலையிருக்கு.... முத்து.... மாடியில உங்க அண்ணன் கூப்புடுறாங்களாம் என்னன்னு கேட்டுட்டுவா......”மாடி ஏறி திரும்பி வந்தவன்.... “அண்ணி உங்களதான் கூப்புடுறாங்க..... ஏதோ மாத்திரை போடனும்மாம்.....நீங்களே போங்க அண்ணி.....”“ம்ம்ம் .....” என்றபடி மாடி ஏறியவள் மாத்திரையை தேட அது வைத்த இடத்தில் காணவில்லை.... இங்கதானே வச்சோம்.... எங்க போச்சு.... அவளை பின்னால் இருந்து அணைத்தவன்….

“ மாத்திரைய தேடுறியா..... அது இந்தா இருக்கு....” என்றபடி தன் கையை காட்ட.....“அப்புறம் எதுக்கு என்னைய மேல வரச்சொன்னிங்க.............” என்றபடி முகத்தை சுழிக்க....“இங்க பாரு உங்கிட்ட முதல்லயே சொல்லியிருக்கேன்.... இப்புடி முகத்தை உம்முன்னு வச்சிருக்க கூடாதுன்னு ...... நான் கடைக்கு போயி பத்து நாளாச்சுடி..... இத்தன நாளு ராமன் இருந்தான்..... இன்னைக்கு அவனுக்கு காலேஜ்..... அதான்டி நான் போறேன்.... இப்ப எனக்கு கால்ல எந்த பிரச்சனையும் இல்லடி...” என்றபடி கயலை தூக்கியவன் ரூமுக்குள்ளேயே நடக்க ஆரம்பிக்க.....

“ ஸ்ஸ்ஸ் ……விடுங்க கைலயும் கால்லயும் அடிபட்டிருக்கு ரொம்ப வெயிட் தூக்காதிங்க.....”“நான் எங்கடி வெயிட் தூக்கியிருக்கேன்.... நீ அப்புடியே மயில் இறகு மாதிரி தான் இருக்க.... கொஞ்சம் சிரி....” என்றவன் அவளை கட்டிலில் விட்டு அவள் மேம் படர்ந்து அவள் முகம் எங்கும் முத்தமிட்டு முத்த ஊர்வலம் நடத்தியவன்.... அவள் இதழில் வந்து நிற்க இருவரும் தங்களை மறந்தனர்.....அவள் இதழிலேயே ஆழப்புதைந்தவன்.... மெதுவாக அவள் கழுத்திற்கு வரவும் கயல் ஒரு மாதிரி பதற்றம் அடைந்தாள்.... அவள் இதயம் படபடவென்று அடித்தது...... அவள் இதயதுடிப்பில் பதற்றத்தை உணர்ந்தவன் மெதுவாக அவளை விட்டு விலகி அவள் முகத்தை பார்க்க கயல் கண்ணை மூடியிருந்தாலும் அவள் முகத்தில் பயம் தெரிந்தது...... முழுதாக தன் உணர்விற்கு வந்தவன்..... மெதுவாக அவளை விட்டு விலகி.... அவள் கன்னத்தை தட்டியவன்....“என்னடா.... என்னாச்சு....... ஏன் இப்புடி உன்னோட இதயம் படபடங்குது.... என்னைய பாத்தா உனக்கு பயமாயிருக்கா........... சொல்லுடா........”இருபக்கமும் தலையை ஆட்டியவள்.....” பயமில்லயே.... “என்று சொன்னாலும் அவள் முகத்தில் அப்பட்டமாக பய உணர்வு தெரிந்தது......

“ சரி வா... எனக்கு கடைக்கு நேரமாச்சு வந்து சாப்பாடு வை.....”

அவள் முகத்தில் குற்றவுணர்வு தெரியவும்....”.லூசு...நான் உன்னோட புருசன்... அத எப்பவுமே உன்னோட மனசுல வச்சிக்க..... நான் உன் மனச புரிஞ்சுதான் நடப்பேன்.... வா” என்றபடி அவள் தோளில் கை போட்டு கூட்டிச் சென்றான்......


மறு வாரத்தில் கயலும் காலேஜ்க்கு செல்ல கண்ணன் கண்டிப்பாக ஸ்கூட்டியில்தான் செல்ல வேண்டும் என்று சொன்னவன்..... ஒரு வாரம் அவள் பின்னே தன் வண்டியில் வந்து அவள் பயத்தை போக்கியிருந்தான்......பத்து நாட்கள் சென்றிருக்கும்.... அவன் கடையில் இருக்கும் போது... மாலை ஆறு ஆறரை இருக்கும்..... சாவித்திரி...கண்ணனுக்கு பதட்டத்துடன் போன் செய்தவர்..... “கண்ணா....மருமக எப்பவும் அஞ்சு மணிக்கெல்லாம் வந்திரும்பா.... இன்னைக்கு இம்புட்டு நேரமாச்சு இன்னும் ஆளக்காணோம்பா.....” என்று அழுதபடி போன் பண்ண கண்ணன் அதிர்ச்சியில் தன் போனை தவறவிட்டிருந்தான்......................இனி.................. ?தொடரும்........
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#9
ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த அத்தியாயத்தோட வந்திட்டேன்....படிச்சுட்டு மறந்திறாம கமெண்ட்ஸ் போடுங்க....... போன பதிவுக்கு லைக்ஸ் .... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி ப்ரண்ட்ஸ்......

 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement