நீயாக நான், நானாக நீ 12

Advertisement

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: போன எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...:giggle::giggle::giggle: வெள்ளிக்கிழமை ஆரம்பிச்ச வேலை இப்போ தான் முடிஞ்சது... அதான் எக்ஸ்டரா ஒரு நாள் லீவு எடுத்துகிட்டேன் பிரெண்ட்ஸ்...:(:(:( ஆனா இன்னைக்கு எவ்ளோ நேரமானாலும் எபி போட்டுடனும்னு இப்போ போட்டுட்டேன்...:giggle::giggle::giggle: படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...:love::love::love: உங்க கமெண்ட்ஸுக்கு ரிப்ளை சீக்கிரமா பண்ணிடுறேன் பிரெண்ட்ஸ்...:giggle::giggle::giggle:

ei8K0IX44337.jpg

அத்தியாயம் 12

பூமி சுந்தரை சமாளித்து ஆகாஷின் அறைக்குள் வந்து பெருமூச்சு விட்டாள். “ச்சே இவன் ஒருத்தன சமாளிக்கிறதுக்கே நாக்கு தள்ளுது… இதுல குடும்பமே வந்தா நம்ம கதி அதோ கதி தான் போலயே…” என்று முணுமுணுத்தாள்.

அவளின் முணுமுணுப்பைக் கேட்டு தான், கடந்த கால வாழ்க்கை பக்கங்களை திருப்பிக் கொண்டிருந்த ஆகாஷ் நிகழ்விற்கு வந்தான்.

“ஹே என்ன இங்க வந்துருக்க… அவன் எங்க…?” என்றான் ஆகாஷ்.

பதில் கூறாமல் அவனையே முறைத்துப் பார்த்தாள். அதில் சுதாரித்தவன், “எதுக்கு இப்போ என்னயே வெறிச்சு வெறிச்சு பார்த்துட்டு இருக்க…?” என்று வினவினான்.

“ம்ம்ம் வேற வேலை இல்லாம போர் அடிக்குது… அதான் உன்ன பார்த்து டைம் பாஸ் பண்ணிட்டு இருக்கேன்… ஆளப் பாரு… அவன சமாளிக்க ஹெல்ப் பண்ணாம, தனியா விட்டுட்டு ஓடிவந்துட்ட…” என்று நொடித்துக் கொண்டாள்.

“அது… என்னால அவன்கிட்ட பேச முடியல… சொதப்பிடுவேனோன்னு தான் உள்ள வந்துட்டேன்… ஏதாவது கேட்டான்னா என்ன…?”

“ஹ்ம்ம் நீ கோபமா இருக்கன்னு அவனே எடுத்து குடுத்ததும், நானும் அதையே மெயின்டைன் பண்ணிக்கிட்டேன்… நல்ல வேள நேத்து அவனோட சேட் பண்றப்போ, கோபமா இருக்க மாதிரியே மெசேஜ் பண்ணதுனால பயபுள்ள நம்பிடுச்சு…” என்றாள் பூமி.

பின் சுந்தரிடம் பேசியவற்றை, ஆகாஷின் பொசசிவ்னெஸ் தவிர்த்து மற்றவற்றை கூறினாள். ஏனெனில், அவளிற்கு அதைப் பற்றி சிந்திக்க வேண்டியிருந்தது.. மேலும், சுந்தர் கூறிய ‘மேட் ஃபார் ஈச் அதர்’ரை ஆகாஷிடம் பகிர்ந்து கொள்ளவும் ஒரு மாதிரி இருந்தது.

முன்பானால், இதை வேடிக்கையாக்கி ஆகாஷிடம் கூறி சிரித்திருப்பாள். ஆனால் இப்போதோ அவளின் மனப்பெட்டகத்தில் அவன் மீது சிறு சலனம் தோன்றியிருந்ததால், அவள் அதை மனதிற்குள்ளேயே மறைத்து வைத்து, அது ஏற்படுத்தும் உணர்வை ரசித்திருந்தாள்.

பேசிக் கொண்டிருந்தவள், பேச்சை நிறுத்திவிட்டு ஏதோ சிந்தனையில் இருக்கவும், அவளை உலுக்கியவன், “என்ன கண்ண தொறந்துட்டே தூங்குறீயா…” என்று கிண்டல் செய்ய, இதுவரை இருந்த உணர்வுகள் தடைபட, “போடா லூசு…” என்று கூறி வெளியே செல்ல முற்பட்டாள்.

இரண்டடி எடுத்து வைத்தவள், ஆகாஷிடம் திரும்பி, “நீயும் வா… மறுபடியும் என்னால தனியா சமாளிக்க முடியாது…” என்று கூறி அவனை கையோடு அழைத்துச் சென்றாள்.

இருவரும் கையோடு கை கோர்த்து வெளியே வருவதைக் கண்ட சுந்தர் மீண்டும் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, ‘இவன் எதுக்கு அடிக்கடி இப்படி சிரிக்கிறான்…’ என்று பூமி யோசித்தாள்.

ஆனால் சுந்தரின் எண்ணப்போக்கை ஒரு நொடியில் கணித்த ஆகாஷ், கையை விலக்க பார்க்க, எங்கே விட்டால் மறுபடியும் உள்ளே ஓடிவிடுவானோ என்று அவனின் கையை இறுக்கப் பற்றிக்கொண்டாள், பூமி.

‘ஐயோ அவன் வேற ஒரு மாதிரி பாக்குறானே… இங்க லூசு என்னைக்கும் இல்லாம இன்னைக்கு தான் கையப் பிடிச்சு தொங்குவா…’ என்று ஆகாஷ் சலித்துக் கொண்டான். ஆழ்மனதின் ஆசைகள் சலிப்பாக வெளிவருகிறதோ…

“சாரி சுந்தர்… ரொம்ப நேரமா வெய்ட் பண்ண வச்சுட்டோமா…” என்று பூமி சாதாரணமாகத் தான் கேட்டாள். ஆனால் அவர்களிருவரும் நின்றிருந்த நிலை, சுந்தரை வேறு மாதிரி யோசிக்க வைக்க, “அதெல்லாம் ஒன்னுமில்ல…” என்று சிரிப்புடன் கூறினான்.

ஆகாஷோ, ‘அடியேய் வாய வச்சுட்டு சும்மா இரு டி…’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டான். அவர்களின் பேச்சும், சுந்தரின் பாவமும் ஆகாஷையும் வெட்கப்பட வைத்ததோ… அவனின் கன்னங்கள் சிவக்க ஆரம்பிக்க, அதைக் கண்டு தான் சுந்தர் அவர்களுகிடையில் நடந்ததை (!!!) உறுதிபடுத்திக் கொண்டான்.

‘இப்படியே போனா இவளே ஏதாவது உளறிடுவா…’ என்று நினைத்த ஆகாஷ் அவர்களை மதிய உணவிற்காக அழைத்தான்.

உணவு மேஜையில் அமர்ந்து, அவரவர்களே பரிமாறிக் கொண்டு சாப்பிடத் துவங்கினர்.

சுந்தர், “வாவ்… டேஸ்ட் சூப்பரா இருக்கு… ஆகாஷ் நீ இவ்ளோ நல்லா சமைப்பியா…” என்று பூமியைப் பார்த்து கேட்க, அவளோ ஏதோவொரு நினைவில், “நான் சமைக்கல… “ என்றாள்.

“வாட்… நீ சமைக்கலனா… பூமி நீயா சமைச்ச…” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் சுந்தர்.

ஆகாஷ் இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், எல்லா பக்கமும் தலையாட்டினான்.

“ஆர் யூ கிட்டிங்…” – இன்னும் அதிர்ச்சி விலகாதவனாக கேட்டான் சுந்தர். அவனிற்கு தான் பூமியின் நளபாகத்தைப் பற்றி தெரியுமே…

இம்முறையும் சமாளிக்கிறேன் பேர்வழி சொதப்பினாள் பூமி. “அது… நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் சமைச்சோம்… இன்ஃபேக்ட் நான் தான் பூமிக்கு சமைக்க கத்துக் குடுத்தேன்… ரெண்டு பேரும் சேர்ந்து சமைச்சா ஈசியா வேலை முடியும்ல… அண்ட் ஃபியூச்சருக்கும் யூஸ் ஆகும்ல…” என்று சொல்லிக் கொண்டிருந்தவள், அப்போது தான் உளறுவதை உணர்ந்து அவளே பேச்சை நிறுத்தினாள்.

இப்போது சுந்தரின் இதழ்கள் சற்று பெரிதாக விரிந்தனவோ. அதைக் கண்ட ஆகாஷ் வெளிப்படையாகவே தலையில் கைவைத்து குனிந்து உணவிலேயே கவனம் இருப்பதைப் போன்று அமர்ந்து கொண்டான். ‘அவனே நாங்க லிவ்-இன் ரிலேஷன்ஷிப்ல இருக்க மாதிரி இமேஜின் பண்ணிட்டு இருக்கான்… இதுல இவ கன்ஃபார்மே பண்ணிடுவா போல…’ என்று மனதிற்குள் புலம்பினான்.

அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும், ஆகாஷிற்கு அலைபேசியில் அழைப்பு வருவதற்கும் சரியாக இருந்தது. அசோக் தான் அழைத்திருந்தான். அவன் அறைக்குள் சென்று பேசினான்.

அப்போது தான், வெளியில் நின்றிருந்த பைக்கின் பக்கம் பார்வையைத் திருப்பினாள் பூமி. அவளின் சிறு வயது கனவு, பைக்கில் தனியாக பயணம் செய்ய வேண்டும் என்பது. இதற்காகவே தந்தைக்கு தெரியாமல், சுந்தரிடம் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டாள். ஆனால் சுந்தரோ அவள் தனியாக பைக் ஓட்டுவதற்கு அனுமதிக்க வில்லை. அவளின் கனவும் கனவாகவே இருந்தது.

அதை நினைத்து பெருமூச்சு விட்டவளின் மூளையில் ஒரு யோசனை உண்டாக, ஆகாஷ் வருவதற்குள் அதை செயல்படுத்த விரும்பினாள்.

“ஹே சுந்தர்… பெங்களூருல இருந்தே பைக்ல தான் வந்தியா…” என்று ஆச்சரியமாக கேட்பது போல் கேட்டாள். மேலும் அவனிற்கு சந்தேகம் வராத அளவிற்கு சில பல கேள்விகள் அந்த பைக்கைப் பற்றி கேட்டுவிட்டு, “நான் ஒரு தடவ ஓட்டிப் பார்க்கலாமா…” என்று அவளின் அதீத ஆர்வம் வெளியே தெரிந்து விடாதவாறு கேட்டாள்.

“சுயர்…” என்று சுந்தரும் பைக் சாவியை கொடுக்க, ‘அடேய் சுந்து எத்தன தடவ பைக் ஓட்டிப் பாக்குறேன்னு கெஞ்சிருக்கேன்… அப்போலா குடுக்காம, இந்த ஸ்கை ஹை கேட்டவொடனே குடுத்துடுவியா… இரு இரு இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உன்ன கவனிச்சுக்குறேன்…’ என்று மைண்ட் வாய்ஸில் பேசியபடியே பைக்கை உயிர்ப்பித்து கிளம்பினாள்.

*****

அசோக் அழைத்ததும், ஏதோ முக்கியமான வேலை என்று நினைத்த ஆகாஷ், “என்ன டா ஆச்சு… எதுவும் ப்ராப்ளமா…” என்று பதட்டத்துடன் கேட்க, “ப்ராப்ளமா… அதெல்லாம் ஒன்னுமில்லையே…” என்று அசோக் நிதானமாகக் கூறினான்.

“அப்பறம் எதுக்கு டா ஆஃபிஸ் நேரத்துல கூப்பிட்டுருக்க…”

“அது மச்சான்… இன்னிக்கு நம்ம பங்கு மகேஷ் ட்ரீட்… ஹெவி லன்ச்… நல்லா மூக்குப்பிடிக்க சாப்பிட்டேனா… அதான் கண்ணு சொக்குது… நீ வீட்டுல வெட்டியா தான இருப்ப… அதான் கொஞ்ச நேரம் பேசி தூக்கத்த விரட்டலாம்னு நெனச்சேன்…” என்றான் அசோக்.

அதில் கடுப்பான ஆகாஷ், “என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது…” என்றான்.

“மச்சான் அப்போ விடீயோ கால் வரியா…” என்று அசோக் கூற, அவனை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்து விட்டு அலைபேசியை அணைக்கச் சென்றான் ஆகாஷ்.

“டேய் மச்சான் வச்சுடாத… ஒரு டவுட்…” என்றான் அசோக்.

‘இப்போ என்ன கேக்க போறானோ…’ என்று நொந்துகொண்டு, “என்ன டவுட்…’ என்றான் பல்லைக் கடித்தவாறு

“நீயும் பூமியும், அவங்கவங்களா இருந்தப்போ ஒரு ப்ரொபோசல் கூட வரலையே… நீங்க மாறுனதுக்கு அப்பறம் எப்படி சட்டுன்னு ப்ரொபோசலா வந்து குமியுது…” என்று தன் சந்தேகத்தை கேட்டான் அசோக்.

அதில் மீண்டும் காண்டான ஆகாஷ், “போன வை டா நாயே…” என்று திட்டிவிட்டு அலைபேசியை துண்டித்தான்.

பெருமூச்சு விட்டு திரும்பிய போது, அங்கு அறை வாசலில் கைகளைக் கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து நின்ற சுந்தரைக் கண்டு அதிர்ந்து தான் போனான், ஆகாஷ்.

‘ஐயையோ நான் பேசுனத கேட்டுட்டானோ…’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, “என்ன பூமி, இன்னும் என்மேல கோபம் போகலையா…?” என்றான் சுந்தர்.

‘நல்ல வேள எதுவும் கேக்கல…’ என்று ஆகாஷ் நிம்மதியடைந்தாலும், சுந்தரிடம் என்ன பேசுவது என்று குழம்பினான்.

“ப்ச்… எனக்கு தெரியும் பூமி… நீ எதுக்கு என்மேல கோபமா இருக்கன்னு… கல்யாணத்த நிறுத்த ஐடியா கேட்ட உனக்கு நான் எந்த ஹெல்ப்பும் செய்யலங்கிறதுக்காக தான கோபமா இருக்க…” என்று சுந்தர் கூற, அதைக் கேட்ட ஆகாஷின் மனதில் வலி ஏற்பட்டது.

‘ஓ கல்யாணத்த நிறுத்த இவன்கிட்ட ஹெல்ப் கேட்டாளா…’ என்று நினைத்து வருந்தினான். அந்த வருத்தம் அவனிற்கு ஏதோ உணர்த்தும் வேளையில் சுந்தர் பேச்சை தொடர்ந்தான்.

“நீ என்கிட்ட என்ன சொன்னன்னு உனக்கு நியாபகம் இருக்கா, பூமி… கல்யாணத்த நிறுத்தணும்னு சொன்ன… அதுக்கு காரணம் கேட்டப்போ, ‘இப்போ தான் படிச்சு முடிச்சேன்… வேலைக்கு போகணும்… கொஞ்ச நாள் ஆகட்டும்…’னு எத்தனையோ காரணத்த சொன்ன நீ, ஒரு தடவ கூட ஆகாஷ பிடிக்கலன்னு சொல்லவே இல்ல… உனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்றது தான் ப்ராப்ளம்… இதே ஆகாஷ ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா நீ மறுக்க மாட்ட…” என்று கூறிய சுந்தரை ஆகாஷ் ஆச்சரியமாகப் பார்த்தான்.

ஆகாஷின் பார்வையை உணர்ந்த சுந்தர், “என்ன மேடம் ஷாக்கா… லூசு தான் பூமி நீ… உனக்கு என்ன பிடிக்குதுன்னு உனக்கே தெரியல… உனக்கு ஆகாஷ பிடிக்கும் பூமி… அவன மட்டும் தான் பிடிக்கும் அஸ் யுவர் பெட்டர்-ஹாஃப்…” என்று அழுத்தமாகக் கூறினான்.

இன்னும் ஆச்சரியம் விலகாத ஆகாஷிற்கு சுந்தரின் கூற்று, சற்று முன்பு மனதில் தோன்றிய வருத்தத்தை குறைத்திருந்தது.

“இது எப்படி எனக்கு தெரியும்… அடுத்து உன் கேள்வி இதுவா தான் இருக்கும்… ஆனா மேடம் ஷாக்லயிருந்து வெளிய வரதுக்குள்ள நானே சொல்லிடுறேன்… நீ அவன்கிட்ட பேசும்போது… ஹுஹும் இல்லயில்ல வம்பிழுக்கும் போது உன் கண்ணுல தெரியுற அந்த எக்ஸ்ப்ரஷன்… அவ்ளோ உயிர்ப்பா இருக்கும்… அது நீ வேற யாருக்கிட்ட பேசும்போதும் நான் பார்த்தது இல்ல, பூமி. அண்ட் நீ அவன்கிட்ட பேசி வம்பிழுக்குற மாதிரி வேற யாருக்கிட்டயும் பேச மாட்ட…” என்று நிறுத்தவும், “அதான் உன்கிட்ட பேசுவா…க்கும்.. பேசுவேன்ல…” என்று முதல் முறையாக அவனிடம் வாய் திறந்தான் ஆகாஷ்.

“என்கிட்ட நீ பேசுறது ஒரு அண்ணன்கிட்ட பேசுற மாதிரி இருக்கும்… ஆனா அவன்கிட்ட தான் நீ உரிமையா பேசுவ… அது பாக்குறதுக்கு கியூட்டா இருக்கும்.. நானே நீங்க ரெண்டு பேரும் பேசுறத பார்த்து ரசிச்சுருக்கேன் தெரியுமா… அண்ட் யூ நோ வாட்.. ஆகாஷுக்கும் உன் மேல லவ்ஸ் இருக்கு…” என்றான்.

அதில் மேலும் அதிர்ந்தான் ஆகாஷ். ‘என்ன நான் அவள லவ் பண்றேனா…’ என்று மனதிற்குள்ளேயே கேட்டுக் கொண்டான்.

“நம்ம ரெண்டு பேரும் இத்தன வருஷமா பேசிட்டு இருக்கோம்… சோ உனக்கு பிடிச்சது, உன்ன பத்தின விஷயங்கள் எனக்கு தெரியுறது பெரிய விஷயம் இல்லை… ஆனா உன்ன விட்டு விலகியிருக்க ஆகாஷுக்கு இதெல்லாம் எப்படி தெரியுதுன்னு நீ யோசிச்சுருக்கியா…”

ஆகாஷும் அதை சிந்திக்கும் போது தான், பூமியைப் பற்றிய எதையும் தான் மறக்கவில்லை என்பதை உணர்ந்தான்.

“அவன் நம்மகூட வந்து விளையாடலன்னு நீ ஃபீல் பண்ணப்போ அதுக்கான காரணம் என்னன்னு அப்போ எனக்கு தெரியல… ஆனா அதுக்கப்பறம் தான் தெரிஞ்சுது, அவன் உன்ன விட்டு விலகுனதுக்கு காரணம் நம்ம பாட்டின்னு…”

சுந்தர் பாட்டியைப் பற்றிக் கூறியதும் இத்தனை நேரமிருந்த இளக்கம் மறைய, ஆகாஷிற்கும் பழைய நினைவுகள் காட்சியாக விரிந்தன.

ஆகாஷின் தந்தை இறந்து, அவனும் அவனின் தாய் மீனாட்சியும், மணிவண்ணன் வீட்டிற்கு வந்த புதிதில், ஆகாஷ் இயல்பாக இல்லை. தந்தையின் இழப்பு அந்த சிறுவனின் சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் பறித்திருக்க, அதை மீட்டெடுக்க வந்தவள் தான் பூமி.

பூமி பிறந்திருக்கும் நேரம், மருத்துவமனைக்கு சென்று பார்த்தவனிற்கு, முட்டை கண்களை மூடி மூடி திறந்து, பொக்கை வாய் சிரிப்புடன் இருக்கும் மாமன் மகளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை. அன்றிலிருந்து அவளே அவன் துணையாகிப் போனாள்.

பூமியும் அவனைக் கண்டாலே சிரிக்க ஆரம்பித்து விடுவாள். இப்படியே அவர்களின் நாட்கள் அழகாக செல்ல, அதை கெடுக்கவென வந்தது அந்த நாள்.

பூமிக்கு மொட்டை அடித்து காது குத்தும் வைபவம் அவர்களின் குலதெய்வ கோவிலில் நடந்தது. அதற்கு பூமியின் அன்னை விசாலாட்சியின் பிறந்த வீட்டிலிருந்தும் வந்திருந்தனர்.

அங்கு ஆகாஷ் பூமியை தூக்கி வைத்து கொஞ்சுவதைக் கண்டவர்கள், “இப்போவே மாமன் மகள கைக்குள்ள வச்சுக்குறான்…” என்று எதார்த்தமாக பேச, அதைக் கேட்ட விசாலாட்சியின் அன்னைக்கு கோபம் துளிர்விட்டது.

மீனாட்சியும் ஆகாஷும், மகளுக்கு சுமையாகி விட்டனர் என்ற எண்ணம் அவருள் பரவியிருக்க, அவர்களைக் கண்டாலே அவருக்கு ஆகாது. அப்படிப்பட்டவரின் கண்களில் இந்த காட்சி விழ, உள்ளுக்குள் புழுங்கியவர், நேரம் கிடைத்த போது அதைக் கொட்டி விட்டார். ஆனால் கொட்டிய இடம் தான் தவறாகிப் போனது.

“என்ன நீயும் உங்க அம்மாவும் இங்கேயே டேரா போட திட்டம் போட்டுருக்கீங்களா… அதுக்கு தான் இப்போவே என் பேத்திய உங்க பக்கம் இழுக்குறீங்களோ… இத தான் உங்க அம்மா சொல்லிக் குடுத்தாளா… அதுவும் இந்த வயசுலயே… ஏய் இங்க பாரு… என் பேத்திக்கும் என் பேரனுக்கும் தான் கல்யாணம் நடக்கும்… வீணா நடுவுல வந்து ஏதாவது பண்ணலாம்னு நெனச்சீங்க, அவ்ளோ தான்… என்ன புரியுதா…” – இவையே சிறுவனான ஆகாஷிடம் அவர் பேசிய விஷயம்.

அவரின் பேச்சில் பாதி அவனிற்கு புரியவில்லை என்றாலும், அவருக்கு தான் பூமியுடன் பழகுவது பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டான். அங்கு அவனின் தன்மானம் சீண்டப்பட, அன்றிலிருந்து பூமியை விட்டு தள்ளியே இருந்தான் ஆகாஷ். முதலில் அவள் எவ்வளவு வம்பிழுத்தாலும், பொறுமையாக இருந்தவன், நாளாக நாளாக அந்த பொறுமை காற்றில் பறக்க, அவனும் பதிலுக்கு சீண்ட, இதுவே அவர்களின் வாடிக்கை ஆகிப் போனது.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவனின் தோளைப் பிடித்து உலுக்கிய சுந்தர், “என்ன மேடம் ஓல்ட் மெமொரிஸா…” என்று வினவினான். அதை ஆமோதித்த ஆகாஷின் மனது மீண்டும் குழம்ப, தன் குழப்பத்தை சுந்தரிடமே கேட்டான்.

“பாட்டிக்கு எங்க கல்யாண விஷயம் தெரியுமா…” என்று கேட்டான் ஆகாஷ்.

“ஹான் தெரியும்… விஷயம் தெரிஞ்சதுலயிருந்து ஒரே புலம்பல் தான்… ஆனா யாரும் அத கண்டுக்கல… நீயும் அத நெனைக்காத… உனக்கு அவன பிடிச்சுருக்கு, அவனுக்கும் உன்ன பிடிச்சுருக்கு… வேற யாரப் பத்தியும் கவலைப்படாத…” என்று கூறியவன், அவளி(னி)ன் மனநிலையை மாற்ற, “ஹே உனக்கு தெரியுமா இவ்ளோ நேரம் ஆகாஷ் கூட தான் பேசிட்டு இருந்தேன்… அவன் என்கூட பேசுவான்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல… இன்னும் மூஞ்சிய தூக்கிட்டு திரிவான்னு நெனச்சேன்… சின்ன வயசுல என்னமோ நான் உன்ன கடத்தி போற மாதிரி முறைப்பான் ஹாஹா…” என்று கூறி சிரித்தான்.

ஆகாஷும் அவனின் செயல்களை நினைத்து சிரித்தான். அதற்கு பிறகு, சுந்தரிடம் பேச ஆகாஷிற்கு எந்த தயக்கமும் இல்லாமல் போக, சுந்தருடன் பாசப்பயிறை வளர்த்தான் ஆகாஷ்.

நேரம் செல்ல, மாமன் மகளைக் காணாததால், (அவள் இருந்திருந்தால், இந்நேரம் இங்கு வந்திருப்பாள் என்பதை ஆகாஷ் நன்கறிவான்.) “ஆகாஷ் எங்க…?” என்று சுந்தரிடம் கேட்டான்.

“அட அதுக்குள்ள உன் ஆள தேடுற… நான் இவ்ளோ நேரம் மூச்சு விடாம பேசியிருக்கவே வேணாம் போலயே… அதான் அப்போவே தெரிஞ்சுதே, எல்லாத்தையும் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் செய்வீங்களாம்…” என்று சுந்தர் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் ஆகாஷை ஓட்டினான்.

‘அடியேய் க்ளோபு… இப்படி சிக்கவச்சுட்டியே…’ என்று செல்லக் கோவம் கொண்டவனிற்கு வெட்கம் வேறு வந்து தொலைத்தது.

“ப்பா… வெட்கப்படுறதா இருந்தா சொல்லிட்டு செய் மா..” என்று மேலும் சுந்தர் கிண்டல் செய்ய, தற்காலிகமாக அவர்கள் பூமியை மறந்தனர். பூமியோ நடுரோட்டில் செய்வதறியாது நின்றிருந்தாள்!!!

தொடரும்...
 

Srd. Rathi

Well-Known Member
பூமிக்கு என்னாச்சு, கீழ விழுந்துட்டாளா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top