நீயாக நான், நானாக நீ 11

Advertisement

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: போன எபிக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி...:giggle::giggle::giggle: இதோ அடுத்த எபி போட்டாச்சு... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...:):):)

ei3AXIJ49169.jpg

அத்தியாயம் 11

அன்று விடுமுறை தினமென்பதால், தாமதமாக எழுந்தனர் ஆகாஷ் மற்றும் பூமி. ஆகாஷ் அவளிடம் பேசிக் கொண்டே சமைக்க, பூமியும் அவனிடம் பேசிக் கொண்டே, அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில், ஆகாஷ் மட்டுமே பேசிக் கொண்டிருக்க, பூமி அலைபேசியில் மும்முரமாக யாருடனோ புலனத்தில் செய்தியின் மூலம் பேசிக் கொண்டிருந்தாள்.

சற்று நேரம் பொறுத்து பார்த்த ஆகாஷ், “ஹே க்ளோபு… யாரு கூட கடலை போட்டுட்டு இருக்க…” என்று கேட்டான்.

அப்போதும் குனிந்த தலை நிமிராமல், “சுந்தர் மாமாட்ட தான் பேசிட்டு இருக்கேன்…” என்றாள்.

அதில் கடுப்பான ஆகாஷ், “வெள்ளெலி… எத்தன தடவ என்ன மாமா சொல்லுன்னு சொல்லிருக்கேன்… அப்போலாம் சொல்லாம, இப்போ அவன் மட்டும் மாமாவாம்…” என்று உள்ளுக்குள் அவளை திட்டியவாறு சமைத்துக் கொண்டிருந்தான்.

சுந்தரை சிறு வயதிலிருந்தே ஆகாஷிற்கு பிடிக்காது… அதற்கான காரணம் சுந்தர் இல்லையென்றாலும், இன்று வரை சுந்தரிடம் அவன் பேசியதில்லை. சுந்தர் அங்கிருக்கிறான் என்று தெரிந்தாலே அங்கிருந்து ஒதுங்கி சென்று விடுவான்.

அதற்கு நேர்மாறாக பூமியும் சுந்தரும் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக சுற்றித் திரிந்தவர்கள். ஆகாஷையும் அவர்களுடன் வருமாறு பூமி அழைப்பாள். ஆனால் அவன் மறுத்து விடுவான். “ஹ்ம்ம் ரொம்ப சீன் போடுற… போ நான் சுந்தர் மாமா கூடவே போய் விளையாடுறேன்…” என்று உதட்டை சுழித்து சென்று விடுவாள், பூமி.

அன்றிலிருந்தே அவளின் ‘சுந்தர் மாமா’வில் ஆகாஷிற்கு வெறுப்பு உருவாகியது. ஆனால் பாவம் அவனிற்கு தெரியாது, பூமி அவனை வெறுப்பேற்றவே சுந்தரை அவனிடம் ‘மாமா’ என்று அழைத்தாளென்று. பூமி சுந்தரை பேர் சொல்லி அழைப்பதே அதிசயம் என்னும்போது எங்கிருந்து மாமா என்று அழைக்கப் போகிறாள்.

கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தவனின் தோளை பிடித்து உலுக்கி, “ஹே ஸ்கை ஹை என்ன ஒரே ட்ரீம்ஸா… யாரு கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க…” என்று கண்ணடித்து கேட்டாள்.

‘இவ ஒருத்தி…’ என்று சலித்துக் கொண்டவன், “என்ன…” என்றான் கடுப்பான குரலில்.

“இப்போ எதுக்கு வேதாளம் முருங்க மரம் ஏறிருக்கு…” என்று அவனை கிண்டல் செய்ய, “என்னன்னு சொல்லு டி உருண்ட…” என்றான்.

“நம்ம சுந்தர் இருக்கான்ல அவன் லீவுக்கு ஊருக்கு போறானாம்… அதான் நம்மள பார்க்க இங்க வந்துட்டு அப்படியே ஊருக்கு போறேன்னு சொன்னான்.” என்று உற்சாகமாக கூறினாள்.

‘இப்போ எதுக்கு இவன் இங்க வரான்… சின்ன வயசுலேயே ஒட்டிப் பிறந்தவங்க மாதிரி ஒன்னா தான் சுத்துவாங்க… ச்சே நான் இப்போ இப்படி இருக்குறப்போ தான் இவன் வரணுமா… கடவுளே எப்படி தான் சமாளிக்கப் போறேனோ…’ என்று மனதில் புலம்பினான் ஆகாஷ். அவனின் மனம் அவனறியாமலேயே அவர்களை அண்ணன் தங்கையாக தான் பார்த்தது…

ஆகாஷ் மறுபடியும் யோசனையில் மூழ்க, “நான் அவனுக்கு கால் பண்ணி வீட்டு அட்ரஸ் சொல்றேன்…” என்று அங்கிருந்து செல்ல முயன்றாள் பூமி.

‘என்னது கால் பண்ண போறாளா…’ என்று அதிர்ந்தவன், அவளின் சட்டையை பிடித்து இழுத்து, “லூசா நீ… இப்போ உன் போன்ல இருந்து கால் பண்ணி என் வாய்ஸ்ல பேசப் போறீயா…” என்று வினவினான் ஆகாஷ்.

“ஸ்ஸ்ஸ் ஆமால… அது ஒரு எக்ஸ்ஸைட்மெண்ட்ல போயிட்டேன்…” என்று சமாளித்தவள், பின் கெக்கபிக்கேவென சிரித்தாள்.

“எதுக்கு டி இப்போ சிரிக்கிற…” என்று கோபமாகக் கேட்டான் ஆகாஷ்.

“அது உன் வாய்ஸ்ல அவன மாமான்னு கூப்பிட்டா அவன் ரியாக்ஷன் என்னவா இருக்கும்னு யோசிச்சேன்… சிரிப்பு வந்துடுச்சு…” என்று சிரிக்க, ஆகாஷிற்கும் சிரிப்பு வந்தாலும், அடக்கியவனாக, “அவனுக்கு மெசேஜ் மட்டும் பண்ணு போதும்…” என்றான்.

“ஏன் நீ பேச வேண்டியது தான…” என்று பூமி கூற, “என்னாலலா பேச முடியாது…” என்று மறுத்தான் ஆகாஷ்.

“பெரிய இந்தியா பாகிஸ்தான் சண்ட… பேச முடியாதாம்…” என்று நொடித்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.

*****

அந்த நாள் முழுக்க யோசனையிலேயே கழிந்தது ஆகாஷிற்கு. இதுவரை பேசாத ஒருவனிடம், எப்படி நெடுநாள் பழகியது போல் பேச என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான். பின் எப்படியும் வேலைக்கு செல்லப்போவதால் சிறிது நேரமே பேச வேண்டிய சூழல் அமையும், அதை எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான், அந்த முடிவில் அவனின் க்ளோபு மண்ணள்ளி போடப்போவதை அறியாமல்.

இரவு உணவை உண்டு கொண்டிருக்கும்போது, “நீ நாளைக்கு லீவு சொல்லிடு…” என்று பூமி கூறவும் புரையேறியது ஆகாஷிற்கு.

“எதுக்கு லீவு…” என்று ஆகாஷ் கேட்டதும், அவனை ஒரு மாதிரி பார்த்தவள், “நாளைக்கு சுந்தர் வரான்னு சொன்னேன்ல…” என்றாள்.

“அதுக்கு நான் ஏன் லீவு போடணும்…”

“லூசா நீ… நீ தான இப்போ பூமி… அவன் உன்ன தான பார்க்க வரான்… அப்போ நீ ஆஃபிஸ் போவியா…” என்று சற்று காட்டமாகவே கேட்டாள் பூமி.

ஆகாஷிற்கு அது புரிந்தாலும், இன்னமும் சுந்தரிடம் பேச அவனிற்கு சங்கடமாக தான் இருந்தது. அதை புரிந்து கொண்ட பூமி, “நானும் ஆஃபிஸ் போயிட்டு ஒரு மணி நேரத்துல வந்துடுவேன்…” என்றாள்.

“அதென்ன ஒரு மணி நேரம்… லீவே போட வேண்டியது தான…” என்று ஆகாஷ் கூறவும், “அந்த குடுமி மண்டையன் எப்படியும் என் லீவ அப்ரூவ் பண்ண மாட்டான்… நாளைக்கு அவன் வரமாட்டான்னு உளவுத்துறை ரிப்போர்ட் சொல்லுச்சு… அதான் ஒரு மணி நேரம் மட்டும் தலைய காமிச்சுட்டு வந்துடுவேன்….” என்றாள்.

“உளவுத்துறையா… யாரது…” என்று ஆச்சரியத்துடன் கேட்க, “ஆமா ஆமா அந்த குடுமி மண்டையனோட பி.ஏ வர்ஷாவும் மகேஷும் லவர்ஸ் தான… அவகிட்ட குடுமி நாளைக்கு வருவானா மாட்டான்னான்னு கேக்க சொன்னோம்… ஆமா இவ்ளோ நாள் அங்க இருக்க… இது கூட தெரிஞ்சு வச்சுக்க மாட்டீயா…” என்று அவள் கேட்க, அவனும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தான். ‘ச்சே இது நமக்கு தோணாம போச்சே…’

பூமி சாதாரணமாக ‘குட் நைட்’ சொல்லிவிட்டு அறைக்குள் செல்ல, அவனிற்கு தான் படபடப்பாக இருந்தது. ‘எல்லாம் இந்த உருண்டையால… இன்னிக்கு தூக்கம் வருமான்னு கூட தெரிலையே… ஐயோ எக்ஸாமுக்கு கூட நான் இவ்ளோ டென்ஷன் ஆகல…” என்று புலம்பியவன், நேரம் கழித்தே உறங்கினான்.

*****

அடுத்த நாள் காலை பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தாள் பூமி. அவள் வேலை செய்வதை… வேலை என்ற பெயரில் ஏதோ செய்வதை சமையலறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்.

‘எனக்கு ஏற்கனவே என்னமோ மாதிரி இருக்கு… இதுல இவ வேற…’ என்று அலுத்துக் கொண்டான்.

அலுவலகம் செல்லும்முன், “நான் சீக்கிரம் வந்துடுவேன்… சப்போஸ் எனக்கு முன்னாடி அவன் வந்தா, ஏதாவது பேசி சமாளிச்சுடு….” என்றாள். அவனும் வேறு வழியேயில்லாததால் தலையசைத்தான்.

வீட்டிலிருந்த ஆகாஷ், பூமி சொன்னதைப் போல, சுந்தர் அவளிற்கு முன்னே வந்தால் எப்படி சமாளிப்பது என்று மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான். அதிலேயே ஒரு மணி நேரம் கழிய, பூமியின் வரவையே எதிர்நோக்கி காத்திருந்தான்.

அப்போது அழைப்பு மணி ஓசை கேட்க, யாராக இருக்கும் என்று கதவின் இடுக்கின் வழியே கண்டான். வெளியில் பூமி நின்றிருக்க, மனதில் தோன்றிய நிம்மதியுடன் கதவைத் திறந்தவனிற்கு பூமியின் அருகே நின்றிருந்த சுந்தரைக் கண்டதும் அந்த நிம்மதி வற்றிப்போனது.

அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தவனை, பூமி தான் கையில் கிள்ளி சுந்தரை வரவேற்க சொன்னாள். அவன் என்ன பேசுவது என்று முழித்துக் கொண்டிருக்க, சுந்தரே, “ஹே பூமி… என்ன ஃப்ரீஸ் ஆகி நின்னுட்ட… என்ன பார்த்ததும் சண்டை போடுவன்னு நெனச்சேன்…” என்றான்.

அதற்கும் எதுவும் பேசாமல் நின்றவனைக் கண்ட பூமி மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு, “பூமி… வெளிய நிக்க வச்சு பேசுவியா… உள்ள கூட்டிட்டு போ…” என்று கூறினாள்.

அப்போது தான் சூழ்நிலை உணர்ந்த ஆகாஷ், “வா…” என்ற ஒற்றை சொல்லுடன் உள்ளே நகர்ந்தாள். சுந்தரும் உள்ளே செல்ல, ‘நல்ல வேள மரியாதை குடுக்கல… இல்ல இப்போவே அவனுக்கு சந்தேகம் வந்துருக்கும்…’ என்று நினைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

அங்கு அதற்குள் சுந்தர் ஆகாஷிடம் (அவனிற்கு பூமி) கேள்விகளை கேட்க ஆரம்பித்திருந்தான். ஆகாஷும் ‘ம்ம்ம்’ ‘ஹுஹும்’ என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தான். இடையில் பூமியிடம் ‘என்னைக் காப்பாற்று’ என்ற பார்வை வேறு வீசினான்.

இவையனைத்தையும் கண்டும் காணாமல் பார்த்திருந்தான் சுந்தர். சிறிது நேரத்திலேயே தலை வலிப்பதாகக் கூறி அறைக்குள் சென்று விட்டான் ஆகாஷ்.

‘அச்சோ இப்படி சொதப்பிட்டானே… இப்போ வேற வழியில்ல நம்ம தான் சமாளிச்சாகனும்…’ என்று மனதிற்குள் நினைத்த பூமி, “அது… அவளுக்கு உன் மேல கொஞ்சம் கோபம்…” என்று சுந்தரிடம் கூறினாள்.

அவன் அவளை ஒரு மாதிரி பார்க்க, ‘என்ன இவன் இப்படி பார்க்குறான்… ஒரு வேள நம்பலையோ…’ என்று எண்ணியவள், “என்ன…?” என்று கேட்டாள்.

“இல்ல நீ என்கூட பேசுவன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல… அதான் ஜஸ்ட் அ ஷாக்…” என்றான் சுந்தர்.

‘ஐயையோ மண்ட மேல இருக்க கொண்டைய மறந்துட்டேங்கிற மாதிரி இவனுங்க ரெண்டு பேருக்குள்ள இருக்க சண்டைய மறந்துட்டேனே… சரி சமாளிப்போம்…’

“அது அறியாத வயசுல புரியாம போட்ட சண்டை இன்னுமா அத பிடிச்சு தொங்கிட்டு இருக்கணும்…” என்று இளிப்புடன் கூறினாள்.

அதைக் கேட்டு சிரித்த சுந்தர், “என்ன அந்த லூசுகிட்ட பேசி பேசி உனக்கும் அவ ஸ்லாங் ஒட்டிக்கிச்சோ…” என்றான்.

‘ஆத்தி பயபுள்ள ஷார்ப்பா இருக்கான்… நம்ம தான் உஷாரா இருக்கணும்…’ என்று மீண்டும் மனதிற்குள் நினைத்தவள், அவனிடம் ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.

பின் பேச்சு அவர்களைப் பற்றி திரும்பியது. பூமி ஆகாஷின் பணியிடம் பற்றி கூறினாள். என்ன தான் சுந்தரைப் பற்றிய முழு விபரமும் அவளிற்கு தெரிந்திருந்தாலும், ஆகாஷிற்கு தெரியாது என்பதால் சுந்தர் கூறுவதை புதிதாகக் கேட்பது போலவே கேட்டாள்.

“ஐ’ம் அ ஜர்னலிஸ்ட் இன் ****. இதுவரைக்கும் பெங்களூருல இருந்தேன்… இப்போ சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபெர் ஆகிட்டேன்… இங்க வேலைய ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி ஒரு சின்ன பிரேக் எடுத்து ஊருக்கு போயிட்டு வரலாம்னு இருக்கேன்…” என்றான் சுந்தர்.

“அப்பறம் எங்க ஸ்டே பண்ண போற..?”

“ஆஃபிஸ் பக்கத்துலயே என் பிரென்ட் வீடு எடுத்து தங்கிருக்கான்… நானும் அவனும் அந்த வீட்ட ஷேர் பண்ணிக்கலாம்னு இருக்கோம்…”

பேச்சு திசை மாறி எங்கெங்கோ சென்று அவர்களின் சிறு வயது வாழ்க்கையில் வந்து நின்றது.

“உனக்கு நியாபகம் இருக்கா… நீ எங்களோட விளையாட வரலைனா, அவ உன் முன்னாடி என்ன மாமான்னு கூப்பிடுவா… நீ அதுலயே டென்ஷன் ஆகிடுவ… ஹாஹா உனக்கு தெரியுமா, உன் முன்னாடி மட்டும் தான் அவ என்ன மாமான்னு கூப்பிடுவா… மத்த நேரமெல்லாம் வாடா போடான்னு தான் கூப்பிடுவா… கேட்டா, மேடமுக்கு உன்ன வெறுப்பேத்தி பார்க்கணுமாம்…” என்று சிரித்துக் கொண்டே கூறினான் சுந்தர்.

‘நல்ல வேள இத அவன்கிட்ட சொல்லல…’ என்று நினைத்து பெருமூச்சு விட்டாள், பூமி.

அவளின் பெருமூச்சிற்கான காரணத்தை தவறாக யூகித்த சுந்தர், “ஆனா நீ ஏன் எங்க கூட விளையாட வரலன்னு அதுக்கு அப்பறம் தான் எனக்கு புரிஞ்சது. பூமி மேல அவ்ளோ பொசசிவ்வா இருந்த ஆகாஷ் ஏன் அவளவிட்டு விலகுனான்னு நானே நிறைய தடவ யோசிச்சுருக்கேன்… ஆனா அதுக்கு காரணம் எங்க பாட்டின்னு அப்பறம் தான் எனக்கு தெரிஞ்சுது…” என்றான்.

பூமிக்கு அவன் கூறிய அனைத்தும் புதிதே… சிறு வயதில், ஆகாஷிற்கு பூமியின் மேல் மீயுடைமை உணர்விருந்திருக்கிறது என்பதே ஆச்சரியம்… ஏனெனில், அவளிற்கு நினைவிருக்கும் வரை அவளிற்கு தெரிந்ததெல்லாம் அவளை விலக்கி வைக்கும் ஆகாஷே… ஆனால் அவன் அவ்வாறு விலகியிருப்பதன் காரணம் தன் பாட்டி என்பது அதிர்ச்சியைத் தான் தந்தது.

‘என்னடா இது புது ட்விஸ்ட்டா இருக்கு… அவன் எப்ப பாரு என்ன மொறச்சுட்டே இருக்க காரணம் அந்த கிழவியா… ம்ம்ம் வாய்ப்பிருக்கு… அந்த கிழவி சும்மா இருக்காம ஏதாவது வம்பிழுத்துருக்கும்… அதான் கருவாயனுக்கு கோபம் வந்துருக்கும்…’ என்று ஆகாஷிற்கு ஆதரவாக சிந்தித்த மனதை அப்போதும் அவள் உணரவில்லை.

“சாரி ஆகாஷ்… எங்க பாட்டி உன்ன எப்படி பேசிருப்பாங்கன்னு எனக்கு புரியுது… ரியலி சாரி ஃபார் தாட்…” என்று மன்னிப்பு கேட்டான் சுந்தர்.

‘அச்சோ அந்த கிழவி என்ன சொல்லுச்சுன்னு தெரிலயே… சரி பொதுவா ஏதாவது சொல்லி விடுவோம்…’

“ஹே சுந்தர்… தப்பே பண்ணாத நீ எதுக்கு சாரி கேக்குற…” என்று கூறி ஏதோ சமாளித்தாள் பூமி.

“அப்பறம் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிருக்காம்… கங்கிராட்ஸ் ப்ரோ…” என்று சிரிப்புடன் கூறியவன், “இப்போ என்ன மேரேஜ்ஜுக்கு ட்ரையல் பாக்குறீங்களா… எப்படி போகுது ப்ரீ- மேரேஜ் லைஃப்…” என்று ஆர்ப்பாட்டமாக கேட்டான் சுந்தர்.

‘அடப்பாவி… அந்த கல்யாணத்த நிறுத்த ஏதாவது ஐடியா குடுன்னு சொன்னா, இங்க வந்து வாழ்த்து சொல்லிட்டு இருக்கீயா…’ என்று உள்ளுக்குள் பல்லைக் கடித்தாள், பூமி.

“அது தான் எல்லாருக்கும் தெரியுமே… டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி போயிட்டு இருக்கு…” என்றாள் பூமி.

“ஹாஹா அது தான் சூப்பரா இருக்கும்… எப்பவும் ஏதாவது சண்டை அதுக்கப்பறம் சமாதானம்னு வாழ்க்கையோட எந்த இடத்துலயும் சலிப்பே தட்டாம சுவாரசியமா போகும்… இன்ஃபேக்ட் ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் கப்பிள்…” என்று அவன் கூறவும் பூமிக்கு மனதிற்குள் குறுகுறுப்பாக இருந்தது.

ஏனோ முகம் சூடாகி சிவப்பது போலிருக்க, சுந்தரிடம் அதைக் காட்டாமல் மறைக்கும் பொருட்டு, “பூமி தலைவலிக்குதுன்னு உள்ள போய் ரொம்ப நேரமாச்சு… நீ இங்க வெய்ட் பண்ணு… நான் போய் பார்த்துட்டு வரேன்…” என்று கூறினாள்.

அவனோ நமுட்டுச் சிரிப்புடன் ‘சரி’யென்று தலையசைக்க, ‘இவன் எதுக்கு இப்படி சிரிக்கிறான்… என்ற யோசனையுடன் உள்ளே சென்றாள், பூமி.

தொடரும்...
 

Srd. Rathi

Well-Known Member
பாட்டி என்னதான் சொல்லுச்சு, அத சொல்லு சுந்தரு :cautious::cautious::cautious:
 

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
பாட்டி என்னதான் சொல்லுச்சு, அத சொல்லு சுந்தரு :cautious::cautious::cautious:
அதான சும்மா சும்மா பாட்டி சொன்னதுனாலன்னு சொல்லிட்டு இருக்கான், என்ன சொன்னாங்கன்னு சொல்ல மாட்டிங்குறானே:cautious::cautious::cautious:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top