தூரம் போகாதே என் மழை மேகமே !! - 78

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
#1
"உன் அப்பா ஒரு எழுத்தாளர். எழுத்தாளர் என்றால் வெறும் கதைகளை எழுதுபவரல்ல. பல்வேறு தொழில்களை பற்றியும் அந்த தொழிலை எப்படி செய்தால் எப்படி இலாபம் கிடைக்கும், அந்த தொழிலில் நஷ்டங்கள் உண்டாக காரணமென்ன என்பது பற்றியும் கட்டுரை எழுதுபவர். அவரது புத்தகங்கள் இன்னமும் புழக்கத்தில் உள்ளது. அவரது குறிப்புகளால் பயன் பெற்றவர்கள் ஏராளம். சென்னை செல்லும் போது அவரது ஒரு புத்தகம் என்னிடம் இருக்கிறது அதை எடுத்து கொடுக்கிறேன். நீயும் அதை படித்து பார் உனக்கே புரியும்.” என்று அவளது அப்பாவை பற்றி சொன்னான் அர்ஜூன்.


எழுதாளர் என்று அர்ஜூன் சொன்னதும் ஆதிரைக்கு குழப்பமாகிவிட்டது. அண்ணி என் குடும்பம் மீனவ குடும்பம் என்றார்களே. இவன் வேறு சொல்கிறானே என்று எண்ணியதை அப்படியே கேட்டாள் ஆதிரை.


அவளை விசித்திரமாக பார்த்த அர்ஜூன், “ஆதிரை. உண்மையிலே உன் அம்மா அப்பாவை பற்றி எதுவும் தெரியாமல்தானா இவ்வளவு நாள் இருந்தாய். என்ன தொழில் ? என்ன எதுவென்று கூட ஒன்றுமே வா" என்று ஆச்சரியமாகவே கேட்டான்.


அவனது ஆச்சரியம் அவளுள்ளும் இப்போது இருந்தது. ஆதிரைக்கு அவர்களை பற்றி அறிய வேண்டும் என்ற துடிப்பே இல்லைதான். சொல்ல போனால் அவர்களை எண்ணும் போது அந்த சுனாமியின் நினைவில் நடுக்கமுறுவதை உணர்ந்ததாலே தன் அண்ணன் அவளிடம் அது பற்றி பேசியதில்லை. இந்த பயம் நடுக்கமெல்லாம் வளர்ந்ததில் குறைந்து இல்லாமல் போனதுதான். ஆனாலும் ஒதுக்கபட்ட ஒன்றை மீண்டும் எடுத்து பேச அவளும் நினைக்கவில்லை. அவள் அண்ணனும் சொல்ல முயலவில்லை. இப்போது அர்ஜூனுடன் பேசும் போதுதான் இவையெல்லாம் கேட்டறிய வேண்டுமென்ற உந்துதலலும் எப்படிதான் அர்ஜூனின் குடும்பம் தன் குடும்பத்திலிருந்தது பிரிந்தது என்று அறிந்திட வேண்டுமென்ற துடிப்பும் ஏற்படுகிறது.


அவனிடம் இந்த முழு விளக்கம் கொடுக்க பிடிக்காமல், “அவசியமென்று தோன்றவில்லை. என் அம்மா அப்பாவை பற்றி தெரிந்துக் கொண்டால் மட்டும் என்ன அவர்கள் உயிருடன் வந்து என்னை கண்ணே மணியே என்று கொஞ்சவா போகிறார்கள் என்று மனதின் மூலையில் போட்டு வைத்திருந்தேன். இப்போது உங்களோடு தொடர்புடைய உறவாகி போன பிறகு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று தோன்றியது . அதனால் கேட்டேன்.” என்று தன் எதிரே குதித்தோடிக் கொண்டிருந்த அருவியை பார்த்த வண்ணம் அக்கறையற்றது போல சொல்லி முடித்தாள்.


“ஓ… என் தொடர்புடைய உறவா. அவர்களுடன் உனக்கு தொடர்பே இல்லையா?.” என்று கேளியாக கேட்டான்.


எனக்கு தொடர்பே இல்லையா? அதெப்படி முடியும். ஏன் இப்படி பேசுகிறான் என்று திகைப்புற்று அவனை பார்த்தவள் அவனது கேளி பார்வையில் உண்மை உணர்ந்திட சட்டென சிரித்து, “ சரிதான். இதற்கும் இப்படி பேச வேண்டுமா அர்ஜூன். சரி திருத்திக் கொள்கிறேன். இருவருக்கும் தொடர்புடைய உறவு.. இப்போது சொல்கிறீர்களா? தாத்தாவின் தொழில் எடுத்து செய்திருந்தாலும் துணி கடை வியாபாரியாக இருந்திருக்கலாம். அதுவும் இல்லாமல் மீனவர் என்று அண்ணி சொன்னதும் இல்லாமல் என் அப்பா எழுத்தாளர் எங்கிறீர்களே. " என்று சந்தேகத்தை கேட்டாள்.


“ஆதிரை. உன் அப்பா எழுத்தாளரும் மீன்வரும்.” என்றவனை குழப்பமாக பார்த்து, “அதெப்படி" என்றாள் ஆதிரை.


“சொல்கிறேன். மாமா அதுதான் உன் அப்பா மீனவ தொழிலை பற்றி ஆராய்ந்து கட்டுரை எழுத சென்ற இடத்தில் உன் அம்மாவினை சந்தித்திருக்கிறார். உன் அம்மா நன்றாக படகு செலுத்துபவரும்கூட. தொழில் முறையில் எல்லாவிதமான குறிப்புகளும் கஷ்டங்களும் லாபங்களும் உன் அம்மாவின் மூலமாக அறிந்து மாமா புத்தகத்தையும் முடித்தார். முடித்துவிட்டு கிளம்பும் போதுதான் அத்தையின் மீதான காதலை அவர் உணர்ந்திருக்கிறார். ஆனால் நம் தாத்தாவின் பெற்றவர்கள் வீட்டில் எதிர்ப்பு அதனால் எதிர்த்துக் கொண்டு வீட்டைவிட்டு வந்து உன் அம்மாவை திருமணம் செய்துக் கொண்டார். உன் அம்மாவுடன் மீன் பிடி தொழிலையும் கற்றுக் கொண்டு எழுத்தாளர் தொழிலுடன் அவ்வப்போது மீன் பிடிப்புக்கும் உன் அப்பா போவது வழக்கம் என்று அரவிந்த் மாமா சொன்னார். அதனால் உன் அப்பா மீனவர் மற்றும் எழுதாளர் சரியா?” என்றான்.


“சரிதான். ஆனால் நம் பாட்டியும் என் அப்பாவின் திருமணத்தை ஏற்கவில்லையா?” என்று கேட்டாள்.


“அது ...” என்று இழுத்தவன், “ நம் பாட்டிக்கு உன் அப்பா எங்கு இருப்பார் என்றே தெரியாதே. அப்படி இருக்க திருமணத்தை ஏற்றிருப்பாரா என்று தெரியவில்லை.” என்றான். அவனை புரியாமல் பார்த்த ஆதிரையை நோக்கி, “புரியவில்லைதானே" என்றான் அர்ஜூன். அதற்கு ஆமாம் என்பதுப் போல் தலையை ஆட்டி அவன் சொல்வதை கவனித்தாள்.


"நம் பாட்டி நம் தாத்தா பிரிந்து சென்ற 10 ஆண்டுகள் கழித்து லண்டனுக்கு போவதாக சொன்னதை நம் தாத்தாவின் வீட்டில் அனுமதிக்கவில்லை. தாத்தா திரும்பி வராத காரணத்தால் மனம் வெறுப்புற்ற பாட்டி அவரின் பெற்றோரின் நிபந்தனைபடி அவரது பிள்ளைகளில் ஒருவரான உன் அப்பாவை அவர்களிடம் விட்டுவிட்டுதான் மற்றொரு குழந்தையை அதுதான் என் அம்மாவை மட்டும் தூக்கிக் கொண்டு லண்டன் வந்துவிட்டார். அதன் பிறகு கடித போக்குவரத்து இருந்து கடைசியில் அதுவும் இல்லாமல் போனதாக என் அம்மா சொன்னாங்க. நம் தாத்தாவின் பெற்றோர்கள் வேறு ஊருக்கு போய்விட்டதால் கடிதம் அவர்களை அனுகாமலே திரும்பிவிட்டது.


அதனால் லண்டன் சென்ற என் பாட்டி மீண்டும் இந்தியா வரவே இல்லை. என் அம்மாவும் திருமணத்திற்கு பின்பே இந்தியா வந்தார்கள். தன் அண்ணா மற்றும் அப்பாவை பற்றி அறிய முடியாதப்படி நம் பாட்டி என் அம்மாவிடம் எந்த தகவலும் கொடுத்திருக்கவில்லை. அதனால் அந்த சொந்தம் அப்படியே விட்டுபோய்விட்டது. நம் பாட்டி மறைவிற்குபின் என் அப்பாவும் தொழிலுமே என் அம்மாவிற்கு உலகமாகி போனது. காலப்போக்கில் அப்படி ஒரு சொந்தம் இருப்பதே மறந்து போனது.” என்று சிவராமன் பிரிந்தப்பின் ஏன் அர்ஜுனின் அம்மாவும் ஆதிரையின் அப்பாவும் தொடர்பில் இல்லாமல் போனார்கள் என்று விளக்கம் சொன்னான் அர்ஜூன்.


“ஓ… புரிகிறது. ஆனால் என் அப்பா என் அண்ணாவிடமாவது இது குறித்து சொல்லியிருக்கலாமே! இப்படி ஒரு அத்தை எங்கோ இருப்பது குறித்து.” என்று குழப்பமாக கேட்டாள் ஆதிரை.


“சொல்லியிருக்கலாம். அப்போது உன் அப்பாவின் மனதில் என்ன இருந்தது என்று அவருக்கு மட்டும் தானே தெரியும். என் அம்மாவை பற்றியும் நம் பாட்டியை பற்றியும் உங்களிடம் சொல்லி என்ன பயன் என்று எண்ணியிருக்கலாம். கடித போக்குவரத்து கூட இல்லாமல் இருக்கும் அவர்களை பற்றி சொன்னாலும் எங்களை நீங்க அந்த தருணத்தில் அனுகி இருக்க முடியுமா என்றால் வாய்ப்பே இல்லைதான். அதுவாக கூட காரணம் இருக்கலாம். ஆனால் உண்மை காரணம் உன் அப்பா மட்டும் அறிந்த உண்மையாகும்" என்று தன்னிலை விளக்கமாக சொன்னான் அர்ஜூன்.


“என்னமோ எல்லோரும் சேர்ந்து எனக்கும் என் அண்ணாவுக்கும்தான் அனியாயம் செய்துவிட்டார்கள். நம் பாட்டியும் தாத்தாவும் செய்த வினை நாங்க கஷ்டபடும்படியாக ஆனது. யாருமில்லையென்ற தைரியத்தில் தானே அந்த விஸ்வாவும் என்னிடம் உங்களை போல பேசி ஏமாற்றியது. அதுமட்டுமல்லாமல் என்னை பற்றி ஊர் முழுக்க தப்பு தப்பாக சொல்லி வைத்திருக்கிறான். அப்போதே நீங்க என் அத்தை மகனாக இருப்பது தெரிந்திருந்தால் அவனுக்கு அந்த தைரியம் வந்திருக்குமா? ஏன் அண்ணாவும் அண்ணியும்தான் என்னை விட்டு எனக்கு தெரியாமல் உங்களிடம் வந்து இருக்க முடியுமா? முதல் வேலையாக என் அத்தை எனக்கு phone செய்து சொல்லியிருக்க மாட்டார்கள். கடைசியில் அந்த விஸ்வாவிற்குதான் ஆளில்லா இடம் பெயர் போட்டுக் கொள்ளலாமென்ற துணிவு வந்துவிட்டது. இப்போது என்னிடம் அவனால் வாலாட்ட முடியுமா? “ என்று மனதில் நினைப்பதாக எண்ணி வாய்விட்டே சொல்லி எதிரே தெரிந்த அருவியில் விஸ்வாவின் முகம் இருப்பது போல கோபமாக வெறுத்து பார்ப்பது போல் பார்த்து சொல்லி தீர்த்தாள் ஆதிரை.


ஆதிரை விஸ்வாவை திட்டி தீர்பதை பார்த்த அர்ஜூனுக்கு திருப்தியே வந்தது. அதனோடு அவனிடமிருந்து அவளை காக்க கூடியவனாக தன்னையே ஆதிரை நினைப்பதை எண்ணி அவனுக்கு பெருமிதமாகவும் இருந்தது. இருந்தும் ஆதிரையின் கோபம் இந்த சூழலுக்கு அவசியமில்லை என்பதை உணர்ந்து அவள் அருகில் நெருங்கி அமர்ந்து அவளது தோள் மீது கையை போட்டு, “ பாவம் விட்டுவிடு. பார்வையாலே அதனை எரித்து ஆவியாக்கிவிடுவாய் போல" என்று கேளியாக சிரித்தான்.


அவன் சொன்னதில் அர்த்தம் புரியாமல் அவன்புரம் திரும்பிய ஆதிரையின்புரம் ஏற்கனவே திரும்பியிருந்த அர்ஜூனின் முகமும் அவன் கண்ணில் தெரிந்த குறும்பும் அவளை திக்குமுக்காக்கியது. அவன் எப்போது அவள் அருகில் வந்து அமர்ந்தான். அதனோடு என்ன ஆவியாகி போகும் என்று சொல்கிறான் என்று புரியாமல் முகம் சூடேற தலை தாழ்த்தி, “எ.. என்ன .. எது ஆவியாகும்..புரியவில்லையே" என்றாள் ஆதிரை.


“ம்ம்.. ஒன்றுமில்லை. அந்த அருவியை அப்படி வெறித்தாயே அதுதான் கேட்டேன். உன் கனல் பார்வையில் அது ஆவியாகி போகுமோ என்று அச்சம் அதுதான் சொன்னேன்" என்று சாது போல சொன்னான்.


அவன் சொன்னதில் " என்ன என் பார்வையில் ஆவியாகிவிடுமா? இருந்தாலும் உங்களுக்கு நக்கல் அதிகம்தான்" என்று இயல்பாக சொல்லி சிரித்தாள் ஆதிரை. சிரித்த வண்ணமே கவனமாக அவனிலிருந்து விலகி அமர்ந்தாள்.


அதனை கண்டுக்கொண்ட போதும் காணாதவன் போல , "ம்ம் இது சரி.. ஏன் கோபமும் வெறுப்பும். அதுவும் என்னுடன் இருக்கும் போது இந்த குட்டி தலைக்குள் கண்டதையும் போட்டு இது போல கோபம் கூடாது. சரியா" என்று அவளது தலையை லேசாக ஆட்டிவிட்டான்.


ஆதிரையும் இயல்பாகி போனாள். அதன் பிறகு அர்ஜூனும் ஆதிரையும் நிறைய பேசினார்கள். பறந்து விரிந்த இந்த பூமி முதல் வானம் வரை இந்த உலகில் பேசுவதற்கா பஞ்சம். அவர்களும் பேசினார்கள். ஒருவரை ஒருவர் சந்தித்து இந்த மூன்று மாதத்தில் பேசிக்கொள்ளாத பலவும் பேசினார்கள். அவர்களின் சிறு வயது குறும்புகளை ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லி சொல்லி சிரித்தனர். ஒருவருக்கு ஒருவர் பிடித்தவை பிடிக்காதவை என்று பகிர்ந்துக் கொண்டனர். இருவருக்கும் பலதும் ஒற்றுமை இருக்க அதை பற்றி பேசி இருவருக்கும் ஆனந்தம் வர கலகலத்தனர். ஆனால் நேரம் போனதைதான் இருவரும் மறந்து போயினர். அந்தி மாலை நேரம். சூரியன் இன்னும் சில நிமிடங்களில் மறைந்துவிடும் என்ற நிலை. மதியம் வரும் போது சாப்பிட்டது இந்த நடை பயணத்திலும் கலகலத்த பேச்சிலும் கரைந்து இருவருக்கும் லேசாக பசிக்க ஆரம்பித்தது.


“அர்ஜூன்.. நேரம் போனதே தெரியவில்லை. வாங்க வீட்டுக்கு போகலாம். எனக்கு பசிக்க ஆரம்பித்துவிட்டது" என்று மன நிறைவு முகத்தில் தெரிய சொன்னாள் ஆதிரை.


அர்ஜூனுக்கும்தான் லேசாக பசித்திருந்தது. ஆனால் உடனே வீட்டுக்கு செல்லவும் மனமில்லை. ஆதிரையுடனான இந்த தடையற்ற நீரோடை போன்ற பேச்சு இன்னும் தொடர விரும்பி, “ பசிக்கிறதா? அப்போது அருகிலிருக்கும் தோட்டத்திலிருந்து சில ஆப்பிள்களை பறித்து சாப்பிடுவோம். சூரியன் மறையும் போது இந்த அருவி மஞ்சள் நிறம் கொண்டு தங்க அருவி போல பார்க்க அழகாக இருக்கும். அதனோடு என்னை போல நட்சத்திரம் பார்க்கவேண்டுமென்று சொன்னதெல்லாம் சும்மா வாய் வார்த்தை போல தெரிகிறது. இப்போதே கிளம்ப வேண்டுமென்றால் அதனை எப்படி பார்ப்பாய்" என்றான் அவனது காரணம் மறைத்து.


அவன் சொல்லில் விழி விரித்து, “அவ்வளவு அழகாகவா இருக்கும் அர்ஜூன். கல் அருவி தங்க அருவியாகுமா? அதை பார்க்காமல் போவதா. இவ்வளவு நேரம் இருந்தோம் அதையும் பார்த்துவிட்டு போகலாம். அதனோடு நீங்க சொன்ன அந்த நட்சத்திரத்தையும்தான் பார்த்துவிட்டு போகலாம். பசிக்கு ஆப்பிள் இங்கேயே கிடைக்குமென்றால் எல்லாவற்றையும் இப்போதே பார்க்க எனக்கும் ஆசைதான்" என்று சிறு பிள்ளை போல சொல்லிக் கொண்டு எழுந்து கைகளை குறுக்காக நீட்டி நெட்டி முறித்தாள்.


“பார்க்க ஆசையென்றுவிட்டு. எழுந்துவிட்டாய். “ என்று அவனும் உடன் எழுந்தான்.


“ஆப்பிள் பறிக்க போக வேண்டாமா. அந்த மரப்பாலம் கடந்து போக வேண்டுமே" என்று கேள்வியாய் கேட்டாள் ஆதிரை.


“நான் போய் பறித்து வருகிறேன். நீ அருவியின் அழகை ரசி.. நீ வேறு எதற்கு திரும்பவும் இந்த பாறைகளில் இறங்கி ஏறுகிறாய்" என்று சொல்லிவிட்டு வேகமாக இறங்கி சென்றான் அர்ஜூன்.


பதிலேதும் சொல்லாமல் அவன் போவதையே புன்னகையுடன் பார்த்திருந்தாள்.இப்போது அர்ஜூனுக்கும் ஆதிரைக்கும் இடையில் எந்தவித இறுக்கமான நிலை இல்லை. கணவன் மனைவி என்று இல்லையென்றாலும் தன்னை அர்ஜூன் ஒரு நல்ல தோழியாகவாது நினைக்கிறானே என்று ஆதிரைக்கு மனம் மகிழ்ந்தது. அதே மனனிலையில் அருவியை பார்த்தவளுக்கு அந்த தங்க அருவியின் உவமைக்கு ஏற்ப சூரிய ஒளி நீரில் பட்டு எதிரொளித்ததில் அந்த அருவி மின்னியது கண்ணிற்கு விருந்தாக இருந்தது. ஆனால் அந்த கிளர்ச்சி அந்த சூழலுக்கும் வெயிலியின் வெளிச்சதிற்கும் சம்மந்தமே இல்லாமல் அந்த அருவியை கடந்து அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்த கருனிற மேகத்தை பார்த்ததும் நின்றது. இது அந்த தீவின் மழை மேகமாக இருக்குமோ!. இருக்காது. இருந்தாலும்தான் என்ன அந்த மேகம் எனக்கு கடந்த கால நினைவுகள் வரதானே காரணமாகியிருக்கிறது. அதனால் எந்த பாதிப்பும் இருக்காது என்று எண்ணி பெருமூச்சுவிட்டாள் .


அந்த மழை மேகம் அந்த தீவின் மழை மேகமே. அந்த தீவில் போலவே தரையிலிருந்து மிகவும் அருகில் இருந்தது. ஆனால் அவள் மீது மழையை பொழியும் என்று எதிர்பார்ப்பிற்கு விரோதமாக அவளை கடந்து அர்ஜூன் சென்றதற்கு எதிர்புறமாக நகர்ந்து காட்டின் மரங்களை ஊடுருவி நகர்ந்து சென்றது. அப்படி மரங்களின் நடுவே நகரும் மழை மேகத்தை பார்த்ததும் ஆதிரைக்கு அந்த மரவீட்டிலிருக்கும் போது அவளை அனுகி வந்த மழை மேகமாகவே நினைவு வந்தது. அப்போதுதான் திகேந்திரரின் முதல் ஜன்ம கதையை அறிய நேர்ந்தது. ஒருவேளை அதுபோல இப்போது இந்த மழை மேகம் மூலம் அவரின் இரண்டாவது ஜன்ம கதை தெரிய வாய்ப்பிருக்குமோ. அந்த ஓலை சுவடியின் மூலமும் அதனை அறியலாம்தான். ஆனால் முழு விவரம் அதில் இருக்குமோ என்னமோ. அதில் எந்த அளவு விசயம் இருக்குமென்று தெரியவில்லையே. ஆனால் இந்த மழை மேகத்தை முழுதும் நம்பலாம்.


நான் விரும்புவதை அறிய இந்த மழை மேகம்தான் சரியான வழி. நான் மழை மேகம் மூலம்தான் உண்மை அறிய வேண்டுமென்று இருந்ததோ என்னமோ இத்தனை நாள் கடந்த பின்பும் என் கண் முன்னே அந்த மேகம் என்னை கடந்து சென்றிருக்கிறது. என்று பலதும் தன்னுள் எண்ணிக்கொண்டு வேகமாக அந்த கற்குவியலிலிருந்து இறங்கி அந்த மழை மேகம் சென்ற திக்கை நோக்கி ஓடினாள். அர்ஜூனையும் மறந்து அவள் ஓடினாள். ஏதோ வசியம் போல அந்த மழை மேகம் மட்டுமே ஆதிரையின் விழியில் தெரிந்தது.


அவள் எண்ணம் போலவே அந்த மழை மேகம் அவளது அந்த தீவின் மழைமேகம்தான். போன ஜன்மத்தில் அவளது தவத்தினால் உருவாக்கபட்ட நினைவுகளின் மேகம் அது. ஆதிரை அர்ஜூனின் திருமணம் முடிந்ததும் உயிர்ப்பற்று போகுமாறு சித்திக்கபட்ட அந்த மேகம் அவர்கள் திருமணத்திற்கு பின் காணாமல் போயிருந்தது. இப்போதும் அதுவாக உயிர்பெற்று ஆதிரைக்கு கனவை உண்டாக்கிவிட முடியாமல் அவளை கடந்து சென்றுக் கொண்டிருந்தது.


அந்த மழை மேகம் உருவாக்கியதன் பலனை முழுதும் செய்து முடிக்குமுன்னெரே அவர்கள் திருமணம் நடந்ததால் அந்த மழை மேகம் மழையை பொழிவிக்கவும் முடியாமல் இல்லாமல் போகவும் வழியில்லாமல் இப்படி போக்கிடமற்று சுற்றிக் கொண்டிருக்கிறது.


இவ்வளவு நாள் ஆதிரை அறையிலே இருந்ததாலும் உடன் ஆட்களின் நடமாட்டம் இருந்ததாலும் அவளது ஆசை மேகம் அவள் கண்ணெதிரே தோன்றாமல் போயிருந்தது. இன்று அவளது தனிமையும் சூழலும் அதற்கான பாதையை ஏற்படுத்த அந்த மழை மேகம் வெளி பட்டுவிட்டது. இருந்தும் முன் போல அதுவாக மழை பொழிவிக்க முடியாமல் அவளை கடந்து சென்றது. அந்த மழை மேகத்தின் நிலையெல்லாம் அறியாமல் ஆதிரைக்கு அவளது கடந்த காலம் அறிய வேண்டுமென்ற உந்துதல் மட்டுமே இருந்தது. அதே நிலையில் "ஏய் மழை மேகமே.. தூரம் போகாதே. நில்.. மழை மேகமே" என்று கத்திக்கொண்டே அதன் பின் சென்றாள் ஆதிரை.


அவளது குரலுக்காகவே காத்திருந்தது போல அதற்கு மேல் நகராமால் அப்படியே நின்றது. அவள் குரல் கேட்டு அந்த மழை மேகம் நகர்வது நிற்குமென்று ஆதிரை எண்ணவில்லை. அது நின்றதும் வியப்பாக அதன் அருகில் சென்று அதன் அடியில் நின்றாள். ஆனால் உத்தரவில்லாமல் மழையும் பொழிவதற்கில்லையே . அவளுக்கு கனவும் உண்டாவதற்கில்லையே. இதை அறியாமல் அவள் அந்த மேகத்திற்கு அடியில் சென்று நின்றாள்.


சில வினாடி நின்றுவிட்டு குழப்பத்துடன் , “ஏய் மழை மேகமே. மழை பொழிய மாட்டேன் என்கிறாய். நான் உன்னை தேடிதானே வந்தேன். மழை பொழிந்து என் இரண்டாவது ஜன்மம் பற்றி எனக்கு தெரிய படுத்துவாயென்றால் சும்மா நிற்கிறாயே" என்று கேட்டுக் கொண்டு சிலையாக நின்றாள். இப்படி சொன்ன போதும் ஆதிரைக்கே சிரிப்பு வந்துவிட்டது. இப்படி உயிரற்ற மேகத்திடம் ஊர் பக்கம் போய் பேசினாள் என்றால் அவளை பைத்தியமென்றே மருத்துவமனையில் சேர்த்துவிடுவார்கள் என்று எண்ணும் போதே அவளது கட்டளைக்காக காத்திருந்த மழை மேகம் மழை பொழிய ஆரம்பித்தது. ஆதிரையின் மனதிரையும் விழித்துக் கொண்டது.


அவள் மனதிரையில் தெரிந்த இடமும் இந்திரபிரதேஷ் போலவே ஒரு மலை பிரதேஷம். ஆதிரையும் அவளது தோழியாக மற்றொரு பெண்ணும், தலையில் ஒரு கூடையை மாட்டிக் கொண்டு அந்த காட்டில் எங்கோ போய் கொண்டிருந்தனர். அந்த மற்றொரு பெண் ஆதிரையின் நிகழ்கால அண்ணி, ரிதிகா


இருவரும் எங்கோ பேசிக்கொண்டே போய்க் கொண்டிருந்தனர். "உதயா.. நாம் இப்படி தினமும் தேன் எடுத்து வர போவதாக சொல்லிவிட்டு உன் அன்பரை பார்க்க போவதை உன் தந்தை அறிந்தால் அவ்வளவுதான். எதற்கும் வஜ்ரன் தமையனிடம் சீக்கரமே உங்க வீட்டில் வந்து பேசிவிட சொல்லு" என்றாள் ஆதிரை.


“சொல்ல வேண்டும்தான் ஆதிரை. ஆனால் நான் உன்னை போல கிராமத்தில் ஒருவரின் வீட்டில் பிறந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும். நம் மலைவாழ் மக்களின் தலைவரின் வீட்டில் ஒற்றை பெண்ணாக பிறந்துவிட்டேனே. நம்மவர் இல்லாமல் சித்தரான வஜ்ரனை ஊர் தலைவரான என் தந்தை வம்சம் தழைக்க இருக்கும் எனக்கு மணமுடிக்க ஏற்றுக்கொள்வாரோ என்னமோ. அதுவே கவலையாக இருக்கிறது. அதனால்தான் நானும் தள்ளி தள்ளி போட்டுக் கொண்டிருக்கிறேன்.” என்றாள் உதயா என்கிற இன்றைய ரிதிகா.


“ம்ம் பார்ப்போம். ஆனால் சீக்கிரமே சொல்லிவிடு உன்னை திருமணம் செய்துக் கொள்ள மாப்பிள்ளைக்கு உன் தந்தை போட்டி நடத்தும் முன் சொல்லிவிட்டால் தேவையில்லாத சங்கடங்கள் தவிர்க்கபடும்" என்றாள் ஆதிரை.


“புரிகிறது. “ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தூரத்தில் பார்த்த வஜ்ரனான இப்போதைய அரவிந்தை நோக்கி ஓடி போனாள் உதயா. தன் தோழியின் துள்ளலை பார்த்து அப்படியே நின்று புன்னகைத்து தேன் இருக்கும் மரத்தின் பக்கம் திரும்பி நடந்தாள் ஆதிரை. இது சில மாதங்களாகவே நடக்கும் கதைதான். மூலிகை பறிக்கவென்று வந்த வஜ்ரன் சித்தர் தேன் எடுக்க வந்திருந்த உதயாவை பார்த்ததும் காதலித்துவிட்டார். அதன் பிறகு தற்செயலாக அவர்கள் சந்திக்க இருவருள்ளும் ஒருமிதமான அதே உணர்வு ஏற்பட்டுவிட்டது. ஆதிரை உதயாவின் சிறுவயது முதலே தோழியாகி போனாள். படிப்பில் ஆர்வமிருந்ததால் உதயாவை படிக்க வைக்க அனுப்பிய போது உடனொத்த தோழியாக இருந்த ஆதிரைக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது. அது முதல் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தனர்.


ஒரு நாள் வஜ்ரனுடன் மூலிகை பறிக்க வந்த திகேந்திரர் ஆதிரையை பார்த்தார். முதலில் வஜ்ரனை விட்டு பிரிந்துவிடுமாறு உதயாவிடம் சொல்ல சொல்லியே ஆதிரையை திகேந்திரர் அனுகினார். சித்தர்கள் யாவரும் பிரம்மசாரியாகவே இருக்க கூடும். வஜ்ரனின் இந்த காதலால் அவனது குறிக்கோல் சிதறிவிடுமென்று சொல்லவே அவன் வந்திருந்தான்.


ஆனால் ஆதிரை அதனை சட்டையே செய்யவில்லை. "உங்கள் நண்பரிடமே போய் சொல்வதுதானே. என்னிடம் சொன்னால் நான் என்ன செய்ய. மனமொத்த அவர்கள் பிரிவதென்றால் அவர்கள் உயிருள்ள வரை நடக்க வாய்ப்பில்லை. அவர்கள் அவ்வளவு விரும்புகிறார்கள்”. " என்று உண்மை நிலையை சொல்லிவிட்டு, “ இனி என்னிடம் இது போலவெல்லாம் பேசதீர்கள். எனக்கு தேன் எடுக்கும் வேலையிருக்கிறது. உதயாவின் கணக்குபடி அவளுக்கும் சேர்த்து நானேதான் தேன் எடுத்தாக வேண்டும். வழியை விடுங்க" என்று வழி மறித்து நின்ற திகேந்திரனிடம் அலட்சிய பார்வையை செலுத்திவிட்டு நகர்ந்து சென்றாள் ஆதிரை.


இப்படி காதல் வேண்டாமென்று சொன்னவன் அடுத்த இரண்டு வாரத்திலே மீண்டும் வந்து ஆதிரையிடம் அவளை விரும்புவதாக சொல்லவும் ஆதிரைக்கு அதிர்ச்சிதான். இது என்ன இந்த சித்தர்களுக்கெல்லாம் என்னவாயிற்று. முன்பு என் உதயா. இப்போது என்னையே வா என்று கோபம் வர, அவன் முன்பு சொன்னதை சொல்லி, “ சித்தர் காதல் கொள்ள கூடாது என்றீர்கள். இப்போது இப்படி சொல்கீறீர்கள்" என்று கேட்டாள் ஆதிரை.


“உண்மைதான் ஆதிரை. நம் பூர்வ ஜன்மம் பற்றி அறிந்தப்பின்னும் நம் பிறவி பலனை அறிந்த பின்னும் என்னால் காலம் தாழ்த்த முடியாதே. “ என்று புன்னகைத்தான் அந்த திகேந்திர சித்தர்.


“என்ன பூர்வ ஜன்மம். எனக்கு ஒன்றும் புரியவில்லையே" என்ற ஆதிரையை திரையில் பார்த்திருந்த ஆதிரைக்கு என்ன அந்த பூர்வ ஜன்மம் என்று தெரிந்திருந்தது. ஆனால் திகேந்திர சித்தருக்கு எப்படி அந்த பூர்வ ஜன்மம் தெரிந்திருந்தது என்று அவர்களை கூர்ந்து கவனித்தாள் இப்போதைய ஆதிரை.


“ஆம் ஆதிரை. போன வாரம் சித்தர்கள் எல்லாம் சேர்ந்து வெகு காலமாக பூட்டியிருந்த ஒரு சிவன் ஆலயத்தை கண்டெடுத்தோம். அதில் ஒரு விளக்கு. எண்ணையும் திரியுமில்லாமல் அது தெய்வீக ஒளி பரப்பி எறிந்துக் கொண்டிருந்தது. அதன் எதிரில் ஒரு சிவன் சிலை. அந்த சிலையை பார்த்ததும்தான் எனக்கு எல்லாம் தெரிந்தது. போன ஜன்மத்தில் நான் ஒரு ராஜா வம்சத்தை சேர்ந்தவன். நீ என் அத்தை மகள்" என்று முதல் ஜன்ம கதை அத்தனையும் சொல்லி முடித்தார் திகேந்திரர்.


இமை தட்டாமல் அவன் சொல்வதை கேட்டிருந்த ஆதிரை, “எனக்கு இப்படி ஒரு போன ஜன்மம் இருப்பதே நம்பிக்கை இல்லை. இருந்தாலும் சரி போன ஜன்மத்தில் அப்படி உங்களை விரும்பியதாகவே இருக்கட்டும் . இப்போது அதேபோல நான் உங்களை விரும்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா? எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே இல்லை.” என்றுவிட்டு அவனை விலக்கி "உங்கள் கதையை கேட்டுக் கொண்டு இன்று தேன் எடுக்க முடியாமல் போனது. “ என்று முன்னோக்கி நடந்து, “உதயா.. உதயா நேரமாகிவிட்டது வா போகலாம்" என்று குரல் கொடுத்துக் கொண்டே முன்னேரி நடந்தாள்.


அவளை நம்ப வைக்கும் வழி தெரியவில்லையென்ற போதும் அவளை வற்புருத்தவும் திகேந்திரர் எண்ணவில்லை போல, ஆதிரையை பின் தொடர்ந்த நிகழ்கால ஆதிரையின் திரையில் திகேந்திரன் பல முறை வராமல் , ஆதிரை அவனை எதிர்பார்க்கும்படி ஆனது. திகேந்திரரை பார்த்த போதே ஆதிரையுன்னுள்ளும் ஏதோ மாற்றம். அதனை ஏற்கனவே கண்டுவிட்டிருந்த திகேந்திரர் அவளே அதனை உணர பொறுத்தார்.


ஒரு நாள் ஆதிரையே, “ வஜ்ரன் தமையனோடு வருவாரே அந்த மற்றொரு சித்தர். இப்போதெல்லாம் வருவதில்லை. ஏனாம்" என்று அக்கறையில்லாதது போல உதயாவிடம் கேட்டாள்.


ஆதிரையை ஆர்வமாக பார்த்த உதயா,” அவரை பற்றி எதுவும் தெரியவில்லையே. ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டாள்.


"இல்லை சும்மாதான் கேட்டேன்.அ து இருக்கட்டும் வஜ்ரன் தமையன் உன் தந்தையிடம் எப்போது பேசுவது என்பது பற்றி எதாவது சொன்னாரா?” என்று கேட்டாள் ஆதிரை.


ஆதிரையை குறுகுறுப்பாக பார்த்த உதயா, மற்றது மறைத்து, “ எதோ தீவுக்கு போக வேண்டும் என்று வஜ்ரன் சொன்னார். அதற்குள் என் தந்தையிடம் பேசுவதாக சொல்லியிருக்கிறார். இன்னும் ஒரு மாதத்தில் கிளம்ப வேண்டுமாமே. “ என்றாள்.


இப்படி இவர்கள் பேசிய அடுத்த நாளே திகேந்திரர் வந்து நிற்க ஆதிரைக்கு மூச்சே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது. ஆதிரையுள்ளும் படபடப்பு, “இப்போது புரிகிறதா? ஜன்மம்தாண்டியது நம் காதலென்று. “ என்று அவள் வாய்விட்டு பேசுமுன்னே கேட்டான் திகேந்திரர்.


ஆதிரையின் கன்னங்கள் செம்மையுற, “ம்ம் " என்றாள்.

“புரிந்தால் சரி. நாம் அடுத்த மாதமே அந்த தீவுக்கு போக வேண்டும் ஆதிரை. அந்த சிவனுடனும் தீபத்துடனும். சிவனை என்னால் எடுக்க முடியும். ஆனால் தீபத்தை உன்னால் மட்டும்தான் எடுக்க முடியும் . நாம் சிவனையும் தீபத்தையும் பார்வதியுடன் சேர்க்க வேண்டும். நம்முடன் வஜ்ரனும் உதயாவும் உதவிக்கு வருவதாக ஏற்பாடு. வேண்டாம் என்று சொன்ன போதும் அவர்களும் வருவதாக பிடிவாதம். உன்னிடம் இதை முன்பே சொல்லியிருப்பேன். நம் கதையை நீ நம்பவில்லை. என் நண்பன் வஜ்ரனும் உதயாவும் நம்பி எனக்கு உதவி புரிய முன் வந்தனர்" என்றான் திகேந்திரர்.
 
periyauma

Well-Known Member
#7
Sitrar megam polla ethu adhirai aasai megam aa antha theevilaiyum megam vanthadu Apo silathu adhi odathu silathu thikanthirarodatha. Adhi appa Arjun Amma apadi prinjanu puriyuthu avanga epadi antha theevuikkk ponaganu puriyuthu .adi antha theeviilla irunthu aduthuvantha villaku parvathi silai pathi theeriya waiting .
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement