தூரம் போகாதே என் மழை மேகமே !! - 77

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer


அவள் தன் பதிலுக்காக காத்திருப்பதுப் போல ஒரு நொடி தாமதித்து, “ சரி வா. ஆனால் நான் தீவில் வேலை முடிந்ததும் முத்து குளிக்க போக வேண்டி இருக்கும். என்னால் மீண்டும் இந்திரபிரதேஷ்க்கு உடனே வர முடியாது. அதுவரை நீ என்னுடன் தான் இருந்தாக வேண்டும். நான் எங்கு சென்றாலும் நீ என்னுடனேதான் இருந்தாக வேண்டும். என்னால் உன்னை இங்கு தனியேவும் அனுப்ப முடியாது. அதனோடு இங்கிருந்து யாரும் வந்து உன்னை அழைத்து போகவும் வாய்ப்பில்லை. மாமாவும் அக்காவும் இந்த சந்திரகுளிர் குகை பாதையை பார்த்துக் கொள்வதாக சொல்லியிருக்கிறார்கள். அப்பாவும் காதம்பரன் அங்கிளுக்கு உதவியாக காஞ்சிபுரம் இருக்கும் நம்ம ஊர் மக்களுக்கான வீடுகள் அமைக்கும் வேலையை செய்வதாக திட்டம். நீயும் குழந்தைகளுடன் மிகவும் பொருந்திக் கொண்டாய். அதனால் உன்னை தொந்தரவு செய்ய எண்ணாமல் இப்படி திட்டம் வகுத்து அனைவரிடமும் பேசிவிட்டேன். அதனை இப்போது மாற்றுவதற்கு வாய்ப்பில்லை. நாம் கிளம்புவதென்றால் நாளையே கிளம்ப வேண்டும். அதனால் இப்போதே யோசித்து சொல். என்னுடன் வருகிறாயா?" என்று முழு விவரம் சொல்லி கேட்டான் அர்ஜூன்.




ஆதிரை, ஒரு நொடியும் தாமதிக்காமல், “ நீங்க எங்கு சென்றாலும் எப்போது திரும்பினாலும் , நான் உங்களுடனேதான் இருப்பேன். அதனால் உங்களோடு வர எனக்கு சம்மதம்" என்ற ஆதிரை, சுற்றம் சூழல் எதுவும் நினைவில்லாமல் அவனது கை பற்றி அவனது தோள்களில் கண்கள் மூடி சாய்ந்துக் கொண்டாள். தூப்பாக்கி சூடு தினத்தை போல் அர்ஜூன் அவளை எதுவும் சொல்லிவிடுவானோ என்ற அச்சம் மறந்தவளாக அர்ஜூனை அன்று போல் ஏதோ தீமையிலிருந்து பாதுகாப்பதுப் போல் மனதிரையில் எண்ணி அவன் கையை இறுக்க பற்றிக் கொண்டு கண் மூடி சில நொடி இருந்தாள்.




அவளை பெருமிதமாக பார்த்த சிவசக்தி, “அவள்தான் உறுதியாக சொல்கிறாளே. அவளையும் அழைத்து போ. எங்களுக்கும் ஒருவருக்கு இருவராக அந்த தீவுக்கு சென்றால் கவலையில்லாமல் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பீர்களே" என்று சொல்லி புன்னகித்தார் . அவரது குரலில் நிமிர்ந்த ஆதிரை, அர்ஜூனை விட்டு தள்ளி அமர்ந்தாள்.




விளையாட்டாக ஆதிரையை சீண்டிய போதும் ஆதிரையின் மனம் ஏற்கனவே அர்ஜூன் அறிந்திருந்தான். ஏதோ ஒரு தயக்கத்தினால்தான் அவள் அருகில் நெருங்கிவதை தவிர்கிறாள். மற்றபடி இயல்பாக தொடுவதும் கணவன் என்ற பெருமையும் அவளுள் நட்சத்திர ஒளி போல மங்காமல் இருக்கிறது. அதனை உணர்ந்துவிட்ட அர்ஜூன் , அவளாக தயக்கம் களைந்து வர ஒதுங்கி இருந்தான். அவளின் பொறாமையை தூண்ட பொய்யான காதலியை உருவாக்கியும் பார்த்தான். அது வேறூவிதமான எதிர்மறை விளைவை உருவாக்கிவதை உணர்ந்து அது குறித்து மேலும் பேசாமல் காலம் கனிவதற்காக பொறுமையுடன் இருந்தான். ஆனால் ஆதிரையின் ஒவ்வொரு செயலும் அவளை விட்டு விலகி இருக்கும் நாட்களை அர்ஜூனுக்கு கடினமாக்கியது. அப்படியிருக்க ஆதிரை உடன் வருகிறேன் என்றதும் அர்ஜூனிள்ளும் ஒருவித தயக்கத்தை ஏற்படுத்தியது. அதனாலே பலவித காரணங்களை சொல்லி அவளை குழப்பி இங்கே இருக்க செய்ய நினைத்தான். ஆனால் ஆதிரைக்கு அப்படி எந்த வித தயக்கமும் இல்லை போல இப்படி பெரியவர்கள் முன்னாடி நடந்துக் கொள்ளும் போது அர்ஜூனுக்கு, வேறு வழியில்லாமல் போனது. “சரிங்க பாட்டி. இவள் வருதென்றால் அவளுக்கு flight book பண்ண வேண்டும் , ஒரு phone செய்துவிட்டு வருகிறேன்.” என்று எழுந்தான் அர்ஜுன்.




“சரி சரி.. phone செய்த பிறகு இவளை அந்த கல் அருவி பக்கம் அழைத்து போ. இங்கு வந்ததிலிருந்து அறையிலே அடைந்து கிடக்கிறாள். அவளுடன் நீயும் எதுவும் பேசிக் கொள்வதில்லை போல. சந்திரகுளிர் பாதை அமைப்பது முக்கியம்தான். ஆனால் உங்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் தானே . " என்று கேள்வி கேட்டவர் தொடர்ந்து, "அப்படியே அம்முவை இங்கு வர சொல்லிவிட்டு போ" என்றார் சிவசக்தி.




அச்சோ பாட்டி என்ன இப்படி சொல்லிவிட்டார். அர்ஜூன் என்னை பற்றி என்ன நினைப்பான், என்று பதறிய ஆதிரை, "அப்படியெல்லாம் இல்லை பாட்டி. நாங்க பேசிக்கொள்கிறோம்தான். நான் குழந்தைகளுடன்" என்று சொல்லிக் கொண்டிருந்தவளின் குரல் சிவசக்தியின் பார்வையில் அடங்கியது.




“அதுதான் பார்த்தேனே. நீங்கள் இருவரும் பேசிக் கொள்ளும் அழகை. ஆதிரையிடம் பேசி எத்தனை நாட்கள் ஆச்சு கண்ணா?” என்று அர்ஜூனிடம் குறுக்கு விசாரனை செய்தார் சிவசக்தி.




பாட்டி அவர்களின் நிலையை அறிந்துவிட்டதை உணர்ந்த அர்ஜூனுக்கும் என்ன சொல்வதென்று புரியாமல், "அது.. அவள் குழந்தைகளுடன் இருந்ததால் நான் அவளை தொந்தரவு செய்யவில்லை பாட்டி" என்று அவனது முறையாக விளக்கம் கொடுத்தான் அர்ஜூன்.




“ஆமாம். இருவரும் குழந்தைகளை சாக்கு சொல்லுங்க. மற்ற வேலைகளை பிறகு பார்க்கலாம். Phone செய்துவிட்டு இப்போது இவளை அந்த அருவிக்காவது அழைத்து போ கண்ணா. புரிகிறதா?” என்று கண்டிப்பாக சொன்னார்.




ஆதிரைக்கு சங்கடமாகி போனது , ஆதிரை வாயை திறந்து சொல்லாமலே பாட்டி எல்லாம் கண்டு பிடித்துவிட்டார்களே . அர்ஜூன் அவனை கோல்மூட்டிவிட்டதாக எண்ணுவானோ என்று அதுவே தயக்கமாகி போக ,”அதெல்லாம் வேண்டாம் பாட்டி. நான் இங்கேயே" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “உங்கள் இருவருக்குள்ளும் ஏதேனும் சண்டையா?” என்று நேரிடையாக கேட்டார் சிவராமன்.




ஒரு நொடி ஆதிரையும் அர்ஜுனும் ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்து, “இல்லை" என்று ஒரு சேர சொன்னார்கள்.




"அப்பறம் என்ன தயக்கம்.” என்றார் சிவராமன்.




"இல்லை அவர் வேலையாக இருக்கும் போது இது அவசியமற்றது இல்லையா அதனால்.” என்று இழுத்தாள் ஆதிரை.




"ஓரளவு எல்லா வேலைகளும் முடிந்தது ஆதிரை.. அதிகம் கவலை வேண்டாம். shoe போட்டுக்கொண்டு வீட்டு வாசலில் தயாராக இரு. நான் காதம்பரன் அங்கிளிடம் பேசிவிட்டு 10 நிமிடங்களில் வந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு அர்ஜூன் உள்ளே சென்றுவிட்டான்.




அதற்கு மேலும் மறுத்து பேசினால் நன்றாக இருக்காது என்று எண்ணி, ஆதிரையும் அவன் சொன்னது போல தயாராகி வீட்டின் முன் காத்திருந்தாள்.




இந்த இரண்டு வாரத்தில் அந்த ஊர் பழக்கப்படி பாவாடை சட்டைக்கு மாறியிருந்த ஆதிரை அதையே இப்போதும் அணிந்துக் கொண்டிருந்தாள். கழுத்தில் ஒரு மவ்லரும் , காலில் shoe-வும் , பாவடை சட்டையும் ஒன்றுக்கொன்று சம்மந்தமே இல்லாமல் அணிந்திருந்த ஆதிரையை பார்த்ததும், அர்ஜூனுக்கு சிரிப்புதான் வந்தது. அதே மனனிலையில், தன் சிரிப்பை அடக்கிய வண்ணம் ஆதிரையிடம், “ வா போகலாம்" என்றான் அர்ஜூன்.




அவன் சிரிப்பை அடக்குவது அவன் கண்ணில் தெரிந்த குறும்பில் உணர்ந்த ஆதிரை காரணம் புரியாமல் "எ.. என்ன அர்ஜூன் . " என்றுவிட்டு தன் உடையில் ஏதேனும் அழுக்கு அது இதென்று தெரிகிறாதா, அவன் நிபந்தனை படி சேலை கூட இப்போதெல்லாம் அணிவதில்லையே என்று தன்னையே ஒருமுறை ஆராய்ந்த வண்ணம் உடன் நடந்தாள்.




“ஒன்றுமில்லை. வா போகலாம். கல் அருவி போக குறைந்தது இரண்டு கிலோமீட்ட தூரமாவது போக வேண்டி இருக்கும். உன்னால் நடக்க முடியும் தானே? கால் வலி எதுவுமில்லையே" என்று மனதில் தோன்றியதை விடுத்து வேறு பேசினான்.




அவனது பதிலில் ஒன்றும் அறியாதவலாய், “ முடியும். இங்கு வந்த பிறகு கால்கள் மட்டுமில்லாமல் உடலும் முன்பு போல சக்தி பெற்றிருக்கிறது" என்று வழி பார்த்து நடந்தாள். கண நேர அமைதிக்குப்பின், “அ.. அர்ஜூன்.. நான் பாட்டியிடம் நீங்க என்னிடம் பேசுவதில்லையென்றெல்லாம் சொல்லவில்லை. அவர்களாக எப்படியோ கண்டுபிடித்து இப்படி செய்துவிட்டார்கள்" என்றாள் ஆதிரை கவலையாக.




அவளை ஒருதரம் திரும்பி பார்த்துவிட்டு, “தெரியும்.” என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துவிட்டு , “என்ன கணேச சிம்லா போன வேலை முடிந்ததா? போ. போய் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடு,” என்று அவர்கள் எதிரே வந்த ஒருவரிடம் பேசிவிட்டு phant pocket-ல் கை விட்ட வண்ணம் நடந்தான்.




“எப்படி தெரியும்? " என்று கேட்டுவிட்டு அவனது வேக நடைக்கு வேகம் கொடுத்து ஓடி வந்து அவன் கைப்பற்றிய வண்ணம் கேட்டாள்.




அவளுக்காக அவனது நடையின் வேகம் குறைத்து, "பாட்டியின் அனுபவம் பற்றி உனக்கு தெரிவதற்கில்லை . நீ இயல்பாக எதையாவது பேசிவைத்திருப்பாய் .அதிலிருந்து அவர் கண்டுவிட்டிருப்பார். இப்போது அது பிரட்சனையில்லை விடு" என்று விட்டு பேசாமல் நடந்தான்.




“ஓ.. சாரி.. “ என்றாள் ஆதிரை. அதற்கு பதிலேதும் சொல்லாமல் ஒரு புன்னகை சிந்திவிட்டு உடன் நடந்தான்.




ஊரின் சுற்றுபுரம் கடந்து , வெளி காட்டு பகுதியில் ஒற்றையடி பாதையாக இருக்க அர்ஜூன் முன்னே செல்ல ஆதிரை அவன் கால் பார்த்து பின்னே நடந்தாள். அவளை திரும்பி பார்த்த அர்ஜூன், “வேடிக்கை பார்க்க வென்று வந்துவிட்டு இப்படி என் காலையே பார்த்து வந்தால் எப்படி. வீட்டில் பாட்டி என்னவெல்லாம் பார்த்தாய் என்று கேட்டால் என்ன பதில் சொல்வதாக உத்தேஷம். என் காலை பார்த்தேன் என்றா?” என்று குரலில் கேலி ஓட கேட்டான் அர்ஜூன்.




“அ.. அப்படியெல்லாம். இல்லை அர்ஜூன். பாதையில் எதேனும் தென் பட்டு மிதித்துவிடுவேனோ என்று … " என்று தொடங்கி சுற்றுபுரத்தை பார்த்தாள் "ஸ்ட்ராபெர்ரி தோட்டம். எவ்வளவு அழகாக இருக்கு" என்றாள் ஆதிரை.




“ம்ம்.. ஆமாம். வருடம் ஒருமுறை போட படும். ஆப்பிள் தோட்டமும் இருக்கிறது. கல் அருவியில் இருக்கும் . ஆனால் கால் வலிப்பது போல் இருந்தால் சொல்லிவிடு , மீண்டும் வீடு திரும்பிவிடலாம். மேடும் பள்ளமாக இந்த வழி கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கும். ஆனால் கண்களுக்கு விருந்தாக இருக்கும் போது மற்ற கஷ்டங்கள் பெரிதாக தெரியாது" என்று விளக்கம் கொடுத்தான் அர்ஜூன்.




“புரிகிறது அர்ஜூன். நீங்க அடிக்கடி இந்த பக்கம் வருவீர்களா? “ என்றாள் ஆர்வம் மேலிட.




“ஆமாம். வீட்டிலிருந்து கல் அருவி வரை நிலங்களை பதபடுத்தி இது போல விதவிதமாக தோட்டங்கள் அமைந்திருக்கும். சிறுவயதில் இருந்தே இவற்றை பார்க்க நான் இப்படி நடப்பது வழக்கம்தான். அக்கா உடன் இருந்த வரை இருவருமே போவோம். இப்போது இரண்டு வருடங்களாக இப்படி போவது குறைந்து வெகுவாக நின்றேவிட்டது. மன இறுக்கம் இருக்கும் போது சில நேரம் தனியே நடந்து அந்த அருவி அருகில் இருக்கும் பாறைகுவியலின் மீது வானம் பார்த்து நட்சத்திரங்களை ரசித்த வண்ணம்படுத்திருப்பதே இதமாக இருக்கும்" என்று இயல்பான நினைவலைகளாக சொன்னான் அர்ஜூன்.




அவனது வார்த்தைகளில் ஆதிரையும் கற்பனையில் கல்அருவியையும் அர்ஜூனையும் படமாக ஓடவிட்டாள். “இதை கேட்ட பின், கண்டிப்பாக அந்த அருவியையும் நீங்க கண்டு ரசித்த நட்சத்திர வானத்தையும் பார்க்க இன்னும் அதிகமாக ஆசையாக இருக்கிறது.” என்று புன்னகித்தாள்.




அவளை திரும்பி பார்த்து புன்னகைத்த அர்ஜூன் இறுக்கம் தளர்ந்திருக்கும் இந்த மனனிலையில் இயல்பாக பேசிட தோன்ற, "சரி.. அது இருக்கட்டும். என் அம்மாவிடம் என்ன சொன்னாய்" என்று கேட்டான்.




“அது.. “ என்று யோசித்தவள் , “நான் அவர்களின் தந்தை வழி சொந்தம் பற்றி சொல்லியிருந்தேன்.. அதற்கு அவர்களிடம் விளக்கம் கொடுக்கும் முன்பே அவர்கள் ஊருக்கு கிளம்பிவிட்டார்கள். பிறகு பேசிக் கொள்ளலாமென்று விட்டுவிட்டேன். ஏன் கேட்கிறீர்கள். உங்களிடம் இதை பற்றி அத்தை எதுவும் கேட்டார்களா?” என்று ஆவலுடன் கேட்டாள்.




ஆமாம் என்பது போல் தலையாட்டி, “ம்ம்..” என்றான். “ நீ இதை சொன்னதும் நான் அதற்கான விளக்கம் சொல்லும் வரை என்னை துளைத்தெடுத்துவிட்டார்கள். நான் சொல்லாமல் போயிருந்தால் உன்னிடமே phone -மூலம் முழு விவரம் கேட்டிருப்பார்கள். ஆனால் ஏன் அவர்களிடம் நீ இதை சொன்னாய். சிவராமன் தாத்தாவே இதை அம்மாவிடம் சொல்லட்டும் என்றுதான் நான் இதை பற்றி என் அம்மாவிடம் இவ்வளவு நாள் சொல்லவில்லை." என்றான் யோசனையுடன் .




"அப்படியானால் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” குரல் உயர்ந்து ஆச்சரியமுடன் கேட்டுவிட்டு , குரல் தாழ்த்தி, “ நான் உங்க மாமன் மகள் என்று" என்றாள் ஆதிரை.




அவள்புரம் திரும்பி, “தெரியும். ஆனால் அதுவாக சரியாக அவகாசம் கொடுக்காமல் உனக்கெதற்கு இந்த முந்திரி கொட்டைதனம்" என்று அவளை வார்த்தைகளால் கொட்டினான்.




உடனே கோபம் வந்து ,” எது முந்திரி கொட்டைதனம்" என்று நடந்துக் கொண்டிருந்தவள் அதே இடத்தில் நின்று கத்தினாள். அவள்புரம் திரும்பிய அர்ஜூன் ஏன் தீடீரென்று கத்துகிறாள் என்று புரியாமல் என்ன என்று கேட்குமுன் "சொந்தங்கள் இல்லாமல் தனியே இருப்பது எவ்வளவு கஷ்டமென்று உங்களுக்கு தெரியுமா? இப்படி ஒரு அத்தையும் அத்தையின் குடும்பமும் இருக்கிறது என்று அறிந்தப்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது தெரியுமா? அதனை அறிந்த பின்னும் , தானாக உண்மை வரும் வரை நான் காத்திருப்பதாமே. ஏன் 25 வருடங்கள் காத்திருந்தது போதாதா? நானும் அண்ணனும் ஒரு நல்லது கெட்டது அறியாமல் எவ்வளவு கஷ்ட பட்டோம். பெற்றோர்கள்தான் இல்லை. சொந்தங்களும் இல்லையென்றால். அம்மாவழி சொந்தங்கள் இருந்ததாக அண்ணன் சொன்னார். ஆனால் அனாதைகளான எங்கள் பொறுப்பு அவர்கள் தலையில் விழுந்துவிடுமோ என்று இருக்குமிடம் தெரியாமல் ஒளிந்து கொண்டார்களே.




நான் ஒரு பெண். என்னை என் அண்ணன் தனியாக வளர்க்க எவ்வளவு கஷ்ட பட்டிருப்பான். இப்படி அத்தையென்று ஒருவர் இருப்பது அப்போதே தெரிந்திருந்தால்" என்று பெருமூச்சுவிட்டவள், “ அதெல்லாம் அனுபவித்த எனக்கு தெரியும். உங்களுக்கென்ன. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி , அக்கா போதாதற்கு இந்த ஊரே உங்கள் மீது பாசமும் அக்கறையுமாக சிறுவயதிலிருந்து இருக்கிறது. அப்படி இருக்க உங்களுக்கு இந்த காத்திருப்பு பெரிதாக தெரிய வாய்ப்பில்லைதான். ஆனால் எனக்கு. ? எல்லோருடனும் இன்னும் உரிமையாக பழக வாய்ப்பிருக்கும் இதனை தள்ளி போடுவதா. தள்ளி போட்டு நான் உங்களை விட்டு போகுமுன் எல்லாம் சரியாகாமல் போனால் நான் என்ன செய்ய" என்று உணர்ச்சிவச பட சொல்லி முடித்தாள்.




அவள் அருகில் வந்து அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டு "ஈஸி ஆதிரை.. ஏன் இவ்வளவு ஆவேசம். நான் உன் அத்தை மகன்தான். அது நீ அறியும் முன்னேரே நான் உன் கணவன். அதனால் உண்மை அறியாமல் இருந்தாலும் என் அம்மாவின் மருமகள் நீ தான் .. அதனால் அவ்வாறு நினைத்தேன். ஆனால் வெறும் மருமகள் போதாது , அண்ணன் மகள் என்ற சலுகையும் வேண்டுமெங்கிறாய். எனக்கு புரிகிறது. இதற்காக நீ இவ்வளவு கோப படதேவையில்லையே ." என்று அவளை சமாதானபடுத்தினான்.




பதிலுக்கு ஏதேனும் சண்டையிட்டிருந்தால் மேலும்மேலும் அவனுடன் சண்டையிடும் விதமாக பேசியிருக்கலாம். ஆனால் இப்படி குழந்தைக்கு சொல்வது போல சொன்னால் எப்படி பதிலுக்கு கோப படுவது. அவளது கோபமும் குறைந்தது. “பரவாயில்லை..” என்று அவனிலிருந்து விலகி நின்றாள்.




“ம்ம்… எப்படியோ. உன் விருப்பம் போல எல்லாம் என் அம்மாவுக்கு இப்போது எல்லா உண்மையும் தெரியும் நாளையே அப்பாவும் அம்மாவும் சிம்லா வருகிறார்கள். அவர்களை பார்த்துவிட்டே நாமும் தீவுக்கு போவோம். சரியா" என்று நடந்தான்.




“ சரி அர்ஜூன்.” என்று சின்ன பிள்ளை போல கிளுக்கி சிரித்தாள் ஆதிரை.




அவளது சிரிப்பில் பாவம் அர்ஜூனால்தான் அவள் மீதான பார்வையை எடுக்கமுடியாமல் போனது. மீண்டும் ஆதிரையே "போலாமா அர்ஜூன்" என்று கேட்ட பிறகு முகம் திருப்பினான்.




"ஆனால் அர்ஜூன். ஏன் சிவராமன் தாத்தா நம் பெற்றோரை விட்டு பிரிந்தார். அவர் பிரியாமல் இருந்திருந்தால் என்னுடைய வாழ்வின் முக்கிய சொந்தததை நான் இவ்வளவு நாள் இழந்திருக்க மாட்டேனே" என்று ஏக்கம் தோன்ற கேட்டாள்.




அவளை கேலியாக ஒரு பார்வை பார்த்து, “ஆக அம்மணிக்கு ஒன்றும் தெரியாமல்தான் என் அம்மாவிடம் பேச ஆரம்பித்திருக்கிறாய்" என்று குற்றம் போல கேட்டான்.




“அ..ஆமாம். சிவராமன் தாத்தாவையே சொல்ல வைத்துவிடலாமென்று நினைத்தேன். எனக்கு சிவராமன் தாத்தா நம் இருவருக்கும் பொதுவான தாத்தா என்றும் நம் பெற்றோர்கள் உடன் பிறந்தவர்கள் என்றும் மட்டுமே தெரியும்" என்றாள் ஆதிரை.




“ஆமாம் பெரிய மேதாவிதான். தாத்தாவே உண்மை சொல்ல என்னிடம் எவ்வளவு சங்கடம் பட்டார் தெரியுமா? எவ்வளவு குற்ற உணர்வு. தவிப்பு. அதை அம்மாவிடம் சொல்வதென்றால் அவருக்கு மேலும் கஷ்டம் கொடுக்க திட்டமிட்டாயாக்கும். அவர் மனம் தயாராகி சொல்லட்டுமென்றுதான் நான் பொறுத்திருக்க சொன்னேன்" என்றான் அர்ஜுன்.




ஆதிரையும் தவிப்புடனே, "ஓ புரிகிறது. ஆனால் நம் தாத்தா மன்னிக்க முடியாத குற்றமா செய்துவிட்டார் அர்ஜூன்" என்றாள்.




“அப்படி சொல்வதற்கு இல்லை ஆதிரை. அவரவர் உள்ளமே அவர்களது செயலை ஏற்காத போதே குற்ற உணர்வாகிறது. நம் பெற்றோர்களுடன் இருக்க வேண்டிய நேரத்தில் குழந்தைகளை விட்டுவிட்டு போய்விட்டோமே என்ற கழிவிரக்கம் நம் தாத்தாவிற்கு. அதுதான்.” என்றான் விளக்கமாக.




“ம்ம்.. என்னதான் நடந்தது அர்ஜூன். விளக்கமாக சொல்லுங்களேன்" என்று வழியில் தெரிந்த தோட்டங்களை பார்த்த வண்ணம் கேட்டாள்..




“சொல்கிறேன்.. நம் பாட்டி ஒரு ஆங்கிலோ இந்திய பெண். தாத்தாவை அவர் விரும்பி திருமணம் செய்துக் கொண்டார்கள். தாத்தா, அப்போது துணிகடை வியாபாரம் செய்து வந்திருக்கிறார். எந்தவித கஷ்டங்களும் இல்லாமல் இயல்பாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் அவரது வாடிக்கையாளர்களில் ஒருவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தீராத நோய் வந்து உயிர் போகும் நிலை ஏறபட்டிருந்தது. ஆனால் அவர் சித்த மருத்துவம் மூலம் எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் குணமாகியிருந்தார். அந்த நிகழ்வை அறிந்த பின் சித்தம் பற்றி ஒரு ஈர்ப்பு தாத்தாவிற்கு அப்போதே வந்திருக்கு. இந்த காலம் போல ஒரு சித்த மருத்துவ கல்லூரியில் புத்தகம் மூலம் மூலிகைகளை படிப்பது போல அந்த காலத்தில் அறியமுடியாது. மூலிகை இருக்கும் மலைகளில் தங்கி அவற்றை அனுபவ பூர்வமாக உணர்ந்த பிறகே சித்த மருத்துவம் தெரிந்ததாக அமையும். சில சித்தர்கள் பிரம்மச்சாரிகளாகவே இருந்துவிடுவதுமுண்டு




அதனால் தாத்தா அந்த ஆசையை அடக்கி வந்திருக்கிறார். நம் பாட்டிக்கு என் அம்மா பிறந்து இரண்டு வருடமிருக்கும் போது நம் தாத்தாவின் நெருங்கிய நண்பர் கொடு வியாதியால் கண் முன்னே இறக்க நேர்ந்தது. அப்போது தாத்தாவுக்கு சித்தம் பயிலும் ஆர்வம் உறுதி பட்டு விட்டது. சித்த மருத்துவமிருந்திருந்தால் அவரது நண்பரை காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும் என்ற எண்ணம். நம் பாட்டியை எதிர்த்துக் கொண்டு , நம்பி மலைக்கு கிளம்பி போய்விட்டார். எப்போது வருவேன் என்ன என்பது தெரியாமல் காத்திருந்து காத்திருந்து 10 வருடங்களுக்கு பிறகு நம் பாட்டி அவர் சகோதரர்கள் உதவியால் தொழில் அறிந்து லண்டனுக்கு வந்து இருந்துவிட்டார்கள். அதன் பிறகு தாத்தா வந்து தேடியிருக்கிறார்தான் . அவரால் பாட்டியை கண்டுபிடிக்க முடியாமல் போனது.




நம் குடும்ப விதிபடி நம் தாத்தாவின் மகளைதானே தாத்தாவின் தங்கை மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அதனை ஏற்கனவே நம் பாட்டியிடம் சொல்லி அந்த நீலக்கல் கழுத்தாரத்தை கொடுத்துவிவரம் சொல்லியிருந்திருக்கிறார் நம் தாத்தா. ஆனால் தாத்தாவே போன பிறகு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் அதனை அலட்சிய படுத்தி , விதியின் வலிமை அறியாமல் லண்டனிலே திருமணம் செய்வதாக எண்ணி விதிபடி என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். இந்த திருமணம் நடக்க வாய்ப்பில்லையென்று சொல்ல வந்த நம் தாத்தா உண்மையிலே அந்த திருமணம் நடந்தேறிந்திருந்தது தெரிந்துக் கொண்டார்.




அதன்பிறகு என் அம்மா சிம்லா வரும் போதேல்லாம் எப்படியோ விவரம் அறிந்து இங்கு வந்து மறைந்திருந்து என் அம்மாவை பார்த்துவிட்டு போவாராம்" என்றான் அர்ஜூன்.




“இப்படி மறைந்திருந்து பார்பதற்கு விவரம் அறிந்தவுடனே உங்க அம்மாவிடம் தாத்தா தன்னை அறிமுகம் செய்துக் கொண்டிருக்கலாமே அர்ஜூன். “ என்று கேட்டாள்.




“செய்திருக்கலாம்தான். ஆனால் நம் பாட்டி எதேனும் என் அம்மாவிடம் தாத்தாவை பற்றி தவறாக சொல்லிவைத்திருப்பார்களோ என்ற கவலை. அதனால் தயங்கி பேசாமல் இது நாள் வரை இருந்துவிட்டார். அதனோடு இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது எதற்கு அப்பா என்று வந்து நிற்கிறீர்கள் என்று என் அம்மா கேட்டுவிடுவார்களோ என்ற கவலை. அதனால் பேசாமலே விட்டுவிட்டார். இப்போது நான் விவரம் சொன்ன பிறகு எல்லாம் சரியாகிவிட்டது. இப்போதெல்லாம் அப்பாவென்றே என் அம்மா நம் தாத்தாவிடம் பேசுகிறாங்க. இனி அது பற்றி கவலை பட தேவையில்லை" என்றுவிட்டு எதிரில் தெரிந்த ஓடை நீரின் மேல் போட பட்டிருந்த மர பாலத்தின் மீது நடந்தான்.


கயிற்றால் கட்டபட்டிருந்த அந்த பாலம் நடக்க நடக்க ஆடியது. ஆதிரையும் அர்ஜூனுடன் நடந்தாள். லேசாக ஆடுவதில் கீழே ஓடிய நீரை பார்த்து பதற்றமுற்று முன்னே செற்ற அர்ஜூனின் தோளை பற்றிக் கொண்டு நடக்க , தீடீரென்று தன் தோளை பற்றிய ஆதிரையின் கைகளை அர்ஜூனும் பற்றிய வண்ணம் இருவரும் பாலத்தை கடந்தனர்.


பாலத்தை கடந்தவுடன் சில பாறைகளில் கவனுமுடன் ஏறிச் சென்று அருவியை அடைந்தனர். பெரிய அளவிலான அருவியாக இல்லையென்ற போதும், அலட்சிய படுத்த வகையிலான சின்ன அருவியும் இல்லை. ஜோவென சத்தமிட்டு பெரிய பாறையின் உச்சியிலிருந்து தண்ணீர் கீழே விழுந்து சிறு ஓடையாக சென்றுக் கொண்டிருந்தது. "இதோ கல் அருவி வந்துவிட்டது.” என்று அதனை காட்டிவிட்டு அருகில் இருந்த பெரிய பெரிய கற்குவில்களையும் காட்டினான் அர்ஜூன். “ அங்கு பார் அதுதான் என்னுடைய கல்லாசனம். சிம்மாசனம் போல இல்லை. எனக்கு இதில் அமர்வதென்றால் ஏதோ அரசனை போல பெருமிதமாக இருக்கும்" என்று சிறுபிள்ளை போல சொல்லி சிரித்தான் அர்ஜூன்.


அவனது செயலில் புன்னகைத்த ஆதிரை, “ சரிங்க என் மன்னா. உங்கள் சிம்மாசனம் அருமையாக இருக்கிறது " என்று வயிற்றுக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு சேவகி போல பாவனை காட்டி அவளும் கேலி போல சொல்லி சிரித்தாள்.


அவளது குரலில் சிறிது அசடு வழிந்து, “சிறுபிள்ளை போல தோன்றியதோ" என்று தலையை சொரிந்தான்.


“அப்படியெல்லாம் இல்லை அர்ஜூன். பார்க்க என் ராஜாவை போல அழகாக இருந்தது" என்று மனதின் வார்த்தைகளை உதடுகலாலும் சொல்லி நாக்கை கடித்துக் கொண்டாள். அவன் சொன்னதற்கும் அவள் சொன்னதற்கும் ஏறகுறைய ஒரே அர்த்தம் தானே . அர்ஜூனின் விழிகள் ஒரு மின்னலிட்டு இயல்பானது.


“ம்ஹும்…. " என்று விட்டு மேலும் ஒரு கல் மேலே ஏறி " இதோ இங்குதான் வானம் பார்த்து படுத்திருப்பேன்" என்று சமதளமாக தெரிந்த அந்த பெரிய கல்லின் மீது நின்று ஆதிரைக்கு சொன்னான்.


“ஓ இது தானா அது" என்று அதன் மீது ஏற எத்தனித்தாள். சிறிது உயரமாக இருக்க அர்ஜூன் அவளுக்கு கைக் கொடுத்து ஏற்றி நிறுத்தினான். அவன் இழுத்த இழுப்பில் அவனையே அணைத்துக் கொண்டாள். அருவி நீரின் சிதறல் அந்த இடத்தை இன்னும் ஈரபதமிக்கதாக மாற்றியிருந்தது. அர்ஜூனின் அணைப்பு ஆதிரைக்கு கதகதப்பை தந்தது. அவனுக்கும் அப்படிதானோ என்பது போல் இருவருக்கும் ஒருவரை விட்டு ஒருவர் விலக தோன்றவில்லை.


அவன் கை பட்ட இடம் லேசாக குறுகுறுக்க, “அ.. அர்ஜூன்.. அப்பறம் என் அப்பாவை பற்றி எதுவுமே சொல்ல வில்லையே" என்று அவனிலிருந்து விலகி முகம் மறைக்கும் விதமாக வேறு எங்கோ பார்த்த வண்ணம் கவனத்தை திருப்பும் விதமாக கேட்டாள் ஆதிரை.


அவளது செயலில் புன்னகைத்து, “உன் அப்பாவை பற்றியும் உனக்கு தெரியாதா? உனக்கு தெரிந்திருக்குமென்று எண்ணி சொல்லாமல் விட்டேன். உன் அண்ணாவிடமே கேட்டிருக்கலாமே!” என்று ஆச்சரியம் காட்டி கேட்டான்.


“அது அந்த சுனாமி நிகழ்வுக்கு பின் என் அண்ணா எங்க பெற்றோர் பற்றி அதிகம் பேசுவதில்லை. நானும் அவரை வற்புறுத்தி கேட்டதில்லை. உங்களுக்கு தெரியுமென்றால் சொல்லுங்க. இல்லையென்றால் நான் என் அண்ணாவிடமே கேட்டுக் கொள்கிறேன்" என்ற வண்ணம் அந்த கல்லின் மீதே அமர்ந்து சலசலத்த அருவியையும் , தரை அடைந்ததும் தாவி ஓடும் ஓடையையும் பார்த்தாள்.


அர்ஜூனும் லேசாக தோளை குலுக்கிவிட்டு ஆதிரையின் அருகிலே அமர்ந்துக் கொண்டு, “ பெரிய ரகசியமெல்லாம் இல்லை ஆதிரை. எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன். “ என்று சொல்ல ஆரம்பித்தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top