தூரம் போகாதே என் மழை மேகமே !! - 73

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
#1


அர்ஜூனின் அரண்மனை வீட்டுக்கு அருகிலிருந்த சத்திரத்திலே பாட்டும் நடனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊரே அமைதியாக அதனை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது. அர்ஜூன், அரவிந்த, ரிதிகா, ஆதிரை நால்வருமே ஒரு ஓரமாக மக்களோடு மக்களாக அமர்ந்து அந்த கலை நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்திருந்தனர். அங்கங்கே வெளிச்சத்திற்காக மின்விளக்குகள் போடப்பட்டு திருவிழாவைப் போல அந்த ஊரே ஒளிர்ந்தது. அவற்றையெல்லாம் பார்க்கும் போது ஆதிரைக்கு சிறுவயதில் மதுரையில் இருக்கும் போது திருவிழா நேரங்களில் அண்ணனுடன் நாட்டியாலயா போய் பார்த்த நினைவை ஏற்படுத்தியது. லேசாக குளிரிய போதும், மேடையில் வித்தியாசமாக நடனமாடிய பெண்ணின் நடனத்தை ரசிக்காமல் ஆதிரையால் இருக்க முடியவில்லை. பாட்டு பாடிய வண்ணம் கையில் ஒரு தாளம் போடும் கருவில் இசை எழுப்பிக் கொண்டு அவள் ஆடிய விதத்தை பார்த்த வண்ணம் மெய் மறந்து அமர்ந்திருந்தாள்.

ஆனால் சிறிது நேரத்திலே ஆதிரையின் உள்ளணர்வு யாரோ தன்னையே பக்கவாட்டிலிருந்து கவனிப்பதுப் போல உணரவைத்தது. அவள்தான் அந்த வரிசையில் இடப்புரமாக கடைசியாக அமர்ந்திருந்தாள். அவளருகில் ரிதிகாவும் , அரவிந்தும், அர்ஜூனும் வரிசையாக அமர்ந்திருந்தனர். அர்ஜூனின் அருகில் அமர விரும்பாமல் இப்படி எல்லோரையும் முன்னே விட்டு அமர்ந்தவள் தான் கடைசியில் அமர்ந்திருப்பதை உணரவில்லை. இப்போது ஏற்பட்ட இந்த பாதுகாப்பற்ற உணர்வால் அவளுள் உண்டான சந்தேகத்தை உறுதிபடுத்த எண்ணி சட்டென திரும்பி தன் இடதுப்பக்கம் பார்த்தாள். பார்த்த திசையில் முகம் வெளுத்து போனாள். அவள் கண்ணெட்டும் தூரம் வரை காரிருள் மட்டுமே தெரிந்தது. அங்கே மின்விளக்கு இருந்தப்போதும் வெளிச்சம் முடிந்த பின் சற்று தூரத்திற்கு பின் அம்மாவசையின் விளைவாக தெரிந்த இருட்டு மட்டுமே காண முடிந்தது. அதை தவிர அவளால் எதையும் கண்டுக் கொள்ள முடியவில்லை.

மனம் லேசாக நடுக்கமுற அருகிலிருந்த அண்ணியின் கையை பற்றுவதாக எண்ணி அவளது சில்லிட்ட கைகளால் அருகில் இருந்தவனின் கையை இறுக்க பற்றிய வண்ணம் தனது இடப்புரம் திரும்பி திரும்பி பார்த்தாள் ஆதிரை. சில வினாடிகளில் அவள் பற்றியிருப்பது அண்ணியின் கைப்போல இல்லையே என்று எண்ணி திரும்பி பார்த்தாள் விக்கித்து நின்றாள். “அ.. அர்ஜூன்… நீங்க .. நிங்க எப்படி என் அருகில்?” கேள்வி கேட்டு சட்டென கைகளை விலக்கிக் கொண்டாள்.

ஆதிரை இடதுபுரம் திரும்பி பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அர்ஜூனுக்கு ரிதிகா சைகை செய்து அவர்கள் இருவரும் இடம் மாற்றி அமர்ந்ததை ஆதிரை உணர்ந்திருக்கவில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூனுக்கு அவளது இந்த செயல் சிரிப்பை ஏற்படுத்தியது. “ நான் தான் நான் தான் உன் அருகில் தான்.. பெரிய அறிவாளியாக என் அருகில் அமர்வதை தடுப்பதாக எண்ணமா? என் அக்காவின் சேட்டை பற்றி உனக்கு தெரியாது. அவர்கள் முன் இது போன்ற முட்டாள்தனமெல்லாம் செய்ய முயலாதே . பின் இப்படிதான் உன் மூக்கு உடைப்படும்" என்று சிரித்தான் அர்ஜூன்.

அவ்வளவு இறுக்கத்திலும் அர்ஜூனின் அருகாமை தந்த பாதுகாப்பு உணார்வில் அவனது இந்த பேச்சு ஆதிரைக்கு கோபத்தை விட மனதுக்கு இதத்தையே தந்தது. அதையே பிரதிபலிப்பதுப் போல, “அது சரி.. என் கணவன் சொன்னால் மறுக்காமல் கேட்கிறேன். இனி இது போல் அசட்டுதனம் செய்யவில்லை. போதுமா?” என்று கையினை வயிற்றுக்கு குறுக்காக கட்டிக் ஒண்டு தன் வலது கையால் வாய்ப் பொத்தியப்படி சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அவள் சொன்னதன் அர்த்தம் புரியாமல் அவள் சொன்னதுதான். இருந்தும் அவளுடன் இணைந்து புன்னகைத்த போதும் , அர்ஜுனுக்கு வேறு தோன்ற, “உன் கணவன் என்ன சொன்னாலும் மறுக்காமல் கேட்பாயா?” என்று குரலில் தீவிரம் தெரிய கேட்டான்.

அதன் அர்த்தம் உணர்ந்த ஆதிரைக்கு கன்னங்கள் கதகதத்தது. அவளது நாணம் என்ன தடுத்தும் அவளது முகம் மூலமாக வெளிப்பட்டு அவளை மேலும் அழகுற செய்தது.

சட்டென நிலை உணர்ந்தவளாக , இது என்ன பேச்சு. அவளை விலகி போ என்று சொல்லிவிட்டு, இப்படி சரசமாக பேசுகிறான்.’ என்று தோன்ற அவள் மனம் உடனே கன்றி தலை தாழ்ந்தது.

அவளையே பார்த்த வண்ணம் இருந்த அர்ஜூன், “எ.. என்ன ஆதிரை.. உன் முகம் உடனே மாறிவிட்டது.” என்று அவளது முகவாயை உயர்த்தி கேட்டான் அர்ஜூன்.

அவனது தொடுகை அவளை மேலும் வதைக்க , மெதுவாக அவன் கையினை விலக்கி, “நா.. நான் உள்ளே போகிறேன்.” என்று சொல்லிக் கொண்டே எழுந்துவிட்டாள் ஆதிரை. புரியாமல் அவளை கேள்வியாக பார்த்த அர்ஜூன் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

அவள் எழுவதை பார்த்து , “ என்ன ஆச்சு ஆதிரை. தூக்கம் வருகிறதா?” என்று ரிதிகா கேட்டாள்.

“அ.. அண்ணி மிகவும் குளிர்கிறது? நான் உள்ளே போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு திரும்பி நடக்க முயன்றாள்.

“ஓ… சரி ஆதி.. டே தம்பி ஆதிரையுடன் போ. அவளை தனியே இருக்க விடாதே" என்று அவளது தம்பிக்கு ஆணையிட்டாள் ரிதிகா.

‘அவனிடமிருந்து விலக எண்ணியும்தானே நான் உள்ளே போக நினைத்தேன். அண்ணி ஏன் தான் இப்படி செய்கிறார்களோ. அர்ஜூன் சொன்னதுப் போல அண்ணியை மீறி எதையுமே செய்ய முடியாதுப் போல’ என்று மனம் சோர்வுற நின்றாள். ஆனால் மறுத்து பேச முயலவில்லை. அதற்கும் ஏதேனும் அண்ணி சொல்ல கூடும் என்று எண்ணி வாளாவிருந்தாள்.

அர்ஜூனுடன் சேர்ந்து வீட்டுக்குள் சென்ற போதும் ஆதிரை எதுவும் பேசினாள் இல்லை. நடுங்கிய வண்ணமே வந்திருந்த ஆதிரையின் மீது தான் போட்டிருந்த jerkin -ஐ கழற்றி அவளுக்கு மாட்டிவிட்டான் அர்ஜூன். மறுப்பேதும் சொல்லாமலே அதனை மாட்டிக் கொண்ட ஆதிரை, “தாங்க்ஸ்" என்று வார்த்தைகளை உதிர்த்தாள்.

pant – pocket- ல் கைய விட்டுக் கொண்டு "என்ன விசயம் ஆதிரை. ஏதோ போல இருக்கிறாய்?” என்று நேராக அவளை பார்க்காமல் முன்னோக்கி நடந்த வண்ணம் கேட்டான் அர்ஜூன்.

‘என்னவென்று இவனிடம் சொல்வது. தினம் தினம் அவன் காலடியில் விழுந்து மன்றாடும் அவள் மனதை அவ்வாறு செய்யாதே என்று அவளது சுயமரியாதை என்னும் கயிறு கொண்டு கட்டி வைத்திருப்பதை சொல்வதா? ஆசை கணவன் என்று அவன் மார்பில் எந்த கவலையுமில்லாமல் சாய்ந்துக் கொள்ள துடிக்கும் தன் உடலின் அணுவெல்லாம் செயலிழக்கும்படி மிரட்டி வைத்திருக்கிறாளே அதை சொல்வதா? எதுவும் செய்யாமலே அவனது மதிமயக்கும் பேச்சும் புன்னகையும் இயல்பாக ஏற்க முடியாமல் தவிக்கும் தன் பெண்மையின் நாணாத்தை சொல்வதா? ஹப்பப்பா. நான் என்னத்தைதான் சொல்வது இவனிடம்.’ என்று தனக்குள்ளே ஒரு மன போராட்டத்தை அடுக்கிக் கொண்டிருந்தாள் ஆதிரை..

அவ்வாறாக அவளது மனம் இருக்க, இவை எதையும் உணராமல், இயல்பாக பேசிய பேச்சையும் தவறாக எண்ணியதாலே சட்டென விலகி எழுந்ததாக எண்ணி ஆதிரையின் மீதே அர்ஜூனுக்கு ஆத்திரமாக இருந்தது. அதே நினைவில், "என்ன பேச்சே இல்லை. பேசவும் பிடிக்கவில்லையோ?” என்று முகத்தில் இறுக்கம் தோன்ற முன்னே பார்த்து நடந்த வண்ணம் சொன்னான் அர்ஜூன்.

“அ.. அப்படியெல்லாமில்லை" என்று அவசரமாக பதிலளித்தாலும் சட்டென அமைதியானாள்.

அவளை திரும்பி பார்த்த அர்ஜூன் ஏளனமாக புன்னகித்த வண்ணம் முகத்தை திரும்பிக் கொண்டான். எதுவும் பேசாமலே உள்ளே சென்றான். ஆதிரைக்கும் அவனிடம் விளக்கம் கொடுப்பதற்கு பேசாமல் இருப்பதே மேல் என்பது போல் அமைதியாகவே உடன் நடந்தாள்.

உள்ளே சென்றதும் , ஒரு மர பீரோவை திறந்து , "ஆதிரை இவையெல்லாம் என்னுடைய jerkins. வெளியில் போகும் போது எது பிடிக்கிறதோ. அதை அணிந்துக் கொண்டு போ. இதற்கும் ஏதும் விதண்டாவாதம் செய்யாமல் சொல்வதை கேள். உனக்கு குளிர் ஒத்துக்கொள்ளவில்லையென்பது பார்த்தாலே தெரிகிறது. அடுத்த முறை சிம்லா போகும் போது உனக்கேற்றாற் போல வாங்கி வர ஏற்பாடு செய்கிறேன்" என்றான் அர்ஜூன்.

அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் "சரி அர்ஜூன்...” என்றவள் அப்படியே கட்டிலில் படுத்துக் கொண்டு comforter-ஐ இழுத்து போர்த்திக் கொள்ள முயன்றாள். அவள் முயற்சியை பார்த்து முகத்தில் இறுக்கமுடன் இருந்த போதும் அவள் அருகில் வந்து அவள் கழுத்துவரை அதனை இழுத்து போர்த்திவிட்டான். “தாங்க்ஸ்" என்றாள் ஆதிரை. ஆனால் அவனது பாராமுகம் அவளை உறுத்தியது. ஆனால் இதுவும் நல்லதுதான் என்று பெருமூச்சுவிட்ட வண்ணம் நாளை பொழுதை நினைத்த வண்ணம் படுத்திருந்தாள்.

அவளுடன் பேசுமெண்ணமில்லாமல் அர்ஜூனும் தணல் குறைந்திருந்த தணல் கூண்டுக்குள் விரகிடுக்கியை கொண்டு சில துண்டுகள் விரகினை அந்த கூண்டுக்குள் போட்ட வண்ணம் யோசனையாக அந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்தான் அர்ஜூன். அவனையே பார்த்திருந்தப் போதும் எதுவும் பேசாமலே ஆதிரை படுத்துக் கொண்டாள். ஆனால் தூக்கம் வரவில்லை.

நாளைய பொழுதை எண்ணி ஆதிரையினுள் கனவுகள் ஏற்பட தொடங்கியது. அவளை பொறுத்த வரையில் இதுதானே அவளறிந்து நடக்க இருக்கும் அவளது திருமணம். உறங்க மறுத்து அப்படியே கட்டிலில் கிடந்தாள் ஆதிரை. அதனோடு பார்வதியை பார்க்க போகிறாள். இரண்டாவது ஜன்மத்தில் என்ன நடந்தது என்று நாளையே தெரியுமே. அர்ஜூனுக்கு ஏன் அவள் மீது அவ்வளவு கோபம் என்பதும் நாளையே தெரிந்துவிடும். அதே உற்சாகத்தில் இருந்த ஆதிரைக்கு அவனை பிரிந்து போவதாக அவனிடம் இன்றுதான் சொன்னது கூட மறந்து போயிருந்ததுப் போல.

ஆனால் ஆதிரையின் மீது ஒரு பார்வையை செலுத்திவிட்டு ஒரு பெருமூச்சுவிட்ட வண்ணம் எழுந்து வந்து கட்டிலின் அடுத்த முனையில் படுத்துக் கொண்டு தன் இருக்கைகளையும் தலையணையாக்கி அறையின் மேற் கூரையை பார்த்தவண்ணம் படுத்தான் அர்ஜூன். அருகில் அரவம் கேட்டு கண்களை திறந்து அர்ஜூனை பார்த்தவளை அர்ஜூனும் முகம் திருப்பி ஒருமுறை பார்த்தான். அவளுள் ஆயிரம் கேள்விகள். அதன் பிரதிபளிப்புப் போல அர்ஜூனுள்ளும் ஆயிரம் கேள்விகள். இருவரின் விழிகள் ஏதோ பேசிக் கொள்வதுப் போல் இருந்தப் போதும் உதடுகள் பேசிக்கொள்ளவில்லை.

அவன் விழிகளை தொடர்ந்து பார்க்கும் சக்தியற்று ஆதிரை கண்களை மூடிக்கொண்டாள். அர்ஜூனும் முகம் திருப்பிக் கொண்டு பேசலனான். “ஆதிரை… நீ சொல்வது உண்மையா?” என்றான் .

அவனது கேள்வி புரியாமல், “ம்ம்.. என்ன… எது உண்மையா என்று கேட்கிறீர்கள்" என்றாள் ஆதிரை.

உணர்ச்சி துடைத்த குரலில் , “இந்த சந்திரகுளிர் பிரட்சனை முடிந்ததும் என்னை விட்டு போய்விடுவதாக சொன்னாயே . அது உண்மையா?” என்று நேரிடையாக கேட்க வேண்டியதை கேட்டான்.

‘இது என்ன கேள்வி. அவன்தானே என்னை தவிர்கிறான். அவனுக்கு சங்கடம் தரக்கூடாது என்பதற்காகதானே அவள் அப்படி சொன்னது.ஒருவேளை நான் போக மாட்டாமல் உடன் இருந்து இம்சிக்க கூடுமென்று உறுதி வாங்கிக்கொள்ள முயல்கிறானோ’ என்று எண்ணும் போதே ஆதிரையின் மனம் கலங்கியது. அவனுக்கு பதில் சொல்லும் சக்தியற்று தவித்தது.

அவள் நிலை அறியாமல் , மேலும் கேள்விக் கேட்டான் அர்ஜூன்,” சொல்லு ஆதிரை. நீ விலகுவது உறுதியென்றால் நான் சில முடிவுகளை எடுக்க வேண்டும்" என்றான்.

அவனது பதிலில் அவனை நோக்கி பார்த்த ஆதிரை, அவனது இறுகிய முகத்தில் எதுவும் காணாதவளாய்,’ என்னை போ என்று சொல்கிறானா?’ என்று தவித்த ஆதிரை, அவனுடைய வாழ்வை வீணாக்க தனக்கு எந்தவித உரிமையும் இல்லைதானே. இதை உணர்ந்தப் போதும் அது என்ன முடிவு என்ற ஆர்வமேலிட, “என்ன முடிவு" என்றாள் ஆதிரை.

"நீ போய்விட்டால் போன ஜன்மங்கள் போல தனித்து இருக்காமல் இந்த ஜன்மத்தில் நான் வேறு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளலாமென்று இருக்கிறேன். " என்றான் அர்ஜூன்.

அப்படியே விக்கித்து பார்த்தாள் ஆதிரை. அவள்தான் விலகுவதாக சொன்னாள். இல்லையென்று இல்லை. இருந்தும் தன்னுடைய இடத்தில் அர்ஜூனின் அருகில் இன்னொருவளை ஆதிரையால் எண்ணமுடியாமல் உயிர்ப்பூ உடலை விட்டு போய் மீண்டதுப் போல உணர்ந்தாள் ஆதிரை. சந்திரகுளிர் பிரட்சனை சரியாகுவதற்குள் இரண்டாவது ஜன்மத்தில் நடந்ததை அறிந்து அவன் மனதுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அவனுக்கு விளக்கம் கொடுக்க வேண்டுமென்று எண்ணியிருந்தாள். அந்த மனகசப்பில்தான் அர்ஜுன் விலகுவதாக எண்ணியிருந்தாள். இப்போது இருக்கும் சங்கடங்களெல்லாம் அதன் பிறகு மகிழ்வாக மாறுமென்று நம்பியிருந்தாள். போன ஜன்ம பிரிவின் காரணம் அறிந்து அவனது மன கஷ்டத்தை போக்கி பின் அவனுடன் நீண்ட நாள் மகிழ்வுடன் வாழலாமென்று உள்ளுக்குள் மனக்கோட்டை கட்டியதெல்லாம் ஒரு நொடியில் தரை மட்டமானதுப் போல உணர்ந்தாள் ஆதிரை. அவனுக்கு பதில் சொல்லும் சக்தியற்று இமைக்க மறுந்து அவனை பார்த்தாள்.

இவ்வாறாக ஆதிரை சிந்தனையிலிருக்க அர்ஜூன் மேலும் பேசினான், "இரண்டு வருடமா ஒரு பொண்ணு என்னை விரும்புவதாக சொல்லிக் கொண்டு எனக்காக காத்திருக்கிறாள். உன்னை தவிர்க்க முடியாமல் திருமணம் செய்துக் கொண்டதால் அவளிடம் என்னால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் போனது. இப்போது நீ சொல்வதுப் போல என்னைவிட்டு போனால் அவளை மறுமணம் செய்துக் கொண்டு மகிழ்வுடன் வாழலாமென்று இருக்கிறேன்" என்று சொல்லிய வண்ணம் அவள் முகத்தை திரும்பி பார்த்த வண்ணம் கேட்டான்.

அவன் எதிர் பார்த்ததுப் போலவே, ஆதிரையின் முகத்தில் ஈ ஆடவில்லை. அப்படியே விழித்து பார்த்தாள். ‘என்ன சொல்வது. ஆக அந்த பெண்ணின் நினைவில்தான் நெருங்கியும் விலகியும் இத்தனை நாட்கள் தவிக்கிறான். இல்லையா. இரண்டாவது ஜன்மத்தில் பிரட்சனையென்பதெல்லாம் வெறும் கதை கட்டு என்றே அவளுக்கு இப்போது தோன்றியது. இப்போது எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்தவளாக நிமிர்ந்தாள். காரணம் அறிந்தப் பிறகு சொந்தங்களுடன் இருக்க வேண்டுமென்று இங்கேயே இருந்தால் எவ்வளவு பெரிய மடத்தனம். அவனை விட்டு விரைவில் போக வேண்டும். அதே சமயம் சந்திரகுளிர் பிரட்சனை முடிந்ததும்தான் போக வேண்டும். இல்லையென்றால் இன்னொரு ஜன்மம் என்று இந்த உறவு தொடர்வதை ஒரு நாளும் ஏற்க முடியாது.’ என்று தனக்குள்ளே பேசிக் கொண்ட ஆதிரை, “நா.. நான் போய் விடுவேன் அர்ஜூன். நீங்க தவிக்க வேண்டான். எவ்வளவு விரைவில் விலக முடியுமோ அவ்வளவு விரைவில்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதிரையின் குரல் தழுதழுத்தது.

இதற்கு மேல் ஆதிரையிடம் பேசுவது சரியில்லையென்பதுப் போல் அர்ஜூன் அவளிடம் மேலும் ஒருவார்த்தையும் பேசாமல் வேகமாக எழுந்து அந்த அறையைவிட்டு சென்றுவிட்டான். அர்ஜூனின் செயலுக்கான காரணம் புரியாமல் திகைத்த ஆதிரை அப்படியே அந்த கட்டிலில் எழுந்து அமர்ந்து முட்டிகாலில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள்.

எவ்வளவு நேரம் அவ்வாறு அமர்ந்திருந்தாலோ தெரியவில்லை, ராதை வந்து " அண்ணி.. உங்களை குளித்து தயாராக அம்மு அக்கா சொல்ல சொன்னாங்க. நான் இங்கேயே இருக்கிறேன். உங்களுக்கு ஏதேனும் வேண்டுமென்றால் என்னிடம் சொல்லுங்க. நான் செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு அறையிலிருந்த கட்டிலில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

அவளுக்கு பதிலாக புன்னகைத்த ஆதிரை, அவளது கவலைகளையெல்லாம் புரம் தள்ளி, “சரி ராதை. நான் தயாராகிறேன். நீ தயாராகவில்லையா" என்று கேட்டாள் ஆதிரை.

“இல்லை அண்ணி. நீங்க போய் வாங்க. நானும் கணேசன் அண்ணாவும் நீங்க வரும்வரை இங்குதான் இருப்போம். இனி அந்த குகை கோவில் திறந்துதான் இருக்குமாமே. காவலுக்கு கூட ஆள் போட ஏற்பாடாகியிருக்காம். பாட்டி சொன்னாங்க. எல்லாரும் போய்ட்டா இங்க குழைந்தைகளை யார் பார்க்க . அதனால நானும் என் அண்ணாவும் பிறகு போய் பார்த்துவிட்டு வருவோம் அண்ணி. நீங்க கிளம்புங்க. நேரம் ஆகிறது" என்றாள் சின்ன பெண்ணான ஆதிரை.

“ஓ.. புரியுது. சரி ராதை.” என்று எல்லா மன பாரத்திற்கும் அப்பால் கடமையே என்று தயாராகினாள் ஆதிரை.

அவள் தயாராகி அறையை விட்டு வெளியில் வரும் போதுதான் அர்ஜூன் அந்த அறைக்குள் வந்தான். ஆதிரையை நிமிர்ந்தும் பார்க்காமல் அறையுள் சென்றவன் அவனும் தயாராகி வந்திருந்தான். ஷேர்வாணி போலான அவன் ஆடையும் தலையில் மாட்டியிருந்த அவனது தலை பாகையும் அர்ஜூனை இளவரசன் போல காட்டியது. அவனையே அவள் பார்த்திருந்தப்போதும் ஆதிரையை அவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவனது பாரா முகம் ஆதிரையினுள் வலித்தது. ஆனால் அர்ஜூன் அனைவருடனும் கலகலப்பாக இருந்தான். அவர்களுடன் சிரித்துசிரித்து பேசினான். அவளிடம் தவிர. ஆதிரையும் வேறு வழியில்லாமல் பேசாமலே அவனுடன் இணைந்து நடிக்கும்படி ஆனது.

பாட்டி சொன்னப்படியே எல்லா சடங்குகளும் நடந்தது. கன்னத்தில் சந்தனமும் நெற்றியில் திலகமுமாக ஆதிரையும் அர்ஜூனும் இணைந்து சந்திரகுளிர் குகை கோவிலை நோக்கி நடந்தனர். எல்லா கவலைகளையும் புரம் தள்ளி பார்வதி அம்மனை தரிசிக்க ஆதிரை ஆர்வம் மிகுந்திட நின்றாள். விளக்குகளை ஏந்திய வண்ணம் ஊர் மக்கள் அவர்களின் பின்னே வந்துக் கொண்டிருந்தனர். குகையினை அடைந்ததும் சிவசக்தி அங்கிருந்த திருகினை திறந்து குகைக்குள் செல்ல கதவினை திறந்தாள்.

ஆதிரையும் அர்ஜூனும் முதலில் உள்ளே நுழைய , ஊர் மக்கள் அனைவரும் ஒருவித நேர்மறையான சக்தி உண்டாக அவர்களை தொடர்ந்தனர். குகையின் பெயருக்கேற்ப குகையில் நுழைந்ததும் , சந்திரனின் ஒளி வீசியது. அம்மாவாசையென்ற போதும் உள்ளே நிலவொளி வீசுவதுப் போன்ற வெளிச்சம். வெளியில் கல்பனி இருந்த போதும் குகையில் மனதுக்கும் உடலுக்கும் இதமான தட்பவெட்பமே இருந்தது. அவ்வளவு பெரிய குகை அந்த இடத்தில் மறைந்திருக்கிறாதா என்பதுப் போல் அவ்வளவு ஆழம். அனைவரும் சுவரொட்டியே இருந்த ஒத்தயடி சரிவான பாதையில் மெதுவாக நடந்துச் சென்று பார்வதியின் சிலையிருக்கும் இடம் அடைந்தனர். பால்வண்ண நீர் ஊற்று பார்வதி சிலையின் மீது விழுந்து அவளை குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. அவள் முன் விளக்கொன்று எரிந்துக் கொண்டிருந்தது. சிலையின் இடதுப்புரம் கருனிற மேகங்கள் குகையின் மேற்கூரையில் சூழ்ந்திருந்தது. சிவராமன் தாத்தா சொன்ன அந்த கருனிற மேகங்கள் இவைதானோ என்று எண்ணினாள் ஆதிரை. வலதுபுரம் மெல்லிய பால்வண்ண ஓடை. பார்வதியின் மீது விழுந்து சென்ற நீர் அந்த ஓடையில் கலந்து சென்றது. ஆனால் அந்த ஓடை எங்கே சென்று சேர்கிறது என்பதை அறியமுடியாதப்படி எங்கோ சென்றுக் கொண்டிருந்தது. இவை இரண்டிற்கும் நடுவில் நடுனாயகமாக வீற்றிருந்தால் பார்வதி அம்மன்.

அவளை பார்த்த நிமிடத்தில் அவளை நோக்கி சென்று பார்வதியை தன் கைகளில் ஏந்தி நின்றாள் ஆதிரை. அவளது வலது கையில் அங்கிருந்த விளக்கையும் ஏந்தினாள். இதேப்போல் தன் இரண்டாவது ஜன்மத்தில் ஏந்திய வண்ணம் மணகோலத்தில் கடலை நோக்கி சென்றது ஆதிரைக்கு நினைவு வந்தது. ஆனால் அதற்கு மேல் வேறேதுவும் நினைவுக்கு வரவில்லை. ஆம் அர்ஜூனுக்கு சிவனை பார்த்தப்போது நினைவு வந்ததுப் போல் ஆதிரைக்கு பார்வதியை பார்த்ததும் பூர்வீகம் எதுவும் நினைவுக்கு வரவில்லை. கேள்வியாய் அர்ஜூனை பார்த்த ஆதிரை, அவனது இறுகிய முகத்தை பார்த்து அதனை கேட்க நினைத்து கேட்காமலே விட்டாள்.

புல்லாங்குழலினால் மங்கள இசை முழக்கம் எழுப்பப்பட்டது. அந்த குகைக்குள் இசைக்கப்பட்ட மெல்லிய இசை சுவரெங்கும் எதிரொலித்து அங்கிருப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஊர் மக்கள் எல்லோரும் மதிமயங்கி அந்த சந்திரகுளிரின் இதமான குளிரையும் ஒளியினையும் பார்வதியையும் ரசித்திருந்தனர். சில சடங்குகளுக்கு பிறகு ஆதிரை கண்ணுற்று அவளது கழுத்தில் அர்ஜூன் அந்த மஞ்சள் கயிற்றை கட்டினான். ஆதிரையின் தலையை தன்னோடு சாய்த்து அவளது தலையை சுற்றி அவள் நெற்றி வடுகில் குங்குமமிட்டான் அர்ஜூன். கனவு போல எல்லாம் நிகழ்ந்ததும். ஆதிரை மீண்டும் பார்வதியின் சிலையை அதன் இடத்தில் வைத்தாள். விளக்கினையும் அதற்கான மாடத்தில் வைத்தாள்.

அதன் பிறகு மணமக்கள் இருவரும் கடவுளின் முன் விழுந்து வணங்கினர். அவர்களை தொடர்ந்து ஊர் மக்களும் முதல் முறையாக கண்ணுற்ற தன் ஊரை காக்கும் கடவுளான பார்வதியின் சிலையில் விழுந்து வணங்கினர். பின் அனைவரும் மீண்டும் தங்கள் இருப்பிடம் நோக்கி திரும்பினர். மக்கள் எல்லோரும் முன்னே செல்ல ஆதிரையும் அர்ஜூனும் இறுதியாக நடக்க ரிதிகாவும் அரவிந்தும் இன்னும் சில அர்ஜூனுக்கு ஒத்த வயதுக் கொண்ட அந்த ஊரை சேர்ந்த சிலரும் அவர்களுடன் இறுதியாக நடந்து வந்தனர். மற்றவர்களுடன் சிரித்து சிரித்து பேசிய போதும் ஆதிரையிடம் முகத்தினையும் திருப்பாமல் அர்ஜூன் உடன் வந்தது ஆதிரைக்கு என்னமோ போல இருந்தது. இருள் முழுதும் அகலாத பொழுத்தில் அருகில் எடுத்து சென்றுக் கொண்டிருந்த தீப்பந்தங்களின் ஒளியில் அர்ஜூனை பார்க்க ஆதிரைக்கு ஆர்வம் மிகுந்தது. ஆனால் அவனை நேராக நிமிர்ந்து பார்க்க முடியாமல் அருகிலே நடந்து வந்த அர்ஜூனின் மார்பு சட்டைக்கும் மேலாக விழி உயர்த்தி அவன் முகம் பார்க்க ஆதிரையால் முடியவில்லை.

அப்படி பார்த்த வண்ணம் வந்தவள் அர்ஜூனின் மார்பு சட்டையின் மீது சிகப்பு லேசர் விளக்கு புள்ளி விழுந்து இங்கும் அங்கும் ஆடியது காண நேர்ந்தது. சட்டென என்னெனமோ எண்ணங்கள் தோன்ற , “அ..அர்ஜூன். தூப்பாக்கி.. சிகப்பு புள்ளிப்போல " என்று சொல்லிய வண்ணம் அர்ஜூனின் மார்பில் வேகமாக அவனை மறைத்தார் போல சாய்ந்துக் கொண்டாள். எதிர்பாராமல் அவள் சாய்ந்ததில் தடுமாறிய அர்ஜூன் சரிவான மலை பாதையில் கால் இடறி விழுந்தான். விழுந்த வேகத்தில் அவன் தலை கீழே விழாமல் இருக்க அவனது தலைக்கு பின் தன் கையினை கோர்த்து அவன் தலைப்பின்னே வைத்தாள். அவர்கள் விலகியதால் அந்த துப்பாக்கி சூடு அர்ஜூனுக்கு பின்னாடி இருந்த தேவதாரு மரத்தில் பட்டு மரத்துகள்களை சிதர செய்தது.

இவை அனைத்தும் ஒரு நொடியில் நடந்தேறி இருந்தது. இதனை கண்ணுற்ற மக்கள் குண்டு சூடு வந்த திசை நோக்கி "ஏய்.. யாரது.. யாரது" என்று கத்திய வண்ணம் ஓடினர்.

அர்ஜூனுக்கும் ஆதிரைக்கும் எதுவும் நேர்ந்ததோ என்று அச்சத்தில் அவர்கள் விழுந்த இடத்தை நோக்கி ரிதிகாவும் அரவிந்தும் இன்னும் சிலரும் அங்கே வேகமாக ஓடி வந்து "அர்ஜூன்… ஆதிரை… உங்களுக்கு ஒன்றுமில்லையே" என்று சொல்லிய வண்ணம். அவர்களுக்கு கைக் கொடுத்து எழுப்பிவிட்டனர்.

“எதுவுமில்லை மாமா. ஆதிரை தகுந்த நேரத்தில எச்சரிச்சதால, தப்பினேன்.” என்று வெண்பற்கள் தெரிய புன்னகித்தான் அர்ஜூன்.

ரிதிகா கை தாங்க எழுந்தப்பின்னும் பயம் தெளியாதவளாக , "அ.. அர்ஜூன்.. அர்ஜூன்...” என்று பிதற்றிய வண்ணம் ரிதிகா கைகளிலிருந்து விலகி அர்ஜூனின் மார்பின் சட்டையை இறுக பற்றிய வண்ணம் அலற்றினாள் ஆதிரை.

“ஷ்… என்ன ஆதிரை.. எனக்கு தான் ஒன்றுமில்லையே. எதற்கு இப்படி எல்லோர் முன்னிலையும் நடந்துக் கொள்கிறாய்.” என்றுஅ வள் காதருகில் சொல்லிய வண்ணம் அவளை அணைத்து ஆருதல் படுத்த முயன்றான்.

"அர்ஜுன். உங்களுக்கு.. நீங்க...” என்று ஒன்றுக்கு ஒன்று சேராத வண்ணம் பிதற்றிய ஆதிரையின் காதருகில், “என்னை விட்டு போக துடிக்கும் நீ. இப்படி நடந்துக் கொள்வது சரியாகுமா சொல்" என்று யாருக்கும் கேட்காத வண்ணம் அர்ஜூன் அவளது காதருகில் வந்து சொன்னதும் விக்கித்து மூச்சுகூட விட முடியாமல் நின்று நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள். சட்டென விலகி நின்றாள். தலை தாழ்த்தி நின்றாள். கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் இந்த நேரத்தில் அர்ஜூன் பேசிய இந்த பேச்சு , தான் விலகி போவதில் எவ்வளவு தீவிரமாக அவன் இருப்பதை அவளுக்கு உணர்த்தியது. இனி அறியாமல் கூட அவனை தொடவே கூடாது . என்னுடைய மனதிற்கு அணை போட்டே ஆக வேண்டும்’ என்று பலதும் எண்ணி அதற்கும் சேர்த்து ஒரு மூச்சு கண்ணீர் வழிய ஆரம்பித்தது அவளுக்கு.

அவளையே பார்த்திருந்த ரிதிகா அவளது அழுகையின் காரணம் அர்ஜூனுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பயமே என்பதுப் போல எண்ணி, “ஆதிமா. பயப்படாதே. அர்ஜூனுக்கு எதுவும் ஆகாது. இப்படி குழந்தைப் போல அழ கூடாது" என்று அவளை அணைத்து ஆருதல் சொன்னாள். காரணம் அது இல்லையென்ற போதும் ரிதிகாவை அணைத்த வண்ணம் அர்ஜூன் சொன்னதுற்கும் மனதில் தோன்றியதற்கும் சேர்த்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள் ஆதிரை. ரிதிகாவும் அவளை வருடி கொடுத்த வண்ணம் சில நிமிடம் நின்றாள். ஒருவாறு சமாதனம் அடைந்து அவள் அழுகை நின்று தேம்பிலாகி தேய்ந்தது.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement