தூரம் போகாதே என் மழை மேகமே!! - 48

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer




நேற்று தீவின் மறுபாதியில்…..


ரிதிகாவிடமிருந்து விடை பெற்று வந்த அரவிந்தும் உத்ராவும் இருவருடத்திற்கு முன் அரவிந்த் உண்டாக்கி கொணர்ந்த பழைய படகில் சிலவற்றை மாற்றி நதியினை கடந்து தீவின் மறுபாதியை அடைந்தனர்.
நதிக் கரையினை அடைந்தபின் ஒரு நீண்ட தடிமனான மரக்குச்சினை நதிக்கரையில் நட்டு அதில் அவர்கள் வந்த படகினை சிறிது இழுத்துவிட்டு ஒரு சணல் கயிற்றினால் கட்டினர்.


சிறிது தூரம் காட்டினுள் நடந்து சென்ற அரவிந்திற்கு அந்தக் காட்டின் முந்தைய விலங்குகள் ரகத்தில் ஒன்றையும் காணாமல் ஏதோ வேறுபாடாக உணர்ந்து, “உத்ரா.. 2 வருடத்திற்கு முன்பு என்னைப் பயமுறுத்திய மாமிச பட்சினி விலங்குகள் எதுவும் இப்போது இந்தக் காட்டில் தென்படவில்லையே!. நாம் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கோமா!?” என்று முன்பு அரவிந்த் பார்த்த இடத்திற்கும் இப்போதைய நதிக்கரையின் இந்தத் தீவிற்கும் இடையேயான வேறுபாடு புரிபடாமல் பேசினான் அரவிந்த்.


‘எனக்குத்தானே இந்தச் சந்தேகமெல்லாம் உண்டாகும்! உத்ராவிற்கு இந்தத் தீவே புதிதுதானே! அதனிடம் இப்படிப் பேசினால் அதற்கெப்படி புரியும்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு புன்னகித்த வண்ணம் தன் தலையின் மீதே தட்டிக் கொண்டான் அரவிந்த்.


“ம்ம்…” என்பது போல தலையை அசைத்த உத்ராவை பார்த்த அரவிந்திற்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன? நீ இந்தக் காட்டிற்கு ஏற்கனவே வந்திருக்கிறாயா!?” என்று ஆர்வமாகக் கேட்டான் அரவிந்த்.


அதற்கும் “ஆமாம்” என்பது போல தலையசைத்த உத்ராவை அரவிந்த் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அரவிந்தின் அருகில் வந்த உத்ரா, அவன் கையில் இருந்த ஓலைச் சுவடியை இழுத்துப் பார்த்தது. அதன் சைகை புரியாமல்,” என்ன செய்ற உத்ரா.. விடு…” என்று உத்ராவிடம் ஓலைச் சுவடியை கொடுக்காமல் தன்னகத்தே இழுத்த வண்ணம் , “நீ பண்ணரது எதுவும் எனக்குப் புரியல. ரிதிகா நிறைமாதமாக இல்லையென்றால் அவளையும் அழைத்து வந்திருக்கலாம். நீ செய்வது , பார்ப்பது உணர்த்துவது என்று எதுவுமே எனக்கு ஒன்றும் புரிப்படல. அவளானால் உன்னைப் புரிந்து எனக்குச் சொல்லியிருப்பாள். எப்படித்தான் உன்னையும் அழைத்துக் கொண்டு தெரியாத இந்தக் காட்டினுள் சென்று ஆதிரையையும் அர்ஜூனையும் கண்டுபிடிக்க போகிறேனே! போ!” என்று புலம்பிய வண்ணம் தன் பின்னங்கழுத்தை தேய்த்தான் அரவிந்த்.


உத்ராவின் சைகை அரவிந்திற்கு புரியாத போதும் , அரவிந்தின் பேச்செல்லாம் அதற்கு புரிந்தது போல, அரவிந்த் ஓலைச் சுவடிக் கொடுக்காததால் கோபமுடன் பலமாக உறுமியது.


உத்ராவிடமிருந்து சப்தத்தை எதிர்பார்த்திராத அரவிந்த் அந்த உறுமலை வேறு ஏதோ மிருகத்தின் சப்தமென்று ஒரு நொடி எண்ணித் தான் இருந்த இடத்திலிருந்தே வட்டமாக ஒரு பார்வையை செலுத்தி, தாக்குவதற்கு ஏதுவாக உடன் கொணர்ந்த ஈட்டிப் போன்ற ஆயுதத்தை எடுத்துத் தாக்குவதற்கு தயாராக நின்றான் அரவிந்த்.


அப்படி நின்றது சில நொடிகளே பின் எந்த மிருகமும் இல்லையென்பதை அறிந்து உத்ராவை பார்க்க அதுதான் அந்தச் சப்தத்தை ஏற்படுத்தியது என்பது போல அவனையும் அவன் கையிலிருந்த ஓலையையும் மாறி மாறிப் பார்த்தது. அதிலே உண்மை உணர்ந்த அரவிந்த் “என்ன உத்ரா.. திடீரென்று இப்படிச் சத்தமிடுகிறாய். நான் பயந்தே விட்டேன். “ என்று எரிச்சலுற்று உத்ராவிற்கு நிகராக பேசினான் அரவிந்த். இல்லை இல்லை கத்தினான் என்றுதான் சொல்ல வேண்டும்.


அவனைப் பொருட்படுத்தாமல், மீண்டும் அரவிந்தின் கையிலிருந்த ஓலைச் சுவடியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி உத்ரா புரட்டியது. அந்தச் சுவடியை படிக்கத் தெரியும் என்பது போல அதன் செயல் அரவிந்தை வியர்க்கச் செய்தது.


“உ… உத்ரா… உ… உனக்குத் தமிழ் படிக்கத் தெரியுமா? எ.. எதற்காக என் கையிலிருந்து அவசரமாக ஓலைச் சுவடியைப் பிடுங்கினாய்?“ என்று தடுமாறி கேட்டேவிட்டான் அரவிந்த்.


அந்தக் கேள்விக்காகத்தான் காத்திருந்தது போல, உத்ரா மெதுவாக அரவிந்தின் அருகில் வந்தது. அவனது கையிலிருந்த குத்து ஈட்டியை வாங்கி அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்த புற்களை செதுக்கிக் களைத்துவிட்டது. புற்களை செதுக்கியபின் இருந்த ஈரமான மண் தரையில் அவனிடம் வாங்கிய ஈட்டியைக் கொண்டே “தெரியும்..” என்று முத்து முத்தான தமிழில் வரைந்து காட்டியது.


ஏற்கனவே சிறிது குழப்பமுற்று இருந்த அரவிந்திற்கு கரடியான உத்ராவின் இந்தச் செயல் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது. “என்ன?...” என்று உத்ராவிடமிருந்து இரண்டடி தள்ளி நின்று கேட்டான்.


அரவிந்த் பயப்பட கூடுமென்று ஏற்கனவே உத்ரா யூகித்ததோ என்னமோ ,” பயம் வேண்டாம் , என்னைப்பற்றி பிறகு பேசலாம். முதலில் ஆதிரையையும் திகேந்திரரையும் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கையிலிருந்த ஈட்டியைக் கொண்டே மீண்டும் அந்த மண் தரையில் எழுதியது. அதன் சைகையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அரவிந்த், ஒரு நொடி மூச்சுவிடவும் மறந்து வியர்த்துப் போய் பார்த்துக் கொண்டு நின்றான்.


“எ.. என்ன? ஆ.. ஆதிரையும் , அர்ஜூனையுமா?” என்றான் திக்கிய வார்த்தைகளாக.


“ஆமாம்” என்பது போல உத்ரா மீண்டும் தலையை அசைத்தது.


ஆதிரை மற்றும் அர்ஜூனின் ஜாதக பெயரையும் கூற மெதுவாகத் தன்னிலை உணர்ந்த அரவிந்த், ‘இதுவும் இந்தத் தீவின் ஜாலம் தானோ!. நாம் நடப்பதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். கரடி எழுதுகிறது படிக்கிறது! உண்மையான உலகில் இருக்கும் உயிர்களின் இயல்பும் இந்தத் தீவின் உயிர்களின் இயல்பும் ஒன்றாக இருக்குமென்று எண்ணியது என் எண்ணப் பிசுக்கு. இப்போதிக்கு அர்ஜூனையும் ஆதிரையைப் பார்க்க வேண்டும். உத்ராவினுள் தெரிந்த அவசரம் அவர்களுக்கு ஏதேனும் ஆக வாய்ப்பிருப்பது போல உணர்த்துகிறதே!” என்று மேலும் உத்ராவை பற்றி மேலும் யோசிக்காமல் தற்போதைய பிரட்சனையைப் பற்றிப் பேசலானான். உத்ராவால் எழுத முடியும் என்பதால் அதற்கு மேல் அரவிந்திற்கும் உத்ராவிற்கு தகவல் பரிமாற்றம் அவ்வளவு கடினமாக இல்லை.


”ம்ம் புரிகிறது உத்ரா..” என்று உத்ராவின் அருகில் நெருங்கி வந்து அதன் கையிலிருந்த ஓலைச் சுவடியைத் தானும் ஒரு கையாக பிடித்து ,” இந்த ஓலைச் சுவடிப்படி பால் வண்ண அருவி இருக்குமிடத்தில் ஓங்காரம் மந்திரம் கேட்கும். அங்குள்ள குகையில் அவர்கள் இருப்பார்கள் என்றிருக்கிறதே. இதனோடு ஓரிரு குறிப்புகள் கொஞ்சம் புரிந்தும் புரியாதமாக இருக்கிறதே!. ஓங்காரம் கேட்கிறதா என்று தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். அந்தப் பகுதி தீவைப் போலவே இந்தத்தீவும் மிகவும் பெரியதாக இருக்க வாய்ப்பில்லை.” என்றான் அரவிந்த்.


அவ்வாறு அவன் சொல்லிய பின்னும் உத்ரா அந்த ஓலைச் சுவடியை இரண்டு மூன்று முறை உற்றுப்பார்த்தது. பின் , “ என் பின்னோடு வா” என்று எழுதிக்காட்டிவிட்டு அந்த ஓலைச் சுவடியை பார்த்துப் பார்த்து முன்னேறிச் சென்றது. ஏதோ GPS முறையில் அந்த ஓலைச் சுவடி உத்ராவிற்கு மட்டும் வழி காட்டுவது போல் என எண்ணி அரவிந்த் சிறு புன்னகையை உதிர்த்து அதனைத் தொடர்ந்தான்.


அதிக தூரம் செல்லுமுன்னரே இருள் சூழ ஆரம்பித்தது. உத்ராவும் மேலும் முன்னேறிச் செல்ல முடியாமல் ஒரு அகன்ற ஆலமரத்தின் கீழே அமர்ந்து “ மீண்டும் நாளைக் காலை பயணத்தைத் தொடரலாமென்று” ஈட்டியைக் கொண்டே எழுதிக் காட்டியது.


அதுவும் சரிதான் என்பது போல் ,”சரி உத்ரா சாப்பிட வேண்டுமே! உனக்கு சில துண்டுகள் தர்பூசணி இருக்கிறது. இந்தா..” என்று உத்ராவிற்கானதை அதனிடம் கொடுத்துவிட்டு அரவிந்தும் உண்டான். அவன் கொடுத்தது பற்றவில்லையோ என்னமோ உத்ரா, பின் எங்கோ அலைந்து திரிந்து அதற்கென்று சில மூங்கில் இலைகளைக் கொணர்ந்து அதன் வயிற்று பசியைப் போக்கிக் கொண்டது. பின் இருவரும் அந்த ஆலமரத்தினடியிலே உறங்கியும் போனார்கள்.


சில்லென்று வீசிய காற்றும் இரவு ஏற்பட்ட ஆழ்ந்த உறக்கமும் சேர்ந்து கொண்டு காலைக் கண் விழித்த அரவிந்திற்கு அதிக உத்வேகத்தைக் கொடுத்தது. எழுந்து நின்று நெட்டி முறித்த அரவிந்த் அப்போதுதான் அந்த வெண்ணிற அருவியின் உச்சியைப் பார்த்தான்.


“உத்ரா.. உத்ரா.. அதோ பார். வெண்ணிற அருவி. எழுந்திடு.. நாம் அருகில் வந்துவிட்டோமென்று நினைக்கிறேன். வா.. வா” என்று அப்போதுதான் எழுந்து கொண்டிருந்த கரடியை எழுப்பினான் அரவிந்த்.


அரவிந்தின் பரபரப்பு உத்ராவையும் தொற்றிக் கொள்ள இருவரும் அந்த அருவியின் உச்சியைப் பார்த்தவண்ணம் அந்தத் திசையை நோக்கி விரைந்து நடந்தனர். நீரின் சலசலப்புடன் ஓங்காரமும் மிக அருகில் கேட்க ஆரம்பித்தது. “என்ன அதிசயம் , வெண்மை நிற பால் போன்ற அருவி. கீழே விழுந்த அந்தப் பால் நிற தண்ணீர் மீண்டும் இயல்பான நிறமற்ற தண்மையை அடந்துவிட்டதே!. அந்தக் குன்றின் உச்சியில் பார்க்கும்போது மட்டும் பால் ஊற்றெடுத்துக் கொட்டுவது போல் அல்லவா இருக்கிறது. அருவி கொட்டும் போது ஓம் என்ற சத்தமே கேட்கிறது“ என்று ஆச்சரியத்தை வாய்விட்டே பேசினான். ஓங்காரத்தை கேட்டதும் அரவிந்தின் உடலெல்லாம் சிலிர்த்து மயிர்க்கால்கள் எல்லாம்குத்திட்ட மெய்சிலிர்க்க வைத்தது.. உடன் வந்த உத்ராவையும் மறந்து அவன் கண்கள் மூடி லயிக்க ஆரம்பித்தான்.


அவன் நிலை அதுவென்றால் உத்ரா அந்தலயிப்பில் கொஞ்சமும் இருக்காமல், சுற்றும் முற்றும் பார்த்தது. எதையோ தேடி தவித்த உத்ராவின் விழிகள் அருவி குதித்துக் கொண்டிருந்த இடத்தின் அருகில் சென்று நிலைத்தது. அங்கே ஒரு நீல நிற கல்லின் பதிந்த உத்ராவின் விழி கூர்மை அதிகமடைந்து, அரவிந்தின் கையை பற்றி வேகமாக அதனை இழுத்துச் சென்றது.


உத்ராவின் சைகை புரியாமலும், அதன் முரட்டுத்தனமான கை இறுக்கத்தாலும் ஒரு நொடி “என்ன!!?.. என்ன?” என்று தடுமாறினாலும் அரவிந்த் உடனே சுதாரித்துக் கொண்டு உத்ராவுடன் நடந்தான். அருவியின் மிக அருகில் சென்றதும் தூரத்தில் பார்த்த அந்த நீல நிற பாறை ஒவ்வொரு நீர் விழுதலுக்கும் மின்னி நின்றது.


அதனைப் பார்த்ததும் உத்ரா, ஓலைச் சுவடியை மீண்டும் உற்றுப் பார்த்து , “இதுதான் அந்தக் கல். இதனை அந்த இடத்திலிருந்து நகர்த்தினால் ஒரு குகை கதவு திறக்கும் என்று இந்த ஓலையில் போட்டிருக்கிறது” என்று ஓடை நீரில் கை நனைத்து பாறையில் எழுதிக்காட்டியது உத்ரா.


“என்ன…!!” என்று ஆச்சரியமாக ஓலைச் சுவடியை அவனும் ஒருமுறை பார்த்து தெளிந்து விரைந்து செயல்பட்டான். உத்ராவும் அரவிந்தும் இணைந்து அந்தப் பாறையை நகர்த்த அருவி கொட்டிக்க் கொண்டிருந்த இடத்திற்கு வெறும் பாறையாக இருந்த இடம் தானியங்கி கதவு போல திறந்து கொண்டது.




“ஓ… உத்ரா! இது எப்படி உனக்குப் புரிந்தது. என்னமோ வா உள்ளே போகலாம். முதலில் ஆதிரையையும் அர்ஜூனையும் பார்க்க வேண்டும்” என்று அரவிந்த் சொல்ல அருவியில் நனைந்த வாரே இருவரும் அந்தக் குகையில் அடியெடுத்து வைத்தனர்.


அந்தக் குகை உள்ளே சென்றதும் ஏதோ கல் போன்ற ஒன்றை மிதித்துவிட்டது போல உணர்ந்த அரவிந்த் “உத்ரா.. ஏதோ காலில் படுகிறது” என்று கீழே குனிந்து பார்த்த வண்ணம் தான் ஊன்றியிருந்த இடத்திலிருந்து காலை மாற்றி வைத்தான். அந்தச் செயலால் அவர்கள் வந்த குகை திறந்திருந்த கதவு மீண்டும் மூடிக் கொண்டது.


ஒரு நொடி பதறிய அரவிந்த்,” அய்யயோ! உள்ளே மாட்டிக் கொண்டோமே! இந்தக் கதவை எப்படித் திறப்பது” என்று வந்த வழியே சென்று அடைத்துக் கொண்டு நின்ற அந்தக் குகை வாயிலை நோக்கிச் சென்றான்.


அதற்குள் மீண்டும் ஏதோ ஒரு கல்லை மாற்றி வைத்தது உத்ரா. அதனால் அந்தக் குகை கதவு மீண்டும் திறந்தது. “அப்பாடா” என்று யோசித்த போதும் மீண்டும் அந்தக் கல்லை பழைய நிலையிலே வைத்து குகையை மூடிவிட்டு ஓங்கார குரலோசை கேட்ட திசையை நோக்கி நடக்கலாயினர்.


போகும் வழியிலே யாரோ நடந்து வரும் அரவம் கேட்டு, “உத்ரா.. யாரோ வருவது போல இருக்கிறது.. ஒரு நிமிடம் நில். கவனித்துச் செல்ல வேண்டும்” என்றான் அரவிந்த். அழுத்தமான காலடியோசை மிக அருகில் வந்தது.


விளக்கின் வெளிச்சத்தோடு மற்றொரு குகை வாயில் வழியாக வந்து நின்றவள் ரிதிகா.


“ரிதிகா! நீயா? நீ எப்படி இங்கே?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் அரவிந்த். அவனைப் போலவேதான் ரிதிகாவிற்கும் ஆச்சரியமாகி அவனையும் அதே கேள்வி கேட்டாள். ஒரு நொடி பிரம்பித்த போதும் தான் அந்த இடத்திற்கு வந்த கதையை சொன்னாள் ரிதிகா.
“ஆக.. நதியின் இந்தக் காட்டிற்கும் அந்தப் பக்க காட்டிற்கும் போக வர வடிவமைக்கப் பட்டிருக்கும் சுரங்க பாதையா இது .” என்றான் அரவிந்த்.


“அப்படிதான் போல..” என்ற ரிதிகாவிற்கு அதற்கு மேல் அங்கே இருப்பு கொள்ளவில்லை.


மீண்டும் மீண்டும் ஒலித்த அந்த “ஓம் நமச்சிவாய போற்றி!” என்ற ஆணின் குரலும் ,”ஓம் சக்தி போற்றி” என்ற பெண்ணின் குரலும் அவர்களை அதிக நேரம் பேசிக் கொண்டு நிற்கவிடாமல் உள்ளிழுத்துச் சென்றது. மூவருமாக முன்னேறி ஒலிக் கேட்ட இடத்தை நோக்கிச் சென்றனர்.


அவர்கள் அனைவரும் எதிர்பார்த்தது வீணாகாமல் அந்த நமச்சிவாய போற்றியை பாடியவன் அர்ஜூனே! சக்தியைப் போற்றி துதித்தவள் ஆதிரையே! என்பதை விரைவிலே அவர்கள் கண்ணுற்றனர். ஆனால் அவர்கள் இருந்த கோலம் அவர்களை விக்கித்து போகச் செய்தது. பதற்றத்துடன் என்னச் செய்வது என்று புரியாமல் தன் சேலை முந்தானையை கைகளில் கசக்கிய வண்ணம் “அரவிந்த்.. என்னவாயிற்று இவர்களுக்கு!!” என்று கதறிய வண்ணம் அருகில் செல்ல நினைத்த ரிதிகாவை பற்றி நிறுத்தியது உத்ரா!
 

banumathi jayaraman

Well-Known Member
வாவ் உத்ரா-ங்கிற கரடிக்கு தமிழ்
தெரியுதே
சூப்பர் சூப்பர், யோகா டியர்
என்னே தமிழ் மொழியின் சிறப்பு?

ஹய்யோ அந்த பால் வண்ண
அருவி
நீலக்கல் பாறை
அது நகர்ந்து குகைக்கு சாவி போல திறப்பது
உள்ளே போனால் இன்னொரு கல் குகையை மூடுவது
வெவ்வேறு பக்கமிருந்து வந்த ரிதிகாவும் அரவிந்த்தும் ஒன்றாக சேர்வது
எல்லாமே அருமையாக இருக்கு,
யோகா டியர்
தீவுக்குள்ளே காட்டுக்குள்ளே சுரங்கப் பாதையா?
வாவ் சூப்பர் சூப்பர்

அச்சோ அர்ஜுனுக்கும் ஆதிரைக்கும்
என்ன ஆச்சு?
இரண்டு பேரும் துறவியாகிட்டாங்களா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top