தூரம் போகாதே என் மழை மேகமே - 4

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 4
69e9fb367db476a4bdee39ea645d3a6d--tamil-girls-indian-art.jpg

ஒவ்வொரு வருடமும் தை மாதம் அமாவாசை நாள் அன்று பிரம்ம முகுர்த்தத்தில் சந்திரகுளிர் மலைக் குகைக்கு செல்லும் சிவசக்தி பாட்டி இன்றும் காலை 4 மணிக்கு முன்பே விளக்கை எடுத்துக் கொண்டு மெதுவாக சந்திரகுளிர் குகைக்கு நடந்து சென்றார். ஜனவரி மாதம் என்பதால் சிம்லா மலையில் பனிமழைப் பொழிய ஆரம்பித்திருந்தது. பாதையெங்கும் பனி இருக்க அதற்கேற்ப காலணிகளையும் ஆடைகளையும் அணிந்திருந்தார் சக்தி பாட்டி. அவர் சென்ற ஒத்தயடிப் பாதையின் இருபுறமும் உயரமான தேவதாரு மரங்களும், ரோடோடென்ரான் மரங்களும் வெள்ளை பனியால் தன்னை தானே போர்த்திக்கொண்டு நின்ற காவலாளிகளை போல் காட்சியளித்தன. அந்தக் குகையின் வாசல் யாருக்கும் தெரியாமல் இருக்கும் ஒரு பாறையினுள் இருக்கும் இன்னோரு பாறையின் திருகால் மறைக்கப்பட்டு இருந்தது. சிவசக்தியின் கணவர், ராஜேந்திர ராஜா உயிருடன் இருந்த காலம் வரை இருவரும் ஒன்றாக அக்குகைக்குச் செல்வது வழக்கமாக இருந்தது. அவர் இறந்த பிறகு சுமார் ஒன்ரறை வருடங்களாகச் சக்தி பாட்டி தனியாக அக்கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்திருந்தார்.

சந்திரகுளிர் குகை, இமாசல பிரதேசத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் இருக்கும் சனரி என்ற சின்ன கிராமத்தின் அருகில் 4 காதத் தூரத்தில் உள்ள ஒரு பாறையால் குடைந்தார் போல் உள்ள குகை. நினைப்பவர்கள் அனைவராலும் அக்குகைக்குச் செல்ல முடிவதில்லை. பலர் இந்த அபூர்வமான குகைக்கு வர எத்தனித்த போதும் ராஜேந்திரனின் குடும்பத்தைத் தவிர யாராலும் இங்கு வர முடிந்தது இல்லை. இது அவ்வூர் மக்களுக்கும் நன்கு தெரியும். ஆனால் அவ்வூருக்குச் சுற்றி பார்க்க வருபவர்கள், இந்தக் குகை பற்றிக் கேட்டறிந்த பிறகு அங்குச் செல்ல ஆர்வம் கொண்டு முயன்றிருக்கிறார்கள். அப்படி முயன்றவர்களும் அடர்ந்த காட்டில் தொலைந்து பல நாட்களுக்குப் பிறகு நினைவிழந்த நிலையில் காட்டின் மறுமுனையில் காணக் கிடப்பர். சிலர் அக்காட்டின் மிருகங்களால் பயமுறுத்தப் பட்டு பாதி பித்து நிலைக்கு உள்ளாகியிருப்பர். அதனால் அப்படி ஒரு இடம் இருப்பதை அவ்வூர் மக்கள் யாரிடமும் சொல்வதை நிறுத்தியிருந்தனர். விடிவதற்கு முன்பே அக்குகைக்குச் சென்று வருவதை ராஜேந்திரரின் குடும்பம் வழக்கமாகக் கொண்டிருந்ததாலும் ஒரு வருடத்திற்கு ஒருமுறையே செல்வதாலும், காலப் போக்கில் அப்படி ஒரு குகை இருப்பதும் அனைவரும் மறந்து போய்விட்டனர்.

ராஜேந்திர ராஜாவின் குடும்பம் ஒரு ராஜ பரம்பரையைச் சேர்ந்தது. ராஜேந்திர ராஜாவின் வம்சம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாபம் வாங்கியதாகவும், சாபத்தின் விளைவாக அவர்கள் வம்சம் ஒரே ஒரு ஆண் குழந்தையை மட்டுமே பெற்று தழைக்கும் என்றும், பெண் குழந்தையோ மற்றோரு ஆண் குழந்தையோ பிறக்காது என்றும், பிறந்தாலும் நிலைக்காது என்றும், எழுதப்பட்ட ஆருட ஓலைச் சுவடி அந்த சந்திரகுளிர் குகையில் இருக்கிறது என்பதும் அந்தக் குடும்பத்தில் இருப்பவர் அறிந்த செய்தி. அப்படிப்பட்ட வம்சத்தில் பிறந்த ஒருவர்தான் சக்தி பாட்டியின் ஒரே மகன் கஜேந்திரன். அவனுடைய மேற்படிப்பை முடித்துவிட்டு லண்டனில் தொழில் நடத்திக் கொண்டு வருகிறார். ராஜேந்திர ராஜாவும் அவர் பெற்றோருக்கு ஒரே மகனே. இதுவே வழி வழியாக அவரது முன்னோர்களுக்கும் நடந்து வந்தது. அதனால் அந்த ஆருடம் உண்மையே என்று அனைவரும் எண்ணி வந்தனர்.

ஆனால் அப்படிப் பேசப்பட்ட அந்தச் சாபத்தினை உடைக்கும் விதமாக 27 வருட்திற்கு முன்பு கஜேந்திரனுக்கே முதலில் ஒரு பெண் குழந்தையும் அடுத்து ஒரு மகனுமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. முதலில் பெண் குழந்தை பிறந்த போது எல்லோரும் ‘பெண் குழந்தையா’ என்று ஆச்சரியமும், ‘இந்தப் பெண் குழந்தைக்கு எதுவும் நேர்ந்து விடுமோ’ என்று பயமும் கொண்டனர். அந்தப் பெண் குழந்தைக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து இரண்டு குழந்தையும் செழிப்பாக வளர்வதையும் பார்த்த பிறகு பெரியவர்கள் ஒருவாறு அமைதியும் சந்தோஷமும் ஒருங்கேக் கொண்டனர்.

அத்தகைய வம்சத்தில் பிறந்தபோதும் அந்த ஓலைச் சுவடியில் உள்ளபடி தனக்கு நடக்காததால், கஜேந்திரன் குடும்ப குகைக் கோயில் மற்றும் இதர பழக்கவழக்கங்களில் நம்பிக்கையற்று இருந்தார். அதனோடு வெளி நாட்டின் தொழிலில் இருந்த செழிப்பாலும் அவர் வெளி நாட்டை விட்டு வருவதே இல்லை. அதை எண்ணி சக்தி பாட்டி வருந்தாத நாளே இல்லை.

அத்தகைய சூழ்நிலையில்தான் அவ்வீட்டின் ஒரே பெண் குழந்தையாகப் பிறந்த அம்முவின் திருமணம் பற்றி பேச்சு எடுத்தே! அவள் மீது அனைவரும் மிகுந்த பாசம் வைத்திருந்தனர். அதனால் அவளைப் பிரிய மனமின்றி வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று அனைவரும் ஒருங்கே முடிவேடுத்தனர். ஆனால் அவர்கள் ஆசை எதுவும் பலிக்கவில்லை. அந்த ஓலைச் சுவடியின் ஆருடமும் பலிப்பது போல 25 வருடத்திற்குப் பிறகு அம்மு, கஜேந்திரனின் மகள் இல்லாமல் போனது அந்தக் குடும்பத்தையே உலுக்கியது. ஆயிரம்தான் தன் மகளின் சில செயல்களால் அவள் மீது கோபம் இருந்த போதும், ஒரு நாளும் கஜேந்திரன் அம்முவிடம் வெறுப்பைக் காட்டியதில்லை. அந்த வம்சத்திற்கே அவள்தான் ஒரே பெண் என்பதால் அவள் மீது அனைவரும் அதிக அன்பு கொண்டிருந்தனர். ஒருங்கே தந்தை ராஜேந்திர ராஜாவையும் , அன்பு மகள் அம்முவையும் இழந்தது அந்தக் குடுப்பத்தையே ஒரு புரட்டு புரட்டிப் போட்டது.

ராஜேந்திரன் இறந்த பிறகு, சக்தி பாட்டி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பெண்ணை இழந்த கவலையிலும் இருந்த கஜேந்திரன் ‘குகைக் கோயில் அது இது என்று என்னைக் கூப்பிடாதீர்கள். ஒருமுறை உங்களோடு அக்கோயிலுக்கு வர முயன்றேன். ஆனால் அந்தக் கோயில் செல்லும் வழி உங்களுக்குத் தெரிய வரவில்லை. வழி மாறிவிட்டோம் என்று நடு இரவில் குளிரில் என்னைத் தவிக்க விட்டது போதும். எனக்கு அப்படியொரு இடம் இருப்பதே சந்தேகம் என்று தோன்றுகிறது. அப்பாவும் நீங்களும் வேரெதுவோ பார்த்துவிட்டு குகை சுவடி என்று பிதற்றுகிறீர்கள். பேசாமல் நீங்களும் என்னுடனே லண்டன் வந்துவிடுங்கள். அப்பாவும் இல்லை. இப்படி பித்து பிடித்தது போல இங்கே இருக்க வேண்டாம்.’ எனக் கடுமையாக சொல்லிவிட்டார். அவரது மனைவி சுமித்திரையும் கூட எவ்வளவோ சொல்லியும் கஜேந்திரன் கேட்டபதாக இல்லை. அதன் பிறகு சிவசக்தி பாட்டி கஜேந்திரனிடம் இது தொடர்பாக எதுவும் பேச முடியாமல் போனது.

‘நம்பிக்கையற்றும், ஆர்வமற்றும் அக்குகையை தேடிச் சென்றால் நம்மால் அதனை கண்டு கொள்ள முடியாது என்றும், அமாவாசையைத் தவிர வேறு நாட்களில் அதன் தடம் உணர முடியாது’ என்றும் , தன் கணவர் கூறியது சக்திபாட்டிக்கு வெகு தாமதமாகவே நினைவு வந்தது. இப்போது தக்க தருணத்தில் கஜேந்திரனை அக்குகைக் கோயிலுக்கு அழைத்தாலும் வர மறுக்கிறான் என மறுகினார் சக்தி பாட்டி.

‘தன் காலம் முடிவதற்குள் தன் குடும்ப பொறுப்பையும் அந்த சந்திரகுளிர் குகை ரகசியத்தை கஜேந்திரனிடம் ஒப்புவிக்க வேண்டுமே!’ எனத் தவித்தார் சக்தி பாட்டி. அப்போது அதற்கு ஒரு வழியாக இன்று குகைக் கோவிலுக்கு சென்று வந்த பிறகு அந்த துர்கா தேவியே தனக்கு ஆசி கூறிவிட்டார் என்று நம்பினார்.

சக்தி பாட்டி குகைக்கோவில் சென்று திரும்பியதும் வீட்டில் இருக்கும் சாமி படங்கள் இருக்கும் அறையில் விளகேற்றிவிட்டு 2 நிமிடம் கண்களில் கண்ணீர் வர அமைதியாக நின்றார். அவர் முகத்தில் மகிழ்ச்சியின் கண்ணீர் ஏற்பட்டிருந்தது. ‘ஓலைச் சுவடியின் ஆருடம் பொய்க்கும் அந்தத் தருணத்தின் போது சந்திரகுளிர் குகைக் கோவில் தெய்வம் உலகிற்கு வெளிப்பட்டு அனைவராலும் வழிபடும் நிலை ஏற்படும் என்ற மற்றோரு ஓலைச் சக்தி பாட்டியின் கைகளுக்கு அகப்பட்டிருந்தது.’ அதனால் உண்டான ஆனந்த கண்ணிரே அவை.

சாமி அறையிலிருந்து வந்த சக்தி பாட்டி , கணக்கர் காதம்பரனை அழைத்து சில விவரங்கள் சொன்னார். அதன் பின் காதம்பரன் உடனே அவர் கூறியதை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஏற்கனவே இருக்கும் மர்மங்களுக்கே இன்னும் தீர்வு இல்லாமல் இருக்கு
இதில் இன்னொரு மர்மமாக
சந்திரகுளிர் குகைக் கோயில்
இருக்கே

யார் இந்த சிவசக்தி பாட்டி?
இவருக்கும் ஆதிரைக்கும் என்ன
சம்பந்தம்?
ஒருவேளை ஆதிரை கஜேந்திரனின்
மருமகளா, Yogi டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top