தூரம் போகாதே என் மழை மேகமே!! - 29

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
#1


சில நிமிடங்கள் தொடர்ந்த ஆதிரையின் அழுகை, மெதுவாகக் குறைந்தது. யார் முன்னிலையிலும் அழுது பழக்கமற்ற ஆதிரைக்கு வசதியாக அந்த மரம் அவளுக்கு மறைவிடம் தந்தது. என்னதான் மறைந்திருந்தாலும் அவளது கேவல் மரத்தினை தாண்டி அர்ஜூனை அடையாமல் இல்லை.

இருந்தபோதும் ‘அவளைச் சமாதானம் செய்யவென்று அருகில் சென்று அவள் இன்னும் பயந்து வேறு எங்கேனும் ஓடிச் சென்றுவிட்டால் என்ன செய்வது. ம்ம்’ என்று பொறுமையுடன் அவள் ஆசுவாச படுத்திக் கொள்ள காத்திருந்தான். அவன் எதிர் பார்த்தபடியே, ஆதிரை மிக விரைவிலே அந்த மரத்தை விட்டு வெளியில் வந்தாள். வந்தவள் அர்ஜூனை நேரே நிமிர்ந்தும் பார்க்கவில்லை. நேராக ஓடை நீர் பக்கமாக சென்று தன் முகத்தினை கழுவிட செய்தாள். அழுது வீங்கி இருந்த அவளது முகத்தைப் பார்த்த அர்ஜூனுக்கு அவன் மீதே கோபம் வந்தது. ‘அன்றில் மலராக மின்னிய அவளை இப்படி நெருப்பில் வாட்டிய வாழை இலையினை போல சுருங்கி ஒளியிழக்க செய்துவிட்டேனே’ என்று அவனையே நொந்துக் கொண்டான்.

மெதுவாகக் குரல் கொடுத்து ,”sorry ஆதிரை. ஏன் நான் அப்படி நடந்து கொண்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. I am really sorry. நான் தெரிந்து செய்யவில்லை” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆதிரையின் வலது கை உயர்ந்து போதும் என்பது போல நின்றது. இருந்த போதும் அவள் தலை நிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை.

“திருமணமாகாமல் ஒரு குழந்தைக்கு தாயானவள்தானே. என்ன செய்தாலும் தப்பில்லை. என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அந்த எண்ணத்தை அடியோடு அழித்துவிடுங்க. அப்படி ஒரு கெட்ட எண்ணம் கொண்டு நீங்க என்னை நெருங்கினால் அதன்பின் நான் உயிருடன் இருக்கக் கூடுமென்று நினைச்சீங்கன்ன அது வெறும் எண்ணமாக மட்டும்தான் இருக்கும். மானம் இழந்தபின் உயிர் வாழ நான் வேசி இல்லை. “ என்று பொறுமையாகவும் தெளிவாகவும் அந்தப் பாறையின் தரையினை பார்த்த வண்ணம் பேசினாள் ஆதிரை.

“ஆதிரை… விருப்பம் இல்லாமல் ஒருவரிடம் எல்லை மீறுவது எப்படி ஒரு வேதனையைத் தரக்கூடுமென்று என்னால் உணர முடிகிறது. ஏன் நானுமே அதனை இரண்டு மூன்று வருடத்திற்கு முன் உணர்ந்திருக்கிறேன். ஆனால் நானே அதுபோல் நடப்பேன் என்று என்றுமே நான் எண்ணியது இல்லை. இன்று என்னையும் மீறி இப்படி நடந்து கொண்டேன். என்னாலே என்னை நம்பவும் முடியாமல் மன்னிக்கவும் முடியாமல் உன் மன்னிப்பை வேண்டி இருக்கிறேன். இனி இப்படி ஒரு தவறு நடக்காது. நீ தைரியமாக இருக்கலாம்” என்று அவள் முகம் பார்க்கும் சக்தியற்று அவளுக்கு முதுகு காட்டிய வண்ணம் நின்று கொண்டு குரலில் வருத்தம் தொனிக்க சொன்னான்.

அப்போது அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனது குரலிலும் அவன் நின்றிருந்த தோரணையிலும், அவனும் வருந்தியே இப்படிக் கூறுவதை உணர்ந்தாள் ஆதிரை. பின் மீண்டும் அவனை நோக்கி ஒருமூச்சுடன் பேசினாள். “நடந்ததை விட்டுவிடுங்க. அதனை இருவருமே மறந்துவிடுவோம். மற்றபடிச் சொல் செயலாகுமென்று நம்புகிறேன் சார்” என்றாள் ஒரு மாதிரியான குரலில்.

“நிச்சயமாக ஆதிரை. நீ கவலைப்பட வேண்டாம்” என்றான் அழுத்தத்துடன் அர்ஜூன்.

“ம்ம்…” என்றவள் ஒரு நிம்மதி பெருமுச்சுடன், “சார்… நீங்களும் குளித்துவிட்டு வந்துவிடுங்க நான் அந்தப் பக்கம் காத்திருக்கிறேன். நேரம் ஆகிறது. இந்தத் தீவிலிருந்து எப்படிச் செல்ல முடியுமென்று தேடி பார்க்கலாம்” என்றுவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

“சரி… நீ அந்த ஆற்றுப் படுகையில் காத்திரு. இதோ வந்துவிடுகிறேனென்று” அர்ஜூன் ஓடை நீர் பக்கமாக போனான்.

ஆற்று மணலில் சென்று அமர்ந்த ஆதிரை. சிறிதும் சூரியனின் சுடும் வெயில் இல்லாமல் அதே சமயம் மிகவும் குளிருமில்லாமல் மிகவும் இதமாக இருந்த அந்த தட்பவெட்பத்தில் ஆற்று நீரின் அமைதியான ஓட்டமும் ஆர்ப்பாட்டமான கடலின் சங்கமம் ஆதிரையின் உள்ள போராட்டத்திற்கு அருமருந்தாக இருந்தது. மிகவும் நீளமாக இருந்த ஆற்றின் பரப்பளவு சின்ன கடலினை போலத் தோற்றமளித்தது.

அப்போது அந்த ஆற்றின் மேற்பரப்பில் சிறிய அளவில் தோன்ற கூடிய ஒரு கருநிற மேகங்கள் சில ஒன்று திரண்டு அவளை நோக்கிவந்தது. அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து உச்சியைப் பார்த்தாள் கடலின் மேற்பரப்பு தெரிந்தது, அப்படி இருக்க இந்த மேகங்கள் எங்கிருந்து வந்தது. கடலின் மேற்பரப்பும் மேகமும் ஒன்றை மாற்றி ஒன்றாகப் பார்த்தாள் ஆதிரை.

அந்த மேகங்கள் ஆதிரையை அடைந்தது. அவளை அடைந்ததும் மெதுவாக மழைபொழிய தொடங்கியது. அது அவளைச் சுற்றி வெறும் 5 அடிக்கு மட்டுமே பொழிந்தது. அந்த மழையில் நனைந்ததும் ஆதிரை அவளை மறந்தாள். மழையிலிருந்து விலகி ஓடும் எண்ணமில்லாமல் அவள் கண்ணின் எதிரே ஒரு திரையினை போல ஒரு பிரமை உண்டானது.

அந்தத் திரையில் அவளைப் போன்ற ஒரு பெண் ஒரு இளவரசியைப் போல ஆடை அணிகலங்களை அணிந்திருந்தாள். அங்கே அவள் அருகில் அவன்… அவன்தான் அர்ஜூன் போல ஒருவன் இளவரசனைப் போன்ற ஆடை தறித்திருந்தான். அவளது கழுத்தில் ஆதிரையின் அண்ணன் ஆதிரைக்குத் தந்தது போன்ற நீல நிற கற்கள் பதித்த அதே கழுத்தாரத்தை போன்று அர்ஜூன் அவள் அந்தப் பெண்ணுக்கு அணிவித்தான்.ஆதிரையைப் போன்றே இருந்த அந்தப் பெண்ணின் கைகளை அர்ஜூன் பிடித்திருந்தான் அவள் அவன் மார்பில் சாய்ந்து மகிழ்ச்சியில் லயித்துத் தெரிந்தாள். அவளைப் போன்றே தற்போது ஆதிரைக்கும் அந்த உணர்வு உண்டானது.

அப்போது திரையில் தெரிந்த பெண், அர்ஜூனிடம் அவன் மார்பில் சாய்ந்த வண்ணம் ,”திகு…” என்றாள் அவள்.

அதற்குப் பதில் சொல்லாமல் ஒரு நமட்டு சிரிப்புடன் காதில் விழுந்தது போலவே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தான் அவன் திரையில் அர்ஜூன்.

“திகு.. “ என்றாள் அவள். மீண்டும் குரல் கேட்காமல் இருக்க “ஏய் திகேந்திரா.. “ என்று முழுப் பெயரை நீட்டி அழைத்தாள்.

“சொல். என் கண்மணி. “ என்றான் அவன்.

“இத்தனைமுறை அழைக்கிறேன். காதில் விழுந்தது போல் தெரியவில்லையே உங்களுக்கு. ஏன் இப்படி என்னிடம் வம்பு செய்கிறீர்கள்” என்று பொய் கோபம் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்.

“இதற்குத்தான் கண்மணி. இந்தக் கோபத்தில் உன் அழகிய கண்கள் விரிந்து என்னை நோக்குமே. அதனை ரசிக்கத்தான். என் உயிரின் ஒரு பாதி அழகுறும் போது மறுபாதி தானாகவே அழகுறுமே. அதற்குத்தான் “ என்று புன்னகைத்தவாறே ,அவளின் முகத்தை அவன்புரம் திருப்பினான்.

அதனைக் கேட்ட கணம் , ஆதிரை வெட்கத்தில் செம்மையுற்றாள். அவனது மார்பிலே மீண்டும் பொதிந்து கொண்டாள்.

“திகு… எத்தனை ஜன்மத்திலும் நீங்களே என் மணாளனாக வேண்டும். “ என்று உணர்ச்சிவசப் பட்டாள். பின் “ என் துர்கா அம்மனுக்கு நான் வேண்டிய 101 வாரம் விரதம் இன்னும் இரண்டு வாரத்தில் முடியப் போகிறது. அதன் பின் நீங்கள் மட்டுமே என் கணவராக முடியும்.” என்றாள் கற்பனையில் பலவும் நினைத்து.

“என்ன ஆதிரை… இதற்கெல்லாம் இப்படி உணர்ச்சிவடபடுகிறாய். இதற்காகவெல்லாம் யாரேனும் கடவுளை தொந்தரவு செய்வார்களா! நாளையே ஒருவேளை எனக்கு ஏதேனும் நடந்துவிட்டால் உன் தந்தை உனக்கு சில மாதங்களில் வேறு ஒருவனைக் கணவனாக பார்த்துவிடுவார். இப்படி அவசரம் கொண்டு வேண்டிக் கொள்ளாதே. ஏதோ பெரிய புயல் நம் தீவினை கடக்கப் போவதாக ஆருடம் பார்வகளிடமிருந்து பேச்சு. அதில் யார் யார் பிழைப்போமென்றே தெரியவில்லை.” என்று அவளைச் சீண்டினான்.

உடனே அவள் முகம் வாடுவதைத் தாங்க முடியாமல் ,”ஏய் நான் கேலி செய்தேன். அதற்குள் இப்படி சோகமாகிவிட்டாயே” என்று அவளை அணைத்து ஆருதல் கூறினான் திகேந்திரன்.

இவ்வாறாக மனத்திரை ஓடிக் கொண்டிருக்க நிகழ்காலத்தில் அர்ஜூன் ஆதிரையின் கன்னத்தை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான். அந்தத் தென்ன ஓலையில் அவ்வளவாக மழை நீர் அவள் உடலில் ஊடுருவவில்லையென்ற போதும் , அவள் சில்லிட்டிருந்தாள்.

சுற்றுமுற்றும் பார்த்த ஆதிரை நடந்தவை கனவாக இருக்கக் கூடுமென்று எண்ணினாள். அந்த மழை மேகம் அவள் அருகில் வந்தது வரை மட்டுமே அவளுக்கு நினைவிருந்தது.

சுயநினைவு வந்தவளாக “அர்..ஜூன்… சார்… என்னவென்று தெரியவில்லை மயக்கம் வந்துவிட்டது. “ என்றாள் ஆதிரை.

“ம்ம்…” என்று புன்னகித்தவன்,” அது வேறொன்றுமில்லை. காலை எழுந்ததிலிருந்து ஒன்றும் நாம் வயற்றுக்கு தரவில்லை அதன் வேளைதான்.” என்று அவளை எழுப்பி அவளது ஆடைகளையும் எடுத்துக் கொண்டு இருவரும் படகு நோக்கிச் சென்றனர்.

ஆதிரை கண்ட கனவை அர்ஜூனிடம் சொல்லலாமா! வேண்டாமா யோசித்து பின் வேண்டாமென்று முடிவெடுத்தாள் ஆதிரை.

இருவரும் மீதமிருந்த ரொட்டி துண்டுகளை சாப்பிட்டுவிட்டு அந்த இளநீரினை அருந்தினர்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes