தூரம் போகாதே என் மழை மேகமே!! - 28

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
#1


அவன் அருகில் வருவதைத் தடுக்க முயலும் முயற்சியாக ஆதிரை, “அர்…. அர்ஜூன்… சா.. சார்… நீ… நீங்க……” என்று பேச முடியாமலும் பேச முயன்றும் முதல் முறையாகத் தவித்தாள். அவள் குரல் அவனை அடையுமுன் காற்றிலே கரைந்தது.


மீண்டும் சற்று குரல் உயர்த்தி, “சார்.. நீங்க அங்கே இருங்க கூந்தல் உலர்ந்ததும் நானே படகு வந்துவிடுகிறேன்” என்று முடிந்தவரைச் சத்தமாக கூறினாள் ஆதிரை. ஆனால் அவள் குரல் ஓடை நீரின் சலசலப்பை மீறி அர்ஜூனின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.


அர்ஜூனின் நடையும் தளரவில்லை. ஆதிரையினை பாதம் முதல் உச்சி வரை அவன் கண்கள் அளவெடுத்துக் கொண்டிருந்தது. எத்தனையோ பெண்களை கடந்திருந்த போதும் , ஒரு தனிமை கிடைத்தால் பணக்காரனென்று தப்பு செய்ய துடித்த பெண்களையும் பார்த்திருந்த போதும், ஆதிரையின் நல்லொழுக்கத்தால் அர்ஜூன் ஏற்கனவே அவள் மீது ஈர்ப்புற்றிருந்தான். அதனால் உள்ள அழகுடன் அவளது எழிலும் சேர்ந்து இது நாள் வரை கண்டிராத பேரழகி என்றே அவன் ஆதிரையை எண்ணினான். அவனையும் அறியாமல் ஒரு அன்னிச்சை செயல் போல ஆதிரையின் விழிகளைப் பார்த்த வண்ணம் அவளை நெருங்கினான்.


அர்ஜூனின் தளராத விழி பார்வையால் ஆதிரையின் கொஞ்ச நஞ்ச தைரியமும் காணாமல் போகத் தொடங்கியது. அவனது விழியினை நேரே பார்க்க முடியாமல் தவித்து தன் தலையினை தாழ்த்தினாள். அவனுக்கு முகம் காட்டாமல் தன் முகத்தை மறைக்கும் விதமாக அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றாள். அவன் மிக அருகில் வந்துவிட்டான் என்பதை அவனது குரல் அவளுக்கு உணர்த்தியது. “ஆதிரை…” என்ற அவனது குரல் இது வரை அவள் உணராத முறையில் அவள் காதினருகில் கேட்டது.


உள்ளத்தில் பயமும், குரலில் தைரியமும் கொண்டு, “சொ….லுங்க… சா.. சார்” என்றவள் அவளுக்கு முகம் காட்டி பேசும் சக்தியற்று திரும்பி நின்றே பேசினாள். அவனது மூச்சுக் காற்று அவளது காதின் அருகிலும் அவனது இடதுகை அவள் இடையினை வளைப்பதுமாக உணர்ந்த ஆதிரை, மனத்திரையில் என்னன்னமோ ஓட திடுக்கிட்டவளாக அவனிடமிருந்து விலகி ஓடிவிட எண்ணி சக்திக் கொண்டு அவனது கையினை இழுத்துவிட்டு ஓட எத்தனித்தாள். ஆனால் அர்ஜூனின் கையின் இறுக்கம் தளராமலும், அங்கிருந்த ஓடை நீரினால் ஈரமுற்றிருந்த பாறையும் அவளுக்கு உதவாமல் அவளது காலினை சறுக்கிவிட்டது. அவனிடமிருந்து தப்பிக்க நினைத்தவள் அவனது கைகளினால் இழுக்கப்பட்டு அர்ஜூனிற்கு முகம் காட்டும்விதமாக அவள் உடல் திரும்பியது. அவள் முகம் திரும்பிய வேகத்தில் அர்ஜூனின் உதடுகள் ஆதிரையின் நெற்றியில் முத்தமிட்டிருந்தது.


இதனைத் துளியும் எதிர் பார்த்திராத ஆதிரை பெண்மையின் அச்சத்தில் உறைந்து அர்ஜூனின் விழிகளை முகம் உயர்த்திப் பார்த்தாள். அவனது கைகளிலிருந்து விலகும் அளவிற்கு ஆதிரைக்கு உடலிலும் சக்தியில்லை. மனதிலும் தெம்பில்லை. அவள் மனம் அவளையும் அறியாமல் அவன் வசம் நேற்றே சென்றுவிட்டது. ஆனால் இவன் என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்ள ஆதிரையின் உள்ளம் இடம் கொடுக்கவில்லை.


ஒருவரை நாம் நல்லவர் என்று சொல்வதென்றால் , தப்பு செய்ய சூழல் இருந்தும் தவறு செய்யாமல் இருப்பவரையே!. மாறாகத் தவறு செய்வதற்கு வாய்ப்பே இல்லாத இடத்தில் நல்லவிதமாக இருப்பவரை நல்லவர் என்பது போட்டி வைக்காமல் பரிசளிப்பது போல. இதனை ஆதிரை நங்கு உணர்ந்திருந்தாள். அதனால் அவளுள் எப்போதும் ஒரு கோட்டையின் சுவர் போல தனகுள்ளே ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி வைத்திருந்தாள். அதனை மீறுபவரை எதிர்க்க அவளுக்கு தெரிந்த தற்காப்பாக கராத்தே கற்று வைத்திருந்தாள். ஆனால் அர்ஜூனின் செயல் கோட்டை மீறுவதற்குப் பதிலாக அதனைத் தூள் தூளக்கிவிட்டு முன்னேறி அவளுள் வந்து நிற்கிறது. ஆம் ஆதிரையின் இதயத்தில் அர்ஜூன் குடியேறிவிட்டிருந்தான்.


ஒருவேளை அர்ஜூன் அவளிடம் எல்லை மீறினால் ஆதிரையினால் இன்று இருக்கும் மனநிலையில் அதனைத் தடுக்க முடியாது. ஆனால் அதன் பிறகு உயிர்வாழ்வதையும் ஆதிரையின் மணம் ஒப்பாது. ‘அன்று ரிதிகா அண்ணியின் தம்பி சொன்னது போல் “உடம்பு தினவெடுத்து தப்பு செய்துவிட்டு பெற்ற பிள்ளையை , என் அக்காவின் குழந்தை எங்கிறாயா?” என்று அவன் கேட்டது போலாகிவிடும். அவனை எதிர்த்துக் கொண்டு என் ராஜாவை வளர்த்தற்கு ஒரு அர்த்தமில்லாமல் போய்விடும்’ என்று பல எண்ணங்களின் போராட்டம் மனதில் ஓட அர்ஜூனையே பார்த்துக் கொண்டிருந்த ஆதிரையின் கண்களில் கண்ணீர் துளிகள் துளிர்த்து அவளது கண்ணத்தை கடந்திருந்தது.


ஆதிரையின் கண்ணீரை சற்றும் எதிர்பாராத அர்ஜூன் அவளைப் பிடித்திருந்த பிடியினை தளர்த்தி அவளது இடையினை விடுவித்தான். அவனது பிடியிலிருந்து விலகிய ஆதிரை, அந்தக் கண்ணீருடனே, அவன் பார்வையிலிருந்து மறந்துவிடும் எண்ணமாக ஓடிச் சென்று அங்கிருந்த மிகப் பெரிய மரத்தின் பின்னே மறைந்து நின்றாள்.


அவள் ஓடிச் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன் , ‘என்ன காரியம் செய்தோம்’ என்று அப்போதுதான் உணர்ந்தான். அவனது செயலை நினைத்து “சே… என்ன செய்ய நினைத்தேன்.! தனியே இருக்கும் பெண்ணிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நானே, சே” என்று வாய்விட்டே முனங்கினான்.


ஆதிரையை நோக்கி “ஆ.. ஆதிரை..” என்று வராத குரலில் அழைத்துப் பார்த்தான். அதற்கு ஆதிரையின் பெரிய கேவல் மிகுந்த அழுகையே அவனுக்குப் பதிலாக வந்தது.


அவனது இந்தச் செய்கை ஆதிரையின் பழைய புண்களை கிளறி வேதனையை உண்டாக்கியிருந்தது. அதனாலே ஆதிரையின் கண்ணீர் நின்றதாகத் தெரியவில்லை.


இரண்டு வருடத்திற்கு முன்பு,


ரிதிகா லண்டன் சென்றுவிட்ட ஒரு மாதத்திற்குப் பின், ரிதிகாவின் தம்பி, சேகர் அங்கிள் சொன்னதாகச் சொல்லி ஆதிரைக்கு phone செய்தான்.


“நா.. ரிதிகாவின் தம்பி பேசிறேன். நீ யார். எதற்காக சேகர் அங்கிளிடம் என்னை phone செய்யச் சொல்கிறாய். என்னுடைய facebook friend என்று மட்டும் சொல்லிவிடாதே” என்றது ஒரு ஆணின் குரல்.


ரிதிகாவின் தம்பியை பற்றி நல்ல அபிப்ராயம் ஆதிரைக்கு இல்லாததால் அவனிடம் அதிகம் பேசாமல், “ நான் ரிதிகா அண்ணியின் கணவர் அரவிந்தின் தங்கை. அவர்களது குழந்தையை என்னிடம் விட்டு விட்டு லண்டனுக்கு சென்றுவிட்டனர். அதனால்தான் phone பண்ணச் சொன்னேன். என் அண்ணியும் அண்ணாவும் அங்கே இருக்கிறார்களா? அவர்களிடம் பேச வேண்டும்” என்று கேட்டாள்.


“ஓ… அப்படியா? அரவிந்த் மாமா இப்படியொரு தங்கை இருப்பதாகச் சொல்லவே இல்லையே!. அவர்கள் இந்தியா சென்றுவிட்டனர். இருந்தபோதும் அவர்களது குழந்தை அவர்களுடந்தான் இருக்கிறதே. பொய் சொல்லி ஏமாற்றி ,ஏதேனும் பணம் தேட முயல்கிறாயா?” என்று குரலில் கடுமை பரவ கூறினான் ரிதிகாவின் தம்பி.


இதனை எதிர்பாத்துதான் இருந்தாள் ஆதிரை. ஏனென்றால் அரவிந்த் அந்தக் கடிதத்தில் ‘இனி ராஜாதான் உனக்கு எல்லாம். அவனைப் பற்றிய எந்த உண்மையையும் ரிதிகாவின் குடும்பத்திற்கு சொல்ல போவதில்லை.’ என்று கூறி இருந்தார். அப்படி எழுதியிருந்த அவளது அண்ணன், ‘ஒரு நொடி திருமணமாகாமல் கை குழந்தையை ஒரு கன்னி பெண்ணிடம் விட்டுவிட்டுச் சென்றால் என்ன நடக்குமென்று யோசிக்காமல் போனாரே.’ ஒருவேளை சில வினாடி யோசித்திருந்தாலும் ரிதிகாவின் தம்பியிடமிருந்தும் இன்னும் பலரிடமிருந்து தேவையில்லாத வார்த்தைகள் கேட்க வேண்டியிருக்காதே!’ என்று ஆதிரை எண்ணாத நாள் இல்லை.


ரிதிகாவின் தம்பிக்கு புரியவைக்க கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்குமென்று ஆதிரை எண்ணியிருந்தாள். எனவே அதற்கிணங்க அவள் பேச தொடங்கினாள். “இல்லை சார். அப்படி ஒரு எண்ணமில்லை. அண்ணிக்கு இரட்டைக் குழந்தை. இருவரையும் சமாளிக்க முடியாதென்று என்னிடம் ஒரு குழந்தையை மட்டும் விட்டுச் சென்றனர். அதனால் அண்ணனும் அண்ணியும் இங்கே வரவில்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால் அவர்களது குழந்தையை மட்டும் தாயிடம் , அதுதான் என் ரிதிகா அண்ணியிடம் சேர்ப்பிக்க வேண்டும். கொஞ்சம் உதவுங்கள் சார்” என்று முடிந்தவரைப் பொறுமையுடன் பேசிப் பார்த்தாள்.


ஆனால் ரிதிகாவின் தம்பிக்கு பெண்களிடம் மரியாதையென்பதே கிடையாது போல, “ எப்படி சேகர் அங்கிளின் நம்பர் உனக்கு கிடைத்தது. அரவிந்த் மாமா அவருக்கு தங்கை இருப்பதாக ஒரு நாளும் சொல்ல வில்லை. யாரென்று தெரியாத நீ, என் அக்கா மாமா பற்றிய சில உண்மைகளை எப்படியோ தெரிந்துக் கொண்டு உடம்பு தினவெடுத்து நீ பெற்ற பிள்ளையை எங்களிடம் கட்ட பார்க்கிறாயா? இனி இது போல phone செய்தால் மரியாதை இருக்காது” என்றுவிட்டு phone –ஐ துண்டித்தான் அவன்.


அவனது வார்த்தைகளின் அர்த்தம் உணர்ந்த ஆதிரை சில நிமிடங்கள் பேசும் சக்தியற்று சிலையானாள்.’ தரம் தாழ்ந்து பேசிவிட்டு இதற்கு மேல்தான் மரியாதை இருக்காதாம். சே என்ன ஜன்மம். அண்ணி சொன்னதற்கும் மேலாக இரண்டு மடங்கு இருக்கிறானே. இனி அண்ணியே வந்து என் குழந்தையை கொடு என்று கேட்டால் ஒழிய ராஜாவை யாரிடமும் நான் கொடுக்க மாட்டேன்’ என்று உறுதியாக முடிவெடுத்தாள். அதையே சேகரிடமும் கூறினாள் ஆதிரை.


அதன் பின், ராஜாவுடன் இன்னும் சில மாதத்திற்கு விடுப்பு கேட்கவென்று அவளது சிதம்பரம் medical collage –க்கு போன போது , அவள் மீது அன்புடன் இருந்த அனைத்து ஆசிரியர்களுமே அவளை அறுவறுப்புடன் பார்த்தது இல்லையென்று ஆகிவிடுமா.! ராஜா அவள் அண்ணன் மகன் என்று சொல்லிய போதும் உன் அண்ணனும் அண்ணியும் எங்கே என்று கேட்டவர்களுக்கு அவர்கள் லண்டனில் என்ற போது நம்பாமல் , ‘யாரேனும் கை குழந்தையைவிட்டு வெளி நாடு செல்வார்களா!’ என்றும் ,’ இவள் பொய் சொல்கிறாள்’ என்றும் , ‘ இவள் யாரிடமோ ஏமார்ந்திருப்பாள் அதனால் இவளை விட்டுவிட்டு அவள் அண்ணனும் அண்ணியும் சென்றுவிட்டனர்.’ என்றும் ‘அப்படி ஏமார்ந்த போது உண்டான குழந்தையை பெற்றேடுக்கவே இவள் 1 வருடம் விடுப்பு கேட்டதும். இப்போது குழந்தை வளர்க்கவென்று விடுமுறை கேட்கிறாள்’ என்றும் அவள் காது படப் பேசியது எல்லாம் இன்று நடந்தது போல ஆதிரையின் மனதில் இன்னமும் வலித்தது.


அதன் பிறகே ஆதிரை இனி படிப்பென்பது சாத்தியமில்லையென்று, வேலைக்கு ஏற்பாடு செய்ய சொல்லி சேகர் அங்கிளிடம் கேட்டது. இன்று அந்த ஏலகிரி கிராமத்தில் வேலை செய்வதும் கூட அதனாலே!.


சில மாதம் கழித்து அவளைப் பற்றி தவறான கருத்துகளை அந்தக் கல்லூரியில் பரப்பியது அவளது வகுப்பிலே பயின்ற லாவண்யாதான் என்பதை விஸ்வா அவளது கல்லூரி தோழன் phone செய்து சொன்னான். லாவண்யாவிற்கு எப்போதும் ஆதிரையின் மீது ஒரு சிறு பொறாமையுண்டு. லாவண்யா வகுப்பில் எப்போதும் மதிப்பெண்களில் இரண்டாம் இடம்தான். ஆதிரைதான் எப்போதும் முதல் இடம்பிடிப்பது. Seminar எடுக்கும் போதும் ஆதிரை எடுப்பது போல் ஆசிரியர்களுமே எடுக்க மாட்டார்கள். பல சமயங்களில் ஆசிரியர்கள் அனைவர் முன்னிலும் ஆதிரையை உயர்த்திக் கூறி லாவண்யாவிடம் , நீயும் இப்படிச் செய்தால் இன்னும் நன்றாயிருக்கும் என்று ஒப்பிட்டு அறிவுரை கூறியிருக்கின்றனர். அதனால் உண்டான வன்மத்தில் ஆதிரையின் எதிர்காலத்தில் தீயிட்டுவிட்டாள் லவண்யா! இதனை விஸ்வா சொல்லி கேட்ட போது ஆதிரைக்கு விரக்தியால் உண்டான புன்னகையே வந்தது.


ஆதிரையின் மனப்புண்ணிற்கெல்லாம் வலியினை போக்கும் நிவாரணத்திற்குப் பதிலாக அதன்மீது எல்லோரும் உப்பும் , காரமும் ஒற்றியெடுத்து காயத்தின் வலியைப் பன்மடங்கு பெருக்கினர். அனைத்திற்கும் முதல் கருத்து பொருளாக இருந்தது , ஆதிரையின் ஒழுக்கத்தைப் பற்றியது. அதுவே ஆதிரையை நெருப்பைப் போல் எப்போதும் எரிந்துவிடச் செய்தது. எவன் ஒருவன் தவறாக பார்த்தாலும் , பேசினாலும் அவர்களை உதாசினப் படுத்தும் மனப் பக்குவத்தை உண்டாக்கியது. கெட்ட எண்ணத்துடன் நெருங்கியவர்களைச் சுட்டு பொசுக்கும் அளவுக்குத் தைரியத்தை கொடுத்தது.


ஆனால் இன்று. அர்ஜூனின் தொடுகையில் எல்லாம் சுக்கு நூறாகப் போனது. அவளது மன தைரியம் உடைந்து மீண்டும் தளர்ந்து போனது என்பதை நம்ப முடியாமல் ஆதிரைக்கு வெடித்துவிடும் போல் அழுகை வந்தது.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement