துளி - 4

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#1
4.jpg


மாடியில் இருந்த மித்ரஜித்தின் படுக்கை அறைக்குள் இருவரையும் ஒன்றாக அனுப்பினர். சில நொடிகள் இருவரும் அடுத்தவரை பார்க்காமல் அமைதியாக இருக்க, மௌனத்தை கலைத்தது கவிப்ரியா தான்.

அவள் மெல்லிய குரலில், “எனக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை.. அதனால்.................”

“அதனால்.. என்ன செய்ய போகிறாய்.. என்னை விவாகரத்து செய்ய போகிறாயா?” என்று அவன் ஆக்ரோஷமாக வினவ, அவள் நேர்பார்வையுடன் அவன் விழிகளை பார்த்தாள். அவளது பார்வையில் என்ன இருந்ததோ அவனது கோபம் மட்டுப்பட்டது. மீண்டும் மௌனத்தை கலைத்தது அவள் தான்.

“நம் இருவருக்குமே பெரும் அதிர்ச்சி தான்.. அதனால் இந்த நிலைமையில் நாம் பேசாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்”

அவன் அமைதியாக இருக்கவும் அவள், “பேசி ஒருவரை ஒருவர் காயபடுத்திக் கொள்வதை விட மெளனமாக இருந்துவிடுவது நல்லது என்று நினைத்து சொன்னேன்” என்று கூறி அவனது பதிலிற்காக காத்திருந்தவள் அவன் பேசாது இருக்கவும், படுக்கையை நோக்கி நடந்தாள்.

அவன், “எனக்கு தரையில் படுத்து பழக்கமில்லை” என்றதும் அவனை திரும்பி பார்த்தவள் நிதானமாக, “எனக்கும் தான்” என்று கூறிவிட்டு படுக்கையின் ஓர் ஓரத்தில் படுத்தாள்.

‘என்ன ஒரு திமிர்’ என்று மனதினுள் திட்டியவன், கோபத்துடன் பால் குவளையை தட்டிவிட்டான். அவள் திரும்பி பார்க்கவில்லை. அவனது கோபம் மேலும் அதிகமானது. ‘எல்லாம் என் நேரம்’ என்ற வார்த்தைகளை பற்களிடையே துப்பியவன் கோபமாக கதவை திறந்து வெளியே சென்றான்.


இரண்டு நிமிடங்கள் கழித்து ஏதோ வித்யாசமான சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தவள் அவன் பெரிய சோபா ஒன்றை சிரமத்துடன் இழுத்து வருவதை பார்த்ததும் முதலில் உதவலாம் என்று நினைத்தாள், ஆனால் அவன் அதற்கும் ஏதாவது கத்துவானோ என்ற எண்ணத்தில் திரும்பி படுத்துக் கொண்டாள்.

‘ராட்சசி.. இரக்கமே இல்லை’ என்று முணுமுணுத்தபடி சோபாவை உள்ளே போட்டு படுத்துக் கொண்டான்.


அவளது முதுகை கோபமும் எரிச்சலும் வெறுப்புமாக பார்த்துக் கொண்டிருந்தவன் மனதினுள், ‘என்ன குடும்பமோ! அக்கா ஒருத்தனை கல்யாணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டு இன்னொருத்தனுடன் ஓடிவிட்டாள்! இவள் ஒருத்தனை காதலித்து இன்னொருத்தனை மணந்துக் கொண்டாள்.. சை’ என்று கசப்பாக நினைத்தவன் பலமுறை அவர்கள் குடும்பத்தை திட்டியபடி அவனையும் அறியாமல் கண்ணயர்ந்தான்.

அவளோ தனது விதியை நினைத்து நொந்தபடி மெல்ல கண்ணயர்ந்தாள். நள்ளிரவில் தூக்கத்திலிருந்து விழித்தவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. ‘அவள் எங்கு இருக்கிறாள்? இது யார் வீடு?’ என்று யோசித்தவளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் படமாக ஓட, பெருமூச்சொன்றை வெளியிட்டபடி திரும்பியவளின் பார்வையில் மித்ரஜித் தென்பட்டான்.

அந்த ஒற்றை சோபாவில் அவன் கஷ்டப்பட்டு படுத்திருப்பதை பார்ப்பதற்கு பாவமாக தான் இருந்தது, ஆனால் படுக்கையில் தன்னுடன் படுத்துக் கொள்ளுமாறு சொல்லவும் அவளுக்கு துணிவில்லை.

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் மனதினுள், ‘இவனும் பாவம் தான்.. இவனுக்கும் எவ்வளவு அதிர்ச்சி இருக்கும்!’ என்று முதலில் நினைத்தவள், ‘ஹ்ம்ம்.. நம்ம நிலைமையே பரிதாபமாக இருக்கிறது.. இதில் இவனுக்கு வேற வருத்தபடனுமா!’ என்று நினைத்து, மீண்டும் பெருமூச்சொன்றை வெளியிட்டுவிட்டு கண்களை மூடிக் கொண்டாள்.அடுத்த நாள் காலை 5.15 மணிக்கு விழித்தவள், மித்ரஜித் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும் ஓசை எழுப்பாமல் குளியலறை சென்று காலை கடன்களை முடித்துவிட்டு, குளித்து முடித்து வெளியே வந்த போது மணி 5.45

ஈரமான தலைமுடியை உலர்த்தியபடி அறையை ஒட்டியிருந்த பால்கனிக்கு சென்று நின்றாள். ஒரு மரக்கிளையில் இருந்த குருவி கூட்டிலிருந்து குஞ்சுகளின் சத்தம் கேட்கவும் அதை ஆர்வத்துடன் ரசிக்க தொடங்கினாள்.

அறையினுள் மெல்லிய சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தாள். மித்ரஜித் எழுந்திருந்தான். அவள் கடிகாரத்தை பார்க்க, அது மணி 6.30 என்று காட்டியது. நேரம் போனதே தெரியவில்லையே என்று நினைத்தவளின் இதழில் சிறு புன்னகை உதயமானது. மனம் சிறிது லேசானது போல் உணர்ந்தவள் அந்த குருவிக் குஞ்சுகளை மென்னகையுடன் பார்த்து மனதினுள் நன்றி சொல்லிவிட்டு அறையினுள்ளே சென்றாள்.

மித்ரஜித் குளியலறையை விட்டு வெளியே வந்த போது அவள் கிளம்பி தயாராகியிருந்தாள். மெல்லிய சருகை வேலைபாடு செய்யபட்டிருந்த நீல நிற பருத்தி புடவையை அணிந்து முகத்தில் எந்த விதமான ஒப்பனையுமின்றி, சிறிய வட்ட பொட்டு வைத்து, தலையில் சின்னதாக ஒரு கிளிப்பை போட்டு நீளமான முடியை விரித்துவிட்திருந்தாள். மனம் சிறிது லேசான காரணத்தால் அவளது இதழ்கள் புன்னகை பூவை சூடியிருக்க, அந்த கோலத்தில் அவள் பார்க்க தேவதையை போல் தோன்றினாள் ஆனால் மித்ரஜித்தோ மனதினுள், ‘பிசாசு மாதிரி தலை முடியை விரிச்சு விட்டிருக்கிறதை பார்.. காலையில் இவள் முகத்தில் போய் முழித்திருக்கிறேனே! இந்த நாள் உறுப்பட்ட மாதிரி தான்’ என்று நினைத்துக் கொண்டான்.

இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்ட பொழுது அவள் மென்மையாக புன்னகைக்க, அவனோ அவளை முறைத்தான். சட்டென்று எழுந்த கோபத்துடன், மனதினுள், ‘பெரிய இவன்.. சரி தான் போடா! முறைத்தால் முறைத்துக்கொள்!’ என்று நினைத்தவள் முகத்தை திருப்பிக் கொண்டு வெளியே சென்றாள்.

‘நீ சிரித்தால் நானும் சிரிக்கணுமா! போடி’ என்று முணுமுணுத்தான்.

சிடுசிடுத்த முகத்துடன் கீழே வந்தவளை எதிர் கொண்ட மதுமிதா சிறு புன்னகையுடன், “ஹாய் அண்ணி.. குட் மார்னிங்.. புது இடம்.. தூங்குனீங்களா?”

மித்ரஜித்தின் செய்கையால் மனதில் எழுந்த இதம் காணமல் போயிருக்க, சிறு கோபத்துடன், “நான் என்ன கிழவியா?” என்று கேட்டாள்.

மதுமிதா புரியாமல் விழிக்க, கவிப்ரியா, “உங்களை விட ஆறு வயது சிறியவள் நான்.. என்னை ஏன் வாங்க போங்க னு பேசுறீங்க?”

‘இதற்கா இவ்வளவு கோபம்!!!’ என்று மனதினுள் நினைத்துக் கொண்ட மதுமிதா, “வயதில் சிறியவராக இருந்தாலும் அண்ணன் மனைவியை மரியாதையுடன் பேசுவது தான் நம் சம்பிரதாயம்”

“சம்பிரதாயமாம் சம்பிரதாயம்! புடலைங்கா சம்பிரதாயம்”

அவளை உன்னிப்பாக கவனித்த மதுமிதா, “என்ன அண்ணி.. அண்ணன் கூட சண்டையா?” என்று நிதானமாக வினவ ஒரு நொடி அதிர்ந்த கவிப்ரியா தன்னை சமாளித்து சிறு தோள் குழுக்களுடன், “உங்கள் அண்ணனுடன் எனக்கென்ன சண்டை” என்று அலட்சியமாக கூறினாள்.

மதுமிதா சிறிது தயங்கிவிட்டு, “அண்ணி.. அண்ணன் இயல்பில் கோபக்காரன் இல்லை.. அவனை கொஞ்சம் பொறுத்து போனால் எல்லாம் சரியாகிவிடும்”

கவிப்ரியா அமைதியாக இருக்கவும் அவள், “என்ன அண்ணி?”

“இந்த அறிவுரையை உங்கள் அண்ணனிடம் சொல்லலாமே!” என்று உள்ளடக்கிய கோபத்துடன் அவள் நிதானமாக கேட்டாள்.

“அது இல்லை அண்ணி.. அண்ணனுக்கு இந்த திருமணத்தில் ஏமாற்றமும், வலியும் அதிகம், அதனால் கோபமா பேசியிருந்தால் நீங்க..........................”

“ஏன் அந்த ஏமாற்றமும் வலியும் எனக்கு இல்லையா?”

“இருவரில் ஒருவர் பொறுத்து போனால்...................”

கவிப்ரியாவிற்கு கோபம் வந்தது. அவள் கோபத்துடன் பேசத் தொடங்கினாள், “ஏன் உங்கள் அண்ணன் பொறுத்துப் போக மாட்டாரா? ஆண் என்றால் கொம்பா முளைத்திருக்கிறது? ஆண் பிள்ளை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம்.. அந்த உரிமை பெண்களுக்கு இல்லையா?”

“ஏன் இல்லை!” என்ற குரலில் இரு பெண்களும் திரும்பி பார்க்க, அங்கே இறுகிய முகத்துடன் மித்ரஜித் நின்றிருந்தான்.

அவனை கண்டதும் மதுமிதா சிறு பதற்றத்துடன் அவனை பார்க்க, கவிப்ரியா அவனை முறைக்க, அவனும் அவளை முறைத்தபடி, “பெண்களுக்கும் உரிமை உண்டு தான்.. ஆனால் அவர்களின் செய்கை மற்றவர்களை காயபடுத்துவதாக இருக்க கூடாது”

“அப்படி எந்த செய்கையால் நீங்க காயபட்டுட்டீங்க?”

“உன் அக்கா ஓடி போனதில் எனக்கு பெருமை வந்து சேர்ந்துக் கொண்டதோ!” என்று அவன் இகழ்ச்சியாக கேட்கவும் ஒரு நொடி மௌனித்தவள், அடுத்த நொடியே சமாளித்து, “நான் நம்மை பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.

அவன் புருவம் உயர்த்த, அவள், “நான் உங்களை காயபடுத்தினேனா என்று கேட்டேன்”

தங்கை முன் சண்டை வேண்டாம் என்று நினைத்தவன், மனதினுள் ‘கிரியை காதலித்துவிட்டு என்னை மணந்திருப்பது இனிமையான விஷயமா?’ என்று கூறிக் கொண்டு அவளை கடுமையாக முறைத்தான்.

“இந்த முறைப்பை எல்லாம் வேறு எங்கேயாவது வைத்துக் கொள்ளுங்கள்.. நியாப்படி பார்த்தால், என் கனவுகளை அழித்து திருமணம் என்னும் பெயரில் யாரையும் அறியாத புது இடத்திற்கு வந்திருக்கும் என்னை நீங்கள் தான் அனுசரித்து போகணும்.. ஆனால் உங்கள் தங்கையோ என்னை அனுசரித்து போக சொல்றாங்க.. இதை எங்க போய் சொல்ல?” என்று அவள் நொடித்துக் கொள்ள,

அவளது கனவுகள் என்ற வார்த்தையை தவறாக புரிந்துக் கொண்டவன் கோபத்துடன், “ஏய்!!!” என்று குரலை உயர்த்த, “அண்ணா ப்ளீஸ்” என்று கலவரத்துடன் தமையனிடம் கெஞ்சிய மதுமிதா கவிப்ரியாவிடம், “சாரி அண்ணி.. தெரியாம பேசிட்டேன்.. இதை பெருசு படுத்தாதீங்க.. ப்ளீஸ்” என்று மன்றாடினாள்.

மதுமிதாவின் தவிப்பையும் மன்றாடளையும் பார்த்த கவிப்ரியாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ‘ரொம்ப பேசி காயபடுத்திட்டோமோ!’ என்று அவள் மனதினுள் வருந்தி மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்க நினைக்கையில், மித்ரஜித் கோபமாக, “இவளிடம் நீ ஏன் மன்னிப்பு கேட்கிறாய்?” என்று கேட்டதும், அவள் மனதை மாற்றி முகத்தை திருப்பிக் கொண்டு இடத்தைவிட்டு அகன்றாள்.

செல்கிறவளை கோபமாக முறைத்துக் கொண்டிருந்த தமையனின் தோளை பற்றி, “அண்ணி சின்ன பெண் அண்ணா” என்று அவள் மென்மையாக கூற,

அவன், “சின்ன பெண் பேசுகிற பேச்சா இது?”

அவள் சிறு புன்னகையுடன், “சின்ன பெண் என்பதால் தான் இப்படி பேசுகிறார்கள்”

அவன் சிறு தோள் குலுக்களுடன், “இது எங்க போய் முடிய போகுதோ!!!” என்று கூறிச் சென்றான்.

வெவ்வேறு திசையில் சென்ற இருவரையும் கவலையுடன் பார்த்துவிட்டு மதுமிதா அன்னை இருக்கும் அறைக்கு சென்றாள்.

கவிப்ரியா அறையினுள் இருந்தபடி தனது பால்ய தோழன் கிரிதரை கைபேசியில் அழைத்தாள். இணைப்பு துண்டிக்கபடவிருந்த கடைசி நொடியில் அழைப்பை எடுத்தவன் வர வளைத்த உற்சாகத்துடன், “ஹாய் ப்ரியா.. குட் மார்னிங்” என்றான்.

“போனை எடுக்க இவ்வளவு நேரமா?”

“தூங்கிட்டு இருந்தேன்”

“சோம்பேறி கழுதை.. இவ்வளவு நேரம் என்ன தூக்கம்?”

“சரி சரி காலையிலேயே ரொம்ப புகழாத.. விஷயத்தை சொல்லு”

“ஒரு விஷயமும் இல்லை”

“அப்பறம் எதுக்கு போன் பண்ண? என் தூக்கத்தை கெடுக்கவா?”

“உன்னை திட்ட தான்”

“உன் அர்ச்சனையில் ஆரம்பிக்கும் இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.. சரி.. ஸ்டார்ட் மியூசிக்”

அவள் பல்லை கடித்தபடி, “என்னை பார்த்தா உங்களுக்கெல்லாம் கிண்டலா இருக்குதா?”

“யாருக்கெல்லாம்?”

“எல்லோருக்கும் தான்”

“அதான் யாரெல்லாம்?”

“அதை விடு................”

“சரி விட்டுட்டேன்”

“டேய்!!!!”

“நீ தானே விட சொன்ன!”

“குறுக்க குறுக்க பேசாம நான் பேசுறதை கேள்”

“....”

“என்ன?”

“...”

“டேய் குரங்கு! லைன்-ல இருக்கியா?”

“ஹ்ம்ம்..”

“பதில் சொல்றதுக்கென்னா!!!”

“நீ தானே குறுக்கே பேசாதனு சொன்ன”

 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#2
“நீயும் ஏன் டா இம்சை பண்ற?” என்று அவள் கடுப்புடன் கூற, அவன், “சரி.. சரி.. நீ விஷயத்தை சொல்லு”

“...”

“ப்ரியா”

“...”

“கோபமாடா?”

“ப்ச்.. எரிச்சல் எரிச்சலா வருது டா.. நான் இப்படி இருந்ததே இல்லை..”

அவன் ஆழ்ந்த குரலில், “எல்லாம் சரியாகிடும்.. அண்ணா ரொம்ப நல்லவர்”

“நீ தான் உன் அண்ணனை மெச்சிக்கணும்”

“அவர் பாசமானவர் ப்ரியா.. என்னிடம் கூட................”

“ஹ்ம்ம்.. இதை வேண்டுமானால் ஒத்துக் கொள்கிறேன்.. பாசகார பயபுள்ள தான்.. அதுவும் பாசமலர் சிவாஜிக்கும் அவனுக்கும் வித்யாசம் இல்லை..”

“...”

“என்ன அமைதியா இருக்கிற?”

“ஹ்ம்ம்.. ஒன்றுமில்லை.. நீ கொஞ்சம் பொறுமையா................”

“என்னத்தை பொறுமையா இருக்கிறது!!! அது ஏன் டா இதை என்னிடமே எல்லோரும் சொல்றீங்க!”

கிரிதர் என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டிருக்க அவளே மீண்டும் பேசினாள்.

“நீ என்னவோ அவனை நல்லவன் வல்லவன் னு பெருசா சர்டிபிகேட் குடுத்த! அவன் போடுற சீன் தாங்கவில்லை.. நானே என் மனசை கொஞ்சம் கொஞ்சமா மாற்றி தேற்றினால் அவன் அதை மாற்றிவிடுகிறான்”

“அண்ணா என்ன பண்ணார்?”

“ச்ச்.. விடு டா”
(இது தான் கவிப்ரியா! என்ன தான் கிரிதர் அவளது நெருங்கிய தோழனாக இருந்தாலும் அவர்களுக்குள் நிகழ்ந்த விஷயத்தை அவனிடம் பகிர்ந்துக் கொள்ள அவளுக்கு விருப்பம் இல்லை)

“ப்ரியா நீ அண்ணா நிலைமையில் இருந்து கொஞ்சம் யோசித்து பார்க்கணும்..................”

“என்னத்தை யோசித்து........... நான் அப்பறம் பேசுறேன் கிரி.. யாரோ கதவை தட்டுறாங்க” என்று கூறி அழைப்பை துண்டித்தவள் எழுந்து சென்று அறைக்கதவை திறந்தாள்.


சிறு புன்னகையுடன் அவளை பார்த்த மதுமிதா, “அண்ணி.. அம்மா உங்களை பார்க்கணுமாம்.. கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றதும் அவள் மனதினுள், ‘பெரிய மகாராணி.. அவங்க வரமாட்டாங்களோ! நான் தான் போய் பார்க்கனுமாக்கும்!!!’ என்று திட்டயபடியே மதுமிதாவுடன் ஆனந்தியை பார்க்க சென்றாள்.

அவள் சென்ற போது ஆனந்தி படுக்கையில் படுத்திருக்க, மித்ரஜித் அன்னையின் கால்களை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தான்.

அதை பார்த்ததும் அவள் மனதினுள், ‘எல்லார்கிட்டயும் பாசத்தை காட்டுறான்.. என்னிடம் மட்டும் கோபமா பேசுறான்’ என்று நினைத்துக் கொள்ள, அவளது மனசாட்சி, ‘அவன் பாசமா பேசினால் மட்டும் நீ ஒழுங்கா பேசியிருப்பியா?’ என்று கேட்டது. அதற்கு அவள், ‘அது வேற விஷயம்.. ஆனால் அவன் கொஞ்சமாவது பாசத்துடன் பேசியிருக்கலாம்’ என்று சொல்லிக்கொண்டிருந்த போது அவளது சிந்தனையை கலைக்கும் விதமாக ஆனந்தி புன்னகையுடன், “வா மா” என்று அன்புடன் வரவேற்றார்.

அன்னையின் குரலில் நிமிர்ந்து பார்த்த மித்ரஜித் இவளை பார்த்ததும் அறையை விட்டு வெளியேறினான்.

எழுந்து சென்ற மகனை நினைத்து சிறு பெருமூச்சொன்றை வெளியிட்டவர் மருமகளை பார்த்து சிறு புன்னகையுடன், “நானே வந்து பார்க்கணும் என்று தான் நினைத்தேன்.. ஆனால் என்ன பண்றது என் டாக்டர் மருமகன் மாடி படி என்ன! அதிகமா நடக்கவே கூடாதுன்னு சொல்லிட்டார்.. அதான் உன்னை வர சொன்னேன்”

‘ஓ’ என்று மனதினுள் சொல்லிக் கொண்டவள், அவரை பார்த்து, “சாரி அத்தை” என்றதும் அவர் புரியாமல், “எதுக்கு மா?” என்று வினவினார்.

“அண்ணி வந்து நீங்க கூபிட்டதா சொன்னதும், ‘நீங்க என்ன மகாராணியா’ என்று மனசுக்குள் உங்களை திட்டிட்டேன்.. அதான்.. உங்கள் நிலைமை தெரியாமல்.. ரொம்ப சாரி அத்தை” என்று அவள் பெரிதும் வருந்த, ஆனந்தி ஆச்சரியத்துடன் ஒரு நொடி மகளை பார்த்துவிட்டு கவிப்ரியாவை பார்க்க, மதுமிதாவும் அந்த நிலைமையில் தான் இருந்தாள்.

கவிப்ரியா, “என்ன அத்தை?”

“நீ மனசுக்குள் நினைத்ததிற்கு ஏன் சாரி சொல்கிறாய் என்று பார்த்தேன்.. நீ சொல்லவில்லை என்றால் எனக்கு இந்த விஷயமே தெரிந்திருக்காதே!!!”

“வெளியே சொன்னால் என்ன! மனசுக்குள் நினைத்தால் என்ன! தப்பு தப்பு தானே!”

ஆனந்தி சிறிது கலங்கிய விழிகளுடன் மருமகளின் கன்னத்தை வருடி, “உன்னை மருமகளாய் பெறுவதற்கு நான் முன் ஜென்மத்தில் புண்ணியம் செஞ்சிருக்கணும்” என்று கூற, அவள், “தப்பாயிற்றே!!!”

ஆனந்தி புரியாமல் பார்க்க, அவள் தலையை சரித்து புன்னகையுடன், “இந்த ஒரு விஷயத்தை வைத்து இப்படி சட்டென்று முடிவிற்கு வர கூடாது.. அப்பறம் என் தொல்லை தாங்க முடியாமல் ‘உன்னை மருமகளாய் பெற என்ன பாவம் செய்தேனோ!’ என்று மாற்றி சொல்ல போறீங்க”

ஆனந்தி புன்னகையுடன், “அதெல்லாம் சொல்ல மாட்டேன்”

அவளும் புன்னகையுடன், “ஹ்ம்ம்.. பொறுத்திருந்து பார்க்கலாம்”

“சரிமா.. உனக்கு இந்த வீடு பிடித்திருக்கிறதா?”

“ஹ்ம்ம்.. உண்மையை சொல்லணும் என்றால் பிடிக்காமல் தான் இருந்தது ஆனால் உங்களை பார்த்த பிறகு கொஞ்சமே கொஞ்சம் பிடிப்பது போல் இருக்கிறது”

ஆனந்தி போலியான வருத்ததுடன், “கொஞ்சம் தானா?”

“ஹ்ம்ம்.. உங்களை போல் உடனே சொல்ல மாட்டேன் பா.. எனக்கு இப்போ ஒரு பேச்சு அப்பறம் ஒரு பேச்சு என்று கிடையாது அதனால் முதல்லேயே வார்த்தைகளை அள்ளி வீச மாட்டேன்”

“ஹ்ம்ம்.. நல்ல பழக்கம் தான்”

“நன்றி”

“சங்கரன் அண்ணா நீ நிறைய படிக்கணும் என்று ஆசை படுவதாக சொன்னார்”

படிப்பு மற்றும் தந்தையின் பேச்சு வந்ததும் அவள் புன்னகையை துறந்து மௌனமானாள்.

ஆனந்தி அவளது தலையை பாசத்துடன் வருடி, “உன் ஆசை போல் மேலே படி.. வேலை பார்க்கணுமா பார்.. இது உன் வீடு.. எப்பொழுதும் இப்படியே நீ நீயாகவே இரு”

அவள் முகமலர்ச்சியுடன் அவர் கையை பற்றிக் கொண்டு, “ரொம்ப தேங்க்ஸ் அத்தை” என்று நெகிழ்ச்சியுடன் கூற அவர் மென்மையாக புன்னகைத்தார்.

“சரி சாப்டுட்டு வா” என்று கூறி அவர் அவளை அனுப்பி வைத்தார்.

கவிப்ரியா வெளியே சென்றதும் மதுமிதா மனநிறைவுடன், “அப்போ பேசினதை பார்த்து பயந்துட்டு இருந்தேன்.. ஆனால் இப்போ அந்த கவலை இல்லை.. இவள் நல்ல பெண் அம்மா.. இனி அண்ணன் கையில் தான் இருக்கிறது”

“ஹ்ம்ம்.. அந்த காளிகாம்பாள் ஒரு வழியை காட்டாமலா போய்டுவா!!!” என்று கூறி கண்களை மூடிக் கொண்டார்.காலை உணவை முடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் தன் அறைக்கு சென்றவள் மித்ரஜித் பால்கனியில் நின்று புகை பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் முகத்தை சுளித்தாள்.

“புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று உங்களுக்கு தெரியாதா?” என்ற அவளது கூற்றை மதிக்காமல் அவன் அலட்சியத்துடன் புகை பிடிப்பதை தொடர்ந்தான்.

அவள் சற்று குரலை உயர்த்தி, “உங்களை தான் கேட்டேன்”

அவள் குரலை உயர்த்தியதில் கோபம் கொண்டவனாக திரும்பியவன், “என் உடல் நலனை பற்றி நீ கவலை கொள்ள தேவை இல்லை”

ஒரு நொடி மௌனத்திற்கு பிறகு, “சரி.. உங்கள் உடல் நலனை பற்றி கவலை கொள்ள தேவை இல்லை.. ஆனால் என் உடல் நலத்தின் மேல் கவலை கொள்ளலாம் அல்லவா!”

அவன் புரியாமல் விழிக்க, அவள் சற்று இகழ்ச்சியான குரலில், “என்ன முழிக்கிறிங்க! நீங்கள் வெளியே விடும் இந்த புகையை சுவாசித்தால் என் உடல் நலம் கெட்டு விடாதா?”

‘அதானே பார்த்தேன்!!! என் மேல் உனக்கேது அக்கறை’ என்று மனதினுள் நினைத்தவன் அவளிடம், “உன் உடல் நலத்தை பற்றி எனக்கென்ன கவலை?”

“அதானே!!! மனுசனா இருந்தால் சக மனிதனின் உடல் நலனில் அக்கறை கொள்வோம்”

அவன் முறைப்புடன், “நீயும் தான் என் உடல் நலத்தில் அக்கறை இல்லை என்று சொன்னாய்”

“நான் அப்படி சொல்லவில்லையே! நீங்கள் சொன்னதை ஒப்புகொள்வதாய் சொன்னேன்”

“இரண்டும் ஒன்று தான்”

“இல்லை.. நான்.............”

அவன் கையை உயர்த்தி அவளது பேச்சை தடுத்து, “என்ன சொல்ல வருகிறாய்?”

“நீங்கள் புகை பிடிக்க கூடாது என்று சொல்கிறேன்”

“என்னை அதிகாரம் பண்ணும் உரிமை உனக்கில்லை”

“எனக்கு அது தேவையும் இல்லை”

“அப்போ இந்த இடத்தை விட்டு போ”

“உங்களை அதிகாரம் செய்யும் உரிமை எனக்கு இல்லாததை போல் என்னை அதிகாரம் செய்யும் உரிமை உங்களுக்கும் இல்லை”

“ஏய்!!!”

“இந்த படத்தை டிவியில் நான் இரண்டு முறை பார்த்துவிட்டேன்.. வேற ஏதாவது சொல்லுங்க”

அவன் பல்லை கடித்துக் கொண்டு அவளை முறைக்க, அவள் அவனை தீர்க்கமாக பார்த்தாள். அவன் எரிச்சலுடன், “உனக்கு என்ன தான்டி வேண்டும்?”

“ஹலோ பாஸ்! மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும்?”

“உனக்கு என்ன தான் வேண்டும்?”

“ஹ்ம்ம்.. இது நல்ல பிள்ளைக்கு அழகு.. எனக்கு என்ன வேண்டுமா.. நீங்கள் புகை பிடிக்க கூடாது”

“முடியாது”

“என்ன நடந்தாலும் முடியாது என்பது தான் உங்கள் பதிலா?”

அவன் அவளை முறைத்தான். அவள் அவன் கண்களை பார்த்தபடி, “நீங்கள் வெளியே தள்ளும் புகையை சுவாசித்து உங்கள் அம்மாவிற்கு மீண்டும் ஹார்ட் அட்டாக் வந்தால் கூட நிறுத்த மாட்டீங்களா?” என்று நிதானமாக வினவ, அவன் கண்கள் சிவக்க, “ஏய்!!” என்று கையை ஓங்கினான் ஆனால் அடிக்கவில்லை.

அவள் அஞ்சாமல், “தீ என்று சொல்வதால் சுட்டுவிடாது.. உண்மை கசப்பாக இருந்தாலும் அதை ஏற்று தான் ஆகணும்.. நான் சொன்னதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை நிதானமாக யோசித்து நீங்களே முடிவை எடுங்க” என்று கூறி அறையை விட்டு வெளியே சென்றாள்.

மெளனமாக யோசித்தவன் சில நொடிகளிலேயே சிகரெட்டை அணைத்தான். அவன் மனம் அவளை பற்றி சிறிது ஆலோசனை செய்தது. அதன் விளைவாக, ‘கொஞ்சம் நல்லவளாக தான் தெரிகிறாள்’ என்றான் ஆனால் அடுத்த நொடியே, ‘கிரியை காதலித்துவிட்டு என்னை மணந்திருக்கிறாள்! இது நல்லவள் செய்கிற காரியமா! ஹ்ம்ம்.. எது எப்படியோ! கல்யாணம் ஆன இரண்டாவது நாளிலேயே அவள் இஷ்டப்படி என்னை ஆட்டிப் படைக்கிறாள்!’ என்று சொல்லிக் கொண்டவன், ‘இரண்டாவது நாளா! நேற்றே தான் அவள் இஷ்டப்படி அவள் படுக்கையில் படுத்துக் கொண்டு என்னை சோபாவில் படுக்க வைத்து விட்டாளே’ என்று கோபமாக நினைத்தான்.

காதல் துளிரும்♥♥♥
 
Advertisement

Sponsored