சிந்தையில் நிறைந்த தேனமுதே-1

Pallavi

Writers Team
Tamil Novel Writer
#1
அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.நகரின் முக்கிய புள்ளிகள் அனைவரும் அன்று அங்கே இருந்தனர்.மண்டபத்தின் மற்றொரு பகுதியில் பிரபல பாடகர் தன் இனிய குரலில் இசை மழை பொழிந்துக் கொண்டிருந்தார்.

மேடையில் சம்பிரதாய படி அக்னி வளர்த்து ஹோமம் நடந்துக் கொண்டிருந்தது.குடும்பத்தவர் அனைவரும் சுற்றிலும் அழகாக அலங்கரித்துக் கொண்டு நின்றவாறு அந்த திருமணத்தை ரசித்துக் கொண்டிருந்தனர்.

பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்த மணமகனின் கண்கள் மஞ்சள் பட்டில் மிளிர்ந்த மணமகளை காதல் பொங்க பார்த்தது.அந்த மங்கை நல்லாளும் தன் உயிரினும் இனிய மணாளனை பார்த்தும் பாராதது போல் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தாள்.

ஐயர் மங்கல நாணை மணமகனின் கைகளில் கொடுத்தார்.அதை கைகளில் வாங்கி தன் மடதியின் பொன் கழுத்தில் கட்டிய போது அவர்கள் மேல் பூமாரி பொழிந்தது.சடங்குகள் முடிந்து இருவரும் அலங்கரிக்கப் பட்ட இருக்கையில் அமர்ந்தனர்.

"ஒத்தொத்தரா வந்து பெரியவா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிங்கோ"

என்று கூறவும் எண்பதாம் கல்யாணம் செய்துக் கொண்டிருந்த மணமக்கள் விஸ்வநாதன்-மீனாட்சியின் மூத்த மகனான ஜனார்த்தனன்-லஷ்மி இருவரும் தம் மக்கள் சித்தார்த்,ஸ்நேகாவோடு வந்து அவர்களின் கால்களில் விழுந்து ஆசி வாங்கினர்.பின்பு அவர்களின் இரண்டாவது மகன் மனோகர் தன் மகன் நிகிலோடு வந்து வணங்கினார்.பின்பு அவர்கள் மகள் விமலா தன் மகள் ஸ்ருதியோடு வந்து வணங்கினாள்.எல்லோரையும் கண் நிறையப் பார்த்த மீனாட்சி ஒரே ஒருவரைக் காணாமல்,

"சானும்மா எங்கே காணும்"என்றார் மருமகள் லஷ்மியிடம்.

"இத்தன நேரம் இங்கே தான் அத்தே இருந்தா...எங்க போய்ட்டான்னு தெரியலியே!"என்றாள் சான்வியின் அத்தை லஷ்மி.

"பாட்டி உங்க செல்ல பேரன் பொண்டாட்டி எங்கேயும் போகல... தாசில்தாரோட பொண்ணு கெளம்பிட்டாங்க...அண்ணி அவங்கள வழியனுப்ப போயிருக்காங்க"என்றான் சித்தார்த்.

அவன் சொல்லி முடிக்கும் போது சான்வியே அங்கே வந்து விட்டாள்.கரும் பச்சை பட்டு புடவையில் பொற்பாவையாக மிளிர்ந்தாள் அவள்.அவளின் மான் விழிகளில் அன்பு பொங்கி வழிந்தது.நீண்ட கூந்தலில் மல்லிகை சரம் இருபுற தோளிலும் ஆடியது.கழுத்தில் அணிந்த வைரமாலை அவள் கன்ன பளபளப்போடு போட்டியிட்டு தோற்றது.அவள் காதில் அணிந்த தோடோ அழகிய காதுகளில் இருக்கிறோம் என்ற கர்வத்தில் இப்படியும் அப்படியும் ஆடின.சிற்றிடை அசைய மேடைக்கு வந்த சான்வி தாத்தா பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்.கணவன் ரகுராம் அருகில் இல்லையே என அவள் பூ மனம் வாடியது.ஆனால் பிஸ்னஸ் விஷயமாக மூன்று மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்த அவன் இன்னும் திரும்பி வருவதற்கு ஒரு மாதமாகும்.

வீடு நிறைய அன்பான சுற்றத்தாரோடு இருந்தாலும் அவன் அருகே இல்லாமல் அவளுக்கு வாழ்வே வெறுத்தது.அப்படி அவர்கள் இருவரும் எல்லா கணவன் மனைவி போல வாழவில்லை தான்.

புதிதாக தொடங்கிய பிஸினஸை விரிவுப்படுத்தும் வரை திருமணம் வேண்டாம் என்ற ரகுராம் வீட்டினரின் விடாத வற்புறுத்தலால் சான்வியை மணக்க சம்மதித்தான்.ஆனால் திருமணமான அன்றே பிஸினஸ் விரிவுப்படுத்தும் வேலை முடியும் வரை தாங்கள் இருவரும் பிறர் கண்களுக்கு மட்டும் கணவன் மனைவியாக இருக்க வேண்டும் என அவளிடம் கூறினான்.

திருமண வாழ்வைப் பற்றி அதிகம் யோசிக்காத படிப்பு திலகமான நம் சான்வியும் கணவனின் முடிவிற்கு செவி சாய்த்தாள்.அதனால் மனைவியின் ஒப்புதல் மற்றும் உதவியோடு வீட்டாரை சம்மதிக்க வைத்து திருமணமான ஒரே வாரத்தில் அமெரிக்காவிற்கு பறந்துவிட்டான்.

சேர்ந்து வாழாவிட்டாலும் கணவன் அருகில் இல்லாதது அவளுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.முடிந்தவரை
தினமும் அவனும் போனில் அவளோடு உரையாடினான்.

அவனுக்காக ஏங்கி மூலையில் உட்காராமல் அவள் மேல் அன்பை பொழியும் கணவன் வீட்டாரோடு அவள் தன்னை இணைத்துக் கொண்டாள்.அங்கிருந்த எல்லோர் நலனிலும் அக்கறைக் காட்டினாள்.எல்லா வேலைக்கும் வேலைகாரர்கள் இருந்தாலும் அவர்கள் செய்வதை மேற்பார்வை செய்தாள்.

தாத்தாவிற்கு மருந்து கொடுப்பது,பாட்டி காலுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்வது.மாமனார் மாமியாரின் தேவைகளை கவனிப்பது.நாத்தி மைத்துனர்களின் நலனில் அக்கறை காட்டுவது என அவள் அந்த குறுகிய காலத்தில் அந்த வீட்டின் பிரிக்க முடியாத அங்கமானாள்.ஆனால் மனைவியை இழந்த மனோகர் மற்றும் கணவனை விட்டு பிறந்த வீட்டோடு இருந்த விமலா இருவரும் அவளை எந்த விதத்திலும் அருகில் சேர்ப்பதில்லை.ஆனாலும் சான்வியும் தன் முயற்சியை விடாமல் அவர்களிடம் நல்ல பெயரெடுக்க போராடினாள்.

அந்த வீட்டில் அவளுக்கு பரிச்சயமில்லாத ஒருவன் அவள் கணவன் ரகுராமன் தான்.அவன் வரவிற்காக இரவும் பகலும் ஆவலோடு காத்திருந்தாள்.

கணவனின் நினைவில் சிலையென நின்ற சான்வி யாரையோ வழியனுப்ப போகுமாறு அதட்டிய விமலாவின் குரலில் தன்னிலை அடைந்தாள்.

விழா முடிந்து அனைவரும் வீட்டிற்கு வந்த பின் அவரவர் தத்தம் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டனர்.கணவனிடம் விழா பற்றி கூற எண்ணிய சான்வி எத்தனை முறை அவனுக்கு அழைத்தும் இணைப்பு கிடைக்கவில்லை.சித்தார்த்திடம் கூறி முயற்சி செய்ய சொல்ல அவனின் அறைக்குச் சென்றாள்.

அங்கே கட்டிலில் அவன் காதலி ரித்திகாவின் போட்டோவை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.அதைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கியபடி,

"க்கூம்...."என்றாள்.

திடுக்கிட்டு கையிலிருந்த போட்டோவை தலையனை அடியில் செருகிய சித்தார்த்,

"அஅண்ணி.. நீங்களா?ஏன் அங்கேயே நின்னுட்டீங்க வாங்க உள்ள!"

உள்ளே நுழைந்த சான்வி அருகே சென்று நின்றாள்.

"இல்ல...நீங்க ஏதோ வேலையா இருக்கீங்களோ என்னமோனுதான் நா அங்கேயே நின்னுட்டேன்"

"வேலையா!அப்படியெல்லாம் இல்ல அண்ணி!"

"இல்ல இல்ல உங்களுக்கு போட்டோ பாத்துகிட்டு ரித்திகா ஜெபம் பண்ண வேண்டியிருக்கும்...கனவு காண வேண்டியிருக்கும்...நா எதுக்கு தொந்தரவு கொடுத்துக்கிட்டு... நீங்க கன்டினியூ பண்ணுங்க...நா அப்புறமா வரேன்"என்றாள் சிரித்தபடி.

"போங்க அண்ணி!அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்லை.எந்த வேலையா இருந்தாலும் உங்களுக்கு அப்புறம் தான் எல்லாம்"என்றான் சித்தார்த்.

அவன் அதை வாய் வார்த்தைக்காக கூறவில்லை என்பதை சான்வி நன்கறிவாள்.ஏனெனில் அவள் அந்த வீட்டிற்கு வந்த பின் அவளை அண்ணியாக அல்லாமல் ஒரு நல்ல சிநேகிதியாக நடத்தினான் அவன்.இருந்தும் நாத்திகளோடு சேர்ந்து அவனை கேலி செய்வது அவளுக்கு பிடித்த விஷயம்.

"சித்து!அது ஒண்ணும் இல்லை...உங்க அண்ணனுக்கு காலைலேந்து போன் பண்ணி பண்ணி பாத்துட்டேன்...லைன் கெடைக்கவே இல்ல... நீங்க கொஞ்சம் முயற்சி பண்ணி பாக்கறீங்களா?அத கேக்கத் தான் வந்தேன்."

"அவ்ளோதானே...இப்பவே பண்றேன்... நீங்க போங்க அண்ணி... லைன் கெடைச்சோன்ன கூப்பிடுறேன்"

அவன் செய்வான் என்ற நம்பிக்கையில் அங்கிருந்து அகன்றாள் சான்வி.

அவள் போன பின் தன் புது மாடல் ஐ போனில் அண்ணனின் அமெரிக்கா நம்பரை தேட ஆரம்பிக்கும் போது அங்கிருந்தே அண்ணனின் பார்ட்னர் சுரேஷின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

உற்சாகமாக அதை உயிர்ப்பித்து அதை காதில் வைத்து அவர் கூறியதைக் கேட்ட மேல் அவனின் கையிலிருந்த ஐ போன் நழுவி கீழே விழுந்து உடைந்தது.
 
Advertisement

Sponsored